Advertisement

12

 

மறுநாள் விதுரன் வீட்டினர் இதழினியின் வீட்டிற்கு மறுவீட்டு விருந்திற்கு சென்றனர். காலையிலேயே யாழினி தன் கணவனுடன் அழைக்க வந்திருந்தாள் அவர்களை.

 

இதழினியின் வீட்டின் முன் பந்தல் போடப்பட்டிருந்தது. விருந்திற்கு விதவிதமான உணவுகள் ஆட்களை வைத்து செய்திருந்தனர்.

 

விதுரன் வீட்டினர் காலை உணவு முடிந்து தான் கிளம்பியிருந்தனர். பதினோரு மணி வாக்கில் அவர்கள் வர வேணியும் வெங்கட்ராமனும் இன்னும் சில உறவினர்கள் சகிதம் வந்தவர்களை வரவேற்றனர்.

 

மகிழினி வெளியே வந்திருக்கவில்லை. வந்தவர்களுக்கு அவளும் யாழினியுமாக பருக இளநீர் கொடுத்தனர் கோப்பையில்.

 

முன்பே இளநீர் எல்லாம் சீவப்பட்டு நீரை சேகரித்து வைத்திருந்தனர். வெயில் காலம் ஆரம்பிப்பதால் அந்த ஐடியாவை மகிழ் கொடுத்திருந்தாள். வேண்டாம் என்ற ஒரு சிலருக்கு மட்டும் காபி கொடுக்கப்பட்டது.

 

திருநாவுக்கரசு மகிழ் இருந்த பக்கம் தன் பார்வையை கூட திருப்பவில்லை. அவள் தான் அவனுக்கு இளநீர் கொண்டு வந்து கொடுத்தாள். யாரென்று நிமிர்ந்து பார்க்காமலே வாங்கி ஒரே மடக்கில் குடித்து முடித்திருந்தான்.

 

‘பரவாயில்லையே நல்ல இம்புரூவ்மென்ட்டா இருக்கே’ என்று எண்ணிக்கொண்டு நகர்ந்தாள் அவள்.

 

மதிய உணவு சைவம், அசைவம் என்று அனைத்து வகையும் செய்திருந்தனர். கடைசியில் இலையில் வைக்கப்பட்ட இளநீர் பாயாசம் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மீண்டுமொருமுறை என்று இரண்டு மூன்று முறை வாங்கிக் குடித்தார்கள் சிலர்.

 

திருநாவுக்கரசு உணவு முடிந்ததும் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டான். விதுரனின் உறவினர்கள் அன்றே ஊருக்கு கிளம்புவதால் மாப்பிள்ளையும் பெண்ணும் அங்கு தங்கியிருக்கவில்லை.

 

இரவு பேருந்தில் உறவினர்கள் கிளம்பியிருக்க வீடு காலியாகியிருந்தது. சதாசிவம் முதல் நாள் போல் எங்கோ வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு தள்ளாட்டத்துடன் வந்தார்.

 

விருந்து முடித்து வீட்டிற்கு வந்தவுடன் வெளியே சென்றவர் தான் இதோ இப்போது தான் வீடு வந்திருக்கிறார்.

 

கற்பகம் வாசலிலேயே அமர்ந்திருந்தார். விதுரன் அறையில் இருக்க “நான் கீழே போறேன்” என்று அவனிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கி இதழினி வரவும் சதாசிவம் வரவும் சரியாக இருந்தது.

 

“ஏங்க இப்படி பண்ணிட்டு வர்றீங்க. யாரு தான் உங்களுக்கு காசு கொடுக்கறாங்கன்னு தெரியலையே. தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைங்களை வைச்சுட்டு இப்படி பண்ணலாமா”

 

“வீட்டுக்கு மருமகளும் வந்தாச்சு. பசங்களுக்கு நீங்க இப்படி பண்ணுறது எவ்வளவு அவமானமா இருக்கும்ன்னு யோசிக்க மாட்டீங்களா??” என்றார் கற்பகம்.

 

இதழினி கீழே வந்திருக்க அவளை கண்டுவிட்ட சதாசிவம் “மன்னிச்சுடும்மா எனக்கு உன் மேல எந்த கோவமும் இல்லை. எல்லாம் உன் புருஷன் மேல தான். நான் என்ன பண்ணிட்டேன் ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கறான்…”

“தப்பு பண்ணா திருந்த மாட்டாங்களா… திருந்த சந்தர்ப்பம் கொடுக்க கூடாதா… பேசாம போறான் பெரிய இவனாட்டாம்” என்று அவர் குழறலாய் கத்திக் கொண்டிருக்க திருநாவுக்கரசு அவனறையில் இருந்து வந்திருந்தான்.

 

“வந்துட்டான் என் மவராசன் சின்ன மவன் வந்துட்டான். இவன் தான் என்னை ஒண்ணுமே சொல்ல மாட்டான்… மவனே திருநா வாடா வாடா ராசா…” என்று அவனை அணைக்கப் போக “ப்பா ஏன் இப்படி பண்றீங்க?? பேசாம உள்ள போய் படுங்க”

 

“இல்லப்பா அப்பாக்கு ரொம்ப கவலைப்பா…”

 

“உங்களுக்கு என்ன கவலை இப்போ. உங்களால எங்களுக்கு தான் எல்லா கவலையும். ஒரு நாளாச்சும் நிம்மதியா வீட்டில இருக்க முடியுதா உங்களால” என்றவன் அவரை தள்ளிக்கொண்டு அறைக்கு செல்ல அவர் திமிறினார்.

 

“விடுடா என்னை விடு… நீயும் என்னை பேசுற, அதுவும் வந்திருக்க மருமவ பொண்ணு முன்னால. அந்த பொண்ணு என்னை என்ன நினைக்கும்…” என்றார் அவர்.

 

“நீங்க தண்ணி அடிச்சுட்டு வந்து கலாட்டா பண்ணுறதை பார்த்து நினைக்காததையா நாங்க பேசும் போது அவ நினைக்க போறா” என்ற குரலில் மற்ற அனைவருமே திரும்பி பார்க்க விதுரன் பாதி படியில் இறங்கி வந்து கொண்டிருந்தான்.

 

“நான் ஏன் இப்படி பண்ணுறேன்னு உனக்கு தெரியாதா??”

 

“திருநா அவரை உள்ள கூட்டிட்டு போ. எனக்கு வர்ற கோவத்துக்கு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது” என்று அவன் சொல்ல “என்னடா என்ன பண்ணுவே என்னை. அடிப்பியா அடிடா??” என்றார் அவர் பதிலுக்கு.

கற்பகமோ “ஏங்க இப்படி பண்ணுறீங்க??” என்று அழுது புலம்ப “அம்மா அவர்காக எல்லாம் அழாதீங்க நீங்க…” என்ற விதுரன் “என்ன இப்போ உங்க பிரச்சனை?? பேசாம போய் படுங்க. நாளைக்கு ஒரு முடிவு கட்டுறேன் எல்லாத்துக்கும்” என்றான் அவன்.

 

“அப்பா வாங்கப்பா” என்ற திருநாவுக்கரசு அவரை பிடித்து இழுக்காத குறையாக சென்று அறையில் தள்ளினான்.

 

“எதாச்சும் பண்ணு விதுரா இப்படியே போனா என்னாகும் சொல்லு…” என்று கற்பகம் புலம்பினார். இதழினி அவரை ஆறுதலாய் அணைத்துக் கொண்டாள்.

 

“கவலைப்படாதீங்க அத்தை எல்லாம் சரியாகிடும். நீங்க கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க…” என்றாள்.

 

“அம்மா போய் படுங்க நாளைக்கு என்ன பண்ணுறதுன்னு பார்க்கறேன்” என்று முடித்தான் விதுரன்.

 

அதற்கு திருநாவுக்கரசு அவரை அறையில் விட்டு திரும்பி வந்திருக்க “திருநா நாளைக்கு ஒரு நாள் லீவு போட முடியுமாடா??”

 

“என்னண்ணா பண்ணும்??”

 

“இல்லைடா அப்பாக்கு என்ன பண்ணுறதுன்னு பார்க்கணும். இப்படியே போனா எப்படிடா??”

 

“நான் பிரண்ட் ஒருத்தன்கிட்ட சொல்லி இருக்கேன் அண்ணா. டிஅடிக்சன் சென்டர்ல சேர்க்கறது பத்தி ஒரு வாரத்துல சொல்றேன்னு சொல்லி இருக்கான்…”

 

“தப்பா எடுத்துக்காதீங்க நான் இந்த விஷயத்துல தலையிடறேன்னு. டிஅடிக்சன் சென்டர்ல சேர்க்கறதுனால எதுவும் மாறிடாது” என்று அவள் சொல்லவும் விதுரன் அவளை ஒரு பார்வை பார்த்தான்.

“நிஜமா தான் சொல்றேன் அதுல எந்த யூஸ் இல்லை. நீங்க எல்லாரும் தான் அவர் மாறுறதுக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும். மாமாகிட்ட நீங்க பேசாதது தான் அவங்களை ரொம்ப பாதிச்சிருக்கு”

 

“நீங்க எதுக்காக பேசலைன்னு எனக்கு தெரியாது. அது எனக்கு தெரியவும் வேணாம். அவங்க தப்பே பண்ணியிருந்தாலும் உங்களால மன்னிக்க முடியாதா. நீங்க அவங்ககிட்ட பேசினாலே அவங்க மாற ஒரு வாய்ப்பா இருக்கும்”

 

“கொஞ்சம் கொஞ்சமா அவங்களை முழுசா மீட்க அதுவே வழியா இருக்கும். அதுக்கு பிறகு நீங்க அவங்களை கட்டாயப்படுத்தாமலே அவங்க டி அடிக்சன் சென்டர்க்கு வருவாங்க…”

 

“எனக்கென்னவோ மாமா அப்படி ஒண்ணும் அடிக்ட் ஆனா மாதிரி தெரியலை. மனசு சரியில்லைன்னு தான் இப்படி செய்யறாங்கன்னு தோணுது…” என்று சொல்லி முடிக்க கனத்த அமைதி அங்கு.

 

கற்பகத்திற்கும் மருமகள் சொல்வதே சரியெனப்பட்டது. திருநாவுக்கரசுவோ விதுரன் எதுவாவது சொல்வான் என்று அவனை பார்த்திருந்தான். அவனுக்குமே தன் அண்ணன் தந்தையிடம் பேசினால் சரியாகும் என்று தான் தோன்றியிருந்தது.

 

அவர் பலமுறை தன் அன்னையிடம் வருந்தி பேசியதை அவன் கேட்டிருக்கிறான். அவனுக்கும் அவர் மீது கோபம் எல்லாம் இருந்தது தான். அதற்காக அவர் இத்தனை வருடமாக தண்டனை அனுபவித்துவிட்டார்.

 

அவரால் அவர்கள் குடும்பமும் அவமானத்தை சந்தித்திருந்தது அப்போது. இன்னும் அவரை தண்டிக்க வேண்டுமா என்ற எண்ணம் அவனுக்குண்டு. அதனாலேயே அவன் அவரிடம் பேச ஆரம்பித்திருந்தான்.

 

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வது விதுரன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் நன்றாக படித்து மெரிட்டில் சீட் வாங்கியிருந்தான்.

 

சதாசிவம் அப்போது பத்திர பதிவு அலுவலக அதிகாரியாக இருந்தார். நேர்மையான அதிகாரியாக பணிபுரிந்துக் கொண்டிருந்தார் அவர்.

 

சதாசிவம் ஒருவரின் வருமானத்தில் தான் குடும்பம் நடந்துக் கொண்டிருந்தது. இரு பிள்ளைகளின் படிப்பு வீட்டுச்செலவு என்று அதற்கே அவர்கள் வருமானம் சரியாக இருந்தது.

 

விதுரனுக்கு மெரிட் சீட் என்றாலும் அவன் தனிப்பட்ட முறையில் கற்ற விரும்பிய கணினி வகுப்பில் வேறு சேர்த்துவிட்டிருந்தார் அவர். வீடு சொந்த வீடாக இருந்ததால் வாடகை பிரச்சனை மட்டும் இருந்ததில்லை அவர்களுக்கு.

 

திருநாவுக்கரசுக்கு மருத்துவராக வேண்டுமென்ற கனவிருந்தது அப்போது. நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தான் பண்ணிரண்டாவதில்.

 

மெரிட்டில் சீட் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க கட் ஆப் மார்க்கில் அவனுக்கு ஒரு மார்க் குறைந்திருந்தது மெரிட்டில் சீட் கிடைக்க.

 

மகனின் கனவை நிஜமாக்க விரும்பிய அத்தந்தை தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்க்க தேவைப்பட்ட முன் பணம் பத்து லட்சத்திற்காய் முதன் முதலாய் லஞ்சம் வாங்கியிருந்தார்.

 

திருநாவுக்கரசு கேட்ட மருத்துவ கல்லூரியே அவனுக்கு கிடைத்துவிட சதாசிவம் முன் பணத்தை கட்டிவிட்டிருந்தார். அதற்கு பின் தான் இன்னமும் தேவைகள் பெருகியது அவருக்கு.

 

முன்பணம் மட்டுமல்லாது படிப்பு கட்டணம் அது இதுவென்று அதுவே மேலும் சில லட்சங்கள் சேர்ந்துவிட இரண்டாம் முறையாக லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் பிடிப்பட்டிருந்தார்.

 

என்னதான் ககுடும்பத் தேவைக்காய் அவர் அதை செய்திருந்தாலும் தவறு என்று சரியாகிவிட முடியாதே. சொந்தங்கள் எல்லாம் தூர விலகி நின்றது. அக்கம் பக்கம் நிமிர்ந்து பார்க்க கூட முடியாத அளவிற்கு தலைகுனிவாய் போனது அவர்களுக்கு.

 

சதாசிவத்தின் வேலை பறிபோனது. அவர் முதன் முதலாக வாங்கிய பணத்தை கூட அதிகாரிகள் அறிந்து வைத்திருக்க அதை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே சிறைக்கு செல்ல முடியாது என்று அவர்கள் சொல்லியிருக்க என்ன செய்வது என்று அறியாது தவித்திருந்தனர் அவர்கள்.

 

திருநாவுக்கரசு தனக்கு மருத்துவ படிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட கல்லூரில் கட்டியிருந்த முன்பணத்தை நல்ல வேளையாக அவர்கள் திருப்பிக் கொடுத்திருக்க அதை ஒப்படைத்திருந்தனர் அவர்கள்.

 

என்ன தான் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்த போதும் செய்த தவறு இல்லையென்று ஆகிவிடுமா என்ன. அது அவர்களின் பிள்ளைகளை துரத்தியது. அந்த தருணத்தில் இருந்து தான் அண்ணன் தம்பி இருவருமே அவரிடம் பேச்சை குறைத்து அது முற்றிலுமே நின்று போயிருந்தது.

 

விதுரன் பகுதி நேரமாக வேலை பார்க்க ஆரம்பித்தான். திருநாவுக்கரசு மெரிட்டில் இன்ஜினியரிங் கல்லூரி சேர்ந்தான். கற்பகத்தை நகைகளை அடமானம் வைத்து அவன் கல்லுரிக்கு பணம் கட்டினர். விதுரன் பகுதி நேர வருமானமும் சற்று வர அண்ணனை பார்த்து தம்பியும் ஒரு வேலைக்கு சென்றான் பகுதி நேரமாக.

குடும்பம் அதோ இதொவென்று ஓடியது அப்போது. விதுரன் படிப்பை முடித்ததும் வேலை ஒன்று கிடைக்க அதிலிருந்துக் கொண்டே அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தான்.

 

எதையாவது செய்து தங்கள் குடும்பத்திற்கு விழுந்த பழி துடைக்க வேண்டும் என்று அவன் மனம் விரும்பியது. காவல்துறை, ராணுவம் அனைத்திற்குமே விண்ணப்பித்திருந்தான். அப்போது தான் என்டிஆர்எப் பற்றிய விபரமறிந்தவன் அதிலேயே சேர்வது என்ற முடிவிற்கு வந்து அதற்கு ஆவணச் செய்தான்.

 

இதோ இன்று அதில் நல்ல பெயரும் எடுத்திருக்கிறான். தொலைந்த உறவுகளின் மத்தியில் இப்போது தலைநிமிர்ந்து நிற்கின்றனர் அவர்கள்.

 

இதழினியின் பேச்சு கற்பகத்திற்கும் திருநாவுக்கரசுவுக்கும் சரியென்று பட்டப் போதும் இருவருமே அதை விதுரனுக்கு எடுத்துச்சொல்லவில்லை.

 

அதிகப்பட்ச அவமானத்தை அவன் அடைந்திருந்தான் அந்த தருணத்தில். அதனால் எதுவாக இருந்தாலும் அவனே முடிவு செய்யட்டும் என்பது போலத்தான்  நின்றிருந்தனர் அவர்கள். விதுரன் ஒன்றுமே பேசவில்லை படியேறி மாடிக்குச் சென்றுவிட்டான்.

 

“அத்தை மாமா சாப்பிட்டாங்களோ இல்லையோ நான் தோசை ஊத்தறேன் நீங்க அவங்களுக்கு கொடுங்க…” என்று சமையலறை நோக்கிச் சென்றாள் இதழினி.

 

“வேணாம்மா இதழ் நீ போய் படு. நானும் திருநாவும் பார்த்துக்கறோம்…” என்றார் கற்பகம்.

 

“இருக்கட்டும் அத்தை…”

 

“அண்ணி அம்மா தான் சொல்றாங்கல்ல. நீங்க போங்க” என்றான் திருநாவுக்கரசு.

இதழினி கிளம்ப “பால் காய்ச்சி வைச்சிருந்தேன்ம்மா. சூடு பண்ணித்தரேன் எடுத்திட்டு போ…” என்று சொல்ல அவருடன் சென்றாள்.

 

அவள் பாலை எடுத்துக்கொண்டு வர விதுரன் கட்டிலில் அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

 

“பால்…” என்று சொல்லி கோப்பையை அவன் முன் நீட்ட ஒன்றும் சொல்லாமல் அதை வாங்கி அருந்தினான்.

 

மறுநாள் பொழுது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாதாரணமாக கழிந்திருந்தது. சதாசிவம் அறையை விட்டே வெளியில் வரவில்லை. கற்பகம் நடந்ததை அவரிடம் சொல்லியிருப்பார் போல. திருநாவுக்கரசு வேலைக்கு சென்றிருந்தான்.

 

விதுரன் நண்பனொருவனை பார்க்க சென்றுவிட்டு இரவு தான் வீட்டிற்கு வந்திருந்தான். மறுநாள் இருவரும் அவளின் வீட்டிற்கு சென்று தங்கியிருந்துவிட்டு ஞாயிறு அன்று திரும்பி வருவதாக இருந்தது.

 

காலையிலேயே ஒரே பரபரப்பாக இருந்தது இதழினி. என்ன தான் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்துவிட்டாலும், எந்த பெண்ணிற்கும் தாய் வீட்டுக்கு செல்வதென்றாலே ஒருவித சந்தோசம் வந்து ஒட்டிக்கொள்ளத் தானே செய்யும்.

 

அதற்கு சற்றும் குறைவில்லாது இதழினியும் இருந்தாள். அவளின் துணிமணிகள் இன்னொரு பெட்டியில் அவள் வீட்டிலும் இருந்தது, அதனால் அவளுக்கான உடைகளை அவள் எடுத்து வைக்கவில்லை.

 

விதுரன் அப்போது தான் குளித்துவிட்டு வர “உங்க டிரஸ் எடுத்து வைக்கட்டுமா??”

 

“ஹ்ம்ம்…”

 

“என்ன டிரஸ் எடுத்து வைக்கட்டும்??”

 

“நான் போடுற மாதிரி எடுத்து வைங்க”

 

“பேன்ட் சார்ட் தானே போடுவீங்க. நைட்டுக்கு ஷார்ட்ஸ் வைக்கணுமா இல்லை கைலியா??”

 

“நானே எடுத்து வைச்சுக்கறேன் அம்மா உங்களை கூப்பிடுறாங்க கீழே போங்க” என்று அவன் சொல்ல அவள் முகம் வாடியது.

 

“நான் கோவிச்சுக்கிட்டு எல்லாம் சொல்லலை. கீழ போங்க எனக்கு தேவையானதை நான் எடுத்து வைச்சுட்டு வர்றேன். உங்களோடது எங்கே??”

 

“என்னோடது அங்க கொஞ்சம் டிரஸ் இருக்கு. அதெல்லாம் நாம வரும் போது எடுத்திட்டு வரலாம்…”

 

“ஓகே”

 

இதழினி கீழே வந்து கற்பகத்திற்கு உதவி செய்ய விதுரன் வந்திருந்தான். அங்கேயே காலை உணவை முடித்துக்கொண்டு அவர்கள் இதழினியின் வீட்டிற்கு பயணப்பட்டனர்.

 

இதழினியின் வீட்டில் யாழினியும் அவள் கணவனும் இருந்தார்கள். அவர்களும் ஞாயிறு அன்று தான் ஊருக்கு கிளம்புகிறார்கள் என்பதால் அங்கு தானிருந்தனர்.

 

யாழினி அவளின் சின்ன குழந்தையை அவளின் திருமணத்திற்கு வந்திருந்த மாமியாருடன் அனுப்பிவிட்டிருந்தாள். மூத்தவனை உடன் வைத்துக் கொண்டிருந்தாள்.

 

“இதழ் மாப்பிள்ளையை உள்ள கூட்டிட்டு போ… அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார் வேணி.

Advertisement