Advertisement

 

4

யோகியின் கைகால்களில் அடியோடு மருத்துமனையில் மயக்கத்தில் இருந்தான். வந்து பார்த்த ரெங்கனுக்கும் அவரின் அன்னைக்கும் உயிர் வலி.. தந்தது, யோகியின் நிலை. யோகி வண்டியிலிருந்து விழுந்து.. அவனின் காலில் வண்டி விழுந்து.. நல்ல அடி. மருத்துவர்கள் ப்ளேட் வைக்க வேண்டும் என்றனர் ரெங்கனிடம். ரெங்கன்.. என்ன செய்வது என தெரியாமல் நின்றார். 

ரெங்கனின் அன்னைக்கும் பேரனை நினைவில்லாமல் பார்க்கவும் கைகால் எல்லாம் வெலவெலத்து போனது. அப்படியே சரிந்தார். அவருக்கு ஏற்கனவே பயம்.. மருமகள் இல்லாமல் மகன் மட்டும் எப்படி பேரனை வளர்ப்பான் என.. அதனாலோ என்னமோ தன் வயதுக்கும் மீறி பேரனுக்கு தானே சமைப்பது.. அவனை கவனிப்பது என இருந்தார். ஆனால், இப்படி  பேரனையும் மருத்துவமனையில் பார்க்கவும் மயங்கிவிட்டார். அவருக்கும் சிகிச்சைகள் தொடங்கியது.

தனக்காக யாருமில்லை யோசிப்பதற்கு கூட என உணர்ந்ததும் தெளிவாகிவிட்டார் ரெங்கன். மகனுக்கு ஆப்ரேஷன்க்கு ஏற்பாடுகள் செய்தார். 

அடுத்த நான்குநாளில் வீடு வந்தனர் பாட்டியும் பேரனும். பாட்டிக்கு இப்போதெல்லாம் கைகள் அதிகமாக நடுங்க தொடங்கியது. கிட்செனில் சென்று ஏதும் செய்ய முடியவில்லை. ரெங்கனுக்கு, உணவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து அவ்வபோது உணவு வந்தது. ஆனாலும், அது சரியாக அமையவில்லை. ரெங்கன் கடையில் உண்டுக் கொண்டார். அவ்வபோது யாரெனும் ஒரு பக்கத்து வீட்டு பெண்மணி வந்து சமைத்து வைப்பார்.

வாசுவிற்கு, அன்று இரவே விஷயம் தெரிந்தது. ஜெகன்தான் “அண்ணாவை காணோம்..” என கடையில் வேலை செய்பவர்களிடம் கேட்கவும்.. அவர்கள்தான் யோகிக்கு அடிப்பட்ட விஷயத்தை சொல்லினர் சிறுவன் ஜெகனிடம்.

ஜெகன், திருதிருவென விழித்துக் கொண்டே வீடு வந்து தன் அக்காவிடம் சொல்லி அழுதான்.. “மிர்த்தி, அண்ணாக்கு உடம்பு சரியில்லையாம் ஹாஸ்ப்பிட்டல் போயிருக்காங்களாம்” என சொல்லி அழுகை.. வேறு ஏதும் சொல்ல தெரியவில்லை அவனுக்கு. 

மிர்த்தி அன்று இரவு, தம்பியை சமாதனம் செய்து அரட்டி உருட்டி.. உணவு ஊட்டி உறங்க வைத்துவிட்டாள்.

மறுநாள் காலையில் மகனின் அழுகை கண்டு.. வாசு, விசாரிக்க.. விஷயம் தெரிந்தது. இரு மக்களையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு.. வாசு மருத்துவமனை சென்று பார்த்து வந்தார்.

அந்த நான்கு நாட்களிலும் ஜெகன் கொஞ்சம் கலாட்டாக்கள் செய்ய தொடங்கினான். அவனை சமாளிப்பதே பெரிய வேலை மிர்த்திக்கு. ஒருவழியாக யோகி வீடு வரவும்.. ஜெகன்.. “அண்ணா, அண்ணா வலிக்குதா.. ஊசி போட்டாங்களா” என் கேட்டுக் கொண்டே இருந்தான், யோகியை. 

ஜெகன், பள்ளி முடித்து வந்தால்.. யோகியின் வீட்டில்தான் இருப்பது. உண்ணும் போது யோகிக்கு என கேட்டு.. ஒரு பாத்திரத்தில் அக்காவின் சமையலை இங்கே எடுத்துக் கொண்டு வந்து உண்டான். யோகிக்கும் கால்கள் அசைக்க கூடாத நிலையில் ஜெகனின் வரவு ஆறதலாக இருந்தது. 

அந்த வார இறுதியில் தனலெட்சுமியின் அண்ணன் சீனிவாசன். சென்னையில் இருக்கிறார். வாரத்திற்கு ஒருமுறை அழைப்பார்.. மருமகனிடம் பேசுவார்.. ரெங்கனிடம் நலம் விசாரிப்பார். அப்படி பேசும் போதுதான் யோகிக்கு விபத்து ஆனதை தெரிந்துக் கொண்டார். மச்சானின் அவஸ்த்தையும் தெரிந்துக் கொண்டார்.

சீனிவாசன், சென்னையில் ரியல்எஸ்டேட் தொழில். அரசியல்வாதிகளின் பணத்தை சத்தமில்லாமல் கைளாளும் திறமைசாலி. மறுநாளே கிளம்பி வந்தார் குடும்பத்தோடு. உதவிக்கு என தம்பதியாக ஒரு குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்தார்.

மருமகனை பார்த்துவிட்டு.. “நான் சென்னை கூட்டி போறேன். ஸ்கூல் போகவும் முடியாது, எப்படி படிப்பான். நான் அங்கே பார்த்து ப்ரைவேட்டாக எழுத வைத்துக் கொள்ளுகிறேன்.” என்றார்.

ரெங்கன் ஸ்தம்பித்துவிட்டார். சீனிவாசனின் மனைவி தமிழ்செல்வி “அப்படி சொல்லாதீங்க, அண்ணன் முகமே வாடி போச்சு.. பையனும் சின்ன பையன்.. அவருக்கு பிடிப்பே அவன்தானே. நீங்க இங்கேயே ஏற்பாடு பண்ணுங்க.” என்றார்.

ரெங்கன், நன்றியோடு தங்கையை பார்த்தார்.

சீனிவாசன் அதன்பின்னே.. பள்ளியிடம் மருமகனுக்காக சென்று பேசி.. தனியாக ஆசிரியர் என ஒரு மாதத்திற்கு ஏற்பாடு செய்துதான் ஊர் வந்து சேர்ந்தார்.

யோகி, தன் மாமானின் செயலில் சலித்துக் கொண்டாலும்.. தன் தெரு பிள்ளைகள் எல்லாம் பள்ளி செல்லுவது.. தன் நண்பர்கள் எல்லாம் பள்ளி சென்றுவிட்டு மாலையில் தன்னை வந்து பார்ப்பது.. தான் ஒரே இடத்தில்  அமர்ந்திருப்பது என எல்லாம் ஒருமாதிரியாக இருந்தது. படிப்பில் கவனம் செலுத்தினான் யோகி. முடிந்த அளவு படிக்கவும் செய்தான்.

ஜெகனும் மாலையில் படிப்பதற்காக வருவான் யோகியின் வீட்டிற்கு எப்போதும் போல. சற்று நேரம் ஜெகன் படிப்பான்.. பிறகு “நான் அக்காகிட்ட ஸ்னாக்ஸ் வாங்கிவரேன்” என சென்றிடுவான். பின் வந்து படிப்பான்.

இப்படியே இரண்டுமாதம் சென்றது.

யோகி பள்ளி வந்தான். ஜெகனை அன்று கையில் பிடிக்க முடியவில்லை. “அண்ணா வாங்க.. இன்னிக்கு உங்க கூடத்தான் உட்காருவேன்.. அந்த ப்ரேம் அண்ணா..” என செம குஷியில் இருந்தான். இன்று தன் அக்காவை கண்டுக் கொள்ளவேயில்லை ஜெகன்.

யோகி, சற்று தேறி இருந்தான்.. துள்ளலாக முன்போல ஓடவில்லை என்றாலும்.. சாதரணமாக நடப்பதற்கு முயன்றான். 

யோகியை, ஸ்கூல் பஸ்ஸில் எல்லோரும்.. நலம் விசாரித்தனர்.  அப்படியே பேசிக் கொண்டே தாங்கள் அமரும் கடைசி இருக்கைக்கு சென்று அமர்ந்தான். சிலர் அங்கே சென்று அவனோடு பேசினர்.

மிர்த்திக்காவும் முதல்முறை எல்லோரும் கேட்பதால்.. தானும் பேச வேண்டுமோ என எண்ணி பின் இருக்கையை திரும்பி பார்த்து..  “சரியாகிடுச்சா அண்ணா” என்றாள் தயங்கிய குரலில்.

மிர்த்திக்கா பேசவும் சின்ன அமைதி சட்டென அந்த பஸ்ஸில். அவள் பொதுவாக தம்பியோடு மட்டுமே பேசுவாள். இப்படி அவள் எதார்த்தமாக கூட யாரிடமும் பேசாதவள்.. இப்போது பேசவும் எல்லோரும் இவளா பேசியது என பார்த்தனர்.

யோகியும் ஒருநொடி பார்த்தவன்.. பின்  அசால்ட்டாக “பக்கத்து வீட்டில் இருந்துகிட்டு எப்போ கேட்க்கிற நீ.. ம்.. நல்லா இருக்கேன்” என்றான் பின்சீட்டில் அமர்ந்துக் கொண்டு அதட்டலாகவும் புன்னகையாகவும்.

மிர்த்திக்காவிற்கு, அவனின் பேச்சு என்னமோ போலிருந்தாலும்.. அவனின் புன்னகையில்.. லேசாக தானும் புன்னகைத்து.. திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.

நாட்கள் சென்றது. 

என்ன மாயமோ யோகி பத்தாம் வகுப்பு பாஸ் செய்துவிட்டான். தந்தைக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

பதினோராம் வகுப்பு யோகி. முன்பே யோகியை ஒன்னும் சொல்ல முடியாது. இப்போது பதினோராம் வகுப்பு வரவும்.. எல்லாம் எனக்கு தெரியும் என்ற தோரணை வந்துவிட்டது பையனிடம். பள்ளி செல்லுவது என்பதே நண்பர்களோடு சென்றது கடைசி பெஞ்சில் அமர்ந்து அரட்டை அடிக்க என்ற எண்ணத்தோடு பள்ளிக்கு சென்றான். வாரத்தில் நான்கு சினிமா.. பள்ளி முடித்து வந்தால்.. கிரிகெட்.. கபடி என விளையாட செல்லுவது என அவனின் நாட்கள் கரைந்தது.

அன்று சுதந்திரதின விழா.. அத்தோடு பள்ளி தொடங்கி இருபது.. ஆண்டுகள் நிறைவும் கூட அதனால், முக்கிய விருந்தினர்களோடு.. விழா கொண்டாடுகிறோம் எனவே, பள்ளிக்கு கட்டாயம் எல்லோரும் வரவேண்டும் இல்லை.. மார்க்கில் கை வைப்போம் என மிரட்டி பிள்ளைகளை பள்ளிக்கு வர வைத்திருந்தனர் ஆசிரியர்கள். அதனால், யோகியும் அவனின் ஐந்து நண்பர்களும் பள்ளிக்கு வந்திருந்தனர்.

விழா தொடங்கியது ஏழு மணிக்கே. கொடியேற்றி.. முக்கிய விருந்தினர்கள் உரை.. அந்த பள்ளியில் படித்த மாணவர்களில் ஒருவர் ஆராய்ச்சியாளர்.. அவர் பள்ளியை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இப்படி விழா நடந்துக் கொண்டிருந்தது. நடு நடுவே பிள்ளைகளின் பேச்சு போட்டி.. நடனம்.. கவிதை போட்டி.. என நடந்தது. 

அப்போதுதான் மிர்த்திக்கா மிர்த்திக்கா என்ற பெயர் ஒலிபெருக்கியில் அடிக்கடி கேட்டது. யோகி முதலில் கவனிக்கவில்லை. அவன்தான், எல்லோருக்கும் கடைசியாக அமர்ந்து கொண்டு.. இருந்தானே. எங்கேயோ கேட்ட பெயர்.. அவன் காதில் விழவும்.. யாருடா அது என எண்ணிக் கொண்டே எழுந்து நின்று பார்த்தான்.. யோகி. தூரமாக.. மேடையில்.. மைக்கினை.. சரி செய்துக் கொண்டு.. “நான் கொண்டாடும் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்” என தொடங்கி பேசும் அருவியாக.. நிற்காமல் தமிழ் பேசினாள் பெண்.

யோகி பார்த்துக் கொண்டே இருந்தான். எதுவும் யோசிக்கவே முடியவில்லை.. அவள் பேசிய பேச்சு மட்டுமே அவன் காதில் விழுந்துக் கொண்டிருந்தது.

அடுத்து ஒரு நடனம்.

அடுத்து பரிசு வழங்கும் நேரம். மிர்த்திக்கா என பெயர் கேட்டது நான்கு பெயர்களுக்கு அடுத்து. மாநில அளவில் எதோ கட்டுரை போட்டியில் வென்றாள் என சொல்லி பரிசு கொடுத்தார் பள்ளியின் தாளாளர். யோகி இப்போதும் பார்த்தான் அந்த காட்சியை.. அடுத்தும் அவளே.. அறிவியல் தொடர்பான வினாவிடை போட்டிக்கு இந்தியளவில் தேர்வாகி இருக்கிறாள் என.. இவளின் பெயர். யோகியின் கைகள் அனிச்சையாய் தட்டியது.

மிர்த்திக்கா இப்போது ஒன்பதாம் வகுப்பு. விழா முடிந்தது. இவர்களை அழைத்து செல்ல பஸ் வந்தது. எல்லோரும் அவரவர் வீடு சென்றனர். 

யோகி, பஸ்ஸில் வருவதாக இல்லை முன்பு. நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து விளையாட செல்லாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால், யோகிக்கு என்னமோ விளையாட செல்ல தோன்றவில்லை. நண்பர்களிடம் ஏதும் சொல்லாமல்.. பஸ் ஏறிக் கொண்டான் வீடு செல்ல. பின் சீட்டில் அமர்ந்துக் கொண்டு.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மிர்த்திக்கா அமைதியாக அமர்ந்துக் கொண்டாள், யாரும் அவளோடு பேசவில்லை.. அவளும் யாரோடும் பேசவில்லை. 

யோகி, அன்று தொடங்கி.. மிர்த்திக்காவை அதிகமாக கவனிக்க தொடங்கினான். பஸ் ஏறுவதற்கு இப்போது எந்த பெரியவர்களும் தெருமுனை வரை வருவதில்லை. அதனால், யோகி அவள் முன்னால் செல்லும் போது அவளை பார்த்துக் கொண்டே பின்னால் வர தொடங்கினான். கையில் சின்ன கைகுட்டையோடு.. ஒற்றை போனிடையில்.. தம்பியின் லஞ்ச் பேக்’கையும் தானே எடுத்துக் கொண்டு.. நிமிர்ந்து நடப்பவளை யாரும் அறியாமல் பார்க்க தொடங்கினான் யோகி.

கொஞ்ச நாட்கள் கடந்தது.. ஒன்பதாம் வகுப்பிற்கும் சிறப்பு வகுப்புகள் தொடங்கியது. அப்படியே யோகிக்கும். அப்போதெல்லாம் பஸ்ஸில் அதிகமான பிள்ளைகள் இருப்பதில்லை எனவே, மிர்த்திக்காவிடம் பேச தொடங்கினான்.. “எவ்வளோ நேரம் படிப்ப..” என்றான்.

மிர்த்திக்கா தயங்கிய குரலில் “சும்மா ஒருமணி நேரம்தான்” என்றாள்.

யோகி “ஜெகன் சொல்லுவான்.. நீதான் சமைப்பேன்னு. இப்பவும் நீதானா” என்றான்.

மிர்த்தி “இல்ல.. நானே எல்லாம் செய்யமாட்டேன்.. அப்பாவும் செய்வார். இப்போவெல்லாம் அப்பாவே பாத்திரம் துலக்கி வைச்சிடுவார்.. சட்னி அரைச்சிடுவாங்க.. அப்பாதான். நான் காலையில் மட்டும்.” என்றாள்.

வீடு வந்துவிட்டது இருவரும் இறங்கிவிட்டனர்.. எப்போதும் போல மிர்த்தி முன்னால் நடக்க.. இவன் பின்னால் நடந்தான்.

அடுத்தடுத்த நாட்கள் கடந்தது, இருவரும் இயல்பாக பேசிக் கொள்ள தொடங்கினர். காலையில் ஜெகனோடு சேர்ந்து நடந்தான் யோகி.. மிர்த்தியும் அப்போது அவர்களோடுதான் நடந்தாள்.

சிலநேரம் காலையில் ஜெகன் உண்ண லேட் ஆகும் போது.. டப்பாவில் போட்டு.. எடுத்து வந்து சிலநேரம் ஊட்டுவாள். இப்போதெல்லாம் அவன் பெரியவனாகிவிட்டான். அதனால், ஜெகனே உண்டுக் கொள்ளுகிறான். இப்போது யோகியும் ஜெகனோடு சேர்ந்து உண்டான்.. “என்ன டா, எனக்கு கொடுக்காமல் சாப்பிடுற” என கேட்டுக கொண்டே பின்னிலிருந்து உணவை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அப்படியே கண்கள்.. மிர்த்தியையும் தேடியது, யோகிக்கு. 

மிர்த்தி.. கவனிக்கவேயில்லை. 

சற்று நாட்களில் மிர்த்திக்கவிற்கு, யாரோ தன்னை பார்ப்பதாகவே ஒரு எண்ணம். யாரென மனம் அறிய விரும்பினாலும்.. திரும்புவதில்லை பெண். மாலையில் யோகி.. மிர்த்திக்காவின் எதிர் சீட்டில் வந்து அமர்ந்துக் கொண்டான் எப்போதும் போல.

மிர்த்திக்கா நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்.. 

யோகி “இந்தா கடலை பர்பி..” என எடுத்து நீட்டினான்.

மிர்த்திக்காவிற்கு எடுப்பதா வேண்டாமா என எண்ணம். ஒருநிமிடம் அதனை உற்று பார்த்துவிட்டு.. “இல்ல நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

யோகி “ம்.. எடுத்துக்கோ.. நம்ம கேண்டீனில் வாங்கினதுதான். காலையில் உன் தோசை சாப்பிட்டேன்.. நெய் போட்டிருந்த.. சூப்பரா இருந்தது.” என்றான் ரசனையாக.

மிர்த்திக்கா “தேங்க்ஸ்” என சொல்லி அந்த காகிதத்தில் இருந்த பர்ப்பியில் ஒன்றையை எடுத்துக் கொண்டாள்.

யோகி “என் அம்மா எப்போதும் இட்லி தோசை.. சப்பாத்தி என எல்லாத்திலும் நெய் போட்டு தருவாங்க” என்றான் நேராக பார்த்துக் கொண்டு.

மிர்த்திக்கா “நம்ம அம்மாக்கள் நல்ல பிரெண்ட்ஸ், அதான் சேர்ந்தே போய்ட்டாங்க” என்றாள், எங்கோ பார்த்துக் கொண்டு.

இருவருக்கும் நடுவில் அமைதி.

வீடு வந்தது.. யோகியும் மிர்த்தியும் அமைதியாக சேர்ந்தே.. இடைவெளி விட்டு.. நடந்து வீடு சென்றனர்.

விழா நாள். பள்ளி இல்லை.. பள்ளிக்கு விடுமுறை தினம். யோகி காலையிலிருந்து விளையாட சென்றுவிட்டு.. மாலையில் வீடு வந்தான். ஜெகன் வந்தான் இப்போது. அண்ணா “சர்க்கரை பொங்கல்..  ஸ்னாக்ஸ் கொடுத்தாங்க” என சொல்லி ஒரு சின்ன டப்பாவை காட்டினான்.

முகம் கழுவி வந்த யோகி “ஏது டா..” என்றான்.

ஜெகன் “அக்கா எனக்காக கொடுத்தாங்க..” என்றான்.

யோகி “எனக்கு எங்கடா.. போய் வாங்கிட்டு வா” என்றான்.

ஜெகன் “இவ்வளோதான் இருக்கு..” என்றான்.

யோகி “கொடு பார்க்கிறேன்” என சொல்லி வாங்கி.. ஒருஸ்பூன் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். 

ஜெகன் “உங்க வீட்டில் இருக்குல்ல.. சாப்பிடுங்க” என சொல்லி டப்பாவை எடுத்துக் கொண்டு, பாட்டியின் அருகே அமர்ந்துக் கொண்டு உண்ண தொடங்கினான்.

யோகி “இதுதான் டா சூப்பரா இருக்குடா..” என்றான்.. அவன் அருகில் வந்து நின்று.

ஜெகன், அந்த டப்பாவை யோகிக்கு காட்டாமல், மறைத்துக் கொண்டு.. கிட்சென் சென்று சமையல் செய்பவரிடம் “அங்கிள் நீங்க செய்த  பொங்கல்.. நல்லா இல்லைன்னு சொல்லறாங்க அண்ணா” என போட்டுக் கொடுத்தான்.

யோகி “டேய்.. புக் எடுத்துட்டு வா” என்றான் கோவமாக.

ஜெகன் “நீங்க எடுங்க.. நான் ஆப்டர்நூன் படிச்சிட்டேன். நீங்க படிங்க” என்றான்.

யோகி “டேய்” என அவனை தொரத்தினான்.

ஜெகன் ஓடியேவிட்டான்.

மறுநாள் பள்ளி. மாலையில் மிர்த்திக்காவின் அருகே வந்து அமர்ந்தான் யோகி.

மிர்த்திக்கா பார்த்து லேசாக புன்னகைத்தாள்.

யோகி “என்ன நேற்று.. உன் தம்பிக்கு மட்டும் பொங்கல் போட்டு கொடுத்துவிடுற” என்றான்.

மிர்த்தி “ஏன்..” என்றாள் புரியாமல்.

யோகி “எனக்கு கொடுக்காமல் அவனே சாப்பிடுறான். எனக்கு வேற உன் பொங்கல் ரொம்ப பிடிச்சு போச்சு.. எங்க அக்கா செய்தது.. எனக்கு மட்டும்தான்னு ஓடிட்டான்.. இனி எனக்கும் சேர்த்துதான் கொடுத்து விடனும்” என்றான் ஒப்புவிப்பது போல.. அவளிடம் கேட்க்க கூச்சமாக இருந்தாலும்.. அவளிடம் மட்டுமே கேட்க முடியும் என தோன்ற.. வாலிபன் எங்கோ பார்த்துக் கொண்டு.. உணவை கேட்டான்.

மிர்த்திக்காவிற்கு அடிவயிற்றில் சில் என இருந்தாலும்.. என்ன சொல்லுவது என புரியவில்லை. லேசாக புன்னகைத்து “நான் எங்க கொடுத்து விட்டேன். அவன் எப்போதும் அப்படிதான் கடையில் போய் சாப்பிடுவேன்.. பாக்ஸ்சில் கொடு.. அண்ணா கூட சாப்பிடுவேன் பாக்ஸ்சில் கொடுன்னு வாங்கிட்டு போறான். எங்க சாப்பிடுரான்னு தெரியாது.” என்றாள்.

யோகி.. பக்கவாட்டில் திரும்பி மிர்த்தியை  பார்த்துக் கொண்டே “எனக்கு பொங்கல் கொடுக்க மாட்டியா..” என்றான் தயக்கமில்லா பிடிவாதமான குரலில்.

மிர்த்தி “அஹ.. ம்..” என்றாள் தடுமாறி.

யோகி தன்னை இயல்பாக்கிக் கொண்டு “ம்.. ஹேய்.. இல்ல, சும்மா கேட்டேன். க்கும்.. இனி, அவனுக்கு எது கொடுத்தாலும்.. எனக்கும் வேண்டும்” என்றான் மீண்டும் பிடிவாதமாக.

மிர்த்திக்காவின் பருவமனம்.. கன்னம் குழிய சிவந்து சிரித்து தலையசைத்தது.

Advertisement