Advertisement

16

 

விதுரன் வேலையாக வெளியூர் செல்லும் தருணம் தவிர்த்து எப்போதும் சனி, ஞாயிறு வீட்டிற்கு வந்துவிடுவான். அந்த வாரம் இடையில் தான் விதுரன் அலுவலகம் செல்லவாரம்பித்திருந்ததால் அதையடுத்து வந்த சனி, ஞாயிறு அவன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.

 

மகளைப் பார்க்கவென இதழினியின் குடும்பம் தான் வந்திருந்தது அன்று. “ஹேய் மகிழ் எப்படிடி இருக்க??”

 

“ம்மா பாருங்கம்மா இவளை புதன்கிழமை தானேம்மா இங்க வந்தா என்னவோ என்னை பார்த்து ஒரு மாசம் ஆன மாதிரி பில்டப் கொடுக்கறா பாருங்களேன்” என்றாள் மகிழினி தன் தாயிடம்.

 

“சும்மாயிரு மகிழ் நீ நம்ம வீட்டில இருக்க, உனக்கு எதுவும் தெரியாது. அவளுக்கு இந்த வீடு புதுசு தானே ஒரு நாள் இல்லை நாலு நாள் நம்ம கூட இல்லைன்னாலும் அவளுக்கு எப்படியோ தான் இருக்கும்”

 

“பழகின பிறகு இப்படியெல்லாம் சொல்ல மாட்டா. நாளைக்கு நீயும் இப்படித்தான் செய்வே, அவளை நீ கிண்டல் பண்ணிட்டு இருக்க” என்றார் மகளிடம்.

 

“ப்பா பாருங்கப்பா இந்த அம்மாவை. அங்க இருக்கும் போது இதழை திட்டிட்டே இருப்பாங்க. இப்போ என்னவோ சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்கப்பா… ஷப்பா முடியலைப்பா இந்த அம்மா பொண்ணு பாசம்” என்று அடுத்து தந்தையிடம் குறை படித்தாள் அவள்.

 

அவர் சிரித்தாலும் ஒன்றும் கேட்கவில்லை. இதழினியின் மாமியாரும் மாமனாரும் கூட சிரித்துக்கொண்டு தானிருந்தனர்.

 

“இதழு எல்லாருக்கும் காபி போடும்மா” என்றார் கற்பகம்.

 

“இதோ அத்தை” என்றவள் எழுந்து சமையலறை செல்ல அவள் பின்னோடே சென்றாள் மகிழினி.

 

“என்ன இதழ் வீட்டில அம்மா ஒரு வேலை சொன்னாலும் செய்ய மாட்டே இங்க அத்தை வேலை சொல்லவும் ஓடுற”

 

“வீட்டில மாதிரியே நாம இங்கயும் இருக்க முடியுமா மகிழ். நான் எப்படி இருக்கணும்ன்னு அம்மாவும் அப்பாவும் நினைப்பாங்களோ அப்படித்தான் நான் இங்க இருக்கேன்”

 

“பொறுப்பா மாறிட்டேன்னு சொல்லு”

 

“நிஜமாவா இதான் பொறுப்பா. நான் பொறுப்பா இருக்கேனா” என்றவளை முறைத்தாள் தங்கை.

 

“மாம்ஸ் எப்போ வர்றாராம்??”

 

“அடுத்த வாரம் வருவார்”

 

“அப்புறம்”

 

“அப்புறம் என்னடி ஒண்ணுமில்லை. அதான் தினமும் போன்ல ஒப்பிக்கறனே என்ன விஷயம் ஏது விஷயம்ன்னு அப்புறம் என்ன”

 

மகிழினி வந்ததில் இருந்து திருநாவுக்கரசை பார்க்கவில்லை. அதனால் தான் அவனைப்பற்றி தெரிந்துக் கொள்ளும் பொருட்டு தமக்கை ஏதாவது சொல்வாள் என்று  விசாரித்தாள்.

 

அவன் பார்த்து தொல்லை கொடுத்த போது அவனை நிமிர்ந்தும் பார்க்க பிரியப்படாதவள் அவன் விலகிச் செல்லும் போது அவனைப் பற்றிய எண்ணமும் ஆர்வமும் தன்னைப் போல வந்து ஒட்டிக்கொண்டிருந்தது அவளுக்கு.

 

“அம்மா…” என்று குரல் கொடுத்துக் கொண்டே வேர்க்க விறுவிறுக்க அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தான் திருநாவுக்கரசு.

 

ஹாலில் அமர்ந்திருந்தவர்களை கண்டதும் அப்படியே நின்றுவிட்டான். “என்ன திருநா அங்கேயே நிக்கறே… வந்தவங்களை வாங்கன்னு கேட்கறதில்லையா??” என்றார் கற்பகம்.

 

அதன்பின் தான் அவன் அவர்களிடம் “வாங்க அத்தை வாங்க மாமா… நல்லாயிருக்கீங்களா” என்று நலம் விசாரித்தான். பதிலுக்கு அவர்களும் நலம் விசாரிக்க பதில் சொல்லியவனிடம் வெங்கட்ராமன் அவன் வேலை பற்றி விசாரிக்க நின்று பேசிக் கொண்டிருந்தான்.

 

“மாமா நீங்க பேசிட்டு இருங்க எனக்கு வெளிய வேலை இருக்கு, போயிட்டு வந்திடறேன்” என்று மீண்டும் வெளியே செல்லப் போனவனை கற்பகத்தின் குரல் தடுத்தது.

 

“திருநா இப்போ தானே வெளிய போய்ட்டு கிரிக்கெட் விளையாடிட்டு வந்தே மறுபடியும் எங்கே கிளம்பறே. போய் குளிச்சுட்டு வா…” என்று சொல்ல பல்லைக் கடித்தான் அவன்.

 

“அய்யோ அம்மா ஏன்மா இப்படி டேமேஜ் பண்ணுற என்னை. நான் கிரிக்கெட் விளையாடின கதையெல்லாம் இப்போ சொல்லியாகணுமா. என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க அவங்க” என்று தன் அன்னையிடம் மெல்லிய குரலில் சொன்னான் அவன்.

 

“ஒண்ணும் நினைக்க மாட்டாங்க திருநா. நீ குளிச்சுட்டு வந்து  கடைக்கு போயிட்டு வா. அவங்களுக்கு கொடுக்க சூடா பப்ஸ் ஏதானாச்சும் வாங்கிட்டு வாப்பா…” என்றார் அவர் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

 

“அதை அப்போவே போன் பண்ணி சொல்லியிருக்கலாம்ல” என்று முணுமுணுத்துவிட்டு அவன் அறைக்கு சென்றுவிட்டான் அவன்.

 

சிறிது நேரத்தில் குளித்து வேறு உடைக்கு மாறி வந்தவன் கையில் இதழினி காபி கோப்பையை கொடுக்க நிமிர்ந்தும் பார்க்காமல் அதை குடித்து முடித்தவன் அந்த கோப்பையை சமையலறையில் வைக்க உள்ளே செல்லப் போக மகிழினி சிங்கில் இருந்த பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்ததை பார்த்து அப்படியே நின்றுவிட்டான்.

 

யாரோ வரும் அரவம் கேட்டு திரும்பியவள் இவனை பார்த்துவிட்டு அப்படியே நிற்க அவன் நிமிர்ந்தும் பார்க்காது அங்கிருந்த மேடையில் காலிக்கோப்பையை வைத்துவிட்டு வெளியேறிவிட்டான்.

 

‘பார்த்தா பார்த்திட்டே இருக்கறது, இல்லைன்னா குனிஞ்ச தலை நிமிர்றது இல்லை. வைச்சா குடுமி சிரைச்சா மொட்டையா’ என்று நினைத்து சிரித்துக் கொண்டாள் மகிழினி.

 

இதழினியின் குடும்பத்தினரை அன்று அங்கேயே உணவருந்த சொல்லியிருந்தார் கற்பகம். கடைக்கு சென்றிருந்தவனுக்கு அழைத்து தேவையான பொருட்களை சொல்ல அவன் வாங்கிக் கொண்டு வந்தான்.

 

சிறிது நேரம் அவர்களுடன் பேசுவது போல பாவனை செய்துவிட்டு அவன் அறைக்கு எழுந்து சென்றுவிட்டான். எப்போதடா அவர்கள் கிளம்புவார்கள் என்றிருந்தது அவனுக்கு.

 

அவர்கள் கிளம்புவது போல தோன்றாததால் அவனே எழுந்து வெளியே செல்ல கிளம்பி வர “திருநா சும்மா எங்க வெளிய கிளம்பிட்டு உட்காருப்பா. அத்தையும் மாமாவும் கிளம்புறாங்கலாம்”

 

‘அதுக்கு நான் என்ன செய்ய’ என்று தான் பார்த்தான் அவன். கற்பகமோ “அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டிரு. நேரமாகுது பாரு, இந்த நேரத்துல அவங்க ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போக வேணாம் வயசு புள்ளைய வைச்சுக்கிட்டு” என்றார் அவர் நீட்டி முழக்கி.

 

“அத்தை அவங்க இன்னும் சாப்பிடலை. நீங்க சாப்பிடுங்க முதல்ல” என்று அவனுக்கு உணவளிக்கும் வேலையை பார்த்தாள் இதழினி.

 

“இல்லை அண்ணி இருக்கட்டும் நான் அவங்களை டிராப் பண்ணிட்டு வந்து சாப்பிடறேன்” என்று மறுத்தான் அவன்.

 

“தம்பி நாங்க போய்டுவோம், நீங்க எதுக்கு அலையறீங்க?? வேணாம் சம்மந்தி நாங்க பார்த்துக்கறோம். இங்க இருக்க வீடு தானே. ஓலால புக் பண்ணா ஆட்டோ வந்திடும்” என்று மறுத்தார் வெங்கட்ராமன்.

 

“அதென்ன அப்படி சொல்லிட்டீங்க. நம்ம வீட்டில வண்டி இல்லைன்னா பரவாயில்லை. அவ்வளவு பெரிய வண்டி இருக்கு, நீங்க ஆட்டோல போறேங்கறீங்க. நீங்க பேசாம இருங்க வெங்கட்ராமன். திருநா உங்களை கூட்டிட்டு போவான், என்ன திருநா” என்றுவிட்டு மகனைப் பார்த்தார் சதாசிவம்.

 

“எனக்கொண்ணும் பிரச்சனையில்லை மாமா. நான் கூட்டிட்டு போறேன்” என்றவன் சாவி எடுக்கப் போக “இல்லை தம்பி நீங்க சாப்பிடுங்க முதல்ல” என்றவர் “ஏன்மா இதழ் அவரு இருக்கும் போது அவரையும் கூப்பிட்டு தானே நீ சாப்பாடு வைச்சிருக்கணும்” என்று கடிந்தார் வெங்கட்ராமன்.

 

“சாரிப்பா…” என்றவள் “மன்னிச்சிடுங்க வேலையில கூப்பிட மறந்திட்டேன்” என்றாள் அவனிடமும்.

 

“பரவாயில்லை அண்ணி”

“நீங்க சாப்பிடுங்க” என்றவள் அவனுக்கு பரிமாற மகிழினி அவள் அன்னையின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.

 

“மகிழ் அக்காவுக்கு ஹெல்ப் பண்ணு” என்றார் வேணி.

 

“ம்மா” என்று முறைத்தாள் அவள் அன்னையை.

 

“போ…” என்று பதிலுக்கு முறைத்தார் அவர்.

 

பேசாமல் எழுந்து வந்தவள் அவனுக்கு தண்ணீர் பிடித்து கொண்டு வந்து அருகில் வைத்தாள். ஒருவாறு அவன் சாப்பிட்டு கை கழுவி வர அவர்கள் கிளம்பத் தயாராயினர்.

 

——————

 

ஆறு மாதங்கள் தன்னைப் போல ஓடியிருந்தது, விதுரன்  மாதம் இரு முறை வீட்டிற்கு வந்து சென்றிருந்தான். இரண்டு நாட்கள் மட்டும் தான் இருப்பான். இதழினிக்கும் அவனுக்கும் இடையில் பெரிதாய் எந்தவொரு அன்னியோன்யமும் ஏற்பட்டிருக்கவில்லை.

 

இதழினி நெருங்க முயற்சித்தாலும் விதுரன் பெரிதாய் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. அதற்காக அவளைவிட்டு அவன் விலகி எல்லாம் இருக்க வேண்டும் என்று எப்போதும் எண்ணவில்லை.

 

அவனின் குணமே அப்படித்தானிருந்தது. வீட்டினரிடம் அன்பு பிரியம் இருந்தாலும் அதை அவன் பேச்சில் என்றைக்குமே காட்டியதில்லை. அவன் அக்கறை எல்லாம் செயலில் தான் உணரமுடியும்.

 

அவன் எப்படியிருந்தாலும் அவள் கவலைப்படவில்லை. நான் இப்படித்தான் இருப்பேன் என்பது போலத்தான் இருந்தது அவளின் ஒவ்வொரு செயலும்.

 

என் தங்கை மை தங்கை

வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை

அண்ணன் பாசத்தில் அவளைத்தான்

அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க


என்று சைலேஷின் கைபேசி ஒலியெழுப்ப “டேய் என்ன பாட்டுடா இது” என்றவாறே வந்தான் விதுரன்.

 

Advertisement