Advertisement

அத்தியாயம்.15

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வரும் வரையிலுமே ஒத்த வார்த்தை பேசினாள் இல்லை.

 வீட்டிற்கு வந்ததும் வண்டியை நிறுத்திவிட்டு கைதாங்கலாக மனைவியை அணைத்து வந்தவனை கோபமும், ஆத்திரமும் விழிகளில்  தேக்கி இருவரையும் முறைத்து கொண்டிருந்தான் கோதையின் கணவன் விஸ்வநாதன்., அவனுக்கு மட்டும் சக்தி இருந்தால் லலிதாவை எரித்திருப்பான் அந்த அளவிற்கு மனதிற்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

விஸ்வநாதன் அப்பவே இரயில்வே துறையில் வேலையில் இருந்ததால் திமிரும் தெனாவெட்டும் அதிகம். அவன் நினைத்தது தான் நடக்கவேண்டும். இல்லையென்றால் அதனை  கெடுக்க எந்த எல்லைக்கும் போவான். சுயநலமும், பிடிவாதக்குணமும் அதிகம். 

தனது மச்சினனுக்கே தங்கையை கொடுக்கவேண்டும் என்று இருந்தவனின்  ஆசையில் மச்சினன் ஒரு டன் லாரி மண்ணை கொட்டி மூடிவிட்டான்., அந்த ஆத்திரத்தில் மாமனாரின் வீட்டிற்கு வந்து மாமனாரிடம் அவருக்கே தெரியாமல் மச்சினனையும், அவளையும் பிரிக்க ஏத்திவிட்டும் அவர் அதை கண்டுகொள்ளவே இல்லை. அந்த கடுப்பில் இருந்தவன்  மச்சினன் மனைவியை அணைத்துக்கொண்டு வருவதை பார்த்ததும் உடம்பெல்லாம் பற்றி எரிய ஆரம்பித்தது.

ராம் அக்கா கணவனை பார்த்ததும் மனைவியை அணைத்திருந்த கையை எடுக்காமலே “வாங்க மாமா…” என வரவேற்றான்.

“நா வரது இருக்கட்டும் மாப்பிள்ளை… ஏ மாப்பிள்ளை நாங்களா இருக்கறத மறந்துட்டியா என்ன? இப்படி ஆருக்கும் தெரியாம திருட்டு கண்ணாலம் பண்ணிட்டு வந்து நிக்கற? உனக்கென்ன பொண்ணா கிடைக்காது போயும் போயும் ஓடிப்போனவளோட மகளை கட்டிட்டு வந்துருக்க…”

தன்கணவனின் கை அணைப்பில் நின்றிருந்தவள் தன் தாயை சொன்னதும் மனம் வலிக்க கணவனின் பிடியிலிருந்து விலக பார்த்தாள்.

மாமனின் பேச்சில் கோபம் வந்தாலும் அதனை அடக்கிக்கொண்டு இருந்தவன் மனைவி தன்னை விட்டு விலகபோகவும் அவளை விலக விடாமல் அழுத்தி பிடித்து இன்னும் இறுக அணைத்துக்கொண்டு “எது மாமா திருட்டு கண்ணாலம் என்ற ஊருல உள்ள கோவில்ல என்ற சொந்தக்காரங்க முன்னாடி எனக்கு உரிமையானவ கழுத்துல தாலி கட்டியிருக்கேன். ஊர்ல ஆயிரம் பொண்ணு இருந்தாலும் மனசுக்கு பிடிச்சவள தான் கட்டிக்க முடியும் மாமா. இவ என்ற உசுரு. இனி என்ற முன்னாடி என்ற பொண்ட்டியையோ, என்ற அத்தையையோ கேவலமா பேசற வேலை வச்சிக்காதிங்க. அப்பறம் அக்கா வீட்டுக்காரர்னுலாம் பாக்க மாட்டேன்” என்றவனின் குரலில் அத்தனை அழுத்தமிருந்தது.

மாமனிடம் பேசிவிட்டு அவரை கடந்து வீட்டிக்குள் சென்றான்.

அவன் பேசிவிட்டு சென்றதும் விஸ்வநாதன் ‘உன்ற பொண்டாட்டிய ஒத்த வார்த்தை சொன்னவுடனே உன்ற அக்கா புருசனையே  எதிர்த்து பேசிட்டலடா… பாக்கறேன்டா நீ பொண்டாட்டிக்கூட எப்படி வாழறேன்னு. உன்னையும் உன்ற பொண்டாட்டியையும் பிரிக்காம விடமாட்டேன். என்ற தங்கச்சிக்கு கிடைக்காத வாழ்க்கை இவ மட்டும் சந்தோசமா வாழ்ந்துருவாளா…? ‘ மனதிற்குள் வஞ்சத்தை வளர்க்க ஆரம்பித்தான்.

அவனின் வஞ்சம் இருவரின் வாழ்க்கையை மட்டுமில்லாமல் அவர்களின் புதல்வனையும் சேர்த்து அழிக்க காத்திருக்கிறது.

அலமேலுவை ஒருவாரம் மருத்துவமனையில் வைத்திருந்துவிட்டு எந்த முன்னேற்றமும் இல்லாததால் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டனர். அலமேலு மருத்துவமனையில் இருந்த ஒரு வாரத்திலே மூர்த்தி மொத்தமாக உடைந்து விட்டார். தன் உயிரின் உயிரானவளை அந்த நிலமையில் பார்க்கக்கூட தெம்பில்லாமல் மருத்துவமனையே கதியென கிடந்தார் மூர்த்தி.

மனைவியை வீட்டிற்கு கூட்டிவந்த பின்னும் மனைவியை விட்டு பிரிந்தாரில்லை. மனைவிக்கு தேவையான அனைத்துமே தானே செய்ய ஆரம்பித்தார். மருமகள் இருந்தும் அவளைக்கூட கூட செய்யவிடாமல் அவரே பார்த்துகொண்டார்.

அந்த வீட்டின் உயிர்ப்பாக இருந்த ஒரு தூண்  படுக்கையில் விழுந்ததும் மொத்தக் குடும்பமும் தன் உயிர்ப்பை இழந்துவிட்டு தவித்துக்கொண்டிருந்தது. யாருக்கு யாரு ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் அலமேலுவின் செல்வங்கள் நடைபிணமாக வாழ ஆரம்பித்தனர்.

ஒரு வீட்டில் பெண் ஓடிவிட்டால் அந்த வீட்டின் மானம் மரியாதை மட்டும் போகாது. அவர்களின் சந்தோசமும் அவளுடனே போயிவிடும் என்பதற்கு சுந்தரமூர்த்தியின் குடும்பம் உதாரணம்.

தூர இருந்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு செய்தி மட்டுமே… நான்கு நாட்கள் பேசுவர் அப்பறம் வேற செய்தி கிடைத்தால் அதபற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள்.. 

பெண்ணையும் பறிகுடுத்துவிட்டு ஊராரின் பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டு சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் இரண்டுக்கும் நடுவில் தவிக்கும் நிலை. அதை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. அதனை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் அதனுடைய வலி.

நாட்கள் அது பாட்டிற்கு நகர ஒருமாதம் கடந்துவிட்டது. ஆனால் ராம், லலிதாவின் வாழ்க்கையில்தான் எந்த முன்னேற்றமும் இல்லை. லலிதா வாழ்க்கையையே பறிகுடுத்த மாதிரி தான் இருந்தாள். எப்போதும் அமைதி மட்டுமே…

பொன்னுத்தாயி மிரட்டி சோறு சாப்ட வைக்கவில்லை என்றால் அதையும் சாப்பிட்ருக்கமாட்டாள். மருமகளாக அந்த வீட்டு வேலையை மாமியாருடன் சேர்ந்து செய்வதில் எந்த குறையும் வைக்கவில்லை. ராம் போய் பேசினாலும் அமைதியாக அவன் பேசுவதை கேட்டுக்கொள்வாள். ஆனால், பதில் தான் அவளிடம் இருந்து வராது., அவள் பாட்டுக்கு வேலை செய்த நேரம் போக அறையில் அமர்ந்துகொள்வாள். தனிமை மட்டுமே அவள் துணை…

 கோதையும் தன் கணவனுடனே ஊருக்கு சென்றுவிட்டதால் அவளிடம் பேச யாரும் இல்லை. மாமியார் அவள் இப்படி இருப்பதை பார்த்து திட்டினாலும் எந்த பலனும் இல்லை.

அவள் அப்படி இருந்தாள் என்றால் அவள் கணவனோ அவளைவிட மிச்சம்., அவள் ஒதுங்கிபோவதை பார்த்து தானே அவளை விட்டு விலகிபோக ஆரம்பித்துவிட்டான்.

அதில் பொன்னுதாயிக்குதான் வருத்தம். ‘அவள்தான் அப்படி இருக்கிறாள் என்றால் இவனாவது அவளிடம் பேசி அவளை சரிபண்ணுவானு பார்த்தால் இவனும் அவளை கண்டாலே ஒதுங்கிபோறான் ரெண்டையும் வச்சிட்டு நா என்னதான் பண்ணுவேன்’ என பொலம்ப ஆரம்பித்துவிட்டார். 

அவரின் நல்ல நேரமோ என்னமோ அன்றைக்கு பொன்னுதாயின் அம்மா  வீட்டிற்கு வந்தார்.

பொன்னுதாயின் அம்மாவும் ராசப்பனின் அப்பாவும் அண்ணன், தங்கை. பொன்னுதாயி தாய் மாமன் மகனைதான் கட்டிருந்தார். அலமேலுவிற்கு சுந்தரமூர்த்தி தாய்வழி சொந்தமென்றால் ராசப்பனுக்கு பொன்னுதாயி தந்தை வழி சொந்தம்.

பொன்னுதாயின் அம்மாவிற்கு  வயதாகி விட்டதால் அவரின் வேலைகளை மட்டுமே அவரால் செய்துகொள்ள முடியும். அதனாலேயே அவரை ஊருக்கு கூட்டிச்செல்ல மாட்டார் பொன்னுதாயின் அண்ணன். இன்று மகனிடம் சண்டைபோட்டு  அவனை அழைத்துக்கொண்டு மகள் வீட்டுக்கு வந்துவிட்டார் பவளாத்தா.

பொன்னுதாயின் அண்ணனும் அம்மாவை சமாளிக்க முடியாமல் தங்கை வீட்டுக்கு அழைத்துவந்து விட்டார்.

மத்தியம் வீட்டிற்கு வந்தவர்களை பார்த்ததும் பொன்னுதாயிக்கு அத்தனை சந்தோசம்.

“வா ம்மா… வா ண்ணா… அண்ணி, பசங்க எல்லாம் நல்லாருக்காங்ளாண்ணா?” 

“எல்லாரும் நல்லாருக்கோம் கண்ணு… எங்க உன்ற புருசனையும்,மாப்பிள்ளையும் காணாம்?”

“அவர் உரமூட்டை எடுக்க டவுனு வரையிலும் போயிருக்கார்ண்ணா… அவன் வயல்லதான் தண்ணிகட்டிட்டு இருக்கான்.”

“சரி கண்ணு…”

வெளியே பேச்சுகுரல் கேட்டு வந்த லலிதா வந்திருந்தவர்களை பார்த்ததும் இருவரையும் வரவேற்றுவிட்டு குடிக்க தண்ணி கொண்டுவந்து கொடுத்தாள்.

பொன்னுதாயின் அண்ணன்தான் “நல்லாருக்கியா கண்ணு? என்றார்.

“நல்லாருக்கேனுங் பெரியப்பா…” 

“சரி கண்ணு… நா சின்ன மாப்பிள்ளையை போய் பாத்துபோட்டு வரேன்…” என்றவாறே வயலுக்கு கிளம்பிச்சென்றார்.

அவர் சென்றதும் அம்மாவும் மகளும் பேச ஆரம்பித்துவிடவும் லலிதா அவர்களுக்கு தனிமை குடுத்து விலகி சென்றுவிட்டாள்.

வந்ததிலிருந்து பேரன் பொண்டாட்டியை தான் பார்த்துகொண்டிருந்தார் பவளாத்தா. அவள் போகவும் “ஏங் கண்ணு புள்ளை எதையோ பறிகுடுத்த மாதிரி இருக்கு? அதுக்குள்ள  புருசன் பொண்டாட்டிகுள்ள சண்டை வந்துருச்சா?”

“ஏம்மா நீ வேற… ரெண்டும் பேசிகிட்டாதானே சண்டை வரத்துக்கு. ஒன்னு வடக்கால போனா இன்னோனு தெக்கால போகுது. நானும் திட்டிக்கூட பாத்துட்டேன் ஒன்னும் சரியாகமாட்டைங்குது… எனக்கு இவங்களோட வாழ்க்கைய நினைச்சா தான் கவலையா இருக்கு…”

“என்னடி சொல்ற? புள்ளைங்க ரெண்டும் சேர்ந்து வாழவே இல்லையா?”

“இல்லம்மா… இன்னும் மருமக என்றக்கூட தான் ராத்திரி தூங்கறா…”

“ஏன்டி கூறுகெட்டவளே… மருமகளை உன்றகூட படுக்க வச்சிருந்தா உன்ற மகனுக்கு வாரிசு எப்படி டி வரும்?”

“நானென்னம்மா கனவா கண்டேன் கண்ணாலம் ஆன அன்னைக்கு அலமேலுவுக்கு அப்படியாகவும் அந்த அதிர்ச்சில மருமக இருக்காளேனு பையனும் தனியா படுக்கட்டும்னு விட்டேன். இதுங்க என்னானா அதையே தெனமும் பண்ண ஆரம்பிச்சிடுச்சுங்க. இவளக்கூட எதாவது சொல்லி அறைக்குள்ள போய் படுக்க சொல்லிடலாம் ஆனா நா ஒன்னு பெத்துவச்சிருக்கேனே அததான் என்னால சாமாளிக்க முடியலை…”

“சரி ரெண்டுபேரையும் பேசி சம்மதிக்க வைக்க வேண்டியது என்ற பொறுப்பு நீ நல்லநேரம் எப்போனு பாரு புள்ள… இன்னைக்கே சேத்துவச்சிருவோம்.” என்றவர் முதலில் பேரன் பொண்டாட்டிய சம்மதிக்க வைக்க ஆரம்பித்தார். அவள் சம்மதம் சொல்லும் வரையிலும் விடவே இல்லை. 

லலிதா முதலில் மறுத்தாலும்  பின்பு வேறு வழியில்லாமல் மனதை கல்லாக மாற்றிக்கொண்டு அவர்களுக்காக தலையாட்டினாள். 

பேரனிடம் தனியாக பேசினார். “கண்ணு நடந்த நெனச்சிட்டே இன்னும் எத்தனை நாளைக்கு ரெண்டுபேரும் இருக்கபோறிங்க?” நடந்தது நடந்து போச்சு அடுத்து என்னனு பாக்கோணும்ல…  உன்ற பொண்டாட்டிய இப்படியே விட்டினா அவ அம்மாவ நினைச்சிட்டே வாழ்க்கைய தொலைச்சிடுவா. அவளை கொஞ்சமாவது மாத்தனும்னா புருசன் பொண்டாட்டியா வாழுங்க கண்ணு. எல்லாம் ஒரு குழந்தை பிறந்தா சரியா போயிடும் கண்ணு. குழந்த வந்துட்டா உன்ற மாமனார் வூடுக்கூட உங்களை ஏத்துக்கலாம்…”

“அவளுக்கு சம்மதம்னா ஏற்பாடு பண்ணுங்க ஆயா…” என்றவிட்டு சென்றுவிட்டான்.

அவருக்கு பேரனின் அந்த வார்த்தையே போதுமானதாக இருந்தது. அன்றே நாள் நல்லாருக்கவும் இருவருக்கும் சாந்திமுகூர்த்தம் வைக்க அம்மாவும் மகளும் நேரம் குறித்துவிட்டனர்.

அதற்கு உண்டான எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிவிட்டு மகனுடன் பொழுதோடவே மகன் ஊருக்கு கிளம்பிவிட்டார் பவளாத்தா.

அன்று இரவு பொன்னுதாயி மருமகளுக்கு சேலை கட்டிவிட்டு தலைநிறைய பூ வைத்து அழகு பார்த்தார். அவளும் மாமியாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அவரிடம் தன்னை ஒப்படைத்து விட்டாள். 

“ஏங்கண்ணே பட்ரும்டி ராசாத்தி…” எப்போதும் தாவணி பாவாடையில் பாத்தவளை சேலையில் பார்த்ததும் மருமகளின் அழகில் வியந்து அவளின் கன்னத்தை நெற்றி முறித்தார். 

அன்று இரவு மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை குடுக்க நினைத்தவர் கணவனுக்கு நேரமாகவே சாப்பாடு போட்டுவிட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தார்.

ராம் ஊரில் இருந்தால் எப்போதும் இரவு அவனின் நண்பர்களுடன் பேசி விட்டுதான் வீட்டிற்கு வருவான். அதுவும் இந்த ஒருமாதமும் பொழுது இறங்கியதும் போனானென்றால் இரவு ஒன்பது மணிக்குமேல தான் வீட்டிற்கு சாப்பிட வருவான். வந்ததும் சாப்பிட்டு முடித்துவிட்டு வாசலில் கட்டிலை போட்டு வானத்தை வெறிக்க ஆரம்பித்து விடுவான்.

ராசப்பன், மனைவி இன்னைக்கு நேரமாக சோறுபோடவும் ஆச்சரியமாகப் பார்த்தவாறே “ஏன்டி  எப்பவும் பையன் வந்ததும்தானே சோத்த கண்ல காட்டுவ இன்னைக்கு என்ன இன்நேரத்துலையே போடற? என்று கேட்டார்.

“தொன தொனனு பேசாம சாப்புட்டு வாங்க நாம இன்னைக்கு கோவிந்தன் அண்ணன் வூட்லதான் போய் படுத்துக்கபோறோம்…”

“ஏன்டி நம்ம வூட்ல தூங்காம அங்கென்னத்துக்கு போய் துங்கனும்ங்ற… நாம அங்கபோயிட்டா மருமக புள்ள தனியா எப்படி தூங்கும்? ஏற்கனவே ராத்திரி ஆனா  பயந்துகிட்டு பொடக்காலி பக்கம் போறதுக்கூட உன்ன கூட்டிட்டு போகுது. அந்த புள்ளைய தனியா விட்டு போலாம்ங்ற? உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்காடி…”

“என்ற வாய்ல ஏதாவது வந்தரப்போகுது ஒழுங்கா சோத்த தின்னுட்டு ஏங்கூட வரிங்க இல்லை அப்பறம் நா மனுசியாவே இருக்கமாட்டேன்…” கோபத்தில் திட்டவும்,

‘இப்போ நா என்ன சொல்லிட்டேனு இந்த கத்து கத்திட்டு இருக்கா…’ என மனதில் நினைத்துக்கொண்டவர்  “என்னனு சொல்லாம நீ பாட்டுக்கு அங்க போய் தூங்கலாம்னா என்ன டி அர்த்தம்?”

‘இந்த கூறுகெட்ட மனுசன வச்சிக்கிட்டு நா என்னத்ததா பண்றதோ’ என மனதில்  திட்டிகொண்டே கணவனை முறைத்தார்.

‘எதுக்கு முறைக்கறான்னு கூட தெரியலையே’ என நினைத்துக்கொண்டு “ஏன்டி முறைக்கற? நா என்னத்த தப்பா கேட்டுடேன்?” பாவமாக கேட்டார்.

“வாய மூடிட்டு சாப்பிடுங்கனுட்டேன்…” அதட்டவும் அவரும் மேற்கொண்டு பேசி வாங்கி கட்டிக்கொள்ள விருப்பமில்லாமல் வாயை மூடிக்கொண்டார்.

சாப்பிட்டு முடித்து கிளம்பிய பொன்னுதாயி அறையில் அமர்ந்திருந்த மருமகளை கூப்பிட்டார்.

மாமியார் கூப்பிடவும் வெளியே வந்து நின்றவளிடம் “கண்ணு நாங்க கோவிந்தன் அண்ணா வூட்டுக்கு போறோம். நீ உன்ற புருசன் வந்ததும் சோறுபோட்டு நீயும் சாப்பிட்ரு…” என்றவர் கணவனை இழுத்துக்கொண்டு சென்றார்.

மருமகளை பார்த்ததுமே ராசப்பனுக்கு விளங்கியது எதனால் பொண்டாட்டி தன்னை வெளியே கூட்டிப்போகிறாள் என்று “ஏன்டி இத நீ முன்னாடியே சொல்லிருந்தா நா இம்புட்டு கேள்வி கேட்ருக்கவே மாட்டேன்ல?” என்றார்.

“எத சொல்லிருந்தா?” பொன்னுதாயி நக்கலாக கேக்கவும்,

‘ஒருவேளை நா நினைச்சது தப்போ…? அப்போ அது இல்லைனா இவ எதுக்கு இன்னொருத்தர் வீட்ல போய் தூங்கலாம்னு சொன்னா?’ அவரே குழம்பிப்போய் “ஏன்டி அப்போ நா நினைச்சது இல்லையா? அப்பறமெதுக்குடி என்ன இழுத்துட்டு போற?” என்றார்.

கணவன் குழம்பி போய் இருப்பது புரிந்ததும் மனதிற்குள் சிரித்துக்கொண்டவர் “ம்ம்.. உங்களை இழுத்துட்டுபோய் இன்னொரு தடவை உங்க கையால தாலி கட்டிக்கலாம்னு ஒரு ஆசைதான். காலம்போன கடைசில பேச்சபாரு. இவர இழுத்துட்டு போறேனாம்…” என நக்கலடித்தவாறே நடந்தார்.

அதில் கடுப்பானவர் “ஏன்டி இங்க நா புருசனா? இல்லை நீ பொண்டாட்டியா?” என உளறினார்.

“ரெண்டும் ஒன்னுதான் உளறாம வாங்க…”

“ச்சீசீசீ… ஆமாம்ல… சரி திரும்ப கேக்கறேன் நீ புருசனா? இல்லை நா புருசனா?” என்றார்.

கணவனின் சிறுபிள்ளைத்தனமான கேள்வியில் புன்னகைத்தவர் ‘இந்த மனுசனையா ஊருக்குள்ள திமிர் புடிச்சவர், ஆணவக்காரர்னு பேசறாங்க?’  என நினைத்துக்கொண்டு “இதில் என்ன சந்தேகம் நீங்கதான் என்ற புருசன்…”

“நாந்தானே புருசன்… அப்போ ஒருநாளாவது புருசன்னு என்ன

மதிக்கிறியாடி?, இல்லை நா சொல்றததா கேக்கிறியா டி?, இல்லை நா கேட்டா ஒழுங்கா பதிலாவது சொல்றியாடி? எதுக்கேட்டாலும் எதுகை மோனையாவே பேசவேண்டியது” என்று கடுப்புடன் கேட்டார்.

“இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்?”

“நா நினைச்சது சரியா? இல்லையா? அத மொத சொல்லு?”

“நீங்க என்ன நினச்சிங்க?”

‘சண்டாளி படுத்தறாளே?’ வந்த கோபத்தை அடக்கிக்கொண்டார். பின்ன கோபத்தை காட்டினா அதுக்குமேல பொண்டாட்டி கோபத்தை காட்டுவாளே என்கிற பயம்தான்.

கோபம் அடங்கியதும் “பொன்னு என்னனு சொல்லும்மா? உன்ற புருசனுக்கு ஓ அளவுக்கு கூறு பத்தாதுனு உனக்கே தெரியும்ல?…” மனைவியிடம் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார்.

ஒருவழியாக மனம் இறங்கிய பொன்னுதாயி “நாம இருந்தா புள்ளங்களுக்குச் சங்கடமா இருக்கும்ல அதான் நாம போறோம் போதுமா…? இப்போ பேசாம வாங்க…”

“ஏன்டி கூறுகெட்டவளே இத வூட்லையே சொல்றதுக்கென்னடி?”

“என்ன பேச்சுல திமிரு கூடுது? இனிமே ஏங்கிட்ட எதாவது கேப்பிங்கல அப்ப இருக்கு உங்களுக்கு” அவர் முறைக்கவும்,

“சரிம்மா…தெரியாம பேசிட்டேன் போதுமா?  இப்போ சொல்லு? நா வூட்ல கேக்கறப்ப ஏ சொல்லமாட்டேனுட்ட?”

“உங்க மண்டையில எதாவது இருக்கா? வூட்ல மருமக இருக்கும்போது என்னனு சொல்றது?” அவர் எரிந்து விழுந்தார்.

“நா கொஞ்சம் சத்தமா பேசுனா திமிராம்… ஆனா இவ மட்டும் புருசன்னு ஒருமைல மட்டு மரியாதை இல்லாம பேசுவாளாம் எல்லாம் என்ற நேரம்… இப்போ மட்டும் என்ற ஆத்தா உசுரோட இருந்துருந்தா நானே இவளை எனக்கு கட்டிவச்சதுக்கு கழுத்த நெறிச்சே கொன்றுப்பேன்…” லட்சம் முறையாக தன்னை பெத்தவளை திட்டியவாறே வாயிக்குள்ளையே முனகிக்கொண்டு பொண்டாட்டியின் பின்னால் நடக்க ஆரம்பித்தார். 

“அங்க என்ன முனகிட்டே வரிங்க?” 

“நா என்னோட கஷ்டத்தை நினைச்சி பொலம்பிட்டு வரேன்ம்மா நீ வேகமா நடம்மா…” என்றார்.

கணவன் என்ன முனகிருப்பார் என தெரிந்தாலும் அதற்கு மேல புருசனை வம்பிழுக்க மனமில்லாமல் அமைதியாக ‘மகனின் வாழ்க்கை இனியாவது நல்லாருக்க வேண்டும்’ என்ற வேண்டுதலுடன் நடக்க ஆரம்பித்தார்.

Advertisement