Advertisement

அத்தியாயம்.11

மருத்துவமனை விட்டு பைக்கில் சென்ற ராமின் மனநிலை திக்குத் தெரியாத காட்டில் தொலைந்ததை போல் தான் இருந்தது.  அடுத்து என்ன? என்கிறதை யோசிக்கக் கூட தோன்றாமல் எங்கு செல்கிறோம் என்ற நினைவே இல்லாமலும் சுயம் மறந்து பயணிக்க ஆரம்பித்தார்.

அவரையறியாமலே அவரின் பைக் வந்து நின்ற இடம் தோட்டத்தில் உள்ள அவர்களின்  பழைய ஓட்டு வீடு., பத்து வருடங்கள் முன்புவரை அவர்கள் வாழ்ந்த வீடு பைக் வாசலில் வந்து நின்றதும் தான் சுற்றுப்புறத்தை உணர்ந்தார்.

பொழுது இறங்கவும் வயலுக்கு தண்ணீர் பாயிச்சிவிட்டு மோட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு செல்ல கிளம்பிய ராமின் தோட்டத்தை பார்த்துக்கொள்ள இருக்கும் பண்ணையாள் கோவிந்தன் அவரை பார்த்ததும் அவரிடம் வந்தான்.

கோவிந்தனை பார்த்ததும் தன்மனநிலையை அவனிடம் காட்டிக் கொள்ள விரும்பாமல் இயல்பு போலவே பேசி அவனை அனுப்பியவர் வீட்டிற்குள் நுழைந்தார்.

வலுவுக்குள் புதுவீடு கட்டி அங்கு குடிப்போனதும் இந்த வீட்டினை பழையச் சாமான்களும்  தேங்காய் கொட்டி வைக்கவும், வயலில் விளையும் வெள்ளாமை அறுடை முடிந்த பிறகு காயவைத்த பொருள் , உரம் மூட்டை, மருந்தடிக்கும் மிசின் என அத்தனையும் அங்குதான் போட்டு வைத்திருந்தனர். 

வீட்டிற்குள் வந்தவர் அவரின் அறைக்கு சென்றார். அந்த அறை மட்டும் சுத்தமாக இருந்து. அவருக்கு மன நிம்மதி தேவையென்றால் அடிக்கடி இங்குதான் வருவார். தன்னவளுடன் மகிழ்வாக வாழ்ந்த அறை அல்லவா… அதனாலேயே அவருக்கு அந்த அறை பொக்கிஷம்.  அதனாலையே அந்த அறையை ஆள்காரன் தினமும் ஒருமுறை சுத்தம்பண்ணி வைத்துவிடுவான். அங்கு வந்தால் தூங்குவதற்காக என்று ஒரே ஒரு கயிற்று கட்டில் மட்டுமே கிடந்தது.

அறைக்குள் வந்தவர் கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டார். அவரின் நினைவில் மனைவி மட்டுமே…

“நினைவுகள் தந்த தாக்கத்தில் அவரையறியாமலே கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது. பழைய நினைவுகளில் ஒருவித வலியுடன் மூழ்கிப்போனார்.

 பல வருடங்களுக்கு முன்பு…

பொன்னுதாயிக்கும், ராசப்பனுக்கும் முதல் பெண் குழந்தை கோதை பிறந்து ஐந்து வருடங்கள் கழித்து மகன் பிறக்கவும் பெற்றோர்க்கு அளவில்லா மகிழ்ச்சி.. தங்கள்  பாசத்தையும் மகளை விட மகனுக்கே அதிகமாக காட்டினர். தங்கள் சொத்தை ஆளப் பிறந்தவன் அல்லவா அதனாலேயே மகளை விட மகனையே அதிகம் கொண்டாடினார் ராசப்பன்.

ராசப்பனுக்கு எல்லாரையும் விட தானே பெரியாள் என்கிற கர்வம் கொஞ்சம் அதிகம். யாரையும் துளியும் மதிக்கமாட்டார். அவர் சொன்னதை தான் மற்றவர்கள் கேக்க வேண்டும் செய்ய வேண்டும். அதை மீறினால் அவர்கள் அவருடைய ஜென்ம விரோதி… முன்கோபமும், ஆணவ குணமும் அதிகம். ஆனால், மனைவி மகன், மகள் என வரும்பொழுது அவர்களின் சந்தோசத்திற்காக அத்தனையையும் விட்டு குடுத்துவிடுவார். பலா பழத்தை போன்றவர் வெளியே கரடு முரடாக தெரிந்தாலும் உள்ளுக்குள் இனிமையானவர்.

ராமகிருஷ்ணன் அமைதியானவன் அதே சமயம் அழுத்தக்காரனும் கூட… தந்தை சொல் தட்டாதவன் ஒரு விசயத்தை தவிர… வசதி இருந்தாலும் தன் உழைப்பில் முன்னேற வேண்டும் என்ற கொள்கை உடையவன். அன்புக்கும், பாசத்துக்கும் எதையும் விட்டுக்குடுப்பவன்., ஒருத்தரின் மேல் அன்பு வைத்துவிட்டால் அவரே வெறுத்தாலும் அவனின் இறுதி மூச்சுவரை அவரின் மேல் வைத்த அன்பை துளியும் குறைத்துக்கொள்ளாதவன்…  +2 முடித்ததும் லாரிக்கு கிளினராக சென்றவன் இப்போது லாரி டிரைவர் ஆக சென்றுக்கொண்டிருந்தான். 

அவன் படிப்பு முடிந்ததும் தந்தையிடம் “நா லாரிக்கு போறேன்ப்பா” என்றதும்,

 ராசப்பன்  “லாரி வாங்க எம்புட்டு பணம் வேணும்னு சொல்லுகண்ணு உடனே ரெடிபண்ணி தரேன்” என்றுதான் கேட்டார். 

“ஒரு தொழில்ல இறங்கும்போது அதோட அடிமுதல் ஆழம்வரை வரை தெரிஞ்சிருக்கோணும்ப்பா… அதுக்கு நா வேற ஒருத்தவங்ககிட்ட வேலைக்கு போனாத்தான் என்னால கத்துக்கமுடியும். நல்லா கத்துக்கிட்டு உங்ககிட்ட வரேன்ப்பா அப்போ தொழில் பண்ண பணம் குடுங்க…” அவனின் வார்த்தை ராசப்பனை மெய்சிலிர்க்க செய்தது. 

மகன் இன்னொருத்தரிடம் வேலைக்கு போவது பிடிக்கவில்லை என்றாலும் அவன் சொன்னது புடித்திருந்ததால் பச்சைக்கொடி காட்டிவிட்டார். 

அவனும் ஒரு வருடம் க்ளினராக போனவன் அடுத்த வருடமே லைசன்ஸ் வாங்கி லாரி ஓட்ட ஆரம்பித்தான். அதில் தந்தைக்கு அம்புட்டு பெருமை…

ராம் தன் அக்கா  இரண்டாவது முறை கருத்தரித்திருக்கவும் ஏழாவது மாதத்தில் சோறு ஆக்கிப்போடனும் என போனமுறை வந்தபோதே அம்மா சொல்லியிருந்ததால் அன்று இரவுதான் வீட்டிற்கு வந்தான். காலையில் நெருங்கிய  சொந்தபந்தங்களை அழைத்துச்சென்று கோதைக்கு வளையல் போட்டு வீட்டிற்கு கூட்டிவந்தனர். 

அக்காவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதும் அவன் சென்று நின்ற இடம் அவன் படித்த பள்ளியின் முன்புதான். அந்த பள்ளி இருபாலர்கள் படிக்கும் அரசினர் மேல்நிலைப்பள்ளி.

பள்ளி விடும் நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பே வந்துவிட்டவன் பள்ளியின் முன் இருந்த பெட்டிக்கடையின் முன் தன் டீவிஎஸ் பிப்டியை நிறுத்தி அதில் ஒரு காலை தரையிலும் ஒருகாலை வண்டியிலும் வைத்தவாறே அமர்ந்து பள்ளிக்கூடத்தைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

பள்ளி விடவும் மாணவர்கலெல்லாம் வெளிவர ஆரம்பித்தனர் அதில் பள்ளி சீருடையான தாவணிப்பாவடையில் வெள்ளைக்கலர் ரிப்பன் வைத்து பின்னி கட்டிருந்த ரெட்டை சடையில் ஒன்று முன்னாலும் மற்றொன்னு பின்பக்கமும் போட்டுக்கொண்டு அன்று மலர்ந்த ரோஜா மலரைப்போல், முகத்தில் விரிந்த புன்னகையுடன் தோழிகளிடம் பேசிக்கொண்டே  தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராம். 

தோழிகளுடன் பேசிக்கொண்டே வந்தவள் தன்னை யாரோ பார்ப்பதைப்போல் தோன்றவும் திரும்பி பார்த்தவளின் விழிகளில் அவனை பார்த்ததும் முகம் பூவாய் விரிய அதே மகிழ்ச்சியுடன் “நீங்க போங்கடி நா அப்பறமா வரேன்” என தோழிகளிடம் கூறினாள்.

அவள் பார்வை போன திசையை பார்த்த தோழிகள் “ஓஓஓ… மாமனை பாத்ததும்தான் முகத்துல பல்ப் எரியுதா? சரி சரி காதலர்க்கிடையில கரடி மாதிரி நாங்க எதுக்கு?” என்று அவளை கலாய்த்துவிட்டு சென்றனர்.

அவர்கள் சென்றதும் ராம் வண்டியை தள்ளிக்கொண்டே அவளிடம் வந்தவன் “லதாமா எப்படிடா இருக்க?” குரலில் அத்தனை மென்மை கலந்த காதலுடன் கேட்டான்.

“ம்ம்… நல்லாருக்கேன் மாமா நீங்க எப்போ வண்டியிலிருந்து வந்திங்க?” வார்த்தைக்கு வலிக்குமோ என்பதை போல அத்தனை மெதுவாக பேசினாள்.

“நேத்து ராத்திரி தான்டா வந்தேன் … காலைல அக்காவுக்கு சோறாக்கிப்போட்டு கூட்டிவரப்போனதால உன்ன பாக்க வரமுடியலை…”

“நல்லபடியா எல்லாம் முடிஞ்சதுங்ளா மாமா? அண்ணி எப்படி இருக்காங்க…?”

“அக்கா நல்லாருக்காடா…”

அதற்கு மேல் என்ன பேசவது என்று தெரியாத அவளும்… அவளின் அருகாமையை ராசித்தவாறே அவனும்.., அந்த சாலையில் தங்களது வாகனங்களை தள்ளிக்கொண்டே மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

அவர்களின் மூன்று வருடக்காதலில் அதிகபட்சம் அவள் அவனிடம் பேசிய வார்த்தைகள் மிக மிக குறைவு… ஆனால், ராமிற்கு அவளை அம்புட்டு பிடிக்கும் அவள்தான் எல்லாமே என்கிற நிலையில் இருந்தான்.., அவளை தன் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் இப்படி பல கனவுகளுடன் அவளுடனான காதலை ஆராதித்து கொண்டிருக்கிறான்.

லலிதா அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவளின் அழகுக்கு இன்னும் அழகு சேர்ப்பது அவளின் அமைதியும் வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்பதைப்போல அத்தனை மென்மையான குரலும்தான்.

ராம்க்கு எதனால் அவளை பிடித்ததென்று இதுவரைலும் தெரியவில்லை… தனது அத்தையின் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்றித்திரிந்த சிறு வயது குட்டிப்பாப்பாவாக இருந்தபோதே அவனுக்கு அவளை பிடிக்கும். அந்த பிடித்தமும் அவனையறியாமலே  காதலாக மாறியது. முதன்முதலில் தன்னுடைய காதலை அவன் உணர்ந்தது அவர்கள் ஊர் நோம்பியின் போதுதான். 

லலிதா பெரியமனுசியாகி மூன்று மாதம் கழித்து நோம்பி அன்றுதான் பார்த்தான்., அதற்கு முன்பு வரை குழந்தையாக தெரிந்தவள் அன்று வளர்ந்து சேலை உடுத்தி குமரியாக தன் மச்சினனின் கையை பிடித்துக்கொண்டு தரைக்கு வலிக்குமோ என்பதைப்போல சேலையை லேசாக தூக்கிபிடித்தவாறே மெதுவாக நடந்து வந்துக்கொண்டிருந்தாள்.

என்னதான் வளர்ந்து பெரிய பெண்ணாக நின்றாலும் அவள் வீட்டாட்களின் கையை பிடித்துக்கொண்டு வரும் அவளின் சிறுவயது பழக்கம் அவளை விட்டு விலகவே இல்லை.

அன்றுதான் அவளின் அழகில் விழுந்தான். இதேபோல அவள் தன்கையை கோர்த்துக்கொண்டு தன்னில் சரிபாதியாக வருவதைபோல மனதில் நினைத்து பார்த்தவனின் இதயம் சிறகில்லாமல் பறந்தது. 

நோம்பி முடிந்து அவள் பள்ளி சென்றபோது பாதி தடத்திலையே அவளை வழிமறித்து தன் காதலை சொன்னதும் மிரண்டுப்போய் அழுதுகொண்டு வீட்டிற்கு வந்ததும் காய்ச்சலில் விழுந்தவள் ஒரு வாரம் எழுந்திருக்கவே இல்லை… அந்த அளவுக்கு பயந்துபோய் விட்டாள்., அவளுக்கு காய்ச்சல் வந்தது தெரிந்ததுமே தன்னால்தான் என புரிந்தது அன்றே முடிவெடுத்துவிட்டான். முதலில் அவளின் பயத்தை போக்கவேண்டுமென்று அதற்கு அவன் எடுத்த வழிமுறை அவன் சிரமப்படாமலே அவளின் மனதில் அமர்ந்துவிட்டான்.

அதற்கு முன்புவரை அவன் அம்மாவுடன் வலுவுக்குள் வரும்போது அத்தையை பார்த்தால் அவனுடைய அம்மா பேசும்போது அவனும் ஓரிரு வார்த்தை பேசுவான்.. அம்மாவுடன் இல்லாமல் தனியாக பார்த்தால் லேசாக சிரித்துவிட்டு விலகி செல்வான்., தன்னவளை கரம்பிடிப்பதற்காக தன் அத்தையை தேடிப்போய் பேச ஆரம்பித்தான் அவருக்கும் தன் அண்ணன் தன்னை ஒதுக்கி வைத்துவிட்டாலும் அண்ணன் மகனாவது பேசுகிறானே என்ற சந்தோசம் அதை வீட்டிலும் பெருமையாக சொல்ல ஆரம்பித்தார். அதுவே லலிதா மனதில் அவன் மீது நம்பிக்கையை வரவைத்தது. தான் மாமாவை கல்யாணம் பண்ணிக்கொண்டால் அம்மா சந்தோசப்படுவார் என நம்ப ஆரம்பித்தாள்.  ஒருநாள் அவனை தனியாக பார்த்ததும் அவளே பயத்தை விட்டு அவனிடம் சென்று “என்ன கண்ணாலம் பண்ணிக்குறீங்ளா மாமா?” என்று கேள்வியாக தனது காதலை தெரிவித்துவிட்டாள்.

அதன்பிறகு அவர்களின் காதல் மெல்ல மெல்ல வளர்ந்து இன்று மாமா இல்லையென்றால் அவளால் வாழவே முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டாள் அந்தளவுக்கு தன் மாமனின் மேல் பித்தாக மாறிவிட்டாள்.  

இரண்டு காதல் பறவைகளும் தங்களையும் சுற்றுப்புறத்தையும் மறந்து அவர்கள் உலகில் மெய்மறந்து வந்துக்கொண்டிருந்ததை  அந்த வழியாக ஒரு வேலையாக வந்த லலிதாவின் அத்தை அகிலாண்டம் பார்த்து விட்டார்.

தனது அண்ணன் மகளை தன் அண்ணியின் அண்ணன் மகனுடன் பார்த்ததும் அவரின் நெஞ்சு கோபத்தில் பற்றி எரிய ஆரம்பித்தது. எதோ ஒன்று தன்னைவிட்டு போவதைபோல உணர்ந்தார்.

எல்லா பெண்களையும் போல அவருக்கும் பிறந்தவீட்டில் தான் மட்டுமே முன்னிலை வைக்கவேண்டும். தன் அண்ணன் தான் சொல்வதை மட்டுமே கேக்கவேண்டும் என்ற எண்ணம் வுடையவர். அதற்கு தகுந்தாற் போல் அவரின் கணவனும் மகன் கைகுழுந்தையாக இருக்கும்போதே பாம்பு கடித்து இறந்துபோகவும் இனி தன் அண்ணன் மட்டுமே தங்களுக்கு பாதுகாப்பு என நம்ப ஆரம்பித்துவிட்டார். 

எவ்வளவுதான் சொத்து சுகம் இருந்தாலும் ஆண்துணை இல்லாத வீடென்றால் அந்த பெண்ணை மற்ற ஆண்கள் வக்கிரமாகத்தானே பார்க்கின்றனர். அவருக்கு பக்கபலமாக அவளுடைய அண்ணன் இருக்கிறான் என தெரிந்ததும் வக்கிரம் பிடித்த ஓநாய்கள் ஓடி ஒளிந்துக்கொண்டன.

தன் அண்ணன் கூட இருக்கிறான் என்ற பலமே அவரை தன் கணவன் வீட்டில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தனியாக கணவன் விட்டுச்சென்ற சொத்தை காப்பாத்த ஆரம்பித்தார்., சுந்தரமூர்த்தி தன்னுடன் வர சொல்லியும் கணவனுடன் வாழ்ந்த வீட்டை விட்டு போகாமல் அங்கையே இருந்து அண்ணனின் துணையுடன் தங்களது நிலத்தை பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.

எப்போதும் தன் அண்ணனுடைய துணைவேண்டுமென்றால் அவருடைய மகள் தன்வீட்டு மருமகளாக வரவேண்டும் என்ற ஆசையை மனதில் வைத்து அதை அடிக்கடி தன் அண்ணனிடம் சொல்லவும் ஆரம்பித்துவிட்டார். 

இன்று அண்ணன் மகளை அந்த பையனுடன் சேர்த்துப் பார்த்ததும் தனது ஆசை நிராசையாக போய்விடும் என்பதை உணர்ந்தவர் கோபத்தை கட்டுபடுத்திக்கொண்டு இருவரையும் கோபம் கொப்பளிக்கும் விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தவர் ஒரு முடிவு எடுத்தவராக நேராக வீட்டிற்கு சென்று மகனை அழைத்துக்கொண்டு தன் அண்ணன் வீட்டுக்கு கிளம்பிவிட்டார்.

அகிலாண்டத்தின் முடிவு எத்தனை பேரை காவு வாங்கப்போகிறது என்பதை அறியாமல் தன் அண்ணன் வீட்டை நோக்கிச்சென்றார்.

Advertisement