Advertisement

அத்தியாயம்.8

மருத்துவமனை வந்த மொத்த குடும்பமும் அங்கு கண்ட காட்சியின் அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே ஒருசில நிமிடங்கள் பிடித்தது.

முதலில் அதிர்சியிருந்து மீண்டது ஷர்மி தான்.., பக்கத்தில் நின்றிருந்த தாத்தாவை பார்த்தவள்,  “இது உனக்கு முன்னமே தெரியுமா மூர்த்தி? அதனாலதான் உன்ற மருமகனை நா கோபமா திட்டும்போதெல்லாம் ஒருத்தர பத்தி முழுசா தெரிஞ்சிக்காம மத்தவங்க சொல்றத வச்சி அவங்க இப்படித்தானு முடிவு பண்ணக்கூடாதுனு சொன்னியா மூர்த்தி…?” என்று கேட்டாள்.

அவர் ‘ஆமாம்’ என தலையாட்டியவாறே மகனை அணைத்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்த மருமகனை தான் பார்த்துக்கொண்டிருந்தார். அவரும் அந்த வலியை அனுபவித்தவர், அனுபவித்துக்கொண்டிருப்பவரும் அல்லவா? 

ராம் தன்னவளை ஹாஸ்பிட்டல் கொண்டுவந்து சேர்த்துவிட்டு அங்கிருந்த   சேரில் இடிந்துப்போய் அமர்ந்து தலையின் பாரத்தை கைகளில் தாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தவர் மகன் வரும் வரையிலும் அதே நிலையில் தான் இருந்தார். மருத்துவர் வந்து “லலிதாவிற்கு எந்த ஆபத்துமில்லை சாப்பிடாமல் இருந்ததால் வந்த மயக்கம்” என கூறிய பிறகும் அந்த இடத்தை விட்டு அசைந்தாரில்லை… அவரின் சிந்தையில் நினைவை இழந்து மயங்கி கிடந்தவளின் முகம் மட்டுமே இருந்தது.., அவரின் மனம் உள்ளுக்குள் கதறிக்கொண்டிருந்தது.

மருத்துவமனை வந்த ரகு தன் அப்பா அமர்ந்திருந்த கோலம் கண்டு மனதளவில் உடைந்துவிட்டான். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கம்பீரமாக வலம் வந்தவர்… ஆனால், இன்று உடைந்துபோய் ஆருமற்றவரைப்போல் நிராதரவான தோற்றத்துடன் அமர்ந்தவரை கண்டதும் மனம் வலிக்க அவரின் அருகில் சென்றவன் தோளில் கை வைத்தவாறே “அப்பா…” என்றழைத்தான்.

அப்போதுதான் லலிதாவின் பிறந்த வீட்டு குடும்பமும் வந்தது.., உள்ளுக்குள் கதறிக்கொண்டிருந்தவரின் செவிகளில் மகனின் குரல் கேட்டதும் அடுத்த நொடி அமர்ந்திருந்தவாறே மகனை கட்டிக்கொண்டு அவனின் வயிற்றிலே முகம்புதைத்துக்கொண்டு கதற ஆரம்பித்துவிட்டார்.

ஆண்மகன் அழமாட்டார்கள் என்று ஆரு சொன்னது., அவர்களும் அழுவார்கள் ஒருசிலர் அழுகையை வெளியே தன்னையும் மீறி காட்டிவிடுவார்கள் பலர் உள்ளுக்குள் கதறினாலும் வெளியே தைரியமாக இருப்பதைப்போல் காட்டிக்கொள்வர் இதில் முதல் வகையை சேர்ந்தவர்தான் ராமகிருஷ்ணன், மனைவி, மகன் என வரும்போது தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து மனதளவில் துவண்டு விடுகிறார்.

 இவ்வளவு நேரம் அடக்கிவைத்திருந்த அழுகை அவரின் இன்னொரு உயிரான மகனின் குரலை கேட்டதும் மொத்தமாக உடைந்துப்போய் தான்  ஆண்மகன் என்பதையும் மறந்து கதறி அழ ஆரம்பித்தார்.., அவரின் அழுகை அங்கிருந்த மொத்தபேரையும் சிலநிமிடங்கள் செயலிழக்க செய்துவிட்டது.

அப்பாவின் அழுகை ரகுவை கலங்க வைத்தாலும் அதனை அவரிடம் காட்டி இன்னும் அவரை உடைந்துபோக வைக்க மனமில்லாமல் தந்தைக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தான்.

“என்னப்பா இது சின்ன குழந்தை மாதிரி அழறீங்க? உங்க பொண்டாட்டி அவ்வளவு சீக்கரம் நம்மள விட்டு போகமாட்டாங்க… நா வரப்ப டாக்டரை பாத்துட்டுதான் வரேன் உங்க பொண்டாட்டி ஒழுங்கா சாப்பிடாம, மாத்திரை எடுத்துக்காம பிரஷர் அதிகமானதால மயங்கி விழுந்துட்டாங்க டாக்டர் ட்ரீட்மென்ட் குடுத்துருக்காங்க கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க…”

பொன்னுதாயிக்கும் மகன் அழுவது தாங்கமுடியவில்லை… “டேய் ராமு அதான்  டாக்டரே அவளுக்கு ஒன்னுமில்லைனு சொல்லிட்டாங்கள… உன்ற பொண்டாட்டிக்கு ஒன்னும் ஆகாதுடா…” மகனின் முதுகை தட்டிக்குடுத்தவாறே கூறினார்.

அங்கு நடப்பதை நம்பமுடியாமல் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி குடும்பம் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்ததும் ராமகிருஷ்ணனின் அருகில் வந்தனர்.

தங்கள் அருகில் ஆட்கள் வரும் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்த ரகுவின் விழிகள் கோபத்தினால் சிவந்தது.

தன் அணைப்பிலிருந்தவரை விலக்கி விட்டவன் கோபத்தில் “இங்க எதுக்கு வந்திங்க? உங்க பொண்ணு செத்துட்டாங்ளா இல்லையானு பாக்கறதுக்கா? இன்னும் சாகல… ஆனா, அவங்க சாகறாங்ளோ இல்லையோ என்ற அப்பாவ சாகடிச்சுடுவாங்க…” தன் எதிரில் நிற்பவர்களை வார்த்தை எனும் தீயால் சுட்டு பொசுக்கினான்.

மகன் கோபமாக பேசவும்தான் சுயநினைவுக்கு வந்து எதிரில் நிற்பவர்களை நிமிர்ந்து பார்த்தார்.

 மகனின் விழிகள் அவர்களை பார்த்ததும் கோபத்தில் சிவந்ததென்றால் அவருடைய விழிகளோ சந்தோசத்தில் கண்ணீரில் நனைந்தது. ‘அவர்கள் வந்துவிட்டார்கள் என தெரிந்தாலே தன்னவளுக்கு இனி எதுவும் ஆகாது’ என்று முழுமையாக நம்பினார்.

கண்ணீரை துடைத்தவாறே எழுந்து நின்றவர் “அவன் எதோ கோபத்துல பேசறான்  தப்பா எடுத்துக்காதிங்க மாமா…” மாமனாரிடம் கூறியவர்,

“ரகு கண்ணா அவர் உன்ற தாத்தா அவர்கிட்ட அப்படிலாம் பேசாத கண்ணா உன்ற அம்மாவுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவா…”

“அவர் ஒன்னும் எனக்கு தாத்தா கிடையாதுப்பா முதல்ல அவங்கள போக சொல்லுங்க அவங்க மூஞ்சிய பாத்தாவே உடம்பெல்லாம் எரியுதுப்பா…”

“ப்ளீஸ்டா கண்ணா.. அப்பாவுக்காக…” அவர் கெஞ்சவும்,

அதில் இன்னும் கோபமானான் என்றால் அவனின் அப்பத்தாவின் பேச்சை கேட்டதும் ருத்ரமூர்த்தியாக மாறினான்…

“நீங்க வாங்கண்ணா அவன் கிடக்கறான் கூறுகெட்டவன் மருமகளுக்கு ஒன்னும் ஆகாது நீங்க கவலை படாதிங்க…” பொன்னுதாயி கூறியதை கேட்டதும்,

“உங்கள எல்லாம் திருத்தவே முடியாது… என்னமோ பண்ணித்தொலைங்க நா போறேன்…” என்றான்.

“எங்கடா போற…?” 

“ம்ம்… இந்த ஹாஸ்பிட்டலோட மொட்டமாடில இருந்து குதிக்கப்போறேன் அப்பத்தா…” வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அப்பத்தா அவனின் கோபத்தில் துளிக்கூட அஞ்சாதவராக “குதிக்கறதுக்கு முன்னாடி ஹாஸ்பிடலுக்கு பணத்த கட்டிட்டு போடா… நா வர அவசரத்துல பணம் கொண்டு வராம வந்துட்டேன்…”

சிறிது தூரம் சென்றவன் அவரின் பதிலில் நான்கே எட்டில் அவரை நெருங்கி நின்றவன் “இன்னொரு வார்த்தை எதாவது பேசுன உன்ன கொன்றுவேன் அப்பத்தா.. அப்பறம் நீ சொல்லிட்டே இருப்பியே என்ற  கண்ணாலத்த பாத்துபோட்டுதா உன்ற உசுரு போகோணும்னு… அது நடக்காமையே போயிடும் பாத்துக்க…”

“நா செத்தாலும் பேயா வந்தாவது உன்ற கண்ணாலத்த பண்ணி வச்சிட்டுதான்டா போவேன்…” அவரும் பதிலுக்கு பேரனை வம்பிழுத்தார்.

அப்பத்தா,பேரன் சண்டையினால் அங்கிருந்த அனைவருக்கும் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் குறைந்தது. லேசாக சிரித்தனர்.

அனைவரும் சிரிப்பதை பார்த்தவன் பின் தன் தந்தையை தான் பார்த்தான். அவரும் அவர்களுடன் சேர்ந்ததைப்போல் தோன்றவும் மனதில்  ‘தான் மட்டும் தனியாக இருப்பதை போல்’ உணர்ந்தான் அந்த நொடி மனதில் அடிவாங்கினான்.

எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றவன் ஹாஸ்பிட்டலின் முன்னால் இருந்த டீக்கடையில் போய் அமர்ந்துக்கொண்டான்.

வந்ததிலிருந்து அவனை பார்த்துக்கொண்டிருந்த ஷர்மி… அவனின் வாடிய முகத்தை பார்த்ததும் எதோ தோன்ற அவனின் பின்னாலையே சென்றவள் ரகு டீக்கடை பெஞ்சில் உட்காரவும் அவளும் அவனருகில் சென்று உரசிக்கொண்டு அமர்ந்தவாறே டீக்கடைகாரரிடம் “அண்ணா ரெண்டு டீ” என்றாள். 

எதோ சிந்தனையில் இருந்தவன் யாரோ தன் பக்கத்தில் உட்காரவும் திரும்பி பார்த்தவள் ஷர்மியை பார்த்ததும் “ஏய்… அறிவில்லை இப்ப எதுக்குடி இப்படி உரசிட்டு வந்து உட்கார தள்ளி உட்கார்ந்து தொலை டி” என்று கடிந்தான்.

“முடியாது மாமா…”

“ச்சே… எங்க போனாலும் எங்க உசுர எடுக்கறதுக்குனே குடும்பமே வருது…” முனகிக்கொண்டு அவளை விட்டு தள்ளி அமர்ந்தான்.

அவன் தள்ளி உட்கார்ந்ததும் அவளும் அவனை இன்னும் நெருங்கி உட்கார்ந்து அவனின் கைக்குள் தன்கையை நுழைத்து கட்டிக்கொண்டாள்.

அவளின் செய்கையில் கடுப்பானவன் “ஏன்டி நீ பொண்ணுதானே?…” சந்தேகமாக கேட்டான்.

“எனக்கும் அந்த டவுட்டுதான் மாமா…” அவள் சோகமாக கூறவும், தலையில் அடித்துக்கொண்டான். அதை தவிர இப்போதைக்கு அவனால் வேறு என்னத்தான் செய்யமுடியும்.?

“ஏன்டி உனக்கு இந்த வெக்கம், மானம், சூடு, சொரனை எதுவும் இருக்காதா? எம்புட்டு திட்டுனாலும் திரும்ப வந்து அட்டை மாதிரி ஒட்டிக்குற…”

“ஏ மாமா இந்த வெக்கம், மானம், சூடு, சொரனை இதல்லாம் எந்த கடையில கிடைக்கும்?”

அவன் முறைக்கவும் “எதுக்கு மாமா முறைக்குற நீதானே கேட்ட அதான் எல்லாத்துலையும் ஒவ்வொரு கிலோ வாங்கி வச்சிக்கலாம்னு பாக்கறேன்…”

“கொஞ்சம் கையவிட்டு தள்ளி உட்கார்ந்து தொலை டி… போறவன் வரவன் எல்லாம் நம்மள ஒரு மாதிரி பாக்கறான்”

“நீ தள்ளி போகமாட்டேனு சொல்லு மாமா நா கையவிடறேன் ஆனா தள்ளி எல்லாம் உட்கார மாட்டேன் மாமா…”

“சரி தள்ளிப்போகல போதுமா இப்போ கைய எடு டி…”

“அது…” 

டீ வரவும் அதனை வாங்கியவள் ஒன்றை அவனிடம் நீட்டினாள்.

டீவை வாங்காமல் அவளை முறைக்கவும் “என்ன அப்பறமா சைட் அடிச்சிக்கலாம் மாமா… முதல்ல டீயக்குடிங்க இல்லைனா டீ ஆறிப்போயிடும்…”

அப்பவும் அவன் பிடிவாதமாக டீயை வாங்காமல் அமர்ந்திருக்கவும் அவளே டீகப்பை அவனின் வாயின் அருகில் கொண்டு போனவாறே “நீ இப்போ வாங்கலைனா நானே குடிக்க வைப்பேன் மாமா… எப்படி வசதி…?”

“உன்ற இம்சை தாங்கல டி  குடிச்சி தொலைக்கறேன்…” என்றவன் அவளிடம் இருந்த டீ கப்பை வாங்கி (பிடிங்கி) கொண்டான்…

அவன் வாங்கிகொண்டதும் அவளும் தன்னுடையதை குடிக்க ஆரம்பித்தவாறே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்…

சிறிது நேரம் கழித்து மருத்துவமனையிலிருந்து  காலில் செருப்புக்கூட அணியாமல் எதையோ பறிக்குடுத்ததைபோல நடந்தவாறே ரோட்டுக்கு சென்றுக்கொண்டிருந்தவர் கண்ணில் படவும் பதட்டத்துடன் தன் அருகில் அமர்ந்திருந்தவனை உலுக்கியவாறே “மாமா… மாமா போறாங்க?” என்றாள்.

அவள் சொன்னது புரியாமல் “என்ன உளற டி நா எங்க போறேன்…” கேட்டான்.

“டேய் லூசு மாமா… என்ற மாமனார் அதாவது உன்ற அப்பா போறாருனு சொன்னேன்…”

  அவள் சொன்னது புரிந்ததும் திரும்பி பார்த்தவன் வண்டி வருவதைக்கூட உணராமல் ரோட்டை க்ராஸ் பண்ண போனவரை பார்த்ததும் அடுத்த நொடி அவரை நோக்கி ஓடிருந்தான்.

நல்லவேளை வண்டியில் வந்தவர் அவர் ரோட்டில் குறுக்கே வருப்போவதை உணர்ந்ததும் ப்ரேக்கை அழுத்தினார்.

அவர் வந்ந ஸ்பீடுக்கு ப்ரேக்கை அழுத்தவும் வண்டி ‘க்ரீச்சிட்டு’ ராமகிருஷ்ணன் அருகில் வந்து நின்றது.., வண்டி நின்றதும்தான் ரகுவும், வண்டி ஓட்டி வந்த வரும் இழுத்த மூச்சை விட்டனர்.

ரகு பின்னாலே ஓடி வந்த ஷர்மியும் எதுவும் ஆகவில்லை என்பதை உணர்ந்ததும் மூச்சுவாங்க நின்றவள் பின் ரகுவின் அருகில் வந்தாள்.

ஆனால், ராமகிருஷ்ணனோ அங்கு நடந்ததை துளிக்கூட உணராமல் மேலும் நடக்க ஆரம்பித்தார்.

அவர் திரும்பவும் நடக்கவும் எட்டி அப்பாவின் கையை பிடித்தவன் “என்னப்பா பண்றிங்க? ரோட்ல வண்டி வரதக்கூட பாக்காம நீங்கபாட்டுக்கு போறிங்க?”

மகனின் குரல் கேட்டதும்தான் சுயநினைவு வந்து சுற்றிலும் பார்த்தார்…

அங்கிருந்த அனைவரும் அவரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“சாரி கண்ணா எதோ நினைப்புல கவனிக்கல…”

“சரிவாங்க அங்க வந்து செத்த உட்காருங்கப்பா…” என்றவன் அவரின் கையை பிடித்து அழைத்து வந்து டீக்கைடை பெஞ்சிலே அமரவைத்தான்.

ஷர்மி தண்ணி வாங்கிட்டு வந்து அவரை குடிக்க வைத்தாள்.

அவர் கொஞ்சம் தெளிந்ததும் “என்னப்பா ஆச்சு? உங்க பொண்டாட்டிய விட்டு இங்க என்ன பண்றிங்க? கண் முழிச்சிட்டாங்ளா?”

மகன் கேட்டதும் தான் மனைவி தன் மாமனாரிடம் “அப்பா நம்ம வூட்டுக்கு என்ன கூட்டிட்டு போயிடறிங்ளா?” கண்ணீருடனே கேட்டது இப்போதும் காதில் ஒலித்தது…

“என்னப்பா நா கேட்டுட்டே இருக்கேன் நீங்க எதையோ பறி குடுத்த மாதிரி உட்கார்ந்துருக்கிங்க?”

“நா வூட்டுக்கு போறேன் கண்ணா நீ அம்மாவ கூட்டிட்டு வந்துடு…” 

“நா என்ன கேக்கறேன் நீங்க என்னப்பா சொல்றிங்க?” உங்க பொண்டாட்டி கண் முழிச்சிட்டாங்ளா?”

“ம்ம்.. முழிச்சிட்டா கண்ணா… நீ அம்மாவ கூட்டிட்டு வந்துடு நா போறேன்…” எங்கையோ பாத்தவாறே கூறியவர் எழுந்து நின்றார்.

“அப்பா என்ற மூஞ்சிய பாத்து பேசுங்க… உங்களுக்கு என்னாச்சு?”

அவர் பேசாமல் நிக்கவும் “அப்பா இப்போ சொல்ல போறிங்ளா இல்லையா?”

“உங்க அம்மா நம்ம வீட்டுக்கு வரமாட்டா கண்ணா…” என்றவரின் குரலில் இருந்தது என்ன? தோற்றுப்போன வலியா? விரக்தியா? வெறுமையா? இல்லை மூன்றும் சேர்ந்ததா?

“என்னப்பா உளறிங்க? நம்ம வூட்டுக்கு வராம எங்க போவாங்க?” என்று பேசிக்கொண்டே வந்தவனுக்கு அப்போதுதான் அம்மாவுடைய பிறந்த வூட்டு சொந்தம் வந்தது நினைவிற்கு வந்ததும் உடனே கோபம் தலைக்கேறியது.

“அப்பா நீங்க இங்கேயே இருங்க நா உடனே வந்துடறேன்…”

திரும்பி நடக்க போனவனின் கையை பிடித்து தடுத்தவர் “அவளுக்கு அதுதான் சந்தோசம்னா நாம அத தடுக்க வேண்டாம் கண்ணா…  நீ எதும் கோபமா பேசக்கூடாது எனக்காக…”அவர் கெஞ்சவும்,

“சரிப்பா நா எதும் பேசல நீங்க இங்கேயே இருங்க நா அப்பத்தாவ கூட்டிட்டு வரேன் மூனுபேரும் வூட்டுக்கு போயிடலாம்…”

“நா கொஞ்ச நேரம் தனியா இருக்கனும் கண்ணா பைக் சாவி மட்டும் குடு…”

“இந்த மனநிலமைல நீங்க எப்படிப்பா தனியா போவிங்க?”

“எனக்கு ஒன்னுமில்லை கண்ணா நா நல்லாத்தா இருக்கேன்…” அவர் வாய்தான் அந்த வார்த்தையை சொன்னதே தவிர மனசு அல்ல… 

அவரை முழுதாக புரிந்து வைத்திருக்கின்ற மகனுக்கு தெரியாதா இப்போ தன் தந்தையின் மனநிலை “அப்பா…” என்றவாறே அவரை கட்டிக்கொண்டான்.

அந்த அணைப்பு அவருக்கும் தேவையாக இருந்தது. சிறிது நேரம் மகனின் பிடியில் இருந்தவர் பின் அவனை விலக்கி நிறுத்திவிட்டு பைக் சாவியை வாங்கிக்கொண்டு சென்றார்.

இத்தனை நாள் கம்பீரமாக தெரிந்த மனிதர் இன்று ஒரே நாளில் தளர்ந்துவிட்டார்.

Advertisement