Advertisement

3

பெண் பார்க்கும் படலம் இனிதே நடந்து முடிய கற்பகத்தின் தங்கை மகள் பெண்ணிற்கு பூவைத்துவிட கிட்டத்தட்ட அந்த திருமணம் உறுதி செய்யப்பட்டது.

 

தை மாத இறுதியில் நிச்சயத்தை முடித்துவிட்டு மாசியில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று பேசினர்.

 

கிளம்பும் முன் விதுரனின் எண்ணை திருநாவுக்கரசு வெங்கட்ராமனிடம் கொடுத்துவிட்டு செல்ல நிறைவாய் இருந்தது பெண் வீட்டினருக்கு.

 

அவர்கள் சென்றதும் சந்துருவும் கிளம்பிவிட வீட்டினர் மட்டுமே இருந்தனர். “ஏங்க மாப்பிள்ளைக்கிட்ட ஒரு வார்த்தை பேசிடுங்க நீங்க அப்போ தான் எனக்கு நிம்மதி” என்றார் வேணி.

 

“அதெல்லாம் அப்போவே பேசியாச்சு வேணி. மாப்பிள்ளையோட தம்பி அவர் போன்ல இருந்து மாப்பிள்ளைக்கு போட்டு கொடுத்தாரு. அவர்கிட்ட பேசினதும் தான் எனக்கு திருப்தியா இருக்குது”

 

“மாப்பிள்ளையோட நம்பரும் கொடுத்திட்டு போனாரு நம்ம இதழ் பேசுறதுன்னா பேசிக்கட்டும்” என்றுவிட்டு மகளிடம் விதுரனின் எண்ணை எழுதிக் கொடுத்தார்.

 

விதுரனிடமும் இதழினியின் எண் கொடுக்கப்பட்டது. இரண்டு நாட்களாய் அவளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் விதுரனே அழைப்பான் என்று. எங்கே அவன் அழைத்தால் தானே.

 

கடுப்பாகி அன்று மதிய உணவு இடைவேளையில் அவளே அவனுடைய எண்ணுக்கு அழைத்துவிட்டாள். ஏதோ யோசனையில் அழைத்துவிட்டவளுக்கு அவன் “ஹலோ” என்றதும் லேசாய் உதற தொடங்கியது.

 

என்னவென்று பேசுவது என்ற பதைபதைப்பு வந்து ஒட்டிக் கொண்டது. எதிர்முனைக்கு அழைப்பது யாரென்று தெரிந்திருந்ததால் விதுரனே “சொல்லுங்க இதழினி போன் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க” என்றிருந்தான்.

 

“இல்லை வந்து சும்மா தான் பண்ணேன்…”

 

“ஓ!!”

 

“வந்து வந்து நீங்க ஏன் எனக்கு கால் பண்ணலை” என்றாள் வார்த்தையை எழுத்துக் கூட்டி.

 

“இப்படி வந்து போயின்னு மொக்கையா பேச எனக்கு வராது… அதான் போன் பண்ணலை, இப்போவே பேசிட்டா கல்யாணத்துக்கு பிறகு என்ன பேச” என்று அவன் சொல்ல ‘இப்போவே பேசலையாம் அப்போ மட்டும் அப்படியே பேசிடுவாரா… ஷப்பா இப்போவே கண்ணைக் கட்டுதே’ என்று எண்ணிக்கொண்டாள் அவள்.

 

“சரி நான் போனை வைக்கிறேன்” என்று அவள் சொல்ல அவனும் சரியென்று சொல்லி அவளுக்கு முன்னமே வைத்துவிட சப்பென்று ஆகியது அவளுக்கு.

 

திருமணம் பற்றி பெரிதாய் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தான் சம்மதித்திருந்தாள். இருந்தாலும் வருங்கால கணவன் தன்னிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா பெண்களையும் போல அவளுக்கும் இருந்தது.

 

அதுவும் அவளுடன் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் பெண் பார்க்க வந்த அன்றே மாப்பிள்ளையுடன் பேசுவது பின்னர் வெளியில் சுற்றுவது என்று இருப்பதை அவளும் பார்த்திருக்கிறாள் தானே.

 

இதில் காதல் என்று சொல்லிக்கொண்டு அவளுடன் வேலை செய்யும் ஆணும் பெண்ணுமே ஒன்றாய் சந்தோசமாய் வெளியில் செல்வதை எல்லாம் கூட பார்த்திருக்கிறாள் அதில் சிறிதாவது தனக்கும் நடக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது அவளுக்கு.

 

விதுரனின் பேச்சு சற்று கசந்தாலும் அவன் நேரிடையாய் பேசியது அவளுக்கு பிடித்திருந்தது. அவர் பேசலைன்னா என்ன நாம பேசிட்டு போவோம் என்று எண்ணிக் கொண்டாள். ஏதாவதொரு காரணம் சொல்லி தினமும் அவனுக்கு அழைத்தாள்.

 

விதுரன் அவனாய் அழைத்திருக்கவில்லையே தவிர அவளின் அழைப்பை ஒரு நாளும் நிராகரித்ததில்லை. ஓரிரு வார்த்தைகளாவது அவளிடம் பேசிவிட்டு தான் போனை வைப்பான். அவன் பேசினான் என்று சொல்வதை விட அவள் பேச வைத்தாள் என்று சொன்னால் பொருத்தமாய் இருக்கும்.

 

இரவு வீட்டினர் நால்வரும் நியூஸ் சேனல் பார்த்துக் கொண்டிருந்தனர். கேரளாவில் புயல் சேதம் மிகவும் மோசமாக இருந்ததை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

 

இடுக்கி மாவட்டத்தில் ஆங்காங்கே மண் சரிந்து பெரும் சேதமாகியிருந்ததை காட்டிக் கொண்டிருந்தார்கள். அந்நேரம் வெங்கட்ராமனுக்கு சந்துருவிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

அழைப்பை ஏற்றவர் “சொல்லு சந்துரு” என்றார்.

 

“வெங்கட் நான் சொல்ற நியூஸ் சேனல் பாரு நம்ம விதுரனை காட்டுறாங்க. அவன் இப்போ கேரளால தானே இருக்கான். அவனோட டீம் தான் ரெஸ்க்யூ பண்ணிட்டு இருக்காங்க போல…” என்றவர் சேனலை சொல்லிவிட்டு போனை வைத்தார்.

 

“மகிழ் அந்த ரிமோட்டை கொடு நம்ம மாப்பிள்ளை நியூஸ் சேனல்ல வர்றாராம். இப்போ தான் சந்துரு சொன்னான்” என்று அவர் சொல்லவும் இதழ் பரபரப்பானாள்.

 

வீட்டினர் அனைவருமே ஆர்வமாய் அந்த சேனலை வைக்க அதை பார்த்ததும் உயிர் போய் உயிர் வந்தது அனைவருக்கும்.

 

வெள்ளத்தில் உடைந்த பாலத்தில் வந்துக் கொண்டிருந்த மாடு நீரில் இழுத்துச் செல்லப்படுவதை பார்த்த விதுரன் சட்டென்று தண்ணிரில் குதித்திருந்தான். பத்து நிமிடத்திற்கு மேலாகியது அவனையும் காணோம். அடித்துச் செல்லப்பட்ட அந்த பசுவும் அகப்படவில்லை.

 

யாரோ செல்போனில் படம் பிடித்திருப்பார்கள் போலும் அவர்கள் இப்படியும் அப்படியும் திருப்பிக் கொண்டிருந்தவர்கள் ஓரிடத்தில் அப்படியே நிறுத்த விதுரன் மாட்டின் காலில் கயிறை கட்டி கரையை நோக்கி இழுத்து வந்துக் கொண்டிருந்தான்.

 

வெள்ள நீர் வேறு இழுத்துச் செல்லப் பார்க்க அவ்வப்போது தடம் மாறினாலும் அவன் ஒரே குறியாய் கரையை நோக்கி வந்திருந்தான். அதை பார்த்துக் கொண்டிருந்த இதழினியின் வீட்டினருக்கு எப்படியோ ஆகிப்போனது.

 

இதழினியோ வைத்தக்கண் வாங்காமல் தொலைக்காட்சியே பார்த்துக் கொண்டிருந்தாள். அனைவருமே ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

 

வேறு செய்தி போட ஆரம்பிக்கவும் இதழினி அவளறைக்கு எழுந்து சென்றுவிட்டாள். “என்ன வேணி இதெல்லாம்” என்றார் வெங்கட்ராமன் மனைவியை பார்த்து.

“அவர் வேலையை பத்தி நமக்கு தெரியும் தானேங்க…”

 

“தெரியும் ஆனா இதெல்லாம் பார்த்தா மனசுக்கு பக்குன்னு இருக்கே” என்றார் அவர் தன் மனதை ஒளியாமல்.

 

“அம்மா எனக்கும் அப்படித்தான்மா இருக்கு. அக்காவும் என்னவோ போலதான் போறாம்மா”

 

“நாமா எதுவும் யோசிக்க வேணாம் நாளைக்கு பேசுவோம்” என்று முடித்துவிட்டார் வேணி.

 

காலையில் எப்போதும் போல் வேலைக்கு செல்ல கிளம்பி வந்த இதழினி காலை உணவின் போது “அப்பா நமக்கு இந்த இடம் சரியா வரும்ன்னு தோணலை. வேணாம்ன்னு சொல்லிடுங்கப்பா…” என்றாள்.

 

மகளிடம் இருந்து அதை ஓரளவு எதிர்பார்த்திருந்த வேணி “ஏன் இதழ் அப்படி சொல்றே??” என்றார்.

 

“பின்ன என்னமா அவரு எப்படிலாம் ரிஸ்க் எடுக்கறார் பார்த்தியா. எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் உயிர் போய் உயிர் வரணுமா சொல்லுங்க”

 

“நீங்க அக்கா எல்லாம் காலையில போய் சாயங்காலம் வீட்டுக்கு வர்ற மாப்பிள்ளையை தானே கட்டிக்கிட்டீங்க. எனக்கு மட்டும் ஏன் இப்படி பார்த்தீங்க” என்று சொல்லிவிட வேணிக்கு என்னவோ போலானது.

 

அதற்கு பின் அவர் எதுவும் கேட்கவில்லை வெங்கட்ராமனிடம் “அவங்ககிட்ட பேசிடுங்க” என்றுவிட்டு உள்ளே நகர்ந்துவிட்டார்.

 

வேணி உள்ளே சென்றதும் “அப்பா உங்களுக்கு நான் சொல்றது புரியும் நினைக்கிறேன். எனக்கு மாப்பிள்ளை பார்க்கறதா இருந்தா நைன் டு சிக்ஸ் வேலைக்கு போறாப்போல மாப்பிள்ளையா பாருங்க” என்றுவிட்டு எழுந்துவிட்டாள்.

 

“இதழ் இதை நீ முதல்லவே சொல்லியிருக்கணும்” என்றாள் மகிழ் கண்டிப்பான குரலில்.

 

“எனக்கென்ன தெரியும் மகிழ் இப்படியெல்லாம் ஆகும்ன்னு, அதான் இப்போ சொல்லிட்டேன்ல” என்றவள் வேலைக்கு கிளம்பிச் சென்றுவிட்டாள்.

 

அடுத்த சில நாட்களிலேயே அவன் தான் வேண்டும் என்று தான் ஒற்றைக்காலில் நிற்கப் போவதறியாமல் சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.

 

———

 

“என்னடா இன்னைக்கு வீட்டுக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தே, கிளம்பாம இருக்கே??” என்றான் சைலேஷ்.

 

“மூட் இல்லைடா”

 

“ஏன்?? பொண்ணை போய் பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்கல்ல வீட்டில. இன்னும் பத்து நாள்ல நிச்சயதார்த்தம் வேற…”

 

“அதெல்லாம் இல்லை…”

 

“என்ன??”

 

“நிச்சயம் எல்லாம் நின்னுப்போச்சு” என்றான் விதுரன்.

 

“என்ன விது சொல்றே??” என்றவன் விதுரன் அமர்ந்திருந்த இருக்கையை தன் புறம் திருப்பினான்.

 

“அந்த பொண்ணு வேணாம்ன்னு சொல்லிட்டாளாம்…”

 

“ஏனாம்?? உன்கிட்ட தினமும் பேசிட்டு தானே இருந்தா”

 

“ஹ்ம்ம் பேசினா…”

 

“நல்லா தானே பேசினீங்க”

 

“எப்படியிருக்க சாப்பிட்டியா இப்படி பேச்சு தான் பேசினோம்…”

 

“விளங்கிரும் அதான் பிடிக்காம போச்சாமா அவளுக்கு”

 

“அதில்லை…”

 

“வேற என்னன்னு சொல்லித் தொலையேன்டா”

 

“அன்னைக்கு ஆத்து வெள்ளத்துல அந்த பசு மாட்டை காப்பாத்தினேன்ல…”

 

“ஆமா அதுக்கென்ன இப்போ…”

 

“அது டிவி நியூஸ்ல கூட வந்திச்சே” என்று விதுரன் சொல்ல சட்டென்று பிடிப்பட்டது சைலேஷுக்கு.

 

“அதை டிவில பார்த்தாங்களாமா”

 

“ஹ்ம்ம் ஆமா”

 

“இப்படி ரிஸ்க் ஜாப்ல இருக்கவரை எப்படி கட்டிக்கிறதுன்னு சொல்லியிருப்பாங்க போல…”

 

“இதெல்லாம் ஓகே சொல்றதுக்கு முன்னாடி தோணலையாமா… எத்தனை தடவை கேட்டிருப்ப ஓகேவான்னு…”

 

“சரி விடுடா இதென்ன எனக்கு புதுசா. எனக்குன்னு புதுசா ஒருத்தி பிறக்கவா போறா. ஏற்கனவே பிறந்து தானே இருப்பா, வருவா அவளே என்னைத்தேடி வருவா…”

“போடா…” என்று எழுந்து சென்ற சைலேஷுக்கு அவ்வளவு வருத்தமாக இருந்தது நண்பனை குறித்து.

 

பின்னே சைலேஷுக்கு திருமணமாகி இரண்டு வயதில் மகன் இருக்கிறான். இருவருக்கும் ஒரே சமயத்தில் தான் பெண் பார்க்க ஆரம்பித்தனர்.

 

அவனுக்கு சட்டென்று முடிந்து ஒரே மாதத்தில் திருமணம் அடுத்து குழந்தை என்று அவன் செட்டிலாகிவிட்டான். நண்பன் அப்படியே இருக்கிறானே என்று கவலையாகிப் போனது அவனுக்கு.

 

அந்த பெண்ணின் எண்ணை வாங்கி நன்றாக திட்டிவிடலாம் என்று கூட தோன்றியது அவனுக்கு.

 

————

 

“அம்மா என்னோட ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணியாச்சா??”

 

“அதெல்லாம் நீ தான் பண்ணிக்கணும் இதழ் என்கிட்ட சொல்லாதே” என்றுவிட்டு நகர்ந்துவிட்டார் வேணி.

 

விதுரனை அவள் வேண்டாம் என்று சொன்ன அன்றில் இருந்து அவர் மகளிடம் சரியாக பேசுவது கிடையாது. கேட்டால் பதில் பேசுவார் அவ்வளவே.

 

“மகிழ் அம்மா ஏன் அப்படி பண்றாங்க?? நான் என்னடி தப்பு பண்ணேன்…” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு தங்கையிடம் கேட்டாள் இதழினி.

 

“பின்னே அம்மாகிட்ட போய் நீங்கலாம் நல்ல மாப்பிள்ளை கட்டிக்கிட்டீங்க எனக்கு ஏன் இப்படி பார்த்தீங்கன்னு கேட்டா அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா”

 

“அப்போ எனக்கு கஷ்டமா இருக்காத மகிழ்”

“உனக்கென்ன கஷ்டம் நீ தான் மாப்பிள்ளை வேணாம்ன்னு சொல்லிட்டியே”

 

“நான் அப்படி சொன்னது தப்பில்லை தானே அப்புறம் ஏன் அம்மா அப்படி இருக்காங்க…”

 

“இங்க பாரு இதழ் மாப்பிள்ளை வேணும் வேணாங்கறது உன்னோட முடிவு. அதுல நாங்க எந்த குறையும் சொல்லலை… ஆனா அம்மா அப்பா உனக்கு ஏதோ கெட்டது பண்ணுன மாதிரி நீ பேசினது சரின்னு நீ நினைக்கிறியா” என்று மகிழ் எடுத்துச் சொல்லவும் அவள் இழைத்த தவறு புரிந்தது அவளுக்கு.

 

“மகிழ் சத்தியமா நான் அந்த மாதிரி நினைச்சு பேசலைடி. ஏதோவொரு ஆதங்கம் பேசிட்டேன் அது அவங்களை ஹர்ட் பண்ணனும்ன்னு நினைச்சு நான் பேசலை மகிழ்…”

 

“எனக்கு தெரியும் நீ அப்படி இல்லைன்னு அம்மாக்கு அது கஷ்டமா தானே இருக்கும். அவங்களையும் நீ புரிஞ்சுக்கோ” என்றாள் அவள்.

 

அந்த வீட்டில் அவர்களின் அக்கா யாழினி சுயநலமாய் யோசிப்பவள் என்றால் இதழினி சட்டென்று யோசித்து முடிவெடுக்கும் ரகம். மகிழினி மட்டுமே ஒவ்வொரு பக்க நியாயமும் புரிந்து தெளிவாய் பேசுவாள், தெளிவாய் அவ்விஷயத்தை அணுகுவாள்.

 

அதனாலேயே இதழினிக்கு மகிழினியை அதிகம் பிடிக்கும். அவள் மனதில் நினைப்பதை உணர்ந்து அவளுக்காய் பேசுவாள் அவள் தங்கை என்பதறிவாள் அவள்.

 

“நான் அம்மாகிட்ட சாரி கேட்கறேன் மகிழ்” என்றவள் எழுந்திருக்க “இப்போ வேணாம் நீ ஊருக்கு போயிட்டு வா. நீ இல்லாத நேரத்துல அவங்க உன்னை தேடுவாங்க. நீ ஊர்ல இருந்து வந்ததும் பேசினா அவங்க சட்டுன்னு உன்னை மன்னிச்சிடுவாங்க…”

 

“இப்போ பேசினா என்னவாம்…”

 

“நீ போய் பேசி அவங்க மனசுல இருக்கறதை எதாச்சும் சொன்னா ஊருக்கு போற நேரத்துல உனக்கும் சங்கடம் உன்னை பேசிட்டோமேன்னு அம்மாவும் சங்கடப்படுவாங்க…” என்று அவள் சொல்ல அதுவே சரியென்று பட்டது இதழினிக்கு.

 

இதழினி அன்று மூணாருக்கு செல்கிறாள் அவள் அலுவலக நண்பர்களுடன். பத்து பேர் கொண்ட குழு ஒன்று அங்கு செல்கிறது.

 

அவர்களின் டீம் மீட்டிங் அங்கே நடக்கிறது, தவிர அவர்கள் குழுவிற்கு பெஸ்ட் பர்பாமான்ஸ் அவார்ட் கிடைத்திருக்க அதற்காக அவர்களின் அலுவலகமே அங்கு அனுப்பி வைத்திருந்தது அவர்கள் அதை செலிபரேட் செய்ய.

 

முதல் இரண்டு நாட்கள் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய மீட்டிங்கும் அடுத்த மூன்று நாட்கள் அவர்கள் சுற்றிப்பார்க்க கொண்டாட என்றும் ஒதுக்கப்பட்டது.

 

Advertisement