Advertisement

2

“விது” என்றழைத்தான் சைலேஷ்.

 

“சொல்லுடா” என்றவன் தன் நண்பனால் விது என்றழைக்கப்பட்ட விதுரன் நம் நாயகன்.

 

“அங்க என்ன பண்ணிட்டு இருக்க??”

 

“தமிழ்நாடு வெதர்மேன் பேஜ் பார்த்திட்டு இருக்கேன்”

 

“என்னவாம்…”

 

“சவுத் சைட் நல்ல மழை இருக்கும் போல. புயல் கூட இருக்குன்னு சொல்லியிருக்கார், மே பீ ஹெவி ரெயின் ஆல்சோ…”

 

“சரி…”

 

“என்ன சரி…”

 

“அதுக்கு நாம என்னடா பண்ணுறது…”

 

“இப்படி சொல்றதுக்கு எதுக்கு நீ இந்த வேலைக்கு வந்த…”

 

“அடேய் நமக்கு முத இன்டிமேஷன் வரட்டும்டா நீயா அதுக்குள்ளே ஓவரா பண்ணிட்டு இருக்காத…” என்றான் சைலேஷ்.

 

“வரும் முன் காப்போம் அது தான் நம்மோட தாரக மந்திரம்… புரிஞ்சு வேலை செய்…” என்றவன் அவ்வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்பவன்.

 

உடனடியாக அவன் ஒரு மாதிரி திட்ட வரைவை தயார் செய்ய ஆரம்பித்தான் கணினியில்.

 

“ஷப்பா இவன் ஒருத்தன் ரொம்ப வேலை பார்ப்பான்…” என்று சலித்துக் கொண்ட சைலேஷும் நண்பனுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.

 

“விது… நாம எதுக்கு இதை செய்யணும், இது தமிழ்நாடு கண்ட்ரோல் தானே. அப்போ எஸ்டிஆர்எப் தானே இதை பார்க்கணும்” என்று பாதியில் கேள்வி கேட்டான் சைலேஷ்.

 

நண்பனின் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு கொட்டியவன் “நம்ம தினா எஸ்டிஆர்எப்ல தானே இருக்கான். அவனுக்கு யூஸ் ஆகும்டா…”

 

“அடேய் நமக்கு கொடுத்தா அந்த வேலையை பார்ப்போம்டா. இது எதுக்குடா எக்ஸ்ட்ரா வேலை…”

 

“பேசாம வேலையை பாரு இல்லைன்னா எழுந்து போ…” என்று கடிந்தவன் தன் வேலையை தொடர்ந்தான்.

 

“சரி சரிடா கோவிச்சுக்காத” என்றவன் தனக்கு தோன்றிய விஷயங்களை சொல்ல அதை குறித்துக் கொண்டான் விதுரன்.

 

“ஆமா உனக்கு பொண்ணு பார்த்திட்டு இருந்தாங்களே என்ன லெவல்ல இருக்கு”

 

“ஹ்ம்ம் பார்க்குறாங்க பார்க்குறாங்க”

 

“ஏன்டா சலிப்பா சொல்றே??”

 

“உனக்கு பார்க்கும் போது ஆரம்பிச்சாங்க. இன்னும் பார்க்கறாங்க… என் தம்பிக்கே வயசாகுது… அவனுக்கும் எனக்கும் சேர்ந்தே பார்க்கறாங்க இப்போ…”

 

“என்ன செய்ய நீ கொஞ்சம் விரைப்பா இருக்க. பொண்ணுங்க உன்னை பார்த்ததும் ஓடிருது…”

 

“ஏன்டா சும்மா இருக்கவனை சொரிஞ்சுவிடுற”

 

“விடு மச்சி… கூல்…” என்று சைலேஷ் சொல்ல விதுரனின் கைபேசி அழைத்தது.

 

“இதை கொஞ்சம் பாரு சைலேஷ். அம்மா தான் போன் பண்றாங்க பேசிட்டு வர்றேன்” என்றவன் எழுந்து சென்றான்.

 

“சொல்லுங்கம்மா…” என்றான் அழைப்பை ஏற்று.

 

“விதுரா பொண்ணு ஒண்ணு செட் ஆகியிருக்குப்பா. அவங்களே கூப்பிட்டு பேசினாங்க. அவங்களுக்கு எல்லாம் ஓகேவாம். எப்போ பொண்ணு பார்க்க வர்றீங்கன்னு கேட்கறாங்க… வர்ற ஞாயிற்றுகிழமை நாள் நல்லா இருக்கு, நீ வந்திட்டா போயிட்டு வந்திடலாம்” என்றார்.

 

“நல்லா கேட்டீங்களா அவங்களுக்கு ஓகேவான்னு…”

 

“எல்லாம் கேட்டாச்சு விதுரா… அவங்களுக்கு ஓகேவாம்…”

 

“சரி பொண்ணு போட்டோ அனுப்பி வைங்க…”

 

“அதை நான் கேக்கலையே…”

 

“ம்மா…”

 

“சரி சரி திருநா வரட்டும் அவங்ககிட்ட பேசிட்டு வாட்ஸ்அப்ல அனுப்பி வைக்கறேன்… நீ பொண்ணு பார்க்க போறதை பத்தி ஒண்ணும் சொல்லலையே”

 

“ஹ்ம்ம் போகலாம்மா வர்றேன்…” என்றுவிட்டு போனை வைத்தான்.

 

“என்ன வாய்டா உன் வாய். இப்போ தான் பொண்ணு பார்க்கறது பத்தி கேட்டே அம்மா போன் பண்றாங்க”

 

“என்னவாம்டா??”


“பொண்ணு பார்க்க போகணுமாம்”

 

“அப்படியா சூப்பர்டா… ஆமா பொண்ணு பேரு என்னவாம்??”

 

“அதை கேட்க மறந்திட்டேன்”

 

“போட்டோ??”

 

“அனுப்பறேன்னு சொல்லி இருக்காங்க…” என்று அவன் முடிக்கவும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்த அறிகுறி தெரிய எடுத்து பார்த்தான்.

 

“இதழினி…”

 

“என்னது??”

 

“ஹ்ம்ம் பொண்ணு பேரு இதழினி…” என்றான்.

 

“எங்கே காட்டு??” என்றவனிடம் மொபலை தூக்கிக் காட்டினான் விதுரன்.

 

“நல்லா தான் இருக்கா… என்னைக்கு பொண்ணு பார்க்க போறே??”

 

“வர்ற சன்டே”

 

“இப்போவே லீவ் அப்பிளை பண்ணிடு…”

 

“டேய் சன்டே தான்டா…”

 

“தெரியும்டா நமக்கு எப்போ வேலை வரும்ன்னு சொல்ல முடியாது. வந்தா நாம அங்க இருந்தாகணும், நீ முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லி வைச்சிரு…” என்று சைலேஷ் சொன்னதை விதுரன் செவிமடுக்கவில்லை.

 

——-

 

“இதழ் இன்னைக்கு தான் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்க… நீ என்ன இன்னும் தூங்கிட்டு இருக்க எழுந்திரு. அவங்க எல்லாம் பத்து மணிக்கே வந்திடறேன் சொல்லி இருக்காங்க…” என்று மகளை உலுக்கிக் கொண்டிருந்தார் வேணி.

 

அவள் எப்போதும் போல் தான் அசையாமல் படுத்திருந்தாள் ஒரு அடி விழும் வரை. “ம்மா இன்னைக்கு சன்டே தானே இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேனே… நீங்க ஏன் அவங்களை சன்டே வரச்சொன்னீங்க” என்று முனகியவாறே திரும்பி படுத்தாள் அவள்.

 

“அடியேய் ஏன்டி இப்படி பண்றே?? போற இடத்துல எனக்கு கெட்ட பேரு வாங்கி கொடுத்திருவ போலயே. இன்னைக்கு நாளு நல்லா இருக்குன்னு இன்னைக்கு வர்றேன்னு சொன்னாங்க… வர்றவங்களை நாம வர வேணாம்ன்னா சொல்ல முடியும்”

 

“சரி சரி புலம்பாதீங்க எழுந்துக்கறேன்” என்று மனது வைத்து எழுந்து அமர்ந்தாள்.

 

“மகிழ் எங்கேம்மா??”

 

“அவளை பூக்கட்டி தரச் சொன்னேன்… அந்த வேலையை தான் பார்த்திட்டு இருக்கா. நீயும் தான் இருக்கியே ஒரு வேலையும் கத்துக்க மாட்டேங்குற…” என்று புலம்பிக்கொண்டே வெளியேறினார் அவர்.

 

இதழினி குளித்து முடித்து நைட்டியுடன் வெளியே வந்தாள். வெங்கட்ராமன் அப்போது தான் தன் நண்பர் சந்துருவுடன் உள்ளே நுழைந்தார்.

 

மகள் இன்னமும் தயாராகாமல் இருப்பதை பார்த்து லேசாய் கோபம் எழ “வேணி” என்று சத்தமாய் அழைத்துவிட்டார்.

 

“என்னங்க…” என்று சலிப்போடு வந்த கிருஷ்ணவேணி கணவருடன் அவரின் நண்பரும் இருப்பதை பார்த்து “வாங்கண்ணா எப்படியிருக்கீங்க?? வீட்டில எல்லாம் நல்லா இருக்காங்களா??” என்றார்.

 

“எல்லாரும் நல்லா இருக்காங்க வேணி. அப்புறம் விஷேசம் எப்படி போயிட்டு இருக்கு??”

 

“இதோ எல்லாம் செஞ்சிட்டோம் அண்ணா… அவளும் ரெடியாகிட்டு இருக்கா??” என்று சொல்லி திரும்பிப் பார்க்க இதழினி நைட்டியுடன் இருப்பது பார்த்து பல்லைக் கடித்தார் அவர்.

 

“இதழ்” என்று அவர் கடிய “அம்மா மகிழை அனுப்புங்க அதுக்காகத்தான் வந்தேன்” என்றவள் “எப்படியிருக்கீங்க அங்கிள், சுதிர் எப்படி இருக்கான்??” என்று சந்துருவை விசாரித்து தன் நண்பனையும் விசாரித்துக் கொண்டாள்.

 

அவரும் தன் நலம் மகனின் நலம் எல்லாம் சொன்னவர் “மாப்பிள்ளை போட்டோ பார்த்தியாம்மா உனக்கு பிடிச்சுதா??” என்றார் உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்குடன்.

“அதான் அப்போவே ஓகேன்னு சொல்லிட்டேனே அங்கிள்…”

 

“அப்போ சரி நீ போய் ரெடி ஆகும்மா இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க வந்திடுவாங்க…” என்று சொல்ல இதழ் உள்ளே சென்றாள்.

 

மகிழும் அவளுக்கு உதவ சிம்பிளான ஒரு டிசைனர் புடவையை கட்டிக்கொண்டு தயாராகி இருந்தாள் அவள். பூவை எடுத்துக் கொண்டு உள்ளே வந்த வேணி “என்னடி இதெல்லாம்??” என்றார்.

 

“என்னம்மா”

 

“ஒரு நல்ல பட்டுப்புடவையா கட்டாம இதென்ன வீட்டுல கட்டுற புடவையை கட்டிட்டு இருக்கே” என்று சொல்ல இதழ் தன் அன்னையை முறைத்தாள்.

 

“ம்மா இது வீட்டுல கட்டுற புடவையா. இதோட விலை தெரியுமா உங்களுக்கு. இது தான் இப்போ பேஷன், பெரிய பெரிய பார்ட்டிஸ்க்கு எல்லாம் இதை தான் கட்டுறாங்க தெரியுமா”

 

“அங்க போகும் போது இதெல்லாம் கட்டிக்கறது தானே. இப்போ பட்டுப்புடவையை கட்டு” என்றார்.

 

“ம்மா எதுக்கும்மா அவளை புடவை மாத்த சொல்றீங்க. இதான் இப்போ டிரன்ட்ம்மா நல்லா இருக்கு அவளுக்கு. மாத்த சொல்லாதீங்க” என்று இளைய மகளும் அவளுக்கு பரிந்து வர அரைகுறை மனதுடன் பூவை வைத்துக்கொள்ள சொல்லி சென்றுவிட்டார் அவர்.

 

———

 

விதுரன் போனை எடுத்து தன் தம்பிக்கு அழைத்தான். எதிர்முனை எடுக்கவும் “திருநா…” என்க “சொல்லுண்ணா கிளம்பிட்டியா?? எப்போ வர்றே??” என்றான் அவன்.

“அதைச் சொல்லத்தான் இப்போ கூப்பிட்டேன் திருநா. எனக்கு அவசர வேலை வந்திடுச்சு, நான் உடனே கொச்சின் போறேன் அங்க புயல் மழை அதிகமா இருக்கு. இமீடியட்டா அங்க ரிப்போர்ட் பண்ண சொல்லி இருக்காங்க. சோ நான் கிளம்பறேன்”

 

“என்னண்ணா இப்படி சொல்றே… அம்மாகிட்ட சொல்லிட்டியா??”

 

“அவங்களுக்கு போன் பண்ணேன்டா ரொம்ப நேரமா வைடிங்லயே போயிட்டு இருக்கு. போனை எடுத்தா கீழ வைக்கவே மாட்டாங்களே அவங்க…” என்று கடிந்தவன் “அவங்ககிட்ட நீயே சொல்லிரு” என்றான்.

 

“அப்பாகிட்டயாச்சும் சொல்லிறேன்”

 

“எனக்கு அவர்கிட்டலாம் பேச வேணாம். நீயே சொல்லிரு” என்றுவிட்டு அவன் போனை வைத்துவிட அடுத்த பத்து நிமிடத்தில் அவன் அன்னை கற்பகம் அவனுக்கு அழைத்துவிட்டார்.

 

அவன் ஊருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தவன் அன்னையின் அழைப்பை கண்டு உடனே அட்டென்ட் செய்தான்.

 

“சொல்லுங்கம்மா”


“என்ன விதுரா இப்படி பண்ணுறே?? உன்னை கேட்டு தானே பொண்ணு வீட்டுக்கு வர்றேன்னு சொன்னேன்”

 

“நான் என்னம்மா செய்வேன் என் வேலை அப்படி…”

 

“இப்போ நாங்க கிளம்பி உனக்காக காத்திட்டு இருக்கோம். நீ இப்படி சொல்றே??”

 

“இப்போ என்ன நீங்க போய் பொண்ணை பார்த்திட்டு வாங்க… நான் இப்படி அவசரமா போய் இருக்கேன்னு சொல்லுங்க… அவங்க அப்படி இப்படின்னா இந்த இடத்தை மறந்திட்டு வேற இடம் பாருங்க… சரியா… எனக்கு டைம் ஆச்சும்மா நான் அப்புறம் பேசறேன்” என்று மேற்கொண்டு பேச இடம் தராமல் போனை வைத்துவிட்டான்.

 

———

 

“என்ன சந்துரு அவங்க இன்னும் வரலை மணி பதினொண்ணு ஆகப் போகுதே” என்று கவலையுடன் தன் நண்பனிடம் கேட்டவர் வாசலையே பார்த்தார்.

 

“இப்போ தான் கூப்பிட்டாங்க வெங்கட், வந்திட்டே இருக்காங்களாம்” என்றார் அவர்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துவிட்டனர். வந்தவர்களை வரவேற்று அமர வைத்தனர்.

 

விதுரனின் தந்தை சதாசிவம், அன்னை கற்பகம், தம்பி மற்றும் கற்பகத்தின் உடன்பிறந்த தங்கை அவரின் பெண் என்று ஐவர் வந்திருந்தனர். அறிமுகப்படலம் முடிந்தது.

 

வெங்கட்ராமனின் கண்கள் மாப்பிள்ளையை தேடியதை உணர்ந்த கற்பகம் “மாப்பிள்ளை எங்க கூட வரலைங்க… இன்னைக்கு காலையில அவனுக்கு திடிர்ன்னு ஒரு வேலை வந்திட்டு”

 

“கேரளாவுலல புயல் மழையா இருக்கு இல்லையா. அங்க வரச்சொல்லி சொல்லியிருக்காங்க. அதான் கிளம்பிட்டான், வேலைன்னு வந்துட்டு ரொம்பவும் சின்சியரா இருப்பான்… அதனால தான் எதுக்குனாலும் அவனை கூப்பிடுவாங்க…” என்று மகனின் பெருமையும் சேர்த்து படித்தார் அவர்.

 

“நீங்க கிளம்பும் போது இதை என்கிட்ட சொல்லலையேக்கா” என்றார் சந்துரு.

“இல்லை சந்துரு கிளம்புனது கிளம்பியாச்சு பொண்ணை பார்த்திடலாம்ன்னு வந்திட்டோம். இன்னொரு நாள்ன்னு தள்ளிப்போட விரும்பலை, அதான் ரெண்டு பேரும் போட்டோல பார்த்திட்டாங்களே”

 

“மேற்கொண்டு பேசணும்ன்னா போன் தான் இருக்கே பேசிக்க போறாங்க…” என்றார் கற்பகம்.

 

“என்ன மாமா நீங்க ஒண்ணும் சொல்லலை” என்றார் சந்துரு சதாசிவத்தை பார்த்து.

 

“அதான் கற்பகம் சொல்லிட்டாளே சந்துரு நான் புதுசா என்ன சொல்லிட போறேன். உனக்கு தான் விதுரனை பத்தி தெரியுமே, வேலைன்னா போதும் மத்த எதும் கண்ணுக்கு தெரியாது…” என்றார் அவர்.

 

‘இதென்ன இவரு இப்படி சொல்றாரு. வேலை வேலைன்னு இருந்தா அப்போ மாப்பிள்ளை வீட்டை பார்க்க மாட்டாரா’ என்று தான் தோன்றியது வெங்கட்ராமனுக்கு, வேணியும் அதே யோசனையோடு தான் பார்த்தார்.

 

“வெங்கட், விதுரன் வேலையில ரொம்ப கெட்டி ஒரு கெட்ட பேர் வாங்கினதில்லை. அவார்ட் எல்லாம் வாங்கியிருப்பான்ப்பா… நீ மாமா சொல்றதை வைச்சு அவனை தப்பா நினைக்காதே” என்று நண்பனுக்கு கேட்கும் வகையில் அவர் காதில் ஓதினார் சந்துரு.

 

“பொண்ணை பார்த்திடலாமா” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டார் கற்பகம்.

 

வெங்கட்ராமன் தன் மனைவியை பார்க்க அவர் மகள்களின் அறை வாசலை பார்த்தார் குறிப்பாய். அங்கே இவரின் சைகைக்காக காத்திருந்த மகிழ் தன் தமக்கையிடம் திரும்பி “இதழ் அம்மா உன்னை கூட்டிட்டு வரச் சொல்றாங்க… போகலாமா??”

 

“மாப்பிள்ளை வந்திருக்காரா மகிழ்”

“இல்லை போல அவரோட தம்பி தான் வந்திருக்காரு…”

 

“அப்போ நீ ஜமாய்…”

 

“அய்யே எனக்கு அந்தாளை பிடிக்கலை…” என்று முகம் சுளித்தாள் தங்கை.

 

“ஏன்டி அவ்வளோ மோசமாவா இருக்காரு”

 

“இல்லை வந்ததுல இருந்து என்னைப் பார்த்து ஒரே ஜொள் மழை தான். அதான் பிடிக்கலை” என்றாள்.

 

“ஜொள்ளு தானேடி பாவம் விட்டுட்டு போகட்டுமே”

 

“இவரே இப்படி இருக்காரே இவரோட அண்ணன் எப்படியிருப்பாரோ” என்ற மகிழ் கேள்வியை அவளே கேட்டு “ச்சே… ச்சே அப்படியிருக்க மாட்டாரு மாம்ஸ், அவரை பார்த்தாலே விரைப்பா சுத்துற மாதிரி தான் தெரியுது. போட்டோவுலயே டெரர் லுக் தான் அவரு” என்றாள்.

 

“இவ்வளவு கவனிக்கறியாடி நீ” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க அறைக்கதவை தட்டினார் வேணி.

 

மெதுவாய் கதவை திறந்தவர் தலையை மட்டும் உள்ளே விட்டு “இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க, உன்னை கூட்டிட்டு வரச் சொன்னேன்ல மகிழ்” என்று முறைத்தார் சின்ன மகளை.

 

“நான் வரலை நீங்களே அவளை கூட்டிட்டு போங்க” என்றாள் அவள்.

 

“எதுக்கு என்னை நீங்க கூட்டிட்டு போகணும். நானே வர்றேன்” என்ற இதழினி முன்னே வந்தாள்.

 

“நான் போறேன் நீ பின்னாடி வா…” என்றுவிட்டு வேணி நகர்ந்தார்.

“என்னடி இது இதான் முத தடவை பொண்ணு பார்க்க வர்ற மாதிரி இப்படி பில்டப் கொடுக்கறாங்க அம்மா…” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியே வந்தாள் இதழினி.

 

Advertisement