Advertisement

5

 

“உங்க பிரண்ட்ஸ்க்கு லைன் போச்சா திரும்ப டிரை பண்ணீங்களா??”

 

“வை பை வேலை செய்யலையே” என்றாள்.

 

“போன் போகலையா??”

 

“சிக்னல் இல்லை…”

 

“இங்க வரும் போது அதெல்லாம் தெரியாதா உங்களுக்கு…”

 

அவள் தலை இல்லையென்பதாய் ஆட்ட விதுரன் குடித்து முடித்திருந்த காலி கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறை நோக்கிச் சென்றான்.

 

திரும்பி வந்தவன் பேட்டரி ஏறி இருக்கிறதா என்று பார்த்து அவன் நண்பனுக்கு முயற்சி செய்ய சைலேஷ் எடுத்திருந்தான்.

 

“டேய் எங்கேடா இருக்க??” என்று இவன் பேசும் முன்னே ஆரம்பித்திருந்தான் அவன்.

 

“நான் இங்க கெஸ்ட் அவுஸ் வந்தது மறந்திட்டியா??”

 

“தெரியும்டா கீழ இறங்கி இருப்பியோன்னு கேட்டேன்”

 

“கொஞ்சம் முன்னாடி தானே வந்தேன் அதுக்குள்ளே மேல இருந்து ஒரே ஜம்ப் பண்ண முடியுமா என்ன” என்று கடுப்பாய் பதில் சொன்னான் விதுரன்.

 

“சரி சரி என்னாச்சு சொல்லுடா”

 

“என்னை பேசவிடாம நீயே பேசிட்டு இருக்க, ஆமா நீங்க எங்க இருக்கீங்க??” என்றான்.

 

“இங்க நெறைய வீடு புதைஞ்சு போயிருக்குடா. மழை வேற திரும்ப ஆரம்பிக்குது. விஷ்ணு காலையில பண்ணலாம்ன்னு சொல்லிட்டு இருக்கார். அதான் பேசிட்டு இருக்கோம்” என்றான் அவன்.

 

“அவன் சொல்றதை கேட்காதீங்கடா முதல்ல ரெஸ்கியூ பண்ணுற வேலையை பாருங்கடா”

 

“இருட்டுக்குள்ள என்னடா செய்ய சொல்ற எங்களை?? எங்க பள்ளம் இருக்கு எங்க மேடு இருக்குன்னு எதுவும் தெரியலைடா” என்றான் அவன்.

 

“நீங்க இப்போ இங்க வர முடியாதா??”

 

“இல்லை விது பாதையே தெரியலை. உன்னைவிட்டு நாங்க நேர கீழ வந்திட்டோம்… அங்க என்னாச்சு எல்லாரும் சேப் தானே”

 

விதுரன் அங்குள்ள நிலைமையை சொல்லியவன் “ஒரு நிமிஷம் சைலேஷ், நான் சில நம்பர்ஸ் தரேன் அவங்க எல்லாம் பத்திரமா இருக்காங்களான்னு தெரியலை. நம்பர் போகுதான்னு பாரு”

 

“பேசிட்டு சொல்லு” என்றுவிட்டு வைத்துவிட்டான்.

 

“அப்போ இப்போ வெளிய போக முடியாதா” என்று வந்து நின்றாள் இதழினி.

 

“வெளிய மழையா இருக்கு, இப்போ இருட்டு நேரம் வேற. ரொம்ப ரிஸ்க் கீழே போறது”

 

“உங்களால முடியாதா??” என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவள் கேட்க ஒன்றும் சொல்லவில்லை அவன்.

 

அவள் அவன் முகம் பார்த்திருக்க “கஷ்டம்” என்று சொல்லி நகர எங்கோ குழந்தையின் அழுகுரல் கேட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

விதுரன் பரபரப்பானான் “குழந்தை அழற சத்தம் கேட்குது”

 

“தெரியலையே”

 

“இதென்ன பதில்” என்று எரிந்து விழுந்தான் அவன்.

 

“நிஜமாவே எனக்கு தெரியலை. இங்க சமையல் செய்யற அக்காவும் அவங்க ஹஸ்பென்ட்டும் தங்கி இருக்காங்க…”

 

“இதை ஏன் முன்னாடியே சொல்லலை”

 

“நீங்க கேட்கலையே??”

 

“யாரெல்லாம் இருக்கீங்கன்னு கேட்டேன் தானே”

 

“அவங்க தான் இப்போ இங்க இல்லையே. அவங்க ஹஸ்பென்ட்டை தேடிப் போனாங்க” என்றாள்.

 

“எதாச்சும் ஒழுங்கா சொல்றீங்களா. அவங்க ரெண்டு பேரும் இங்க தானே இருந்தாங்க. அப்புறம் எதுக்கு அவங்க புருஷனை தேடி போனாங்கன்னு சொல்றீங்க”

 

“அவர் காய்கறி வாங்க கடைக்கு போனார். மழையா இருக்கே இன்னும் வரலையேன்னு அவரை தேடி அவங்க குடை எடுத்திட்டு போனாங்க…”

 

“அவங்க வீட்டில வேற யாரும் இருக்காங்களா??”


“அவங்க குழந்தை ஒண்ணு இருக்கு”

 

“குழந்தையை கூட்டிட்டு போனாங்களா??”

 

“தெரியாதே”

 

“என்ன தான் தெரியும் உங்களுக்கு” என்று மீண்டும் எரிந்து விழுந்தான் அவன்.

 

அதில் அவள் முகம் விழுந்துவிட “ஓகே சமையல் செய்யறவங்க வீடு இங்க தானே இருக்குன்னு சொன்னீங்க எங்க இருக்கு” என்று அவன் கேட்க அவள் கையை பின்னால் நோக்கி நீட்டினாள்.

 

“கையை நீட்டினா எனக்கு தெரியுமா கூட வாங்க” என்று சத்தமாய் சொல்ல அவன் பின்னேயே சென்றாள்.

 

“என் பின்னாடி ஏன் வர்றீங்க??”

 

“நீங்க தானே வரச் சொன்னீங்க”

 

தலையில் அடித்துக் கொண்டவன் “எனக்கு முன்னாடி போங்க நீங்க. உங்களுக்கு தானே வழி தெரியும்” என்று அவன் சொல்லவும் தான் முன்னே நடந்தாள்.

 

“இந்த பக்கம் தான் சத்தம் கேட்குது குழந்தையை விட்டு போயிருக்காங்க போல. என்ன பொம்பளை அவங்க” என்று முணுமுணுத்துக் கொண்டே வந்தான் விதுரன்.

 

“மழையில குழந்தையை எப்படி தூக்கி போக முடியும்” என்று உள்ளே போன குரலில் அவள் சொல்ல அவளை முறைத்தான் அவன்.

 

“அப்போ உன்கிட்ட சொல்லிட்டு போய் இருக்கணும்ல, குழந்தையை விட்டுட்டு போறேன்னு…” என்று அவன் சொல்வது நியாயமாய் பட அத்துடன் வாயை மூடிக்கொண்டாள் அவள்.

 

பின்னால் இருந்த வீட்டிற்கு பத்தடி தூரம் இருக்க பின் வாசல் கதவை திறந்து வெளியே வந்தாள். மழை லேசாய் தூரவாரம்பித்தது.

 

விதுரன் கையில் குடையை எடுத்து வந்திருக்க அதை விரித்துக் கொண்டான். “வேகமா போங்க குழந்தை கதறிட்டு இருக்கா” என்றவன் அவளுக்கு முன்னே பாய்ந்து அந்த வீட்டை இரண்டே அடியில் எட்டியிருந்தான்.

 

வெளிகதவில் பூட்டு தொங்கி கொண்டிருக்க அப்படியொரு ஆத்திரம் வந்தது அவனுக்கு. ‘இதென்ன பொறுப்பில்லாத்தனம்’ என்று கோபம் கனன்றது அவனுக்கு.

 

கீழே கிடந்த ஒரு கனமான கல்லை எடுத்து பூட்டை உடைத்தவன் உள்ளே செல்ல அறையெங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அதற்குள் பின்னால் வந்திருந்த இதழினி கைபேசியில் டார்ச்சை ஆன் செய்திருக்க விதுரனும் அவன் கையில் இருந்த டார்ச்சை ஒளிரவிட்டான்.

 

“குழந்தை எங்க இருக்கா பாருங்க…” என்று சொல்லி அவளை ஒரு பக்கம் அனுப்பிவிட்டு அவன் ஒரு பக்கம் தேட அழுதுக்கொண்டே ஒரு மூலையில் ஒண்டி நின்றிருந்தது குழந்தை.

 

“குழந்தை இங்க இருக்கா” என்று சத்தமாக சொல்லிவிட்டு அவன் குழந்தையின் அருகே சென்றான்.

 

இதழினியும் வந்திருந்தாள், பயத்தில் குழந்தை சிறுநீர் கழித்திருந்தாள் போலும். விதுரன் அருகே சென்று குழந்தையை அணைத்து சமாதானம் செய்துக் கொண்டிருந்தான்.

 

“ஏங்க பேபியோட டிரஸ் எதுவும் இங்க இருக்கான்னு பாருங்க. டிரஸ் ஈரமா இருக்கு மாத்தணும்” என்று சொல்ல உள்ளே வந்திருந்தவள் அறையில் இருந்த பொருட்களில் பார்வையை பதித்தாள்.

 

சில நொடிகளில் குழந்தையின் உடையுடன் அவனருகே வந்திருக்க “டிரஸ் மாத்திவிடுங்க” என்று அவன் சொல்ல அவள் அப்படியே நின்றிருந்தாள்.

 

“என்ன அப்படியே நிக்கறீங்க??” என்று கடுப்பாய் மொழிந்தவன் அவளிடமிருந்த உடையை எட்டிப் பறித்தான். தானே குழந்தையின் உடையை மாற்றி வேறு அணிவித்து முடித்திருந்தான்.

“வேற டிரஸ் இருந்தா எடுத்திட்டு வாங்க… குழந்தையை அங்க கூட்டிட்டு போகலாம்” என்றவன் கழற்றியிருந்த குழந்தையின் ஆடையை அதே அறையில் இருந்த குளியலறைக்கு சென்று போட்டு வந்தான்.

 

‘ரொம்ப பொறுப்ஸ் போல’ என்று தான் ஓடியது அவளுக்கு.

 

“என்ன எடுத்துட்டீங்களா” என்றவன் குழந்தையை தூக்கிக் கொண்டான்.

 

“உங்க பேரு என்ன குட்டி” என்று கேட்க “தர்ஷினி” என்றது குழந்தை.

 

“கியூட் பேபி நீங்க” என்றான் அவன்.

 

மூவருமாக கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்தார்கள். “சாப்பிட என்ன இருக்கு??” என்றான் விதுரன்.

 

“மதியம் செஞ்ச சாப்பாடு இருக்கு”

 

“குழந்தை எப்போ சாப்பிட்டான்னு தெரியலை. கொஞ்சம் சாப்பாடு போட்டு கொண்டு வர்றீங்களா” என்றதும் உள்ளே சென்றவள் தட்டில் சாதம் போட்டுக் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

 

அதை வாங்கி குழந்தையுடன் பேசிக்கொண்டே ஊட்டினான். அதற்குள் இதழினி தண்ணியை சுடவைத்து ஒரு தம்ளரில் எடுத்து வந்து கொடுக்க ‘பரவாயில்லையே கொஞ்சூண்டு அறிவிருக்கே’ என்று நினைத்துக்கொண்டே வாங்கியவன் குழந்தைக்கு குடிக்க கொடுத்தான்.

 

“பாப்பா நீங்க படுக்கறீங்களா” என்று கேட்க அவ்வளவு நேரமும் தூங்கி இருந்ததால் குழந்தை விளையாட ஆரம்பித்திருந்தாள். பயமும் விட்டிருக்க அந்த பெரிய வீட்டை சுற்றி சுற்றி வந்தாள்.

குழந்தை விதுரனிடம் விளையாடுவதும் ஓடுவதும் என்றிருந்தாள். இதழினி அவ்வப்போது எழுந்து உள்ளே சென்று வந்தாள்.

 

அவள் ஏதோ அசௌகரியமாக உணர்வதாக அவனுக்கு தோன்ற “என்னாச்சு எதுவும் பிரச்சனையா??” என்று கேட்டுவிட பதில் சொல்லாமல் விழித்தாள் அவள்.

 

அவளின் முகம் பார்த்து வேறு ஒன்றும் கேட்காது அவன் குழந்தையின் புறம் பார்வையை திருப்பிக் கொண்டான். மேலும் சில நொடிகள் குழந்தையுடன் விளையாட அவள் சோபாவின் மீதேறி ஒன் டூ த்ரீ சொல்லி குதிப்பதும் பின் ஏறுவதுமாய் இருந்தாள்.

 

குழந்தையின் மீது ஒரு கண் வைத்தவன் அவனையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்த இதழினியின் புறம் திரும்பி “என்னை எதுக்கு பார்த்திட்டு இருக்கீங்க போய் சாப்பிடுங்க” என்றான்.

 

தன்னை கண்டுக்கொண்டானே என்று எண்ணியவள் பார்வையை வேறு புறம் திருப்பிக்கொண்டாள். “என்ன யோசனை உங்களுக்கு??” என்றான் அவளிடம் பதில் இல்லாது போகவும்.

 

“இல்லை வந்து நீங்களும் சாப்பிட வாங்களேன்” என்றாள் ஒருவழியாய்.

 

‘இப்போவாச்சும் கேட்கணும்ன்னு தோணிச்சே’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு அவளுடன் சென்றான்.

 

“தட்டு மட்டும் கொடுங்க எனக்கு நானே வைச்சுக்கறேன்” என்றவனிடம் தட்டை அவள் நீட்ட அவனுக்கு தேவையானதை வைத்துக்கொண்டு வெளியில் வந்திருந்தான்.

 

இருவரும் சாப்பிட்டு முடிக்க குழந்தை விளையாடி ஓய்ந்து சோபாவில் சாய்ந்திருந்தாள். “இவங்க அம்மா நம்பர் இருக்கா உங்ககிட்ட” என்ற விதுரனின் குரலில் நிமிர்ந்தவள் தலையாட்ட “கொடுங்க” என்று சொல்லி அந்த எண்ணை வாங்கிக்கொண்டு வெளியில் சென்றான் அவன்.

 

சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் “உங்களோடபிரண்ட்ஸ் எல்லாம் சேப் தானாம். சுத்தி பார்க்க போனவங்க மழை பெய்யவும் பக்கத்துல இருக்க ஹோட்டல்ல ரூம் போட்டு அங்க ஸ்டே பண்ணிட்டாங்களாம்”

 

“உங்களைப்பத்தியும் அவங்ககிட்ட இன்பர்மேஷன் பாஸ் பண்ணியாச்சு” என்று கூடுதலாய் சொல்லவும் அவள் முகத்தில் நிம்மதியான உணர்வு தோன்றியது.

 

“சுந்தரி அக்காகிட்ட பேசியாச்சா”

 

“அது யாரு??”

 

“தர்ஷினியோட அம்மா”

 

“இப்போ சொல்லுங்க பேரை, நம்பர் கொடுக்கும் போது சொல்றதில்லையா??” என்றான்.

 

“நீங்க நம்பர் மட்டும் தானே கேட்டீங்கன்னு சொல்லப் போறீங்க அதானே” என்று அவனே பதிலும் சொல்ல அவள் இதழ் கடையில் குறுஞ்சிரிப்பு மலர்ந்தது.

 

“போய் படுங்க ரெண்டு பேரும்” என்று அவர்களிடம் சொல்ல “நீங்க??”

 

“நான் தூங்க மாட்டேன் இங்க ஹால்ல தான் இருப்பேன்…”


“இல்லை இங்க நெறைய ரூம்ஸ் இருக்கு. நீங்களும் தூங்கலாமே”

 

“எனக்கு இதெல்லாம் பழக்கம் தான். தூங்கணும்ன்னா நானே தூங்குவேன். போங்க போய் படுங்க. தர்ஷினி பாப்பாவையும் கூட்டிட்டு போங்க” என்று சொல்ல இதழினி குழந்தையை தூக்கிக்கொண்டு அவள் தங்கியிருந்த அறைக்கு சென்றாள்.

 

அவள் அறைக்குள் நுழையும் முன் “ஒரு நிமிஷம்” என்ற அவன் குரல் தடுக்க திரும்பி பார்த்தாள்.

 

“ரெண்டு பேரும் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு படுங்க” என்றுவிட்டு சோபாவில் சாய்ந்துக் கொள்ள தூக்கிவாரி போட்டது அவளுக்கு.

 

‘கண்டுப்பிடித்திருப்பாரோ, தெரிந்திருக்குமோ’ என்ற எண்ணம் தான் அறைக்குள் நுழைந்து தர்ஷினியை கட்டிலில் விட்டு தன் உடையை தான் பார்த்தாள்.

 

ஓரிடத்தில் லேசாய் கறை தெரிய தனக்கு தேவையான உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்று உடைமாற்றி வந்து கட்டில் படுத்தாள்.

 

‘ச்சே எப்படி கவனிக்காம விட்டோம். கவனமா தானே இருந்தோம். அச்சோ என்னைப்பத்தி என்னை நினைச்சாரோ’ என்று எண்ணியவாறே படுத்திருந்தாள்.

 

குழந்தையின் உடையை வேறு மாற்றச் சொன்னாரே என்று ஞாபகம் வர அவளை பாத்ரூம் அழைத்து சென்று விட்டு வந்தவள் குழந்தைக்கு வேறு உடை மாற்றி படுக்க வைத்தாள்.

 

அவள் படுத்ததுமே கண்ணயர்ந்திருந்தாள். அப்படியொரு நிம்மதியான உறக்கம் ஆட்டிக்கொண்டிருந்தது அவளை. இடையில் ஒரு முறை கூட விழிப்பு தட்டியிருக்கவில்லை.

 

காலையில் அறைக்கதவை விதுரன் தட்டும் வரை நல்ல உறக்கம். எழுந்து அவள் கதவை திறக்க “டைம் ஆச்சு சீக்கிரம் குளிச்சு ரெடியாகுங்க. அடுத்து என்ன பண்ணறதுன்னு பார்க்கணும்” என்றுவிட்டு நகர்ந்துவிட்டான் அவன்.

 

“நீங்க அந்த ரூம்ல…” என்று அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே “நான் எப்பவோ குளிச்சு ரெடியாகிட்டேன்” என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

 

“ஓவர் சுறுசுறுப்பும் போல” என்று வாய்விட்டு சொன்னவள் குளிக்கச் சென்றாள்.

 

குளித்து முடித்து தர்ஷினியை எழுப்பி குளிக்க வைத்து வேறு உடைமாற்றி வந்தாள். ‘பாப்பாக்கு எதுக்கு டிரஸ் எடுக்கச் சொன்னார்ன்னு இப்போ தான் புரியுது’ என்று எண்ணிக்கொண்டே குழந்தையையும் அழைத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.

 

விதுரனை அங்கே காணாமல் அவள் தேட அவன் சமையலறையில் இருந்து வந்தான். “இங்க என்ன பண்றீங்க??”

 

“பாப்பாக்கு பால் இருக்கான்னு பார்த்தேன்…”

 

“உள்ள ப்ரீசர்ல போட்டு வைச்சிருந்தாங்க. நேத்து பவர் இல்லையே பால் நல்லா இருக்கான்னு தெரியலையே…”

 

“பவர் எப்போ போச்சு??”

 

“மதியம் தான்…”

 

“நைட் தான் வந்திடுச்சுல்ல, ஒண்ணும் ஆகியிருக்காது” என்றவன் அதை எடுத்து சூடு செய்ய “நான் பண்றேன்” என்று வந்து நின்றாள் இதழினி.

 

ஒன்றும் சொல்லாமல் தர்ஷினியை வாங்கிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டான் அவன். பத்து நிமிடம் கழித்து ஒரு டிரேயில் மூன்று கப்புடன் வந்தவள் அவனிடம் நீட்டினாள்.

நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்து வாங்கிக் கொண்டவன் தர்ஷினிக்கு பாலை புகட்டினான். “நீங்க குடிங்க நான் பாப்பாவை பார்த்துக்கறேன்” என்றவள் கையை நீட்ட கோப்பையை அவளிடம் கொடுத்துவிட்டு தனக்கானதை எடுத்துக்கொண்டான்.

 

‘என்ன ரொம்ப சேஞ்சஸ் தெரியுது’ என்று யோசனையுடன் அவளைப் பார்த்தான்.

 

சிறிது நேரத்தில் அவனுக்கு ஏதோ அழைப்பு வர “உங்க போன் வேலை செய்யுதா??” என்றாள்.

 

“ஹ்ம்ம் BSNLசிம் போட்டிருக்கேன் வேலை செய்யும் இப்போ…” என்றவன் வெளியே சென்று பேசிவிட்டு வந்தான்.

 

“நாம கிளம்பலாமா?? ரோடு சரியாகிடுச்சா??”

 

“இன்னும் சரி பண்ணலை ஈவினிங் ஆகும் போல” என்றுவிட்டு சோபாவில் சாய்ந்தான்.

 

“அப்போ இன்னைக்கும் அவ்வளவு தானா” என்றவளின் முகத்தில் கலவரம்.

 

“பயம் வேண்டாம் என்னோட டீம் வந்திடுவாங்க…”

 

“நீங்க எப்படி வந்தீங்க இங்க??” என்று அப்போது தான் விசாரித்தாள் அவள்.

 

“ரோப் மரத்தில போட்டு ஏறி வந்தேன்…”

 

“அப்படியே திரும்பி போக முடியாதா” என்றாள் அது மிகவும் சுலபமான விஷயம் என்பது போல.

 

“இறங்கிடுவீங்களா சொல்லுங்க கூட்டிட்டு போறேன்” என்றான் அவன் சிறு சிரிப்புடன்.

 

Advertisement