Advertisement

17

 

‘என்னாச்சி இந்த பொண்ணுக்கு எப்போமே நல்லா பேசும். இன்னைக்கு எதுவும் பேசாமலே வைச்சிடுச்சு. குரலும் சரியில்லையே’ என்றுணர்ந்தவன் தன் மனைவிக்கு அழைத்தான்.

 

“சொல்லுங்க”

 

“பாரதி நீ கொஞ்ச நேரம் கழிச்சு இதழினிக்கு போன் பண்ணு”

 

“என்னாச்சுங்க எதுவும் பிரச்சனையா??”

 

“அதை தெரிஞ்சுக்க தான் உன்னை பேசச் சொல்றேன். விது நெய்வேலி போயிருக்கான், வீட்டுக்கு சொன்னானான்னு தெரியலை. அந்த பொண்ணு பேசுறது பார்த்தா ஏதோ சரியில்லைன்னு தோணுது நீ பேசு”

 

“நானா நான் என்ன பேச”

“உன்னோட ஜூனியர் தானே நீயே பேசு. என்கிட்ட சொல்ல முடியாத விஷயத்தை கூட உன்கிட்ட அவ ஷேர் பண்ணிக்கலாம்ல அதுக்கு தான் சொல்றேன்” என்று அவன் சொல்ல அவளுக்கும் அது சரியென்றேப்பட்டது.

 

“சரிங்க பேசறேன்”

 

“பேசிட்டு எனக்கு மெசேஜ் பண்ணு. நான் ப்ரீயா இருக்கும் போது உனக்கு கூப்பிடுறேன்” என்றவன் வேலையில் கவனமானான்.

 

பாரதி உடனே இதழினிக்கு அழைத்துவிட்டாள். இதழினி அப்போது தான் ஹாலில் இருந்த தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அவர்கள் அறைக்கு சென்றிருந்தாள்.

 

கட்டிலில் படுத்தவள் தொலைக்காட்சியை இயக்கி செய்தி சேனல் வைத்து தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரம் தான் பாரதி அழைத்திருந்தாள் அவளுக்கு.

 

“சீனியர் சொல்லுங்க சீனியர் இந்த நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க. என்னாச்சு சீனியர்” என்றாள் பதட்டமான குரலில்.

 

“ஒண்ணுமில்லை இதழ் உன்கிட்ட பேசலாம்ன்னு தான் கூப்பிட்டேன்”

 

“நிஜமாவே எதுவுமில்லை தானே…”

 

“நிஜம் தான் இதழ் உன்கிட்ட பேசி நாளாச்சேன்னு தான் கூப்பிட்டேன்”

 

“நான் பயந்தே போயிட்டேன்” என்றாள்.

 

“என்ன பயம் உனக்கு??”

 

“அது வந்து, அதை விடுங்க… நீங்க என்கிட்ட ஏதோ ஜாலியா பேசலாம்ன்னு தானே கூப்பிட்டீங்க சொல்லுங்க”

“உனக்கு என்ன பயம்ன்னு சொல்லு??”

 

“இல்லை சீனியர் இவங்க நெய்வேலி போய் இருக்காங்க போல, டிவில பார்த்தேன், அதான்…” என்று இழுத்தாள்.

 

“அவங்க வேலை பத்தி தான் உனக்கு தெரியும்ல அப்புறமென்ன??”

 

“தெரியும் தான் ஆனா எனக்கு மனசே சரியில்லை ஏன்னு தெரியலை” என்று சொல்லும் போது அவள் குரல் உடைந்திருந்தது.

 

“ஒண்ணும் பயப்படாதே அவங்க எல்லா சேப்டி மெஷர்ஸோட தான் உள்ள போயிருப்பாங்க. நல்லபடியா எல்லாரையும் காப்பாத்தி கூட்டிட்டு வருவாங்க பாரேன். சாமி கும்பிட்டு போய் படு இதழ்”

 

“ஹ்ம்ம் சரி சீனியர். குட்டி எப்படி இருக்கான் சீனியர் அவனை எப்போ நேர்ல என்கிட்ட காட்டுவீங்க??”

 

“உன்னை இங்க வரச்சொன்னா நீ வரவே மாட்டேங்கற. அடுத்த வாரம் நீ இங்க வந்திடு. நானும் அண்ணன்கிட்ட சொல்லிட்டு தான் இருக்கேன் உன்னை இங்க கூட்டிட்டு வரச்சொல்லி அந்தா இந்தான்னு சொல்றாங்களே தவிர வரமாட்டேங்குறாங்க”

 

“இல்லை சீனியர் அவங்க கூப்பிட்டாங்க எனக்கு தான் கொஞ்ச வேலையா போச்சு…” என்று சமாளித்தாள் அவள்.

 

“இதழ் நீ நிறைய மாறிட்டே”

 

“ஹா ஹா என்ன சீனியர் சொல்றீங்க. நான் எப்பவும் போலத்தானே இருக்கேன்”

 

“உன் கல்யாணத்தப்போ பார்த்தப்போ கூட நீ அதே குழந்தைத்தனத்தோட இருக்கேன்னு தான் எனக்கு தோணிச்சு. ஆனா நீ அப்படியில்லை, ரொம்பவும் தெளிவா இருக்கே, பேசறே… சரி நீ தூங்கு  நேரமாச்சு நான் வைக்குறேன்”

 

“அண்ணாவும் போயிருக்காரா சீனியர்”

 

“இல்லை அவர் போகலை, குட்டி பையனுக்கு உடம்புக்கு கொஞ்சம் முடியலை. அதான் இவர் எங்கயும் போகலை, ஆனா வேலை தான் பார்த்திட்டு இருக்கார், இங்க இருந்தே கோஆர்டினேட் பண்ணிட்டு இருக்கார்”

 

மேலும் ஓரிரு நிமிடம் பேசிவிட்டு போனை வைத்திருந்தாள் பாரதி. உடனே கணவனின் எண்ணுக்கும் மெசேஜ் தட்டியிருந்தாள். இதழினிக்கு உறக்கம் வருவேனா என்றிருந்தது. அவர்களின் திருமணத்திற்கு பின்னர் விதுரன் சென்றிருக்கும் முதல் வேலை அது தான்.

 

அதனால் தான் அவளுக்கு படபடப்பாக வருகிறதோ என்னவோ. கண்ணை மூடி கடவுளை தொழுதாள் அவனுக்காக மட்டுமல்ல. உள்ளே சிக்கியிருந்த அனைத்து உயிர்களுக்காகவும் வேண்டினாள்.

 

விடிய விடிய உறங்காதவள் எப்போது உறங்கினாள் என்பதை அறியாள். தொலைக்காட்சி மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது.

 

சதாசிவம் காலையில் நியூஸ் பார்த்து சொன்ன பிறகு தான் விதுரன் நெய்வேலிக்கு சென்றிருப்பானோ அதனால் தான் தங்களுக்கு போன் செய்யவில்லையோ என்று என்ற எண்ணம் வீட்டினருக்கு, திருநாவுக்கரசு எழுந்து வந்தவனும் டிவியைத் தான் பார்த்திருந்தான்.

 

“அம்மா அண்ணா அங்கயா போயிருக்கான்??”

 

“தெரியலையே திருநா நீ ஒரு போன் போட்டு பாரேன் அவன் எதுவுமே சொல்லலையே எப்பவும் சொல்லிட்டு தானே போவான்” என்றார் அவர்.

“அண்ணன் ஒரு வேளை அண்ணிக்கு போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல”

 

“அப்படி சொல்லியிருந்தா இதழ் சொல்லியிருப்பாளே. இரு நான் கேட்கறேன்” என்றவர் அப்போது தான் மருமகளை தேடினார்.

 

“ஆமா மணி எட்டாகப் போகுது இந்த பொண்ணு இன்னும் கீழ இறங்கி வரவே இல்லையே” என்றவர் படியேறி மாடிக்குச் சென்றார்.

 

அவளின் அறைக்கதவை தட்ட சத்தமேயில்லை. “இதழு… இதழு” என்று பலமுறை அழைத்தும் பதிலில்லை.

 

அங்கிருந்தவாறே “திருநா” என்று குரல் கொடுக்க “என்னம்மா” என்றான் அவன் கீழேயிருந்து.

 

“அண்ணிக்கு போன் போடு. கதவை தட்டுறேன் திறக்க மாட்டேங்குறா” என்று சொல்ல திருநாவுக்கரசு அவளின் கைபேசிக்கு அழைக்க நான்கு அழைப்புகள் தவறி ஒருவாறு போனை எடுக்க அழைப்பு நின்று போனது.

 

கதவு வேறு தொடர்ந்து தட்டிக்கொண்டிருக்க அந்த சத்தமே அவள் உறக்கத்தை கலைத்திருந்தது. தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தவள் அதை அணைத்துவிட்டு அவசரமாய் எழுந்து வெளியில் வந்தாள்.

 

கற்பகம் வெளியில் நிற்பதை பார்த்ததும் சங்கடமாகிப் போனது அவளுக்கு.“சாரி அத்தை உடம்புக்கு முடியலை அதான் தூங்கிட்டேன்” என்றாள் மன்னிப்பு கோரும் பாவத்துடன்.

 

“என்னாச்சும்மா காய்ச்சல் எதுவும் அடிக்குதா” என்றவர் அவளை தொட்டுப் பார்த்தார்.

 

“இல்லைத்தை இப்போ பரவாயில்லை”

“விதுரன் உனக்கு போன் பண்ணானாம்மா??”

 

“இல்லை அத்தை, நியூஸ் பார்த்தீங்களா??”

 

“ஆமா உனக்கெப்படி தெரியும்??”

 

“நைட் டிவி பார்த்தேன். சைலேஷ் அண்ணாக்கு போன் பண்ணேன், இவர் நெய்வேலில தான் இருக்காராம்…”

 

“ஒரு வார்த்தை கூட இவன் சொல்லலையே”

 

“அங்க போற அவசரத்துல மறந்திருப்பாங்களா இருக்கும். கவலைப்படாதீங்க அத்தை” என்றாள் ஆறுதலாக.

 

“நீ வேலைக்கு போகலையாம்மா டைம் ஆச்சே…”

 

“லீவு சொல்லிடறேன் அத்தை. இனிமே நான் கிளம்பினாலும் லேட் ஆகிடும்” என்றவள் அவளின் அலுவலகத்திற்கு அழைத்து விடுப்பு சொன்னாள்.

 

அன்று மாலை வரை அவர்கள் தொலைக்காட்சியிலேயே அமர்ந்திருக்க இதுவரை எத்தனை பேர் காப்பாற்றப்பட்டார்கள் என்ற விபரம் மட்டும் வரவேயில்லை.

 

அவர்கள் காப்பாற்ற சென்றவர்களின் நிலை என்ன என்ற சேதியும் கிட்டவில்லை. சைலேஷுக்கு அழைத்தால் அவனும் போனை எடுத்திருக்கவில்லை. அவளின் வீட்டில் இருந்து கூட போன் செய்து கேட்டிருந்தார்கள் என்னவாயிற்று என்று. யாருக்கும் சொல்ல அவளிடம் பதில் இருந்தால் தானே.

 

இரவு பத்து மணி அளவில்தான் காப்பாற்றப்பட்டவர்கள் விபரம் அனைத்தும் காட்டப்பட்டது. எங்கோ சென்றிருந்த திருநா பதட்டமாக வீட்டிற்குள் நுழைந்தான். “அம்மா எல்லாரும் கிளம்புங்க, ஆஸ்பிட்டல் போகணும்” என்றான் மொட்டையாய்.

“என்னடா யாருக்கு என்னாச்சு. எதுவும் சொல்லாம எங்கடா கிளம்பச் சொல்றே??”

 

“அம்மா அண்ணன் ஆஸ்பிட்டல்ல இருக்கு” என்று சொல்ல அனைவருமே கிளம்பினர் மருத்துவமனைக்கு.

 

இதழினிக்கு கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது. அவள் கற்பகத்தை போல வாய்விட்டு கதறவில்லை அவ்வளவே.

 

திருநாவுக்கரசு வீட்டிற்கு வந்து விதுரன் மருத்துமனையில் இருக்கிறான் என்று சொல்லவும் பதறிப்போயினர்.

 

விதுரன் குழுவினர் அவர்களால் முடிந்தவரை உள்ளிருந்தவர்களை காப்பாற்றியிருந்தனர். மிச்சமிருந்த சிலரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வரும் போது தான் திடிரென்று தீப்பற்றிக்கொண்டது அங்கு.

 

இறுதியாக நால்வர் மட்டுமே உள்ளே சிக்கிக்கொண்டிருக்க அவர்களை மீட்க விதுரனும் மேலும் இருவரும் உள்ளே சென்றிருந்த சமயம் தான் நெருப்பு பிடித்துக் கொண்டிருந்தது.

 

முடிந்தவரை அங்கிருந்தவர்களை காப்பாற்றி வெளியில் கொண்டு வந்தவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உள்ளே எடுத்து சென்றிருந்த ஆக்சிஜன் மாஸ்க்கை ஏற்கனவே மயங்கியிருந்த ஊழியர்களுக்கு கொடுத்திருந்ததால் அங்கு கிளம்பியிருந்த வாயுவை அவர்கள் சுவாசித்திருந்தனர்.

 

முடிந்தவரை மூச்சுப் பயிற்சி செய்து வாயுவை சுவாசிப்பதை தள்ளிப்போட்டிருந்தும் அது அவர்கள் உடலுக்குள் சென்றிருந்தது.

 

தீ வேறு பற்றியிருந்ததில் வேறு வழியில்லாது மூச்செடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள் சுவாசித்திருக்க அது அவர்கள் உடலில் வேதியல் மாற்றத்தை நிகழ்த்தியது.

 

எப்படியோ அவர்கள் அந்த ஊழியர்கள் ஒருவர் விடாமல் வெளியேற்றி கொண்டு வந்திருந்தவர்கள் அனைவருமே ஒருவர்பின் ஒருவராக மயங்கியிருக்க சூழ்நிலை மீண்டும் பதட்டமாகியது.

 

எல்லாரும் காப்பாற்றியாகிவிட்டது என்று மகிழ முடியாமல் காப்பாற்ற சென்றவர்களும் மயங்கியிருந்ததில் கவலையுண்டானது. இதோ அவர்கள் அனைவரும் மருத்துவமனையில்.

 

இறுதியாக காப்பாற்றப்பட்ட நால்வரில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்தார். அவருக்கு தீக்காயம் வேறு ஏற்பட்டிருந்தது. வெகு நேரமாக அவர் மூச்சுக்கு தவித்திருந்ததால் அவரின் உடலில் இருந்த செல்கள் மரத்து போயிருந்தது.

 

மருத்துவர்கள் ஒவ்வொரு உயிரையும் மீட்க போராடிக் கொண்டிருந்தனர். விதுரனின் மீட்பு குழுவினரும் மருத்துவமனையில் தானிருந்தனர்.

 

விதுரனும் இன்னும் இருவரும் கண் விழிக்காமல் இருக்க யாருக்கும் அங்கிருந்து நகரும் எண்ணமில்லை. இதோ சைலேஷும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தான். அவன் சொல்லித்தான் திருநாவுக்கரசுக்கு விஷயம் தெரிய வந்திருக்க இதோ அவர்கள் மருத்துவமனை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.

 

அதிகாலையில் அவர்கள் அந்த பெரிய மருத்துவமனையை வந்தடைந்திருக்க வாயிலில் காரை நிறுத்தியிருந்தான் திருநாவுக்கரசு.

 

சைலேஷ் வாயிலிலேயே நின்றிருந்தவன் அவர்களை உள்ளே கூட்டிச் சென்றான். அவன் பார்வை இதழினியை தான் ஆராய்ந்தது.

பெரிதும் ஓய்ந்த தோற்றம் அவளிடத்தில். வெகு நேரமாய் அவள் அழுதிருப்பாள் என்பதை வீங்கி சிவந்திருந்த முகமே காட்டிக் கொடுத்தது.

 

விதுரனை பார்த்ததும் கற்பகம் அழ, இதழினி தான் அவரை சமாதானம் செய்தாள். வந்ததுமே அவள் அவன் தலை முதல் கால் வரை ஆராய்ந்திருந்தாள். கையில் ஆங்காங்கே லேசாய் சிவந்து கண்ணியிருக்க சில இடத்தில் சிராய்த்திருந்தது.

 

அங்கிருந்த அனைவருக்குமே ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டிருந்தது. “என்னாச்சு அண்ணா, விதுரன்  அண்ணா எப்போ கண்ணு முழிப்பாங்க??” என்றான் திருநாவுக்கரசு.

 

“டாக்டரை இப்போ தான் பார்த்திட்டு வந்தேன் திருநா. அங்க வாயு கசிவு இருந்ததால இவன் அதை சுவாசிச்சுட்டான் அதான் இப்படி…”

 

“எப்படிண்ணா??” என்றவனிடம் “நம்ம டீம் கடைசியா காப்பாத்த போனவங்களுக்கு ஆக்சிஜன் கொடுத்திட்டு அவங்களும் அந்த வாயுவை சுவாசிச்சுட்டாங்க. அதனால தான் இப்போ இப்படி இருக்காங்க… காலையில கண்ணு முழிச்சுடுவாங்கன்னு டாக்டர் சொன்னார்…”

 

“இதனால வேற எதுவும் உடம்புக்கு பிரச்சனை இல்லையே” என்றாள் இதழினி.

 

“இல்லைன்னு தான் சொன்னாங்க…”

 

“சென்னைக்கு கூட்டிட்டு போய்டலாமா அண்ணா??” என்றாள்.

 

“எதுவா இருந்தாலும் அவன் கண்ணு முழிக்கட்டுமே” என்று முடித்துவிட்டான் அவன்.

 

இதோ அவன் கண் விழிக்க காத்திருந்தார்கள் அவர்கள். இதழினி அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மற்றவர்களைப்பற்றியும் சென்று விசாரித்தறிந்தாள்.

 

அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவருக்காக மனதார வேண்டிக் கொண்டாள். அவரைத்தான் விதுரன் இறுதியாக காப்பாற்றி அழைத்து வந்தான் என்று அருகில் இருந்தவர்கள் பேசுவதை காதில் வாங்கியிருந்தாள் அவள்.

 

——————

 

அருகில் அசந்து உறங்கிக் கொண்டிருந்தவளைத் தான் இமைக்காமல் பார்த்திருந்தான் விதுரன். மருத்துவமனையில் அவன் கண் விழித்ததும் மருத்துவரிடம் கேட்டுக்கொண்டு அவனை சென்னைக்கு அழைத்து வந்திருந்தனர் அவர்கள்.

 

சென்னையில் அவர்களுக்கு தெரிந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான் அவன். இரண்டு நாட்கள் அங்கிருந்தவனை மூன்றாவது நாள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்.

 

இதழினி அவனிடம் ஓரிரு வார்த்தைகள் தவிர பெரிதாய் எதுவும் பேசவேயில்லை இதுவரை. விதுரனும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

 

ஆனாலும் அவன் முகம் அவளை அவ்வப்போது பார்த்துக் கொண்டு தானிருந்தது. அவனை நன்றாகவே கவனித்துக்கொள்வாள் அதிலெல்லாம் எந்த குறையும் அவள் வைத்திருக்கவில்லை.

 

முன்பு போல அவனிடத்தில் பேசவில்லை அவ்வளவே. மருத்துவமனையில் அவன் கண் விழித்ததும் முதலில் பார்த்தது அவளைத்தான். கற்பகம் தான் அவனிடத்தில் வந்து முதலில் பேசினார். இதழினி தள்ளி நின்றுத்தான் பார்த்திருந்தாள்.

விதுரனுக்கு உயிர் பிழைத்ததை நம்பவே முடியவில்லை. இவர்கள் வெளியேறி வரும் சமயம் சட்டென்று பற்றிக்கொண்ட தீ அவர்களின் பாதையை முழுவதுமாய் மறைத்திருந்தது புகையால்.

 

இனி அவ்வளவு தானோ என்ற எண்ணம் முதல் முறையாக விதுரனின் உள்ளத்தில் தோன்றிய போது இதழினியின் முகம் தான் வந்து போனது அவனுக்கு. அவளிடம் ஒரு வாரமாக பேசவில்லை என்பதும் நினைவில் வர தன்னையே நொந்துக் கொண்டான் அந்நொடியில்.

 

ஓரிரு நொடிகள் தான் தன்னை சமாளித்துக் கொண்டவன் மற்றவர்களை முன்னேறச் சொன்னான். அவனும் ஒருவரை அழைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தான்.

 

இதழினி உறக்கத்தில் திரும்பிப் படுக்க அவன் முகத்திற்கு நேரெதிரில் அவள் முகம். விதுரனின் விரல் அவள் முகவடிவை அளந்தது. ஏதோ குறுகுறுப்பாய் அவளுக்கு தோன்றியிருக்க தோள்பட்டையில் தேய்த்துக் கொண்டாள்.

 

உறக்கம் லேசாய் கலைய ஆரம்பித்திருக்க மெதுவாய் விழி திறந்தவள் பின் மூடி மீண்டும் திறக்க விதுரனின் கண்களை சந்தித்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அதை காணாதது போல அவள் அவனுக்கு முதுகுக்காட்டி திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

 

விதுரனின் கரம் தள்ளிப்படுத்திருந்தவளின் இடையை அணைத்து தன் புறம் இழுத்தது. ஒன்றும் சொல்லாது படுத்திருந்தாள் அவள். விதுரனும் மேற்கொண்டு எதையும் எதிர்பார்க்காதவன் போலத்தான் இருந்தான்.

 

அதற்கு மேல் இதழினியை உறக்கம் நெருங்குமா என்ன. இப்போது அவள் விழித்திருக்க விதுரன் உறங்கியிருந்தான்.

 

விதுரன் வீட்டிற்கு வந்து பதினைந்து நாட்கள் ஆகியிருந்தது. மறுநாள் அவன் வேலையில் சேர்வதாக இருந்தது. முதல் நாள் மாலையே அவன் அரக்கோணம் செல்ல தயாராகியிருந்தான்.

 

கற்பகம் தான் முகத்தை தூக்கி வைத்திருந்தார் எப்போதும் இல்லாத திருநாளாய். “என்னமோ விதுரா எனக்கு மனசே சரியில்லை. நீ பேசாம வேற வேலைக்கு போயேன்” என்றிருந்தார் தாளாமல்.

 

“என்னம்மா பேசறீங்க நீங்க”

 

“இதுவரைக்கும் என்னைக்காச்சும் நான் இப்படி சொல்லியிருப்பேனா. இப்போ சொல்றேன்னா யோசியேன் விதுரா”

 

“இவ்வளவு நாள் சொல்லாதவங்க இப்போ மட்டும் ஏன் சொல்றீங்க??”

 

“இப்போ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு விதுரா”

 

“அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு எது ஆகியிருந்தாலும் பரவாயில்லைன்னு சொல்றீங்களா??”

 

“நான் அப்படி சொல்லலை விதுரா. அந்த பொண்ணு உன்னை நம்பி நம்ம வீட்டுக்கு வாழ வந்திருக்கு. இதுவரைக்கும் அவ இப்படி இருந்து நான் பார்த்ததேயில்லை”

 

“வாய்விட்டு எதுவுமே சொல்லலை அந்த பொண்ணு. அவ்வளவும் போட்டு மனசுக்குள்ளவே வைச்சுட்டு மருகுது, எனக்கு பார்க்கவே முடியலை. இந்த வீட்டுக்கு வந்து இத்தனை நாள்ல அந்த பொண்ணு பேசாம இருந்ததேயில்லை. இப்போ எல்லாம் பேசவே யோசிக்குது…”

 

“ம்மா என் வேலை என்னன்னு தெரிஞ்சு தான் அவ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா. அப்புறம் எதுக்கு இதெல்லாம் பேசறீங்க நீங்க”

 

“நான் இல்லைன்னு சொல்லலை விதுரா”

 

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்மா. இந்த வேலையை என்னால விட முடியாது” என்றான் உறுதியான குரலில்.

 

கற்பகம் மேலே ஏதோ பேச வர “அப்படி நான் விடணும்ன்னா அதை உங்க மருமக என்கிட்ட சொல்லட்டும் அப்போ பார்க்கலாம்” என்று முடித்துவிட்டான் அவன்.

 

இதழினி அவர்களின் பேச்சுவார்த்தையை சமையலறையில் இருந்து கேட்டுக் கொண்டு தானிருந்தாள்.

 

இதழினியின் வீட்டில் இருந்து அவனைப்பார்க்க இரண்டு முறை வந்து போயிருந்தார்கள். அவன் அரக்கோணம் கிளம்பும் நாளன்றும் வந்திருந்தனர்.

 

விதுரன் காரில் ஏறியிருந்தான் அனைவருமே அவனை வழியனுப்ப வாயிலில் நின்றிருந்தனர். அவன் கண்களோ இதழினியை தான் தேடியது. அவளோ இவனை பார்ப்பேனா என்றிருந்தாள். அதில் அவனுக்கு லேசாய் கோபம் மூண்டது.

 

“ரொம்ப பண்றடி” என்று வாய்விட்டே சொல்லிவிட “ரொம்ப பண்ணுதா என்னண்ணா பண்ணுது??” என்றான் திருநாவுக்கரசு.

 

“ஒண்ணுமில்லை நீ வண்டி எடு” என்றான் அவன்.

 

வண்டி கிளம்பிவிட அது தூரத்தே மறையும் வரை நின்று பார்த்திருந்தாள் இதழினி.

Advertisement