Advertisement

அத்தியாயம்.12

அகிலாண்டம் மகனுடன் அண்ணன் வீட்டுக்கு வரும்போது இரவு ஆகிவிட்டது.

வாசலில் கயிற்றுகட்டிலில் அமர்ந்தவாறே மகன்களுடன் பேசிக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி தங்கையும், தங்கை மகனையும் பார்த்தவர், “வாம்மா… வா மாப்பிள்ளை…” இருவரையும் வரவேற்றார்.

முருகேசனும், தமிழரசனும் “வாங்கத்தை… வாங்க மச்சா”  என வரவேற்றனர்.

“ம்ம்… வரேண்ணே…” என்றவாறே அண்ணனின் அருகில் வந்து அமர்ந்துக்கொண்டார்.

அகிலாண்டத்தின் மகன் ராஜாவும் தனது மாமன் பசங்களுடன் சென்று அமர்ந்துக்கொண்டான்.

இரவுக்கு சமைத்துக்கொண்டிருந்த அலமேலுவும், லஷ்மியும் வெளியே பேச்சுக்குரல் கேக்கவும் வந்தனர்.

தனது கொழுந்தியாளை பார்த்ததும் அலமேலு “வா அகிலா… நல்லாருக்கியா?” என்றார்.

தன் கோபத்தையெல்லாம் அவர்களிடம் காட்டாமல் வந்தக் காரியம் நல்ல படியாக முடிய வேண்டும் என்பதால் “நல்லாருக்கேன் அண்ணி” என்றார்.

லஷ்மியும் அவர்களை வரவேற்றுவிட்டு சமையல் வேலையை பாக்க சென்றுவிட்டாள்.

அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் அகிலாண்டம் அண்ணன் அண்ணியை பார்த்து “அண்ணா வந்து உட்காருங்க உங்ககிட்ட பேசனும்… அண்ணி நீங்களும் தான்…” என்றார்.

“சொல்லும்மா… என்ன பேசனும்?”

“சொல்றேண்ணா… இன்னைக்கு ராஜா ஜாதகத்தை பாக்க போயிருந்தேன். இந்த வருசத்துல அவனுக்கு ஜோசியர் கண்ணாலம் பண்ணிட சொல்றார். இப்போ விட்டா இன்னும் நாலு வருசம் கழிச்சித்தான் குருபலன்  வருதாம்…”

“நல்ல விசயம் தானே கண்ணு உடனே மாப்பிள்ளைக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிடுவோம்.”

அண்ணனின் பதிலில் கோபம் கொண்டவர் “என்னங்ண்ணா விளையாடறிங்ளா? உங்களுக்கு என்ற ஆசை தெரியாதா? உன்ற மகதான் என்ற வீட்டுக்கு மருமகளா வரோணும்னு நா எத்தனை தடவை சாடைமாடையா சொல்லிட்டு இருக்கேன் நீங்க என்னடானா சாதாரணமா வேற பொண்ண பாக்கலாம்னு சொல்றிங்க?”

“அதுக்கில்லை கண்ணு பாப்பாவுக்கு பதினாறு வயசுதான் ஆகுது. சின்னபுள்ளைக்கு எப்படி அதுக்குள்ள கண்ணாலம் பண்ணி வைக்க முடியும்?”

“உனக்கு என்ற மகனுக்கு பொண்ணு குடுக்க விருப்பமில்லண்ணே அதான் வயசு இல்லனு காரணம் சொல்லிட்டு இருக்க?”

“முதல்ல கோபபடாம நா சொல்றத கேளு கண்ணு.”

“எதுக்குண்ணே கோபபடாம கேக்கணும்? நீங்க மறந்துட்டிங்ளா என்ன? எனக்கு உன்ற மக வயசுலதான் கண்ணாலம் பண்ணி குடுத்திங்க? அப்போ தெரியலையா நா சின்ன புள்ளைனு? உன்ற மகளுக்குன்ன உடனே வேணாம்ங்றிங்க… ஏ என்ற மகனுக்கு என்ன குறைச்சல் சொத்து இல்லையா? வீடு இல்லையா? உன்ற மகளை ஏம் பையனுக்கு குடுக்கமாட்டேனா இப்பவே தெளிவா சொல்லிடுங்க  இன்னையோட நம்ம உறவ முறிச்சிக்கலாம்ண்ணா…” என்ற அகிலாண்டத்தின் பிடிவாதத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்துபோயிவிட்டனர்.

அங்கு ஓரத்தில் நின்று தன் அத்தை பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.

ராஜா தான் தன் தாயை அடக்கினான். “அம்மா எதுக்கு இப்போ இப்படி கத்தற… எதுவா இருந்தாலும் மெல்ல பேசு… மாமாவுக்கு விருப்பமிருந்தா குடுக்கட்டும் இல்லைனா வேண்டாம் நீ கட்டாயப்படுத்தாத” என்றான்.

ராஜா பாக்க முரடனா இருந்தாலும் மனதளவில் நல்லவன்தான் தந்தை இல்லாததால் சிறுவயதிலே படிக்க போகாமல் தன் அம்மாவுக்கு துணையாக வயலில் இறங்கி ஏர்பிடித்தவன்.. அவனின் கடுமையான உழைப்பே அவனை முரடனாக காட்டியது ஆறடி உயரத்தில் அய்யனார் சிலையைபோல இருப்பான். சிறுவயதில் அவனை கண்டால் லலிதாவுக்கு பயம்தான்., பின்னர் அவனின் அணுகுமுறை அவளை சகஜமாக அவனிடம் பேச வைத்தது அவனுக்கும் லலிதா மேல் காதலெல்லாம் கிடையாது தன் மாமன் மகள் என்ற பாசம் மட்டுமே… சிறுவயதில் அவளை எப்படி பார்த்தானோ அதேபோல் இன்றும். ஆனாலும் தன் தாயின் பிடிவாதத்திற்காக அமைதி காக்கின்றான்.

தங்கையின் பிடிவாதம் சுந்தரமூர்த்தியை அசைத்து பார்த்தது. சிறுவயதிலே கணவனை இழந்து கஷ்டபட்டவள்.., தன்னிடம் இதுவரைலும் எதையும் விருப்ப பட்டு கேக்காதவள்.., இன்று மகன் விசயத்தில் பிடிவாதமாக கேக்கவும் என்ன செய்வதென புரியாமல் திகைத்து நின்றவர் “நா யோசிச்சு காலைல பதில சொல்றேன் கண்ணு…” என்றார்.

அண்ணன் யோசிக்கறேன் என்று சொன்னதுமே கோபத்தை விட்டுவிட்டார். சுந்தரமூர்த்தி முடியாது என்றால் அப்போதே சொல்லிவிடுவார் யோசிக்குறேன் என்றால் அது கண்டிப்பாக தனக்கு நல்ல பதில்தான் கிடைக்கும் என்பதை புரிந்துக்கொண்டவர் நிம்மதியாக விடியலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

எல்லாரும் தூங்கசென்றதும் அலமேலு தனது கணவனை தேடி கொள்ளை புறம் வந்தவர் அங்கு துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து வானத்தை வெறித்துக்கொண்டிருந்தவரை பார்த்ததும் “மூர்த்தி இங்க என்ன பண்றிங்க?” என கேட்டுக்கொண்டே வந்தார்.

அலமேலு கணவனை பேர் சொல்லி அழைப்பது தங்கள் இருவரின் தனிமையில் மட்டுமே… மற்ற நேரங்களில் மாமா என்றுதான் அழைப்பார்.

மனைவின் குரல் கேக்கவும் திரும்பி பார்த்தவர் தன் அருகில் நின்றிருந்த மனையாளின் கையை பிடித்து இழுத்து தான் அமர்ந்திருந்த கல்லிலே அமரவைத்தவர் அவளின் கையை பிடித்துக்கொண்டார்.

“இன்னும் அகிலா பேசுனதையே நினச்சிட்டு இருக்கிங்ளா?” 

“ம்ம்… காலைல என்ன பதில் சொல்றதுனு தெரியாம குழப்பத்துல இருக்கேன் அலமு…”

“ஏ மூர்த்தி உங்களுக்கு ராஜாவை புடிக்கலையா?”

“நானெப்ப அலமு.., மருமகனை புடிக்கலைனு சொன்னேன்?”

“அப்பறமென்ன மூர்த்தி காலைல சரினு சொல்லிடுங்க… நம்ம பொண்ணுக்கு ராஜாவ விட ஒரு நல்ல பையன் கிடைக்கவே மாட்டான். உங்களுக்குதா தெரியும்ல லலிதா ரொம்ப பயந்த சுபாவம்னு அவளோட குணத்துக்கு ராஜாவா இருந்தா நல்லா பாத்துப்பான் நாமலும் பயமில்லாம இருக்கலாம்…”

“நீ முடிவே பண்ணிட்டியா அலமு? நம்ம பொண்ணு மனசுல வேற ஆராவது இருந்தா?”

“லலிதா நம்மல தவிர. வேற ஆருகிட்டையாவது பேசி பாத்துருக்கிங்ளா? அப்படி வேற ஒருத்தன புடிச்சிருந்தா இன்னேரத்துக்கு என்ற மக ஏங்கிட்ட சொல்லிருப்பாங்க? நம்மகிட்ட சொல்லாம எதையும் பண்ணமாட்டா… எதுக்கும் காத்தால ஒரு வார்த்தை லலிதாகிட்ட கேக்கறதா இருந்தாலும் கேட்டுக்கோங்க…”

மனைவி சொல்வதும் சரியென்று தான் தோன்றியது. ‘மகளின் குணத்துக்கு ராஜா பொருத்தமாக இருப்பான்…’ என நினைத்தவர் மனைவியின் தோளில் கைப்போட்டு அணைத்தவாறே, “உன்றகிட்ட பேசுனாவே போதும் எல்லா குழப்பத்துக்கும் தெளிவு கிடச்சுடுது அலமு…” காதலாக கூறினார்.

“கிடைக்கும்,கிடைக்கும் முதல்ல கைய எடுங்க மூர்த்தி ஆராவது வந்தா என்ன நினைப்பாங்க?”

“ஆரு என்ன நினச்சா எனக்கென்ன அலமு நா என்ற பொண்டாட்டி தோளில்தானே கை போட்ருக்கேன்.…” 

“வயசுதா ஆகிடுச்சே தவிர கொஞ்சம் கூட வெவஸ்தையே கிடையாது… இப்போத்தா இளமை ஊஞ்சலாடுதுனு நெனப்பு…” என முறுக்கிக்கொண்டு கணவனின் கையை எடுத்துவிட்டு எழுந்தார். ஆனால், உள்ளுக்குள் கணவனின் செயலை ரசிக்கவே செய்தார். 

மனைவி எழுந்து கொள்ளவும் திரும்பவும் அவளின் கையை பிடித்து இழுத்து அமரவைத்து தன் கையணைப்பிற்குள் கொண்டுவந்தவர் “காதலிக்கறதுக்கு வயசு ஏது அலமு… தோல் சுருங்கி கூன் விழுந்து, நினைவு மங்கி உயிர் உடலை விட்டு பிரியும் வரையிலும் நா உன்ற மேல வச்சிருக்க காதல் துளியும் குறையாது அலமு…” 

அலமேலு கணவனின்  அன்பினில்  உருகி கரைந்தவாறே விருப்பத்துடனே கணவனின் கைசிறைக்குள் சிக்கிக்கொண்டார்.

பொழுது விடிந்ததிலிருந்தே அண்ணனின்  முடிவிற்காக அவர் வரவை எதிர்பார்த்து தவிக்க ஆரம்பித்தார் அகிலாண்டம்.

எப்போதும் போல வெள்ளனவே எழுந்து வயலுக்கு சென்றிருந்த மூர்த்தி காலை சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்தவர் தங்கையின் தவிப்பை பார்த்து மனதிற்குள்  புன்னகைத்துக்கொண்டார்.

அண்ணன் தோட்டத்திலிருந்து வந்து சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த அகிலாண்டம் பேச ஆரம்பித்தார்.

“என்ன முடிவெடுத்து வச்சிருக்கிங்கண்ணா?” 

“சொல்றேன் எல்லாரும் வந்துரட்டும்மா…” 

வேலைகளை முடித்துவிட்டு எல்லாரும் வந்ததும் மூர்த்தி மகளை பார்த்து “கண்ணு இங்க வாடாம்மா…” என்றழைத்தார்.

மனதில் பயத்துடனே தந்தையின் அருகில் வந்தவள் “சொல்லுங்கப்பா…” என்றாள்.

மகளின்  பயத்தை உணர்ந்தவர் மகளை தன் அருகில் கட்டிலில் அமரவைத்து அவளின் கையை பிடித்து அழுத்தி அவளின் பயத்தை போக்கியவர் “ராஜாவை உனக்கு புடிச்சிருக்கா கண்ணு? உனக்கு புடிச்சிருந்தா  சரினு சொல்லு கண்ணு… உனக்கு புடிக்கலைனாலும் அப்பாகிட்ட பயப்படாம சொல்லணும்… அப்பா கோபமெல்லாம் படமாட்டேன் சரியா கண்ணு…”

தலையை குனிந்திருந்தவள் தந்தையின் வார்த்தையில் பயம் நீங்கியவளாய் நிமிர்ந்து பார்த்தவள் எதிரில் அவளை கோபத்துடன் முறைத்து பார்த்துக்கொண்டிருந்த அத்தையை பார்த்ததும் குறைந்த பயம் மீண்டும் மனதில் வந்து அமர்ந்துக்கொண்டது.

“என்னங்ண்ணா சின்னபுள்ளைகிட்டப்போய் இதலொம் கேட்டுட்டு இருக்கிங்க… அவளுக்கு என்ன தெரியும்? நாம பாத்து எது செஞ்சாலும் அவ நல்லதுக்குதானே?”

“நாம நல்லதுதான் செய்யறோம்னு நம்ம ஆசைய புள்ளைங்க மேல திணிக்க எனக்கு விருப்பமில்லை கண்ணு… என்ற மகளுக்கு  புடிச்சிருந்தா மட்டும்தான் நா இதபத்தி மேல பேசுவேன்” தங்கையின் வாயை அடைத்துவிட்டார்.

நேத்து ராத்திரியே அகிலாண்டம் லலிதாவை இதற்கு சம்மதிக்க வேண்டும்மென்று மிரட்டி தான் வைத்திருந்தார். இருந்தாலும்  மனதில் பயம் வர ஆரம்பித்துவிட்டது… எங்க லலிதா தன்னோட மகனை வேண்டாம்னு சொல்லிடுவாளோனு?” 

“சொல்லுடா கண்ணு… உனக்கு புடிச்சிருக்கா? ராஜவ கட்டிக்குரியா?”

லலிதாவுக்கு பயம் எங்கு தான் வேண்டாமென்று சொன்னால் அத்தை சொன்னதை போல செய்துவிடுவாறோ என்று… 

அகிலாண்டம் அந்த அளவுக்கு அவளை மிரட்டி வைத்திருந்தார்.ஏற்கனவே எல்லாத்துக்கும் பயப்படுபவள் நேத்து அத்தை, ‘நீ என்ற மகனை கட்டிக்கலைனா நா விஷம் குடிச்சிட்டு செத்துப்போயிருவேன்… நா செத்துட்டா உன்ற அப்பன் நிம்மதியா இருப்பானு நினைக்கறையா? இதெல்லாம் நடக்கக்கூடாதுனா நாளைக்கு உன்ற அப்பன் கேக்கறப்ப  சரினு சொல்ற” என மிரட்டி வைத்திருந்தார். லலிதாவுக்கு அத்தையின் பிடிவாதம் தெரிந்ததால் பதில் சொல்லாமல் கண்கலங்க தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தாள்.

முருகேசன் “குட்டிமா உனக்கு புடிக்கலைனா வேண்டாம்னு சொல்லிடுடா அப்பா எதும் சொல்லமாட்டாங்க…” என்றான்.

அவள் அதுக்கும் பதில் சொல்லாமலே இருக்கவும் அகிலாண்டம் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்.

“அண்ணா அவளுக்கு என்ற மகனை புடிச்சிருக்கு அதான் அத எப்படி சொல்றதுனு தயங்கிட்டு வெக்கத்துல உட்கார்ந்துருக்கா… ” அண்ணனிடம் கூறியவர் மருமகளை பார்த்து, “வெக்கபடாம சொல்லுடா கண்ணு நா இருக்கேன்ல…” அவளை மறைமுகமாக மிரட்ட ஆரம்பித்தார்.

எல்லோருக்கும் லலிதா குணம் தெரிந்ததினால் அகிலாண்டம் சொல்வதை உண்மையென்று தான் நம்பினர். புன்னகையுடனே அவளைதான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ராஜா மட்டும் தன் தாயையும் மாமன் மகளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மனதில் எதோ தப்பா இருக்கு என்று சொல்லிக்கொண்டே இருந்தது. ஆனால், அது என்னவென்று தெரியாமல் இருவரையும் பார்த்து கொண்டிருந்தான்.

அலமேலுவும் “லதா கண்ணு பதில் சொல்லுடா எல்லாரும் உன்னோட பதிலுக்காகதானே காத்துகிட்டு இருக்காங்க?” என்றார்.

எல்லாரும் கேக்கவும் எந்த பக்கம் தலையை ஆட்டுவதென்று தெரியாமல் எல்லா பக்கமும் ஆட்டியவள் அதே வேகத்துடன் அங்கிருந்து நழுவி வீட்டில் பின்பக்கம் இருந்த மாட்டுக்கொட்டகைக்கு சென்றுவிட்டாள். அவளுக்கு இப்போது தனிமை தேவையாக இருந்தது.

அகிலாண்டமும்,ராஜாவையும் தவிர மற்றவர்களெல்லாம் அவள் எழுந்து போவதை வெக்கத்தில் எல்லாரையும் பார்க்க கூச்சப்பட்டு போகிறாளேன்று தவறாக புரிந்துக்கொண்டனர். 

அகிலாண்டத்துக்கு அவள் தலையாட்டியதே போதுமானதாக இருந்தது.தான் நினைத்தது நடக்கப்போற சந்தோசத்தில் இருந்தார்.

மூர்த்திக்கும்,அலமேலுவுக்கும் மகள் சம்மதம் சொன்னதில் சந்தோசம். இருவரும் கண்களாலையே தங்களுடைய சந்தோசத்தை பரிமாறிக்கொண்டனர். உடனே கண்ணால வேலைகளை பார்க்க மகனிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

ராஜாவிற்கு அவளின் தலையாட்டளே  இந்த கண்ணாலத்தில் அவளுக்கு சம்மதமில்லை என்பதை புரியவைத்து விட்டது. தன் தாயை முறைத்து பார்த்தவன் அவரின் அருகில் நெருங்கி நின்றவன் அம்மாவின் காதில் மட்டும் கேட்டுகுமாறு “ராத்திரி பாப்புகிட்ட என்ன சொல்லி மிரட்டுனிங்கம்மா?” என்றான்.

“அம்மாவையே சந்தேகபடறியாடா…? அவளுக்கே உன்ன பிடிச்சிருக்கவும்தான் என்ற அண்ணன் கேட்டதும் சரினு சொல்லிட்டு போறா…”

தாயை நம்பாத பார்வை பார்த்தவன் லலிதாவிடம் பேசவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டான். இப்போது அதற்காக சூழ்நிலை இல்லாததால் அமைதியாக மாமன் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தான்.

அகிலாண்டம் மகனின் நம்பாத பார்வையை பார்த்ததுமே புரிந்துகொண்டார். மகன் அண்ணன் மகள்கிட்ட கண்டிப்பாக பேசுவானென்று…

ஏற்கனவே மகனை கெஞ்சிதான் சம்மதிக்க வைத்திருந்தார் அகிலாண்டம். ‘இன்னும் அவ காதலிக்கறது தெரிந்தால் இவனே அவங்க ரெண்டுபேருக்கும் கண்ணாலம் பண்ணி வச்சிட்டுதான் ஓய்வான்’ என மகனை பற்றி தெளிவாக புரிந்துவைத்திருந்தவர்

அதற்கு விடக்கூடாது என்பதால்  பேசிமுடித்ததும்  “சரிண்ணா நாங்க வூட்டுக்கு போறோம்…” என்றவர் மகனை இழுத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

Advertisement