Advertisement

“வேற யாருடா எல்லாம் என் தங்கச்சி தான்”

 

“அதான் யாருடா??”

 

“ஏன்டா உனக்கு கல்யாணம் ஆனா எல்லாம் மறந்திடுமா. உன் பொண்டாட்டி தானே என்னோட தங்கச்சி, இன்ஸ்டன்ட் தங்கச்சி”

 

“இது எப்போடா நடந்துச்சு?? அந்தளவுக்கு ஆகிப்போச்சா…”

 

“அதெல்லாம் அப்படித்தான்…” என்றவன் “ஹலோ சொல்லும்மா” என்றான் பாசமாக.

 

‘என்னைய விட்டு இவனுக்கு எதுக்கு போன் பண்ணுறா’ என்று தான் பார்த்தான் விதுரன். அவனுக்கு காதில் லேசாக புகை வந்ததும் உண்மை தான், அதையெல்லாம் ஒத்துக்கொண்டால் என்னாவது.

 

அவன் எவ்வளவு தான் எந்த உணர்வையும் காட்டாதிருந்தாலும் ஒட்டுமொத்த உணர்வுகளையும் அவனிடத்தில் காட்டுபவளை அவன் மனம் ரசிக்கத்தான் செய்தது அவளறியாமல்.

 

அதனாலேயே அவள் தனக்கு போன் செய்யவில்லையே என்று கொஞ்சம் வாடித்தான் போனது அவன் மனம். அதை வெளியே காட்டிக்கொண்டால் அவன் விதுரன் அல்லவே.

 

“அவர் சாப்பிட்டாரா??” என்றாள் இதழினி சைலேஷிடம்.

 

“இதை நீ அவன்கிட்டவே கேட்டிருக்கலாமேம்மா”

 

“உங்க பிரண்டு என்கிட்ட பதில் சொல்லிட்டாலும்”

 

“அது சரி”

 

“சொல்லுங்க சாப்பிட்டாரா??”

 

“எல்லாம் ஆச்சும்மா உங்க சீனியர் சமைச்சுக் கொடுத்ததை நானே கொண்டு வந்து என் கையால பரிமாறிட்டேன்”

 

“சூப்பர் அண்ணா… நீங்க சாப்பிட்டாச்சா??”

 

“நாங்க ரெண்டு பேருமே சேர்ந்து தான் சாப்பிட்டோம்மா…”

 

“ஆமா நீங்க வீட்டுக்கு கிளம்பலியா இன்னும்??”

 

“இல்லை இன்னைக்கு இவன் கூடத்தான்…”

 

“நீங்க தினமும் அவரை பார்த்திட்டு தானே இருக்கீங்க. இதுல வாரத்துல ஒரு நாள் அவர் கூட ஸ்டே வேற, அதெல்லாம் அவர் தனியா இருந்துக்குவார். நீங்க கிளம்பி வீட்டுக்கு போங்கண்ணா முதல்ல…” என்றாள் அவள்.

 

“வீட்டில சொல்லிட்டு தான்மா வந்தேன். இந்நேரம் என் பொண்டாட்டி கேட்டு போட்டிருப்பா இப்போ போனா நான் ரோட்ல தான் படுக்கணும்”

 

“அதெல்லாம் எனக்குத் தெரியாது நீங்க வீட்டுக்கு கிளம்புங்க முதல்ல…” என்றாள்.

 

“நல்லதுக்கே காலமில்லைடா சாமி. உன் புருஷன் பாவம் தனியா இருப்பானேன்னு துணைக்கு வந்தா என்னைய நீ விரட்டுற. இதெல்லாம் நல்லாயில்லைமா, சொல்லிட்டேன்”

 

“பரவாயில்லை” என்று அசராமல் பதில் சொன்னாள்.

 

“சீக்கிரம் கிளம்புங்க நான் வேணா சீனியர்கிட்ட பேசி கேட்டை திறந்து வைக்க சொல்றேன்”

 

“ஒண்ணும் வேணாம் நான் பார்த்துக்கறேன்” என்றுவிட்டு பட்டென்று போனை வைத்துவிட்டான்.

 

‘இந்த பொண்ணு ஏன் இப்படி சொல்லுது. நல்ல பொண்ணு தானே, அப்பப்போ லூசாகிடுதே’ என்று எண்ணிக்கொண்டே அவன் கிளம்ப “எங்கடா கிளம்பிட்ட நைட் ரூம்ல என்னோட இருக்கேன்னு தானே வந்தே” என்றான் விதுரன்.

 

“ஆமா வந்தேன் அதுக்கென்ன இப்போ”

 

“சரி இப்போ எதுக்கு கிளம்பிட்ட??”

 

“கிளம்பினா என்ன??”

 

“அவ கிளம்பச் சொன்னாளா??” என்றான் தீவிர பாவனையில்.

 

“இல்லை பாரதி தான் வரச்சொன்னா” என்றவன் கிளம்பிவிட்டான்.

 

விதுரனுக்கு தெரியும் அது பாரதியின் செயல் இல்லையென்று. சற்று முன்பு சந்தோசமாக என் தங்கை என்று சொல்லிச் சென்றவன் சுரத்தேயில்லாமல் கிளம்புவதே சொன்னது அது யாரின் செயல் என்று.

 

லேசாய் ஒரு கோபம் எட்டிப்பார்த்தது அவனுக்கு. இதற்கு முன் ஒரு முறை அவளிடம் சைலேஷிடம் பேசாதே என்ற போது முடியாது என்று அவள் சொல்லியதால் தற்போது அவளுக்கு அழைத்து பேச வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை ஒதுக்கி வைத்தான்.

 

அவளே அழைக்கும் போது கேட்டுக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டான். சைலேஷ் கிளம்பிச் சென்ற அடுத்த அரைமணி நேரத்திலேயே அவனுக்கு அழைத்துவிட்டாள்.

 

“ஹலோ என்ன பண்ணிட்டு இருக்கீங்க??” என்றாள் எடுத்ததுமே.

 

“என்ன வேணும்??”

 

‘நீங்க தான்’ என்று சொல்லத் துடித்த நாவை அடக்கிவிட்டு “என்ன வேணும்னா என்ன சொல்ல, உங்ககிட்ட பேசலாம்ன்னு தான் கூப்பிட்டேன்”

 

“அதுக்காக அவனை எதுக்கு இங்க இருந்து கிளம்பச் சொன்னே?? என்ன வேலை இது?? எங்களுக்குள்ள நீ எதுக்கு இடையில வர்றே?? எல்லாமே ஒரு லிமிட் தான், நீ லிமிட் தான்டி போறே??” என்றான் சற்று காட்டமாகவே.

 

எப்போதும் அளவோடு பேசும் அவனின் பேச்சு அன்று எல்லையை தாண்டியிருந்தது. “இல்லை நான் எதுக்கு சொன்னேன்னா…” என்று ஆரம்பித்தவளை “எனக்கு எந்த காரணமும் வேணாம். அவனை அண்ணா அண்ணான்னு கூப்பிட்டு பாசமா பேசறேன்னு நினைச்சேன்”

 

“எதுக்குன்னு இப்போ தானே தெரியுது??”

 

“என்ன தெரிஞ்சது??” என்றாள்.

 

“என்னைப்பத்தி விசாரிக்க உனக்கு ஒரு ஆளு வேணும் அதுக்கு தானே அவன்கிட்ட பேசுறே நீ?? அவன் ஒருத்தன் நீ அண்ணான்னு கூப்பிட்டதும் அவனுக்கு அப்படியொரு சந்தோசம். உன்னை நிஜமாவே தங்கச்சியாவே நினைக்க ஆரம்பிச்சுட்டான்…”

 

“ஆனா நீ அவன்கிட்ட எதுக்கு பேசுறேன்னு எனக்கு தானே தெரியும்”

 

“ஓ உங்களுக்கு அது புரிஞ்சிடுச்சா ரொம்ப சந்தோசம். ஆமா நான் அதுக்கு தான் அவர்கிட்ட பேசினேன் போதுமா…”என்றாள் இவளும் நிதானம்விட்டு.

 

விதுரனுக்கு அவளின் பதில் இன்னமும் கோபத்தை தூண்ட அதை அடக்கிக்கொண்டவன் ‘நேர்ல போய் பேசிக்கலாம், என்றுவிட்டு அமைதியானான்.

 

அதன்பின் அவள் அவனுக்கு அழைக்கவில்லை, எப்போதாவது அவனாக போன் செய்பவனும் அழைக்கவில்லை அவளுக்கு. வீட்டில் இருந்த மற்றவர்களுக்கும் கூட அவனாக  பேசவில்லை. அவர்கள் அழைத்த போது ஓரிரு வார்த்தைகள் பேசி வைத்துவிடுவான்.

 

எப்போதும் அழைக்கும் இதழினியின் அழைப்பு சுத்தமாக நின்று போயிருந்ததை உணர்ந்த சைலேஷ் நண்பனிடம் “டேய் எதுக்குடா இப்படி பண்ணுறே?? நீ பண்ணுறதெல்லாம் சரியே இல்லை விது” என்றிருந்தான்.

 

“அப்படியா… அப்படியே இருக்கட்டும்…” என்றுவிட்டான் அவன் பதிலுக்கு.

 

ஏற்கனவே இரண்டு வாரமாக வீட்டிற்கு அவனால் சரியாக செல்ல முடியவில்லை. அடுத்து வந்த வாரமும் அவனால் வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் அமைந்துவிட்டது.

 

நெய்வேலி நில சுரங்கத்தில் திடிரென்று ஏற்பட்ட வாயு கசிவால் உள்ளே சிக்கிக்கொண்டிருந்தனர் ஊழியர்கள் சிலர். அவர்களை காப்பாற்ற சென்றவர்களும் உள்ளே மாட்டிக்கொள்ள நிலைமை மோசமானது.

 

அவர்களை மீட்க இவர்களின் குழு அங்கே செல்ல வேண்டியதாகப் போனது. விதுரனும் மற்ற சிலரும் இருந்தனர் அக்குழுவில். சைலேஷ் அவர்களுக்கு வெளியில் இருந்து தேவைப்பட்ட, படும் உதவிகளை ஒருங்கிணைக்கும் வேலையில் இருந்தான்.

 

சுரங்கத்திற்கு உள்ளே செல்ல தேவையான உபகரணங்களை எடுத்துக்கொண்டவர்கள் முழு கவச உடைத்தரித்து ஆக்சிஜன் மாஸ்கை அணிந்துகொண்டு உள்ளே சென்றனர்.

 

காவல்துறை, மருத்துவமனையில் இருந்து வந்த குழு, பத்திரிக்கை, தொலைக்காட்சி குழுவினர் என்று அனைவருமே அங்கு திரண்டிருந்தனர்.

 

விதுரனிடம் பேசாததில் வெகுவாய் சோர்ந்து போயிருந்தாள் இதழினி அவளுக்கு தெரியாது விதுரன் நெய்வேலி சென்றிருப்பது. கிளம்பும் அவசரத்தில்  அவனும் வீட்டிற்கு அழைத்து சொல்லியிருக்கவில்லை.

 

அன்று இரவு உணவு முடிந்ததும் சதாசிவம் படுத்துவிட கற்பகமும் பின்னோடு சென்றுவிட்டார். இதழினிக்கு அவர்கள் வீட்டு பழக்கம் சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் தொலைக்காட்சியை பார்த்திருந்தாள். திருநாவுக்கரசு சாப்பிட்டு முடித்ததுமே அவன் அறையில் அடங்கிவிடுவான் எப்போதும்.

 

அவள் மட்டுமே ஹாலில் தனித்திருந்தாள். அவர்களின் அறையில் ஒரு தொலைக்காட்சி இருந்தாலும் ஹாலில் அமர்ந்து தான் பார்த்தாள். சிறிது நேரம் இளையராஜாவின் இசை மழையில் நனைந்தவள் விளம்பர இடைவேளை வரவும் செய்தி சேனலின் புறம் பார்வையை திருப்பினாள்.

 

அதிலும் விளம்பரம் தான் ஓடிக்கொண்டிருந்தது. கீழே பிளாஸ் நியூஸில் நிலக்கரி சுரங்கம் பற்றி ஓடிக்கொண்டிருக்க தேசிய பேரிடர் மேலாண்மை குழு அவர்களை காக்க ஆவணசெய்துக் கொண்டிருப்பதாக படிக்கவும் படபடவென்று ஆனது அவளுக்கு.

விதுரன் இதைப்பற்றி ஒன்றுமே யாரிடத்திலுமே சொல்லியிருக்கவில்லை. அவளுக்கு தெரியும் அவன் கோபத்தில் இருக்கிறான் என்று. எங்கே அவனுக்கு விளக்கம் சொல்ல அவளை விட்டிருந்தால் தானே அவள் பதில் சொல்லியிருக்க முடியும்.

 

அவன் என்னடாவென்றால் இப்படி பேசாமல் இருப்பான் என்று அவள் எண்ணவில்லை. வீட்டிற்கும் கூட அவன் அழைத்திருக்கவில்லை என்பதிலேயே அவன் கோபத்தின் அளவும் புரிந்தது அவளுக்கு.

 

சைலேஷுக்கு கூட அவள் அழைக்கவில்லை இந்த ஒரு வாரமாக. அது வேறு அவன் கோபத்தை தூண்டிவிடுமோ என்று தான் பேசாமல் இருந்தாள். இன்று அப்படி அவளால் இருக்க முடியவில்லை.

 

சைலேஷின் எண்ணுக்கு அழைத்துவிட்டாள். “என் தங்கை மை தங்கை” என்ற பாடல் தான் இன்னமும் ஒலித்தது அவன் அலைபேசியில்.

 

வேலையில் இருந்தவன் அழைப்பை கவனித்திருக்கவில்லை. மீண்டும் அவள் அழைக்கவும் தான் போனை பார்த்தான் அவன். அழைப்பது இதழினி என்றதும் எடுப்பதா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டே அட்டென்ட் செய்தான் அவன். “சொல்லும்மா” என்றவாறே.

 

“அண்ணா” என்றவளுக்கு மேற்கொண்டு பேச்சே வரவில்லை.

 

“சொல்லும்மா எதுவும் முக்கியமான விஷயமா??”

 

“இல்லை வந்து…”

 

“என்னன்னு கொஞ்சம் சீக்கிரம் சொல்லும்மா எனக்கு முக்கியமான வேலையிருக்கு” என்று துரித்தப்படுத்தினான் அவன்.

“சாரி அண்ணா நீங்க வேலையில இருப்பீங்க நான் தெரியாம டிஸ்டர்ப் பண்ணிட்டேன். அவ… அவர் நல்லாயிருக்காரா??” என்று கேட்கும் போதே தொண்டையடைத்தது அவளுக்கு.

 

“என்னாச்சும்மா ஏன் ஒரு மாதிரியா பேசறே நீ??” என்றவன் அப்போது தான் அவள் குரலின் பேதத்தை உணர்ந்தான்.

 

“ஒண்ணும்மில்லை அண்ணா நான் வைக்குறேன்” என்று அவள் வைக்கப் போக “விதுரன் நெய்வேலில இருக்கான்ம்மா, உனக்கு தெரியும் தானே”

 

அவளோ பதிலே சொல்லவில்லை “ஹ்ம்ம்… ஹ்ம்ம்…” என்று திக்கி திக்கி பேசியவள் “நான் வைச்சிடறேன்” என்று வைத்துவிட்டாள்.

 

Advertisement