Advertisement

 

13

 

“உள்ள வாங்க” என்றுவிட்டு அவள் தன் கணவனை அழைத்துக்கொண்டு அவளும் மகிழினியும் இருந்த அறைக்குள் நுழைய “ஏய் இதழ் எப்போ வந்தே நான் கவனிக்கலை. ஹாய் மாம்ஸ்” என்றாள் மகிழினி.

 

“நீ இங்க என்னடி பண்றே??”


“புக்ஸ் எடுக்க வந்தேன் இதழ் எடுத்திட்டேன் கிளம்பறேன்” என்றவள் வெளியே சென்றிருந்தாள்.

 

“இந்த ரூம் அவளோடதா”

 

“நானும் அவளும் ஒண்ணா தான் யூஸ் பண்ணிட்டு இருந்தோம்” என்றாள் அவள்.

 

இதழினியின் குடும்பம் மிகச் சாதாரணமானது. மத்திய வர்க்கத்தினர்கள் அவர்கள். இரண்டு படுக்கையறைகள் மட்டுமே கொண்ட சிறிய வீடே அது. ஹால் மட்டுமே சற்று பெரிதாய் இருக்கும்.

 

வெங்கட்ராமனின் வருமானத்தில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. பின் படித்து முடித்து யாழினி வேலைக்கு சென்ற பின் குடும்பம் சற்று தலை தூக்கியது.

 

ஒரு சிறு கம்மல் வாங்குவதாக இருந்தாலும் வெங்கட்ராமனும் சரி வேணியும் சரி மூவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாகத்தான் வாங்குவர். எப்போதும் பிள்ளைகளிடத்தில் அவர்களுக்கு பாகுபாடே கிடையாது.

 

யாழினி வேலைக்கு சென்ற இரண்டே வருடத்தில் காதல் என்று வந்து நின்றாள். அவள் வேலைக்கு செல்ல ஆரம்பித்ததுமே சீட்டை போட்டு அவளுக்கு நகை வாங்கித்தான் வைத்திருந்தனர் பெற்றோர். முன்பே அவள் திருமணத்திற்கு சேர்ந்து வைத்த நகை எல்லாம் போட்டு அவள் திருமணத்தை முடித்திருந்தனர்.

அவள் திருமணத்திற்கு முன்பு தான் ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டை எடுத்துக்கட்டி இரண்டு படுக்கையறை கொண்ட வீடாக மாற்றியிருந்தனர்.

 

இதழினி வேலைக்கு செல்ல ஆரம்பித்த பிறகு மாடியில் காலி இடம் தான் எடுத்து கட்டலாம் என்று சொல்லயிருந்த போதும் வேணியும் வெங்கட்ராமனும் மறுத்துவிட்டனர்.

 

அடுத்து அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதால் அவளின் வருமானத்தை அவளுக்கு நகையாக தான் உருமாற்றினர்.

 

இதழினி எவ்வளவோ சொன்ன போதும் வெங்கட்ராமன் உறுதியாக மறுத்துவிட்டார். “மகிழ் கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிப்பா இன்னொரு ரூம் எடுத்திருவேன். அப்போ தானே என்னோட மூணு பிள்ளைகளும் வந்து தங்க சரியா இருக்கும்” என்றிருந்தார் அவர்.

 

“என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க??” என்ற விதுரனின் குரலில் தான் கலைந்தாள் இதழினி.

 

“இல்லை ஒண்ணுமில்லை” என்றவள் நகரப் போக “எங்க போறீங்க” என்று சொல்லி அவள் சேலை முந்தியை பிடித்திழுக்க அவன் மேலே இடித்து நின்றாள் அவள்.

 

“இல்லை வந்து அம்மா தேடுவாங்க. நான் போயிட்டு வர்றேன்” என்றவள் அவன் முகம் பார்த்து நிற்க போ என்பதை தலையாட்டினான் அவன்.

 

இன்னமும் அவன் அவள் சேலையின் பிடியை விட்டிருக்கவில்லை என்பதால் அவள் அதை திரும்பி பார்க்க ஒரு சிரிப்புடன் அதை விட்டுவிட ஓடியே சென்றாள் அவள்.

 

போன வேகத்தில் திரும்பி வந்திருந்தாள். “என்ன”

 

“இல்லை உங்களுக்கு என்ன செய்யட்டும்ன்னு அம்மா கேட்க சொன்னாங்க…”

 

“ஸ்பெஷலா எதுவும் செய்ய வேணாம்ன்னு சொல்லிடுங்க. அவங்க எப்பவும் என்ன செய்வாங்களோ அதை செய்ய சொல்லுங்க போதும்” என்றான் அவன்.

 

சரியென்று திரும்பி செல்லப் போனவள் அவனருகே வந்து நின்றாள். “நான் ஒண்ணு சொல்லவா”

 

“சொல்லுங்க”

 

“வந்து நீங்க என்னை… நான் உங்களைவிட சின்னப் பொண்ணு தானே என்னை எதுக்கு மரியாதையா கூப்பிடறீங்க. அது என்னமோ அந்நியமா பீல் ஆகுது”

 

“அப்படியா??”

 

“ஹ்ம்ம்…”

 

“எப்படி கூப்பிடணும்??”

 

“அது உங்க இஷ்டம் ஆனா ங்க மட்டும் போடாதீங்க ப்ளீஸ்” என்றுவிட்டு நகர “நில்லுடி” என்ற அவன் குரலில் அப்படியே நின்றுவிட்டாள்.

 

“என்ன நின்னுட்டீங்க??” என்று அவன் சொல்லவும் திரும்பி அவனைப் பார்த்தாள்.

 

“மாத்திக்கறேன் சீக்கிரமே. உங்ககிட்ட அப்படியே கூப்பிட்டு பழகிடுச்சு. சட்டுன்னு மாத்திக்க முடியலை”

 

“ப்ளீஸ் மாத்திக்கோங்க. எங்கம்மா கேட்டா என் தோலை உரிச்சு தொங்க விட்டிருவாங்க…”

 

“எப்படி உரிப்பாங்க??”

 

“கசாப்பு கடையில கோழியை உரிச்சு தொங்க விட்டிருக்கறதை நீங்க பார்த்ததில்லையா அப்படித்தான்”

 

“ஹா ஹா…” என்று வாய்விட்டு அவன் சிரிக்க “எதுக்கு சிரிக்கறீங்க” என்றாள்.

 

“உன்னை தொங்கவிட்டா எப்படியிருக்கும்ன்னு யோசிச்சு பார்த்தேன், சிரிப்பு வந்திடுச்சு” என்றான் அவன்.

 

“நான் போறேன்” என்று கிளம்பிவிட்டாள்.

 

மதிய உணவு தயாராகி இருக்க இரு மாப்பிள்ளைகளை ஒன்றாக அமர வைத்து உணவு பரிமாறினார் வேணி. மகிழினிக்கு விதுரனை பிடித்து போனது.

 

தேவராஜ் எப்போதும் கெத்து காட்டிக்கொண்டு சுத்திக் கொண்டிருப்பான் அவ்வீட்டில். ஆண்கள் பிள்ளைகள் இல்லாத வீட்டிற்கு மகனாய் இருக்க வேண்டியவன் மருமகனாய் முறுக்கு காட்டிக்கொண்டு திரிவான் எப்போதும்.

 

யாழினியின் தங்கைகளிடம் அவன் அதிகம் பேசியதேயில்லை. வீட்டிற்கு வந்தால் எப்படியிருக்கீங்க அவ்வளவு தான் அவன் பேச்செல்லாம். யாழினி தான் அவள் பேச்சில் அவரு அப்படி இப்படி என்று சொல்லிக் கொண்டிருப்பாள்.

 

விதுரனை மகிழினிக்கு பிடிக்க மற்றொரு காரணமும் இருந்தது. அது திருநாவுக்கரசு சம்மந்தப்பட்டது. திருநாவுக்கரசின் மாற்றத்திற்கு காரணம் விதுரன் என்பதை அவளறிவாள்.

 

திருமண மண்டபத்தில் உணவருந்தும் வேளை பார்வையால் திருநாவுக்கரசு அவளை எந்தளவிற்கு தொந்திரவு செய்தான் என்பது அவள் அறிந்த ஒன்று. அதை தற்செயலாய் விதுரன் புருவச்சுளிப்புடன் பார்ப்பதை கண்டவளுக்கு விதிர்விதிர்த்து போனது.

தன்னையும் தப்பாக நினைத்துக் கொள்வாரோ மாமா என்ற எண்ணம் ஒரு புறம் திருநாவுக்கரசின் பார்வை ஒரு புறம் என்று அச்சத்தில் அந்த இடத்தை காலி செய்திருந்தாள்.

 

இதோ இன்றைய அவனின் மாற்றத்திற்கு நிச்சயம் விதுரன் மட்டுமே காரணம் என்பதை தெள்ளத்தெளிவாக உணர்ந்தாள் அவள். அவனிடம் பயம் போய் ஒருவித பாதுக்காப்பு உணர்வு தோன்றியது. உடன்பிறந்தவன் போன்ற எண்ணம் வந்தது அவனிடத்தில்.

 

அதனாலேயே “மாம்ஸ் இதை வைச்சுக்கோங்க எங்க அம்மா நல்லா செய்வாங்க… அதை சாப்பிடுங்க” என்று சொல்லி சொல்லி பரிமாறினாள் அவள்.

 

தேவராஜ் அதையெல்லாம் ஒருவித முகச்சுருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். மாலை சிற்றுண்டியின் போது அவள் இருவருக்கும்

 

மகிழினி விதுரனுக்கு சொல்லிக் கொண்டு வைத்தாள், தேவராஜுக்கு எதுவும் சொல்லாமல் வைத்தாள் மற்றப்படி எந்த பாகுபாடும் அவள் காட்டியிருக்கவில்லை.

 

அவன் எப்படி இருக்கிறானோ அப்படித்தானே அவளும் இருப்பாள். விதுரன் மகிழினியிடம் சகஜமாகவே உரையாடினான்.

 

தங்கள் அறைக்கு சென்ற பின்னர் தேவராஜ் யாழினியிடம் “உன் தங்கச்சிக்கு அறிவே இல்லை. ஆம்பிளைங்க கிட்ட போய் இப்படித்தான் பேசுவாங்களா” என்று தன் மனைவியிடம் சொல்ல அவள் சங்கடமாக உணர்ந்தாள்.

 

அவள் சுயநலம் கொண்டவளாக இருக்கலாம். அதற்காக தன் தங்கையை கணவன் பேசுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாதே. அவள் அப்படியெல்லாம் எண்ணி பேசுபவளல்ல என்று அறிந்தவள் அவள்.

“அதில்லைங்க அவ சாதாரணமா தான் பேசினா…” என்று அவள் ஆரம்பிக்கவும் “நான் சொன்னா சரின்னு கேட்டு பழகு. எதிர்த்து பேசாதே” என்றுவிட்டு அவன் படுத்துக்கொள்ள வாயை மூடிக்கொண்டாள் அவள்.

 

ஆண்கள் மூவரும் ஹாலில் அமர்ந்திருந்தனர். மாலை சிற்றுண்டியை எடுத்து வந்து மூவருக்கும் கொடுத்தாள் மகிழினி.

 

தேவராஜ் சும்மா இல்லாமல் “என்ன மகிழ் உன்னோட சின்ன மாமாக்கு ஸ்பெஷல் கவனிப்பா இருக்கு. மாம்ஸ்ன்னு செல்லமா வேற கூப்பிடுற. என்னையெல்லாம் இப்படி நீ கவனிக்கலையே. என்கிட்ட நின்னு, சேர்ந்தாப்புல ரெண்டு வார்த்தை கூட பேசினதில்லையே” என்று வாயைவிட்டான்.

 

எப்போதும் தெளிவாக பதில் பேசும் மகிழினி “ஸ்பெஷல் எல்லாம் எதுவுமில்லை மாமா. உங்களுக்கு என்ன கொடுத்தனோ அதே தான் அவங்களுக்கும் கொடுத்தேன்”


“அப்புறம் நீங்க என்ன சொன்னீங்க உங்ககிட்ட நான் பேசினதில்லையா. அதையே நானும் திருப்பி சொல்லலாமே மாமா. என்னைக்கு நீங்க எங்ககிட்ட சேர்ந்தாப்புல ரெண்டு வார்த்தை பேசி இருக்கீங்க…”

 

“சின்னக்காவோட கல்யாணம் அப்படிங்கறதால தான் நீங்க சேர்ந்தாப்புல இத்தனை நாள் இங்க இருக்கறதே” என்றாள் அவள் பதிலுக்கு.

 

“மகிழ்” என்ற கண்டிப்பான வேணியின் குரல் கேட்க அவள் உள்ளே செல்ல போக “மகிழ்” என்று அழைத்து நிறுத்தியிருந்தான் விதுரன்.

 

“எனக்குன்னு எந்த ஸ்பெஷல் கவனிப்பும் வேணாம். எல்லா கவனிப்பும் மரியாதையும் இனி நீ தேவாக்கு தான் கொடுக்கணும். ஏன்னா அவர் தான் இந்த வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை சரியா” என்று சொல்ல அவள் தலையாட்டினாள்.

 

“நான் இன்னும் முடிக்கலை மகிழ். என்னை நீ அக்காவோட கணவரா பார்க்க வேண்டாம்மா. ட்ரீட் மீ லைக் யுவர் பிரதர், புரியுதா” என்று சொல்ல அவள் அகமகிழ்ந்து போனாள்.

 

“கண்டிப்பா மாம்ஸ்” என்றுவிட்டு அவள் உள்ளே ஓட தேவராஜ் முகம் எப்படியோ போனது.

 

‘இவன் என்ன வஞ்ச புகழ்ச்சி பண்றான்’ என்பது போல பார்த்தான் அவன் மற்றவனை.

 

விதுரன் அறையில் இருந்தான், இதழினி இன்னும் அறைக்கு வரவில்லை. வெளியே எட்டிப்பார்க்க மகிழினி தான் இருந்தாள்.

 

“மகிழ் உங்க அக்காவை வரச்சொல்லேன்” என்று அவன் சொல்ல “வரச் சொல்றேன் மாம்ஸ்” என்றவள் இதழினியை விரட்டினாள் விதுரனை பார்க்கச் செல்லுமாறு.

 

அறைக்கு வந்தவளிடம் “கிளம்பலாமா??” என்று அவன் கேட்க அவளின் முகம் தொங்கிவிட்டது.

 

“கிளம்பலாமான்னு கேட்டேன் பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்”

 

“நாம தங்கணும்ன்னு தானே வந்தோம். மருவீட்டுக்கு வந்திட்டு தங்காம எப்படி போக…” என்று நெஞ்சடைக்க பதில் சொன்னாள் அவள்.

 

“இங்க பாரு” என்று அவள் தாடை நிமிர்த்தினான். அவனுக்கு காட்டாது அவள் மறைக்க நினைத்த கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது அங்கு. தன் விரல் கொண்டு துடைத்துவிட்டவன் “இந்த வீட்டில இருக்கறது ரெண்டு பெட்ரூம் தானே??”

 

“ஆமா அதுக்கென்ன இப்போ??”

 

“மகிழ் எங்கே படுப்பா இன்னைக்கு??”

 

“ஹால்ல”

 

“நாம ஆளுக்கொரு ரூமை எடுத்திக்கிட்டா அவளுக்கு சங்கடமா இருக்காதா… மாமாவும் அத்தையும் கூட ப்ரீயா படுத்து தூங்க முடியாது ஹால்ல, நான் சொல்றதை புரிஞ்சுக்கோ”

 

“அதெல்லாம் பார்த்தா முடியுமா?? அப்போ நாம இங்க தங்க முடியாதா. எங்கம்மா அப்பாவுக்கு கஷ்டமா இருக்காதா”

 

“உங்க மாமாவும் அக்காவும் ஊருக்கு போன பிறகு வரலாம் ஓகே தானே”

 

“இப்போ நாம நம்ம வீட்டுக்கு போகலாம். ஓகே வா…”

 

“ஹ்ம்ம்” என்றவளுக்கு அவன் யோசித்த விதம் பிடித்திருந்தது. சில நிமிடங்களுக்கு முன்னால் அவளின் தங்கையிடம் ட்ரீட் மீ லைக் யுவர் பிரதர் என்று சொன்ன போதே அவ்வளவு பிடித்தது அவனை.

 

அப்படியே ஓடி வந்து அவனைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது அக்கணம். இதோ இப்போதும் கூட அவளின் பெற்றோருக்காக தங்கைக்காக என்று பேசும் அவனை அணைத்துக் கொள்ளத்தான் தோன்றியது.

 

“நான் சொன்னா அம்மா திட்டுவாங்க. நீங்களே கிளம்புறோம்ன்னு சொல்லுங்களேன்” என்று அவள் சொல்ல அவனே வந்து அவர்களிடம் வேலை இருக்கிறது இன்னொரு நாள் வந்து தங்கிச் செல்கிறோம் என்று  சொல்ல வேறு வழியில்லாது அவர்களும் சரியெனறிருந்தனர்.

 

வெங்கட்ராமனும் வேணியும் வாசலுக்கு வழியனுப்ப வந்தவர்கள் அவனிடம் “அவங்க பேசினதை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை. அதுக்காக எல்லாம் கோவிச்சுட்டு கிளம்ப வேணாமே… அவருக்காக நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம்” என்று மெதுவான குரலில் சொன்னார்கள்.

 

“அதெல்லாம் எதுவுமில்லை மாமா நிஜமாவே எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நாங்க சன்டே வந்து தங்கறோம். கண்டிப்பா ரெண்டு மூணு நாள் இருக்க மாதிரி வர்றோம் ஓகே தானே” என்று சொல்ல அதன்பின் தான் அவர்கள் அமைதியானார்கள்.

 

விதுரன் சொன்னது போலவே ஞாயிற்றுக்கிழமை தன் மனைவியுடன் வந்து தங்கியவன் புதன்கிழமை காலை தான் அங்கிருந்து கிளம்பினான்.

 

இதோ அவனின் விடுமுறை முடிந்திருந்தது. நாளையில் இருந்து அவன் வேலைக்கு செல்ல வேண்டும். பொதுவாக அவன் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதில்லை.

 

அது தூரம் என்பதால் அரக்கோணத்திலேயே தனியே வீடு எடுத்து தங்கியிருந்தான். என்டிஆர்எப் பின் பதினாலு பெட்டாலியனில் ஒன்று தமிழகத்தில் அரக்கோணத்தில் அமைத்திருந்தது.

 

பேரிடர் காலத்தில் அங்கிருந்து தான் அவர்கள் செல்வர். அரக்கோணத்தில் அமைத்திருக்கும் அவர்களின் குழுவானது தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் உண்டாகும் பேரிடர் காலங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்.

 

சமயத்தில் கூடுதல் உதவி தேவைப்படும் மற்ற மாநிலங்களுக்கும் அவர்கள் குழுவில் இருந்து சிறப்பானவர்களை தேர்வு சித்து அனுப்பி வைப்பர். இதழினிக்கும் விடுப்பு முடியும் தருவாயே. அவள் திங்களன்று முதல் வேலையில் சேரவேண்டும்.

 

இரவு இதழினி படுக்க வரவும் தான் மறுநாள் அவன் அரக்கோணம் செல்லவிருப்பதை பற்றியே சொன்னான் விதுரன்.

 

“நாளைக்கு நான் அரக்கோணம் கிளம்பிடுவேன். உனக்கு என்னையில இருந்து ஆபீஸ்??”

 

“வர்ற திங்கள் கிழமையில இருந்து போகணும்”

 

“ஹ்ம்ம் சரி”

 

“நீங்க இங்க இருந்து போயிட்டு வர முடியாதா??”

 

“எதுக்கு கேட்கறே??”

 

“இல்லை அரக்கோணம் தானே இங்க ட்ரைன்ல போயிட்டு வர்ற தூரம் தானே… அதான் கேட்டேன்…”

 

“என்னால அப்படி எல்லாம் அலைய முடியாது. வேலை இருக்கும் போது நான் நேரம் காலம் எல்லாம் பார்க்க மாட்டேன், வேலைக்கு தாமதமா போறதும் எனக்கு பிடிக்காது”

 

‘நான் லேட்டா போங்கன்னா சொன்னேன்’ என்று எண்ணியவாறே அவனைப் பார்த்தாள். இதற்கு மேல் இந்த விஷயம் பேசினால் வேலைக்கு ஆகாது என்பது புரிய அவனிடம் புரிந்தது என்பது போல தலையாட்டினாள்.

 

“உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா??”

 

“என்ன??”

 

“வந்து நீங்க முன்ன என்கிட்ட போன் பேசுவீங்க தானே… இப்போ அந்தளவுக்கு கூட என்கிட்ட ஏன் பேச மாட்டேங்கறீங்க??”

 

“ஏன்னு தான் உனக்கே தெரியுமே??”

 

“இப்போ நமக்கு கல்யாணமே ஆகிட்டு”

 

“அதனால அந்த கோபம் போய்டுச்சுன்னு அர்த்தமா??”

 

“உங்களுக்கு அப்படி ஒண்ணும் என் மேல கோபமிருக்க மாதிரி தெரியலையே…”

 

“அப்படியா??”

 

“நீங்க ஒத்துக்குவீங்களான்னு எனக்கு தெரியலை. சரி என் மேல என்ன கோபம் உங்களுக்கு??”

 

“தெரிஞ்சுட்டே கேள்வி கேட்டா என்ன செய்ய?? நான் என்ன சொல்லணும்ன்னு நீ எதிர்பார்க்கிறே??”

 

“அப்போ எனக்கு உங்க வேலை பிடிக்கலை அதனால நான் வேணாம்ன்னு சொன்னேன்…” என்ற அவளின் பதிலில் அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான்.

 

“இப்போ எனக்கு பிடிச்சதும் உங்க வேலை பார்த்து தான்… உங்ககிட்ட நான் பொய் சொல்லலை. நான் அப்போ சொன்னதும் உண்மை, இப்போ சொன்னதும் உண்மை. ரெண்டையுமே நான் மனசுல இருந்து தான் சொன்னேன்”

 

“எப்பவும் நான் உங்களை வேண்டாம்ன்னு சொன்னதில்லை. உங்களை எனக்கு பிடிச்சு தான் இருந்துச்சு அப்பவும், இப்பவும், இனிமே எப்பவும்” என்று முடித்தவளின் பதில் அவனை சற்று அசைத்தது என்பது உண்மையே.

Advertisement