Advertisement

அத்தியாயம்.2

தாத்தாவிடம் பேசிவிட்டு உள்ளே வந்த ஷர்மி ஹாலில் சித்தி மட்டும் இருப்பதை பார்த்ததும் “இந்துமா லச்சுமா எங்க?”  அவருக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாக கேட்டாள்.

இந்து சிரித்துக்கொண்டே மகளின் கேள்விக்கு சைகையில் சமையலறை பக்கம் கை காட்டினார்.

“சரி இந்துமா…, லச்சுமா வந்து கேட்டா நா அப்பவே வந்துட்டேனு சொல்லிடுங்க இல்லைனா காத்தாலையே ராமாயணத்த ஆரம்பிச்சிடும்” என கூறிவிட்டு அவரின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் நழுவி தன் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

லக்ஷ்மி மகள் மேல் எந்த அளவுக்குப் பாசம் காட்டுகிறாரோ அதே அளவுக்கு கண்டிப்பும் காட்டுவார். ஷர்மிக்கு அம்மாவை கோபப்படுத்தி  பார்ப்பதென்றால் அத்தனை பிடிக்கும்., அவர் எதெல்லாம் செய்யவேண்டாமென்று சொல்கிறாரோ அது அத்தனையையும் செய்து அவரோட பீபிய ஏத்தி விடுவதே அவளுடைய தினசரி வேலை. லக்ஷ்மிக்கு மாமியார் இல்லாத குறையை மாமியார் உருவத்தில் இருக்கும் மகள் தீர்த்து வைக்கிறாள்.

அவள் போவதைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த இந்து மகனிடம் “அக்கா திட்றதுக்கு தகுந்தமாதிரி தான் இவளும் நடந்துக்கறா” என்றார்.

இந்துமதி தமிழரசனை மணந்துகொண்டு அந்த வீட்டுக்கு வாழ வந்து இருபத்தி ஆறுவருடங்கள் கடந்துவிட்டது. லக்ஷ்மிக்கும் அவர்க்கும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும் அதனை சிரித்த முகமாகவே கடந்துவிடுவார். அதிர்ந்துக்கூட ஒரு வார்த்தை பேசமாட்டார். தனக்கு பிடித்ததைக்கூட இன்னொருத்தர் ஆசையாகக் கேட்டால்  தூக்கிக்கொடுத்துவிடுவார். அந்த குணமே லஷ்மி குழந்தை இல்லாமல் வருத்தத்திலிருந்தபோது எதைப்பத்தியும் யோசிக்காமல் தன் மகனையே அவரிடம் தூக்கி குடுத்துவிட்டு தூர நின்று ரசித்தவர். அதில் இந்துவின் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் வருத்தமிருந்தாலும் அதனை இந்து கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால், லஷ்மி அவர்க்கு நேர் எதிரான குணம் கொண்டவர். கோபம் வந்துவிட்டால் எதிரில் யார் இருக்கிறார்கள் என்றுகூட பார்க்கமாட்டார். வார்த்தைகளைக் கொட்டிவிடுவார். ஆனால், கோபம் குறைந்ததும் தன்னுடைய தவற்றை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுவிடுவார். ஒருவர் மீது பாசம் வைத்துவிட்டால் அவருக்காக எந்த எல்லைக்கும் போவார்., இந்து, அகிலேஷை தன் உறவுகளைப் பகைத்துக்கொண்டு தன்னிடம் தூக்கி கொடுத்த நாளை அவர் இன்றும் மறக்கவில்லை…

எதிர் எதிர் துருவங்கள்தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும். அதேபோல் தான் லஷ்மிக்கும் இந்துவுக்கும் வேறு வேறு குணங்கள் இருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்ததில்லை. இருவரும் ஒரு வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் அக்கா தங்கையைப் போல்தான் அந்த வீட்டில் வசிக்கின்றனர்.

அகிலேஷ், “விடும்மா அவ சின்னபுள்ளத்தானே… எல்லாம் போகப் போக சரியாகிடும்.”

அகிலேஷின் குரல் கேட்கவும் சமையலறையிலிருந்து வெளியே வந்த லஷ்மி, “எங்க  அவள காணோம்? இன்னும் வரலையா கண்ணு?” மகனிடம் கேட்டார்.

“ஷர்மி அப்பவே வந்துட்டா பெரியம்மா காலேஜ்க்கு கிளம்பிட்டு இருக்கா.”

அவனை நம்பாத பார்வை பார்த்தவர் “இப்போத்தானே கொலுசு சத்தம் கேட்ட மாதிரி இருந்தது கண்ணு…?” சந்தேகமாகக் கேட்டார்.

இந்து மகனுக்கு முன்னாடி முந்திக்கொண்டு “அக்கா அடுப்புல என்ன வச்சிருக்கிங்க? அடிப்புடிக்கற வாசம் வருது?”

இந்து சொன்னதும் தான் ஞாபகம் வந்தவராக சமையலறை நோக்கிச் சென்றார்., அவர் சென்றதும் தான் அகிலேஷ் மூச்சை இழுத்துவிட்டான்.

“தேங்ஸ்ம்மா பெரியம்மாகிட்ட இருந்து என்ன காப்பாத்திவிட்டுட்டீங்க இல்லைனா கேள்வி மேல் கேள்வி கேட்டுகிட்டே இருந்துருப்பாங்க.., சரிம்மா எனக்கு பசிக்குது சாப்பாடு எடுத்து வைங்க நேரமாச்சு…” 

அகிலேஷ் சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே ஷர்மி  கல்லூரிக்கு கிளம்பி லைட் பிங்க் கலரில் காட்டன் துணியில் தைத்த சுடிதார் அணிந்து, தலைக்குக் குளித்ததால் முடியைத் தளர பின்னலிட்டு, த்ரட்டிங் பண்ணாமலே வில்லாக வளைந்திருந்த புருவங்களின் மத்தியில் மெருன்கலர் ஸ்டிக்கர் பொட்டு வைத்து, காதில் குடை ஜிமிக்கி ஆட மேக்கப்பே போடாமல் இயற்கையான அழகுடன் அறையைவிட்டு வெளியே வந்தாள்.

அகிலேஷின் அருகில் வந்தவள் “அகி எனக்கும் ஊட்டி விடு” என்றாள்.

 அவனும் தங்கைக்கும் சேர்த்து ஊட்டிவிட்டுக்கொண்டே சாப்பிட்டான்.

அண்ணன் ஊட்ட அதனை வாங்கிக்கொண்டே அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்தாள். அவள் அரக்கப்பரக்கக் கிளம்புவதைப் பார்த்து லஷ்மி திட்ட ஆரம்பித்துவிட்டார்.

“ஏன்டி  ஆம்பளை பையன் அவனே நேரத்துக்கு கிளம்பிட்டான். ஆனா, நீ இப்போத்தா ஒவ்வொன்னா தேடி எடுத்துக்கிட்டு இருக்க? என்னைக்குதான் பொறுப்பா நேரத்து எழுந்திருச்சி வேலை செஞ்சி கத்துக்குவ?” 

“உனக்கு புள்ள வளர்க்கத்தெரியலை லச்சுமா… அதான் நா இப்படி இருக்கேன். இந்துமாவ பாரு ,  அகிய எப்படி பொறுப்பானவனா வளர்த்து வச்சிருக்காங்க.. அதான் அவன் டைம்க்கு எல்லாத்தையும் சரியா செஞ்சிக்குறான்…”  அவரின் கைக்கு அகப்படாமல் சொல்லிக்கொண்டே பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள்.

“அடிங்க… வர வர வாய் நீண்டுகிட்டே போகுதுடி பொழுதோட வூட்டுக்குதானே வருவ வா வாய தச்சிவிடறேன்.”

இந்து, ப்ரிஜ்ஜிலிருந்து பூவை மகளுக்கு வைத்துவிடுவதற்காக  எடுத்துக்கொண்டு வந்தவர் அதற்குள்ளாக ஷர்மி அம்மாவிடம் வம்பிழுத்துவிட்டு வெளியே ஓடிப்போகவும் “ஷர்மி கண்ணு பூ வச்சிட்டு போடா” என்றழைத்தார்.

“அகிகிட்ட குடுத்துவிடுங்க இந்துமா, நா உள்ளவந்தா லச்சு அடிக்கும்…” வெளியே இருந்தவாறே கத்தினாள்.

இந்துவும் புன்னகைத்தவாறே “வாலு” என்றவர்.., கல்லூரிக்கு கிளம்பி அறையை விட்டு வெளியே வந்த மகனிடம் பூவையும், ஹேர்பின்னையும் குடுத்து “ஷர்மிகிட்ட குடுத்துடு அகி” என்றார்.

அவனும் வாங்கிக்கொண்டே “சரிம்மா நா போயிட்டு வரேன்” என்றவன் பெரியம்மாவிடமும் சொல்லிவிட்டு வாசலுக்கு வந்தான்.

கையில் தூக்கு வாளியுடன் அவர்கள் வீட்டுக்கு வந்த அகிலேஷின் தாய் மாமன் மகள் செல்வி, வாசலில் நின்றிருந்த தோழியை பார்த்து “காலேஜ் கிளம்பிட்டியா ஷர்மி… எங்க உன்ற பாசமலர்?” கேட்டுக்கொண்டே அவளின் அருகில் வந்தாள்.

“அகி உள்ள இருக்கான் செல்வி…” செல்வியின் கையில் இருந்த தூக்குவாளியை பார்த்துவாறே,  “தூக்குவாளில என்ன கொண்டுவந்திருக்க, அத்தை காத்தாலையே பலகாரம் சுட்டுடாங்ளா என்ன?”

” பலகாரம் இல்லை ஷர்மி , நம்ப பவுனு(மாடு)  கன்னு போட்டுருச்சுடி…  உனக்கு  புடிக்குமேனு காத்தலையே பால கறந்து சீம்பு வேகவச்சி   கொண்டுவந்தேன்.”

“ஆஹான்… இத என்ன நம்ப சொல்றியா செல்வி?” ஷர்மி சந்தேகமாக இழுக்கவும்,

செல்வியும் வெக்கத்தில் முகம் சிவக்க “ச்சீசீ… போடி உனக்கு எப்ப பாத்தாலும் என்ன கிண்டல் பண்றதேதான் வேலை…” 

“நான் எங்கடி உன்னை கிண்டல் பண்ணேன் உண்மையதானே சொன்னேன்… சரி பவுனு என்ன கன்னு போட்ருக்கு?”

“காளைக்கன்னு ஷர்மி…”

“எப்போ போட்டுச்சு டி? பொழுதோட நா வூட்டுக்கு வந்தப்ப கன்னு போடலையே?”

“ராத்திரி பதினொரு மணிக்குமேல போட்டுச்சுடி…”

அகிலேஷ் வரவரையிலும் தோழிகள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

செல்வியின் தந்தை சதாசிவம் இந்துமதியுடன் கூடப்பொறந்த அண்ணன். அவரின் மனைவி ராஜேஷ்வரி. அவர்களுக்கு மகேஷ்வரன், செல்வி இரண்டு குழந்தைகள். 

இந்துவைப்போலவே சதாசிவமும் குணத்தில் தங்கமானவர். தன் தங்கை மருமகன் அகிலேஷை லஷ்மிக்கு குடுத்தது ஆரம்பத்தில் பிடிக்கவில்லை என்றாலும் ‘எப்படியும் தன் மருமகன் அந்தவீட்டு வாரிசுதானே அவனை யாரு வளர்த்தால் என்ன?’ என நினைத்து மனதை தேற்றிக்கொண்டார். லஷ்மியும் இந்து குழந்தையை குடுத்ததும் அவனை உரிமை கொண்டாமல் இவன் உன்னுடைய மகன் உனக்குதான் சொந்தம் இந்து ஆனா, எனக்கு தூக்கி வச்சிக்க மட்டும் குடு போதும் என்று கூறி குழந்தையை திரும்பி இந்து விடமே குடுத்துவிடவும்..,  அதில் சதாசிவத்துக்கு லஷ்மியின் மேல் அதிக மதிப்பை வரவழைத்தது., அன்றிலிருந்து லஷ்மியை தன் கூடப்பொறந்த அக்காவாகவே நினைக்க ஆரம்பித்தார். 

தங்கைக்கு திருமணம் ஆகி இத்தனை வருடத்தில் ஒருமுறைக்கூட தங்கையின் முகம் வாடி அவர் பார்த்ததில்லை. இதற்குமேல் ஒரு அண்ணனுக்கு என்ன வேண்டும்?. 

லஷ்மிக்கும் கூடப்பிறந்தவர்கள் யாருமில்லாமல் ஒற்றை பெண்ணாக பிறந்தவர்.., அதனால் தன் தங்கைக்கு சீர் செய்யும்போது லஷ்மிக்கும் சேர்த்தே சீர் செய்வார். லஷ்மியும், முருகேஷனும் மறுத்தாலும் கேட்கமாட்டார். ஷர்மிக்கு காதுகுத்தின் போது தாய்மாமனாக அவர் மடியில் வைத்துதான் காது குத்தினர். ஷர்மி பெரியமனுசி ஆனபோது அவளுக்கு தாய்மாமன் சீர் செய்வதாக இருந்தது. அதற்குள்ளாக ரகுநந்தன் ஊரைகூட்டி நாந்தான் என் மாமன் மகளுக்கு சீர்செய்வேன் என பிரச்சனை பண்ணியதால் அவர் “சரி ஆரு பண்ணா என்ன? என பெருந்தன்மையாக விட்டுக்குடுத்து விலகி நின்றவர். 

செல்வி   அகிலேஷ்க்கு என்றும், ஷர்மிக்கு செல்வியின் அண்ணன் மகேஷ்வரன் எனவும்  பொண்ணுக்குடுத்து பொண்ணு எடுக்கும் முடிவில் இருகுடும்பத்தாரும் இருக்கின்றனர். இதில் சுந்தரமூர்த்தியை தவிர மற்ற அனைவருக்குமே சம்மதம்தான். 

ஷர்மி வயசுக்கு வந்து ஒருமாதம் கழித்து சதாசிவம் “இப்பவே தட்டை மாத்தி உறுதிபண்ணிக்கலாம்” என கேட்ட போது.., 

ஷர்மியின் தாத்தா சுந்தரமூர்த்தி “அதெல்லாம் வேண்டாம் புள்ளைங்க படிச்சி முடிச்சி கல்யாணம் பண்றோம்னு முடிவு பண்றப்ப அவங்களோட விருப்பத்த கேட்டுகிட்டு பண்ணிக்கலாம்…” என கூறி தடுத்துவிட்டார். 

மற்றவர்களுக்கும் அவர் சொன்னது சரியென்று படவும் அமைதியாகிவிட்டனர். ஆனாலும், இரு குடும்பத்துக்கும் இதுவரையிலும் பொண்ணுகுடுத்து, பொண்ணு எடுக்கும் எண்ணத்தில் தான் இருக்கின்றனர். ஷர்மிக்கு படிப்பு முடிந்ததும் இந்தபேச்சை ஆரம்பிக்க உள்ளனர்.

 அகிலேஷ், மகேஷ்வரன், செல்வி, ஷர்மி நால்வரும் ஒன்றாக வளர்ந்து ஒரே பள்ளியில் படித்ததால் நால்வரும் நண்பர்களும் ஆவர். மகேஷ் அகிலேஷை விட ஒருவயது இளையவன்.செல்வி, ஷர்மியை விட மூன்று மாதமே  மூத்தவள். 

மகேஷ்ம், அகிலேஷை போலவே  இஞ்னியரிங் முடித்துவிட்டு சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். செல்வி கல்லூரி சென்று படிக்க விருப்பமில்லாததால் ப்ளஸ்டூ வோடு படிப்பை நிறுத்திவிட்டாள். 

ஷர்மி, வீட்டில் இருந்தால் அவளின் அம்மா திருமணம் பண்ணிவைத்துவிடுவார் என்பதால் படிக்க விருப்பமில்லை என்றாலும் கல்லூரி போய்வந்துக்கொண்டிருக்கிறாள்.

ஷர்மியும்,செல்வியும்  அத்தனை வால்தனத்தையும் பண்ணிவிட்டு வீட்டில் மாட்டிக்கொண்டால்.., அகிலேஷையும், மகேஷையும் மாட்டிவிட்டு தப்பித்துவிடுவர்.., இரண்டு அண்ணன்களும் கூடப்பொறந்த பாவத்துக்கு வீட்டில் வாங்கிகட்டிக்கொள்வர். 

அப்போது அகிலேஷ் கல்லூரிக்கு கிளம்பி கையில் பூவுடன் வாசலுக்கு வரவும் செல்வி, “என்ன மாமா பொண்டாட்டிக்கு பூ வாங்கிகுடுக்கற வயசில் இன்னும் தங்கச்சிக்கு பூ கொண்டுவந்து குடுத்துட்டு இருக்க? இப்படி இருந்தா நாம எப்போ கண்ணாலம் பண்ணி எப்போ புள்ளை பெத்துக்கறது..?” இவ்வளவு நேரம் சத்தமாகப் பேசியவள் கடைசி வார்த்தையை மட்டும் அவனின் அருகில் நெருங்கி அவனுக்கு மட்டும் கேட்குமளவுக்கு மெதுவாக கூறினாள்.

அவளின் பேச்சில் பதறிப்போனவன் “ஏய் என்னடி இப்படிலாம் பேசற? ஆரோட காதுலையாவது விழுந்தா என்ன நினைப்பாங்க? வயசுக்கு தகுந்தமாதிரி பேசுடி” சுற்றியும் பார்த்தவாறே அவனின் தத்தாவுடன் பேசிக்கொண்டிருந்த ஊர்பெரியவர்களுடனே சுந்தரமூர்த்தியும் வேலையாக கிளம்பிவிட்டதால் அங்கு யாருமில்லாததை உணர்ந்ததும் நிம்மதி ஆனவன் அழுத்தமான குரலில் அவளிடம் கூறினான்.

“ஆரு காதுல விழுந்தா என்ன மாமா… நா என்ன கட்டிக்கப்போறவன்கிட்டத்தானே பேசறேன்.”

“உன்றகிட்டெல்லாம் பேசி ஜெயிக்க முடியாது போடி… எனக்கு காலேஜ்க்கு நேரமாச்சு நா வரேன்” சலிப்பாகச் சொல்வதை போல் சொன்னாலும் அவன் மனதிற்குள் அவளின் பேச்சை ரசிக்கவே செய்தான்.

வீட்டிற்குள் சென்ற செல்வி திரும்ப அவனின் அருகில் ஓடிவந்து நின்று “மாமா எனக்கு ஒரு டவுட்டு?” என்றாள்.

அவள் ஓடிவரவும் ஒரு நொடி அதிர்ந்தவன் பின் தெளிந்து “ஏன்டி இப்படி ஓடி வர? மெல்ல வரமாட்டியா?” கடிந்தவன்,

 “சரி சொல்லு டி” என்றான்.

“அது மாமா… இழுத்துக்கூறியவள் “சொன்னா நீ அடிப்ப” என்றாள்.

“அப்போ சொல்லாத போடி” என்று கூறிவிட்டு திரும்பி நடக்கப்போனவன் அவளின் கேள்வியில் கோபம் கொண்டு “அடிங்க…” அவளை அடிக்க கையை ஓங்கினான்.

அவனின் கைக்கு எட்டாத தூரம் தள்ளி நின்று “முத்தம் குடுத்தா குழந்தை பிறக்கும்னு நம்பிகிட்டு இருக்க 90 கிட்ஸ்ஆ.. மாமா நீ?” கேட்டுவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

அவள் ஓடுவதைப் புன்னகையுடனே பார்த்துக்கொண்டிருந்தவன் ‘இன்னும் கொஞ்சநேரம் நின்னா இவ என்ற மானத்தையே வாங்கிடுவா…’ மனதில் நினைத்துக்கொண்டவன் தங்கையின் அருகில் வந்தான்.

ஷர்மி பைக்கில் சாயிந்து நின்றவாறே  கன்னத்திற்கு கைக்குடுத்து இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தவள் “என்ன அகி இன்னைக்கு இம்புட்டு சீக்கரமா ரொமேன்ஸ் பண்ணி முடிச்சிட்ட? நாங்கூட எப்படியும் மதியத்துக்குதா காலேஜ் போவோம்னு நினச்சேன்” என கலாய்த்தாள்.

அவளின் தலையில் வலிக்காமல் கொட்டியவன் “வாலு என்ன பேச்சு பேசற, தள்ளி நில்லு வண்டிய எடுக்கறேன் போலாம் நேரமாச்சு…” சிரித்துக்கொண்டே கூறினான்.

“ஸ்ஸ்ஸ்… வலிக்குது டா எருமை” வலியில் அண்ணனை அஃறிணையில் திட்டிக்கொண்டே தலையை தேய்த்தாள்.

“ஏய்… ரொம்ப வலிக்குதா சாரிடா ஷர்மி…” என்றவாறே அவனும் தங்கையின் தலையை தடவிக்கொடுத்தான்.

“பரவால விடு அகி லேசாகத்தான் வலிக்குது…”

“இந்தா ஷர்மி பூ” கையில் வைத்திருந்த பூவை அவளிடம் கொடுத்தான்.

அவள் பூவை வாங்கி தலையில் வைத்துக்கொண்ட பிறகு இருவரும் கல்லூரிக்குக் கிளம்பினர்.

Advertisement