Advertisement

அவளின் கையை பிடித்துக்கொண்டு ஊரின் மத்தியில் இருந்த மாரியம்மன் கோவிலுக்கு வந்தவன் அவளின் கையை விட்டு விட்டு கருவறைக்குள் சென்றவன் மாரியம்மனை கும்பிட்டுவிட்டு அதன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து வந்து வெளியே நின்றிருந்தவளின் கழுத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னவளாக மாற்றிக்கொண்டான்.

தோட்டத்திலிருந்து அவளை இழுத்துக்கொண்டு வந்தவனை பார்த்தவர்கள் அவர்களின் கோலம் கண்டு என்னமோ ஏதோவென்று  பின்னாடியே வந்தவர்கள் அவன் கோவிலுக்குள் நுழையவும் அவர்களும் அங்கு வந்து நின்று அங்கு என்ன நடக்கிறது என புரிவதற்குள்ளாகவே அவன் தாலி கட்டிவிடவும் அதிர்ந்து விட்டனர்.

இரு குடும்பத்துக்கும் உண்டான பகைதான் அந்த ஊருக்கே தெரியுமே… அப்படி இருக்கும்போது அவளின் கழுத்தில் தாலி கட்டவும் அதிர்ந்து போய் சில நொடிகள் நின்றவர்கள் பின் தெளிந்து பேச ஆரம்பித்தனர்.

அவர்களே அப்படி என்றால் அவன் கையால் தாலி வாங்கியவளின் நிலமையோ அதவிட மோசம். அவன் இழுத்த இழுப்பிற்கு வந்தவள் கோவிலுக்குள் நுழைந்ததும் அம்மனை பார்த்த உடன் மனம் கடவுளிடம் சரணடைந்தது. அவன் கை விட்டதும் சாமியை கும்பிட்டவாறு கண்மூடி தனது மனபாரத்தை எல்லாம் கடவுளிடம் சொல்லிக்கொண்டிருந்தவளின் கழுத்தில் தன்னவனின் கை உரசவும் விழிகளை திறந்தவளுக்கு என்ன நடக்கிறதென்றே புரியாமல் தாலியையும் தாலி கட்டியவனையும் தான் பார்த்துகொண்டிருந்தாள். 

தாலி கட்டி முடித்தவன் அங்கிருந்த குங்குமத்தை எடுத்து தன்னவளின் பிறை நெற்றியில் அழுந்த வைத்துவிட்டு தான் நிமிர்ந்தான்.

அங்கிருந்தவர்களில் ராமிற்கு மாமா முறை உள்ள ஒருவர் “ஏய்யா மருமகனே என்ன காரியம் பண்ணிருக்க? நீ பாட்டுக்கு அந்த புள்ளைய இழுத்து வந்து தாலி கட்டிபோட்டையே இது உங்க ரெண்டு குடும்பத்துக்கும் தெரிஞ்சா என்னாகும்யா மருமகனே?”

“எனக்கு உரிமையுள்ளவ கழுத்துலதான் தாலி கட்டிருக்கேன் மாமா…”

அவனின் பதிலில் அவர் வாயடைத்து போய்விட்டார். இனி அவனிடம் கேக்க என்ன இருக்கு? அதான் உரிமையானவனு சொல்லிட்டானே…

அவன் தாலி கட்டிய சிறிது நேரத்திலையே அவர்கள் குடும்பத்திற்கு தகவல் சென்றுவிட்டது. இரு குடும்பமும் பதறியடித்துக்கொண்டு கோவிலுக்கு ஓடிவந்தனர்.

அவர்கள் வரும்போது இருவரும் கோவில் வாசலில்தான் அமர்ந்திருந்தனர்.

முதலில் வந்தது ராமின் குடும்பம்தான். அவர்களை பார்த்ததும் லலிதா மட்டும் எழுந்து நின்றாள் மகனோ அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

பொன்னுதாயிக்கு மகனின் கண்ணாலம் நடந்ததை நம்பவ முடியவில்லை.., அதிலும் அவன் தாலி காட்டிய பெண் தன் உயிர்த் தோழியின் மகள்… மகன் பண்ணிய காரியத்தால் திரும்பவும் இரு குடும்பத்திற்கும் இடையில் மேலும் பகை உண்டாக காரணமாக இருந்துவிட்டானே என்பதோடு மகனின் திருமணம் இப்படி அவசரக்கோலத்தில் நடந்ததையும் நினைத்து தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார். 

ஒற்றை மகனல்லவா… அவனின் திருமணத்தை ஊரே மெச்சும் அளவிற்கு நடத்தவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார். அது அத்தனையும் மருமகளின் கழுத்தில் தாலியை பார்த்ததும் உடைந்து சுக்கு நூறாகிவிட்டதை நினைத்து தலையில் அடித்துக்கொண்டார். 

கோதைதான் அவரை சமாதான படுத்திக்கொண்டிருந்தாள். அவளுக்கும் அதிர்ச்சிதான்., தம்பி இப்படி ஆருக்கும் தெரியாமல் தாலி கட்டுவானென்று அவளும் எதிர்பார்க்கவே இல்லை.  

இருவரையும் பார்த்த ராசப்பன் அவள் கழுத்திலிருந்த தாலியை பார்த்ததும் முடிவு இதுதானென்று முன்பே தெரிந்தாலும் அதனை மனம் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.

அவருக்கு புடிக்காதவரின் மகள் இன்று அவர் வீட்டு மருமகளாக மகன் கட்டிய தாலியை சுமந்துக்கொண்டு நிற்கிறாள். அவளை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் விலக்கி வைக்கவும் மகனின் மேல் வைத்திருந்த பாசம் தடுக்க இருதலை கொள்ளி எறும்பாக தவித்தார்.

ராசப்பனின் நிலையை விட அவரின் தங்கையின் நிலையோ படுமோசம்.

மகளின் கல்யாணம் முடிவான மகிழ்ச்சியில் இருந்த குடும்பம் தகவல் தெரிந்ததும் கோவிலுக்கு ஓடிவந்தவர்கள் மகளின் கழுத்திலிருந்த தாலியை பார்த்ததும் மகள் மேல் வைத்திருந்த நம்பிக்கை  சுக்குநூறாக உடைய உயிர் இருந்தும் உயிரற்றவர்களை போல் ஜடமாக நின்றனர். அலமேலுவிற்கு கண்கள் இருட்டிவர கீழே விழுந்துவிடாமல் இருக்க தன் அருகில் இருந்த கணவனின் கையை இருக பற்றி கொண்டு மகளை வெறித்தார்.

முருகேசனுக்கு ராமின் மேல் ஆத்திரம் எல்லையை கடந்தது. தன் தங்கையை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகொண்டான் என தவறாக நினைத்துக்கொண்டு ராமை அடிக்க பாய்ந்து விட்டான். ஏனென்றால் அவர் தங்கையின் மேல் வைத்திருந்த பாசம் அப்படி… சிறு அதட்டலுக்கே பயந்து நடுங்கும் தங்கை தன் குடும்பத்தாட்களை தவிர மற்றவர்களுடன் பேசவே பயப்படுபவளாயிற்றே…

ராமின் சட்டையை பிடித்து அடித்துவிடவும் அங்கு சிறிது நேரத்திற்கு கைகலப்பாகிவிட்டது.

ராசப்பனால் மகன் அடிவாங்கியதை தாங்கவே முடியவில்லை. அந்த ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்தார்.

“ஓடுகாலி பெத்த நாய் நீ என்ற மகனை அடிக்கிறியாடா? உன்ற தங்கச்சிய ஊர் மேயவிட்டு என்ற மகனை அடிக்க உனக்கு என்னடா யோக்கியதை இருக்கு. தோல உரிச்சிபோடுவேன்.”

“என்ற அம்மாவையும், தங்கச்சியும் பத்தி இன்னொரு வார்த்தை தப்பா சொன்னிங்னா வயசுல பெரியவர்னுக்கூட பாக்கமாட்டேன் வெட்டிபோடுவேன். ஒன்னும் தெரியாத பச்சபுள்ளைய ஏமாத்தி உன்ற மகன் தாலி கட்டிருக்கான் அத கேக்க துப்பில்லை என்ற தங்கச்சிய பத்தி பேசவந்துட்டிங்க…” மாமனிடம் எகிறிக்கொண்டு சென்றான்.

“நா அப்படித்தான்டா பேசுவேன். எங்கடா வந்து வெட்டுடா பாக்கலாம். ஓடுகாலியோட மகன்தானே டா நீ உன்ற ஆத்தாகாரி அன்னைக்கு எங்க குடும்பத்த சந்தி சிரிக்க வச்சுட்டு போனா. இப்போ அவ பெத்த மகளும் என்ற பையன மயக்கி கட்டிக்கிட்டா. இத சொன்னா உனக்கு ரோஷம் வேற வருதோ…”

ராசப்பன் பேசியதை கேட்டு முருகேசனும், தமிழரசனும் கோபத்தில் அவரை அடிக்க போய்விட்டனர்.

மூவரையும் இழுத்து பிடிக்கவே ஊர்மக்கள் போராட வேண்டிருந்தது.

தன் கணவனின் கையை பற்றிக்கொண்டு நின்றிருந்த அலமேலு உள்ளுக்குள் உடைந்து சிதறிக்கொண்டிருந்தார்.  இருபத்தி ஐந்து வருடம் கழித்தும் தன் திருமண வாழ்க்கை ஊரார் மத்தியில் விமர்சிக்கபடுவது மட்டுமில்லாமல் தன் வயிற்றில் பிறந்த பாவத்திற்காக அவர் பெற்ற செல்வங்களும் அசிங்கபடுவதை பார்த்து உள்ளுக்குள் கதற ஆரம்பித்தார். அவரின் வேண்டுதலோ இந்த நொடியே தன்னுடைய உயிர் போய்விட வேண்டும் என்பது மட்டுமே…

ஊரில் உள்ளவர்கள் ஒருவழியாக மூவரையும் அடக்கி நிற்க்கவைத்தனர்.

ஊரின் பெரியவரில் இரு குடும்பத்துக்கும் சொந்தமான ஒருவர்  “ஏலேய் மூனுபேரும் கொஞ்சநேரம் அடங்கி இருங்கப்பா. எதுவா இருந்தாலும் அந்த புள்ளைய ஒருவார்த்தை கேட்ருவோம். அந்த புள்ளையோட விருப்பத்தோட தான் ராசப்பன் மகன் தாலி கட்டிருந்தானா சுந்தரமூர்த்தி பசங்க மேற்கொண்டு பிரச்சனைய வளக்காம போயிடனும்.”

இன்னொருவர் “அதுவும் சரிதான். புள்ளை சம்மதத்தோட கட்டிருந்தானா அதுக்கு மேல பேச ஆருக்கும் உரிமையில்லை.”

“என்ன ராசப்பா, முருகேசா.. நா சொல்றதுக்கு ரெண்டுபேரும் இதுக்கு ஒத்துக்குறிங்கதானே?”

“ம்ம்… எனக்கு சம்மதம்தான் பெரியப்பா… ஆனா என்ற தங்கச்சி இல்லைனு சொல்லிருச்சுனா அடுத்த நிமிசமே அவன் கட்டுன தாலிய கழட்டி எறிஞ்சிட்டு நாங்க எங்க புள்ளைய கூட்டிபோயிடுவோம். இதுக்கு சரினா மேற்கொண்டு பேசுங்க…”

“எனக்கும் சம்மதம்தான் மாமா…” ராசப்பனும் ஒத்துக்கொண்டார்.

இருவரும் ஒத்துக்கொண்டதும் பெரியவர் லலிதாவை அழைத்து “கண்ணு இப்போ நீ சொல்லப்போறதுல தான் முடிவே இருக்கு. உன்ற சம்மதத்தோட தான் ராசப்பன் மகன் உன்ற கழுத்துல தாலி கட்டுனானா கண்ணு?”

தன்னுடைய பதிலால் பிறந்த வீட்டை இழக்கபோறோம் என தெரிந்தும் தன்னவனுக்கு குடுத்த வாக்கிற்காக ‘ஆம்’ என தலையை ஆட்டினாள்.

“எதுவா இருந்தாலும் சத்தமா வாய தொறந்து சொல்லு கண்ணு… நீ தலையாட்டுனினா நாங்க என்னனு நினைக்கறது?”

“ஆமாம் பெரியப்பா… மாமா என்னோட விருப்பத்தோட தான் தாலி கட்டினார்.” அவளின் வாழ்க்கையில் பயத்தை விட்டு தைரியமா பேசியது அந்த நொடிதான்.

அவளின் பதிலை கேட்டு பிறந்த வீட்டினரை மொத்தமாக உடைந்துவிட்டனர். முருகேசனால் தன் தங்கை கூறியதை நம்பவே முடியவில்லை. எதோ கனவு போலவே அவளை வெறித்தார்.

ஆனால், தமிழரசன் அண்ணனை போல் இல்லாமல் தன் தமக்கையின் அருகில் வந்தவன் கண்கள் இரண்டும் சிவக்க “உன்ற மேல நாங்க வச்சிருந்த மொத்த நம்பிக்கையும் கொன்னுட்டக்கா… ச்சீசீ… இனி எங்க முன்னாடி தப்பி தவறிக்கூட வந்துடாதக்கா, அப்படி வந்த அன்னைக்குதா எங்களோட கடைசி நாளா இருக்கும்…” என்று அக்காவிடம் கோபத்தில் பேசிக் கொண்டிருக்கும்போதே அவனின் அம்மா வேரறுந்த மரம் போல் கீழே சரிந்தார். அவரின் காலும், கையும் இழுக்க ஆரம்பித்தது.

மூர்த்தி தரையில் துடித்துக் கொண்டிருந்த மனைவியை தன் மடியில் கிடத்திகொண்டு கண்களில் கண்ணீர் வழிய உள்ளுக்குள் அவரும் துடித்தவாறே “அலமு… அலமு…” ஓயாமல் சொல்ல ஆரம்பித்தார்.

அலமேலு கீழே விழுந்து துடித்த சிறிது நேரத்திற்குள்ள டவுன் ஹாஸ்பிட்டல்க்கு கூட்டி சென்றுவிட்டனர்.

அந்த கிராமத்தில் அப்போது ராசப்பனிடம் பஞ்சாயத்து பேசிய பெரியவரிடம் மட்டுமே கார் இருந்தது. ராசப்பன் தரமாட்டார் என்பதால் அவரே ஓடிப்போய் தங்கள் வீட்டிலிருந்த காரை எடுத்துக்கொண்டு வந்து அலமேலுவை ஏற்றிக்கொண்டு சென்றார்.

லலிதா தன் அம்மாவை கூட்டி சென்ற பின்பும் கோவிலின் முன் தரையில் அமர்ந்தவாரே கதறி கொண்டிருந்தாள். அவளுடைய அம்மா தரையில் துடிப்பதை பார்த்து ஓடிப்போய் அவரின் காலை தொடப்போனவளின் கரத்தை தடுத்து பிடித்து நிறுத்திய முருகேசனின் விழிகள் ரத்தமென சிவந்திருந்தது.

அண்ணன் தடுத்து பிடிக்கவும் “அண்ணா…” என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அவன் அறைந்த வேகத்தில் கீழே சென்று விழுந்தவளை பார்த்து ஒற்றை விரலை காட்டி “அம்மாவ தொடக்கூட உனக்கு தகுதி இல்லை. எப்போ உன்னோட விருப்பத்தோடதா கண்ணாலம் நடந்ததுனு சொன்னியோ அப்பவே எங்களை சாகடிச்சிட்ட. இன்னும் என்ன மீதி இருக்குனு வர. போயிடு ஏங்கண்ணு முன்னால வந்துடாதே…” என்றவன் தன் தாயை கைகளில் அள்ளிக்கொண்டு கார் வந்ததும் அவரை ஏற்றிக்கொண்டதும்  கார் மருத்துவமனையை நோக்கி விரைந்தது.

ராமிற்குமே அதிர்ச்சிதான். தன்னால் தான் அத்தைக்கு இப்படி ஆனதோ என்ற குற்ற உணர்ச்சியில் இருந்தவன் மனைவி அடிவாங்கியதில் கீழே விழுந்ததை  பார்த்ததும் மனம் பதற அவளின் அருகில் ஓடிவந்தவன் கீழே கிடந்தவளை தூக்கபோனான்.

ஆனால், அவளோ அந்த இடத்தை விட்டு அசராமல் தன்னை திட்டிவிட்டு அம்மாவை சுமந்து செல்லும் அண்ணனை தான் கண்ணீர் வழிய பார்த்தாள்.

அலமேலுவை ஹாஸ்பிட்டல் தூக்கிபோனதுமே அங்கிருந்த கூட்டம் ஆளுக்கொன்று பேசியவாறே கலைந்து சென்றது.

மீதி எஞ்சி இருந்தது ராமின் குடும்பம் மட்டுமே… பொன்னுதாயிக்கு அவள் பஞ்சாயத்தில் தன் மகனை விட்டுக்குடுக்காமல் தன் விருப்பத்தின் பேரில்தான் தாலி கட்டினான் என்று சொன்னதே அவளை மருமகளாக ஏத்துக்க போதுமானதாக இருந்தது. அந்த சந்தோசத்தை அனுபவிப்பதற்குள்ளாகவே தன் தோழி அலமேலு கை, கால் இழுத்த நிலையில் தரையில் கிடந்ததை பார்த்து அதிர்ந்து என்ன செய்வதென்றே தெரியாமல்  நின்றுகொண்டிருந்தவர் மருமகள் கதறுவது தாங்க முடியாமல் அவளின் அருகில் சென்று அமர்ந்து அவளை அணைத்துக்கொண்டார்.

லலிதாவிற்கு அவரின் அணைப்பே போதுமானதாக இருந்தது. தன் உடம்பில் உள்ள சக்தி எல்லாம் வடியும் வரையுலும் அவரின் மடியில் படுத்து அழுதுக்கொண்டிருந்தாள்.

Advertisement