Advertisement

7

 

“நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சு தான் பேசறியா??”

 

“ஹ்ம்ம் புரிஞ்சு தான் பேசறேன்”

 

“அப்போ வேணாம்ன்னு ஏன் சொன்ன”

 

“அப்போ எனக்கு பயமா இருந்துச்சு”

 

“எதைப்பார்த்து”

 

“அவரோட வேலை”

 

“இப்போ மட்டும் பயமாயில்லையா”

 

“இருக்கு” என்று அவள் ஒளியாமல் சொல்ல திரும்பி அவள் முகம் பார்த்தான்.

 

“புரியலை…”

 

“இப்பவும் பயம் இருக்கு தான்…”


“உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு, முதல்ல பிடிச்சிருக்குன்னு பேச்சு வார்த்தை ஆரம்பிச்சீங்க. கொஞ்ச நாள் அவனுக்கு போன் பண்ணிகூட பேசிட்டு இருந்த, அப்புறம் நிச்சயம் நடக்கறதுக்கு முன்னாடி வேணாம்ன்னு சொல்லிட்டே, என்ன விளையாட்டு இது”

 

“பிடிச்சிருக்குன்னு சொன்னது உண்மை தான். வீட்டில அவங்க போட்டோ காட்டினாங்க சரின்னு சொன்னேன். அப்புறம் அவங்களை டிவில பார்த்தப்போ பயமாயிருந்துச்சு. வேலைக்கு போறவங்க எப்போ வீடு திரும்புவாங்கன்னு எதிர்ப்பார்க்கலாம். எப்படி திரும்புவாங்களோன்னு எதிர்பார்த்திட்டு இருக்க முடியுமா சொல்லுங்க”

 

“எப்படி திரும்புவாங்கன்னா??”

 

“என்னாகுமோ ஏதாகுமோன்னு தினம் தினம் பயந்திட்டே இருக்க முடியுமா நீங்களே சொல்லுங்க அண்ணா”


“அண்ணாவா!!”

 

“அவரோட பிரண்ட் எனக்கு அண்ணா தானே…”

 

“அது சரி…”

 

“அந்த பயத்துல தான் இந்த கல்யாணம் வேணாம்ன்னு வீட்டில சொன்னேன்…”

 

“இப்போ மட்டும் என்னவாம். இப்பவும் அவன் அதே வேலையில தானே இருக்கான்…”

 

“இப்போ பிடிச்சிருக்கு”

 

“அதான் எப்படி??”

 

“மத்தவங்க உயிரையே அக்கறையா காப்பாத்துக்கறவங்களுக்கு அவங்க உயிரும் முக்கியம் தானே. அவங்க உயிரையும் பார்த்துப்பாங்க தானே” என்று அவள் கொடுத்த விளக்கத்தில் வாயடைத்து தான் போனான்.

 

‘இவ்வளவு தெளிவா யோசிக்கறா… ஒரு நைட்ல என்ன நடந்திருக்கும்’ என்று ஓடியது சைலேஷுக்கு.

 

“சைலேஷ் அண்ணா ஏன் எதுவுமே பேச மாட்டேங்குறீங்க??”

 

“இல்லை எனக்கு புரியலை… ஒரு நைட்ல இதெல்லாம் எப்படி சாத்தியம்ன்னு, அப்படி என்ன நடந்துச்சுன்னு தான் எனக்கு புரியவே இல்லை??” என்றான்.

 

“அதை உங்ககிட்ட எப்படி சொல்ல முடியும்”

 

“ஏதே… அப்படி என்ன சொல்ல முடியாத அளவுக்கு நடந்துச்சு”

 

“அஞ்சு நிமிஷமா பத்து நிமிஷமா ஒருத்தரோட போட்டோவை பார்த்தோ இல்லை நேர்ல பார்த்தோ இவர் நமக்கு செட் ஆவாருன்னு எப்படி முடிவு பண்றோம்… நானும் முதல்ல அப்படித்தான் முடிவு பண்ணேன்”

 

“அது உங்களுக்கே தெரியும். ஆனா ஒரு நைட் முழுக்க அவர்கூட இருந்திருக்கேன். கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரத்துக்கும் மேல அதுல அவரை புரிஞ்சுக்க முடியாதா என்னால”

 

“அப்படி என்ன புரிய வைச்சுட்டான்…”

 

“எனக்கு அவரை பிடிக்க வைச்சுட்டாரே”

 

“சத்தியமா என்னால முடியலைம்மா, முடியலை. வாயடைச்சு போயிட்டேன்ம்மா நீ சொன்னதை கேட்டு, ஆனாலும் ஒரு விஷயம் இடிக்குதே” என்று அவன் சொல்ல

“என்னன்னு சொல்லுங்க” என்றாள் அவள்.

 

“அவன் உயிரை பத்தி அக்கறை அவனுக்கு இருக்காதான்னு கேட்டல்ல”

 

“ஆமா…”

 

“அப்போ ஏன் அந்த கயிறு அறுந்ததும் நீ அப்படி பதட்டப்பட்டே, அவன் உயிர் மேல அவனுக்கு அக்கறை இருக்கும் தானே. அவன் வந்திடமாட்டானா என்ன”

 

“நீங்க கேட்கறது சரி தான் புத்திக்கு உரைக்கிற விஷயம் மனசுக்கும் தெரியணும்ல. மனசு பதறத்தானே செய்யும், நீங்க சொன்னீங்கல்ல அவர் பத்திரமா வந்திடுவாருன்னு. அந்த விஷயம் நேத்து நைட் எனக்குள்ள நான் யோசிச்சது தான். அதனால தான் நீங்க சொல்லவும் அமைதியாகிட்டேன்” என்று விளக்கினாள்.

 

அதற்குள் விதுரனும் கீழே இறங்கி வந்திருந்தான். கயிறு அறுந்து போனதால் அவன் முன்பே தயார் செய்து வைத்திருந்த வேறு கயிறை கட்டி ஒரு வழியாய் இறங்கியிருந்தான்.

 

இருவரும் பேசிக்கொண்டிருக்கவும் “அப்படி என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் நான் வர்றனா இல்லையான்னு கூட பார்க்காம” என்ற அவன் குரலில் தான் அவர்கள் அவனை திரும்பி பார்த்தனர்.

 

“இல்லை சும்மா பேசிட்டு இருந்தோம்” என்றாள் இதழினி.

 

அவன் அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை. “ஓகே சைலேஷ் கிளம்பலாமா??” என்று நண்பனை பார்த்து கேட்க அவனோ இவனை முறைத்து நின்றிருந்தான்.

 

விதுரனை தனியே தள்ளிச் சென்றவன் “ஏன்டா சொல்லலை இவ தான்னு”

 

“உனக்கு தெரிஞ்சிடுச்சா??”

 

“நீ ஏன் சொல்லலை??”

 

“என்னன்னு சொல்லணும் அவ என்ன எனக்கு உறவா அவளைப் பத்தி உன்கிட்ட சொல்லிட்டு இருக்க… பேசாம கிளம்பு வேலையை பார்ப்போம்” என்றவன் “அங்க என்ன நின்னுட்டு இருக்கீங்க வாங்க இங்க” என்று இதழினியை பார்த்து சொல்லவும் தர்ஷினியை தூக்கிக் கொண்டு வந்தாள்.

 

“என்னையே ஏன் பார்த்திட்டு இருக்கீங்க, வண்டியில ஏறுங்க… டேய் சைலேஷ் வண்டி எடுடா” என்றான். முதலில் குழந்தையை அவளின் தாயிடம் கொண்டு சேர்த்தனர். விதுரன் அவள் அன்னையை திட்டி ஆயிரம் அறிவுரை கூறி ஒருவழியாய் அங்கிருந்து கிளம்பினர். அடுத்து இதழினியின் அலுவலக நண்பர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அவளை கொண்டு வந்து சேர்த்தனர்.

 

வண்டியில் இருந்து இறங்கியவள் ஒன்றும் பேசாமல் விதுரனையே பார்த்திருந்தாள் இப்போதும். விதுரன் அதை உணர்ந்தாலும் கண்டுக்கொள்ளவில்லை. “சரி கிளம்புறோம்” என்று அவன் சொல்லும் வரையில் கூட பேசாமலே நின்றிருந்தாள்.

 

அவளின் நண்பர்கள் தான் அவனுக்கு நன்றியுரைத்தனர். அவன் வண்டியில் ஏறும் வரை பார்த்திருந்தவள் அடுத்து ஏறுவதற்கு நின்றிருந்த சைலேஷை பார்த்து “அண்ணா” என்றிருந்தாள்.

 

அவன் திரும்பி பார்க்க அருகே வருமாறு சைகை செய்ய ‘என்னை எதுக்கு கூப்பிடுறா’ என்று யோசித்துக் கொண்டே வந்தான்.

 

“உங்க நம்பர் கொடுங்க”

 

“எதுக்கு??”

 

“அவரைப்பத்தி பேசத்தான்…”

 

“என்னாது??”

 

“கொடுங்க”

 

அவன் போனை வெளியில் எடுத்தவன் “உன் நம்பர் கொடு நானே பண்றேன்” என்றான் புத்திசாலியாய்.

 

அவள் சட்டென்று அவன் போனை பறித்தவள் அதிலிருந்து அவள் எண்ணுக்கு அழைப்பு விடுத்துவிட்டு “நானே பண்ணிட்டேன் டயல்டு லிஸ்ட்ல முதல்ல இருக்கறது என்னோட நம்பர் தான் சேவ் பண்ணிக்கோங்க” என்றாள்விதுரனை பார்வையால் விழுங்கிக்கொண்டே!!

 

“எதுக்கு நீ என்கிட்டே பேசணும், இப்போவே சொல்லேன்”

 

“உங்களுக்கு டைம் ஆகலையா. கொஞ்சம் அங்க பாருங்க அவர் என்னை முறைக்கிறார் இதுக்கு மேல நீங்க இங்க நின்னா என்னை எரிச்சிடுவாரு உங்களையும் தான்” என்று சொல்ல சைலேஷ் நண்பனை திரும்பி பார்க்க அவள் சொல்வது போல அவன் இருவரையும் பார்வையாலே எரித்துக் கொண்டிருந்தான்.

 

“போங்க போங்க டைம் ஆகுது அவங்களை வேலை பார்க்க விடுங்க” என்று வேறு அவள் சொல்ல சைலேஷ் அவளை நன்றாக முறைத்து “நல்லா பண்றேம்மா நீ” என்றுவிட்டு நகர்ந்தான். வண்டியில் ஏறிய சைலேஷிடம் “என்னவாம்??” என்றான் விதுரன்.

 

“உன்னை பிடிச்சிருக்காம்”

 

“நினைச்சேன்”

 

“உனக்கு தெரியுமா?? எப்படிடா?? உன்கிட்டவே சொல்லிட்டாளா?? எப்போ சொன்னா??” என்று அவன் கேள்விகளாய் அடுக்கினான்.

 

“போதும்டா கொஞ்சம் மூச்சுவிடு. அவ என்கிட்ட எதுவும் சொல்லலை, காலையில இருந்தே அவ பார்வை சரியில்லை. அதான் ஒரு யூகம்… நீ அவகிட்ட சொல்ல வேண்டியது தானே இதெல்லாம் சும்மா அட்ராக்ஷன்னு”

 

“அப்படியா சொல்றே??”

 

“அப்படித்தான் அதெப்படி முதல்ல பிடிக்கும் அப்புறம் பிடிக்காது. மறுபடியும் பிடிக்கும் என்னைப் பார்த்தா எப்படி தெரியுது”

 

“நல்ல கேள்வி தான் அதுக்கு ஏதோ பதில் சொல்றாப்பா அவ…”

 

“என்ன சொன்னா??” என்று விதுரன் கேட்க சைலேஷ் அவள் சொன்னதை சொன்னான்.

 

“எனக்கென்னவோ இது வெறும் அட்ராக்ஷன் மாதிரி தெரியலை”

 

“உளறாத…”

 

“அவ உளறாம தான் பதில் சொன்னா… ஆமா எனக்கு ஒரு விஷயம் சொல்லேன், நேத்து ஒரே நைட்ல அப்படி என்னத்தான்டா செஞ்சே?? எனக்கு தெரியாம எதுவும் கசமுசா…” என்று ஆரம்பிக்க விதுரன் அடித்த அடியில் கப்பென்று வாயை மூடிக்கொண்டான்.

 

சிறிது நேரம் தான் அவன் பேசாமல் இருந்தது மீண்டும் ஆரம்பித்தான். “நிஜமாவே நேத்து ஒண்ணும் நடக்கலைல…”

 

“நீ செம அடி வாங்க போறேடா. அவ தான் லூசுன்னா உன்னையும் லூசாக்கி வைச்சுட்டா. கொஞ்ச நேரம் தானே அவகிட்ட பேசினே, அப்புறம் ஏன்??”

 

“எனக்கும் அதே டவுட்டு தான் மச்சி. நான் லூசாகிட்டேன்னே வைச்சுப்போம். நேத்து நைட் முழுக்க அவக்கூட தான் இருந்திருக்க, நீ எப்படி தெளிவா இருக்கே” என்றவனை வெட்டவா குத்தவா என்ற பார்வை பார்த்தான் மற்றவன்.

 

அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்துவிட பேச்சு பாதியிலேயே நின்றது. அடுத்தடுத்த வேலைகள் அவர்கள் நேரத்தை இழுத்துக்கொள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் மறந்து வேலையை பார்க்க ஆரம்பித்தனர் இருவரும். இடிபாடுகளில் சிக்கியிருந்த சிலர் மடிந்தும் சிலர் பலத்த காயத்தோடும் அவர்கள் குழுவினரால் மீட்கப்பட்டனர். வெகு சிலரே காயம் ஏதுமின்றி உயிர்தப்பியிருந்தனர்.

 

இதழினி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்த தொலைக்காட்சியில் அதை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். லோக்கல் கேபிள் சேனல் ஒன்று அங்கு நடப்பதையும் படம் பிடித்து ஒளிபரப்பு செய்துக் கொண்டிருந்தது.

 

அங்கிருந்த அனைவருமே இறங்கி வேலை செய்ததை பார்க்கும் போது சொல்லொணாத உணர்வு அவளை ஆட்க்கொண்டது.

 

இப்படி தானே எல்லையிலும் கூட நம் வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது நம்மை காக்க காவல் காக்கிறார்கள். என்ன தான் அவர்களுக்கு ஊதியம் என்று ஒன்று கிடைத்தாலும் தங்கள் உயிரையும் பணயம் வைக்கும் தைரியம் யாருக்கு வரும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

 

‘நாம பாட்டுக்கு ஜாலியா வீட்டுல உட்கார்ந்திட்டு அவங்களை குறை சொல்றதும், இல்லை பாராட்டி வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணுறதுமா நம்ம பொழுதை கழிச்சிருக்கோம்’ என்று அவள் மனசாட்சி அவளை குத்தியது.

 

முதல் நாள் இரவு அவன் பாதுகாப்பில் நிம்மதியாய் உறங்கியது ஞாபகம் வர அன்றைய இரவு அவன் நினைவில் அவள் நித்திரையை தொலைத்திருந்தாள்.

 

அவனுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் அவளை பாதுக்காப்பாக உணர வைத்திருந்தான் அவன். யூடியுப் ஆன் செய்து விதுரன் குழுவினரின் வீடியோக்களை தேடி தேடி பார்த்திருந்தாள்.

 

“ஹேய் இதழ் இன்னும் தூங்காம என்னடி பண்ணிட்டு இருக்கே??” என்றாள் அவள் தோழி மாதவி.

“தூக்கம் வரலை மாது. நீ தூங்கு…”

 

“ஏன் தூக்கம் வரலை??”

 

“அதெப்படி எனக்கு தெரியும்”

 

“நீ தானே தூக்கம் வரலைன்னு சொன்னே?? அப்போ உனக்கு தான் தெரிஞ்சிருக்கணும் ஏன் உனக்கு தூக்கம் வரலைன்னு…”

 

“ப்ச் அந்த பேச்சை விடு”

 

“நீ வீட்டுக்கு போன் பண்ணி பேசினியா??”

 

“ஹ்ம்ம் மகிழ்க்கு போன் பண்ணேன். எல்லாரும் ரொம்ப பயந்திருப்பாங்க போல, எல்லாரும் பேசினாங்க…”

 

“எங்க வீட்டிலையும் பயந்திட்டாங்க போல. நம்ம சுனில் சார்கிட்ட எல்லாரும் சொல்லித்தான் அவரு இந்த டீம்க்கு இன்பார்ம் பண்ணினாங்க போல…”

 

“ஓ!!”

 

“என்னடி சுவாரசியமே இல்லாம ஓன்னு சொல்ற… சுனில்க்கு தான் உன் மேல ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்குல அதான் மனுஷன் உடனே ஆக்சன் எடுத்திட்டார் போல” என்று அவள் சொல்ல தலையணையை தூக்கி அவள் மேல் வீசினாள் இதழ்.

 

“வாயை மூடு மாது. அவர் என்னைக்கு அப்படிச் சொன்னார். நீங்களே சும்மா இருக்கவரை உசுப்பி விடுறீங்க”

 

“நிஜமா தான் சொல்றேன் இதழ். உன்னைவிட்டு நாங்க மட்டும் தனியா கிளம்பிட்டோம்ன்னு அவ்வளவு திட்டு எங்க எல்லாருக்கும்”

 

“போதும் மாது இந்த பேச்சு எனக்கு பிடிக்கலை”

 

“வேற எந்த பேச்சு உனக்கும் பிடிக்கும் சொல்லு பேசிருவோம்”

 

“நட்ட நடுராத்திரியில என்ன பேச்சு இதெல்லாம் மாது. பேசாம படு…”

 

“நீ படுத்திருந்தா நான் ஏன் இந்த கேள்வியை கேட்கப் போறேன், நீ தூங்குடி முதல்ல”

 

“ஹ்ம்ம் தூங்கறேன்”

 

வெகுநேரம் கழித்து ஒருவழியாக உறங்கியவள் மறுநாள் காலையிலேயே சைலேஷுக்கு அழைத்துவிட்டாள்.

 

அவன் அப்போது தான் அறைக்கு வந்து உறங்க ஆரம்பித்திருந்தான். யாரென்று கூட பார்க்காமல் போனை அட்டென்ட் செய்திருந்தான்.

 

“ஹலோ அண்ணா காலை வணக்கம்”

 

சைலேஷோ யார் குரல் என்று புரிபடாமல் சட்டென்று எழுந்து அமர்ந்தான்.

 

“என்ன அண்ணா அதுக்குள்ளே மறந்திட்டீங்களா??” என்று அவள் சொல்லவும் தான் அவனின் இன்ஸ்டன்ட் தங்கை பற்றிய ஞாபகமே அவனுக்கு வந்தது.

 

“நீயா!!”

 

“நான் தான்… வேலை எல்லாம் முடிஞ்சதா உங்களுக்கு…”

 

“இப்போ தான் வந்து படுத்தோம்…”

 

“அச்சோ டிஸ்டர்ப் பண்ணிட்டனா சாரி அண்ணா நீங்க தூங்குங்க நானா அப்புறம் பேசறேன்”

“இல்லையில்ல என்னன்னு சொல்லும்மா”

 

“இல்லை பாதை எல்லாம் சரியாகிடுச்சா…”

 

“இதை கேட்கத்தான் கூப்பிட்டியா?? நீங்க தங்கியிருக்க  ஹோட்டல்ல கேட்டாலே இதை சொல்லியிருப்பாங்களே. அதெல்லாம் நேத்தே சரிப்பண்ணிட்டாங்க…”

 

“எனக்கு அந்த கெஸ்ட் ஹவுஸ் போகணும்”


“போங்க அதான் சொன்னேனே பாதை சரியாகிடுச்சுன்னு”

 

“அண்ணா…” என்றுவிட்டு நிறுத்தியவள் “நீங்க தூங்குங்க நான் அப்புறம் பேசறேன்” என்று வைத்துவிட அடுத்த சில நொடிகளில் அவனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.

 

“நீ என்ன சொல்ல வந்தியோ அதை முழுசா சொல்லு. சும்மா மென்னு முழுங்கிட்டு இருந்தா எனக்கு எப்படி புரியும்”

 

“இல்லைண்ணா நாம அப்புறம் கூட பேசிக்கலாம்”

 

“அட ஏன்மா தூங்கிட்டு இருந்தவனை போன் பண்ணி எழுப்பிவிட்டு என்னன்னு சொல்லாம மண்டை காயவிடுற”

 

“சரி சரி சொல்லிடறேன். எனக்கு அவரை பார்க்கணும் அவர்கிட்ட சொல்லிடலாம்ன்னு இருக்கேன். நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணணும்”

 

“என்னது நான் ஹெல்ப் பண்ணணுமா?? என்னம்மா விளையாடுறியா??”

 

“அண்ணா சீரியஸா தான் கேட்கறேன்”

Advertisement