Advertisement

 

“நம்பலை நம்பலை”

 

“எதை நம்பலை, ரொம்பவும் கஷ்டப்பட்டு கதை சொன்னேனே நம்புற மாதிரி இல்லையா”

 

“மாமா சொன்னதும் நீங்க என்னை பார்க்கலைங்கறதை நம்பறேன், அவர் சொன்ன சொல்லை நீங்க மதிங்கறீங்க அப்படிங்கறதை நான் நம்பறேன்”

 

“வேற எது நான் சொன்னதுல நம்புற மாதிரி இல்லை”

 

“என் மேல இன்ட்ரெஸ்ட் இல்லாத மாதிரி ஒரு கதை சொன்னீங்களே. அதை நான் நம்பவே இல்லை… நீங்க சொன்ன கதைக்கு அங்க வந்து பிறகு உங்களை வைச்சுக்கறேன்…” என்று பல்லைக்கடித்தாள்.

 

“கண்டுப்பிடிச்சிட்டியா கள்ளி, என்னை அப்புறம் வைச்சுக்கோ இப்போ வீடியோ கால் வா நேர்ல உன்னை சரியா பார்க்கலை இப்போ பார்த்துக்கறேன்” என்றான் அவளிடம்.

 

“என்னது சரியா பார்க்கலையா, எல்லாரும் இருக்கும் போது என்ன எப்படி பார்த்தீங்கன்னு தான் எனக்கு தெரியமே. இதுல சார் சரியா பார்க்கலையாம். என்ன இருந்தாலும் எங்க மாமா மாதிரி வராது. சொக்கத்தங்கம் அவரு. அவரு தம்பி நீங்க”

 

“நானும் தங்கம் தான்மா”

 

“தங்கம் தான் கொஞ்சூண்டு செப்பு கலந்த தங்கம்” என்று சொல்லி அவள் சிரிக்க “அடிங்க…” என்றான் அவன்.

 

—————-

 

அறை முழுவதும் மூங்கில் கம்பு வைத்து கட்டப்பட்டிருந்தது. கட்டில், நாற்காலி என்று அனைத்தும் மூங்கிலிலேயே செய்யப்பட்டிருந்தது.

 

இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இது போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்

 

என்று பாடிக்கொண்டே இதழினியை விரட்டிக் கொண்டிருந்தான் விதுரன். அவன் கைபேசியும் வேறு விடாது அந்த பாட்டைத்தான் பாடிக்கொண்டிருந்தது.

 

“இப்போ எதுக்கு இந்த பாட்டாம்??”

 

“வேறே எப்போ போடுறதாம்??”

 

“நீங்க எப்போல இருந்து இப்படி ஆனீங்க அந்த கதையை முதல்ல சொல்லுங்க” என்று மூச்சிரைக்க ஓடிக்களைத்த இதழினி.

 

“இங்க வா” என்றவன் நாற்காலியில் அமர்ந்திருக்க அவன் மடி மீது அமர்ந்துக் கொண்டாள் அவள்.

 

அவர்கள் மூணாருக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. இரண்டு நாட்களும் விதுரனின் கொஞ்சலில் சீண்டலில் இதழினியின் முகமே சிவந்து போயிருந்தது.

 

திருமணமாகி புதிதில் நடந்திருக்க கொஞ்சல் அனைத்தும் அப்போது தான் நடந்துக்  கொண்டிருந்தது.

 

“சொல்லுங்க  முதல்ல”

 

“என்ன சொல்லணும்” என்றவனின் கரம் அவள் இடையில் தவழ்ந்து குறுகுறுப்பூட்டியது அவளுக்கு.

 

அவன் கன்னமோ அவள் கன்னத்தோடு இழைய அவன் உதடுகள் அவள் கழுத்து வளைவில் பதிந்தது.

 

முயன்று அவனை தள்ளிக்கொண்டு எழுந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டான் விதுரன். மூச்சு முட்ட அவளை இறுக்கியிருக்க “விடுங்க முடியலை என்னால” என்று அவள் சொல்லிய பிறகே இறுக்கத்தை தளர்த்தினான்.

 

அவளை அணைத்துக்கொண்டே கட்டிலில் வந்து அமர்ந்தான்,“இதழ்” என்றவாறே.

 

“என்ன??” என்றாள் வெடுக்கென்று.

 

“கோவிச்சுக்கிட்டியா??”

 

“நான் கோவிச்சா மட்டும் நீங்க சொல்லிடப் போறீங்களா??”

 

“சரி சொல்றேன்”

 

அவள் பதிலே பேசவில்லை அவனே சொல்லட்டும் என்று எங்கோ பார்த்திருந்தாள். “நான் உன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி எனக்கு உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும். அதுக்கு கொஞ்சம் பதில் சொல்லேன்”

“என்ன??”

 

“நமக்குள்ள முதல்ல மனஸ்தாபம் வந்தது சைலேஷ்கிட்ட நீ பேசின அன்னைக்கு தான். அப்போ ஏன் அப்படி நடந்துக்கிட்டே??”

 

“இப்போவாச்சும் உங்களுக்கு கேட்கணும்ன்னு தோணிச்சே. கேட்காமலே போயிடுவீங்களோன்னு நினைச்சேன்”

 

“சரி சொல்லு”

 

“சைலேஷ் அண்ணா உங்களுக்கு ரொம்ப கிளோஸ்ன்னு எனக்கு தெரியும். அதுக்காக வாரத்துல ஒரு நாள் ரெண்டு நாளாச்சும் உங்களோட அவங்க தங்கறது சரின்னு நீங்க நினைக்கறீங்களா” என்று அவள் சொல்லவும் அவனுக்கு லேசாய் கொஞ்சம் கோபம் எட்டிப்பார்த்தது உண்மை தான்.

 

“அதுல என்ன தப்பிருக்கு??”

 

“தப்புன்னு நான் சொல்லலை. ஆனா சரியில்லை, அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு, குழந்தை, வைப்பை விட்டுட்டு உங்களோட வந்து தங்கறது எந்தவிதத்துல சரின்னு சொல்லுங்க”

 

“அது இப்போ சரியா இருக்கலாம், இருக்கற மாதிரி தோணலாம். சீனியர்க்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் வெறுப்பு தானே வரும்”

 

“உனக்கு வெறுப்பா இருந்துச்சா”

 

“இங்க பாருங்க நீங்க எதை நினைச்சு இப்படி கேட்டீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் இப்போ சொல்றது தான், எனக்கு சைலேஷ் அண்ணாவை பிடிக்கும்”

 

“நான் உங்களைவிட அவங்களை அவ்வளோ டார்ச்சர் பண்ணியிருக்கேன். அவங்க கொஞ்சம் கூட முகம் சுளிச்சதில்லை எங்கிட்ட எப்பவும்”

 

“சீனியர் விஷயத்தை நீங்க யோசிக்கணும். அவங்க கூட பெரியவங்கன்னு யாருமே இல்லை. வீட்டில அவங்களை தனியா விட்டு உங்களோட வந்து தங்கறது என்ன நியாயம் சொல்லுங்க”

 

“உன்கிட்ட பாரதி எதுவும் சொன்னாளா??”

 

“இப்போ கூட நீங்க எங்களை தான் தப்பா நினைக்கறீங்க பார்த்தீங்களா”

 

“நான் தப்பா நினைச்சு கேட்கலை இதழ். தெரிஞ்சுக்கத்தான் கேட்கறேன் உனக்கெப்படி தெரியும் இதெல்லாம்”

 

“நான் அன்னைக்கு முதல்ல சீனியர்க்கு தான் கூப்பிட்டேன். பேச்சு வாக்குல தான் அவங்க சொன்னாங்க. தனியா படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது, இங்க திருட்டு பயம் அதிகம் அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க”

 

“எனக்கு அதை கேட்டு என்னவோ போல ஆகிடுச்சு. அதான் அன்னைக்கு அப்படி சொன்னேன். மத்தப்படி வேற எந்த எண்ணமும் எனக்கில்லைங்க” என்றாள்.

 

விதுரன் இதுவரை இப்படியெல்லாம் யோசித்ததேயில்லை. இதழினி சொல்லவும் தங்கள் மீதும் தவறிருக்கிறது என்று புரிந்து அமைதியானான். இதழினியை பார்க்க அவள் எங்கோ பார்வையை பதித்திருந்தாள் யோசனையாய்.

 

“என்னை பாரு இதழ்” என்றவன் அவள் முகத்தை தன் புறம் திருப்பினான்.

 

அவள் கண்களோடு கண்கள் கலந்தவன் “நான் எப்பவும் ஒரே மாதிரி தான் இதழ்”

 

“ஒண்ணுமில்லை அப்போ நீங்க என்னை கண்டுக்க கூட மாட்டீங்க. உங்க தேவை முடிஞ்சதும் பேசாம தூங்கிருவீங்க”

 

“உன் மேல கைப்போட்டு தானே தூங்குவேன்”

 

“ஹ்ம்ம் ஆமா”

 

“இங்க பாரு எனக்கு இந்த லவ் மேல எல்லாம் பெரிசா எந்த அபிப்பிராயமும் எப்பவும் இருந்ததில்லை”

 

“என்னை பொறுத்தவரை படிப்பு படிப்பு படிப்பு மட்டுமே தான். அதைவிட்டா ஸ்போர்ட்ஸ்ல தான் என்னோட இன்ட்ரெஸ்ட் எல்லாம்”

 

“படிச்சு முடிச்சு வேலைக்கு போகவும் வீட்டில பொண்ணு தேட ஆரம்பிச்சாங்க. சொந்தக்காரங்க முன்னாடி பெரிய ஆளா வரணும்ன்னு அப்போ எனக்கு ஒரு வெறியே உண்டு…”

 

“அப்பா கதை உனக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்” என்று அவன் சொல்ல அவள் தெரியுமென்பதாய் தலையாட்டினாள்.

 

“எப்படி??”

 

“பொண்ணு கொடுக்கறதா இருந்தா நாலு பேரை விசாரிக்க மாட்டாங்களா என்ன”

 

“நிஜமாவா!! அப்போவும் உங்க வீட்டில என்னை உனக்கு மாப்பிள்ளையா செலக்ட் பண்ணாங்களா!!” என்றான் ஆச்சரியம் மேலிட!!

 

“ஹ்ம்ம் ஆமா… மாமா பண்ண தப்புக்கு நீங்க என்ன செய்வீங்க. அம்மா அப்பாக்கு மட்டுமில்லை எனக்கும் அப்படித்தான் தோணிச்சு அப்போ” என்று அவள் சொல்லவும் அவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

 

“வீடு கட்டின பிறகு தான் கல்யாணப் பேச்சை எடுக்கணும்ன்னு அப்போ சொல்லிட்டேன். முன்னாடி இருந்தது கொஞ்சம் சின்ன வீடு தான். நான் வேலைக்கு போகவும் வீட்டை பெரிசா கட்டினேன்”

 

“அதுக்கு பிறகு அம்மா எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க… பெரும்பாலும் என்னோட வேலையை காரணம் காட்டி மறுத்திடுவாங்க பொண்ணு வீட்டுல”

 

“உங்க வீட்டில தான் எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொல்லி அம்மா என்னை பொண்ணு பார்க்க வரச்சொன்னாங்க. அப்புறம் நடந்த கதை தான் உனக்கே தெரியுமே”

 

“மறுபடியும் உன்னை இங்க நான் பார்த்தப்போகூட எனக்கு ஒண்ணுமே தோணலை. என்னை வேணாம்ன்னு சொல்லிட்டியேன்னு வருத்தம் இருந்தாலும் உன்னோட விருப்பத்தை நான் மதிச்சேன், அதான் உன்னை எதுவும் கேட்கலை”

 

“அந்த கெஸ்ட் ஹவுஸ்ல தான் உன்னோட பார்வை மாறினதை பார்த்தேன். அப்போ கூட ஏதோ நல்ல விதமா யோசிக்கற போலன்னு மட்டும் தான் நினைச்சேன். அதனால தான் அப்போ அதை நான் பெரிசா கண்டுக்கலை”

 

“பார்த்தா அம்மணி ஒரே நாள்ல என் மேல லவ்வாகிட்டீங்க. அதைவிட ஸ்பீடா பெரிய வேலை எல்லாம் செஞ்சு நம்ம கல்யாணமும் நடந்திடுச்சு”

 

“நீங்க வேணாம்ன்னு அப்போ சொல்லலையே”

“அப்போ அம்மாவுக்காக தான் சம்மதம் சொன்னேன். உண்மையை சொல்லணும்ன்னா உன்னை வேணாம்ன்னு மறுக்க எனக்கு தோணலை, அதுவும் ஒரு காரணம்”

 

“எனக்கு உன் மேல கொஞ்சம் வருத்தமும் கோபமும் அப்போ இருந்துச்சு. நம்ம கல்யாணத்தன்னக்கு ஒரு கணவனா உன் மேல உரிமையை எடுத்துக்கிட்டேன்”

 

“அப்புறம் நடந்த கதையை நாம பேச வேண்டியதில்லை. நீ நெருங்கி வந்தப்போ எனக்கு தோணாத உணர்வு நீ என்னைவிட்டு தள்ளிப்போனப்போ தான் அதிகமாச்சு. அது வேற எதுவுமில்லை உன் மேல எனக்கிருக்க அன்பு. அதை நானே உணர ஆரம்பிச்சது அப்போ தான். உன் மேல என்னையே அறியாம ப்ரியம் வந்திருக்கு”

 

“ஆனா அப்போ அதை நான் புரிஞ்சுக்கலை. மத்தவங்க மாதிரி தான் நானும் அப்போ நடந்துக்கிட்டேன். உன்னோட ஒவ்வொரு செயலையுமே நான் ரசிச்சுருக்கேன்னு உன்னைவிட்டு இருந்த நாட்கள் தான் எனக்கு உணர்த்துச்சு”

 

“உங்க கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல வைச்சு உன்னை அவ்வளவு திட்டினேன். ஒரு வார்த்தை எதிர்த்து பேசலை நீ. என்ன இந்த பொண்ணு இவ்வளவு மக்கா இருக்கே, நல்ல வேலை இவளே கல்யாணம் வேணாம்ன்னு சொல்லிட்டா அப்படின்னு கூட அப்போ தோணிச்சு” என்று சொல்லவும் முகம் சுருங்கினாள் அவள்.

 

“நீ எனக்குள்ள எந்தளவுக்கு ஆழமாக இறங்கியிருக்கேன்னு அப்போ எனக்கு தெரிஞ்சிருக்கலை. அதெல்லாம் ஒரு நொடியில புரிய வைச்சது அந்த நெய்வேலி சுரங்கம் தான்”

 

“திடிர்னு நெருப்பு பிடிக்கவும் ஒண்ணுமே செய்ய முடியலை அங்க. சுத்தி நெருப்பு வழியே இல்லைங்கற மாதிரி இருக்கு. உன்னை பார்க்க முடியுமான்னு தோணிடுச்சு”

“தேவையில்லாம உன்கிட்ட கோபப்பட்டுட்டேன்னு என்னையே நான் திட்டிக்கிட்டேன். உன்னை பார்க்கணும் பார்த்தே ஆகணும்ன்னு ஒரு ஆவேசம் வந்துச்சு. அதுக்கு பிறகு எப்படியோ வெளியே வந்தோம்”

 

“என்னோட நேசத்தை உன்கிட்ட உடனே சொல்ல முடியாத அளவுக்கு எனக்கு ஈகோவும் இருந்துச்சு. பின்னே என்னை இப்படி மாத்துவேன்னு நான் நினைக்கலை. அதை உன்கிட்ட காட்டிக்கவும் எனக்கு மனசில்லை. அதான் இவ்வளவு நாள் தள்ளிப்போச்சு இதெல்லாம் உன்கிட்ட சொல்ல” என்று முடித்திருந்தான் அவன்.

 

அவளோ அவனை பார்க்காது எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள், யாரோ யாரிடமோ கதை சொல்வது போல.

 

“இதழ்” என்று அவன் அழைக்கவும் திரும்பி பார்த்தாள். “உன் மேல நான் பைத்தியமா இருக்கேன்னு நான் வாய்விட்டு தான் சொல்லணுமா. அன்பு சொல்லி புரியறதில்லை, செயல்ல தான் புரியும்”

 

“என்னோட அன்பை நீ புரிஞ்சுக்கலையா இதழ். மனைவின்னா இப்படித்தான் இருக்கணும், அவளை இங்க தான் வைக்கணும்ன்னு நானே ஒரு வரையறை வைச்சிருந்தேன்”

 

“நீ அதெல்லாம் தேவையில்லைன்னு எகிறி குதிச்சு வந்து நேரா என்னோட இதயத்துல உட்கார்ந்திட்ட இதழ். என் இதயத்தை ஆட்சி செய்யறது இந்த இதழினி தான்… நீ மட்டும் தான்” என்றான் உணர்ச்சி பொங்க.

 

இதழினிக்கு அவன் பேசப்பேச கண்ணில் அருவியாய் நீர் பொழிந்தது. இருக்கரங்களால் அவன் கழுத்தில் மாலையிட்டு அவனை தன் புறம் இழுத்தவள் அவன் அதரத்தில் அழுந்த இதழ் பதித்தாள்.

 

நன்றி

Advertisement