Advertisement

அத்தியாயம்.17

ராம் வண்டிக்கு கிளம்பிப்போய் இரண்டு மாதம் ஆகபோகிறது. இன்னும் வீட்டுக்கு வரவே இல்லை.

மகன் இத்தனை நாள் வாராமல் இருந்ததுமே பொன்னுதாயிக்கு புரிந்துவிட்டது. மகன் மருமகளுக்கிடையில் ஏதோ பிரச்சனை என்று. அது என்னவென்றுதான் தெரியாமல் குழம்பி நின்றார். மருமகளிடமும் எப்படி எப்படியோ கேட்டு விட்டார் ம்கூம்… வாயை திறந்தாளில்லை வெறித்த பார்வை மட்டுமே…

 மகன் மருமகளின் மேல் இருக்கும் கோபமெல்லாம் கணவனிடம் தான் காட்டினார்., ராசப்பனுக்கு மனைவி ஏன் திட்டுகிறாள் என தெரியாமலே திட்டுவாங்க ஆரம்பித்தார். ஏன்டி திட்றனு கேட்டா அதுக்கும் கத்துவாளேங்ற பயத்தில் வாயை திறப்பதே இல்லை. 

அவருக்கு இருந்த கோபத்தில் கோதைக்கு பிரசவ காலம் நெருங்குவதால் மகள் வீட்டில் போய் இருந்து கொண்டார்., மகளுக்கு மாமியார் இல்லாதது அவர்க்கு வாய்ப்பாக போய்விட்டது.

ராசப்பன் கூட மகளை தன் வீட்டில் வைத்து இரண்டாவது குழந்தைக்கும் பிரசவம் பாக்கலாம் என சொல்லியும் பொன்னுதாயி அதை கேக்கவே இல்லை. அதற்குமேல் ராசப்பனாலும் எதுவும்  சொல்ல முடியவில்லை.

ராசப்பன் வெளியில்தான் முரடன், கோபக்காரன். ஆனால் மனைவி பிள்ளைகளிடம் அன்பானவர் மட்டுமே… அவரை பொருத்தவரைக்கும் எல்லாத்துக்கும் பொன்னுதாயி வேண்டும். பொன்னுதாயின் திட்டை வாங்காமல் அவருக்கு பொழுதே போகாது… அத்தை மகள் என்ற ஒரே காரணத்தால்  பொன்னுதாயை கல்யாணம் பண்ணினாலும் அவருக்கு மனைவியை பிடித்தே இருந்தது. அந்த பிடித்தமும் இத்தனை வருட வாழ்க்கையில் மனைவி இல்லாமல் ஒருநாள் கூட வாழவே முடியாதுங்ற நிலைக்கு வந்துவிட்டார். 

டாம் அண்ட் ஜெர்ரி போல் தான் அவர்கள் உறவு எத்தனைதான் அடித்துக்கொண்டாலும் மறுநிமிசமே பேச ஆரம்பித்துவிடுவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க மாட்டார்கள்.

இன்று மனைவி கூட இல்லாமல் போகவும் வீட்டிலும் பேச்சுதொனைக்கு கூட ஆள் இல்லாமல் நொந்து போய்விட்டார். மருமகளிடமும் இன்னும் பேசவில்லை பேச விருப்பமும் இல்ல.,

அவள் இப்போதும் பிடிக்காத மருமகள் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை. மொத்தத்தில் வீடு வீடாகவே இல்லை.

இரண்டு மாதம் கழித்து அக்காவுக்கு குழந்தை பிறந்த சேதி கேட்டதும் அன்று காலையில் வீட்டிற்கு வந்தான் ராம்.

ராசப்பனுக்கு மகனை பார்த்ததில் அத்தனை சந்தோசம்.

“வா கண்ணு. நல்லாருக்கியா கண்ணு? ஏங்கண்ணு இப்படி எளச்சிபோய் வந்து நிக்கற? சாப்டறியா இல்லையா…?”

“நா நல்லாருக்கேன்ப்பா… நீங்கதா என்னவிட மோசமா இருக்கிங்க?”

“அதபோய் உன்ற அம்மாகிட்ட சொல்லு கண்ணு. அப்பவாவது புருசன்னு ஒருத்தன் இருக்கானேனு நெனைப்பு வரட்டும்.”

“ஏன்ப்பா… அம்மா அக்காவ பாத்துக்கதானே போருக்காங்க?”

“ஏ உன்ற அக்காவ இங்க வச்சி பாத்துகிட்டா என்னவாம்… நா அம்புட்டு தூரம் சொல்லியும் கேக்காம அங்க போய் ரெண்டு மாசமா உட்கார்ந்துகிட்டா… இங்க நாந்தா அவ நெனைப்பாவே இருக்கேன். அவளுக்கு என்னபத்தி கவலையே இல்லை…” மகனை பார்த்ததும் தன் மனதில் இருந்ததெல்லாம் கொட்டிவிட்டார்.

அவனுக்கு தந்தையின் பேச்சை கேட்டது சிரிப்பு வந்துவிட்டது. இதுவே அம்மா கூட இருந்திருந்தா  அவ என்ன திட்டிட்டே இருக்கானு குறை படிச்சிருப்பார்.

“சரிப்பா நா குளிச்சிட்டு அக்காவ போய் பாத்துட்டு போகனும் லோடு ஏத்துனவாக்குல வண்டி நிக்குது.

“ஏங்கண்ணு இப்போதா வந்த ஒரு வாரம் இருந்துட்டு போலாம்ல?”

“இல்லைப்பா சரக்கோட வண்டி நிக்குது.  ஆள் வேற இல்லை நா போய்தா ஆகனும்.”

மகனை விட மனமே இல்லை என்றாலும் வேற வழி இல்லாததால் சரி என்றார்.

உள்ளே இருந்தவள் கணவனின் குரல் கேட்டதுமே ஓடிவந்து விட்டாள். அவன் தந்தையிடம் பேசி கொண்டிருப்பதை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள். அவன் வண்டிக்கு போய் இத்தனை நாள் வராமல் இருந்ததும் தான் தான் பேசிய வார்த்தையின் வீரியமே புரிந்தது.

காலம் கடந்த பின் புரிந்து என்ன பயன்?  அம்மா படுத்த படுக்கையாக இருப்பதை நினைத்து குற்ற உணர்ச்சி ஒருபக்கம் ஒரே ஊரில் இருந்தாலும் சகோதரர்கள் அவளைக்கண்டாலே முகத்தை கூட பார்க்க விரும்பாமல் போவது, தன்னை திட்டிக்கொண்டே பாசத்தை காட்டும் மாமியாரும் தன்னை விட்டு போனது, கணவனும் அவளுடன் இல்லாதது எல்லாம் சேர்ந்து அவளை மனநோயாளியாகவே ஆக்கிவிட்டது. முன்னெல்லாம் அழுதாவது தனது மனகாயத்தை ஆற்றிக்கொண்டாள். ஆனால், இந்த ரெண்டு மாசமாக கணவன் போனபின்பு ஒரு சொட்டு கண்ணிர்க்கூட விடவில்லை. தன்னால் யாருக்கும் நிம்மதி இல்லைங்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது அதுவே அவளை கொன்றுகொண்டிருக்கிறது.

ராம் தந்தையிடம் பேசினாலும் மனைவி வந்து நின்றதை கவனித்துவிட்டான்., உடல் மெலிந்து கண்களில் கருவளையம் விழ தலை கலைந்து  ஏனோ தானோவென்று ஒரு புடவையை உடுத்தி  நின்றுகொண்டிருந்ததை பாத்ததும் ‘கண்டதையும் யோசித்து தன்னையே வதைத்துக் கொள்கிறாளே’ என்ற ஆத்திரத்தில் அவளிடம் பேசக்கூட தோன்றாமல் குளித்துவிட்டு வந்தவன் அவள் எடுத்து வைத்த சாப்பாட்டை சாப்பிடாமலே மருத்துவமனைக்கு கிளம்பி சென்றுவிட்டான்.

கணவனுக்கு தன் கையில் சாப்பிடக்கூட பிடிக்கவில்லை தன்னை வெறுத்து விட்டான் என அவளாகவே நினைத்துகொண்டாள். இந்தமுறை அழுகையெல்லாம் வரவில்லை விரக்தி மட்டுமே… 

மருத்துவமனைக்கு வந்த மகனை பார்த்த பொன்னுதாயி அவனிடம் பேசக்கூட பிடிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டார். அவனுக்கும் அம்மாவின் கோபம் புரிந்தது. அக்காவையும் குழந்தையையும் பார்த்தவன் அவர்களுக்கு வாங்கி வந்ததை அக்காவிடம் குடுத்துவிட்டு அக்காவிடமும்  மாமாவிடமும் பேசிவிட்டு சிறிது நேரத்துலையே கிளம்பிவிட்டான்.

மகன் போனதும் மகளிடம் “என்னடி நினச்சிட்டு இருக்கான் உன்ற தம்பி… இப்படி பிரிஞ்சி இருக்கவா அவளை வம்படியா கட்டிட்டு வந்தான்

 கட்டிட்டு வந்துட்டு குடும்பம் நடத்தமாட்டேனா என்ன அர்த்தம்? இவன் இப்படியே பண்ணானா நானே அவளை கொண்டுபோய் அவ அம்மா வீட்டுல விட்டுட்டு வந்துடுவேன்…”

“ஏம்மா இப்படிலாம் பேசற?”

“வேற என்னடி பேச சொல்ற? எனக்கும் மகன் வூட்டு பேரக்குழந்தைகளை பாக்கோணும்னு ஆசை இருக்காதா? கண்ணாலம் ஆகி மூனு மாசத்துக்கு மேல ஆகிபோச்சு இன்னும் ஒருத்தரோட மூஞ்ச ஒருத்தர் பாத்துக்காம இருந்தா நா என்ன தான்டி பண்ணுவேன்?”

பொண்டாட்டியும், மாமியாரும் பேசுவதை அமைதியாக கேட்டுகொண்டிருந்த விஸ்வநாதனின் மனதில் அத்தனை சந்தோசம். இதை ஊதி பெரிது படுத்தினால் அவளை வெளியே அனுப்பிவிடலாம் பின் தன் தங்கையை அவனுக்கு கட்டி வைத்து விடலாம் என கனவு கோட்டை கட்ட ஆரம்பித்தான். அவன் மனதில் இன்னமும் தங்கையை மச்சினனுக்கு கட்டிவைக்க முடியவில்லைங்ற ஆதங்கம் இருந்து கொண்டேதான்  இருக்கிறது. அதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால் விடுவானா என்ன?

அத்தனை சொத்துக்கும் மச்சினன் ஒருத்தன்தானே ஆண் வாரிசு. அதுவும் பத்தாதற்கு இப்போது அவன் லாரிக்கு போய் நல்லா சம்பாதிக்கரான்., இன்னும் கொஞ்சநாளில் சொந்தமாகவே தொழில் பண்ண ஆரம்பித்துவிடுவான் அப்படி பட்டவனை இழக்க விஸ்வநாதனுக்கு விருப்பமில்லை. அதுவுமில்லாமல் தாய் இல்லாமல் வளர்ந்த தங்கைக்கு தன் மாமியாரே மாமியாராக வந்தால் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குவாறே… அவனும் பாத்து கொண்டுதானே இருக்கிறான். மகன்கூட வாழவே மாட்டேனென்று பிடிவாதம் பிடிக்கும் அவளுக்குதானே இன்னும் சப்போர்ட் பண்ணி மகனை திட்டிக்கொண்டிருக்கிறார்.

மருமகனின் எண்ணம் புரியாமல் மருமகனிடமே உதவி கேட்டார் பொன்னுதாயி.

“தம்பி நீங்க ஒருதடவை அவன்கிட்ட பேசிபாருங்களேன் உங்ககிட்டயாவது சொல்றான்னானு பாக்கலாம்…”

“சரிங்கத்தை ஊருக்கு வரும்போது பேசி பாக்கறேன்…” என்றவனின் மனமோ ‘அவர்களை எப்படி சேரவிடாமல் பிரிக்கலாம்’ என திட்டம்போட ஆரம்பித்தது.

குழந்தை பிறந்து ஐந்தாம் நாளே மகளையும் பேத்தியையும் கூட்டிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கே வந்துவிட்டார் பொன்னுதாயி. பெரிய பேத்தி அப்பா செல்லம் என்பதால் அப்பாக்கூடவே சென்றுவிட்டாள். அவளை பாத்துகொள்ள விஸ்வநாதனின் தங்கை இருக்கவும் பொன்னுதாயும் பெரியபேத்தியை மருமகன் கூடவே அனுப்பி வைத்துவிட்டு மகளையும், கைகுழந்தையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.

மனைவி வீட்டிற்கு வந்ததும் தான் ராசப்பனின் முகத்தில் சந்தோசமே வந்தது. விஸ்வநாதனும் மனைவியையும், மகளையும் பார்க்கும் சாக்கில் அடிக்கடி மாமியார் வீட்டுக்கு வர ஆரம்பித்தான்.

அவனின் எண்ணம் எப்படியாவது லலிதாவை வீட்டைவிட்டு துரத்தி விட வேண்டும் என்பதே… அதனை ஊருக்கு வரும்போதெல்லாம் மனைவி, மாமியார்க்கு தெரியாமல் லலிதாவை வார்த்தைகளால் காயபடுத்த ஆரம்பித்தான். 

அதற்கு தகுந்தமாதிரியே அக்கா குழந்தையை பார்த்துவிட்டு சென்ற ராம் இரண்டு மாதம் ஆகியும் வரவில்லை. அதை வைத்தே லலிதாவிடம் “உன்ற புருசனுக்கு நீ இங்க இருக்கறதே பிடிக்கலை. உன்ற குடும்பத்தை ஊர்ல அசிங்கபடுத்தறதுக்காகத்தான் உன்ற கழுத்துல தாலி கட்டுனான். அது நடந்துருச்சி. உன்றக்கூட குடும்பம் நடத்துக்கூட அவனுக்கு பிடிக்கலை அதான் உன்ன தள்ளி வச்சிருக்கான் உன்ன எப்பவும் தொடமாட்டான்…” என அவளை பாக்கும்போதெல்லாம் சொல்ல ஆரம்பித்தான். 

Advertisement