Advertisement

20

 

“எங்க போறோம்??”

 

“ஹனிமூன்க்கு”

 

“என்ன??”

 

“ஆமா”

 

“இப்போவா…”

 

“வேற எப்போ போக??”

 

“இல்லை வந்து ஊருக்கு போயிட்டு அத்தை மாமாகிட்ட எல்லாம் சொல்லிட்டு…” என்று அவள் இழுக்க “அவங்ககிட்ட எல்லாம் நானே சொல்லிட்டேன். உனக்கு சொல்லணும்ன்னா போன் பண்ணி பேசிடு”

 

“என்ன திடிர்ன்னு??”

 

“திடிர்ன்னு எல்லாம் இல்லை ரொம்ப நாளாவே யோசிச்சது தான் இப்போ தான் நேரம் கிடைச்சது எனக்கு”

 

அவர்கள் பேச்சுக்கு இடையூறு செய்வது போல அவளின் கைபேசி சிணுங்கியது. யாரென்று அவள் எடுத்துப் பார்க்க மகிழினி அழைத்திருந்தாள்.

 

“யாரு??”

 

“மகிழ் கூப்பிடுறா…”

“பேசு” என்றவன் சைகை காட்ட அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

 

“சொல்லு மகிழ் இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க”

 

“உன்கிட்ட பேசணும் நீ இப்போ பீரியா”

 

“சொல்லுடி”

 

“உன்கிட்ட அன்னைக்கே சொன்னேன்ல பேசணும்ன்னு, நீ பாட்டுக்கு ஸ்டேஷன்க்கு வீட்டுல இருக்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து நின்னுட்ட”

 

“அவங்க வர்றேன்னு சொல்லும் போது நான் வேணாம்ன்னா சொல்ல முடியும் சரி நீ சொல்லு”

 

“நேத்து போன் பண்ணேன் நீ எடுக்கவேயில்லை”

 

“அடியேய் என்னடி பிரச்சனை உனக்கு. நேத்து பண்ணேன் எடுக்கலை இன்னைக்கு பண்ணேன் பதில் சொல்லலைன்னு குறை படிச்சுட்டு. அதான் இப்போ எடுத்திட்டேன்ல என்ன விஷயம்ன்னு சொல்லு” என்றாள் சத்தமாக.

 

விதுரனோ என்னாச்சு என்பது போல் அவளை திரும்பி பார்த்தான். ஒன்றுமில்லை என்று வாயசைத்தவள் தங்கையின் பேச்சை கேட்க தயாரானாள்.

 

“எனக்கு அரசுவை பிடிச்சிருக்கு”

 

“என்னடி சொல்றே??”

 

“உன் மச்சினர் திருநாவுக்கரசை தான் சொன்னேன்”

 

“நிஜமா தான் சொல்றியா??”

 

“நான் எதுக்கு பொய் சொல்லப் போறேன். வீட்டில ஒரு வாரமா என் கல்யாண பேச்சு தான் ஓடுது. அதான் அன்னைக்கு உன்கிட்ட சொல்லிடலாம்ன்னு வந்தேன்”

 

“உன்கிட்ட பேச முடியலை, இப்போ தான் வீட்டில சொன்னேன் என்னோட விருப்பத்தை”

 

“எதுக்குடி இந்த அவசரம்??”

 

“பின்னே இன்னைக்கு ஒரு மாப்பிள்ளை வீட்டுல இருந்து வர்றதா பேசிட்டு இருந்தாங்க. அதான் சொல்லிட்டேன்”

 

“என்ன சொன்னாங்க வீட்டில”

 

“ஒண்ணும் சொல்லலை. அம்மா உன்கிட்ட பேசாம இருந்த மாதிரி என்கிட்ட இப்போ பேசலை”

 

“நீ கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்ல. எப்பவும் நீ எனக்கு புத்தி சொல்வ தானே”

 

“தனக்கு வந்தா தான் தெரியும் காய்ச்சலும் தலைவலியும்ன்னு சும்மாவா சொன்னாங்க. உனக்கு சொல்லும் போது ஈசியா இருந்த விஷயம் எனக்குன்னு வரும் போது சுயநலமா தான் யோசிச்சுது இதழ்”

 

“ஏன் இதழ் நான் பண்ணது தப்பா?? அம்மா என்னை என்ன நினைச்சிருப்பாங்க… ரொம்பவும் அலையறேன்னு தோணி இருக்குமா இதழ்” என்று நலிந்த குரலில் கேட்டவளின் பேச்சை கேட்டு உருகிப் போனது மற்றவளுக்கு.

 

“மகிழ் ஒண்ணுமில்லை விடு…”

 

“இல்லை இதழ் எனக்கு சொல்லி முடிச்ச பிறகு தான் தப்போன்னு தோணுது. நான் இப்போ என்ன செய்ய”

 

“நீ எதுவும் செய்ய வேணாம் நான் பார்த்துக்கறேன்”

“இதழ் நீ என்னை தப்பா நினைக்கறியா??”

 

“இல்லை மகிழ்”

 

“நீ மட்டும் என்னை தப்பா நினைச்சுடாதே இதழ்”

 

“நினைக்கலைடி போதுமா”

 

“அம்மா இந்த விஷயத்தை கேட்டதும் ஒண்ணும் சொல்லலை. ஆனா அப்பா நிறைய பேசினாரு, அக்கா தங்கச்சி ஒரே வீட்டில கட்டிக்கொடுத்தா ஒருத்தர் நல்லா இருப்பாங்க இன்னொருத்தர் கஷ்டப்படுவாங்கலாம். அதனால இதெல்லாம் சரிவராதுன்னு சொன்னாரு இதழ்”

 

“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது மகிழ்”

 

“நான் இப்போ என்ன செய்யன்னு தெரியலை. மனசுல இருந்ததை சொல்லிட்டேன் அவ்வளவு தான்…”

 

“எல்லாம் சரி சம்மந்தப்பட்டவருக்கு இந்த விஷயம் தெரியுமா”

 

“தெரியலை”

 

“இதென்னடி பதில்”

 

“அதெல்லாம் நீயே பார்த்துக்கோ இதழ். நான் தூங்கப் போறேன், அப்பா வந்து எட்டிப்பார்த்திட்டு போறார்” என்றுவிட்டு போனை வைத்துவிட்டாள் அவள்.

 

“அடியேய்” என்று இவள் சொன்னது வெறும் காற்றோடு தான் கலந்தது.

 

“என்னாச்சு இதழ்”


“ஒண்ணுமில்லைங்க”

 

“அதுக்கா இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தீங்க. கொஞ்சம் சீரியஸா பேசிட்டு இருந்தது போல இருந்துச்சே என்னன்னு சொல்லு இதழ்”

 

“மகிழ்க்கு உங்க தம்பியை பிடிச்சிருக்காம்” என்றாள் அவள்.

 

இதழினி அப்படிச் சொல்லவும் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தியேவிட்டான் விதுரன்.

 

“என்ன சொன்னே??” என்றான் அவளை திரும்பி பார்த்து.

 

“அதான் சொன்னேனே”

 

“திருநாகிட்ட நான் படிச்சு படிச்சு சொல்லிட்டு வந்தேன், இப்படியெல்லாம் பண்ணாதேடான்னு அப்புறம் என்ன பண்ணி வைச்சிருக்கான் அவன். அவனை…” என்று விதுரன் பல்லைக் கடித்தான்.

 

“ஏங்க நான் என்ன சொன்னேன்னு நீங்க கவனிச்சீங்களா இல்லையா”

 

“என்ன சொன்னே??”

 

“மகிழ்க்கு உங்க தம்பியை பிடிச்சிருக்குன்னு சொன்னேன்”

 

“அப்படின்னா”

 

“உங்க தம்பி நீங்க எப்போ மகிழை பார்க்கக் கூடாதுன்னு சொன்னீங்களோ அப்போல இருந்து பார்க்கறதே இல்லை”

 

“நான் சொன்னது உனக்கெப்படி தெரியும்”

 

“அவரு மகிழை பார்த்ததும் தெரியும் பதிலுக்கு அவ தலை தெறிக்க ஓடினதும் தெரியும். இதை பார்த்திட்டு நீங்க முறைச்சதும் தெரியும் உங்க தம்பியை கூப்பிட்டு திட்டினதும் தெரியும். அப்போ அது சரின்னு தோணினதால நானும் அதை பெரிசா கண்டுக்கலை. அவர் விலகிப் போகவும் இவளுக்கு பிடிச்சிருக்கு போல”

 

“அப்படின்னு அவ சொன்னாளா”

 

“இல்லை நான் தான் சொல்றேன்”

 

“திருநா எதுவும்…”

 

“பேசலைங்க சும்மா அவரை திட்டிட்டு. எனக்கு மகிழையும் தெரியும் அவரையும் தெரியும்”


“மகிழ் ஒண்ணும் சட்டுன்னு இது போல விஷயத்துல மாட்டுற ரகமில்லை. பிடிக்கலைன்னா திரும்பிக் கூட பார்க்க மாட்டா”

 

“என்னை உங்க வீட்டில இருந்து பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு உங்க தம்பி அவளைப் பார்த்து ஜொள்ளுவிடுறாரு அது பிடிக்கலைன்னு சொன்னா”

 

“நானும் கூட சும்மா தானே பார்த்தாரு விட்டுத்தள்ளுன்னு சொன்னேன் அப்போ…”

 

“அப்போ பிடிக்காம இருந்தவளுக்கு இப்போ பிடிச்சிருக்குன்னா நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க”

 

“அப்போ தள்ளிப் போனா நெருக்கம் அதிகரிக்கும்ன்னு சொல்ல வர்றே”

 

“நான் சொல்லலை, நமக்கு முன்னாடி நிறைய பேரு அனுபவப்பட்டு அதை சொல்லி வைச்சிருக்காங்க…”

 

“ஹ்ம்ம்…”

 

“என்ன ஹ்ம்ம்?? இப்போ மகிழ் விஷயத்துல நாம என்ன செய்யறது??”

 

“என்ன செய்யணும்??”

 

“இப்படி கேட்டா நான் என்ன சொல்ல??”

 

“அவளை திருநாகிட்ட பேசச்சொல்லு”

 

“அச்சோ”

 

“என்ன அச்சோ??”

 

“ஏங்க பேசாம நாம போய் பொண்ணு கேட்டிருவோமே எங்க வீட்டில”

 

“அதுக்கு முன்னாடி திருநா மனசுல என்ன இருக்குன்னு தெரிய வேணாமா??”

 

“அவர் தான் அப்போவே மகிழை பார்த்தார்ல”

 

“அது அப்போ??”

 

“இப்போ மட்டும் மாறியிருக்குமா என்ன??”

 

“மாறியிருந்தா??” என்றான் கேள்வியாய்.

 

“ஏங்க இப்படி பயமுறுத்தறீங்க??”

 

“நீ மகிழ்க்கு போன் பண்ணி திருநாகிட்ட பேசச் சொல்லு. அவனோட நம்பரை அவளுக்கு அனுப்பி வை”

 

“இதெல்லாம் எப்படி சரியா வரும்”

 

“வரும் பேசச் சொல்லு” என்றவன் அவளை பேசச்சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான்.

 

அவள் மகிழினிக்கு அழைக்கப் போக அவளே போன் செய்திருந்தாள். “சொல்லுடி” என்று இவள் சொல்ல அவள் ஓவென்று அழுதாள்.

 

“என்னாச்சு ஸ்பீக்கர்ல போடு” என்றான் அவன்.

 

“என்னன்னு சொல்லு மகிழ் எதுக்கு அழறே??”

 

“நீ கேட்டல்ல அவர்கிட்ட சொல்லிட்டியான்னு”

 

“ஆமா…”

 

“எனக்கும் அவர்கிட்ட சொல்லிட்டா சரின்னு தோணிச்சு. உன்கிட்ட பேசிட்டு வைக்கவும் அவர்க்கு தான் கூப்பிட்டேன். என்னை திட்டிட்டார், அவர் மாமா பேச்சை தட்ட மாட்டாராம். அப்போ ஏதோ ஒரு ஆர்வத்துல பார்த்திட்டேன், மன்னிச்சுடுங்கன்னு சொல்லிட்டார்” என்றாள்  அழுகையினூடே

 

“மகிழ் அழாதே” என்ற விதுரனின் குரலில் அரண்டு போனாள் அவள்.

 

“மாமா”

 

“மாமா தான் பேசறேன் நான் திருநாகிட்ட பேசறேன் நீ அழறதை நிறுத்திட்டு போய் படு. உன்னை தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன், நீயா இப்படி… உங்க அக்காவே பரவாயில்லை போ, செம கெத்தா எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்து என்கிட்ட லவ் சொன்னா” என்றான் இதழினியை பார்த்துக் கொண்டே

 

அதில் அவள் முகம் சிவந்துவிட இவனுக்கு எப்போதடா போனை வைப்போம் என்றானது. ஒருவாறு மகிழினியை சமாதானம் செய்து போனை வைத்திருந்தான்.

 

—————

 

மூணாரில் அந்த அழகிய மரவேலைப்பாடமைந்த வீட்டில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் விதுரனும் இதழினியும்.

 

பெங்களூரில் இருந்து அப்படியே மசினக்குடிக்கு அவளை அழைத்து செல்லலாம் என்று விதுரன் நினைத்திருக்க மகிழினியின் பிரச்சனையால் அவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.

 

திருநாவுக்கரசிடம் பேச அவனோ முகம் இறுகி நின்றிருந்தான். “என்ன திருநா உன் விருப்பம் என்னன்னு சொல்லு வேணாம்ன்னா அவகிட்ட சொல்லிடலாம்…”

 

“என் மனசுல இப்போ எந்தவொரு எண்ணமும் இல்லைண்ணா”

 

“இதென்ன பதில்”

 

“எனக்கு தெரியலை நீங்க பார்க்க வேணாம்ன்னு சொன்னீங்க நான் பார்க்கலை. அவங்களுக்கு என்னை எப்படி பிடிச்சதுன்னு எனக்கு தெரியலை. கண்டிப்பா நான் எதுவும் செய்யலைண்ணா”

 

“தெரியும் திருநா நான் உன்னை குற்றம் சொல்லலை. உன்னோட எண்ணம் என்ன?? உனக்கு விருப்பம் இல்லைன்னா மகிழை சமாதானம் செய்யணும்”

 

“எனக்கு என்ன முடிவெடுக்கன்னு தெரியலைண்ணா”

 

“திருநா இது உன்னோட வாழ்க்கை அதுல முடிவெடுக்க வேண்டிய உரிமையும் கடமையும் உனக்கு மட்டும் தான் இருக்கு”

 

“நான் தலையிட்டா அது என்னோட கருத்தை உன் மேல திணிக்கிற மாதிரி ஆகும். யோசிச்சு முடிவு பண்ணு” என்றிருந்தான் அவன்.

 

“சரிண்ணா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றவன் இரண்டே நாளில் தன் சம்மதத்தை சொல்லியிருக்க இதோ விதுரனின் வீட்டினர் மகிழினியை பெண் பார்க்கச் சென்றனர்.

 

அடுத்த ஒரு மாதத்தில் அவர்களுக்கு திருமணம் பேசி முடித்திருக்க எந்தவித இடையூறும் இல்லாமல் திருநாவுக்கரசு உரிமையாய் பார்த்திருந்தான் மகிழினியை.

 

அவர்கள் வீட்டிற்கு சென்ற பின்னே மகிழினி அழைத்திருந்தாள் திருநாவுக்கரசுவுக்கு. அழைப்பை உடனே ஏற்றவன் “சொல்லுங்க மேடம்” என்றான்.

 

“அன்னைக்கு ஏன் அப்படி சொன்னீங்க??” என்றாள்.

 

“பின்னே அண்ணியோட தங்கச்சின்னு ஒரு ஆர்வமா பார்த்து தொலைச்சிட்டேன். கல்யாணத்துல பிரண்ட்ஸ் எல்லாம் ரொம்பவும் உசுப்பேத்துனாங்க அடுத்து உனக்கு தான் மேரேஜ்டான்னு”

 

“சும்மா இல்லாம உன்னையும் என்னையும் சேர்த்து வைச்சு வேற பேசினாங்க. அது என்னை ஓவரா டெம்ப்ட் பண்ணிடுச்சு. சரின்னு உன்னை பார்த்தா நீ பேயை கண்டவ மாதிரி என்னா ஓட்டம் ஓடினே அன்னைக்கு??”

 

“சரி உன்கிட்ட வந்து பேசலாம்ன்னு நினைச்சா கையை கழுவிட்டு எனக்கு முன்னாடி கிளம்பிட்ட, பின்னாடியே அண்ணன் வந்து எனக்கு செம திட்டு”

 

“எனக்கு எவ்வளவு அசிங்கமா போச்சு தெரியுமா அப்போ. என்னை ஒரு பொறுக்கி மாதிரி நினைச்சுட்டல்ல. உனக்கு புரிய வைக்கலாம்ன்னு தான் பேச வந்தேன், அதுக்குள்ளே அண்ணன் வந்து பேசவும் அந்த எண்ணத்தை விட்டேன்”

 

“நான் வேணும்ன்னு அப்படி பண்ணலை. பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு என்னை பார்த்திட்டே இருந்தீங்களா. எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு. பொதுவா பசங்க அப்படி பார்த்தாலே நான் அந்த பக்கம் போக மாட்டேன்”

 

“சொந்தமாக போறீங்க தேவையில்லாத பிரச்சனை வந்திடக் கூடாதுன்னு தான் விலகிப்போனேன்” என்றாள் அவள்.

 

“ஆனாலும் நீங்க அன்னைக்கு ஏன் அப்படி பேசுனீங்க” என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றாள் அவள்.

 

“இங்க பாரு மகிழ் நீ சொன்னது தான், நானும் எதையும் வேணும்ன்னு செய்யலை. உனக்கு என்னை பிடிக்கும்ன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை, அன்னைக்கு ஸ்டேஷன்ல இருந்து வரும் போது தான் உன்னோட மாற்றத்தை பார்த்தேன்”

 

“அண்ணன்கிட்ட பேசலாம்ன்னு நினைக்கும் போது நீயே எனக்கு கூப்பிட்ட, விரும்பறதா சொன்னே. எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுறதுன்னு தெரியலை, அண்ணன் சொன்னது தான் ஞாபகம் வந்துச்சு”

 

“எங்க அண்ணனை நான் ரொம்பவும் மதிக்கறேன், அவரோட சொல்லை மீறி நான் நடக்க விரும்பலை. உன்னை எனக்கு பிடிச்சிருக்கான்னு தெரிய முன்னாடியே விலகிப்போயிட்டேன். மறுபடியும் அதை தொடர நான் விரும்பலை அதான் அப்படிச் சொன்னேன்”

 

“இப்போ மட்டும் எப்படி ஓகே சொன்னீங்களாம்”

 

“என்னை எனக்காக நீ பிடிச்சிருக்குன்னு சொல்லும் போது உன்னை எப்படி மிஸ் பண்ண முடியும் சொல்லு. எனக்கும் உன்னை பார்க்கணும்ன்னு தோணினதுனால தானே பார்த்தேன், அதான் ஓகே சொல்லிட்டேன்”

 

“உடனே சொல்லலையாமே ரெண்டு நாள் டைம் கேட்டீங்களாமே”

“பின்னே உன்கிட்ட வேணாம்ன்னு சொல்லியிருக்கேன். உடனே அண்ணன்கிட்ட சரின்னு சொல்லிட்டா எப்படி, அதான் சும்மா லைட்டா சீன் போட்டு அப்புறம் ஓகே சொன்னேன்”

 

“அடப்பாவி பிராடா நீங்க??”

 

“ஏன்டி என்னை நீ ஓடவிட்டே உன்னை ஒரு ரெண்டு நாள் கூட நான் ஓட விடலைன்னா எப்படி. நான் ஒண்ணும் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லைம்மா”

 

எல்லா கதையும் சொல்லி முடித்துவிட்டு “இவ்வளவு நேரம் நான் சொன்னதெல்லாம் நம்பிட்டல்ல நீ” என்றான் அவன்.

Advertisement