Advertisement

 

10

நிச்சயம் முடிந்ததும் ரிசப்ஷன் வைத்திருந்தனர். சைலேஷ் விதுரனின் அருகிலேயே நின்றிருந்தான் அவனுக்கு துணையாய்.

 

விதுரன் மற்றவகளிடம் சிரித்தானே தவிர இதழினியிடம் கொஞ்சம் கூட சிரிப்பை காட்டவில்லை. ‘காட்டுங்க காட்டுங்க எல்லாருக்கும் ஈன்னு பல்லைக் காட்டுங்க யாரு வேணாம்ன்னு சொன்னது, கடைசில என்கிட்ட தானே நீங்க வரணும்’ என்ற பொருமல் தான் அவளுக்கு.

 

“விது…” என்று காதைக் கடித்தான் சைலேஷ்.

 

“என்னடா??”

 

“அங்க ஒரே பர்னிங் ஸ்டொமக்டா”

 

“எங்கடா??”

 

“உன் பொண்டாட்டியை பாருடா” என்று அவன் சொல்ல நண்பனைத் தான் முறைத்தான் அவன்.

 

“நீ எதுக்கு முறைக்கிறே இப்போ??”

 

“அவ இப்போ என் பொண்டாட்டியா??”

 

“டேய் இதென்னடா வம்பா போச்சு. நாளைக்கு நீ அவ கழுத்துல தாலி கட்டின பிறகு அந்த முறை தானேடா”

 

“அதை நாளைக்கு தாலி கட்டி முடிச்ச பிறகு சொல்லு இப்போவே சொல்லாத…”

 

‘இவன் லூசா நம்ம லூசா… ஏன்பா நாம சரியா தானே பேசுனோம்…’ என்று மனசாட்சியுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான் அவன்.

 

“எதுக்கு என்னை பார்க்கறே??” என்று திரும்பாலே கேட்டான் விதுரன்.

 

“பார்த்தா என்ன பண்ணுவீங்களாம்!!” என்றுவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டாள் இதழினி.

 

அவளின் பதிலில் திரும்பி அவளைப் பார்த்தான். அவன் பார்வையே அவளுக்கு நடுக்கம் வருவது போல இருந்தது. ஒருவழியாக ரிசப்ஷன் முடிந்து உணவருந்த சென்றனர்.

 

சைலேஷின் மனைவி பாரதியும் வந்திருந்தாள் குழந்தையுடன். “என்ன சீனியர்… நீங்க என்னை உங்க கல்யாணத்துக்கு கூப்பிடலைன்னாலும் நான் கூப்பிட்டேன் பார்த்தீங்களா… அவ்வளவு தான் நாம பழகின பழக்கமா சொல்லுங்க… இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் நீங்க என்னை மறந்திருக்கக்கூடாது” என்றாள் இதழினி அப்போதும் விடாமல்.

 

“ஏன்டி இம்சை பண்ணுறே என்னை. ஸ்கூல்ல தான் மார்ச்பாஸ்ட் ஒழுங்கா பண்ணாம என்னை கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணுவே. இப்போவுமா முடியலைடி என்னால” என்று வெளிப்படையாகவே புலம்பினாள் பாரதி.

 

‘ஏதே நம்ம பொண்டாட்டியையும் ஒரு ஆள் கதறவிடுறாங்களா. எம்மாடி இதழினி இனிமே நீ என் இன்ஸ்டன்ட் தங்கச்சி இல்லைம்மா… நீ தான் இனிமே என் குலசாமி…’ என்று அவன் மனதிற்குள் பேசிக்கொள்ள பின்னாலேயே ‘என் தங்கை… என் தங்கை…’ என்று பேக்ரவுண்ட் மியூசிக் வேறு ஓடியது.

 

ஒரு வழியாய் அவர்கள் உணவருந்தி முடித்து கை கழுவி வந்தனர். அவர்கள் வரும் வேளை மகிழ் அவர்களுக்கு முன்னே கை கழுவி அவர்களை கடந்து சென்றாள் வேகமாய். விதுரன் திரும்பி தன் தம்பி இருந்த திசையை நோக்கினான்.

 

அவனும் பார்த்துக் கொண்டு தானிருக்கிறான் திருநாவுக்கரசு வந்ததில் இருந்து மகிழினியை பார்த்து ஜொள்ளுவிடுவதை. வந்த இடத்தில் ரசாபாசம் வேண்டாம் என்று எதுவும் சொல்லாமல் அவன் அமைதியாயிருக்க இதோ தப்பித்தோம் பிழைத்தோம் என்பது போல மகிழினி ஓடுவதை பார்த்து அவனுக்கு கோபம் வந்தது.

 

இதழினியுடன் மகிழும் இருவரின் தமக்கையுமான யாழினியும் தான் உணவருந்த அமர்ந்திருந்தனர். திருநாவுக்கரசு அவர்களுக்கு எதிர் வரிசையில் தன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான்.

 

அவனின் செயலில் தான் அவள் அங்கிருந்து கிளம்பியிருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. பின்னாலேயே செல்லப் போன தன் தம்பியை “திருநா…”

என்றழைத்தான்.

 

“ண்ணா” என்றவாறே அந்த இடத்திலேயே தேங்கினான் அவன்.

 

“என்ன பண்ணிட்டு இருக்க நீ??”

 

“இப்போ தான் பிரண்ட்ஸ் கூட சாப்பிட்டு கிளம்பறேன்ண்ணா”

 

“நான் அதை கேட்கலை”

 

‘வேற எதை கேட்கிறார்ன்னு புரியலையே, என்னன்னு சொன்னாலும் பரவாயில்லை இப்படி அய்யனார் சாமி மாதிரி முறைச்சா நான் என்ன பண்ண’ என்று மனதோடு புலம்பினான் அவன்.

 

“நானும் வந்ததுல இருந்து பார்த்திட்டு தான் இருக்கேன் நீ என்ன பண்ணிட்டு இருந்தேன்னு. இதெல்லாம் நல்லாவா இருக்கு திருநா… நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கலை…”

 

“ஒரு பொண்ணுக்கு நாம பாதுக்காப்பு கொடுக்கலைன்னா கூட பரவாயில்லை. பயந்து ஓட வைக்க கூடாது அது கூட உனக்கு புரியலையா திருநா… மகிழ் எப்போடா சாப்பிட்டு முடிப்போம்ன்னு எழுந்து போறா…”

 

“நிம்மதியா ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியாம செஞ்சிருக்கே. இது உனக்கு சரின்னு தோணுதா சொல்லு… உனக்கு பிடிச்சிருந்தா அதை வேற மாதிரி தான் பேசணும். இப்படி தொல்லை கொடுக்க கூடாது… உனக்கு நான் அதிகம் சொல்லணும்ன்னு அவசியமில்லை புரிஞ்சு நடந்துக்கோ”

 

“இனி ஒரு தரம் இப்படி நடந்தா அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்லை திருநா…” என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து நகர தன் தவறை புரிந்துக் கொண்டான் அவன் தம்பி.

 

அவனுமே பார்த்திருந்தான் மகிழ் பெரும்பாலும் அவன் இருக்கும் இடத்தில் இருப்பதில்லை. முதலில் வெட்கமாக இருக்குமோ என்று தான் எண்ணியிருந்தான். சாப்பிட்டு அவள் எழுந்து ஓடவும் தான் அவளிடம் பேசலாம் என்று நினைத்தான்.

 

விதுரன் சொல்லவும் அவன் மீதிருந்த தவறு புரிய அதற்கு மேல் அவளை தொந்திரவு செய்ய அவிரும்பவில்லை. அது முதல் அவன் பார்வை மகிழினியின் புறம் எக்காரணம் கொண்டும் திரும்பவேயில்லை.

 

மறுநாள் காலையில் சுப முகூர்த்த வேளையில் விதுரன் இதழினியை தன் மனையாளாக்கியிருந்தான். அவளை அணைத்தவாறே அவளின் நெற்றி பொட்டில் குங்குமமிட அவள் பார்வை அவனையே நோக்கிக் கொண்டிருந்தது.

 

அவன் அதையெல்லாம் கவனிக்கவேயில்லை. இதோ அக்னியை வலம் வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மெட்டி அணிவித்து அனைத்து சடங்குகளும் முடிந்து விதுரனின் வீட்டிற்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தாள் இதழினி.

 

ஒருவித பரபரப்பு ஆட்கொண்டிருந்தது அவளை. விதுரனின் அருகில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு மறுபுறம் யாழினி இருந்தாள்.

 

விதுரனின் வீட்டை அவள் பார்த்திருக்கிறாள் வெளியில் இருந்து. ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும் போது யாருக்கும் தெரியாமல் ஆட்டோவில் இருந்தவாறே அவன் வீட்டை பார்த்து சென்றிருந்தாள்.

 

இதோ இன்னும் சில நிமிடங்களில் அந்த வீட்டில் கால் பதிக்கப் போகிறாள். அவனுக்கு அருகில் அமர்ந்திருப்பது அவளுக்கு தான் என்னென்னவோ மாற்றங்களை கொடுத்தது.

 

அவனுக்கு அப்படி எந்த உணர்வும் இருப்பது போல தெரியவில்லை. வெறும் பார்வைக்காய் கூட அவளை திரும்பி பார்க்கவில்லை அவன்.

 

யாழினி ஏதேதோ பேசிக்கொண்டு வந்தாள். அதற்கு தலையை ஆட்டியும் ஆட்டாமலும் என்று பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

விதுரனின் வீடும் வந்து விட இருவருக்கும் ஆலம் சுற்றி வரவேற்றனர்.

 

யாழினி தான் துணையிருந்தாள் தங்கைக்கு. இதழினிக்கோ மகிழை அழைத்து வந்திருக்கலாம் என்று தோன்றியது. அந்த அளவிற்கு பேசி பேசி கொன்றிருந்தாள் அவளின் தமக்கை.

 

அவள் ஆயிரம் அறிவுரைகள் சொல்லி அன்று இரவு தங்கையை விதுரனின் அறைக்கு அனுப்பி வைத்தாள். விதுரனின் வீடு அவர்களின் வீட்டை விட சற்று பெரிது.

 

கீழே ஒரு பெரிய ஹால், அதிலிருந்து நேரே உள்ளே சென்றால் சமையலறை அதையடுத்து பின்வாசல் வந்தது. ஹாலின் வலது புறத்தின் ஒரு கோடியில் ஒரு படுக்கையறையும் மறுகோடியில் ஒரு படுக்கையறையும் இருந்தது.

 

இரு படுக்கையறைக்கும் இடையில் இருந்த பகுதியில் படியொன்று மேலேறியது. அங்கு தான் விதுரனின் அறை இருந்தது.

 

மகிழினியும் அவளும் இருந்த அறையை விட அது சற்றே பெரிதாகவே இருந்தது. அறை நன்றாக அலங்கரிப்பட்டிருந்தது.

 

முதலிரவு அறைக்குள் அவள் தான் முதலில் வந்து அமர்ந்திருந்தாள். ‘ஆமா எல்லா படத்துலயும் புருஷன் தானே வந்து வெயிட் பண்ணுவாங்க. இதென்ன நம்ம கதையில எல்லாமே உல்டாவா நடக்குது’

 

‘அப்போ அவரு பாலு எடுத்திட்டு வருவாரா. என் கால்ல எல்லாம் விழுவாரா’ என்று எண்ணிக்கொண்டே தன் கற்பனையை அவள் ஓட்டிப் பார்க்க கொஞ்சம் இதமாக தானிருந்தது அவள் மனநிலைக்கு. அவள் கவனிக்கவில்லை பால் அங்கிருந்த பிளாஸ்கில் ஊற்றப்பட்டு வைத்திருந்ததை.

 

திருமண வேலைகள் ஆரம்பித்ததில் இருந்தே ஒரே அலைச்சல் தான் அவளுக்கு. அவளின் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க அவளும் மகிழும் தான் அலைந்திருந்தனர்.

 

அவளுக்கு தேவையானதை வாங்க அடுக்க என்று அவர்கள் இருவர் மட்டுமே அந்த வேலையை பகிர்ந்திருந்தனர். இத்தனைக்கும் யாழினியும் அங்கு தானிருந்தாள்.

 

தங்கைக்கு திருமணம் என்றதுமே அங்கு வந்திருந்தாள் அவள். யாழினி அங்கு வந்தால் ஒரு துரும்பை கூட கிள்ளி வைக்க மாட்டாள். “அங்க தான் நான் வேலை பார்க்கறேன். இங்க நான் வர்றதே ரெஸ்ட் எடுக்கத்தான் என்னை ப்ரீயா விடுங்க” என்று தான் சொல்வாள்.

 

அவளுக்கு இரண்டுமே ஆண் மக்கள். மூத்தவன் பிறந்த போது அங்கு மூன்று மாதம் வரை இருந்தான். அதற்கு பிறகு பெரும்பாலும் அவனை அங்கு அழைத்து வந்ததில்லை அவள்.

 

அவனை அவளின் மாமியாரிடமே விட்டு வந்துவிடுவாள். குழந்தைக்கு அம்மா அப்பா தவிர அதிக செல்லம் என்றால் யாழினியின் மாமியார் தான். பாட்டியுடன் தான் தங்கிக்கொள்வான் அவன்.

 

அந்த வீட்டிற்கு அவன் தான் முதல் ஆண் வாரிசும் கூட, அதனால் அவளின் மாமியாரும் கூட குழந்தையை தன்னுடனே வைத்துக்கொள்வார் பெரும்பாலும்.

 

இரண்டாவது குழந்தை கூட தன் அம்மா வீட்டில் தான் வந்து பெற்றுக்கொண்டாள் என்றாலும் இரண்டே மாதத்தில் கிளம்பிவிட்டாள். கேட்டால் இங்கு விட என் மாமியார் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என்பாள்.

 

அப்படியிருப்பவள் தங்கை திருமணத்திற்கு என்ன வேலை செய்துவிடுவாள். அதனாலேயே அவளிடம் எந்த வேலையும் எதிர்பார்க்க மாட்டார்கள் வீட்டினர். மகிழும் இதழும் ஒன்றுமே கேட்க மாட்டார்கள் அவளிடத்தில்.

 

இதழினி நேரத்தை பார்க்க அவள் வந்து அரைமணி நேரம் ஓடியிருந்ததை கண்டாள். இதழினிக்கு கண்ணை சுழற்றிக் கொண்டு வந்தது. ‘இவர் வந்து மட்டும் என்ன நடந்திட போகுது. பேசாம நாம தூங்குவோமே’ என்று எண்ணம் ஓட அப்படியே படுக்கையில் அவள் சாயப்போகும் தருணம் கதவைத் திறந்துக்கொண்டு விதுரன் வந்தான்.

கையில் பால் சொம்பு இல்லை. அவன் வரவும் அவள் எட்டி அதைத்தான் பார்த்திருந்தாள். அவனோ வந்ததும் டேபிளின் மீதிருந்த பிளாஸ்கை திறந்து அருகே வைத்திருந்த வெள்ளி தம்ளரில் பாலை ஊற்றி கட்டிலில் அமர்ந்தவாறே பருகினான்.

 

‘அடக்கடவுளே இதை நாம பார்க்கலையே. ஆமா இதெல்லாம் நாம தானே ஊத்திக் கொடுக்கணும். ச்சே ச்சே இதழ் நீ சினிமா ரொம்ப பார்க்குற. மாதவி தான் சொன்னாலே பர்ஸ்ட் நைட்ல என்ன நடக்கும்ன்னு. அவ சொன்னதுல இந்த சீன்லாம் வரலையே’

 

‘ஆனா அவளுக்கு லவ் மேரேஜ் ஆச்சே. ஒரே மஜாவா தானே அவ இருந்தா. ஒரு மாசத்துக்கு புது பொண்ணாட்டமா வந்து ஆபீசை ஒரு கலக்கு கலக்குனா. நமக்கு எங்க அந்த கொடுப்பினை எல்லாம்’ என்று பெருமூச்சுவிட்டவள் படுக்க போக “பால் இருக்கே குடிக்கலையா நீங்க??” என்ற விதுரனின் குரலில் திரும்பி அவன் புறம் பார்த்தாள்.

 

“என்கிட்டயா சொன்னீங்க??”

 

“இங்க நம்மளை தவிர வேற யாரும் இருக்காங்களா??”

 

“இல்லை வந்து…”

 

“பாலை குடிங்க அதை வேஸ்ட் பண்ணாதீங்க…”

 

“ஹ்ம்ம்” என்றவள் அவன் குடித்து வைத்திருந்த அதே கிளாசில் பாலை ஊற்றிக் கொண்டாள். அவள் அருந்தி முடிந்து “இன்னும் மிச்சமிருக்கே என்ன செய்ய” என்று அவனை கேட்க “பிளாஸ்க்ல தானே இருக்கு ஒண்ணும் கெட்டுப் போகாது” என்றான் அவன்.

 

‘அடப்பாவி மனுஷா கொஞ்ச நேரம் முன்னாடி பாலை வேஸ்ட் பண்ணாதேன்னு டயலாக் விட்டுட்டு இப்போ என்ன புது கதை சொல்றார்… ஆனாலும் இதழு இந்த மனுஷனை உனக்கு பிடிக்க ஆரம்பிச்சதுல இருந்து உன் மைன்ட் சரியா வேலை செய்யறதில்லைடி. இதெல்லாம் நல்லதுக்கில்லை போ’ என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.

 

“இன்னும் என்ன யோசனை உங்களுக்கு. வந்து படுக்க வேண்டியது தானே”

 

“இல்லை பாலை குடிச்சிட்டு உடனே படுக்ககூடாதுன்னு அம்மா சொல்வாங்க… அதான்…” என்று அவள் இழுக்க விதுரன் அவள் கரம் பற்றி தன் புறம் இழுத்திருந்தான்.

 

அதை எதிர்பார்க்காததால் தடுமாறியவள் கீழே விழப்போக அவளை அணைத்திருந்தான் விதுரன். சின்னச்சின்ன சீண்டல்கள், கொஞ்சல்கள் என்று எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவர்களின் இல்லறம் அரங்கேறியது அங்கு.

 

காலையில் எப்போதும் போல் உறங்கிக் கொண்டிருந்தாள் இதழினி. அன்னை எழுப்புவார் என்ற எண்ணத்திலேயே அவள் புரண்டு படுத்திருக்க அவளின் அலைபுறுதல் புரியாதவனாய் விதுரன் அவளை தான் பார்த்திருந்தான்.

 

‘கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ’ என்று வேறு அவன் மனசாட்சி குத்த கட்டிலில் வந்து அமர்ந்தான். அவளை எழுப்பலாமா வேண்டாமா என்ற எண்ணம் எழ இறுதியில் எழுப்புவது என்று முடிவுக்கு வந்து அவள் தோளைத் தொட்டு உலுக்க “அம்மா என்னம்மா சத்தமே போடலை… என்னாச்சு உங்களுக்கு” என்றாள் படுக்கையில் இருந்தவாறே.

 

‘சரியா போச்சு இவ அம்மா வீட்டில இருக்கறதா நினைச்சுட்டு இருக்கா போல’ என்று எண்ணியவன் “ஏங்க எழுந்திருங்க” என்றான் சத்தம் கொடுத்து. அந்த குரலில் அடித்து பிடித்து வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தமர்ந்தவளைக் கண்டு லேசாய் சிரிப்பு வந்தது அவனுக்கு. அதை அவளுக்கு காட்டாது மறைத்தவன் “கீழே போகணும், சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க” என்றுவிட்டு போனை எடுத்து கையில் வைத்து எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

 

இதழினி மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறை புகுந்திருந்தாள். இரவில் நடந்ததை இப்போது நினைத்தாலும் அவளால் நம்ப முடியவில்லை.

 

விதுரன் அவளை கொஞ்சியிருக்கவில்லை என்றாலும் அவளை மென்மையாகவே கையாண்டிருந்தான். அவளுக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியவில்லை.

 

அவளுக்கு அவன் மேல் விருப்பம் இருப்பது போல் அவனுக்கும் அவள் மேல் விருப்பம் இருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது.

 

முதல் முறை திருமணம் உறுதி செய்து அவள் அவனிடத்தில் பேசியிருந்தாள். ஆனால் அந்த பேச்சுவார்த்தை நின்று மீண்டும் ஆரம்பித்த பிறகு அவனிடத்தில் பேசவே அவளுக்கு தயக்கமாக இருந்தது.

 

விதுரன் என்ன நினைப்பானோ என்ன சொல்வானோ திருமணம் வேண்டாம் என்றிடுவானோ என்ற அச்சம் இருந்ததால் அவள் பேசியிருக்கவில்லை.

 

இப்படி அவர்களுக்குள் உறவு ஆரம்பிக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஒரு புறம் அவன் தன்னை ஒதுக்கி வைக்கவில்லை என்று தோன்றினாலும் மறுபுறமோ அவன் விரும்பியும் ஏற்கவில்லையோ என்றும் தோன்ற உள்ளே பாரமாய் அழுந்தியது.

 

எப்படி இருந்தா என்ன எனக்கு அவரை பிடிச்சிருக்கு நான் அவரை விரும்பறேன். அவருக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் அவர் மேல வைச்சிருக்க என்னோட பிடித்தம் எப்பவும் மாறாது…

Advertisement