Advertisement

அத்தியாயம்.16

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவனின் மனமோ அவனின் ஆயா பேசியதில் தான் உழன்று கொண்டிருந்தது. ராமின் நினைவுகளிலெல்லாம் மனைவி மட்டுமே…

அவனின் அம்மா வந்து வீட்டிற்கு போக சொல்லும் வரையிலும் குழப்பத்தில் இருந்தவன் இருவரையும் அங்கு பாத்ததுமே ‘ஐயோ தன்னவள் தனியாக இருப்பாளே…’ என்கிற எண்ணமே… மேற்கொண்டு பேச விடாமல் வீட்டிற்கு இழுத்து வந்தது.

வீட்டிற்கு வந்தவன் கதவை தட்டியதுமே அடுத்த நொடி கதவை திறந்துகொண்டு வந்து அவனை கட்டிக்கொண்டவளின் உடல்கள் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. 

அத்தை, மாமா போகும் வரையிலும் தைரியமாக இருக்கமாதிரி நடித்தவள் அவர்கள் சென்றதும் அந்த அமாவாசை இருட்டு அவளை பயமுறுத்த கதவை அடைத்துக்கொண்டு கதவின் மேல் சாய்ந்து அமர்ந்து கால்களை கட்டிகொண்டு முகத்தை அதில் புதைத்துகொண்டாள்.

அவர்கள் வீட்டில் வளர்க்கும் பூனை வாசலில் நின்று கத்தியதுக்கூட அவளை பயமுறுத்தியது.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம் இப்போ அந்த நிலையில் தான் லலிதாவும் இருந்தாள்.

பூனையின் சத்தத்தை கேட்டே உடம்பெல்லாம் வெடவெடக்க ஆரம்பித்துவிட்டது. தன்னுடைய பயத்தை அறிந்து இருட்டில் கூட தன்னை விடாமல் பாதுகாத்த தாய், தந்தை, சகோதரனின் நினைவு வந்து கண்ணீர் வரவைத்தது.

அழுதுகொண்டிருந்தவள் அவன் கதவை தட்டியதுமே அது தன்னவன்தான் என உணர்ந்து கதவை திறந்த வேகத்தில் அவனிடம் தஞ்சம் புகுந்திருந்தாள்.

மனைவியின் உடல் நடுக்கத்தை உணர்ந்தவன் தன்னையே திட்டிகொண்டு “என்ன மன்னிச்சிடு லதாமா நா கொஞ்சம் முன்னாடியே வந்துருக்கனும்…”

எங்கே அவன் சொல்வதை காதில் கேட்டாதானே கண்ணை மூடியதுபோல காதையும் மூடிக்கொண்டு அவனின் மார்பில் முகம் புதைத்து பயத்தில் அழுதுகொண்டிருக்கிறாளே…

அவளின் பயம் புரிந்தவன் அணைத்தவாறே  வீட்டிற்குள் நுழைந்து கதவை சாற்றிவிட்டு தன் அறைக்கு அழைத்து சென்றவன் கட்டிலில் அமரவைக்க முயன்றான்.

ம்கூம்… அவனை விட்டு பிரிந்தாளில்லை. 

அவளை தெளிய வைக்க “லதாமா… என்ன விடு” என அதட்டினான்.

அவனின் அதட்டலில் சுயம் தெளிந்தவளாக அவனை விட்டு விலகி கண்களில் பயத்தை தேக்கி பார்த்தாள்.

அவளின் பார்வை அவனை கொல்ல “லதாமா… நா இருக்கேன்டா உன்ன விட்டு எங்கேயும் போகமாட்டேன்  புரியுதா? உனக்கு சாப்பாடு போட்டுவரத்தான் சமையல்கட்டுக்கு போறேன். நீ கட்டில்ல உட்கார்ந்துரு உடனே வந்துடறேன்…” குழந்தைக்கு சொல்வதை போல சொல்லி அவளை கட்டில் அமரவைத்துவிட்டு இருவருக்கும் ஒன்றாக சாப்பாடு போட்டு எடுத்துக்கொண்டு வந்தான்.

அவன் சாப்பாடு போட்டுவந்து அவனே ஊட்டும்போது மறுப்பேதும் கூறாமல் வாங்கிகொண்டவள் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள். தன் தந்தையின் மறுபிம்பமாக அமர்ந்து தனக்கு சோறு ஊட்டுபவனை விழியெடுக்காமல் பார்த்துகொண்டிருந்தாள்.

அவளுக்கு ஊட்டி முடித்ததும் மீதி சாப்பாட்டை தானும் சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி வைத்துவிட்டு வந்தவன் அவளின் அருகிலே கட்டில் அமர்ந்து கொண்டான்.

அவன் அமர்ந்ததுமே தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் தோளில் சாய்ந்ததுமே அவனுமே அணைத்துக்கொண்டான். இருவருக்குமே  அந்த நிமிடம் அந்த அணைப்பு தேவையாக இருந்தது.

லலிதாவின் நினைவில் இத்தனை நாள் அம்மாவை பற்றி மட்டுமே நினைத்து குற்ற உணர்ச்சியில் இருந்தவள் இன்றுதான் கொஞ்சம் மறந்து கணவனை பற்றியும் நினைக்க ஆரம்பித்தாள்.

சிறிதுநேரம் மனைவியை அணைத்தவாறே அமர்ந்திருந்தவன் தன் ஆயா சொன்ன… ‘அவளை பழைய நிலமைக்கு கொண்டுவரனும்னா நீ புருசனா அவக்கூட வாழ ஆரம்பி’ என்ற வார்த்தை நினைவு வந்தது.

அவனுக்கும் தன்னவளை தன்னைவிட்டு பிரிந்துபோக விட விருப்பமில்லை. அவளை தன்னுடன் தக்கவைத்து கொள்ள தன்னவளுடன் வாழ முடிவெடுத்து கணவனாக நெருங்க ஆரம்பித்தான்.

கணவனின் தீண்டலில் முதலில் அதிர்ந்தாலும் அவனுக்காக அதனை மறைத்துகொண்டு மறுப்பு சொல்லாமல் அவனின் ஆசைக்கு வழிவிட்டாள்.

தன்னவள் தன் தொடுகையில் அதிர்ந்ததை அவனுமே உணர்ந்தான். இருந்தும் அவளுடன் வாழ முடிவெடுத்து மேலும் நெருங்கினான். அவள் மறுப்பேதும் சொல்லாமல் இருந்ததுமே அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவளுக்கு சிறு வலிகூட தன்னால் வந்து விடக்கூடாது என நினைத்து மனையாளை ஒரு பூவை போல கையாள ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் கணவனுக்காக கடமைக்கு ஈடுபட்டவள் பின்பு அவளையறியாமலே கணவனின் மெல்லிய தீண்டலில் உடல் இளக ஆரம்பித்ததை மனதிற்குள் உணர்ந்ததும் தன்னையே வெறுத்தாள்.

ஆனால், அவளின் மனவலியை தன்னவனிடம் காட்டி  அவனையும் கஷ்டபடுத்த விரும்பாமல் தன் உடல் அவனின் தீண்டலில்  உருகி கரைவதை ஒருவித வலியுடன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

அவளின் நிலை இதுவென்றால் அவனின் நிலையோ தன்னவளுக்கு எதிர்பதமாக இருந்தது.

முதலில் அவளை தன்னுடன் தக்க வைத்துகொள்ள கணவனாக நெருங்கியவன் மனைவியின் இளகலில் தானும் முழுமனதுடன் தன்னவளை தனக்குள் மொத்தமாக சுருட்டிக்கொள்ள ஆரம்பித்தான்.

அவளை எத்தனை முறை தனக்குள் சுருட்டிக்கொண்டானேன்று அவனுக்கே தெரியவில்லை. அவளும் கணவனின் சந்தோசத்திற்காக தன் மன வலி, உடல் வலி இரண்டையும் மறைத்து அவனை மகிழ்வித்தாள்.

பாதிநேரம் வரையிலும் அவளை விடமனமில்லாமல் தன்னவளுக்குள்ளே மூழ்கிபோனவன் பின் அவளின் களைப்பை உணர்ந்து அவளை விட்டு விலகி நெற்றில் அழுந்த இதழ் பதித்து “என்ற வாழ்நாளோட மொத்த சந்தோசத்தையும் இன்னைக்கே குடுத்துட்ட லதாமா…” அவன் சொன்ன வார்த்தை பலிக்க போவதை அறியாமல்  அவளை அணைத்தவாறே உறக்கத்தை தழுவினான்.

தன்னவன் உறங்கும் வரையிலும் கண்ணீரை அடக்கிக்கொண்டு படுத்திருந்தவள் அவன் உருங்கியதும் கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

அந்த படுக்கைக்கூட முள்ளாய் அவளை குத்த ஆரம்பித்தது. அன்று மாமனார் சொன்ன ‘ஆம்பளை சுகத்து அலையறவ…’ என்ற வார்த்தை இன்று உண்மையாக ஆனதை உணர்ந்ததும் தன் கணவனின் தீண்டலில் உருகி கரைந்த உடலை வெறுத்தாள். உடலை தீயிட்டு கொளுத்தி கொள்ளும் அளவிற்கு அவள் மேலையே அவளுக்கே வெறுப்பு கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. 

‘இந்த சுகத்துக்காகத்தானே அம்மாவை சாவின் விளிம்புக்கு தள்ளிவிட்டு வந்த’ அவளின் மனசாட்சியே அவளை கேள்வி கேக்க ஆரம்பித்தது.

இப்போது கணவனின் அணைப்புக்கூட அவளை தீயாக சுட்டது. வலி தாங்கமுடியாமல் அவனை விட்டு விலக ஆரம்பித்தாள்.

ஆனால், அவளின் நாயகனோ தூக்கத்தில் கூட தன்னவளை பிரிய மனமில்லாமல் இன்னும் இழுத்து  அணைத்து அவளின் மார்பின் சூட்டிலே உறங்க ஆரம்பித்தான்.

அதுதான் தன்னவளை அணைத்துக்கொண்டு உறங்கும் கடைசி நாளென்று உணர்ந்ததாலையோ என்னவோ விடியும் வரையுலும் அவளை விலக விடவில்லை அவன்.

அவளும் ஒரு பொட்டு தூக்கமில்லாமல் தன் கணவனின் அணைப்பில் இருந்தாலும் நெருப்பில் படுத்திருப்பதை போல படுத்திருந்தவள் விடியற்காலை சேவல் கூவும் சத்தத்தில் அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது மெல்ல   அவனைவிட்டு பிரிந்து எழுந்து குளிக்க வீட்டுக்கு பின்பக்கம் ஓடினாள்.

இருட்டு என்றாலே பயந்து நடுங்கியவள் இன்று இருள் பிரியாத அந்த வேலையிலும் தன்னை மறந்து எதோ துரத்துவது போல ஓடினாள்.

தன் மனதில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பை அணைத்துவிட நினைத்து அந்த குளிரிலும் பச்ச தண்ணியை மோண்டு தன்மேல் ஊற்ற ஆரம்பித்தாள். பாவம் அவளுக்கு தெரியவில்லை நெருப்பு வெளிய எரிந்தால் மட்டுமே தண்ணீ ஊற்றினால் அணையும் என்று. இந்த நெருப்பு அவளுக்குள் அல்லவா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதனை அணைக்க தண்ணீரால் முடியாதென்று அவளிடம் யார் சொல்வது…?

கை வலிக்கும் வரையிலும் தண்ணீரை மோண்டு ஊத்தியும் நெருப்பு அணையாமல் இருக்கவும் கண்ணீருடனே வேறு உடையை அணிந்துகொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்தாள்.

அவள் குளித்துவிட்டு வரும்போது தான் பொன்னுதாயியும்  வீட்டிற்குள் வந்துவிட்டார். ராசப்பன் அப்படியே வயலுக்கு தண்ணி கட்ட கிளம்பிவிடவும் பொன்னுதாயி மட்டும் வீட்டிற்கு வந்தவர் அந்த நேரத்தில் குளித்துவிட்டு வந்த மருமகளை பார்த்ததுமே மனதில் நிறைவாக உணர்ந்தார். 

அருகில் வந்து மருமகளின் கன்னத்தை வழித்து நெற்றி முறித்தவர் “ரொம்ப சந்தோசம்டா கண்ணு” என்றார்.

மாமியாரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை வேதனையுடன் பார்த்தாள். 

மருமகளின் கண்கள் சிவந்துபோய் முகமே வாடிபோய் இருப்பதை பார்த்தவர் “நீ போய் தூங்குடா கண்ணு இன்னைக்கு நானே எல்லா வேலையும் செஞ்சிக்குறேன்…” என்றார்.

அறைக்குள் போகவே பயந்தவளாய் “இல்லைங்த்தை நானும் வேலை செய்யறேன்…” பிடிவாதமாக கூறி மாமியாருடனே அன்று முழுதுவதும் சுத்த ஆரம்பித்தாள்.

அவளுக்கு பயம் திரும்பவும் கணவன் தன்னை நெருங்கிவிடுவானோ என்று. அவன் நெருங்கினாலும் மறுக்கம தைரியமும் அவளிடம் இல்லை. அவளுடைய மேனியும் அவனின் தீண்டலுக்கு குழையுமே? உடல் சுகத்திற்காக எத்தனை முறைதான் மனதை உயிருடன் கொல்லமுடியும்?

அவள் நினைத்ததை போலதான் ராமும் தன்னவளுடனான தனிமைக்காக ஏங்க ஆரம்பித்து கொண்டிருந்தான். கண் விழித்ததும் தன் அணைப்பில் இருந்தவளை  தான் தேடினான்., அவள் தன் அருகில் இல்லாமல் போகவும் தனக்கு முன்னாலேயே அவள் எழுந்து போய்விட்டதை உணர்ந்ததும் எழுந்து அமர்ந்தவன் தலையை கோதி நேற்று நடந்த கூடலினால் சிறு வெட்க்க புன்னகையை உதிர்த்தான்.

அவனின் மனம் என்றுமில்லாம் இன்று மகிழ்ச்சியில் துள்ளியது. அதே மகிழ்ச்சியுடன் எழுந்து வெளியே வந்தவன் தன்னவள் குளித்து ஈர முடியை துண்டால் சுற்றிகொண்டு அம்மாவுடன் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே குளிக்க சென்றவன் குளித்துவிட்டு வந்ததும் அம்மா கொண்டு வந்து குடுத்த காப்பியை குடித்துவிட்டு  வயலுக்கு சென்றான்.

வயலுக்கு வந்தவனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்ததுமே ராசப்பனுக்கும் புரிந்தது. புடிக்காத மருமகளாக இருந்தாலும் மகனின் சந்தோசத்தை பார்த்ததும் அவரின் மனமும் நிறைவை உணர்ந்தது. இந்த ஒரு மாத காலமும் மகனின் சோர்ந்த முகம் அவரையும் வாட்டியதல்லவா.

இருவரும் சேர்ந்து காலை சாப்பாட்டு நேரம் வரை வயலில் வேலை பார்த்தவர்கள் சாப்பாட்டிற்கு வீட்டிற்க்கு சென்றனர்.

அப்போதும் அவன் கண்முன்னாடி வராமல் இருந்துக் கொண்டாள் லலிதா.

அம்மா வந்து சோறு போடவும் “லதா எங்கம்மா…?” என்றான்.

“உள்ளதான் இருக்கா கண்ணு…”

அவர் மருமகளை தான் மகனுக்கு சோறுபோட போக சொன்னார். அவள்தான் போகமாட்டேன் என்று கூறிவிட்டு சமையல்கட்டுலேயே நின்று கொண்டாள்.

‘மருமகள் வெக்கபடுகிறாள்’ என தவறாக புரிந்து கொண்டவர் சிரித்தவாறே மகனுக்கும் கணவனுக்கும் தானே சோறு போட வந்தார்.

அன்று முழுவதுமே மருமகள் மகனை பார்க்காமல் கண்ணாமூச்சி ஆடவும் இன்றும் நேரமே சாப்பிட்டுவிட்டு கணவனை இழுத்து கொண்டு சென்றுவிட்டார்.

மாமியாரும், மாமனாரும் போவதை வெறுமையான பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். பகல் முழுவதும் யோசித்து ஒரு முடிவெடுத்து கொண்டாள். தன்னுடைய வலியை கணவனிடம் காட்டுவதில்லை என்று அவனின் சந்தோசத்திற்காக தன் மனதை கொல்ல முடிவெடுத்துவிட்டாள். மனதை கொல்வது அவ்வளவு சுலபமில்லை என்று அவளுக்கு யார்ரு சொல்வது???

மனதை கொன்றுவிட்டு தான் தன்னவள் தனக்கு உடம்பை குடுக்கிறாள் என தெரிந்தால் ராமின் நிலை??? தன் கணவனை உயிருடன் துடிக்க துடிக்க கொல்ல முதல்ல அடியை எடுத்துவைத்தாள்.

அப்பாவும், அம்மாவும் போகும் வரையிலும் வெளியில் கட்டிலில் படுத்திருந்தவன் அவர்கள் போனதும் எழுந்து உள்ளே வந்தவன் மனைவி சமையலறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டதும் அங்கு சென்றவன் அவளை பின்னால் இருந்து அணைத்து கழுத்தில்  இதழ் பதித்தவாறே “காத்தால இருந்து  கண்முன்னாடி வராம என்ன ஏங்க வச்சிட்டியே லதாம்மா…” என்றான்.

மனதை கொன்றுவிடலாம் என முடிவெடுத்திருந்தவள் ராம் அணைத்ததுமே அது அவ்வளவு சாதாரணமானது இல்லை என உணர்ந்துவிட்டாள். இதயம் வலிக்க அவனின் தொடுகையை ஏற்க ஆரம்பித்தாள்.

அவள் பதில் ஏதும் சொல்லாமல் அவனின் அணைப்பிற்கு குழையவும் சந்தோசத்தில் பசியைக்கூட மறந்து அப்படியே அவளை கைகளில் ஏந்திக்கொண்டு தனது அறைக்கு தூக்கி சென்றவன் கட்டிலில் அவளை கிடத்தி அவளின் இதழில் கவி எழுத ஆரம்பித்தான்.

கைகளோ அவளின் அங்கங்களில் ஊர்வலம் போனது. மனமோ அதனை மறுக்க உடலோ அவனின் தீண்டலில் உருகுவதை பார்த்ததும் அந்த நிமிடம் தன்னை ஒரு வேசியாக உணர ஆரம்பித்தாள்., அடக்கி வைத்திருந்த அழுகை அவளையும் மீறி கண்களில் வழிய ஆரம்பித்தது. 

வேசிக்கூட எதோ ஒரு காரணத்திற்காக ஆணவனின் தொடுகையே மனதளவில் ஏற்றுகொண்டு அவனுக்கு உடன்படுவாள். ஆனால், லலிதாவிற்கு அவளின் உடல் குழைந்ததென்றால் இதயம் கதறியது.

மோகத் தீ பற்றி எரிய தன்னவளின் ஆடைகளை களைய போனவன் அவளின் கண்ணீரை பார்த்ததும் தீயை தொட்டது போல் அவளை விட்டு விலகி எழுந்தான்.., கூடலின் போது மனைவி கண்ணீர் வடிக்கிறாள் என்றால் அது எதனால் என்று புரியாத அளவுக்கு முட்டாள் அல்லவே அவன்.

கண்ணீர் வழிய விழிகளை மூடி படுத்திருந்தவள் திடிரென தன்னவன் விலகவும் ஒன்றும் புரியாமல் விழிகளை திறந்தவள் அவனின் அடிபட்ட பார்வையை பார்த்ததும் அதிர்ந்துவிட்டாள்.

“ஏன் லதாமா இப்படி பண்ண?” ஒற்றை கேள்வியிலே அவனின் வலி தெரிந்தது?

எழுந்து அமர்ந்தவள் “மாமா…” என்றாள்.

அதற்கு மேல் வார்த்தை வரவில்லை என்னவென்று சொல்வாள் உன் தொடுகயை நா வெறுக்கிறேன் என்றா?

“இதுக்கு நீ என்ன கொன்றுக்கலாம் லதாமா…” என்றவனின் விழிகளில் தெரிந்த அருவெறுப்பை பார்த்ததும், அவன் தன்னைதான் அருவெறுப்பாக பாக்கிறான் என தவறாக நினைத்துக்கொண்டு வார்த்தைகளை விட்டாள்.

ஆனால், அவனோ தன்னோட சுகத்திற்காக விருப்பில்லாதவளை தொட்டு ஆண்டிருக்கிறோம் என நினைத்து தன்னையே அருவெறுப்பாக உணர்ந்தான்.

“ஏனுங் மாமா இந்த வேசிக்கூட படுக்க உங்களுக்கு புடிக்க….” அவள் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கன்னம் எரிய ஆரம்பிக்கவும் தான் கணவன் அறைந்திருக்கிறான் என்பதை உணர்ந்தாள்.

கன்னத்தில் கை வைத்தவாறே அவனை அதிர்ந்துபோய் பார்த்தாள்.

ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவன் “இனி ஒரு வார்த்தை பேசுன உன்னை கொன்றுவேன்…” அவனின் குரலில் அத்தனை கோபமிருந்தது.

“கொன்றுங்க மாமா… என்ன மாதிரி ஒருத்தி எல்லாம் வாழவேக்கூடாது… மாமா சொன்னது உண்மைதான் நா வேசிதான் மாமா… அதான் நீங்க தொட்டதும் உருகுறேன்…”

அவளின் பேச்சைகேட்டு ஆத்திரம் தலைக்கேற தலையை அழுந்த கோதி தன் கோபத்தை குறைத்தவன் அவளை இழுத்து அணைத்துகொண்டு “பைத்தியக்காரி… பைத்தியக்காரி… ஏன்டி இப்படிலாம் பேசற? நா உன்ற புருசன்டி…”

“அதனால்தான் மாமா மனசை கொன்னுட்டு உங்களுக்காக மறுக்காம இருக்கேன். இல்லைனா இந்த உடம்ப நேத்து ராத்திரியே தீ வச்சி கொழுத்திருப்பேன் மாமா…” 

அவளை விட்டு விலகியவன் “என்ன சொன்ன மனச கொன்னுட்டு ஏங்கூட இருந்தியா?? இதுக்கு என்ன அர்த்தம் லதாமா…? விருப்பமில்லாதவ கூடதா நேத்து  நா  வாழ்ந்தேனா? உனக்கு தெரியுமா லதாமா… நேத்து நா உன்றகூட வாழ்ந்ததை அத்தனை நிறைவா உணர்ந்தேன், ஆனா உன்னோட விருப்பமே இல்லாம உன்ன தொட்டுருக்கேங்றது இப்போ நீ சொல்லிதா தெரியுது. ஒரு பொண்ணோட விருப்பமில்லாம அவளோட கணவனா இருந்தாலும் தொடறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா லதாமா…? காதலிச்சு கண்ணாலம் பண்ணிட்ட என்னால என்ற பொண்டாட்டிக்கு நா தொடறது பிடிக்கலைங்றதுக்கூட தெரியாம இருந்துருக்கேன்ல… நானெல்லாம் என்ன ஆம்பளை. என்ன நினைச்சா எனக்கே அருவெறுப்பா இருக்கு லதாமா… நீ கத்தில குத்தி கொன்னுருந்தாக்கூட சந்தோசமா செத்துபோயிருப்பேன் லதாமா. ஆனா,  நீ சொன்ன வார்த்தை என்ன கொஞ்சம் கொஞ்சமா கொல்லுமே லதாமா. எப்படி வலி தாங்குவேன்?”

“மாமா…” அவனை தொடபோனவளை கை நீட்டி தடுத்தவன்,

 “என்றகிட்ட வராத லதாமா… உன்ன காதலிச்சு உன்ற சம்மதமில்லாம தாலி கட்டுனதுக்கு என்ன மன்னிச்சிடுனு கேக்க கூட எனக்கு தகுதி இல்லை லதாம்மா. முடிஞ்சா மன்னிச்சிடு. இனி உன்ன எதுக்காகவும் வற்புறுத்த மாட்டேன். உனக்கு இங்க இருக்க புடிக்கலைனா உங்க வீட்டுக்கு போறனா சொல்லு நானே மாமா கால்ல விழுந்தாவது உன்ன உங்க வீட்ல சேத்திடறேன்…” என்று கூறிவிட்டு வெளியே வந்தவன் வாசலில் கிடந்த கட்டிலில் படுத்துக்கொண்டான்.

தன்னவன் பேசி சென்றதும் அப்படியே தரையில் அமர்ந்து அழுக ஆரம்பித்தாள். அழுது ஓய்ந்தவள் தரையிலே குறுகி படுத்துகொண்டாள்.

இருவரும் விடிய விடிய தூங்காமல் முழித்திருந்தனர். விடியற்காலையில் எழுந்தவன் குளித்துவிட்டு வேறு உடைக்கு மாறி பேக்கில் துணிகளை அடுக்கி வைத்து கொண்டிருந்தவனை வெறித்து கொண்டிருந்தாள்.

மனைவி தன்னை பார்க்கிறாள் என தெரிந்தாலும் அவளை திரும்பி பார்க்காமல் தன் வேலையை செய்தவன் கிளம்பி முடித்ததும் “எழுந்து வா லலிதா… உன்ன உங்க வீட்ல விட்டு நா போகனும் நேரமாச்சு?” யாரிடமோ பேசுவதை போல பேசினான்.

அவன் எப்பவும்  சொல்லும் லதாமா… என்ற வார்த்தை  வராமல் பேர் சொல்லி அழைத்தவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் அசையாமல் அதே இடத்திலே அமர்ந்திருக்கவும் அவளை பார்த்து “லலிதா நா சொல்றது காதுல விழுதா இல்லையா?” என்றான்.

எழுந்து நின்றவள் “எல்லாமே விழுது மாமா… மாமானு சொல்லலாம்ல?”

அவன் தலை ஆடியதும்… “என்னனு சொல்லி எங்க வீட்ல கொண்டு போய் விடுவிங்க மாமா? உங்க பொண்ண காதலிச்சேன். அப்பறம் ஒரு நாள் தாலிகட்டி கூட்டிப்போய் அவக்கூட வாழ்ந்துட்டேன். அந்த ஒருநாளே எனக்கு அவ சலிச்சி போயிட்டா. அதனால உங்க பொண்ண நீங்களே வச்சிக்கோங்க. அப்படினா மாமா?”

பெண் மனது எப்பவுமே விசித்திரமானது. எப்போது எந்த முடிவெடுக்கும் என்றே ஆருக்கும் தெரியாது. நேற்று அவனுடன் பிடிக்காமல் வாழ்ந்தேன் என்று சொன்னவள் இன்று அதை அப்படியே திருப்பி அவனின் பக்கம் தள்ளிவிட்டு விட்டாள்.

“உங்களுக்கு நா வாக்கு குடுத்துருக்கேன் மாமா. உங்கள விட்டு போகமாட்டேனு அப்படி போற நிலை வந்தா என்ற உசுரு போன பிறகுதான் போவேன். இல்லை இப்பவே நா உங்களை விட்டு போய்தான் ஆகோணும்னு சொன்னிங்கனா நா செத்துபோயிடறேன். உங்க கையால எனக்கு கொள்ளி மட்டும் வச்சிடுங்க…” சாதாரணமாக சொல்லிவிட்டு குளிக்க சென்றுவிட்டாள்.

அவளின் பதிலில் குழம்பி நின்றவன் அவள் கடைசியாக சொன்ன வார்த்தையில் சர்வமும் ஆடிப்போய் விட்டான்

மனைவியின் பேச்சில் ஆடிப்போய் நின்றிருந்தவன் அவள் தன்னை விட்டு போக மாட்டாள் என்ற நிம்மதியுடன் வண்டிக்கு கிளம்பி சென்றான்.

அவன் கிளம்பி செல்லும்போது ராசப்பனும், பொன்னுதாயும் வந்துவிட்டனர். மகன் பையுடன் கிளம்பி நிற்பதை பார்த்ததும் அதிர்ந்தனர்.

“எங்க கண்ணு இந்நேரத்துல கிளம்பிட்ட?” என்றார் ராசப்பன்.

“வண்டிக்குப்பா… வந்து ரொம்ப நாள் ஆச்சுல நேத்தே உங்ககிட்ட சொல்லோனும்னு நினச்சேன். மறந்துட்டேன்” தங்களுக்குள் நடந்த சண்டையை காட்டிக்கொள்ள விரும்பாமல் சாதாரணமாக பேசினான்.

அவனின் இயல்பான பேச்சில் ராசப்பன் நம்பிவிட்டார். ஆனால், மகனின் திடீர் முடிவில் பொன்னுதாயி கணவன், மனைவிக்குள் ஏதோ சண்டை என்பதை உணர்ந்துவிட்டார் மகனை ஆராய்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்தார்.

“இப்போதா உனக்கு கண்ணாலம் ஆச்சுல? இன்னும் ஏங்கண்ணு இன்னொருத்தன்கிட்ட சம்பளத்துக்கு போற? அப்பாவே பணம் தரேன் நீ சொந்தமா லாரி வாங்கிக்க…” என்றார்.

“இப்போ வேணாம்ப்பா… கொஞ்சநாள் போகட்டும்…” என்றவன் இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி சென்றுவிட்டான்.

Advertisement