Advertisement

4

 

இயற்கை எழில் மிகுந்த மூணாரின் மலைப்பாதையில் மேலேறிக் கொண்டிருக்கின்றது இதழினியின் குழுவினர் சென்றுக் கொண்டிருந்த வண்டி.

 

சன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்திருந்தவள் பச்சைப்பசேலென்றிருந்த அவ்விடத்தை தன் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

 

பஞ்சு பொதிகளாய் பனி சூழ்ந்த மேகங்கள் மலைமகளின் மடி மீது தவழ்ந்து கொஞ்சி விளையாடி அங்குமிங்கும் ஓடி மறைந்துக் கொண்டிருந்தது பார்க்க கொள்ளையழகாய் இருந்தது அவளுக்கு.

 

இடையிடையே சிற்றருவி போல ஆங்காங்கே தண்ணீர் விழுந்துக் கொண்டிருந்ததும் காணக் கிடைக்காத பொக்கிஷமாய் தான் அவளுக்கு தோன்றியது.

 

அவர்கள் அலுவலகத்தின் கெஸ்ட் ஹவுசுக்கு வந்து சேர இரவாகிப் போனது. ஐந்து அறைகள் கொண்டிருந்த அந்த கெஸ்ட் ஹவுசில் இருவர் இருவராய் ஐந்து அறைகளை எடுத்துக் கொண்டு உறங்கச் சென்றனர் அவர்கள்.

 

வரும் வழியிலேயே சாப்பிட்டு விட்டதால் அனைவருமே உறக்கத்திற்கு சென்றனர். இதழினி தன் தோழி மாதவியுடன் அறையை பகிர்ந்துக் கொண்டாள்.

 

“என்ன இதழ் தூங்கலையா??”

 

“வீட்டுக்கு டிரை பண்ணிட்டு இருக்கேன் மாது…”

 

“இங்க தான் சிக்னல் இல்லையே எப்படி பேசுவியாம்…”

 

“அதான் வை பை இருக்குல, வாட்ஸ் அப் கால் பண்ணப் போறேன் மகிழுக்கு. அம்மா தூங்கி இருப்பாங்க இந்நேரம்” என்றவள் பேசிக்கொண்டே போனுடன் வெளியில் சென்றாள்.

 

“சொல்லு இதழ் மூணாருக்கு போயிட்டியா”


“வந்துட்டேன்டி அம்மா என்ன பண்றாங்க… தூங்கிட்டாங்களா??”

 

“இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தாங்க… நீ போன் பண்ணுவியான்னு பார்த்திட்டு, அப்பா கூப்பிட்டார் அதான் எழுந்து போனாங்க…”

 

“சரி இதழ் நேரமாச்சு நீ தூங்கு எனக்கும் தூக்கம் வருது…” என்று பேசி மகிழ் போனை வைத்துவிட இதழினியும் அறைக்கு வந்தாள்.

 

“பேசிட்டியாடி…”

 

“ஹ்ம்ம் பேசிட்டேன் மாது…” என்றவள் தோழியின் அருகில் படுத்துக் கொண்டாள்.

 

“செமையா குளிருது மாது…” என்றவள் தோழியிடம் போர்வையை பிடுங்கி அவளும் போர்த்திக் கொண்டாள்.

 

அடுத்த மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை அவர்களுக்கு. முதல் இரண்டு நாட்கள் வேலையில் சென்றுவிட மூன்றாம் நாள் அவர்கள் மூணாரை சுற்றி வந்தனர்.

 

நான்காம் நாள் காலை லேசாய் மழை தூறிக் கொண்டிருந்தது. “இதழ் என்ன நீ இன்னும் கிளம்பலை எங்களோட வரலையா…” என்று மாதவி கேட்க அவள் மூன்று விரல்களை நீட்டிக் காட்டினாள்.

 

“அடுத்த வாரம்ன்னு தானேடி சொன்ன, அதுக்குள்ளவா…”

 

“நானும் அப்படித்தான் நினைச்சு இந்த வாரம் போக ஓகே சொன்னேன். இப்போ என்னடான்னா இப்படி மாட்டிக்கிச்சு. மழையில நான் வரலை, எனக்கு வயிறு வேற வலிக்குது மாது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க…”

 

“அவங்க எல்லாம் கேட்டா எனக்கு தலைவலின்னு சொல்லிரு”

 

“சரிடி உனக்கு ஒண்ணும் ப்ரோப்லேம் இல்லையே, தனியா இருந்துப்பியா… நீ ப்ரிபேர் ஆகித்தான் வந்தியா அதுக்கு…” என்றாள் மற்றவள்.

 

“அது எப்பவும் என் ஹேண்ட்பேக்ல ஒரு பேக் ஸ்டாக் இருக்கும் மாது. எனக்கு எதுவும் ப்ரோப்லேம் இல்லை. அதான் இங்க சமைக்கறவங்க பேமிலி எல்லாம் இருக்காங்கல நான் பார்த்துக்கறேன்” என்றாள் அவள்.

 

“சரி டேக் கேர் பை…” என்று அவள் வெளியேறிட “இரு நானும் வர்றேன் இல்லைன்னா ஒவ்வொருத்தரா உள்ள வந்து என்ன என்னன்னு கேட்பாங்க…”

 

“இதுக்கு நீயே அவங்ககிட்ட சொல்லியிருக்கலாம்” என்று மாதவி சொல்லிட இருவரும் பேசிக் கொண்டே வெளியே வந்தனர்.

 

மற்றவர்களும் அவள் கிளம்பாதது பற்றிக் கேட்க அவளுக்கு தலைவலி என்று மாதவி சொல்லவும் அவர்கள் அவளை பத்திரமாய் இருக்கச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.

 

அவர்கள் சென்ற சில மணி நேரத்திலேயே வெளியே மையிருட்டாகிப் போனது. உறக்கத்தில் இருந்து விழித்த இதழினி கண் விழித்து பார்க்க அறையில் இருள் சூழ்ந்திருந்தது.

 

வெளியில் வந்து பார்க்க வானம் இதோ கொட்டிவிடுவேன் என்று அடக்கி வைத்திருந்த கண்ணீரை வெளியேற்றுவது போல பொல பொலவென்று கொட்டித் தீர்த்தது.

 

இதழினி லேசாய் நனைந்துவிட வேகமாய் உள்ளே சென்று கதவடைத்தாள். வேறு உடைக்கு மாறி அவள் நண்பர்களுக்கு அழைக்க அவர்களின் போனுக்கு அழைப்பே செல்லவில்லை.

 

என்னவென்று தன் போனை எடுத்துப் பார்க்க வை பை வேலை செய்யவில்லை. மாலை நான்கு மணி வரை விடாமல் மழை அடித்து பெய்ய இதழினிக்கு பயம் பிடித்துக் கொண்டது.

மதியம் உணவை சமைத்து வைத்துவிட்டு சென்ற சமையல்க்காரப் பெண் அவள் கணவனைத் தேடி சென்றிருந்தாள்.

 

மழை சற்று குறையவும் அவள் குடையை எடுத்துக்கொண்டு அவளிடம் சொல்லிவிட்டு தான் சென்றாள்.

 

அந்த மலையின் உயரத்தில் அவர்களின் கம்பெனியின் கெஸ்ட் ஹவுஸ் மட்டுமே தனியே இருந்தது. அருகில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு வீடுகளோ கடைகளோ எதுவும் இல்லை என்பதை வந்த மறுநாளே கண்டிருந்தாள்.

 

லேசாய் இருந்த பயம் அதிகமாகி அவளின் அந்த மூன்று நாட்களின் உதிரப்போக்கை அதிகப்படுத்த கை கால்கள் எல்லாம் துவண்டு போனது அவளுக்கு.

 

உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியேயும் செல்ல முடியாமல் அவஸ்தையாகவும் பதட்டமாகவும் உணர்ந்தாள்.

 

ஒரு வழியாக நாலரை மணி போல மழை முற்றிலும் விட்டிருந்தது. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அங்கிருந்த குடையை கையில் எடுத்துக் கொண்டு  வெளியில் வந்து பார்த்தாள். அவர்கள் செல்ல வேண்டிய பாதையே கண்ணுக்கு தெரியவில்லை.

 

மழை தான் நின்றிருந்ததே தவிர இருள் இன்னமும் விலகியிருக்கவில்லை. மெதுவாய் தான் விலகுவேன் என்று அடம்பிடித்து நின்றது போல இருந்தது அந்த தோற்றம்.

 

ஊரில் உள்ள கடவுளை எல்லாம் துணைக்கழைத்துக் கொண்டிருந்தாள் இதழினி. அவளுக்கு தெரிந்த பாதையில் மெதுவாய் அவள் நடக்கப் போக வழியே சுத்தமாய் தெரியவில்லை. மண் சரிந்து அந்த இடமே சேறும் சகதியுமாய் இருந்தது.

 

அவளுக்கு இருந்த கடைசி நம்பிக்கையும் சென்றுவிட அதுவரை வானில் பொழிந்துக் கொண்டிருந்த மழை இப்போது அவள் விழிகளில்.

 

———-

 

“விது என்ன பண்ண போறேடா…”

 

“விது அங்க என்ன மேன் பண்ணுறே” என்ற குரல்கள் கேட்க அதையெல்லாம் சட்டை செய்யாமல் அவன் கயிறு ஒன்றை மேலிருந்த மரத்தை நோக்கி குறி பார்த்து வீசிக் கொண்டிருந்தான்.

 

“விது என்னன்னு சொல்லிட்டு பண்ணு” என்ற குரல் அழுத்தமாய் ஒலிக்க “சார் நேத்து நைட்ல இருந்து இங்க மண் சரிவு இருக்கு. நிறைய வீடு புதைஞ்சு போச்சுன்னு சொன்னதுனால தானே நாமே இங்க வந்திருக்கோம்”

 

“நான் எப்போ அதெல்லாம் இல்லைன்னு சொன்னேன்” என்றார் அவனின் மேலதிகாரி விஷ்ணு.

 

“கொஞ்ச முன்னாடி சுனில் போன் பண்ணி இங்க மேலே ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்குன்னு சொன்னது மறந்து போச்சா. அங்க பத்து பேருக்கு மேல இருக்காங்க அவங்க ஸ்டாப்ஸ்ன்னு சொல்லியிருக்கார்…”

 

“விதுரன் நமக்கு ஆபிசியலா கவர்மென்ட்ல இருந்து எந்த ஆர்டரும் வரலை இங்க வந்து பார்க்கச் சொல்லி. நாம கீழ போய் நம்ம வேலையை பார்ப்போம். இங்க வரச்சொல்லி ஆர்டர் வந்தா வருவோம்…” என்று அவர் பொறுப்பே இல்லாமல் சொல்ல விதுரனுக்கு கோபம் வந்தது.

 

“அப்போ உயிர் போனாதா உங்களுக்கு எல்லாம் புரியுமா சார்… என்ன சார் இப்படி பேசிட்டு இருக்கீங்க… நீங்க வேணா கீழே போய் மத்த எல்லாரையும் பாருங்க… நான் இங்க இருக்கவங்களை கூட்டிட்டு வர்றேன்”

 

“எப்படி கூட்டிட்டு வருவே?? பாதையே இல்லை பூரா மண்ணு சரிஞ்சு கிடக்குது. எப்படி போவே??”

 

“எப்படியோ போய்க்கறேன் நீங்க போய் மத்த எல்லாரையும் பாருங்க சார்…” என்றான் அவன்.

 

“எதாச்சும் தப்பு நடந்தா நான் உங்க மேல தான் ஆக்சன் எடுப்பேன் விதுரன்” என்று கண்டிப்பு குரலில் சொல்லி நகர்ந்தார் அவர்.

 

சைலேஷ் அவனிடம் தனியே வந்து “ஏன் விது அவர் சொல்றதை தான் கேளேன்…” என்று சொல்ல நண்பனை முறைத்தான் அவன்.

 

“சரி நீ போ ஆனா எப்படிடா இந்த ரோப் சரியா பிக்ஸ் ஆகலைன்னா நீ தானேடா கீழே விழுவ”

 

“ஐ நோ ஹவ் டு ஹாண்டில் திஸ்” என்று பதில் கொடுத்தான் அவன்.

 

“ஓகே நான் இங்க இருக்கேன். நீ பர்ஸ்ட் மேல போ நான் அப்புறம் கிளம்புறேன்…” என்றுவிட்டு சைலேஷ் அங்கேயே நின்றுக் கொண்டான்.

 

விதுரன் மூன்றாம் முறை முயற்சி செய்து ஒரு மரத்தில் கயிறு மாட்டிக் கொள்ள மெதுவாய் மேலேறினான். சைலேஷ் கீழேயே நின்றான்.

 

ஒரு வழியாய் அவன் மேலேறி சென்றதும் தான் மூச்சே வந்தது சைலேஷுக்கு. ‘இருந்தாலும் இவன் ரொம்ப ரிஸ்க் எடுக்கறான்’ என்பது தான் அவன் எண்ணமாக இருந்தது.

 

“ஓகேவா விது…”

 

“எஸ் ஐ யம் ஓகேடா…” என்று அவன் மேலிருந்து குரல் கொடுக்க “சரி நீ பார்த்திட்டு கூப்பிடு நாங்க பக்கத்துல தான் இருப்போம்” என்றவன் நகர்ந்துவிட்டான்.

 

விதுரன் அந்த கயிறை எடுத்து தன் பேக்கில் பத்திரப்படுத்தியவன் திறந்திருந்த அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.

 

“யாராச்சும் இருக்கீங்களா?? ஹலோ… ஹலோ…” என்று குரல் கொடுத்தவன் அறைக்குள் இருட்டு இருக்கவும் தன் கையில் இருந்த டார்ச்சை உமிழ விட்டான்.

 

அறையெங்கும் நிசப்தமாய் இருந்தது. “என்னடா இது யாருமேயில்லையா… அப்புறம் ஏன் அந்த சுனில் இங்க பத்து பேரு இருக்கறதா சொன்னான்…” என்று பேசிக்கொண்டே ஒவ்வொரு அறைக்கதவாக அவன் திறந்து பார்க்க நான்காவதாக இருந்த அறையில் அழுகுரல் கேட்கவும் வேகமாய் அங்கு சென்றான்.

 

“ஹலோ…” என்று அவன் குரல் கொடுக்க சத்தம் கேட்டு எழுந்த இதழினி யாரென்றும் பாராமால் அவன் முன்னே வந்து நின்றிருந்தாள்.

 

இருளில் இருந்து வெளிச்சத்தை அவள் பார்க்கவும் கண்கள் கூச விதுரனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.

 

“சார் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க… என்னை காப்பாத்துங்க… ப்ளீஸ் காப்பாத்துங்க…” என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

வெகு நேரமாய் அழுதிருப்பாள் போலும் குரல் உடைந்திருந்தது. “காம் டவுன்” என்றவன் “நீங்க மட்டும் தான் இங்க இருக்கீங்களா??”

 

“ஆமா…”

“மத்தவங்க எல்லாம் எங்கே??”

 

“எல்லாரும் அவுட்டிங் போனாங்க இன்னும் வரலை… எனக்கு உடம்பு சரியில்லை நான் போகலை…”

 

“ஓகே பயப்படாதீங்க… ஏன் லைட்ஸ் எல்லாம் போடலை…”

 

“பவர் இல்லை…”

 

“இங்க யூபிஎஸ், ஜெனரேட்டர் எதுவும் இல்லையா…”

 

“தெரியாதே”

 

“என்ன தெரியாது?? இங்க வந்து நாலு நாள் ஆச்சுல அது கூடவா தெரியாது” என்று கடிந்தவன் முகம் அப்போது தான் அவள் கண்களில் விழுந்தது.

 

பக்கென்றிருந்தது அவளுக்கு அவனை கண்டதும். “நீங்க…” என்று நிறுத்திவிட்டாள்.

 

“நான் தான்… வேற யாருமில்லை…” என்றவனுக்கு அவளை நன்றாகவே அடையாளம் தெரிந்திருந்தது.

 

“இல்லை வந்து…”

 

“நான் அதைப்பத்தி பேச வரலை. இங்க எமெர்ஜென்சின்னு தான் கிளம்பி வந்திருக்கோம். உங்க ஆபீஸ்ல இருந்து ஒரு போன் வந்துச்சு. இங்க நீங்க எல்லாம் இருக்கீங்க, ரெஸ்க்யூ பண்ணனும்ன்னு சொல்லி. எங்க டீம் மத்த எல்லாரையும் மீட்க போயிருக்காங்க. நான் இங்க வந்தேன்” என்றான்.

 

“எனக்கு இப்போவே வீட்டுக்கு போகணும்” என்று சிறுகுழந்தையாய் அவள் சொல்ல “அதெப்படி போக முடியும் கொஞ்சம் லாஜிக்கா பேசுங்க” என்றான் அவன் எரிச்சலான குரலில்.

 

“அப்போ எப்படி போகறது?? எப்போ போகறது??” என்றாள் அடுத்த கேள்வியாய்.

 

“என் டீம் கீழே தான் இருப்பாங்க நான் பார்க்கறேன். நீங்க கூட வாங்க…” என்றவன் அவளுடனே செல்ல அவன் வந்த வழியே வந்து நின்றுக் கொண்டு கீழே பார்த்தான்.

 

“சைலேஷ்… சைலேஷ்…” என்று அவன் குரல் கொடுக்க அவன் குரல் தான் எதிரொலித்ததே தவிர பதில் வரவில்லை.

 

மீண்டும் மீண்டும் அவன் அழைக்க பதில் இல்லாது போகவும் அவன் போனை எடுத்து நண்பனுக்கு அழைக்க டவர் இல்லாது போனதால் அழைப்பு செல்லவில்லை.

 

அவர்களின் பிரத்யேக அழைப்பு சாதனத்தை எடுத்துப் பார்க்க பேட்டரி தீர்ந்து போய் அது அணைந்திருந்தது.

 

“உங்ககிட்ட பவர் பேங்க் இருக்கா??”

 

“எதுக்கு??”

 

“இருக்கா?? இல்லையா?? அன்சர் மீ பர்ஸ்ட்”

 

“இருக்கு”

 

“எடுத்திட்டு வாங்க. இதை சார்ஜ் பண்ணனும், அப்போ தான் என்னோட டீமை கூப்பிட முடியும்” என்றான்.

 

அவள் உள்ளே சென்று பவர் பேங்க்கை எடுத்து வரச் செல்ல “நான் இங்க ஜென்செட் இருக்கான்னு பார்க்கறேன்… நீங்க இங்கவே நில்லுங்க ஓகேவா” என்றவன் அந்த வீட்டை ஒரு சுற்று சுற்றி வந்தான்.

 

ஒரு வழியாய் ஜென்செட் இருக்கும் அறையை அவன் கண்டு பிடித்திருக்க அதை ஆன் செய்யவும் அறையெங்கும் வெளிச்சம் பரவியது. தேவையான விளக்குகளை மட்டும் ஒளிரவிட்டு இருவரும் ஹாலில் வந்து அமர்ந்தனர்.

 

“பவர் பேங்க்” என்று அவள் இன்னமும் நீட்டிக் கொண்டிருக்க “அதான் பவர் இருக்கே” என்று அவன் சொன்னதும் தான் நீட்டிய கையை மடக்கினாள்.

 

“ஒரு காபி கிடைக்குமா” என்றவன் அறையை சுற்றி கண்களை சுழலவிட்டான்.

 

“இல்லை இங்க ஒரு சமையல் லேடியும் அவங்க ஹஸ்பெண்ட் இருக்காங்க அவங்க தான் சமைப்பாங்க…”

 

“கிட்சன் எங்க இருக்கான்னாச்சும் தெரியுமா” என்று அவன் கேட்க கையை அந்த அறையை நோக்கி நீட்டினாள்.

 

எழுந்து சென்றவன் ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க விட்டு காபி பொடியை தேட டீத்தூள் தான் கண்ணில்ப்பட்டது.

 

அதை எடுத்து தண்ணீரில் போட்டவன் கொதிக்க வைத்து இறக்கி அங்கிருந்த வடிக்கட்டியில் வடித்து சர்க்கரை சேர்த்துக் கொண்டு குடித்துப் பார்க்க நன்றாகவே இருந்தது.

 

தனக்கும் அவளுக்குமாய் அதை ஊற்றிக் கொண்டவன் வெளியே வந்து ஒன்றை அவளிடம் நீட்ட அவளுக்கும் அந்நேரம் அது தேவையாக இருக்க வாங்கி குடித்தாள் அவள்.

 

Advertisement