Advertisement

 

18

 

இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இதழே இதழே தேன் வேண்டும்

இடையே இடையே கனி வேண்டும்

இது போல் இன்னும் நான் வேண்டும்

இன்பம் எல்லாமே நீ தரவேண்டும் தரவேண்டும்

 

என்ற இதயக்கனி படப்பாடல் தொலைக்காட்சியில் ரிப்பீட் மோடில் சத்தமாய் ஒலிக்கவிட்டு கேட்டுக்கொண்டிருந்தான் விதுரன்.

 

சைலேஷ் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தவன் என்ன பாட்டு இது என்று நின்றுக் கேட்டுக்கொண்டிருக்க அதற்குள் பாடல் முடிந்திருந்தது.

 

அவன் என்ன பாடல் என்று யோசிப்பதற்கு அவகாசமே தேவைப்படாமல் விதுரன் அப்பாடலை மீண்டும் ஒலிக்கவிட்டான்.

 

“என்னடா பாட்டெல்லாம் பலமா இருக்கே??” என்றான் நண்பனைப் பார்த்து.

 

“பிடிச்ச பாட்டுடா, இந்த படத்துல எல்லா பாட்டுமே நல்லாயிருக்கும் அப்பாக்கு எம்ஜிஆர் பாட்டுன்னா உயிரு. அவர் கேட்கறதை பார்த்து எனக்கும் பிடிச்சது” என்றான் விதுரன்.

 

‘என்னடா இவ்வளவு நீளமா எல்லாம் இவன் பேச மாட்டானே. பயபுள்ள எதையும் மறைக்குதா’ என்றவனுக்கு அவன் ஏன் அந்த பாட்டை விரும்பி கேட்கிறான் என்று புரிபட சில நொடி பிடித்தது.

 

‘அடப்பாவி நீயா இது, எப்போடா இப்படி ஆனே’ என்று மனதிற்குள் தான் கேட்டுக்கொண்டான் அவன்.

 

“என்னடா மைன்ட் வாய்ஸ்ல ஏதோ பேசற மாதிரி இருக்கு என்ன??” என்றான் விதுரன்.

 

“கேட்டா சொல்லிடுவியா??”

 

“கேளு சொல்றேன்”

 

“அதென்ன இந்த பாட்டு ரொம்ப ஸ்பெஷல்”

 

“பர்ஸ்ட் நைட் சாங்டா”

 

“அதனால…”

 

“அதனால தான் கேட்கறேன்…”

 

“இல்லையே” என்றான் அவன் சந்தேகமாய்.

 

“வேற என்னவா இருக்கும்ன்னு நீ நினைக்கிறே??”

 

“அதையும் நான் தான் சொல்லணுமாடா”

 

“நீ தானேடா கேள்வி கேட்டே, நான் பதில் சொன்னேன். நீ சந்தேகமா பார்த்த, அதான் நீ என்ன நினைக்கிறேன்னு கேட்டேன்”

 

“இதழே இதழேன்னு உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சோன்னு நினைச்சேன்”

 

“அப்படியா தோணிச்சு உனக்கு”

 

“அப்படித்தான் தோணிச்சு”

 

“அப்போ எனக்கும் அப்படித்தான் தோணிச்சு” என்று எனக்கும் இஸ்க்கு இஸ்க்கு என்று தான் கேட்கிறது என்பது போல சொல்லியிருந்தான் அவன்.

 

“ஏதே”

“அதே அதே”

 

“போச்சு போச்சு இங்க சுத்த வீரனா ஒருத்தன் சுத்திட்டு இருந்தான். இப்போ அவனை காணோம், அன்னியன் மாதிரி இருந்தவன் ரெமோ மோடுக்கு போய்ட்டான்” என்று கிண்டலடித்தான் சைலேஷ்.

 

————–

 

“ஏன்மா நீ தான் போகணுமா?? வேற யாரும் போக மாட்டாங்களா??” என்றார் கற்பகம்.

 

“இது என்னோட வேலை அத்தை நான் தான் போகணும்…”

 

“என்னமோ போங்க ஆளுக்கு ஒரு பக்கம் வேலை வேலைன்னு போய்டறீங்க. குழந்தை குட்டின்னு பெத்துக்கற ஐடியா இருக்கான்னு தெரியலை எனக்கு. உங்க கல்யாணம் முடிஞ்சே பத்து மாசம் முடிஞ்சுச்சு போச்சு”

 

“தலைப்பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போவேன்னு பார்த்தா ஆபீஸ் வேலையா ஊருக்கு போறேங்கற. நீங்க ரெண்டு பேரும் எத்தனை நாளைக்கு தான் இப்படி தனித்தனியா இருக்கறதா உத்தேசமோ தெரியலை எனக்கு??”

 

“அவன்கிட்ட வேலையை விடுடான்னா நீ சொன்னா விடுறேன்னு சொல்றான். உன்னை சொல்லச் சொன்னா அவர்க்கு எப்போ தோணுதோ அப்போ அவரே வருவார்ன்னு சொல்ற…”

 

“சின்னவன் என்னடான்னா இப்போ கல்யாணம் வேணாங்கறான். ஆளாளுக்கு என்ன தான் நினைச்சுட்டு இருக்கீங்கன்னு தெரியலை. எங்க காலம் இப்படியே போய்டும் போல”என்று புலம்பினார் கற்பகம்.

 

“அத்தை கவலைப்படாதீங்க திருநா தம்பிக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் பாருங்களேன்”

 

“அது நடக்காம எங்க போய்ட போகுது. நீங்க நல்ல சேதி சொல்ல மாட்டேங்கறீங்களே” என்றார் அவர் விடாது.

 

“சீக்கிரம் சொல்லிடலாம் அத்தை” என்று அவரை சமாதானம் செய்தாள்.

 

“உன் புருஷன்கிட்டே சொல்லிட்டியாம்மா ஊருக்கு போறேன்னு”

 

“ஹ்ம்ம் சொல்லிட்டேன் அத்தை” என்றாள்.

 

காலையில் அவனுக்கு போன் செய்திருந்தாள் அவன் எடுக்கவில்லை. பின் அவனுக்கு மெசேஜ் செய்திருந்தாள் ஊருக்கு கிளம்புவதாய்.

 

“சரிங்கத்தை நான் கிளம்பறேன், ஒரு ரெண்டு நாள்ல வந்திடுவேன்…”

 

“ஏன்மா நீ மட்டும் தனியாவா போறே?? கூட யாரும் வரலையா??”

 

“என்னோட இன்னும் நாலு பொண்ணுங்க அப்புறம் பசங்க மூணு பேரு வர்றாங்க அத்தை…”

 

“அப்போச்சரி” என்றவர் “திருநா வண்டி எடு நாம எல்லாருமே ஸ்டேஷன் போய் வழியனுப்பிட்டு வருவோம்” என்றார் சின்னமகனிடம்.

 

“அத்தை எல்லாரும் எதுக்கு நான் போய்க்க மாட்டேனா”

 

“நாங்க வரக்கூடாதா அப்போ” என்று அவர் திருப்பி கேட்க வாயை மூடிக்கொண்டாள் அவள்.

 

திருநாவுக்கரசு வண்டி எடுக்க அனைவரும் ஸ்டேஷன் வந்திருந்தனர். மகிழினியும் அவளை வழியனுப்ப அங்கு வந்திருந்தாள்.

 

‘இவ என்ன அடிக்கடி என் கண்ணுல பட்டுட்டே இருக்கா. பார்க்கக்கூடாதுன்னு இருக்கும் போது தான் வர்றா, இதென்ன சோதனை ஆண்டவா’ என்று புலம்பியது திருநாவின் மனமே.

 

“நீ இங்க என்னம்மா பண்றே மகிழு, அக்காவை வழியனுப்ப வந்தியா”

 

“ஆமா அத்தை”

 

“அதனால தான் நீ எங்களை வரவேணாம்ன்னு சொன்னியா இதழ்” என்றார் மருமகளிடம்.

 

“அப்படியெல்லாம் இல்லை அத்தை எதுக்கு வீணா அலைஞ்சுகிட்டுன்னு தான் சொல்லலை. இவ நான் எப்போ ஊருக்கு போனாலும் வழியனுப்ப என்கூட வந்திடுவா நான் சொன்னா கூட கேட்க மாட்டா” என்றாள்.

 

இதழினி அலுவலக வேலையாக பெங்களூர் செல்கிறாள்.  அதற்கு தான் இத்தனை பேரும் அங்கு வந்திருந்தனர். அவளின் அலுவலக நண்பர்கள் கூட கிண்டல் செய்தனர் இதென்ன வழியனுப்ப ஒரு ஊரே வந்திருக்கு என்று.

 

ட்ரைன் கிளம்பும் வரையில் நின்று கையாட்டி பின் தான் கிளம்பினார்கள் அவர்கள். “சரிங்க அத்தை நான் கிளம்புறேன்” என்று மகிழினி கிளம்ப “எப்படிம்மா போறே??” என்றார் சதாசிவம்.

 

“பஸ் இல்லை ஆட்டோ பிடிச்சு போய்டுவேன் மாமா…”

 

“எதுக்கும்மா?? வண்டியில போவோம் வா. உன்னை வீட்டில விட்டுட்டு உங்கப்பா அம்மாவையும் ஒரு எட்டு பார்த்திட்டு வீட்டுக்கு போறோம்” என்றார் கற்பகம்.

“நீ முன்னாடி உட்காரும்மா உங்க மாமாக்கு காலை நீட்டி முன்னாடி உட்கார முடியலைன்னு சொல்லிட்டு இருந்தாரு” என்று கற்பகம் சொல்ல “அதை முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்க வேண்டியது தானேப்பா”

 

“சீட்டை பின்னாடி நகர்த்திவிட்டிருப்பேன்ல” என்றான்.

 

“அதை பின்னாடி நகர்த்த முடியுமா?? பெரிய வண்டியில அப்படி பண்ண முடியாதுன்னு நினைச்சேனே…”

 

“வந்து உட்காருங்க நகர்த்தறேன்”

 

“வேணாம் வேணாம் நான் பின்னாடியே உட்கார்ந்து வர்றேன்” என்று அவர் பின்னால் சென்றுவிட மகிழினி அவனருகே வந்து அமர்ந்தாள்.

 

திருநாவுக்கரசு சைடு மிரரை பார்க்கக்கூட அவளின் புறம் திரும்பவில்லை. கேமராவை ஆன்செய்து பின்னால் வரும் வண்டிகளை பார்ப்பதும் முன்னால் பார்ப்பதும் என்று தான் வண்டியை ஓட்டினான்.

 

“ரொம்ப பண்றேடா நீ” என்று முணுமுணுத்தாள் மகிழினி. அவள் பேசியது பின்னால் இருந்தவர்களுக்கு கேட்டிருக்காது என்றாலும் அருகில் அமர்ந்திருந்தவனின் காதில் தெளிவாய் விழுந்து வைத்தது அது.

 

அண்ணன் ஊருக்கு போகும் போது கூட இதே போலத்தானே ஏதோ சொன்னான் என்ற நினைவு வேறு வந்தது. அவன் எதற்கு சொன்னான் என்று அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

 

இவள் எதற்கு சொல்கிறாள் என்று யோசிக்க ‘ஒரு வேளை என்னைத் தான் குற்றம் சொல்கிறாளோ’ என்று தோன்ற கண்கள் தாமாய் அவள் புறம் திரும்பியது.

 

அவளும் அதை எதிர்பார்த்தது போல அவனைத் தான் பார்த்தாள். அவளின் பார்வை உள்ளே வரை ஏதோ செய்ய பார்வையை திருப்பிக் கொண்டான். விதுரனின் பேச்சு வேறு ஞாபகம் வர முகத்தில் இறுக்கம் தோன்றியது அவனிடத்தில்.

 

——————

 

விதுரன் பொங்கலுக்கு முன்பே விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருந்தான் வீட்டிற்கு. அவன் மனமோ இதுவரை இல்லாத அளவிற்கு இதழினியை தேடியது.  இருவரும் சரியாக பேசியே நாட்கள் ஆகிறது.

 

நெய்வேலிக்கு பிறகு அவன் கேரளாவிற்கு ஓரிரு முறை சென்று வந்திருந்தான். தொடர் மழையால் அங்கு வெள்ளம் சூழ்ந்திருந்த இடத்தில் இருந்தவர்களை காப்பாற்ற சென்றிருந்தனர்.

 

அடுத்தடுத்து அவன் வெளியூர்களுக்கு பிரயாணம் செய்ய வேண்டியிருந்ததால் ஓரிரு மாதங்களாக வீட்டிற்கும் சரியாக வரமுடியவில்லை அவனால்.

 

‘நான் தான் எப்பவும் வரணுமா, இவ வரமாட்டாளா’ என்று இடையில் ஒரு முறை தோன்றியது அவனுக்கு. இவன் அழைத்திருந்தால் அவள் வந்திருப்பாளோ என்னவோ அவனும் அழைக்கவில்லை அவளும் அங்கு வரும் எண்ணம் கொண்டிருக்கவில்லை.

 

விலகி செல்லும் போது தான் உள்ளம் தேடும் என்பது பொய்க்காது அவளை அதிகம் தேடியது அவன் மனம். அவள் நினைவுகள் அவனை படுத்திய பாட்டில் தான் சென்னை வந்திருந்தான்.

 

அவன் அங்கு வருவதை பற்றி முன்பே யாருக்கும் சொல்லியிருக்கவில்லை. சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று எண்ணி வந்திருக்க இறுதியில் சர்ப்ரைஸ் அவனுக்கு தான் என்றானது. வீடு பூட்டியிருந்தது, உடனே இதழினிக்கு அழைக்க அவளின் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்று வர கடுப்பாகியது அவனுக்கு.

 

பின் திருநாவுக்கரசுக்கு அழைக்க அவன் வண்டி ஒட்டிக் கொண்டிருந்ததாலும் மகிழினியின் மாற்றத்தினாலும் குழப்பத்தினாலும் போனை எடுக்கவில்லை.

 

விதுரனுக்கு அப்படியொரு எரிச்சல் மண்டியது. எல்லோரையும் பார்க்க ஆசையாக வீட்டிற்கு வந்தால் யாருமே வீட்டில் இல்லை. ‘எல்லாரும் கிளம்பி எங்க தான் போனாங்க’ என்று வசைப்பாடிக் கொண்டிருந்தான் அனைவரையும்.

 

அப்போது தான் இதழினியின் மெசேஜை பார்த்தான். பெங்களூர் செல்வதாக அனுப்பியிருந்தாள். காலையிலேயே அவள் அழைத்திருந்தாள், அவன் தான் இன்று எப்படியும் ஊருக்கு செல்லப் போகிறோமே நேரிலேயே பேசிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டான்.

 

அடுத்த சில நிமிடங்களிலேயே திருநா அழைத்துவிட்டான், “சொல்லுண்ணா” என்றவாறே.

 

“எங்கேடா இருக்கீங்க எல்லாரும்??”

 

“ஸ்டேஷன்க்கு போனோம்ண்ணா அண்ணியை டிராப் பண்ண, அவங்க தங்கைச்சியும் அங்க வழியனுப்ப வந்திருந்தாங்க… அவங்களை இப்போ தான் வீட்டில டிராப் பண்ணோம்ண்ணா. வண்டியில இருந்து இறங்கவும் உன் நம்பரை பார்த்தேன் கூப்பிடுறேன்”

 

“அம்மா?? அப்பா??”

 

“அவங்க உள்ளே பேசிட்டு இருக்காங்கண்ணா”

 

“நான் நம்ம வீட்டில தான் இருக்கேன்” என்று விதுரன் சொல்லவும் “எப்போ வந்தேண்ணா சொல்லவேயில்லை. சரி நான் உடனே கிளம்பி வர்றேன்” என்றான் அவன்.

“அம்மாவையும் அப்பாவையும் கூட்டிட்டே வா. நான் வெயிட் பண்ணுறேன்”

 

“ஓகேண்ணா” என்றுவிட்டு போனை வைத்தவன் அடுத்த அரைமணியில் வீட்டிலிருந்தான்.

 

“என்னடா நீங்க ரெண்டு பேரும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுறீங்களா. அவ அப்படி கிளம்பி ஊருக்கு போகவும் நீ வந்து நிக்கறே??”என்றார் கற்பகம்.

 

“அவ மெசேஜ் பண்ணியிருந்தாம்மா நான் பார்க்கலை”


“போன் பண்ணுறேன்னு தானே சொன்னா??”

 

“பண்ணாம்மா நான் எடுக்கலை, அதான் மெசேஜ் போட்டிருக்கா… நான் தான், நம்ம வீட்டுக்கு போகத்தானே போறோம், நேர போய் பேசிக்கலாம்ன்னு நினைச்சேன்”

 

“நல்லா நினைச்சே போ… சாப்பிட்டியா இல்லையா??”

 

“இன்னும் இல்லைம்மா, நான் போய் குளிச்சுட்டு வர்றேன் நீங்க எடுத்து வைங்க” என்றவன் படியேறி மாடிக்குச் சென்றான்.

 

இதழினி இல்லாத அறையே அவனை வரவேற்றது. கட்டிலில் அவள் எடுத்து போகாது விட்டிருந்த உடை ஒன்று அவனை பார்த்து சிரிப்பது போலிருந்தது, உனக்கு நான் தான் துணை என்று.

 

தலையை உலுக்கிக்கொண்டவன் குளிக்கச் சென்றான். இரவு உணவை முடித்து அறைக்கு வந்து படுத்த போது வெறுமையாக இருந்தது. அவளுக்கு அழைப்பு விடுக்க அது எடுக்கப்படாமலே ஓய்ந்தது.

 

உறங்கியிருப்பாள் தொல்லை செய்யக்கூடாது என்று எண்ணி அதன்பின் அழைக்கவில்லை அவளுக்கு.

————-

“ஹேய் எல்லாம் எடுத்து வைச்சிட்டியா??”

 

“வைச்சிட்டேன் இதழ், நீ போனை சார்ஜ் போட்டியே எடுத்திட்டியா??” என்றாள் அவள் அலுவலக தோழி ரஞ்சனி.

 

“அச்சோ மறந்திட்டேன் ரஞ்சு” என்றவள் அதை எடுத்து வந்து பையில் பத்திரப்படுத்தினாள்.

 

“சரி கிளம்பலாம் வண்டி வந்திடும்ல இப்போ”

 

“விமல் அப்போவே புக் பண்ணிட்டான். வண்டி வந்ததும்  நேரா ஒரு ஹோட்டல்ல போறோம், சாப்பிட்டு முடிச்சதும் அடுத்து ஸ்டேஷன்க்கு தான் ஓகேவா” என்றவள் “ஆமா இதழ் பொங்கலுக்கு என்ன பிளான் உனக்கு??”

 

“ஒரு பிளானும் இல்லைடி…”

 

“தலைப்பொங்கல்ல உனக்கு உங்க வீட்டுக்கு போக மாட்டியா??”

 

“அதெல்லாம் எங்களுக்கு பழக்கம் இல்லை. எங்க வீட்டில இருந்து பொங்கல் சீர் வரும், அதை வைச்சு தான் அன்னைக்கு பொங்கல் செய்வாங்க…”

 

“நாலு நாள் தொடர்ந்து லீவு வருது இதுக்கு நீ பேசாம எங்களோட ஏற்காடு பிளான்ல ஜாயின் பண்ணியிருக்கலாம்” என்றாள் அவள்.

 

“நீங்க என்ஜாய் பண்ணுங்க நான் வரலை”

 

“அதான் முதல்லயே சொல்லிட்டியே” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்க அடுத்த அறையில் தங்கியிருந்த இவர்களின் மற்ற நண்பர்களும் வந்து சேர்ந்தனர்.

 

அவர்கள் வந்த வேலை முடிந்து போயிருந்தது. இதோ அவர்கள் சென்னைக்கு கிளம்பியிருந்தனர்.

வழியில் சாப்பிட்டு அவர்கள் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். அவரவர் உடமைகளை பத்திரப்படுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்தனர். ரயில் அந்த ஸ்டேஷனில் இருந்து தான் கிளம்புவதால் இன்னமும் கிளம்பியிருக்கவில்லை.

 

தோழர்கள் அனைவரும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் கலாட்டா செய்துக்கொண்டும் இருக்க இதழினி வீட்டிற்கு அழைத்தாள்.

 

“என்னம்மா கிளம்பிட்டியா??”

 

“ட்ரைன் ஏறிட்டேன் அத்தை, அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்”

 

“ட்ரைனா?? அப்போ வண்டி எங்க போச்சு” என்றார் அவர்.

 

“வண்டியா?? ட்ரைன்ல தான் அத்தை வர்றோம்”

 

“சரி சரி பார்த்து பத்திரமா வாங்க ரெண்டு பேரும்” என்றுவிட்டு அவர் போனை வைத்துவிட்டார்.

 

அவர் பேசியதை முதலில் கவனிக்காதவள் ‘அத்தை என்ன சொன்னாங்க, ரெண்டு பேரும் வரணுமா. யாரை சொல்றாங்க. எல்லாரும்ன்னு சொல்றதுக்கு பதில் அப்படி சொல்லியிருப்பாங்களோ’ என்று எண்ணிக்கொண்டவள் தானும் மற்றவர்களுடன் பேச்சில் கலந்துக் கொண்டாள்.

 

ரயில் கிளம்புவதற்கு பத்து நிமிடம் இருந்தது இன்னும். இதழினிக்கு ஏதோவொரு உள்ளுணர்வு சொல்லியது, யாரோ அவளை கூர்ந்து நோக்குவதாய்.

 

எதிரில், அருகில் என்று பார்த்திருந்தவளின் கண்கள் கதவருகில் இருகைகளையும் கட்டிக்கொண்டு ஒரு காலை மடித்து பின்னால் சாய்ந்து ஒய்யாரமாக நின்றிருந்தவனின் மீது பாய்ந்து அப்படியே நின்றது…

Advertisement