Advertisement

லலிதாவை காயபடுத்தி வீட்டைவிட்டு போகவைக்க அவன் பேசியதெல்லாம் அவள் நம்பினால் தானே… அவளுக்குதான் தெரியுமே கணவன் தன்னை எப்படியெல்லாம் காதலித்தானென்று. விஸ்வநாதன் பேசும்போது அசையாமல் நின்று கொண்டிருப்பாள். அவள் முகத்தில் சிறு வலியாவது தெரிகிறதா என எதிர்பார்த்து ஏமாந்து போய் ஒவ்வொருமுறையும் தோத்துபோன முகத்துடன் ஊருக்கு செல்ல ஆரம்பித்தான். ஆனால், மனதில் அவளை வீட்டை விட்டு அனுப்பும் வரை ஓயக்கூடாதென்று பிடிவாதமாக இருக்கிறான். 

விஸ்வநாதன் ஒரு முட்டாள். அவனுக்கு மச்சினனின் காதலும் தெரியவில்லை. அவனின் பிடிவாதமும் தெரியவில்லை. உயிரே போற நிலை வந்தாளும் மனைவியை பிரிந்து இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்டமாட்டானென்று. 

மச்சினன் மனைவியுடன் வாழ்ந்ததில் அவர்களுடைய வாரிசு அவளுக்கே தெரியாமல் வயிற்றில் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கிறதென்பதும் தெரியவில்லை அது தெரிந்தால் விஸ்வநாதனின் நிலை என்னவாகும்? அது தெரிந்தாலாவது தன் எண்ணம் தவறு என உணர்வானா? இல்லை திரும்பவும் மனதில் வஞ்சத்தை வளர்த்து கொள்வானா? எல்லாம் காலத்தின் கையில்தான்.

கொள்ளு பேத்தியை பார்ப்பதற்காக திரும்பவும் மகனிடம் சண்டைபோட்டுகொண்டு மருமகனை வரவைத்து காரில் மகள் வீட்டுக்கு வந்துவிட்டார் பொன்னுதாயின் அம்மா.

போனமுறை வந்தபோதாவது கொஞ்சம் நடையுடையாக இருந்தவர் இப்போது ரொம்ப தளர்ந்துவிட்டார் பொன்னுதாயின் அம்மா. மருமகள் இல்லையென்றால் பேரனின் பொண்டாட்டி  உதவியுடன்தான் வெளியவே நடந்து செல்லவேண்டிய நிலமையில் இருக்கவும் மகன் அவரை ஊருக்கு கூட்டிபோக மாட்டேன் என்று கூறிவிட்டார் அதில் மகனுக்கும் அம்மாவுக்கும் பெரிய சண்டை. கடைசி காலத்துல என்ற கொள்ளுபேத்தியக்கூட பாக்காம போறேனேனு ஒப்பேறி வைக்கவும் தங்கச்சி புருசனுக்கு போன்பண்ணி உங்க மாமியாரை கூட்டி போங்க மாப்பிள்ளை என்றுவிட்டார்.

பாவம் அவரும்தான் என்ன பண்ணுவார் அம்மா ஒரு பக்கம் பேசினால் பொண்டாட்டி “நா எம்புட்டுதா பாத்தாலும் உங்க அம்மாவுக்கு மகள்தான் பெருசு இனிமே நா பாக்கமாட்டேன் நீங்களாச்சு உங்க அம்மாவாச்சு” என சண்டை போடவும் நொந்துபோன மனுசன் மகள் வீட்டுல உன்ற ஆசை தீரர வரையிலும் இருந்துட்டு வாமானு அனுப்பி வைத்துவிட்டார்.

அவரிடம் கார் இல்லாததால் ராசப்பனே போய் தன் அத்தையை அழைத்து வந்து விட்டார்.

மகள் வீட்டுக்கு வந்தவுடனே பேரன் பொண்டாட்டிய பாத்ததுமே கண்டுபிடித்து விட்டார். 

“ஏன்டி பொன்னு பேத்தி முழுகாம இருக்கறத என்றகிட்ட ஒரு வார்த்தை சொன்ன என்ன? நானென்ன அம்புட்டு வேண்டாதவளா போயிட்டேனா? உன்ற அண்ணன்காரன்தா எனக்கு வயசாகிபோச்சுனு மூலைல உட்கார வச்சுட்டானு மக வூட்டுக்கு வந்தா அவ ஆத்தானு ஒருத்தி இருக்கறதையே மறந்துட்டாளே… இதே என்ற கூட பொறந்தவன் இருந்துருந்தானா எனக்கு சொல்லாம விட்ருப்பானா?? ஏன்டா ராசு உனக்கும் இந்த அத்தக்காரி வேண்டாதவளா போயிட்டேன்ல?” என ஒப்பேறியே வைக்க ஆரம்பித்துவிட்டார்.

வயதாகி விட்டால் குடும்பத்தார்கள் பேசக்கூட நேரமில்லாமல் ஓடும்போது மனதளவில் தன்னை ஒதுக்குகிறார்களே என நினைக்க ஆரம்பித்துவிடுவர். அவர்களுக்கு எப்பவும் யாராவது தன்னுடன் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என நினைப்பார்கள். சிறு வலி என்றால்கூட  மொத்தகுடும்பமும் தன்னை பார்க்கவேண்டும். ஒரு குழந்தையின் மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

அதன் வெளிப்பாடுதான் பவளாத்தாவின் ஒப்பேறி.

ராசப்பனுக்கும், பொன்னுதாயிக்கும் அவரை சமாதான படுத்தவே போதும்போதுமென்று ஆகிவிட்டது. லலிதாவோ அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்துபோய் நின்றிருந்தாள்.

பொன்னுதாயிதான்  “நீ வேற ஏம்மா ஒப்பேறி வைக்கற அதலாம் ஒரு மண்ணும் இல்லை… உன்ற பேத்தி சும்மாதா இருக்கா…”

“ஏன்டி கூறுகெட்டவளே… நீயெல்லாம் எப்படி ரெண்டுபுள்ள பெத்து என்னத்ததா கிழிச்சியோ… மருமக வாயும் வயிறுமா இருக்கறதுக்கூட தெரியாம என்னடி பொழப்பு பொழைக்கற?” அவரும் பதிலுக்கு திட்ட ஆரம்பித்துவிட்டார்.

தன் தாயின் பேச்சில் சிறு ஆசை மனதில் உதித்தாளும் அதனை காட்டிக்கொள்ளாமல் “மாசமா இருக்கறவளுக்கு வர அறிகுறி எதுவுமே இவளுக்கு இல்லம்மா…”

“உன்னெல்லாம்… ஏன்டி இம்புட்டு வயசாகிடுச்சே உனக்கு இதுக்கூடவா தெரியாது? சில பொம்பளைங்களுக்கு வயித்துல புள்ள இருந்தாலும் மயக்கம், வாந்தி எல்லாம் வராதுடி.., வயிறுக்கூட பெருசா தெரியாது டி அறிவுகெட்டவளே…” மகளை திட்டிவிட்டு பேரன் பொண்டாட்டியை அழைத்தார்.

அம்மாச்சி தன் அத்தையிடம் கேட்டதுமே அவளுக்கு புரிந்துவிட்டது. அவள் வயிற்றில் தன் கணவனின் வாரிசு வளர்கிறதென்று… மனதிலே மாத கணக்கும் போட்டுவிட்டாள் நான்கு மாதம் முடியும் தருவாயில் இருக்கிறது என்பதை உணர்ந்ததும் அவளின் கை அவளையறியாமலே  வயிற்றை தொட்டு தடவியது. மனதில் கணவனின் வாரிசை உணர்ந்ததும் இன்பச்சாரல் பூத்தது.

பொன்னுதாயி அம்மா சொன்னதை கேட்டு மருமகளை திரும்பி பார்த்தவர் மருமகளின் முகத்தில் தெரிந்த சந்தோசமும் வயிற்றை தடுவிய கையை பார்த்ததுமே அம்மா சொன்னது உண்மை என்பதை உணர்ந்துவிட்டார். அமைதியாக மருமகளைதான் பார்க்க ஆரம்பித்தார். ஏன் தன்னிடம் இதைக்கூட சொல்லாமல் மறைத்தாள் என்ற கேள்வியை அவரை வதைத்தது.

பவளாத்தா, “கண்ணு இங்க வாடிம்மா…” என்றழைத்தார்.

அவரின் அருகில் வந்து நின்றவளின் கையை பிடித்து பார்த்தவர் இரட்டை நாடி துடிப்பை உணர்ந்ததும் “நா சொன்னது நெசம்தான்டி புள்ள கையில ரெட்டநாடி துடிக்குது” மகளிடம் கூறினார்.

பொன்னுதாயிதான் அவர் சொல்வதற்கு முன்னால் கண்டுபிடித்துவிட்டாரே… எதுவும் பேசாமல் மருமகளை வெறித்தார்.

மகனுக்கு வாரிசு வரப்போவதை கேட்டதும் ராசப்பனுக்கு அத்தனை சந்தோசம்.. மகன் பிறந்ததும் அவனை கையில் வாங்கியபோது உணர்ந்த மகழ்ச்சியை பேரக்குழந்தை வரப்போகிறது என்ற வார்த்தையை கேட்டபோதும் உணர்ந்தார். இன்னும் பேரக்குழந்தையை கண்ணில்கூட பார்க்கவில்லை அதற்குள் ஏகபட்ட கனவு கான ஆரம்பித்துவிட்டார்.

கோதைக்கும் தன் தம்பிக்கு வாரிசு வரப்போவதை கேட்டதும் சந்தோசம் பிடிபடவில்லை. தம்பி மனைவியை கட்டி அணைத்து அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டாள். அவளும் எத்தனைநாள் கவலைபட்டிருக்கிறாள் தன் தம்பியின் வாழ்க்கையை நினைத்து., இன்று நல்ல சேதியை கேட்டதும் இனிப்பு செய்ய சமையல்கட்டிற்கு ஓடிவிட்டாள்.

பவளாத்தா “ஏ கண்ணு நீ தலைக்கு குளிக்காம இருக்கறத ஏ என்ற மககிட்ட சொல்லல?”

“எனக்கும் தெரியலைங் அம்மாச்சி… நீங்க சொன்னதும்தான் தலைக்கு தண்ணி ஊத்திகிட்ட நாளே நெனப்பு வந்தது” தலையை குனிந்தவாறே பதில் கூறினாள்.

“சரி ஆத்தா… அதுக்கென்ன… அதான் இப்போ தெரிஞ்சி போச்சுல இனிமே பாத்து கவனமா இரு” மாசமா இருக்கும்போது எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை அவளுக்கு சொல்ல ஆரம்பித்தார்.

“மருமகளின் பேச்சை கேட்டதும்தான் அவ வேண்டுமென்று தன்னிடம் மறைக்கவில்லை என்பதை புரிந்துகொண்டார் பொன்னுதாயி.. அதன்பிறகு சந்தோசத்திற்கு சொல்லவா வேண்டும் மறுநாள் மகளின் கணவன் வீட்டுக்கு வரும் வரை அந்த சந்தோசம் நீடித்தது.

கோதை அன்று ராத்திரியே வீட்டு போனிலிருந்து தன் வீட்டிற்கு அழைத்து சந்தோசமான விசயத்தை கணவனுக்கு சொல்லிவிட்டாள்.

அதை கேட்டதுமே விஸ்வநாதனின் மனம் கோபத்தில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது., ஆனால் அதை மனைவியிடம் காட்டாமல் மறைத்துக்கொண்டு “நாளைக்கு ஊருக்கு வரேன்ம்மா…” என்று கூறிவிட்டு வைத்துவிட்டான்.

அவனால் ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை… ரெண்டாவது முறையும் கனவுகோட்டை சரிந்து விழுந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அன்று இரவு தூக்கத்தை தொலைத்துவிட்டு பொழுது விடிந்ததுமே கிளம்பி மாமனார் ஊருக்கு சென்றான்.

அவன் வந்த நேரம் ராசப்பனும் காலை சோறு சாப்பிட்டு வயலில் இருந்து வந்தவர் மருமகனை பார்த்ததும் “வாங்க மாப்பிள்ளை…” என வரவேற்றார்.

பொன்னுதாயும் வரவேற்றுவிட்டு அவனுக்கு கணவனுடனே சேர்த்து சாப்பாட்டை போட்டு வைத்தார்.

சாப்பிட ஆரம்பித்தவன் லலிதா தண்ணீர் கொண்டு வந்ததை பார்த்ததும் வன்மம் தலைதூக்க மாமனாரிடம் அவளுக்கு கேக்குமாறு “ஏனுங் மாமா மாப்பிள்ளையே வண்டிக்கு போய் நாலுமாசம் ஆகபோகுது. இடைல ஒருநாள் வந்துட்டு அப்பவே கிளம்பி வண்டிக்கு போயிட்டான்.  இதுக்கூட யோசிக்காம உங்க மக என்ற தம்பி பொண்டாட்டி மாசமா இருக்கானு எனக்கு போன் பண்ணி சொல்றா? பாத்து மாமா கண்டவன் குழந்தைக்கெல்லாம் உங்க பையன அப்பாவா ஆக்கிடாம பாத்துக்கோங்க மாமா…”

அவன் சொல்லி முடித்த அடுத்த நொடி தட்டு சுவற்றில் பட்டு தெரித்தது என்றால் செம்பு கீழே விழுந்து தண்ணி தரையில் கொட்டியது.

வாயில் சோற்றை அள்ளி வைக்க போன ராசப்பன் மருமகன் பேசவும் என்னவென்று கேட்டபதற்காக அவனை பார்க்க ஆரம்பித்தவர் அவன் சொன்னதின் அர்த்தம் புரிந்ததும் சோறுடன் தட்டை தூக்கி எறிந்திருந்தார். அவரின் முகத்தில் அத்தனை கோபம்., விஸ்வநாதனே மாமனிரின் கோபத்தை பார்த்து மிரண்டுவிட்டான்.

 ஆனால் அவரின் கோபம் தன் மீது என தெரியாமல் மகன் பொண்டாட்டியின் மேல் என நினைத்துக்கொண்டு “நா சொல்றத கேட்டு உங்களுக்கே கோபம் வருதே நாளைக்கு ஊருக்குள்ள மாப்பிள்ளைய கண்டவனும் கேப்பானே மாமா… ஒழுக்கங்கெட்டவள கட்டி ஊருக்குள்ள கேவலபடனும்னு மாப்பிள்ளைக்கு என்ன தலையெழுத்தா மாமா?”

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே சத்தம் கேட்டு சமையல் கட்டிலிருந்து அங்கு வந்து வந்த நின்ற மனைவியை  ஓங்கி அறைந்தவர் “ஏன்டி இந்த வேலையெல்லாம் நீ செய்யமாட்டியாடி அந்த புள்ளைகிட்ட எதுக்கு வேலை வாங்கற?  உன்ற மருமகளை கூட்டிட்டு உள்ள போ…” அதட்டினார்.

பொன்னுதாயி மறுத்து எதுவும் பேசாமல்  செம்பை தவற விட்டதைக்கூட உணராமல் விஸ்வநாதனின் பேச்சில் அதிர்ந்துபோய் நின்றிருந்தவளை உள்ளே அழைத்து சென்றார்.

மாமியார்க்கு விழுந்த அடியில் வாயை தானாக மூடிகொண்டவன் மாமனாரின் பேச்சை கேட்டதுமே புரிந்தது மாமியார்க்கு விழுந்த அடி தனக்கு விழுகவேண்டியது என்று.

அவன் திகைத்துபோய் நிற்பதை பார்த்த ராசப்பன் “இந்த வார்த்தைய வேற ஒருத்தன் சொல்லிருந்தானா அவன அந்த இடத்துலையே வெட்டி பொதச்சிருப்பேன் சொன்னது என்ற மகளோட புருசன்ங்றதால மட்டும்தான் உங்களை உசுரோட விடறேன் மாப்பிள்ளை. என்ற பொண்டாட்டி பத்தினினா அவளோட மருமகளும் பத்தினிதான். எனக்கு அதுல எந்த சந்தேகமும் இல்லை. எனக்கு அந்த புள்ளைய புடிக்காதுதான். அதுக்காக வூட்டுக்கு வாழ வந்த பொண்ணோட ஒழுக்கத்த சந்தேகபடற அளவுக்கு நா ஈனசாதி இல்லை. இதுவே கடைசியா இருக்கட்டும் மாப்பிள்ளை. நீங்க எப்போ வேனாலும் என்ற மகளோட கணவனா வாங்க. மாப்பிள்ளைக்கு உண்டான மரியாதை எப்பவும் இந்த வூட்ல கிடைக்கும் அதுக்காக என்ற மகனையோ அவனோட குடும்பத்தையோ எதுவேனாலும் பேசிபோடலாம்னு நினைக்காதிங்க. நா பாத்துட்டு இருக்கமாட்டேன். எனக்கு மக புருசனை விட மகன்தான் முக்கியம் புரியும்னு நினைக்குறேன்” என்றவரின் குரலில் அத்தனை அழுத்தமிருந்தது.

மாமனாரிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை அவன் எதிர்பாக்கவே இல்லை.. அவன் அதிர்ந்துபோய் சாப்பிடாமல் எழுந்து நிற்பதை பார்த்தவர் அங்கு வந்து நின்ற மகளை கூப்பிட்டு “உன்ற புருசனுக்கு சோறுபோடாம அங்க என்ன பண்ணிட்டு இருக்க வா வந்து சோறு போடு மாப்பிள்ளை சாப்பிட்டு போகட்டும் அவருக்கும் சோலி கெடக்கும்ல?” சாதாரணமாக கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

மாமனாரின் புதிய அவதாரத்தை நம்பமுடியாமல் பார்த்துகொண்டிருந்தவனின் அருகில் வந்த கோதை “மாமா உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றாள்.

அதில் தெளிந்தவன் “என்னடி திமிரா? நானென்ன சோத்துக்கு இல்லாமையா உன்ற அப்பன் வூட்டுக்கு வந்தேன்…” அவளிடம் எகிறினான்.

“உஸ்ஸ்ஸ்… மெதுவா பேசுங்க… நீங்க பேசுனது அப்பா காதுல விழுந்துடப்போகுது. என்ற அப்பாவா இருக்கவும் வாய் வார்த்தையா சொல்லிட்டு போனார்.., இதே என்ற தம்பியா இருந்தா அவர் சொன்னத செஞ்சிட்டு போயிட்டே இருப்பான். அதுதான் நடக்கனும்னு ஆசை இருந்தா சொல்லுங்க நானே என்ற தம்பிட்ட சொல்லிடறேன்.”

இனி பேசுவானா என்ன… மாமனாரை பகைத்து கொள்ளவும் விருப்பமில்லை. ஒவ்வொரு நோம்பிக்கும் அவன் எதிர்பார்ப்பதை விட அதிகமாக சீர் செய்கிறாறே… அமைதியாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

வெளியில்தான் அவன் அமைதியாக இருப்பதை போல் இருந்தது ஆனால் உள்ளுக்குள் அத்தனை பழிவெறி மாமனாரின் வார்த்தை அவனின் கோபத்தை தூண்டிவிட்டு விட்டது. மச்சினனின் குடும்பத்தை பிரித்து மாமனாரை கதற வைக்க முடிவெடுத்துவிட்டான்.

கோழைகள் என்றுமே நேர்வழியில் மோதமாட்டார்கள் முதுகில்தான் குத்துவர். விஸ்வநாதனும் ஒரு கோழையே நேராக மோதினால் அவர்களை ஜெயிக்க முடியாது என்று உணர்ந்து அவர்களுக்கே தெரியாமல் பின்னால் முதுகில் குத்த காத்திருத்தான்.

Advertisement