Advertisement

அத்தியாயம்.10

“இனியாவது மாமாவும் ரகுவும் நிம்மதியா இருக்கட்டும்ப்பா… என்னால அவங்களுக்கு வேற எந்த சந்தோசத்தையும்தான் குடுக்க முடியலை இதையாவது குடுக்கனும்னு நினைக்கறேன்ப்பா… என்ன உங்கக்கூட கூட்டிட்டு போயிடறிங்களா?”

இவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த லஷ்மி  லலிதாவின் முன்னால் வந்து நின்றவர் ஓங்கி அவள் கன்னத்தில் தன் ஐவிரல் தடம் பதியுமளவுக்கு ஓர் அறை விட்டார்.

அதில் அனைவரும் அதிர்ச்சியுற்று நின்றிருந்தபோது முருகேசனும், தமிழிரசனும் மட்டும் தன் கூடப்பிறந்தவள் அடிவாங்குவது பொறுக்கமுடியாமல்  “ஏய் லஷ்மி…”, 

“அண்ணி என்ன பண்றிங்க…” இருவரும் கத்திவிட்டனர்.

கணவன் மற்றும் கொழுந்தனின் கத்தலில் திரும்பி அவர்களை பார்த்த  லஷ்மியின் விழிகளில் அத்தனை கோபம் தெரிந்தது…

வெளியே நின்றிருந்த ஷர்மியும், ரகுவும் உள்ளே அடிவிழுந்த சத்தம் கேட்டு ஒரு நொடி அதிர்ந்துவிட்டனர். அதன்பிறகு முருகேசன், மற்றும் தமிழரசனின் கத்தல் கேட்டதும் ஆருக்கு விழுந்த அடி என புரிந்துவிட்டது. 

ரகு கோபமாக உள்ளே செல்லப்போகவும் அவனை தடுத்தவள் “எங்க போற மாமா?” என்றாள்.

“ஏய்… கைய விடு… அவங்க ஆரு என்ற அம்மாவ அடிக்கறதுக்கு? கேக்க ஆள் இல்லைனு நினச்சிட்டாங்ளா?” 

அவளிடம் எரிந்து விழவும் “ஓஓ இப்போதா அவங்க உங்க அம்மானு தெரிஞ்சதா மாமா?” என்றாள்.

அந்த வார்த்தை அவனை குற்ற உணர்வில் குறுகுறுக்க வைத்துவிட்டது. அவனின் முகம் கலங்கவும்,

 “நா உங்கள வருத்தப்பட வைக்கனும்னு சொல்லல மாமா? உங்க கோபத்த குறைக்கறதுக்காக மட்டும்தான் சொன்னேன்… கொஞ்சநேரம் அமைதியா இங்கேயே நில்லுங்க… உங்க அப்பா குடுத்துருக்க வேண்டியது ரொம்ப தாமதமா லச்சுமா குடுத்துருக்கு… இனிதா ஆட்டமே சூடுபிடிக்கபோகுது நீங்க வேடிக்கை மட்டும் பாருங்க மாமா…”

ஷர்மி கூறியதை போல்தான் உள்ளே நடந்துக் கொண்டிருந்தது.

இருவரையும் முறைத்து பார்த்த லஷ்மி “மூச்… கொஞ்ச நேரத்துக்கு  உங்க பாசத்தெல்லாம் மூட்டைகட்டி வச்சிட்டு வேடிக்க மட்டும் பாருங்க எதாவது பேசுனிங்க புருசன், கொழுந்தன்னுக்கூட பாக்கமாட்டேன்… புள்ள வளர்த்தி வச்சிருக்க லட்சனத்துக்கு உங்களுக்கு கோபமெல்லாம் வருதோ?” புருசனிடம், கொழுந்தனிடமும் ஒரு வாங்கு வாங்கிவிட்டு லலிதாவிடம் திரும்பினார்.

லஷ்மி அடித்த அடியில் கன்னத்தில் கைவைத்தவாறே திகைத்துப்போய் லலிதா தன் அண்ணியை பார்த்தார்.

அறைவிழுந்ததில் இவ்வளவு நேரம் நிக்காமல் வழிந்த கண்ணீர்க்கூட நின்று விட்டது.

“என்ன சொன்ன திரும்ப சொல்லு டி? சாகனுமா? அத அப்பவே பண்ணி தொலச்சிருக்க வேண்டியதுதானே டீ?”

“அண்ணி…”

“அண்ணினு சொன்ன உன்ன கொன்றுவேன்… அண்ணியாம் அண்ணி ஏ இந்த அண்ணி அன்னைக்கு தெரியலையா? நா உன்றகிட்ட அப்படியா பழகுனேன் என்றக்கூடப் பொறந்தவ மாதிரிதானே டி பழகுனேன்…” அவரின் குரலில் ஆதங்கம் மட்டுமே…

“பெத்தவங்கள மறந்துபோட்டு காதலிச்சவனோட  ஓடிப்போனயே சரி அவனோடவாவது ஒழுங்கா வாழ்ந்தியா? அம்மா தன்னாலதான் செத்துப்போயிட்டாங்கனு குற்ற உணர்ச்சியாம்? ஏன் அது ஓடிப்போறப்ப தெரியலையா? நம்மமேல உசுரையே வச்சிருக்க அம்மா, அப்பா நாம ஓடிப்போனா என்னாவாங்கனு? காதலிக்கறப்ப எல்லாம் பெத்தவங்க தெரியலைதானே… அப்பறமென்ன அப்படியே கண்ணாலத்துக்கு அப்பறமும் இருந்து தொலைச்சிருக்க வேண்டியதுதானே?”

 “நீ உன்ற புருசன்கூட வாழாம இருந்தா செத்துப்போன உன்ற அம்மா திரும்பி வந்துருவாங்கனு ஆருடி உனக்கு சொன்னது? இப்போ நீ வாழாம இருக்கைய உன்ற அம்மா வந்துட்டாங்ளா? பெத்த பையன் உன்ன அம்மானு கூப்டல உன்ற மூஞ்சில முழிக்க கூட பிடிக்கலைனு சொல்றன்னா  நீ என்ன வாழ்க்கை வாழ்ந்துருக்கேன்னு உனக்கு தெரியுதாடி? பெத்தவங்களுக்கும் உண்மையா இல்லை? கூடப்பொறந்தவனுங்களுக்கும் உண்மையா இல்லை? கட்டுனவனுக்கும் உண்மையா இல்லை? பெத்த பையனுக்கும் உண்மையா இல்லை? இப்படி எதுவுமே இல்லைனா நீயெல்லாம் எதுக்கு உசுரோட இருக்க?” 

“என்ன மன்னுச்சுடுங் அண்ணி”

“எதாவது பேசுன அறைஞ்சி பல்லகில்ல எல்லாம் தட்டிடுவேன். எதுக்குடி மன்னிப்பு தெரியாம செஞ்சதுக்குதான் மன்னிப்பு… தெரிஞ்சே செய்யறத்துக்கெல்லாம் மன்னிப்பு கிடையாது…”

“ஒழுங்கா புருசன்கூட வாழ்ந்தா வாழு… இல்லைனா உன்ற புருசன் வூட்லையே செத்துரு… பொறந்த வீட்டுல இருந்து  கோடிதுணி கொண்டுவந்து போட்டு அன்னையோட இப்படி ஒருத்தி எங்க வீட்ல பொறக்கவே இல்லைனு மொத்தமா தலைமுழுகிடறோம்…”

லஷ்மி பேசி முடிக்கும்போது அந்த அறையில் ஊசி விழுந்தாக்கூட கேட்குமளவுக்கு அமைதியாக இருந்தது. எல்லாரோட மனதிலும் லஷ்மி பேசியது சரியென்றேதான் தோன்றியது.

இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த லலிதா லஷ்மி பேசி முடித்ததும் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒரு முடிவுடன் எழுந்தவள் தன் மாமியாரை பார்த்து “அத்தை மாமாவை வர சொல்லுங்க நாம நம்ம வூட்டுக்கு போலாம்” என்றாள்.

லலிதாவிடம் இருந்து வந்த இந்த பதிலை கேட்டு  அங்கிருந்த அனைவருமே சந்தோசபட்டனர். அதிலும் பொன்னுதாயி மருமகளின் பதிலை கேட்டு மகிழ்ச்சியில்  “அடிஆத்தே என்ற மகனும், மருமகளும் சேர்ந்துட மாட்டாங்ளானு கோவில் கோவிலா ஏறி இறங்குனதுக்கு, இந்த மஹராசி ரூபத்துல வந்து என்ற வேண்டுதலை நிறைவேத்திக் குடுத்துபோட்டா என்ற குலசாமி…” கையெடுத்து கும்பிட்டவாறே லஷ்மியை பார்த்து “நீயும் உன்ற புருசனும் ஆயுசுக்கும் இதேமாதிரி ஒன்னா சந்தோசமா வாழ்விங்க ஆத்தா…” என மனதார வாழ்த்தினார்.

எதிர்பாராமல் ஒரு பெரியமனுசியின் வாயிலிருந்து இப்படி ஒரு வாழ்த்தை கேட்டதும் கணவனும் மனைவியும் நெகிழ்ந்துவிட்டனர். லஷ்மியும், முருகேசனும் அவரின் காலில் விழுந்து கும்பிட்டு எழுந்தனர்.

இவ்வளவு நேரம் இருந்த நிலை மாறி அதற்கு முற்றிலும் மாறான நிலைக்கு வந்தது அந்த இடம்.

ரகு தன் தாயின் வார்த்தை கேட்டு மனதில் மகிழ்ச்சியை உணர்ந்தான். அந்த சந்தோசத்தில் இருக்கும்போது ஷர்மி இதுதான் வாயுப்பு என்று நினைத்தவள் அவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

அவன் இருந்த மனநிலையில் எதையும் யோசிக்காமல் அவள் இழுத்த இழுப்பிற்கு அவளுடனே உள்ளே  சென்றான்.

உள்ளே வந்தவள் பொன்னுதாயின் முன்னால் வந்து நின்று அவரிடம் “நானும் அவங்களோட பொண்ணுதான் அதனால எனக்கும் ஆசிர்வாதம் பண்ணு அம்மாச்சி… நானும் என்ற புருசனோட ஆயுசுக்கும் சந்தோசமா வாழோணும்னு” என்றவாறே ரகுவை இழுத்துக்கொண்டு அவரின் காலில் விழுந்து விட்டாள்.

அவன் இருந்த மனநிலையில் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றவன் அவள் அப்பத்தாவின் காலில் விழவும் முதலில் புரியாமல் அவளுடன் தானும் அப்பத்தாவின் காலை தொடப்போனவன் பின்புதான் அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்தது.

அதற்குள்ளாக அவன் சுதாரித்துவிட்டதை புரிந்தவள் “என்ன அம்மாச்சி எம்புட்டு நேரம்தா நாங்க குனிஞ்சிட்டே இருக்கறது வெரசா ஆசிர்வாதம் பண்ணுங்க…” என்றாள்.

அவரும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு “நல்லாருக்கோணும் கண்ணுங்களா…” என ஆசி வழங்கினார்.

அகிலேஷ் ‘செம்ம டைமிங்டா ஷர்மி கலக்கிட்டப்போ…’ மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

பேத்தியின் செயலில் சுந்தரமூர்த்தி புன்னகைத்தவாறே தன்னவளை நினைத்து “அலமு நம்ம பேத்தி அச்சு அசல் உருவத்துல மட்டுமில்லை குணம், செயல் எல்லாமே உன்ன மாதிரிதான் இருக்கா…’ மனதிற்குள் தன் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்பத்தா ஆசிர்வாதம் பண்ணியதும் எழுந்தவன் அவளை முறைத்துப் பார்த்தான். அவனால் அது மட்டுமே முடிந்தது. இப்படி பண்ணுவாள் என அவன் எதிர்பாக்கவே இல்லை… அதிலும் தானும் அவளுடன் சேர்ந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதை நம்பவே முடியவில்லை… ஆனாலும் மனதிற்குள் அவனையறியாமலே ஒரு நிம்மதி வந்தது.

 ‘நா என்ன பண்ணிட்டு இருக்கேன் அவளை அப்பாக்கிட்ட வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ எல்லார் முன்னாடியும் அவக்கூட சேர்ந்து கால்ல விழறேன் ஆன அவ மேல கோபம் வரலையே? எனக்கு என்னாச்சு?” மனதிற்குள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தான்.

சுந்தரமூர்த்தி,  அகிலேஷ், பொன்னுதாயி தவிர மற்ற ஐவரும் இன்னும் அதிர்ச்சியில்தான் இருந்தனர்.

முதலில் அதிர்ச்சிலிருந்து வெளிவந்த லஷ்மி “ஏய் ஷர்மி என்னடி இதெல்லாம்?” என்றார்.

“ம்ம்… பாத்தா தெரியலை ஆசிர்வாதம் வாங்குனேன் லச்சுமா…”

“ஏங்கிட்ட அறை வாங்கப்போற ஷர்மி… நா என்ன கேட்டுட்டு இருக்கேன் நீ என்னடி பதில் சொல்லிட்டு இருக்க? ஆசிர்வாதம் வாங்கறதுக்கு முன்னாடி என்ன சொன்னேனு கேட்டேன்?”

“ஓஓஓ… நீ அத கேக்கறையா லச்சுமா… நீயும் அப்பாவும் அம்மாச்சிகிட்ட ஆசிர்வாதம் வாங்குனிங்ளா? அதான் நானும் என்ற புருசன்கூட அதாவது புருசனா வரப்போறவன்கூட சேர்ந்து ஆசிர்வாதம் வாங்குனேன் லச்சுமா…” என சாதாரணமாக கூறினாள்.

மகளின் பதிலில் திகைத்த முருகேசன் “என்னடாம்மா சொல்ற? மாப்பிள்ளையும் நீயும் காதலிக்கறிங்ளா?” என்றார்

தந்தையின் அருகில் நெருங்கி அவரின் சட்டையின் பட்டனை திருகியவாறே “ம்ம்… ஆமாப்பா ஆறு வருசமா லவ் பண்றோம்ப்பா…” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள்.

அவள் கூறியதை கேட்டு மற்றவர்கள் அதிர்ந்தார்களோ இல்லையோ ரகு அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டான். ‘அடிப்பாவி நா எப்போடி உன்ன லவ் பண்ணேன்… அதுவும் ஆறு வருசமா? பொய்யக்கூட உண்மை மாதிரி சொல்றாளே… அவக்கூட சேர்ந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு இப்போ போய் நா இல்லைனு சொன்னா ஒருத்தரும் நம்பமாட்டாங்ளே…’ மனதிற்குள்ளே அலறினான். 

“ஏன்டாம்மா அப்பாகிட்ட இம்புட்டு நாளா சொல்லாம இருந்த?”

“அதுப்பா… நா சொல்றேன்தான்ப்பா சொன்னேன் மாமா தான் நீ சொன்னினா நம்மள சேர விடமாட்டாங்க… நீ படிச்சி முடி… ஊர கூட்டி பஞ்சாயத்து வச்சி சீர் செஞ்சமாதிரி உனக்கு மாப்பிள்ளை பாக்கறப்ப எனக்குதா முதல் உரிமைனு பிரச்சனை பண்ணா உங்க வீட்டாளுங்களே நமக்கு கண்ணாலம் பண்ணிவச்சிடுவாங்கனு சொன்னார்ப்பா…”

ரகு அவளின் நடிப்பை பார்த்து அசந்துப்போய் நின்றான். வாயை மட்டும்தான் பிளக்கவில்லை மற்றபடி அப்படித்தான் நின்றிருந்தான்.

அவளின் பேச்சை கேட்ட அவனின் அப்பத்தா  “ஆமா முருகேசா உன்ற மக சொல்றது நெசம்தான் எனக்கே இன்னைக்கு மத்தியானம்தா என்ற மகன் சொன்னான்… நானே ஒரு நல்ல நாளா பாத்து உன்ற வூட்டுக்கு வரலாம்னு இருந்தேன் அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சு…”

அவரின் பதிலில் ஷர்மி மனதிற்குள் குத்தாட்டம் போட்டாள் என்றால் ரகு அதிர்ந்துப்போய் அங்கிருந்த பெட்டிலே அமர்ந்துவிட்டான் பாவம் அவனும்தான் ஒரேநாளில் எத்தனை அதிர்ச்சியை தாங்குவான்.

அவன் அமரவும் முருகேசன் “என்னாச்சு மாப்பிள்ளை” என்றார்.

“ஒன்னுமில்லை…  உங்க பொண்ணு இன்னும் நிறைய சொல்லுவா  கேளுங்க மாமா…” அவளை பத்தி இன்னும் சரியாக தெரியாமல் அவள் பொய் சொன்ன கடுப்பில் அவரிடம் சொல்லிவிட்டான்.

“எத மாமா சொல்ல சொல்றிங்க? நாம லவ் பண்றப்ப காலேஜ் கட்டடுச்சிட்டு ஐஸ்கிரிம் சாப்டதையா? இல்லை நாம ரெண்டுபேரும் லீவு நாட்கள்ல ப்ரண்டோட வெளிய போறேனு சொல்லிட்டு பைக்ல ஒன்னா ஊர் சுத்துனதையா? இல்லை காலேஜ் டூர்க்கு போறேனு சொல்லிட்டு கொடைக்கானல் போய் மூனு நாள் நாம ரெண்டுபேரும் ஒன்…” அவள் என்ன சொல்லபோகிறாள் என்பதை புரிந்தவன் ஒரே எட்டில் அவளை அனுகி அவளின் வாயில் கையை வைத்து மூடினான்…

‘மாமாவிடம் நிறைய சொல்லுவா கேளுங்கனு சொல்லும்போது அவன் தன்னையே இதில் கோர்த்துவிடுவாள்’ என எதிர்பாக்கவே இல்லை. அவள் பேச ஆரம்பித்ததும்தான் புரிந்தது தானே தன் வாயால் கெட்டது… அதிலும் அவள் கடைசியாக சொன்னதை கேட்டதும் ஆடிதான் போய்விட்டான்., ஒரே எட்டில் அவளிடம் சென்று அவளை பேசவிடாமல் வாயை அடைத்துவிட்டான்…

Advertisement