Advertisement

அலாதிநேசம்!

12

மிர்த்திக்கா, கிட்செனில் சென்று நின்றுக் கொண்டாள். ஏதும் புரியவில்லை.. அவன் எதுக்கு வந்தான்.. எப்படி வந்தான்.. ஏன் வந்தான் என ஆயிரம் கேள்விகள்.. கோவங்கள். ஆனால், மனதில் எதோ ஒரு ஓரத்தில் அவனின் வரவு.. சொல்ல முடியாத ஒரு அர்த்தத்தை.. இத்தனைநாள் காத்திருப்பின் பலனும்.. தன் காதலின் அர்த்தமாக உணர்ந்தாள் பெண். ஆனாலும் அவன் மேல் அளவில் சொல்ல முடியாத கோவம். ஆக, இந்த பெரிய பெரிய உணர்வுகளுக்கு இடையில் போராடினாள். பால் சிந்த சிந்த பாத்திரத்தில் வார்த்து.. அடுப்பில் வைத்தாள்.

ஒவ்வொரு அறையாக சுற்றி பார்த்துவிட்டு.. கிட்சென் வந்தான் யோகி. அடுப்பை பார்த்து திரும்பி அப்படியே அசையாமல் நின்றுக் கொண்டிருப்பவளை உற்று பார்த்தான் உரிமையாக யோகி. 

நீண்ட வருடங்கள் ஆகிற்றே காய்ந்திருந்த கண்களில் நிரப்பிக் கொண்டான் அவளை.. எதோ மாடல் போல மெலிந்திருந்தாள்.. அவளின் பப்ளி தோற்றம் காணவில்லை என உணர்ந்தான். உயரமாக தெரிந்தாள் முன்பைவிட.. ‘நான்தான் கோவப்படனும்.. இவ ஏன் கோவமாக இருக்கா.. அப்போவிட இப்போது திமிர் ஜாஸ்த்தியா போச்சு’ என எண்ணிக் கொண்டே அவளின் அருகில் நெருங்கினான்.

பெண்ணவளுக்கு.. யோகி அருகே வருவதை உணர முடிகிறது.. கண்மூடி திறப்பதற்குள்.. தனக்கு பின்னால் நிற்கிறான் என புரிய சற்று தள்ளிக் கொண்டு,  அவனை பார்த்து திரும்பினாள்.. பதட்டமாக அவனின் மிர்த்திக்கா “அ..அங்க போய்.. ஹாலில் உட்காருங்க..” என்றாள், முகத்தில் அத்தனை பதட்டம்.. அவளின் அவசரமான விலகலும்..  எதோ போலிருக்க, யோகி சற்று தள்ளி நின்றானே தவிர வெளியே செல்லவில்லை.

மிர்த்திக்கா, அவன் பாதத்தையே பார்த்திருந்தாள்.. அவன் வெளியே செல்லவில்லை என்பதை உணர்ந்தவள்.. திரும்பி, காபி கலக்க தொடங்கினாள். 

யோகிக்கு அவளின் அமைதி பிடிக்கவில்லை.. எப்படி பேசுவாள்.. எத்தனை ரகசியங்கள் எங்களுக்குள்.. எப்படி இப்படி அமைதியாக இருக்க முடிகிறது.. என எண்ணியவன் கோவமும் ரகசியமும் கலந்த நிலையில் “கண்டுபிடிக்க மாட்டேன்னு நினைச்சியா..” என்றான்.

மிர்த்தி அமைதியாகவே இருந்தாள்.

யோகி “இனியும் தப்பிக்க முடியாது.. பேசு” என்றவன், இமைக்கும் நொடியில்.. அவளின் அருகில் நெருங்கி.. அவளை நடுவில் நிறுத்தி தன் கைகளின் இருபுறமும் அனைகட்டியபடியே அவளின் கழுத்து வளைவில் தன்னை பட்டும் படாமல் உரசிக் கொண்டு.. அவளின் வாசம் பிடித்தான்.. பிரிவின் தாபம் இருவருக்குள்ளும். என்ன மனநிலையில் இருவரும் இருந்தனர் என ஒரு நொடி மறந்தேவிட்டனர் பழைய காதலர்கள்.

மிர்த்தி தன் கையில் இடுக்கியில் பிடித்திருந்த பாத்திரம் நழுவவும்.. தட்டென்ற சத்தத்துடன் பாத்திரம் அந்த மேடையில் பாலை சிந்திக் கொண்டே நிற்கவும்.. இருவரும் சுதாரித்தனர்.

மிர்த்திக்கா அவனின் கையை பட்டென்று தட்டி விட்டுக் கொண்டு.. தள்ளி நின்றாள். 

யோகி அலட்டிக் கொள்ளாமல் பின்னால் இரண்டடி தள்ளி நின்றுக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டே “ஏன்.. புதுசா இருக்கேனா” என்றான்.

மிர்த்திக்கா “இதெல்லாம் பேசாதீங்க.. காபி ரெடி” என்றபடி இரண்டு கப்க்கள் எடுத்துக் கொண்டு.. ஹாலுக்கு சென்றாள். தான் அவன் அருகில் வந்ததும் அமைதியாக இருந்ததனால்.. அவளுக்கு அவளையே பிடிக்கவில்லை. விருட்டென சென்றாள்.

யோகி பின்னாலேயே சென்றான். இருவரும் காபியை பருகினர். யோகி “ஏதாவது சொல்லு.. கல்யாணம் ஆகிடுச்சா.. புருஷன் வந்திடுவானா..” என்றான் குதர்க்கமாக.

மிர்த்தி “குழந்தையே இருந்தது.. போதுமா.” என்றாள் அவளும் அழுத்தமான குரலில்.

யோகிக்கு அவளின் எதிர்பேச்சு பிடிக்கவில்லை “ஓ.. சரிதான் அதான் என்னை நினைக்கலை போல.. நான்தான் இங்க பையத்தியம் மாதிரி என்னை அவள் கூப்பிடுவா.. தேடுவான்னு.. ஒவ்வொரு நாளும் நினைச்சிகிட்டு இருந்தேன்” என்றான் பல்லை கடித்துக் கொண்டு.

மிர்த்தி எழுந்து நின்றாள் “கிளம்புங்க முதலில். செக்யூரிட்டிகிட்ட நீங்க சொன்ன பொய்யை உண்மையாக்கவே நான் வர சொன்னேன்னு சொன்னீங்கள்ள அதற்காகத்தான் உள்ள விட்டேன். பழைய ஞாபத்தில்ன்னு நினைக்காதீங்க.. இனி நீங்க வராதீங்க. திரும்பவும் என் பெயர் கெட்டுபோவது எனக்கு வேண்டாம். என்னோட புதிய வாழ்க்கையை வாழ விடுங்க.. திரும்பவும் இங்க வராதீங்க.. இனி வாசலில் வந்து நின்றால், செக்யூரிட்டியிடம் சொல்லிடுவேன். எனக்கு நிறைய வேலை இருக்கு கிளம்புங்க” என்றவள் ஒரு அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொள்ள முயன்றாள்.

யோகிக்கு ஆத்திரமாக வந்தது, அவளின் பின்னாலேயே சென்று அவளின் கை பற்ற நினைத்தவன்.. அவள் அறையில் செல்லவும்.. அறையின் கதவை மூட விடாமல் தள்ளி பிடித்துக் கொண்டான்.

மிர்த்திக்கா உக்ரமானாள் “கையை எடுங்க.. கிளம்புங்க.. என்ன வேண்டும் உங்களுக்கு.. இன்னும் என் வாழ்க்கையில் நீங்க விளையாட நான் அனுமதிக்க முடியாது.. போய்..டுங்க.. நானே இப்போதான் மறக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. போங்க.. போங்க.. இங்கிருந்து போயிடுங்க..” என வெறி கொண்டு தன் பலம் முழுவதையும் திரட்டி கதவை இன்னும் அழுத்தி சாற்ற முயன்றாள். 

யோகியும் விடாத கோவத்தோடு அவளை நோக்கி கதவை தள்ள இருவருக்கும்.. இரண்டு நொடிகள் பேச்சில்லா போராட்டம்.. இருவருக்கும் கோவம்.. சூழ்நிலை தெரியாத கோவம்.. பட்டென ஒரு நொடி.. யோகி அசந்த நேரத்தில்.. மிர்த்திக்கா கதவை சாற்ற.. யோகி சுதாரித்துக் கொள்ள.. மிர்த்திக்காவின் சுண்டுவிரல்.. கதவிடுக்கில் சிக்கிக் கொண்டது.

மிர்த்திக்கா “ஆ…ஆ…ஆ” என கத்திக் கொண்டு கையை எடுத்துக் கொண்டாள்.

யோகியும் அவள் கத்தியதில் தளர்ந்து பார்க்க.. பெண்ணவள் துடித்துக் கொண்டே கீழே அமர்ந்தாள்.

யோகி “ஹேய்.. என்ன.. என்னடி.. என்ன ஆச்சு” என பதறிக் கொண்டு.. அவளின் அருகே அமர..

மிர்த்திக்கா இதெல்லாம் எனக்கு வலியே இல்லை.. என்பது போல அலறினாள் அவனிடம்  “போங்க முதலில்.. இங்கிருந்து போங்க.. உங்களை பார்த்தாலே எனக்கு இப்படிதான் ஏதாவது ஆகும்.. எனக்குதான் கஷ்ட்டம்.. போங்க.. நீங்க வேண்டாம்.. போங்க” என அலறினாள் பெண்.

யோகி அவளின் பேச்சுகள் அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு.. அப்படியே நின்றான். என்னுடைய இத்தனைநாள் தவிப்பு இந்த பேச்சை கேட்கதானா.. என அதிர்ந்து நின்றான்.

மிர்த்திக்கா பேசி முடித்து.. கண்ணில் நீர் வழிய நன்றாக அமர்ந்தாள்.

யோகிக்கு, அவளின் வலியை பார்த்ததும் சூழ்நிலை புரிந்தது, சுதாரிப்பு வந்து.. பிரிட்ஜ் நோக்கி சென்றான். ஐஸ் கியூப்ஸ் இருக்கிறதா என பார்த்தான். எதோ ஒரு ட்ரைவில் இருந்தது.. அதை எடுத்து வந்தான்.. மிர்த்திக்கா அமர்ந்திருந்த அறையில் இருந்த எதோ துண்டு ஒன்றில் அதை வைத்து.. அப்படியே அவளிடம் கொண்டு சென்று.. அவளின் அடிபட்ட கையை ஆராய.. அவளின் கைகளை பிடிக்க.. மிர்த்திக்கா முறைத்தாள்.

யோகி “கொஞ்சம் அமைதியா இரு” என்றான் அவளின் முறைப்பை உணர்ந்தபடி.

மிர்த்திக்கா அதை கேட்டு கையை காட்ட மாட்டேன் என உதற தொடங்கினாள்.

யோகி “வீங்குது பாரு..  ஏதாவது ஆகிட போதுடி.. நீ சொல்றா மாதிரி. கொஞ்சம் அமைதியா இரு..” என்றான் அவனும் வேண்டுதலும் கோவமும் நிறைந்த குரலில்.

மிர்த்தி “வேண்டாம்.. நான் பார்த்துக்கிறேன்” என அவன் பற்றி இருந்த விரல்களை இழுக்க..

யோகி இப்போது அழுத்தமாக அவளின் கையை பிடித்துக் கொண்டான். மிர்த்திக்கா கையை இழுக்க முற்பட்டாள்.. முடியவில்லை. யோகி நன்றாக அமர்ந்துக் கொண்டான். ஐஸ்க்யூப் வைத்தான்.. அழுத்தி அழுத்தி வைத்தான்.

மிர்த்திக்காவிற்கு வலிதான்.. அழுகையாக வந்தது.. அவன் வேறு பக்கத்தில் இருக்கிறான் என கோவமும் வந்தது.. அத்தோடு சேர்ந்து.. இதென்ன சூழ்நிலை என பயமும் வந்தது. கண்ணீர் வழிய எழவும் முடியாமல் அவனிடமிருந்து தப்பிக்கவும் முடியாமல் அமர்ந்திருந்தாள். 

யோகி மெதுவாக தனது பிடியை தளர்த்தினான்.. “ஏன் டி, தனியா எப்படி இங்க வந்த.. ஏன் இப்படி கஷ்ட்ட படுற” என்றான், குரலில் அத்தனை வலி இருந்தது.

மிர்த்திக்கா ஏதும் பேசவில்லை.

யோகி “எவ்வளோ நாள் ஆச்சு இங்க வந்து.. எதோ பஞ்சத்தில் அடிபட்டவள் மாதிரி இருக்க.. உங்க அப்பா எங்க.. என்ன பண்றார் உன்னை இப்படி விட்டுட்டு” என்றான் ஆற்றாமையாக.

மிர்த்திக்கா கையை உதறிக் கொண்டாள்.. “நீங்க கிளம்புங்க.. இனி வந்திடாதீங்க” என்றாள் தள்ளி அமர்ந்துக் கொண்டு.

பின் எழுந்து.. சென்று ஹாலில் அமர்ந்தாள். 

யோகிக்கு என்னமோ அவளின் நடவடிக்கைகள் எல்லாம கோவத்தையே தந்தது.

வெளியே வந்தான் அவளின் போனை தேடினான்.. அந்த போன் டீ-பாய் மீதே இருந்தது.. அதை எடுக்க.. லாக் ஓபன் ஆகவில்லை. அவளின் போன் எண் தெரிந்துக் கொள்ளலாம் என எண்ணினான்.. முடியவில்லை.. அவளின் பிறந்த வருடம்.. வண்டி நம்பர் என ஏதேதோ போட்டு பார்த்தான் வரவில்லை. 

மிர்த்திக்கா அதை உணர்ந்தாலும்.. அவனை நிமிர்ந்து பார்க்காமல் அமர்ந்திருந்தாள்.  

யோகி “போறேன் டி.. திரும்ப நாளைக்கு வருவேன்” என சொல்லி.. கதவு நோக்கி சென்றான் பின் திரும்பி “கொஞ்சம் கைக்கு ஏதாவது மருந்து போடு டி.. வீங்குனா ஹாஸ்பிட்டல் போயிட்டு வா..” என்றவன் கதவை திறந்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

யோகிக்கு, மனதேயில்லைதான் அவளை தனியே விட்டு போவதற்கு.. சற்று நேரம் அப்படியே அந்த லிப்ட்டின் எதிர்புறம் நின்றான்.. மனதே சமன்படவில்லை ‘என்ன ஆச்சு’ எனத்தான் அவனின் சிந்தனை. எப்படி தனியே இருப்பாள் என யோசனை. கிட்டத்தட்ட அரைமணி நேரம் நின்றிருப்பான். அப்படியே அவளின் வீட்டு வாசலில் நின்றுக் கொள்ளலாம் எனத்தான் எண்ணம்.. ஆனாலும், நடைமுறை என்ற ஒன்று இருப்பது புரிய.. லிப்டில் கீழே இறங்கி வந்தான்.

யோகி, இரவில்தான் வீடு வந்து சேர்ந்தான். சிந்தனை முழுவதும் அவளிடமே. வந்தவன் குளித்து முடித்து.. அறையிலேயே இருந்தான். உண்பதற்கு கூட வெளியே வரவில்லை. பெரிதாக தமிழரசி கண்டுக் கொள்ளமாட்டார். 

ஆனால், நிவேதித்தா “அம்மா.. மாமா இன்னும் ஏன் வரலை” என கேட்டுக் கொண்டே தன் போன் எடுத்து.. யோகிக்கு அழைக்க தொடங்கினாள்.

தமிழரசி “யோகி வந்துட்டானே.” என்றார்.

நிவேதித்தா “மாமா” என கதவை தட்டினாள்.

யோகி போனை எடுக்கவில்லை.. அவள்தான் அழைக்கிறாள் எனவும். ஆனால், கதவை தட்டவும் திறக்காமல் இருக்க முடியவில்லை. கதவின் தாழ் நீக்கி திறந்தான்.

நிவேதித்தா “மாமா.. எப்போ வந்தீங்க” என்றவள். அவன் முகம் பார்க்க, எதோ சோகமாக இருப்பதாக தோன்றியது அவளுக்கு. 

யோகியும் நிவேதித்தாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. அப்படியே லேப்டாப் வைத்து வேலை செய்யும் டேபிள் சேரில் அமர்ந்தான்.

நிவேதித்தா “என்ன மாமா உடம்பு முடியலையா” என்றாள்.

யோகி “ம்…” என்றான் ஏதும் பேச தோன்றாமல்.

நிவேதித்தா “மாமா.. பதில் சொல்லுங்க..” என்றபடி யோகியின் தலையில் கைவைத்து பிடித்துவிட தொடங்கினாள்.

என்னமோ இத்தனைநாள் அவளை குழந்தையாகவே பார்த்தவனுக்கு இப்போது, என்னமோ செய்தது.. யோகி நிவேதித்தாவின் கைபிடித்து.. இழுத்து.. அவளை கட்டிலில் அமர வைத்தவன்.. இயல்பான குரலில் “என்ன டா, எப்படி போச்சு இன்னிக்கு காலேஜ்” என பேச்சுக் கொடுக்க தொடங்கினான்.

நிவேதித்தாவும் எல்லாம் பேச தொடங்கினாள்.

அப்படியே இருவரும் உண்பதற்காக வெளியே வந்தனர்.. இருவரும் பேசிக் கொண்டே உண்டனர். நிவேதித்தா குழந்தையாக யோகியோடு செல்லம் கொஞ்சிக் கொண்டே உண்டாள்.. அவனுக்கும் ஊட்டினாள். யோகியும் அவளுக்கு ஊட்டினான். 

நிவேதித்தா “என்ன மாமா.. ரொம்ப அமைதியா இருக்க.. என்ன ஆச்சு மாமா” என்றாள்.

யோகி அமைதியாகவே பார்த்திருந்தான் அவளை.. உதட்டில் மர்மான புன்னகை. மனதிலோ ‘என்னவளுக்கு ஏதுமே தெரியலையே என்னை பற்றி..’ என நினைத்துக் கொண்டான். ஆனால், இதமான புன்னகையோடு “ஒண்ணுமில்ல டா.. கேஸ் ஒன்னு ஓடிகிட்டு இருக்கு இங்க” என மூளையை தொட்டு காட்டிவிட்டு.. எழுந்து கைகழுவிக் கொண்டு “சரி, குட் நைட்.. படி.. போ” என்றான்.

நிவேதித்தாவும் “குட் நைட்.. நல்லா ரெஸ்ட் எடுங்க.. மோர்னிங் பிரெஷ் ஷா இருக்கணும்” என்றாள்.

புன்னகையோடு விடைபெற்று சென்றான் யோகி.

அடுத்தடுத்த நாட்கள் யோகிக்கு வேளையில் சென்றது. இரண்டு வார இறுதியும் கடந்தது.

மிர்த்திக்காவிற்கு, அவன் வந்துவிட்டு சென்ற நேரத்திலிருந்து அப்படியே அமர்ந்திருந்தாள். ஏதும் வேலையே ஓடவில்லை.

ஜெகன் வந்தான்.. கதவு தாளிடப்படாமல் திறந்தே இருக்கவும்.. ‘அக்கா, லாக் செய்ய மறதுட்டாலோ’ என எண்ணிக் கொண்டே வீட்டிற்குள் நுழைய.. மிர்த்திக்கா அமர்ந்திருந்த கோலம்.. தம்பியை என்னமோ செய்தது.

ஜெகன் “மிர்த்தி.. என்ன.. என்ன ஆச்சு” என்றான்.

மிர்த்திக்கா சோபாவின் கீழே அமர்ந்திருந்தவள்.. தம்பியிடம் தன் கையை காட்டினாள்.

ஜெகன் “என்ன ஆச்சு” என்றான்.

அழுத தடத்தொடு விவரம் சொன்னாள்.. ம்.. யோகி வந்ததை சொல்லவில்லை.

ஜெகன் “அதுக்கா இவ்வளவு சோகமா இருக்க.. முகமே சிவப்பா மாறி இருக்கு..” என்றான்.

மிர்த்திக்கா “ஏதாவது ஆர்டர் பண்ணு டா” என்றவள் எழுந்து தனதறைக்கு சென்றுவிட்டாள்.

ஜெகன் விசித்தரமாக அக்காவை பார்த்தான். ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை.

மிர்த்திக்காவிக்கு அவனால் இந்த காயம் வந்ததாக தோன்றிவிட்டது.. அமைதியாக அந்த காயத்தை வருடிக் கொண்டே இருந்தாள் கன்றி சிவந்து பச்சையும் சிவப்புமாக இருந்தது அவளுன் சுண்டுவிரல்.. ‘எனக்கு மட்டுமே காயம்..’ என பெண் மனம் சொல்லிக் கொண்டது. 

மிர்த்திக்காவிற்கு, அவன் வந்து சென்றதை இப்போதுதான் உணரவே முடிந்தது.. தன் அருகில்.. அமர்ந்து கைபிடித்துக் கொண்டு தைரியமாக நிற்கிறான். நானும், அப்படியே இசைகிறேன் என மனது அடித்துக் கொண்டது. தன்மீதே எரிச்சலாக வந்தது. கண்ணில் நீர் கோர்த்திடும் போல இருக்கவும்.. எழுந்து, டவ்ளோடு பாத்ரூம் சென்றாள்.

பரபரவென குளித்தாள்.. அவனை நினைக்க கூடாது எனத்தான் நினைத்தாள். ஆனால், மனது அவனது அருகாமையை ஏற்றுவிட்டது என அவளின் மூளைக்கே புரிந்தது. கண்ணில் நிற்காமல் நீர் சுரந்தது. இந்த ஷணம் அவளை அவளாலேயே மன்னிக்க முடியவில்லை. என்ன செய்வது என புரியவில்லை. அப்படியே ஷேவரில் நின்றாள் பெண்.

“மனம் மனம் எங்கிலும்..

எதோ கனம் கனம் ஆனதே..

தினம் தினம் ஞாபகம் வந்து..

ரணம் ரணம் தந்ததே..”

ஜெகன் வந்து “அக்கா, சாப்பிடலாம்” என கதவை தட்டி செல்லவும் பெண்ணவள் அவனை தள்ளி வைத்து.. வெளியே வந்தாள்.

உடை மாற்றிக் கொண்டு.. உண்பதற்காக சென்றாள்.

ஜெகன் பாதி உண்டு முடித்திருந்தான். படம் எதோ ஓடிக் கொண்டிருந்தது. மிர்த்தி.. அமைதியாக படம் பார்க்க முயன்றாள். முடியவில்லை. சீக்கிரமாக உண்டு முடித்து.. உறங்க சென்றாள்.

நடுஇரவில் காய்ச்சல். அதெல்லாம் அவளுக்கு தெரியவில்லை.. காலையில் அனலாக கொதித்தது. எழ முடியவில்லை. லேட்டாக எழுந்து, தம்பி என்ன செய்கிறான் என பார்க்க வந்தாள்.

ஜெகன் அலுவலகம் கிளம்பி வந்தான் “என்ன ஆச்சு க்கா” என்றான்.

மிர்த்தி “பீவர் டா, நூடுல்ஸ் செய்து தரவா.. இரு” என்றாள்.

ஜெகன் “அக்கா.. சாதம் வைச்சிருக்கேன், தயிர் போட்டு சாப்பிட்டேன்.. நீ சாப்பிட்டு அக்கா.. மாத்திர போடு.. லீவ் சொல்லிட்டியா” என்றான் படபடவென.

மிர்த்திக்கா “ம்.. மெசேஜ் போடணும் டா.. சரி, கிளம்பு” என சோபாவில் அமர்ந்தாள்.

மிர்த்திக்கா பொறுமையாக எழுந்து காபி குடித்து.. அமர்ந்து ‘போ போ’ என துரத்தியவனையே நினைத்துக் கொண்டிருந்தாள்.. நேற்று அவனின் அருகாமையின் சூடு இன்று தாக்கியது அவளை.. ம்.. அவள் நினைவிலேயே காய்ச்சல் இன்று.

Advertisement