Advertisement

 

19

 

இதழினி இல்லாத அறையில் விதுரனுக்கு சுத்தமாய் உறக்கம் பிடிக்கவில்லை. தனியாக அதே அறையில் தான் திருமணத்திற்கு முன் உறங்கியிருக்கிறான், ஏனோ அவளின் வருகைக்கு பிறகு இது தான் முதல் முறை அவள் இல்லாது அந்த அறையில் இருப்பது.

 

உடனே அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மறுநாள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சைலேஷுக்கு போன் செய்தான்.

 

“என்னடா காலையிலேயே போன் அடிக்கிறே??”

 

“எனக்கு அந்த சந்துரு நம்பர் வேணும் சீக்கிரம் வாங்கி கொடு”

 

“சந்துருவா யாருடா அது”

 

“இதழினியோட பாஸ்”

 

“என்னது??”

 

“சொன்னதை செய்டா சீக்கிரம், இன்னும் பத்து நிமிசத்துல மறுபடியும் கூப்பிடுவேன் எனக்கு நம்பர் வேணும்” என்றுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காது போனை வைத்துவிட்டான்.

 

சைலேஷுக்கு தான் தலைசுற்றிப் போனது ‘புருஷனும் பொண்டாட்டியும் எதுவா இருந்தாலும் என்னைத்தான் வைச்சு செய்யறாங்க’ என்று புலம்பிக் கொண்டே விஷ்ணுவிற்கு அடித்து சந்துருவின் எண்ணை வாங்கினான்.

 

அடுத்து விதுரனுக்கு அழைத்து அதை சொல்லவும் குளித்து வந்திருந்தவன் சந்துருவிற்கு அழைத்துவிட்டான். முழு ரிங் அடித்து ஓய்ந்திருக்க மீண்டும் அழைக்கலாமா இல்லை சற்று பொறுத்து அழைக்கலாமா என்று இவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இவனுக்கு அழைப்பு வந்தது அந்த எண்ணில் இருந்து.

 

“ஹலோ சந்துரு ஸ்பீகிங்”

 

“ஹாய் சந்துரு நான் விதுரன் என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியலை. இப்படி சொன்னா ஈசியா தெரியலாம் இதழினியோட ஹஸ்பென்ட் பேசறேன்”

 

“சார் விதுரன்னு சொன்னாலே எனக்கு தெரியும். உங்களை எப்படி சார் மறக்க முடியும் நானு. எங்களுக்கு எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. அவ்வளவு சீக்கிரம் மறப்பேனா என்ன”

 

“தேங்க்ஸ் சந்துரு” என்றவன் “எனக்கு உங்களால ஒரு உதவி ஆகணுமே”

 

“என்னாலயா?? சொல்லுங்க சார் கண்டிப்பா செய்யறேன்”

 

“என்னை விதுரன்னே கூப்பிடலாம் நீங்க…”

 

“ஓகே விதுரன் சொல்லுங்க”

 

“இதழினி உங்க டீம் தானே…”

 

“இப்போ என்னோட டீம்ல இல்லையே அவங்க”

 

“ஓ!!”

 

“உங்களுக்கு என்ன தெரியுணும் சொல்லுங்க விதுரன்”

 

“இதழினி பெங்களூர் போய் இருக்கா. எனக்கு அவங்க எப்போ கிளம்புறாங்கன்னு தெரியணும். தப்பா எடுத்துக்காதீங்க, ஒரு சின்ன சர்பிரைஸ் பண்ணலாம்ன்னு தான் கேட்டேன்” என்றான் அவன்.

 

“அவ்வளவு தானா, இதுக்கா நீங்க உதவி அது இதுன்னு சொன்னீங்க. ஒரு அரைமணி நேரத்துக்குள்ள சொல்லிடறேன் ஓகேவா”

 

“தேங்க்ஸ்… தேங்க்ஸ் சந்துரு”

 

“எனக்கெதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க விதுரன். எனக்கு உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் கேட்கலாமா??”

 

“ஓ எஸ் கேளுங்களேன்”

 

“நீங்க லவ் மேரேஜா”

 

“இல்லை…”

 

“அப்போ இதழ் யாருன்னு தெரியாம தான் நீங்க காப்பாத்துனீங்களா??”

 

“அங்க அவ தான் இருக்கான்னு எனக்கு தெரியாது. யாரா இருந்தாலும் நான் அதே தான் செஞ்சிருப்பேன். இதழை அங்க கண்டிப்பா நான் எதிர்பார்க்கலை. அந்த நேரத்துல தான் இதழுக்கும் எனக்கும் கல்யாண பேச்சுவார்த்தை போயிட்டு இருந்துச்சு” என்றான் விதுரன்.

 

இதழினி வேண்டாம் என்று சொல்லியிருந்த கதையை அவன் சந்துருவிடம் பகிர விருப்படவில்லை.

 

“சூப்பர் விதுரன், நான் கூட நீங்க லவ் மேரேஜ்ன்னு நினைச்சேன். இதழை பார்த்தும் லவ் பண்ணிட்டீங்களோன்னு தான் கேட்டேன்”

 

விதுரன் லேசாய் சிரித்தான் பதில் எதுவும் சொல்லவில்லை. “ஓகே விதுரன் நான் கொஞ்ச நேரத்துல திரும்ப கூப்பிடுறேன்” என்றுவிட்டு போனை வைத்தான்.

சந்துருவிற்கு இதழினியை முதலில் பார்த்ததுமே பிடித்திருந்தது. ஆனால் அவன் விருப்பத்தை அவளிடம் கோடிட்டு கூட அவன் காட்டியிருக்கவில்லை.

 

அவனுக்கென்று கடமை இருந்தது, அதை முடித்த பின்னே அவளிடம் நிதானமாக அவன் விருப்பத்தை சொல்லலாம் என்று அவன் காலம் கடத்தியிருக்க இதழினிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் வைபவம் நடந்துக் கொண்டிருந்தது.

 

அது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் முன்பே அவன் விருப்பத்தை சொல்லியிருப்பானோ என்னவோ.

 

மூணாருக்கு அவள் சென்று வந்த பின்னே அவன் அலுவலக வேலையாக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டிருந்தான்.

 

அவன் திரும்பி வந்த போது இதழினியோ கையில் திருமண பத்திரிக்கையுடன் வந்திருந்தாள். அன்று அவனுக்கு கொஞ்சம் கஷ்டமாகத் தானிருந்தது.

 

ஆனால் தன்னை உடனே தேற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு அவளை பிடித்திருந்தது அவள் போகுமிடமெல்லாம் அவன் பார்வையும் அவளின் பின்னேயே சென்றது ஆர்வமாய்.

 

பெரிதாய் அவன் கனவெல்லாம் கண்டிருக்கவில்லை அவளைப் பற்றி. அவளைப் போல பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை தான் அது.

 

அவளின் திருமணத்தையொட்டி தான் அவன் தங்கை திருமணமும் நடந்தது. அதற்காக அவன் தொடர்ந்து ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தான் அப்போது. கொஞ்சம் அந்த அலைச்சல் இடையில் அவனுக்கு மஞ்சள் காமாலை வேறு வந்திருக்க பெரிதும் சோர்ந்திருந்தான்.

 

அதை தான் மாதவி கண்டிருந்தவள் அவன் வெகுவாய் வருந்தி தான் அப்படியிருக்கிறான் என்று எண்ணி இதழினியிடம் பேசியிருந்தாள்.

 

இதெல்லாம் அவனுக்கு இதழினி சொல்லும் வரையில் தெரியவே தெரியாது. ஒரு மாதத்திற்கு முன்பு அவனிடம் பேச வேண்டும் என்று அவன் அறைக்கு வந்திருந்தாள் இதழினி.

 

“உட்காருங்க இதழ்” என்று இருக்கையை அவன் காட்ட “கொஞ்சம் பேசணும் பேசலாமா ப்ரீயா” என்றிருந்தாள்.

 

“சொல்லுங்க”

 

“எனக்கு வேற டீம் போகணும்??”

 

“என்னாச்சு எதுவும் பிரச்சனையா??”

 

“மாறணும்ன்னு தோணுது”

 

“ஓகே நான் மேல பேசிட்டு சொல்றேன்”

 

“தேங்க்ஸ்”

 

“இட்ஸ் ஓகே”

 

“இன்னொரு விஷயம் கேட்கணும் கேட்கலாமா??”

 

“கேளுங்க”

 

“உங்களுக்கு என்னை பிடிச்சிருந்துச்சுன்னு கேள்விப்பட்டேன்”

 

“இருக்கலாம்”

 

‘இதென்ன பதில்’ என்று அவள் எண்ணினாலும் “ஓகே அதனால எனக்கும் மாதுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம் ஆகிப்போச்சு” என்றவள் மாதவிக்கும் தனக்குமான உரையாடலைப் பற்றி அனைத்தும் சொல்லியிருந்தாள்.

 

“ரப்பிஷ் அவ ஏன் அப்படி பிஹேவ் பண்ணா உங்ககிட்ட??”

 

“பிகாஸ் ஷி லவ்ஸ் யூ”

 

“வாட்??”

 

“எஸ் அவளுக்கு உங்களை பிடிச்சிருந்தது. உங்களுக்கு என் மேல இன்ட்ரெஸ்ட் இருந்ததால அவ அதை சொல்லலை”

 

“இதழினி நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம் ப்ளீஸ். எனக்கு உங்க மேல ஒரு அபிப்பிராயம் இருந்தது உண்மை தான். ஆனா நான் பெரிசா எந்த கனவும் கண்டதில்லை. ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ இதழ். நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்”

 

“எனக்கு தெரியும் சார் அதான் நான் அதை பெரிசாவே எடுத்துக்கலை. பட் அவ அதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டா, ஓகே அதை விட்டிருவோம். உங்ககிட்ட இதை கேட்டு கிளியர் பண்ணிக்கணும்ன்னு நினைச்சேன். அதான் கேட்டேன். ஓகே நான் கிளம்பறேன் சார்” என்று எழுந்திருந்தாள் அவள்.

 

“இதழ் ஒரு நிமிஷம்”

 

“சொல்லுங்க சார்”

 

“உங்க பிரண்டு கூட சண்டையினால தான் வேற டீம் மாறணும்ன்னு நினைக்கறீங்களா??”

 

“அதுவும் ஒரு காரணம் அவ்வளவு தான்”

 

“வேற என்ன காரணம்ன்னு சொல்லலாம்ன்னா சொல்லுங்க”

“பின்னாடி உங்களுக்கே புரியலாம். பை சார்” என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள் அவள்.

 

அவள் சொன்னது அவனுக்கு சில நாட்களிலேயே புரிந்தது. தன் மீதான மாதவின் விருப்பத்தை அறிந்ததில் இருந்து அவன் பார்வை தன்னையுமறியாமல் அவளின் புறம் சென்றது.

 

அது மெல்ல முன்னேறி அடுத்த கட்டத்தை அடைந்திருந்தது. இதோ இரண்டு நாள் முன்பு தான் அவளிடம் திருமணம் செய்துக்கொள்ளலாமா என்று கூட கேட்டிருந்தான் அவன். விதுரன் போன் செய்யவும் இதழினியிடம் பேசியது அனைத்தும் நினைவுக்கு வந்திருக்க அதிலிருந்து விடுபட்டான்.

 

அவன் கேட்டிருந்த விபரம் மெசேஜில் வந்திருக்க விதுரனுக்கு அதை பார்வார்ட் செய்துவிட்டு அழைத்தும் சொல்லியிருந்தான்.

 

————–

 

இதழினி விதுரனை அங்கு எதிர்பார்க்கவில்லை. முதல் நாள் அவன் அழைத்திருந்ததை காலையில் தான் பாத்திருந்தாள். உடனே அவள் அவனுக்கு அழைக்க அவன் அழைப்பை எடுக்கவில்லை அப்போது.

 

இப்படி நேரிலேயே வந்து நிற்பதை ஆச்சரியமாகத் தான் பார்த்திருந்தாள். அவனைக் கண்டதும் ஆசிரியரை கண்ட மாணாக்கன் போல் சட்டென்று எழுந்து நின்றிருந்தாள்.

 

தன்னை கண்டதும் எழுந்து நின்றவளை கண்டு லேசாய் சிரிப்பு வந்தது அவனுக்கு. அதை தனக்குள் அடக்கிக்கொண்டு மெல்ல நடந்து வந்தான் அவர்களை நோக்கி.

 

உடன் அமர்ந்திருந்த அவளின் அலுவலக நண்பர்கள் “என்ன இதழ் அட்டென்ஷன்ல நிக்கறே யாரைப் பார்த்து நிக்கறே” என்றவாறே அவள் பார்வை சென்ற திக்கை நோக்க அங்கு விதுரன் நின்றிருந்தான்.

 

“ஹலோ சார் நீங்க இதழ் ஹஸ்பென்ட் தானே” என்றாள் இதழினியின் உடன் வந்திருந்த தோழி ரஞ்சனி. விதுரன் தலையாட்ட மற்றவர்களும் எழுந்து நின்றனர் இப்போது. “என்ன சார் இவ்வளவு தூரம்??” என்றான் ஒருவன்.

 

“என் வைப்பை கூட்டிட்டு போலாம்ன்னு தான் வந்தேன்”

 

“அதுக்கா இவ்வளவு தூரம் வந்தீங்க… நாங்களே நாளைக்கு வீட்டுக்கு வந்திருப்போமே??”

 

“நான் இங்க இருக்கும் போது அங்க எதுக்கு போகணும்”

 

“அது சரி தான்”

 

“சார் நான் உங்களை எங்கயோ பார்த்திருக்கேன்” என்றான் இன்னொருவன்.

 

“நீங்க போலீசா??” என்று வேறு கேட்டு வைத்தான். பின்னே விதுரன் ஆள் பார்க்க வாட்டசாட்டமாய் உயரமாய் கட்டை மீசை வைத்துக்கொண்டு தோரணையாய் போலீசை போலத்தான் இருந்தான்.

 

சட்டென்று ஞாபகம் வந்தவனாக “சார் உங்க வீடியோ கூட ஒண்ணு வைரல் ஆச்சுல. கேரளால ஆத்து வெள்ளத்துல அடிச்சுட்டு போன பசுமாட்டை காப்பாத்தினது நீங்க தானே. சூப்பர் சார்” என்றவன் அவனருகே வந்து கைக்கொடுக்க விதுரனும் கைக்குலுக்கினான்.

 

“ஆமாடா இதழ் சொல்லியிருக்கா முன்னாடியே, சார் என்டிஆர்எப்ல இருக்கார்ன்னு”

 

“கொஞ்சா நாள் முன்னாடி அந்த ஆழ்துளை கிணத்துல விழுந்த ஒரு குழந்தையை காப்பாத்துன டீம்ல கூட இருந்ததா கேள்விப்பட்டேன்” என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டிருக்க ரயில் கிளம்புவதற்கான அனவுன்ஸ்மென்ட் வந்தது அப்போது.

 

“இதழ் கிளம்பு போகலாம்” என்றான் வாய்திறந்து.

 

“எப்படி சார் போகப் போறீங்க??”

 

“கார்ல தான் வந்தேன்” என்று அவர்களுக்கு பதில் சொன்னவன் இதழினியை பார்க்க மேல் பெர்த்தில் இருந்த தன் உடமைகளை எடுக்க எட்டி அவள் கையை நீட்ட “இரு நான் எடுக்கறேன்” என்றவன் அதை இறக்கி தன் கையில் எடுத்துக் கொண்டான்.

 

“இவ்வளவு தானா வேற லக்கேஜ் இருக்கா”

 

“அவ்வளவு தான்…”

 

“போகலாமா”

 

“ஹ்ம்ம்”

 

“ஓகே கைஸ் நாங்க கிளம்பறோம். முன்னாடியே சொல்லிடறேன் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் எல்லாருக்கும்” என்று சொல்ல பதில் வாழ்த்துரைத்தனர் அவர்களும்.

 

“சார் ட்ரைன் மூவ் ஆகப் போகுது நீங்க இறங்குங்க” என்று ஒருவன் குரல் கொடுக்க நன்றியுரைத்து இறங்கினர் இருவரும்.

 

“அச்சோ என்னோட ஹேண்ட்பேக் மறந்திட்டேன்” என்றவளை சிரிப்புடன் திரும்பி பார்த்தான் அவன்.

 

“நீ மறந்திடுவேன்னு தான் எனக்கு தெரியுமே இதோ இருக்கு” என்று தன் தோளில் மாட்டியிருந்த அவள் பையை காட்ட ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றாள் இதழினி.

விதுரனின் இப்படியொரு மாற்றத்தை அவள் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. அவளின் விருப்பமெல்லாம் அவன் தன்னை புரிந்து கொண்டாலே போதும் என்றளவில் தான் இருந்தது.

 

“என்னை பார்த்திட்டே இருந்தா எப்படி கிளம்பறது போகலாமா”

 

“ஹ்ம்ம்”

 

“நிறைய பேசுவ தானே, என்கிட்ட மட்டும் ஏன் வாயடிக்கறது இல்லை”

 

“நான் பேசினா தான் உங்களுக்கு பிடிக்கறதில்லையே” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

 

“பிடிக்காதுன்னு நான் சொன்னேனா”

 

“பிடிக்கும்ன்னும் நீங்க சொன்னதில்லையே”

 

“சரி இப்போ சொல்றேன் பிடிக்கும்”

 

“இதுக்கு நீங்க சொல்லாமையே இருந்திருக்கலாம், சப்புன்னு இருக்கு” என்று வாய்விட்டாள்.

 

“வேற எப்படி சொல்லணும்ன்னு நீ எதிர்பார்க்கறியோ அப்படி சொல்லிட்டா போச்சு” என்று அவன் சொல்ல ‘இதென்ன இன்னைக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக இருக்கிறதே. இது கனவா இல்லை நனவா’ என்று தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.

 

அவள் செயலில் சிரித்துக் கொண்டான் அவன். ஸ்டேஷனை விட்டு அவர்கள் வெளியே வந்திருக்க விதுரன் வண்டி நிறுத்தியிருந்த இடத்தை வந்தடைந்தனர்.

 

“நீங்களா கார் ஓட்டிட்டு வந்தீங்க”

 

“அதுல என்ன சந்தேகம் உனக்கு??”

 

“இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க என்னை கூட்டிட்டு போகவா” என்றவளிடம் ஆமென்று தலையசைத்தான் அவன்.

 

Advertisement