Advertisement

 

15

 

“எனக்கு எதுக்கு அத்தை நன்றி எல்லாம்??”


“நான் சொன்னதுனால எல்லாம் அவர் பேசலை அத்தை. அவருக்கா தோணியிருக்கும் அதான் பேசியிருக்கார்…”

 

“நான் சொன்னதும் பேசணும்ன்னு நினைச்சிருந்தா நான் சொன்ன அன்னைக்கே பேசியிருப்பாரு. இதுல நான் எதுவுமே செய்யலை அத்தை. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போலத்தான் இது…”

 

“நீ சொல்றது உனக்கே ஓவரா இல்லையா…” என்றார் அவர்.

 

“கொஞ்சம் ஓவரா தான் சொன்னேன். ஆனா உங்க பிள்ளைய பத்தி நான் சொன்னது நிஜம் தான் அத்தை…” என்றாள் அவள்.

 

பின் மாமியாரும் மருமகளுமாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். அவளுக்கும் லீவு முடிவதை பற்றி சொன்னவள் திங்கள் முதல் அவள் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதையும் சொன்னாள்.

 

கற்பகம் விதுரனும் சதாசிவமும் பேசியதும் அதன் பின்னான உரையாடலையும் மருமகளிடத்தே சொல்லியிருந்தார்.

 

மதிய உணவை கற்பகம் சொல்லச் சொல்ல இதழினி செய்து முடித்தாள். சாப்பிட்டு அவள் அறைக்கு வர அறையே வெறிச்சென்றிருந்தது அவளுக்கு.

 

விதுரன் இல்லாத அந்த அறை என்னவோ போலிருந்தது அவளுக்கு. போனை எடுத்து அவனுக்கு அழைக்க அழைப்பு எடுக்கப்படாமலே ஓய்ந்தது. உடனே அவள் சைலேஷின் எண்ணுக்கு அழைத்தாள்.

 

“ஹலோ சொல்லும்மா என்னோட இன்ஸ்டன்ட் தங்கச்சி… எப்படி இருக்கே??”

 

“என்னது இன்ஸ்டன்ட் தங்கச்சியா??”

 

“ஆமா நீ எனக்கு கிடைச்ச இன்ஸ்டன்ட் தங்கச்சி தானே”

 

“அப்போ என்னை நீங்க இன்ஸ்டன்ட் தங்கச்சியாவே தான் வைச்சிருப்பீங்களா. பர்மனென்ட் தங்கச்சியா நினைக்க மாட்டீங்க அப்படித்தானே”

 

‘இதென்னடா எனக்கு வந்த சோதனை…’ என்ற ரீதியில் இருந்தான் சைலேஷ்.

 

“உங்களை நான் என்னமோன்னு நினைச்சேன். இப்போ தானே தெரியுது, உங்களுக்கு என் மேல பாசமே இல்லை…”

 

“இதெல்லாம் என் சொந்த தங்கச்சி பேச வேண்டிய டயலாக் ஆச்சே…”

 

“ஓ!! என்னை உங்க சொந்த தங்கச்சியா நினைக்க மாட்டீங்களா நீங்க… நான் என்ன உங்களுக்கு வாடகை தங்கச்சியா… நீங்க சரியில்லை நான் உடனே சீனியர்கிட்ட பேசறேன்” என்று அவள் படபடவென பொரிய “ஏன்மா நீ என்ன விஜேவா எதுக்கு இப்படி நான்ஸ்டாப்பா பேசறே கொஞ்சம் மூச்சுவிடு” என்றான் அவன்.

 

“நான் வாயை திறந்தா மூட மாட்டேன்னு சொல்ல வர்றீங்களா??” என்று அவள் ஆரம்பிக்க அப்போது வெளியே சென்றிருந்த விதுரன் உள்ளே வரவும் “இந்தப்பா உன் பொண்டாட்டி பேசுறா” என்று சொல்லி போனை அவனிடம் கொடுத்துவிட்டான் அவன்.

 

“நான் வாய் நிறைய உங்களை அண்ணான்னு கூப்பிடறேன் என்னை பார்த்து இப்படி சொல்லிட்டீங்க” என்று இன்னும் கொஞ்சம் அவள் பேச ‘இவ என்ன உளறிட்டு இருக்கா’ என்று யோசித்த விதுரன் திரும்பி அருகில் இருந்தவனை பார்க்க அவன் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.

 

“ஹலோ” என்ற விதுரனின் குரலில் படபடவென்று பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று அமைதியானாள்.

 

“சொல்லுங்க”

 

“சொல்லுன்னு சொல்லுங்க”

 

“சரி சொல்லு”

 

“அங்க போயாச்சா??”

 

“திருநா வீட்டுக்கு வந்திட்டானா??” என்று எதிர்கேள்வி கேட்டான் அவன்.

 

“அப்போவே வந்திட்டாங்க”

 

“அப்போ நானும் அப்போவே வந்திட்டேன்னு தெரியாதா உனக்கு… இதென்ன வேலை நேரத்துல போன் பண்ணி வெட்டியா பேசறது” என்று அவன் சொல்ல ‘வியாக்கியானம் விதுரன் ஆரம்பிச்சிட்டாரே, இனிமே ரூல்ஸ் பேசுவாரே, பிச்சுக்கோ இதழ்’ என்று மனசாட்சி அபாயமணியை ஒலிக்கவிட்டது.

 

ஆனாலும் இந்த மூளை அநியாயத்திற்கு ஞாபகம் வைத்திருந்து கேள்வியை கேட்டுவிட்டது அவனிடம். “கல்யாணத்துக்கு முன்னாடி கூட நான் உங்களுக்கு வேலை நேரத்தில போன் பண்ணியிருக்கேன்”

 

“அப்போ பேசுனீங்க, இப்போ பேசினா மட்டும் தப்பா??” என்று இவள் பதில் ரூல்ஸ் பேசினாள்.

 

“அப்போ நீ ஏங்கி போய்ட கூடாதேன்னு பேசினேன். உண்மையை சொல்லு நான் பேசினது அதிகமா?? உம் கொட்டினது அதிகமா??” என்றான் அவளிடத்தில். அவன் பேசியதை விட உம் கொட்டியது தான் அதிகம் என்பதை அவள் அறிவாள்.

 

அவனிடம் பதில் சொல்லாமல் பேசாமல் இருந்தாள். “என்ன பதிலே காணோம்?? நான் உம் கொட்டினது தான் அதிகம். அதுவும் கொட்டினது நான் இல்லை உன்னோட இன்ஸ்டன்ட் அண்ணன்” என்றுவிட்டு அவன் சிரிப்போடு வைத்துவிட்டான்.

 

சைலேஷ் அவன் பேசுவதை தான் பார்த்திருந்தான். “டேய் எப்படிடா சமாளிக்கறே??”

 

“பேசாமத்தான்…” என்றான் விதுரன் அசராமல்.

 

“நான் தான் பேசி வாங்கி கட்டிக்கறனாடா??” என்றான் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு.

 

“அவ எதுக்குடா எனக்கு போன் பண்ணா??”

 

“என்கிட்ட பேசத்தான்”

 

“என்கிட்ட கேட்டிருந்தா நானே போனை உன்கிட்ட கொண்டு வந்து கொடுத்திருப்பேனேடா… ஆமா உன் போன் என்னாச்சு??”

 

“அது சைலென்ட்ல இருந்துச்சு நான் கவனிக்கலை…”

 

“இருந்தாலும் என்னை பார்த்து அவ அப்படி கேட்டிருக்க வேணாம்” என்று புலம்பினான் மீண்டும்.

 

“என்ன கேட்டா??”

 

“என்னென்னவோ கேட்டாடா?? எனக்கு கல்யாணம் ஆகி இத்தனை வருசத்துல என் பொண்டாட்டிக்கு கூட நான் இப்படி பயந்ததில்லைடா…”

 

“என்னது பயந்ததில்லையா??”

 

“பயந்திருக்கேன்டா அது வேற ரகம். ஆனா உன் பொண்டாட்டிக்கு நான் பயப்படுறது எல்லாம் முகாரி ராகம் மாதிரி என்னைய அழ வைக்கிறாடா…”

 

“இதுல போற போக்குல அவ சொல்றா, நீங்க சரியில்லை என்னை உங்க தங்கச்சியா நினைக்கலை. இப்படி பண்ணீங்கன்னா நான் சீனியர்கிட்ட சொல்லிடுவேன்னு வேற சொல்லி பயமுறுத்துறா”

 

“என் பொண்டாட்டி சும்மாவே ஆடுவா. இதுல இவ சாம்பிராணி தூவினா அவ அதுல என்னைய போட்டு புகையா கக்கிட மாட்டா…” என்று சைலேஷ் சொல்லிய விதத்தில் வாய்விட்டு சிரித்தான் விதுரன்.

 

“ஏன்டா சிரிக்கிறே??”

 

“பின்னே அவ என்னமோ சொல்லிட்டான்னு இப்படி மூக்கால அழுதிட்டு இருக்கியே??”

 

“நீ ஏன் பேச மாட்ட அவ என்னைத் தானே பேசினா”

 

“இப்போ என்ன அவ இனிமே உன்கிட்ட பேசக்கூடாது அதானே…”

 

“அப்படியொரு சம்பவம் நடக்குமா” என்று சைலேஷ் கேட்க விதுரன் அவன் கைபேசியில் இருந்து இதழினிக்கு அழைத்தான்.

 

“ஹலோ”

 

“இனிமே நீ சைலேஷ்க்கு போன் பண்ணாதே” என்றுவிட்டு அவன் வைத்துவிட்டான்.

 

“டேய் ஏன்டா, இப்படியா சொல்வ??”

 

“வேற எப்படி சொல்லணும்”

 

“ச்சே பாவம்டா நீ பண்ணுறது ரொம்ப தப்புடா. அவ என்னைத் தானே பேசினா, உனக்கென்ன??”

 

“நீ தானேடா புலம்பின”

 

“கொஞ்ச நேரம் புலம்புவேன் அப்புறம் விட்டிருப்பேன் தானே…”

 

“ஆளைவிடு” என்றவன் நகர அவனின் கைபேசி ஒலியெழுப்பியது. அழைத்தது அவன் மனைவியே. “யாருடா என்னோட தங்கச்சியா??” என்றவனை முறைத்தான் விதுரன்.

 

“என்ன??” என்றான் அழைப்பை ஏற்று.

 

“இப்போ மட்டும் ஆபீஸ் டைம் இல்லையா??”

 

‘இவளை’ என்று பல்லைக் கடித்தவன் “இது லன்ச் டைம்” என்று அவன் பதில் சொல்லவும் ‘அதானே பார்த்தேன்’ என்று சலித்தவள் “நான் சைலேஷ் அண்ணாக்கு கால் பண்ணக்கூடாதுன்னு நீங்க எதுக்கு சொல்றீங்க. நான் அவங்ககிட்ட பேசுவேன், தினமும்…” என்றுவிட்டு அவனை போலவே போனை கட் செய்துவிட்டாள்.

 

“இனி உன்னை அந்த கடவுளால கூட காப்பாத்த முடியாதுடா”

 

“எதுக்குடா அப்படி சொல்றே??”

 

“உன்கிட்ட பேசக்கூடாதுன்னு நான் அவளை சொல்லக்கூடாதாம். அவ அப்படித்தான் பேசுவாளாம், தினமும்” என்றுவிட்டு அவன் நகர “என்னது தினமுமா!!” என்ற சைலேஷ் “இருந்தாலும் என்னோட இன்ஸ்டன்ட் தங்கச்சிக்கு என் மேல பாசம் அதிகம் தான்” என்று சிலாகித்தும் கொண்டான்.

————–

 

“ஹேய் இதழ் வாம்மா புது பொண்ணு. நீ ஆபீஸ் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகும்ன்னு நினைச்சேன். பத்து நாள்ல வந்து நிக்கறே” என்றாள் இதழினியின் தோழி மாதவி.

 

“ஒரு மாசத்துக்கு என்ன பண்ண போறோம் நாங்க”

 

“என்ன பண்ண போறோமா?? அப்போ பத்து நாள்ல எதுவுமே பண்ணலையா??”

 

“வாயை மூடு மாது சத்தமா பேசாத…”

 

“சரி ரகசியமாவே கேட்கறேன். ஏதாச்சும் நடந்துச்சா இல்லையா??” என்று கிசுகிசு குரலில் கேட்டாள் அவள்.

 

“இப்போ தான் வேலைக்கு வந்திருக்கேன். அப்புறம் பேசலாம் நாம” என்றவள் தன் கணினியை இயக்கினாள்.

 

“சந்துரு சார் உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனப்போ லீவுல போனவர் தான் இன்னும் வரலை…” என்றாள் மாதவி ஒரு மாதிரி குரலில்.

 

“மாது” என்றாள் இதழினி கண்டிப்பான குரலில்.

 

“அவரை நீ ஏமாத்திட்ட உன் பின்னாடி அவர் சுத்தினது உனக்கு தெரியாமலா போச்சு…”

 

“மாது ப்ளீஸ் என்ன பேச்சு இது…”

 

“எனக்கு மனசே கேட்கலைடி. அவர் எவ்வளவு நல்ல மனுஷன் தெரியுமா. அவர் எந்தளவுக்கு உடைஞ்சு போயிருந்தா இப்படி ஆபீஸ் பக்கமே வராம இருப்பாரு. அவரு வேலையை விட்டு நிக்க போறார்ன்னு பேசிக்கறாங்க. உனக்கு லவ் இல்லைன்னா அதை நீ அவகிட்ட சொல்லி இருக்கலாம்ல” என்றாள் ஆதங்கமாய்.

“அவர் என்னைக்கு என் பின்னாடி சுத்தினதை நீ பார்த்தே இப்போ என்கிட்ட அதைப்பத்தி பேசறே நீ”

 

“சரி சுத்தலை ஆனா அவருக்கு உன் மேல ஒரு தாட் இருக்குன்னு உனக்கு தெரியும் தானே…”

 

“மாது நீ எனக்கு பிரண்டா இல்லை அவருக்கா. நான் வந்ததும் நீ பேசினதுக்கும் இப்போ நீ பேசுறதுக்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லை”

 

“நான் உன் பிரண்டா தான் அப்போ பேசினேன். இப்போ என் மனசுல இருந்த கேள்வியை ஒரு ஆதங்கத்துல தெரிஞ்சுக்க தான் கேட்கறேன் இதழ். இதுவே சந்துரு நம்ம ப்ரிதிவி மாதிரி கடலை போட்டு போற ஆளா இருந்தா நான் பேசியிருக்கவே மாட்டேன்”

 

“இவ்வளவு சொல்றியே எனக்கு அந்த மாதிரி தாட் இல்லைன்னு உனக்கு தெரியும் தானே நீ சொல்லியிருக்கலாம்ல”

 

“நான் எப்படி சொல்ல முடியும், சம்மந்தப்பட்ட நீ தானே சொல்லணும்??”

 

“அவருக்கு இப்படி ஒரு தாட் இருக்கு எனக்கு தெரியாதான்னு கேட்டல்ல. எனக்கு அவர் மேல எந்த தாட்டும் இல்லைன்னு அவருக்கு தெரிஞ்சிருக்காதா?? அதை ஏன் நீ யோசிக்கலை”

 

“இதழ் நீ விதண்டாவாதம் பண்ணுறே??”

 

“அப்படியே வைச்சுக்கோ” என்றவள் முகத்தை திருப்பிக்கொண்டு மெயில்ஸ் செக் செய்தாள்.

 

“ஆனாலும் நீ ரொம்ப மோசம்டி” என்றாள் மாதவி.

 

“மாது இதெல்லாம் உனக்கு சொல்லணும்ன்னு எனக்கு அவசியமில்லை. ஆனாலும் கேட்டுக்கோ இதான் கடைசி நாம பேசறது, இனிமே நாம ஆபிசியலா மட்டும் தான் பேசுவோம். சோ என் மேல நீ வைச்ச குற்றசாட்டுக்கு நான் பதில் சொல்றேன். இது கூட நீயும் நானும் இவ்வளவு நாள் நல்ல நண்பர்களா பழகின காரணத்துக்காக தான் சொல்றேன்”

 

“என்ன சொன்னே நான் போய் அவர்கிட்ட எனக்கு அவர் மேல எந்த அபிப்பிராயமும் இல்லைன்னு சொல்லியிருக்கணும் அதானே… நான் எப்படி சொல்ல முடியும் அவர் என் மேல அபிப்பிராயம் இருக்குன்னு எப்போவாச்சும் என்கிட்ட சொன்னாரா?? சொல்லு சொன்னாரா??”

 

மாதவியின் தலை இல்லையென்று ஆடியது. “ஒரு வேளை உன்கிட்ட சொன்ன…” என்று அவள் முடிக்கும் முன்னே இதழினி அவளை நிறுத்து என்பதை போல் கைக்காட்டிவிட்டு “என்கிட்ட சொல்லியிருந்தா எனக்கு உண்மையான பிரண்டா இருந்த உன்கிட்ட நான் அப்போவே நிச்சயமா சொல்லியிருப்பேன்”

 

“நான் அப்படி எதுவும் சொல்லலைன்னு உனக்கே தெரியும். அவர் என்கிட்ட சொல்லாத போது நானா போய் என் மேல உங்களுக்கு அபிப்பிராயம் இருக்குன்னு எனக்கு தெரியும் அதெல்லாம் மாத்திக்கோங்கன்னு எப்படி சொல்ல முடியும்”

 

“ஏன் சொல்ல முடியாது??”

 

“அப்படி நான் சொல்றப்போ எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் உங்க மேல இருந்ததில்லையேன்னு அவர் சொல்லியிருந்தா” என்று இதழ் சொல்ல அமைதியானாள் மற்றவள்.

 

“உனக்கு இவ்வளவு தூரம் விளக்கம் சொல்லணும்ன்னு நான் நினைக்கலை. உனக்கு சந்துரு சாரை புரிஞ்ச அளவுக்கு கூட என்னை புரியலைன்னு நினைச்சா அவ்வளவு கஷ்டமா இருக்கு எனக்கு”

“இத்தனை நாள் நாம என்ன பழக்கம் பழகினோம்ன்னு ஒரு நிமிஷத்துல யோசிக்க வைச்சிட்ட. எனக்கு தெரியும் உனக்கு சந்துரு சார் மேல விருப்பம் இருக்குன்னு. என்னைக்காச்சும் அதைப்பத்தி நான் கேட்டேனா”

 

“இந்த நிமிஷம் அவர் மேல உள்ள காதல் உன்னை பேச வைச்சிடுச்சுல. அவர் இந்த பிரான்ச்க்கு வந்து ஒரு வருஷம் தான் ஆகுது. நாம காலேஜ்ல இருந்து ஒண்ணா படிச்சோம் நட்பா இருந்தோம். அது உனக்கு முக்கியமா எங்கயும் தெரியலைல”

 

“எனக்கு ரொம்ப நாளா வீட்டில மாப்பிள்ளை பார்த்ததுல இருந்து, விதுரனை பார்த்தது, அப்புறம் நான் அவரை வேணாம்ன்னு சொன்னது, வேணும்ன்னு சொன்னதுன்னு எல்லாமே நான் உன்கிட்ட சொல்லியிருக்கேன் தானே”

 

“மூணார்ல வைச்சு நான் கேட்டப்போ வாயே திறக்கலையே நீ…” என்று அப்போதும் குறை படித்தாள்.

 

“நாம பஸ் ஏறினதும் உன்கிட்ட தானே சொன்னேன்”

 

சிறிது நேரம் அமைதியாக கழிந்தது. “போதும் இதோட நிறுத்திக்கலாம்” என்ற இதழினி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

 

அமைதியாக அமர்ந்திருந்த மாதவிக்கு நேரம் செல்லச்செல்ல தான் அவளை அதிகம் பேசியதே உரைத்தது.

 

சிதறிய  வார்த்தைகளை அள்ள முடியாதே. ஏதோ ஒரு வேகத்தில் ஆரம்பித்தது கொட்டியிருந்தாள். இப்போது இதழினி தள்ளி நிற்கும் போது வலித்தது அவளுக்கு.

 

திருமணத்திற்கென்று விடுமுறை எடுத்தவள் இன்று தான் அலுவலகம் வந்திருந்தாள். வந்த முதல் நாளே இப்படியொரு நிகழ்வை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

இதழினிக்கு தங்கை தான் முதல் தோழி. அவளுக்கு பின் என்றால் அது மாதவியாகத் தான் இருந்தாள். ஏற்கனவே குடும்பத்தினரை பிரிந்து வந்தது, விதுரன் ஊருக்கு சென்றது என்று அவளுக்கு சற்று கவலையாக இருந்தது. இப்போது இது வேறு அவளை மேலும் வருத்ததுக்குள்ளாக்கியது.

 

“இதழ்” என்று மெலிந்த ஒரு குரல் கேட்க திரும்பி பார்க்காமலே புரிந்தது அவளுக்கு அது மாதவி என்று.

 

“இதழ் ப்ளீஸ் என்னைப் பாரேன். நான் தெரியாம பேசிட்டேன்னு மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன். தெரிஞ்சே தான் பேசினேன். உன் பிரண்டுக்கு புத்தி சொல்ல உனக்கு உரிமையில்லையா”

 

“என்னை திட்டு, அடி, அட்வைஸ் பண்ணு, பேசாம இருக்காதடி” என்றாள் உடைந்த குரலில்.

 

மாதவி அவ்வளவு பேசியும் அவள் திரும்பவேயில்லை. மதிய உணவு இடைவேளை நேரம் அது. எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் உண்ணச் செல்வது. தோழிகள் சேர்ந்து வருவர் என்று மற்றவர்கள் சென்றிருந்தனர்.

 

“இதழ்” என்று அவள் மீண்டும் அழைக்கவும் “மாது நீ போய் சாப்பிடு. என்னால அவ்வளவு சீக்கிரம் எல்லாம் சகஜமா ஆக முடியாது, டிரை பண்ணுறேன்”

 

“நீ பண்ணதுக்கு திட்ட என்னால முடியலை. ஏன்னா நீயே சொல்லிட்ட அதை நீ தெரிஞ்சு தான் பண்ணேன்னு. அதே மாதிரி தான் உன்னை அடிக்கவும் அட்வைஸ் பண்ணவும் கூட என்னால முடியாது”

 

“தெரியாம பண்ணா சொல்லலாம் தெரிஞ்சு பண்ணா என்ன சொல்ல சொல்லு. இனிமே இப்படி செய்யாத, இதுக்கு மேல எனக்கு உன்கிட்ட சொல்ல எதுவும் இல்லை. எனக்கு கொஞ்சம் டைம் கொடு மாது. உன்கிட்ட பேசாம என்னாலையும் இருக்க முடியாது தான் ஓகேவா…”

Advertisement