Advertisement

அத்தியாயம்.14

தன்னவள் கதறுவதை நெஞ்சில் வலியுடன் பார்த்தவாறே நின்றிருந்தான் ராம். தான் அருகில் இருந்தும் தன்னால் தன் மனையாளின் கண்ணீரை துடைக்க முடியவில்லை என்பதை நினைத்து மனதிற்குள் உடைந்து கதறிக்கொண்டிருந்தான். 

அவன் கண்களில் தெரிந்த வலி ராசப்பனை ஏதோ செய்தது. 

‘இப்படி என்ற மகன் கலங்கி நிக்கவா பாசத்தை கொட்டி வளர்த்தேன்? இவனுக்கு எப்படி எப்படி எல்லாம் கண்ணாலம் பண்ணனும்னு கனவு கண்டுருந்தேன்., இன்னைக்கு இந்த சனியனை கட்டி என்ற மகன் கண்டவன்கிட்டையும் அடிவாங்கிட்டு நிக்கறானே… ஒரு அப்பனா என்னால எதுவும் பண்ணமுடியலையே…’ அவராலும் மனதிற்குள் தான் புலம்ப முடிந்தது.

மகன் கலங்கி நிற்பதை பார்க்க முடியாமல் மனைவியை அதட்டினார்.

“ஏய்… இப்போ என்ன ஆகிபோச்சுனு ஒப்பேறி வச்சிட்டு இருக்க? முதல்ல எழுந்து உன்ற மருமகளை வூட்டுக்கு கூட்டிட்டு வாடி…” மனைவியிடம் சத்தம் போட்டார்.

“எனக்கு மருமகளா உங்களுக்கு என்ன வேணும்ங்க?” கணவனை முறைத்தவாறே கேட்டார் பொன்னுதாயி.

“இப்போ அதுவாடி முக்கியம். எழுந்து வாடி”  என்றவர் “மனுசனை கடுப்பேத்திகிட்டு…” கடைசி வார்த்தையை மெதுவாகத்தான் முனகினார்.

மனைவியின் காதில் விழுந்தால் அதற்கும் ஆடுவாளே… என்ற பயம்தான். பொண்டாட்டிக்கு பயப்படும் ஆண்களில் ராசப்பனும் ஒருவர். ஊருக்குள் என்னதான் திமிராக சுத்தினாலும் மனைவி, மகன், மகள் விசயத்தில் அவரும் கோழையே… அவர்கள் சிறிது கண்கலங்கினாலும் அவரும் உடைந்துவிடுவார். 

மனைவியிடம் கூறியவர் மகள் தாயின் அருகில் மேடிட்ட வயிற்றை சுமந்துகொண்டு நிப்பதை பார்த்ததும் “நீ ஏங்கண்ணு இன்னும் இங்கன நின்னுட்டு இருக்க… வா நாம வூட்டுக்கு போலாம்… உன்ற அம்மா தம்பியையும், தம்பி பொண்டாட்டியையும் கூட்டிட்டு வருவா…” என்றவாறே மகளை அழைத்துகொண்டு முதலில் கிளம்பிவிட்டார்.

“ராசப்பன் போனதும் பொன்னுதாயி “கண்ணு எழுந்து வாடாம்மா… நம்ம வூட்டுக்கு போலாம்…” என்றார்.

“அத்தை… அம்மாகிட்ட நா போகணும்…”

“போலாம்டா கண்ணு… நீ முதல்ல எழுந்து வா…” அவளை ஒருவழியாக சமாதான படுத்தி மகனையும் மருமகளையும் வீட்டிற்கு அழைத்துசென்றார்.

அவர்கள் வருவதற்குள்ளாகவே கோதை ஆரத்தி கரைத்து எடுத்து வைத்திருந்தவள் அவர்கள் வந்ததும் ஆரத்தி தட்டை தன் தாயிடம் நீட்டினாள்.

மகள் குடுத்த ஆரத்தி தட்டை வாங்கிக்கொண்டவர், “கண்ணுங்ளா ரெண்டுபேரும் சேர்ந்து நில்லுங்க…” 

அவரின் மருமகளோ அதை காதிலே வாங்காமல் எங்கையோ வெறித்துகொண்டு நின்றிருந்தாள். மகனோ மனைவியை தான் வலி நிறைந்த விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.,

காதலித்தவளையே கரம் பிடித்திருந்தாலும் அந்த சந்தோசம் அவன் முகத்தில் துளியும் இல்லை.

கோதை தம்பியையும் தம்பி  மனைவியையும் இழுத்து ஒன்றாக நிற்க்க வைத்தாள்.

அப்போதும் லலிதா அதை உணரக்கூட இல்லை அவளின் நினைவு முழுவதும் தன் தாயிடமே… 

பொன்னுதாயி இருவருக்கும் ஆரத்தி சுற்றி திர்ஷ்டி கழித்து இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு ஆரத்தியை வாசலில் கொண்டுபோய் கொட்டிவிட்டு வந்தார்.

உள்ளே வந்தவன் அங்கிருந்த நாற்காலியில் ‘தொப்’ என்று அமர்ந்தவன் தலையின் பாரத்தை இரு கைகளாலும் தாங்கி தலை குனிந்து அமர்ந்துவிட்டான்.

தம்பியின் நிலை கோதையையும் வருத்தியது. அவனை தொல்லை பண்ணாமல் லலிதாவை மட்டும் அழைத்து சென்று சாமிக்கு விளக்கேற்ற வைத்து அவளுக்கு தான் துணியில் ஒன்றை கொடுத்து கட்டிகொள்ள சொன்னாள்.

ஆனால், அவள் அதை எதையுமே காதிலே வாங்காமல் நிற்ப்பதை பார்த்ததும் மனம் வலிக்க தானே அவளுக்கு ஆடை உடுத்திவிட முனைந்தாள்.

கோதை  தாவணியில் கை வைத்ததும் தான் சுயநினைவிற்கே வந்தாள் லலிதா. என்னவென்று புரியாமல் அவளை பார்த்தாள்.

“தாவணி ஈரமா இருக்குடா …”

“ஓஓஓ…” அவ்வளவுதான் அதன்பிறகு பழைய நிலைக்கே சென்றுவிட்டாள்.

பின் எதுவும் பேச தோன்றாமல் தானே தம்பி மனைவிக்கு துணியை மாற்ற ஆரம்பித்தாள்.

துணி உடுத்திய பிறகும் பொம்மை போல நின்றிருந்தவளை அங்கிருந்த கட்டிலில் உட்கார வைத்துவிட்டு அவளின் ஆடைகளை அலசி போட எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

கோதை வெளியே சென்றதைக் கூட உணராமல் கட்டிலிலே கால்களை குறுக்கி கொண்டு அதில் முகம் புதைத்து கண்ணீர் விட ஆரம்பித்தாள் லலிதா.

மனைவி கண்ணீர் விட்டாள் என்றால் அவளவன் ராம் உள்ளுக்கும் அழுதுக்கொண்டிருந்தான். வந்ததிலிருந்து மகனை தான் பார்த்துக்கொண்டிருந்தார் ராசப்பன். 

ஆரத்தியை கொட்டிவிட்டு உள்ளே வந்த பொன்னுதாயி மகன் அமர்ந்திருந்த நிலை பார்த்து கோபம் கொண்டு “இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிதானே தாலி கட்டுன? அப்பறமெதுக்கு இந்த வேஷம்? போடா போய் வேற துணிய மாத்து” என கடிந்தார்.

அம்மாவின் வார்த்தையில் காயபட்டவன் அவரை பார்த்து “எனக்கு தெரியாதும்மா. நா வேணும்னுலாம் பண்ணல… அவ என்னவிட்டு போயிடுவாளோங்ற பயத்துலதான் தாலி கட்டினேன்.”

“என்னது தெரியாதா…? இத என்ன நம்ப சொல்றியாடா… உன்ற அப்பன் புத்திதானே உனக்கும் இருக்கும். அந்த குடும்பத்த எப்படியாவது அழ வைக்கனும் உன்ற அப்பனுக்கு. அவர் பெத்த மகன் நீ. நீ மட்டும் என்ன நல்லவனாவா இருப்ப…” வார்த்தையாலையே மகனை துடிக்க வைத்தும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. தன் தோழியின் இந்த நிலைக்கு தன் மகன்தானே காரணம் என்ற கோபம் அவரை அப்படியெல்லாம் பேச வைத்தது.

மனைவி மகனுடன் சேர்த்து தன்னையும் திட்டுவது பொறுக்காமல் “இப்போ எதுக்குடி என்ன இழுக்கற? நானாடி இவனை அவ கழுத்துல தாலி கட்ட சொன்னேன்? என்னமோ எல்லாத்துக்கும் நாந்தா காரணம்ங்ற மாதிரி பேசற?”

“எது நீங்க காரணமில்லையா? இன்னைக்கு அலமேலுவோட நிலமைக்கு உங்க மகன் பாதி காரணம்னா மீதி நீங்க தான். அங்க வாயையும், கையையும் வச்சிட்டு செத்தநேரம் நின்றிருந்திங்கனா பிரச்சனை இவ்வளவு தூரம் போயிருக்கவே போயிருக்காது.”

“அவன் என்ற மகனை அடிக்க வருவான் நா அத வேடிக்கை பாத்துகிட்டு இருக்குனுமாடி.”

“ஏ இருந்தா என்ன தப்புங்றேன். அவனுக்கு தன்னோட தங்கச்சி கழுத்துல தாலிய பாத்த கோபம். அதனால அத உங்க மகன் மேல காட்டுனான். ஏ நீங்க இதே உங்க தங்கச்சி ஓடிப்போனப்ப மூர்த்தி அண்ணன் சட்டைய புடிக்கலையா? உங்களுக்கு ஒரு நியாயம். மத்தவனுக்குனா ஒரு நியாயமா?”

மனைவின் பேச்சில் வாயடைத்து போயிவிட்டார். ‘இனி ஏதாவது பேசினால் இவளே எல்லாத்துக்கும் நாந்தா காரணும்னு கிளப்பிவிட்டாலும் விடுவா…’ என நினைத்தவர் வாயை மூடிக்கொண்டார்.

“உங்களோட கோபத்தால அலமேலு ஹாஸ்பிட்டல்ல படுத்துக்கிடக்கறா… அவளுக்கு எதாவது ஒன்னு ஆச்சு அப்பறம் இருக்கு உங்களுக்கு…” கணவனிடம் ஒரு காட்டு காட்டியவர் மகன் இன்னும் அங்கேயே இருப்பதை பார்த்து அவனையும் ஒரு வழியாக்கி துணிமாத்த அனுப்பிவைத்தார்.

மகன் சென்றதும்  வாய் இருக்கமாட்டாமல் திரும்பவும்  பேசி வாங்கி கட்ட ஆரம்பித்தார் ராசப்பன்.

“இங்க பாருடி அந்த வூட்டு பொருள் ஒன்னுக்கூட இங்க இருக்ககூடாது. அந்த புள்ள கையில, கழுத்துல போட்ருக்கறதெல்லாம் வாங்கி குடு கொண்டு போய் அந்த வூட்ல எறிஞ்சிட்டு வந்துடறேன்…”

“உயிரில்லாத பொருள எறிஞ்சிட்டு வந்துடுவிங்க சரி. அவங்களோட ரத்தம் உங்க மகன் கட்டிட்டு வந்தவளோட ஒடம்புல ஓடுதே அத என்ன பண்ணபோறிங்க…? வேணும்னா ஒன்னு பண்ணுங்களேன் அவள அறுத்து அந்த ரத்ததையும் கொண்டுபோய் குடுத்துட்டு வந்துடுங்ளேன்…” நக்கலாக கேட்டார்.

“என்னடி இப்படிலாம் பேசற?” அவரே அதிர்ந்துவிட்டார்.

“வேற எப்படி பேசனும்ங்றேன்? உங்க மகன் பண்ணிட்டு வந்த காரியத்துக்கு பிறகும் உங்களுக்கு ரோசமெல்லாம் வருதோ? எதாவது பேசுனிங்க நா தாலி அறுத்தாலும் பரவாலைனு சோத்துல வெஷத்தை வச்சி கொன்றுவேன் பாத்துக்கோங்க…”

“ஏய் நா உன்ற புருசன்டி…”

“அந்த ஈர வெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும். நீங்க வாயமூடிட்டு போய் வேலைய பாருங்க…” 

அதற்கு மேல் எதாவது பேசுவாரா என்ன? துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு எழுந்தவர் ‘கொஞ்சமாவது புருசன்னு மதிக்கறாளானு பாரு… எல்லாம் என்ற ஆத்தாவ சொல்லனும் இந்த திமிர்புடிச்சவள ஏந்தலைல கட்டிவச்சிட்டு அதுபாட்டுக்கு நிம்மதியா போய் சேந்துருச்சு…’ அவர் மெதுவாக புலம்பியவாறே வெளியே சென்றார். 

“அங்க என்ன முனகிட்டு இருக்கிங்க?”

“ஒன்னும் இல்லைடி நீ உன்ற வேலைய பாரு… நா மாரிய  காணாமேன்னு பொலம்பிட்டு இருக்கேன்.”

அந்த நாள் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு விதமாக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டது. கணவன் மனைவி இருவரும் குற்ற உணர்ச்சியில் அந்த நாளை கடந்துகொண்டிருந்தனர். இன்று அவர்களுக்கான முதல் இரவு. ஆனால், அதை உணரக்கூட இல்லாமல் அழுது அழுது கண்ணீர் வற்றிய நிலையில் கட்டிலிலே உறங்கியிருந்தாள். அவள் கணவனோ வாசலில் கயிற்று கட்டிலில் படுத்து பொட்டு தூக்கமில்லாமல் விடிய விடிய வானத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.

ராத்திரி மகன் வெளியே படுத்திருப்பதை பார்த்த ராசப்பன் மனைவியிடம் “பையன் ஏ தனியா இங்க படுத்துருக்கானு” கேட்டு வாங்கிகட்டிக்கொண்டு பேசாமல் மகனுக்கு அருகிலே இன்னொரு கட்டிலை போட்டு தூங்கிவிட்டார்.

பாதி நேரத்தில் லலிதாவின் அனத்தல் கேட்டு அவளருகில் படுத்திருந்த கோதை மெல்ல எழுந்து அமர்ந்தவள் குறுகி படுத்து போர்வையை இழுத்துமூடி அனத்திக்கொண்டிருந்தவளின் போர்வை விலக்கி அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தாள். லலிதாவின் உடம்பு நெருப்பாக கொதிக்கவும் தூங்கிகொண்டிருந்த தாயை எழுப்பினாள்.

அவரும் எழுந்து மருமகளின் நெற்றியை தொட்டுபார்த்து காய்ச்சலை உணர்ந்ததும் சுடுதண்ணி வைத்து எடுத்துவர சென்றார்.

வெளியே தூங்காமல் முழித்திருந்தவன் உள்ளே பேச்சுக்குரல் கேக்கவும் எழுந்து வந்தான். மனைவி குளிர்காச்சலில் “அம்மா… அம்மா…” என முனகியவாறே குறுகி படுத்திருந்தவளை பார்த்ததும் அதிர்ந்துவிட்டான்.

அம்மா சுடுதண்ணி வைத்து எடுத்து வருவதற்குள்ளாகவே அவளின் பாதத்தையும், கைகளையும் தேய்த்து விட ஆரம்பித்தான். அம்மா சுடுதண்ணி கொண்டு வந்ததும் அவளை அமரவைத்து சுடுதண்ணியை குடிக்கவைத்தான். 

சிறிது குடித்தவள் குளிரில் அவனை கட்டிக்கொண்டு அவனின் மார்பிலே தஞ்சம் புகுந்துவிட்டாள்., உடம்பெல்லாம் குளிரில் நடுங்குவதை அவனும் உணர்ந்தான்.

காய்ச்சல் குறைய கசாயம் வைத்து குடுத்தும் காய்ச்சல் துளிக்கூட குறையாமல் இருந்தது. அன்று இரவு அம்மா, மகன், மகள் மூவருக்கும் தூங்கா இரவானது. விடியும் வரையிலும் தன் மனைவியை அணைத்துக்கொண்டு மனதில் வலியுடன் அமர்ந்திருந்தவன் விடிந்ததும் முதல் வேலையாக அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிச்சென்றான்.

மகன் மேல் கோபத்துடன் இருந்த பொன்னுதாயி மருமகளின் காய்ச்சலை பார்த்து மகன் துடித்த துடிப்பை கண்டதும்தான் மகன் அவளை பிடித்துதான் தாலி கட்டியிருக்கிறான் என்பதை உணர்ந்ததும் நிம்மதியானார்.

அவர்கள் சென்ற மருத்துவமனையில் தான் லலிதாவின் அம்மாவை சேர்த்திருந்தனர்.

அலமேலுவை மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்து காலை வரை மொத்தக் குடும்பமும் பச்சத்தண்ணிக்கூட குடிக்காமல் அலமேலுவை வைத்திருந்த அறையின் முன் காத்துக் கிடந்தது.

நேற்று டாக்டர் அலமேலுவுக்கு பக்கவாதம் வந்ததை சொன்னதிலிருந்து மூர்த்தி இடிந்துபோய் அமர்ந்தவர்தான் இன்று வரையிலும் அந்த இடத்தை விட்டு அசையக்கூட இல்லை. கண்கள் கலங்கவும் இல்லை. வெற்று பார்வை மட்டுமே. மகன்களால் அவரை அப்படி பாக்கவே முடியவில்லை. தாயின் நிலையை விட தந்தையின் நிலையே அவர்களை கவலைபடுத்தியது.

அண்ணன் வீட்டிலிருந்து ஊருக்கு சென்ற அகிலாண்டாமும் விசயம் கேள்விபட்டு மகனுடன் ஹாஸ்பிட்டல் ஓடிவந்தவர் தன் அண்ணியின் நிலையை பார்த்து அதிர்ந்துவிட்டார். தன்னால் தானோ என்கிற குற்ற உணர்ச்சி அவரையும் ஆட்டிபடைத்தது. விசயம் கேள்விபட்டதிலிருந்து மகன் அவரிடம் ஒத்தை வார்த்தை பேசவில்லை. அதுவே அகிலாண்டத்தை மேலும் காயபடுத்தியது.

அலமேலு மயக்கத்திலிருந்து கண் விழிப்பதற்காக மொத்தக் குடும்பமும் காத்திருக்க ஆரம்பித்தனர்.

அலமேலு தனக்காக தன் தன் மொத்த குடும்பமும் வாசலில் காத்திருப்பதை உணரக்கூட முடியாமல் நேற்று ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் கண்விழிக்காமல் படுத்திருந்தார்.

லஷ்மிதான் எல்லாரையும் அப்படியே விட மனமில்லாமல் எதாவது குடிக்க வாங்கிட்டு வரலாமென்று நினைத்து வெளியே வந்தாள்.

கணவனின் கை அணைப்பில் போர்வையை போத்திக்கொண்டு மெல்ல ஹாஸ்பிட்டலுக்குள் செல்லபோனவளை பார்த்ததும் கோபம் வர அவளின் முன்னால் வந்து நின்றவள் “இன்னும் ஆர சாகடிக்க இங்க வந்துருக்கடி?” ஆத்திரத்தில் கத்தினாள்.

அண்ணியை தன்முன்னால் பார்த்ததுமே கொஞ்சம் தெம்பு வந்தவளாக அவரிடம் அம்மாவை பற்றி விசாரிக்க நினைத்து பேச போனவள் லஷ்மியின் வார்த்தையில் கண்கலங்க நின்றாள்.

“இப்படி அழுது அழுதுதான் எங்களை எல்லாம் நடுத்தெருவுல நிறுத்திட்ட இன்னும் என்ன பாக்கியிருக்குனு நீலிகண்ணீர் வடிக்கற டி… உன்ற மேல அம்புட்டு நம்பிக்கை வச்சிருந்தோமே டி. எப்படி  எங்களை ஏமாத்த மனசு வந்துச்சு…, ச்சீசீ… உன்ற முகத்த பாக்கவே அருவெறுப்பா இருக்குடி. உன்ன பெத்த பாவத்துக்கு என்ற அத்தை சாக கிடக்கறாங்க. இப்போ உனக்கு சந்தோசம்தானே. நீ நல்லாரு டி ஆத்தா…” கோபத்தில் அவளை திட்டிவிட்டு சென்றுவிட்டாள்.

அண்ணி போவதையே கண்ணீர் வழிய பார்த்துக்கொண்டிருந்தவள் அப்படியே மயங்கி சரிய ஆரம்பித்தாள்.

அவளை அணைத்திருந்தவன் லஷ்மியை பார்த்ததும் கொஞ்சம் விலகி நின்றிருந்தான். அவள் மயங்கி சரியவும் விழாமல் தாங்கி பிடித்து கொண்டான்.

அவள் மயங்கி விழுவதை பார்த்த நர்ஸ் தண்ணீரை எடுத்துவந்து முகத்தில் தெளித்ததும் மயக்கம் தெளிய வைத்தாள்.

பின் டாக்டரிடம் காட்டி காய்ச்சலுக்கு ஊசி போட்டு வந்ததும் அவளிடம்  ராம் “அத்தையை பாக்க போலாமா லதாம்மா…? என்றான்.

அம்மாவை பாக்க ஆசை இருந்தாலும் ‘வேண்டாம்’ என தலையாட்டினாள்.

“ஏன் லதாம்மா வேண்டாம்ங்ற…?”

“என்ன மாதிரி துரோகியெல்லாம் அவங்க முகத்த பாக்கவே கூடாது மாமா…”

“ஏ லதாம்மா இப்படி பேசற? நீ துரோகினா நா ஆரு? இனி இப்படிலாம் பேசாதடா ரொம்ப வலிக்குது…”

எதுவும் பேசாமல் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தாள்.

அந்த நிமிடமே தன்னை  வெறுக்க ஆரம்பித்துவிட்டாள். இனி வாழ்க்கையையும் வெறுக்க ஆரம்பித்து விடுவாள்.

Advertisement