Advertisement

6

 

“நான் ரெடி போகலாம்” என்றாள்.

 

“நிஜமா தான் சொல்றீங்களா??”

 

“நான் ஏன் விளையாட போறேன். எனக்கு வீட்டுக்கு போகணும், எங்கம்மாவை பார்க்கணும். அவங்ககிட்ட பேசி ரெண்டு நாளாச்சு” என்றவள் வெகு சீரியசாக பேசுவது தெரிந்தது.

 

“என் போன் இருந்து பேசுங்க” என்றவன் போனை அவளிடம் கொடுத்தான்.

 

“தேங்க்ஸ் நான் என் தங்கச்சிக்கிட்ட பேசிட்டு தரேன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டாள்.

 

“அம்மாகிட்ட தானே பேசணும்ன்னு சொன்னீங்க??”

 

“எங்கம்மா தான் என்கிட்ட சரியா பேசறது இல்லையே” என்றுவிட்டு போனுடன் வெளியில் சென்றவள் சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள்.

 

“தேங்க்ஸ் வீட்டில எல்லாரும் டிவி நியூஸ் பார்த்து ரொம்ப பயந்துட்டாங்களாம். எங்க ஆபீஸ்க்கு போன் பண்ணி விசாரிச்சு இருப்பாங்க போல…”

 

“சரி நாம கிளம்பலாம் தானே, என் திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டு வரவா…”


“எதுக்கு அவசரப்படுறீங்க, கொஞ்சம் பொறுமையா இருங்க… இப்போவே எல்லாம் நீங்க ஊருக்கு கிளம்ப முடியாது. ரோடு சரியாக இன்னைக்கு நாளைக்கு ஆகிடும். இப்போதைக்கு உங்களை உங்க பிரண்ட்ஸ் கூட சேர்க்கணும் அதான் என் வேலை…”

 

“நீங்க இப்போ அவசரத்துக்கு தேவையான திங்க்ஸ் மட்டும் எடுத்துக்கோங்க. நல்லா கவனிங்க ரொம்பவும் தேவையானது மட்டும் தான் உங்க பெட்டி படுக்கை மொத்தமும் தூக்கிட்டு வந்திடாதீங்க…”

 

“அப்போ இன்னைக்கு ஊருக்கு கிளம்ப முடியாதா??”

 

“அதை தானே இவ்வளவு நேரமும் சொன்னேன். சரி தர்ஷினி டிரஸ் கொஞ்சம் எடுத்துக்கோங்க. அவளை அவங்க அம்மாகிட்ட விடணும்”

 

“அவங்க எங்க?? அவங்ககிட்ட பேசிட்டீங்களா??”


“அவங்க ஒரு வீட்டில ஸ்டே பண்ணியிருக்காங்க. அவங்கம்மா நேத்துல இருந்து உங்களோட நம்பர்க்கு போன் பண்ணிட்டே இருந்திருப்பாங்க போல. ரொம்பவும் அழுது மயங்கிட்டாங்களாம். குழந்தை சேப்ன்னு சொல்லிட்டேன், இவளை அவங்ககிட்ட விடணும்”

 

அடுத்த பத்து நிமிடத்தில் குழந்தைக்கு தேவையானது அவள் உடமைகள் என்று இரண்டு பையை தூக்கி வந்தாள் இதழினி.

 

“அவ்வளோ தானே”

 

“ஹ்ம்ம்…”

 

“சரி வெயிட் பண்ணுங்க நான் போன் பண்ணிட்டு வர்றேன்” என்றவன் வெளியே வந்து பார்க்க சைலேஷ் அவனுக்கு அழைத்தான்.

 

“சொல்லுடா நீங்க வந்தாச்சா??”

 

“டேய் நான் மட்டும் தான் வந்திருக்கேன். விஷ்ணு கத்திட்டே இருக்கான்டா அவன் ரெஸ்கியூ டீம் கூட இருக்கான். நீ சீக்கிரம் வா நாமளும் போகணும்” என்று சைலேஷ் சொல்ல “ஓகேடா” என்றவன் அவன் முதலில் கயிறு பிடித்து வந்த இடத்திற்கு சென்று கீழே பார்க்க சைலேஷ் கையை ஆட்டினான், பதிலுக்கு இவனும் ஆட்டிவிட்டு “இதோ வர்றேன்” என்றுவிட்டு உள்ளே ஓடினான்.

 

“கிளம்பலாம், வீட்டை லாக் பண்ணுங்க…”

 

“என்னது??” என்று விழித்தாள் வழக்கம் போல.

 

“என்ன என்னது??”

 

“இல்லை அது வீடு சாவி??” என்று விழித்தாள்.

 

“என்ன பூட்டு எங்க இருக்குன்னு தெரியாதா??” என்று அவன கேட்க தலை தொங்கவிட்டாள் அவள்.

 

“சுத்தம் எப்படி உங்களை நம்பி இங்க விட்டுட்டு போனாங்க. உங்களை நம்பி உங்க ஆபீஸ்ல எப்படி வேலை கொடுத்தாங்க. இப்படி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்கீங்க”

 

“என்ன கேட்டாலும் தெரியாதுன்னு முழிக்கறீங்க” என்று கோபமா சொல்லவும் கண்ணில் நீர் நிரம்பிவிட்டது அவளுக்கு.

 

“இங்க வரும் போது கீ யார்கிட்ட இருந்துச்சு?? அதுக்காச்சும் பதில் சொல்லுங்க”

 

“ஜே… ஜேம்ஸ்…”

 

“அவர் போன் நம்பர் இருக்கா??”

 

“ஹ்ம்ம்…” என்றாள் உடைந்த குரலில்.

 

“போன் பண்ணுங்க” என்று சொல்லி அவன் போனை கொடுத்தான்.

 

“அவன் ரூம்ல இருக்க கப்போர்ட்ல இருக்காம்” என்றாள் பேசி முடித்து.

 

“போய் எடுத்திட்டு வர்றீங்களா?? இல்லை அவங்க ரூம் இருக்குன்னு அவங்ககிட்ட கேட்கணுமா??” என்றான் விதுரன்.

 

“தெரியும்” என்றவள் கண்ணை துடைத்துக்கொண்டு சாவியை எடுத்து வந்தாள்.

 

சாவியை அவளிடம் இருந்து வாங்கிக்கொண்டவன் “நானே லாக் பண்றேன் நீங்க தர்ஷினி தூக்கிட்டு வாங்க” என்று சொல்ல வெளியே வந்து கதவை லாக் செய்து சாவியை அவளிடம் கொடுத்தான்.

 

“உங்க ஹேண்ட்பேக்ல வைங்க…” என்று சொல்ல “ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்”

 

“என்ன??”

 

“ஹேண்ட்பேக் எடுக்க மறந்திட்டேன்” என்றவளை முடிந்த மட்டும் முறைத்தான் விதுரன்.

 

அவனே கதவை திறக்க குழந்தையை கீழேவிட்டு  வேகமாய் உள்ளே ஓடியவள் நொடிகளில் திரும்பி வந்திருந்தாள் மூச்சிரைக்க.

 

கதவை மீண்டும் லாக் செய்து சாவியை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி அவள் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

 

அவர்களை அழைத்துக்கொண்டு சைலேஷ் நின்றிருந்த இடத்திற்கு நேர் மேலே வந்திருந்தனர்.

 

“எவ்வளவு நேரம்டா??” என்று அவன் கத்தினான் கீழிருந்து.

 

“சாரிடா” என்றவன் அவன் வரும் போது  கொண்டு வந்திருந்த ஷோல்டர் பேக்கை திறந்து அதிலிருந்த ரோப்பை வெளியில் எடுத்து மரத்தில் மாட்டினான்.

 

“இதை பிடிச்சிட்டா ஏறி வந்தீங்க?? எப்படி??” என்று சுவாரசியமாய் கதை கேட்கும் பாவனையில் நின்றாள் அவள்.

 

“இறங்கும் போது நீங்களே தெரிஞ்சுக்கோங்க” என்றுவிட்டு அவன் வேலையில் கவனமானான். ஒரு தடவை இரண்டு தடவையாய் கயிறை இழுத்து சரி பார்த்தான்.

 

அதை பிடித்துக் கொண்டு தொங்கியும் பார்த்துவிட்டு பின் மேலேறினான். “ஓகே எல்லாம் சரியா இருக்கு, நீங்க முதல்ல கீழ இறங்குங்க” என்று அவன் சொல்ல “என்னது நானா?? இந்த கயிறுலயா?? பயமாயிருக்கே”

 

“கொஞ்ச நேரம் முன்னாடி இறங்குறேன்னு சொன்னீங்க??”

 

“ரொம்ப உயரமா தெரியுதே??”

 

“இங்க பாருங்க டைம் ஆச்சு இறங்கறீங்களா இல்லையா”

 

“இல்லை நீங்க முதல்ல இறங்குங்க அதை பார்த்திட்டு நானும் இறங்கறேன்”

 

“ஷுயரா தான் சொல்றீங்களா”

 

“ஹ்ம்ம்”

 

“தர்ஷி இங்க வாங்க…”


“அவளை நீங்க கூட்டிட்டு போறீங்களா எப்படி??”

 

“பாருங்க” என்றவன் தர்ஷினியை பின்னால் மூட்டை தூக்குவது போல தூக்கிக் கொண்டு தன் பையில் வைத்திருந்த பெல்ட் ஒன்றை எடுத்து குழந்தை கீழே விழுந்து விடாதவாறு கட்டிக்கொண்டான்.

 

“என்னோட பேக் நான் சொல்லும் போது கீழே தூக்கி போடுங்க ஓகேவா…” என்று சொல்ல தலையாட்டினாள்.

 

“தர்ஷினி பாப்பா நாம இப்போ கீழ போக போறோம். நீங்க என்னை டைட்டா பிடிச்சுக்கணும்… கையை விடக்கூடாது, சரியா” என்று குழந்தையிடம் தன்னை பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு மெதுவாய் இறங்கவாரம்பித்தான்.

 

ஐந்தே நிமிடத்தில் அவன் கீழே இறங்கியிருக்க தலை சுற்றிப்போனது இதழினிக்கு. ‘என்னால எப்படி இறங்க முடியும்?? எவ்வளோ உயரம்’ என்று எச்சில் கூட்டி விழுங்கினாள்.

 

“சைலேஷ் பாப்பா பார்த்துக்கோ” என்றவன் “ஏங்க இறங்க முன்னாடி என்னோட பேக் கீழே போடுங்க” என்றான்.

 

“எனக்கு பயமாயிருக்கு”

 

“என்ன??”

 

“என்னை வந்து கூட்டிட்டு போங்க ப்ளீஸ்”

 

“ஹலோ என்ன விளையாடுறீங்களா??”

 

“ப்ளீஸ் ப்ளீஸ்…” என்று அவள் குரல் கொடுக்க “சரியான லூசு…” என்று திட்டினான் விதுரன்.

 

“யாரைடா சொல்றே??”

 

“எல்லாம் மேல நிக்கறவளை தான்…”

“பாவம்டா பயப்படுறாங்க போல… நீ முதல்ல அவங்களை கீழ இறக்கிட்டு நீ இறங்கி இருக்க வேண்டியது தானே…”

 

“முதல்ல நீங்க இறங்குங்க அதை பார்த்திட்டே நான் இறங்குறேன்னு சொன்னாடா அவ… இப்போ பாரு என்னை மேல ஏறி வரச்சொல்றா… இவளை…” என்று சத்தமே இல்லாமல் திட்டினான்.

 

“இப்போ என்ன செய்ய?? நான் போகவா??”

 

“வேணாம் நானே போறேன்…” என்றவன் சரசரவென்று அந்த கயிற்றை பற்றிக்கொண்டு மேலேறினான். இரவிலேயே மழை விட்டிருந்தது.

 

சூரியன் கூட வந்து எட்டிப்பார்த்திருக்க மழை இல்லாததே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. அதனாலேயே விதுரனால் சுலபமாக மேலேற முடிந்தது.

 

முன் தினம் மழை லேசாய் விட்டிருந்த போதும் அவன் மேலேறுவதற்குள் அவ்வளவு கஷ்டப்பட்டிருந்தான். கையில் ஆங்காங்கே லேசாய் கீறல் வேறு.

 

“எப்படி உங்களால மட்டும் ஈசியா ஏற முடியுது” என்றாள் கடுப்பில் நின்றிருந்தவனை பார்த்து. பதிலொன்றும் சொல்லாமல் அவளை முறைத்து நின்றிருந்தான்.

 

“நிஜமாவே எனக்கு பயமாயிருக்கு, நான் வரலை” என்று சொல்ல கடுப்பாவிட்டது அவனுக்கு.

 

“ஹலோ என்ன எங்களுக்கு வேலை இல்லைன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா நீங்க. இன்னும் எவ்வளவு எங்க மாட்டிட்டு இருக்காங்களோ தெரியலை. அதெல்லாம் விட்டு இங்க வந்து உங்ககிட்ட மல்லுக்கட்டணும்ன்னு என் தலையெழுத்து”

 

“சுனில் சொன்னாரு வந்ததுக்கு என்னை நானே அடிச்சுக்கணும்… இப்போ நீங்க இறங்கலைன்னா நான் பாட்டுக்கு கீழ இறங்கி போயிட்டே இருப்பேன். அதுவரைக்கும் இங்க நீங்க தனியா தான் இருக்கணும்” என்று அவன் சத்தம் போடவும் தான் அமைதியானாள் அவள்.

 

“கீழே விழுந்திட மாட்டேன்ல…” என்று ஆரம்பிக்க “அதெல்லாம் விழ மாட்டீங்க. அங்க என்னோட பிரண்ட் இருக்கான் அவன் பார்த்துக்குவான். தைரியமா இறங்குங்க…”

 

“முடிஞ்ச வரை இறங்கிட்டு உங்களால ஜம்ப் பண்ண முடியும்ன்னு தோணுச்சுன்னா கயிறை விட்டுட்டு குதிச்சுடுங்க ஓகேவா…”

 

“வேணாம் வேணாம்…”

 

“ஓகே உங்களுக்கு எப்படி வசதியோ அப்படி செய்ங்க… இப்போ இறங்கறீங்களா” என்றவன் சொல்ல கயிற்றை பிடித்தப்படி நின்றவள் “இதோ” என்று அதை பிடித்து இழுக்க சட்டென்று கால் இடறியது.

 

“பார்த்து பார்த்து” என்றவன் அவள் விழாமல் பற்றிக்கொண்டான்.

 

“எதுக்கு இப்போ அவசரம்” என்று கடிந்தவன் “இந்த பேக் எடுத்து ஷோல்டர்ல மாட்டுங்க” என்று சொல்லி அவள் பேக்கை எடுத்துக் கொடுத்தான்.

 

“மெதுவாய் இறங்குங்க…” என்று சொல்லி அவளுக்கு உதவி செய்ய கீழே இறங்க ஆரம்பித்தவள் மேலே நிமிர்ந்து பார்க்க பேக்ரவுண்டில் ‘பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெட்கத்தை விட்டு’ என்று பாடல் ஒலிக்க ஆரம்பிக்க ஒரு நிமிடம் தன்னையும் அவனையும் அந்த இடத்தில் பொருத்தி பார்த்தாள்.

 

‘எங்க என்ன மாதிரி சூழ்நிலையில இருக்க, இப்போ இந்த பாட்டு தேவையா’ என்று அவள் மனசாட்சி வந்து கவுன்ட்டர் கொடுக்க விதுரனும் அவளின் பார்வையை கண்டு “என்ன பொத்தி வைச்ச மல்லிகை மொட்டா” என்று கேட்க எப்படி கண்டுப்பிடித்தார்’ என்றவள் சிரிக்க “அட இறங்கும்மா முதல்ல, படம் ஓட்டிக்கிட்டு… இவங்க ரேவதி நாங்க பாண்டியன் அப்போ ரைட்டர் யாரு பாரதிராஜாவா இந்த திங்கிங் எல்லாம் உங்களுக்கு ஓவரா இல்லை” என்று அவன் சொல்லவும் அவள் எண்ணத்தை எல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு இறங்குவதில் கவனமானாள்.

 

ஒரு வழியாய் அவள் கீழே இறங்கியிருக்க பாதி கயிறும் அவளுடன் வந்துவிட்டது. “அச்சோ கயிறு அந்து போச்சே, அவர் எப்படி வருவாரு…” என்று அவள் புலம்ப அவளை அப்போது தான் முழுதாய் பார்த்த சைலேஷ் ‘இது இவங்க தானே நம்ம விதுவை வேணாம்ன்னு சொன்ன பொண்ணு’ என்று பார்த்திருந்தான்.

 

“ஏங்க நீங்க அவங்க பிரண்ட் தானே ப்ளீஸ் எதாச்சும் பண்ணுங்களேன் அவங்க எப்படி வருவாங்க… கயிறு வேற என் கையோட வந்திடுச்சு ப்ளீஸ் பாருங்க. என் முகத்தை ஏன் பார்க்கறீங்க அவங்களை பாருங்க” என்றவளின் முகத்தில் பதட்டமும் கவலையும் அப்பட்டமாக தெரிந்தது, பதிலேதும் பேசாமல் மேலே பார்த்தான் சைலேஷ்.

 

“விது கயிறு அந்து போச்சு என்ன செய்ய??” என்று இவன் குரல் கொடுக்க “பரவாயில்லை நான் வந்திடறேன், என் பேக் மட்டும் பிடி” என்றான் அவன்.

 

“அதெப்படி அவர் வருவாரு…” என்று அவள் கேட்க “ரிஸ்க் எடுக்கறது எல்லாம் அவனுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று வடிவேல் பாணியில் பதில் சொன்னான் சைலேஷ்.

 

“நான் சீரியசா கேட்டா நீங்க காமெடி பண்றீங்க”

 

“ஹலோ ஏங்க இப்படி தொணதொணன்னு பேசிட்டே இருக்கீங்க. அந்த குழந்தை கூட பேசாம தான் இருக்கு நீங்க ஏன் இப்படி படுத்தறீங்க. இந்த விது எப்படி பேசாம இருந்தான்னு தெரியலையே எனக்கு. கொஞ்ச நேரம் பேசாம இருங்க அவனே கீழே இறங்கி வந்திடுவான்” என்று சைலேஷ் சொல்ல வாயை மூடினாள் அவள்.

 

“டேய் பேக் பிடி” என்றவன் “ஏங்க பாப்பாவை தூக்கிட்டு தள்ளி போய் நில்லுங்க” என்று விதுரன் சொன்னதை செய்தாள். விதுரன் தூக்கிப்போட்ட பேக்கை பிடித்து கீழே வைத்த சைலேஷ் “நீங்க இதழினி தானே” என்றான் அவளைப் பார்த்து.

 

“உங்களுக்கு என்னை தெரியுமா??”

 

“ஹ்ம்ம் தெரியும்” என்ற சைலேஷ் “எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆனீங்க”

 

“எப்போ??”

 

“கயிறு அறுந்து போகவும்”

 

“அவங்க எப்படி இறங்குவாங்கன்னு பயம் தான்…”

 

“அது உங்களுக்கு தேவையில்லாததாச்சே. அவன் எடுக்கற ரிஸ்க் தான் உங்களுக்கு பிடிக்காதே, அப்புறம் எதுக்கு அவனைப்பத்தி நீங்க கவலைப்படறீங்க” என்று முகத்துக்கு நேராகவே கேட்டுவிட்டான்.

 

“அது அப்போ”

 

“எப்போ”

 

“போன மாசம்…”

 

“இப்போ மட்டும் என்னவாம்…”

 

“ஐ லவ் ஹிம்” என்று அவள் சொல்ல ஆவென்று தான் பார்த்தான் சைலேஷ்.

Advertisement