Advertisement

11

 

‘அவர் பேசலைன்னா என்ன நான் தான் பேசறேனே. அவரை பேச வைக்க முடியாதா என்னால இதுக்கு முன்னாடி பேசினாரு தானே…’

 

‘இந்த நிமிஷத்துல இருந்து ஒவ்வொரு நிமிஷத்தையும் நான் அனுபவிச்சு வாழப்போறேன். அவரோட இருக்கற அந்த தருணங்களை மறக்க முடியாததா மாத்திக்க போறேன்’ என்று அவளுக்குள் முடிவெடுத்த பிறகு மனதில் ஏறியிருந்த பாரம் விலகியிருந்தது.

 

தெளிவான முகத்துடன் குளித்து வெளியில் வந்தாள். முதல் நாளே அவளுக்கு புரிந்து போனது மற்ற பெண்கள் போல தனக்கு எந்தவொரு சந்தோஷ நிமிடங்களும் அமையாது என்று.

 

மகிழ்ச்சியான தருணங்களை அவள் தான் உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதும் புரிந்தது. விதுரன் இப்போது கட்டிலில் இல்லை அவர்களின் படுக்கையறையை ஒட்டியிருந்த அறையில் எதையோ உருட்டும் சத்தம் கேட்டது.

 

இதழினி தயாராகி அவனிடம் சொல்லாமல் கூட கீழே இறங்கியிருந்தாள். யாழினி எப்போதடா தங்கை வருவாள் என்று ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.

 

“என்னடி இவ்வளவு நேரம்??” என்று கிசுகிசுப்பாய் தங்கையை அழைத்து அவள் கேட்க “கல்யாண அலுப்புக்கா தூங்கிட்டேன்”

 

“அடியேய்…” என்று பல்லைக் கடித்தாள் அவள்.

 

“காபி குடிச்சிட்டியா??”

 

“அதெல்லாம் உன் மாமியார் அப்போவே போட்டு கொடுத்திட்டாங்க… நீ நம்ம வீட்டுல இருக்க மாதிரியே சோம்பேறியா இருக்க. நேரத்துக்கு எழுந்து வந்து அவங்களுக்கு கூடமாட உதவியா இருக்கறதில்லையா. இதுக்கு தான் அம்மா எப்பவும் உன்னை திட்டுறாங்க…” என்று அவள் ஆரம்பிக்க “நான் பார்த்துக்கறேன்க்கா…” என்றுவிட்டு நகர்ந்தாள்.

 

“இதழ்”

 

“என்னக்கா??”

 

“உன் புருஷன் எங்கே??”

 

“மேல கொஞ்சம் வேலையா இருக்காரு இப்போ வந்திடுவாரு…” என்றுவிட்டு மாமியாரை தேடிச் சென்றாள்.

 

வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகள் எல்லாம் சென்னையை சுற்றிப்பார்க்க காலையிலேயே கிளம்பியிருந்தார்கள் போல ஒருவரும் இல்லை. மறுநாள் தான் மறுவீடு என்பதால் அவர்கள் வெளியே சென்றுவிட்டனர்.

 

முதல் நாளே கற்பகம் அவர்கள் உணவருந்தும் போது விதுரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்த விருந்தினர்களுக்கு வேனோ பஸ்ஸோ ஏற்பாடு செய்யும்படி.

 

கற்பகத்தை தேடி இதழினி சமையலறையில் எட்டிப்பார்க்க அவரோ பின்கட்டில் இருந்தார் போலும். வெளியில் வந்து பார்க்க அவர் துளசிக்கு பூஜை செய்துக் கொண்டிருந்தார்.

 

“வாம்மா” என்றார் இவளைப் பார்த்ததும்.

 

அவளும் அவருடன் சேர்ந்துகொள்ள இருவரும் துளசியை வணங்கி உள்ளே வந்தனர்.

 

“இதெல்லாம் செய்வியா உங்க வீட்டில”

 

“இல்லைத்தை நீங்க செய்யறதை பார்த்தேன். அதான் செஞ்சேன், இனிமே செய்வேன் இங்க” என்றாள் அவள்.

 

“குளிச்சு தலைமுழுகிட்டு தான் வரணும் எப்பவும். நான் சொல்றது உனக்கு புரியுது தானே” என்றார் அவர்.

 

“ஹ்ம்ம் புரிஞ்சது அத்தை…”

 

“சரி வந்து காபி குடி. கல்யாண அலுப்பு நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. உங்க அக்கா எழுப்பறேன்னு சொன்னா நான் தான் எழுப்ப வேணாம்ன்னு சொல்லிட்டேன்” என்றார் அவர்.

 

யாழினியும் உள்ளே வந்தாள் அப்போது. “அத்தை அவளை தப்பா நினைக்காதீங்க. வீட்டில கூட இப்படி தான் லேட்டா தான் எழுந்துப்பா அம்மா சத்தம் போட்டுட்டே இருப்பாங்க…”

 

“இனிமே எல்லாம் சரியா செய்வா அத்தை…” என்று தங்கைக்கு பரிந்து வருகிறேன் பேர் வழி என்று அவள் பேரை டேமேஜ் செய்துக் கொண்டிருந்தாள்.

 

கற்பகமோ பேச்சை மாற்றும் பொருட்டு “யாழினி உன் பையனுக்கு ஹார்லிக்ஸ் கொடுப்பியா இல்லை பூஸ்ட்டா”

 

“பூஸ்ட் அத்தை…” என்று சொல்லவும் அதை கலக்கி முதலில் அவள் கையில் கொடுத்து வெளியே அனுப்பினாள்.

 

“சாரி அத்தை…”

 

“எதுக்கும்மா??”

 

“இல்ல நான் ஒரேதா பொறுப்பில்லாத பொண்ணெல்லாம் இல்லை அத்தை…”

“அங்க வீட்டில கொஞ்சம் லேட்டா தான் எழுந்துப்பேன். இங்கயும் அப்படியே எல்லாம் இருக்க மாட்டேன் அத்தை”

 

“நான் தான் உன்னை எதுவும் சொல்லலையே”

 

“நான் எப்படின்னு எங்கம்மாவோ அக்காவோ மத்தவங்களோ சொல்லி நீங்க தெரிஞ்சுக்கறதை விட நானே சொல்லி தெரிஞ்சுக்கறது பெட்டர்ன்னு தோணுச்சு அத்தை. அதான் சொல்றேன்”

 

“நான் இது செய்யலை அது செய்யலைன்னு நீங்க நினைக்க கூடாது. எனக்கு எது எப்படி செய்யணும்ன்னு தெரியாது”

 

“நீங்க இப்படி செய்ன்னு சொன்னா கண்டிப்பா அதை நான் செய்வேன், இனிமே இதை நீ தான் செய்யணும்ன்னு சொன்னாலும் நான் புரிஞ்சுக்குவேன்”

 

“எடுத்து போட்டு செய்ய மாட்டேங்குறாளே நீங்க எப்பவும் சங்கடப்பட்டிட கூடாது. எங்கம்மா அடிக்கடி அப்படித்தான் சொல்வாங்க என்னை…”

 

“நான் அதெல்லாம் அப்போ பெரிசா எடுத்துக்கலை. அவங்க சொன்னா செய்வேன் அப்படி தான் இருந்தேன். நீங்க சொன்னாலும் நான் செய்வேன், முடிஞ்ச வரை எல்லாமே பழகிட்டு நீங்க சொல்ல முன்னாடியே செஞ்சிடுவேன் அத்தை” என்று நீண்ட விளக்கம் கொடுத்தாள் அவள்.

 

“அப்பாடா மழையடிச்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு நீ பேசுறது. நல்லது தான் அவன்கிட்ட பத்து வார்த்தை பேசினா ஒரு வார்த்தை தான் பதில் வரும்”

 

“உன்கிட்ட ஒரு வார்த்தைக்கு நூறு வார்த்தை பதில் வரும் போலேயே. பொம்பளைபிள்ளைங்க வீட்டில இருந்தா வீடே நிறைஞ்சு தான் போகுதும்மா…”

 

“அத்தை என்னை கிண்டல் பண்றீங்களா??”

 

“புரிஞ்சிடுச்சா உனக்கு…” என்று சத்தமில்லாமல் சிரித்தவர் “வந்த முதல் நாளே நீ இவ்வளவு விளக்கம் எனக்கு கொடுக்கணும்ன்னு அவசியமில்லை. ஆனாலும் நீ வெளிப்படையா பேசினது எனக்கு பிடிச்சிருக்கு”

 

“எனக்கு பிறகு இந்த குடும்பத்துக்கு நீ தான் எல்லாமா இருக்கணும். சீக்கிரம் அதெல்லாம் நீ கத்துக்குவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”

 

“தேங்க்ஸ் அத்தை…”

 

“எனக்கெதுக்கு அதெல்லாம், நீயே வைச்சுக்கோ… ஆமா விதுரன் எங்கே??”


“அவங்க ஏதோ வேலையா இருக்காங்க…”

 

“அவன் டிபன் சாப்பிட்டு தான் காபி குடிப்பான். நீ எப்படி??”

 

“எனக்கு அது இதுன்னு இல்லை, எல்லாத்துக்குமே அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன் அத்தை…”

 

“அப்போ நீ அவனோட சேர்ந்து சாப்பிடு அப்புறம் காபி குடி…”


“அத்தை மத்த எல்லாரும் சாப்பிட்டாச்சா, சொந்தகாரங்க எல்லாம் சுத்திப்பார்க்க போறதா சொன்னீங்களே”

 

“ஆமாம்மா கிளம்பிட்டாங்க அவங்க கிளம்பிட்டாங்க…”

 

“தோசை எதுவும் சுடணுமா??”

 

“இன்னைக்கு சாப்பாடு எல்லாம் வெளிய இருந்து தான் நாம எதுவும் செய்ய வேண்டியதில்லை” என்றார் அவர்.

 

“நீ போய் அவனை கூட்டிட்டு வா” என்று சொல்ல அவள் மேலே செல்லும் அவசியமின்றி அவளை முறைத்தவாறே இறங்கி வந்துக் கொண்டிருந்தான் விதுரன்.

 

அதையெல்லாம் தட்டி தூர எறிந்தவள் “அத்தை அவங்க வந்திட்டாங்க” என்றவாறே சமையலறை நுழைய ‘இவ என்ன ரொம்ப கேசுவலா போறா’ என்று தான் பார்த்தான் அவளை.

 

“ஏன்டா அவ கிளம்பி கீழே வர்றா உனக்கென்ன ஆள் அனுப்பணுமா கீழ வரச்சொல்லி…” என்று கற்பகம் சொல்ல இன்னமும் முறைத்தான் அவன் இதழினியை.

 

‘ஹைய் ஜாலி அத்தை திட்டுறாங்களே இவங்களை. இப்படின்னு தெரிஞ்சு இருந்தா எக்ஸ்ட்ரா நிறைய பிட்டு போட்டிருக்கலாமே அத்தைக்கிட்ட’ என்று சந்தோசப்பட்டாள் இதழினி.

 

“இதழ் நீயும் அவனோட உட்கார்ந்து சாப்பிடு. எல்லாமே டேபிள்ள இருக்கு என்ன வேணுமோ போட்டுக்கிட்டு சாப்பிடுங்க. நான் உங்கக்கா கூட பேசிக்கிட்டு இருக்கேன்” என்று நகர்ந்துவிட்டார் அவர்.

 

‘இவருக்கு நான் சாப்பாடு வைக்கணுமா’ என்று அவள் ஸ்டன்னாகி நிற்க நடந்த கதையே வேறு. விதுரன் இருவருக்கும் இலை வைத்து அவனே பரிமாற ஆரம்பிக்க “நான் வைக்கிறேன்” என்று இடைபுகுந்தாள் அவன் மனைவி.

 

“இப்போவாச்சும் கேட்கணும்ன்னு தோணிச்சே” என்றவன் அமைதியாக இருந்துக்கொள்ள அவளே அவனுக்கு பரிமாறினாள்.

 

பின் அவனருகே அமர்ந்துக்கொண்டு பார்க்க “என்னை எதுக்கு பார்க்கறீங்க?? நீங்களும் சாப்பிடுங்க” என்று அவன் சொல்லவும் தான் தனக்கு வேண்டியதை வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

அவன் அவளுக்கு தேவையானதை நகர்த்தி தனக்கு வைத்துக் கொள்வது போல அவளுக்கும் வைத்து என்று அவன் செய்ததை அவள் உணரவில்லை.

 

அவன் சாப்பிட்டு இலையை எடுக்கப் போக “நான் எடுக்கறேன், நீங்க எடுக்க வேண்டாம்”

 

அவன் அவள் பேச்சை விடுத்து அதை எடுக்கப் போக “ப்ளீஸ் சொன்னா கேளுங்க…” என்று அவள் சொல்ல ‘எதுக்காக’ என்ற பார்வை பார்த்து நின்றான் அவன்.

 

அவள் பதிலொன்றும் சொல்லாமல் இருவருடையதும் எடுத்துக்கொண்டு சென்றாள். யாழினி காலை உணவிற்கு பின் தயாராகி இருக்க அவளின் கணவன் தேவராஜ் வந்திருக்க அவர்கள் இருவருமாய் மறுநாள் விருந்துக்கு அவர்களை அழைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.

 

“நீ இங்க என்னம்மா பண்றே?? மேலே போய் ரெஸ்ட் எடு, உன்னோட டிரஸ் எல்லாம் அடுக்கணும்ன்னா அடுக்கி வை…”

 

“எப்போமே இப்படி தான் இருக்குமா அத்தை”

 

“நீ என்ன கேட்கறே??”

 

“எல்லாரும் கிளம்பி வெளிய போய்ட்டா வீடு இப்படி வெறிச்சுன்னு தான் இருக்குமா”

 

“அப்படித்தான் இருக்கும்…”

 

“போரடிக்காதா உங்களுக்கு”

 

“அதான் இனிமே நீ வந்திட்டியே”

 

“நானும் பத்து நாள்ல வேலைக்கு போக ஆரம்பிச்சிடுவேன்ல அத்தை”

“அதுவரைக்கும் நீ இருப்பல்ல”

 

“அதுக்கு அப்புறம் என்ன செய்வீங்க??”

 

“விதுரன் எப்போ வீட்டுக்கு வருவான்னு யோசிப்பேன். திருநா சாயங்காலம் வீட்டுக்கு வந்தா என்ன செஞ்சு கொடுக்கலாம்ன்னு யோசிப்பேன். இனிமே நீ வீட்டுக்கு வந்தா உனக்கு என்ன செஞ்சு கொடுக்கணும்ன்னு நினைப்பேன்”

 

“அத்தை… என்ன இது எப்பவும் சாப்பாடு தானா”

 

“எனக்கு அதை தவிர வேற என்ன தெரியும் சொல்லு”

 

“மாமா எப்போ வருவாங்க??”

 

“அவங்க தோணும் போது வேலைக்கு போவாங்க… எப்போன்னு தெரியாது…” என்று அவர் கவலை தோய்ந்த குரலில் சொல்லும் போது தேவையில்லாத கேள்வியை கேட்டுவிட்டோம் என்று புரிந்தது அவளுக்கு.

 

“சரி நீ மேல போ விது இருப்பான்…”

 

“நீங்க என்ன பண்ணுவீங்க??”

 

“நீ வர்றதுக்கு முன்னாடி நான் என்ன பண்ணிட்டு இருந்தேனோ அதே தான் பண்ணுவேன்…” என்ற அவர் பதில் அவளுக்கு முகத்தில் அறைந்தது போலிருந்தது.

 

நம்ம அம்மா கூட இப்படித்தானே இருந்திருப்பாங்க என்ற எண்ணத்தை தான் அது அவளுக்குள் விதைத்தது. தங்களுக்காக யோசித்து தங்களுக்காகவே நடமாடும் அந்த உயிருள்ள ஜீவன்களுக்கு தகுந்த மரியாதையை செய்ய தவறுகிறோம் என்று புரிந்தது அவளுக்கு.

 

“என்ன யோசிச்சுட்டே நிக்கறே??”

 

“எங்கம்மாவும் இப்படித்தானேன்னு யோசிச்சேன் அத்தை” என்றாள் மறையாமல்.

 

“நாளைக்கு உனக்கும் இப்படித்தான் இருக்கும்”

 

“உங்களுக்கே அப்படி இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன். நீங்க எனக்கும் அதான்னு சொல்றீங்க. சீக்கிரம் இதுக்கு ஒரு வழி கண்டுப்பிடிக்கறேன்”

 

“சரி சரி பொறுமையா கண்டுப்பிடி. இப்போ மேலே போ” என்று அவளை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார் அவர்.

 

“ஹ்ம்ம் போறேன் அத்தை…” என்று அவள் நகர “மருமகளே மன்னிச்சுடும்மா, மன்னிச்சுடு…” என்றவாறே தள்ளாடிக்கொண்டு வந்தார் சதாசிவம்.

 

மருமகளின் முன்னேயே அப்படி வந்து நின்றவரை பார்த்து கற்பகம் கூனிக்குறுகி போனார். இதழினியோ என்ன செய்வது என்பது போல பார்த்தாள்.

 

“நீ… நீ மேலே போம்மா…” என்றார் கற்பகம் அடக்கி வைத்த அழுகுரலில்.

 

சதாசிவமோ கீழே விழாத குறையாக தள்ளாடி வர கீழே சத்தம் கேட்டு வேகமாய் இறங்கி வந்திருந்தான் விதுரன். தன் தந்தையை பார்த்து அவன் முறைக்க பதிலுக்கு அவர் தன் மகனை முறைத்திருந்தார்.

 

“இங்க எதுக்கு நீங்க நிக்கறீங்க மேலே போங்க” என்றான் அவளைப் பார்த்து அடிக்குரலில்.

 

அந்த குரலில் அவள் மேலே போக “மருமகளை எதுக்குடா போகச் சொல்றே?? நீ போடா வெளிய போடா… என்னைய வீட்டை விட்டு போகச் சொன்ன நீ போடா… இது என் வீடு, நீ போடா…” என்று அவர் பேச விக்கித்து நின்றிருந்தாள் இதழினி.

“யாரு இவர்க்கு காசு கொடுத்தது” என்றான் அன்னையை பார்த்து.

 

“நான் கொடுக்கலை…”

 

“எவன்டா எனக்கு காசு கொடுக்கறது, என் காசுடா நான் சம்பாதிச்சது எவன்கிட்டயும் நான் போய் நிக்க வேண்டியதில்லை…” என்று அவர் குழறிக் கொண்டிருந்தார்.

 

விதுரன் அவரிடம் பேச்சை வளர்த்தவில்லை அவரை இழுத்துக்கொண்டு அறையில் விட்டு சில பல நிமிடங்கள் கழித்து வந்திருந்தான்.

 

“அவரை வெளிய விடாதீங்கன்னு சொன்னேன்ல” என்று அன்னையை கடிந்தான்.

 

“நான் என்ன செய்வேன் விதுரா வீட்டில வந்திருக்கவங்களை கவனிப்பனா இல்லை இவரையா…” என்றார் கண்ணீருடன்.

 

“எதுக்கு இப்போ அழறீங்க நீங்க. அதுக்கெல்லாம் இவர் வொர்த்தே இல்லை, பேசாம போய் ரெஸ்ட் எடுங்க… உங்களுக்கும் அலைச்சல் தானே… ஆமா திருநா எங்கே??”

 

“அவன் இன்னைக்கு வேலைக்கு கிளம்பிட்டான் விதுரா…”

 

“ஓ சரிம்மா நான் மேலே போறேன்” என்றுவிட்டு அவன் படியேற இதழினி பாதி படியிலேயே நின்றிருந்தாள்.

 

“உள்ள வாங்க…” என்றவன் அவள் கையை பிடித்து உள்ளே அழைத்து கட்டிலில் அமர வைத்தான். “எதையும் யோசிச்சு குழம்பிக்காம படுத்து தூங்குங்க…” என்று சொல்ல அவள் ஒருக்களித்து படுத்துக் கொண்டாள். மறுபுறம் சுற்றி வந்தவன் தானும் கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டவனின் கரம் இதழினியின் இடையில் அழுத்தமாய் விழுந்திருந்தது.

Advertisement