Advertisement

14

 

“நீங்க அப்போ என்கிட்ட போன்ல பேசினப்பவும் ஆஹோ ஓஹோன்னு பேசிடலை தான். ஆனா நீங்களா ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசவாச்சும் செஞ்சீங்க… இப்போ அது சுத்தமா இல்லை…”

 

“ஏதோ கடமையா பீல் பண்றீங்களோன்னு தோணுது. ஓகே எதையும் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ என்கிட்ட இயல்பா இருங்க”

 

“ஆனா ஒண்ணு எனக்கு உங்ககிட்ட எந்த வரைமுறையும் இல்லை. எனக்கு நீங்க தான் எல்லாமேன்னு நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன். ஏன்னா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அவள் சொல்ல அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

 

தெரியவில்லை என்று சொல்வதை விட அவன் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் கூட எடுத்துக் கொள்ளலாம்.

 

பேச்சு அவ்வளவு தானா என்பது போல் அவன் ரெஸ்ட் ரூம் எழுந்து சென்றான். பின் திரும்பி வந்தவன் அவளுக்கு மறுப்புறம் வந்து படுத்துக்கொண்டான்.

 

படுத்தவன் கட்டிலுக்குஅருகில் இருந்த மின் விளக்கு பொத்தானை அமர்த்திவிட்டு இரவு விளக்கை ஒளிரவிட்டான்.

 

‘இருந்தாலும் இவருக்கு இவ்வளவு கல்நெஞ்சம் ஆகாது’ மனதிற்குள் தன் கணவனை இடித்துக் கொண்டாள் இதழினி. ‘இதுவரைக்கும் ஒரு முறை கூட இவரு என் பேரை சொல்லிக் கூட கூப்பிட்டதில்லை அப்படி என்ன பண்ணிட்டேனாம் நானு’ என்று ஆதங்கமும் எழத்தான் செய்தது அவளுக்கு.

 

அப்படியும் இப்படியும் புரண்டு புரண்டு படுத்தாள் விதுரன் திரும்புவதாய் காணோம். அவளாகவே அவனை நெருங்கி படுத்துக்கொள்ள ஆச்சரியம் தான் அவனுக்கு.

 

திருமணமாகி இந்த ஒரு வாரத்தில் அவளாய் எப்போதும் அவனை நெருங்கியிருந்ததில்லை. அவன் நெருக்கத்தையும் ஒரு போதும் அவள் புறக்கணித்ததுமில்லை.

 

“என்னாச்சு??” என்று வாய்விட்டு கேட்டே விட்டான் அவன்.

 

“நாளைக்கு ஊருக்கு போறீங்க தானே??”

 

“அதான் அப்போவே சொன்னேனே அப்புறமென்ன??” என்றான் கேள்வியாய்.

 

“எப்படித்தான் உங்களால இப்படி இருக்க முடியுதோ” என்று வெளிப்படையாகவே அவனை திட்டியவள் ஒரு உருட்டலில் அவன் மேலேறி படுத்திருந்தாள்.

 

அவன் சுதாரிக்கும் முன்னே அவன் இதழையும் முற்றுகையிட்டாள். ஆரம்பித்தவளை அவன் முடிக்கவிடாது தொடர அந்த இரவு அவர்களுக்கு தூங்கா இரவாகிப் போனது.

 

எவ்வளவு நேரம் கழித்து உறங்கிய போதும் விதுரன் காலையிலேயே எழுந்திருந்தான். அவன் குளித்து முடித்து வரும் வரையிலும் கூட இதழினி அசையவே இல்லை.

 

விதுரன் வேலைக்கு செல்ல கிளம்பியிருந்தான். கீழே இறங்கிச் சென்றவன் “அம்மா டிபன் வைங்க…” என்று சொல்ல அவர் மேலே ஒரு பார்வை பார்த்தவர் ஒன்றும் சொல்லாமல் அவனுக்கு டிபனை எடுத்து வைத்தார்.

 

“அவ தூங்கிட்டு இருக்காம்மா… அங்கயும் இங்கயும் போயிட்டு வந்ததுல அலைச்சல் முடியலை போல…” என்று அவனே அறியாமல் அவளுக்கு அவன் சப்பைக்கட்டு கட்ட கற்பகம் வாய்விட்டு சிரித்துவிட்டார். “எதுக்கும்மா சிரிக்கறீங்க??”

 

“நீ ஏதோ காரணம் சொல்றியே அதை கேட்டு தான் சிரிக்கறேன்” என்றார் அவர்.

 

“ம்மா…”

 

“நான் உன்னை எதுவுமே கேட்கலையே நீயா எதுக்கு எனக்கு விளக்கம் சொல்றே??” என்றவரின் சிரிப்பு இன்னமும் அடங்கவில்லை.

 

அதற்கு மேல் பேசினால் அவன் இமேஜ் இன்னமும் டேமேஜ் ஆகும் வாய்ப்பிருப்பதால் அவன் பேச்சை மாற்றினான். “திருநா எங்கேம்மா??”

 

“உன்னை விடணும்ல அதான் இன்னைக்கு லீவு போட்டிருக்கான்”

 

“ஹ்ம்ம் சரிம்மா. எழுந்திட்டான்ல” என்று கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

 

“அப்போவே எழுந்திட்டான், நீ தான் இன்னைக்கு லேட்” என்று பேச்சு முதலில் ஆரம்பித்த இடத்திற்கு வந்தது.

 

“அப்பா எங்கே??”

 

“இப்போ தான் சாப்பிட்டார் உள்ள ரூம்ல தான் இருக்கார்…” என்றவர் பேச்சை பாதியிலேயே விட்டதாக அவனுக்கு தோன்றியது.

 

அது என்னவாக இருக்கும் என்பதும் அவனுக்கு தெரியும் தான். சட்டென்று அவரிடம் பேசவும் அவனுக்கு என்னவோ போலிருந்தது.

 

இதழினியின் பேச்சு சரியாகத் தோன்றியது. காலம் தாழ்த்தாது அதை செயல்ப்படுத்த வேண்டும் என்று எண்ணியவன் சாப்பிட்டு முடித்ததுவும் அவன் தந்தையின் அறை நோக்கிச் சென்றான்.

 

அவன் போவதை பார்த்ததும் கற்பகமும் பின்னோடே சென்றார். “அப்பா…” என்ற மகனின் வெகு நாளைய அழைப்பை கேட்டதும் சதாசிவத்தின் கண்கள் கலங்கிப் போனது, சட்டென்று எழுந்து நின்றுவிட்டார்.

 

“உட்காருங்கப்பா…” என்று அவன் இருக்கையை காட்டவும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர் போல் அமர்ந்தார் அவர்.

 

“எனக்கு உங்க மேல அப்போ இருந்த கோபம் இப்போ இல்லை. வருத்தம் மட்டும் தான் இருக்கு. நீங்க செஞ்சது இப்பவும் எப்பவும் சரியான விஷயம் கிடையாது. அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை…”

 

“அதுக்காக நீங்க குடிக்க ஆரம்பிச்சதும் சரியில்லை. முதல்ல செஞ்ச அந்த தப்பை எப்பவும் இனி செய்ய மாட்டீங்களோ அதே மாதிரி குடிக்கறதையும் இனிமே நிறுத்திடுங்க…”

 

“நான் வேணும்ன்னு செய்யலைப்பா. வேலை செஞ்சு பழகினவன் என்னால வேலை செய்யாம இருக்க முடியலைப்பா” என்றார் அவர்.

 

“வேலை இல்லாம இருக்கறது தான் என்னை ஏதேதோ சிந்திக்க வைக்குது. அதான்பா அப்படி பண்ணிட்டேன்… இனிமே செய்ய மாட்டேன்ப்பா” என்றார் தழுதழுத்த குரலில்.

 

அவர் பேச்சில் போலியான வருத்தம் இருக்கவில்லை. நிஜமாகவே உணர்ந்து தான் பேசுகிறார் என்று புரிய விதுரன் யோசித்தான்.

 

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்கப்பா வேலைக்கு நான் எதாச்சும் ஏற்பாடு பண்றேன்”

 

“என்னை எங்கயும் வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்கப்பா??”

 

“தெரியும்ப்பா…”

 

“அப்புறம் எப்படிப்பா??”

 

“சொந்த தொழில் செஞ்சா யாரும் வேலையை விட்டு தூக்க முடியாதுல்ல” என்றான் மகன். அதைக்கேட்டு சதாசிவம், கற்பகம் இருவருமே மகிழ்ந்து தான் போயினர்.

 

“அண்ணா… அண்ணா கிளம்பிட்டியா??” என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்தான் திருநாவுக்கரசு.

 

வெளியில் யாரும் இல்லாததால் தேடிக்கொண்டே வந்தவன் “இங்க இருக்கேன் திருநா” என்று குரல் வந்த திசையை சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

விதுரன் அந்த அறைக்கு சென்றதேயில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. அது பெரும்பாலும் சதாசிவத்தை உள்ளே கொண்டு விடுவதற்காக மட்டுமே இருக்கும்.

 

இந்த காலை வேளையில் விதுரனின் குரல் அங்கே கேட்டதை அவனால் நம்ப முடியவில்லை. சதாசிவம் அன்றைய நிகழ்வுக்கு பிறகு வெளியே எங்கேயும் செல்லவில்லை என்பதை தாயின் பேச்சில் அறிந்திருந்தான் அவன்.

 

மருமகள் தனக்காக பரிந்து பேசியதாலேயே அவளின் பெயரை கெடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான் அவர் வெளியே செல்லவில்லை என்றும் அன்னை கூறியிருந்தார்.

 

அப்படியென்றால் அண்ணா அப்பாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாரா என்று தான் ஓடியது அவனுக்கு.

அது அவனுக்கு சந்தோசமாகவும் இருந்தது. யாரும் அவனை கட்டாயப்படுத்தாமலே அவனாக செய்தது பிடித்தது அவனுக்கு.

 

அகத்தின் அழகு முகத்தில் தெரிய அந்த அறைக்கு வந்திருந்தான் திருநாவுக்கரசு. “என்னடா அப்படி பார்க்கறே??” என்றான் தம்பியின் முகத்தில் தெரிந்த சிரிப்பில்.

 

“ஒண்ணுமில்லை அண்ணா…”

 

“சரி…” என்றவன் பேச்சை வளர்க்கவில்லை.

 

“நான் ஊருக்கு போயிட்டு என்ன பண்ணுறதுன்னு சொல்றேன்ப்பா… திருநா எல்லாம் ஏற்பாடு பண்ணி தருவான் உங்களுக்கு”

 

“என்ன ஏற்பாடு பண்ணணும் அண்ணா??”

 

“அப்பாக்கு வேலை”

 

“வேலையா??”

 

“சொந்தமா ஒரு தொழில் ஏற்பாடு பண்றேன்டா…”

 

“அப்போச்சரி… ஆனா என்ன தொழில் அண்ணா??”

 

“எனக்கு ஒரு ஐடியா இருக்கு அது எந்தளவுக்கு செட் ஆகுதுன்னு பார்த்திட்டு சொல்றேன்” என்றவன் எழுந்திருந்தான்.

 

“சரிம்மா நான் போய் என்னோட பேக் எடுத்திட்டு வந்திடறேன்”

 

“அப்பா நான் ஊருக்கு கிளம்பறேன், இனி அடுத்த வாரம் தான் வருவேன். போயிட்டு வர்றேன்” என்று சொல்ல உச்சி குளிர்ந்து போனார் அவர்.

விதுரன் அவர்களிடம் பேசிவிட்டு வரும் வரையிலும் கூட இதழினி எழுந்திருக்கவில்லை. விடிய விடிய உறங்காதது அவளுக்கு அலுப்பாகியிருக்க அடித்து போட்டது போன்ற உறக்கம்.

 

“இன்னும் தூங்குறாளே என்ன செய்ய… எழுப்பலாமா?? வேணாமா??” என்று வாய்விட்டே தான் சொன்னான் அவன்.

 

‘பேசாம கிளம்பி போய்ட்டா என்னாகும்?? நேத்து நைட் அடிச்ச டயலாக்கை எல்லாம் திருப்பி அடிப்பா அதை திரும்ப கேட்க நமக்கு நேரமில்லை. பேசாம எழுப்பிருவோம்’ என்ற அவனின் மைன்ட் வாய்ஸ் சத்தமாகவே கேட்டது நமக்கும்.

 

அவள் தோளை தொட்டு அவன் உலுக்க “ம்மா இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேன்…”

 

‘அம்மா வீட்டு நினைப்பு இன்னும் போகலை போல. அங்க இருக்கற நினைப்பாவே இருக்கா’ என்று நினைத்துக்கொண்டு மீண்டும் உலுக்கினான்.

 

“ம்மா எப்பவும் திட்டுற மாதிரி திட்டேன் அப்போ தான் எழுந்துப்பேன்” என்று அவள் சொல்ல நிஜமாகவே திட்டிவிட வேண்டும் என்று தான் அவனுக்கு தோன்றியது.

 

“நான் ஊருக்கு கிளம்பறேன்” என்ற அவன் குரலில் பட்டென்று எழுந்து அமர்ந்தாள். அருகில் இருந்த மேஜையில் இருந்த சின்ன அலாரத்தில் நேரத்தை பார்த்து திடுக்கிட்டவள் “சாரி சாரி… வேணும்ன்னு செய்யலை, தூக்கமா வந்துச்சு அதான் தூங்கிட்டேன்”

 

“இட்ஸ் ஓகே நான் கிளம்பிட்டேன் அதை சொல்லத்தான் எழுப்பினேன். நீ தூங்கு…”

 

“இல்லையில்லை இதோ எழுந்திட்டேன் ப்ளீஸ் ப்ளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம் குளிச்சுட்டு ஓடி வந்திடறேன்”

“எதுக்கு இப்போ அவசரம்?? நீங்க நிதானமா குளிங்க”

 

“ப்ளீஸ் நான் வந்திடறேன் நீங்க எங்கயும் போகக்கூடாது…” என்று கட்டளை போல சொன்னவள் தனக்கு தேவையான துணிமணிகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு விரைந்தாள்.

 

சொன்னது போலவே அடுத்த ஐந்து நிமிடத்தில் தலைக்கு குளித்து வெளியே வந்தவளின் முகத்தில் முன் எப்போதும் இல்லாத ஒரு பொலிவு தோன்றியதாகப்பட்டது அவனுக்கு.

 

கட்டியிருந்த துண்டை கூந்தலில் இருந்து விடுவித்து ஒரு சென்டர் கிளிப் மட்டும் போட்டவள் அவனைப் பார்த்து “போகலாம்” என்று சொல்ல என்னவென்பது போல் பார்த்தான் அவன்.

 

“உங்க தம்பி கார்ல தானே உங்களை விட வருவாங்க… நானும் வர்றேன், உங்களை அங்க விட்டுட்டு நான் உங்க தம்பி கூட திரும்பி வந்திடறேன்”

 

“நான் அவன் கூட போறேன்னு யார் சொன்னது”

 

“அத்தை…”

 

‘அம்மா!!’ என்று பல்லைக்கடிக்க தான் முடிந்தது அவனால்.

 

“நீங்க எதுக்கு இப்போ அங்க??” என்றான் பொறுமையை இழுத்து பிடித்த குரலில்.

 

“சும்மா சொன்னேன், நான் வரலை. உங்களை கீழ வரைக்கும் வழியனுப்ப தான் ரெடி ஆனேன்” என்று அவள் உடனே பல்டி அடுக்கவும் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

இவள் பேசியதில் எது நிஜம் என்ற குழப்பத்திற்கு ஆளானான் அவன்.

“யோசிக்காம முதல் ஒரு முத்தம் கொடுங்க அப்புறம் அதெல்லாம் யோசிக்கலாம்” என்று அவள் சொல்ல ‘இவளை எந்த லிஸ்ட்ல சேர்க்க’ என்று பார்த்தான் அவன்.

 

“பாருங்க குளிச்சுட்டு எல்லாம் வந்திருக்கேன். சீக்கிரம்…” என்று அவள் சொல்ல அவன் யோசனை எல்லாம் எங்கோ தூரச் சென்று இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

 

இன்னமும் அவளருகே நெருங்காமல் அவன் நின்றிருக்க இதெல்லாம் வேலைக்காகாது என்று எண்ணியவள் தானே அவனை நெருங்கியவள் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

 

அந்த ஈரம் காயும் முன்னே “என்னை எதுக்கு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க?? அதெல்லாம் நிதானமா போற வழியில யோசிங்க, இல்லை ஊருக்கு போய் யோசிங்க…”

 

“இப்போ உங்களுக்கு நேரமாச்சுல உங்க தம்பி காத்திட்டு இருப்பார் வாங்க போகலாம்…” என்று சொன்னவள் அவனுக்கு முன்னே செல்ல ஒன்றும் புரியாமல் அவன் பின்னே இறங்கினான்.

 

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே வர்றேன்னு சொன்னா. இப்போ வரலைன்னு சொல்றா’ என்று வண்டியில் ஏறும் வரையிலும் கூட யோசித்தவனுக்கு பதில் தான் கிடைத்த பாடில்லை.

 

இன்முகமாய் அவன் மனைவி வழியனுப்பி வைத்தது மட்டுமே அவன் கண் முன் காட்சியாய் ஓடியது. கன்னத்தில் இன்னமும் அவள் இதழின் ஈரம் காயாமல் இருந்ததை உணர முடிந்தது அவனால்.

 

அவள் கையாட்டுவது அவனுக்கு திரும்பி பார்க்காமலே தெரிந்தாலும் பதிலுக்கு அவன் கையாட்டிடவில்லை. திருநாவுக்கரசு அவனைவிட்டுவிட்டு சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பியிருந்தான் சென்னைக்கு.

 

அவன் கிளம்பியதும் கற்பகம் மருமகளை அணைத்துக் கொண்டார். என்னவென்று புரியாவிட்டாலும் அப்படியே நின்றிருந்தாள் அவள்.

 

சதாசிவத்தின் கண்களில் லேசாய் கண்ணீர் தெரிய ஏதோ புரிவது போல இருந்தது அவளுக்கு. அவர்களாக சொல்லட்டும் என்று நின்றிருந்தாள்.

 

“அத்தை ரொம்ப பசிக்குது சாப்பிடலாமா??” என்று அவள் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு கேட்க சதாசிவம் “கற்பகம் முதல்ல மருமகளுக்கு டிபன் வை…” என்று குரல் கொடுத்தார்.

 

“நீங்க எல்லாம் சாப்பிட்டாச்சா??”

 

“நான் சாப்பிட்டேன்ம்மா, உங்க அத்தை தான் இன்னும் சாப்பிடலை”

 

“சாரி அத்தை கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. இனிமே சீக்கிரம் எழுந்துக்கறேன், எங்கம்மாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க அத்தை, அவங்களுக்கு தெரிஞ்சுது என் காது கிழிஞ்சுது” என்று அவள் சொல்லிய தினுசில் சிரித்துவிட்டார் அவர்.

 

“நான் எதுக்கும்மா சொல்லப் போறேன்”


“நானே உளறிடுவேன் அத்தை எப்படியும் எனக்கு திட்டு கன்பார்ம்…” என்று சொல்லிக்கொண்டாள்.

 

இருவருமாக தங்களுக்கு டிபனை எடுத்துக்கொண்டு டேபிளில் அமர ஹாலில் அமர்ந்திருந்த சதாசிவத்தை பார்த்துக்கொண்டே “அத்தை அவர் மாமாகிட்ட பேசிட்டாரா என்ன??” என்றாள் அவள் மெல்லிய குரலில்.

 

“ஆமா இதழ் என்னால நம்பவே முடியலை. அவன் பேசுவான்னு நான் நம்பவே இல்லை… ஆனாலும் அது நடந்திடுச்சு. உனக்கு தான் நாங்க நன்றி சொல்லணும்”

Advertisement