Advertisement

என் அலாதிநேசம் நீ!..

3

வாசு வெளியே சென்றவர்.. கடையில் கணக்கு பார்க்க கூட வரவில்லை, கடை அடைத்த பிறகுதான் வந்தார், தன் வீட்டிற்கு. 

ஜெகதீஷ் காத்திருந்தான் தந்தைக்காக. தந்தை எங்கு சென்றிருப்பார்.. எப்படி வருவார்.. என்ன நடக்கும் என தெரியும். எனவே, காத்திருந்தான். மிர்த்திக்காவும் அவ்வண்ணமே.. நான்குமணி நேரம் முன் விரல்களில் மட்டும் இருந்த பயம் இப்போது உடல் முழுவதும் தெரிந்தது.. அவ்வபோது,  லேசாக நடுங்கியது அவளின் உடல். நீண்ட வருடங்கள் ஆகிற்று அப்பாவின் மறுமுகத்தை பார்த்து. இன்று அந்த முகம் வெளிப்படும் என தெரிகிறது பெண்ணுக்கு. எனவே, அதிர்ந்துக் கொண்டே.. அப்படியே அமர்ந்திருந்தாள்.

சுசீலாம்மா பிள்ளைகளை உண்ண அழைத்தார்.. மிர்த்தியிடம் சமாதானம் செய்தார்.. ‘நீ பயப்படாத அப்பா ஒன்னும் சொல்லமாட்டார். உடம்பை கவனிச்சிக்கணும் மிர்த்திம்மா.. இப்படி மயக்கம் போட்டால்.. நல்லாவா இருக்கு.. அதுக்கு சாப்பிடாமல் இருந்தால் சரியாகிடுமா.. அப்பாகிட்ட பேசிக்கலாம்.. வா மிர்த்தி சாப்பிடு..’ என்றார்.

மிர்த்தி எல்லாம் கேட்டுக் கொண்டு அமர்ந்திர்ந்தாள்.. பின் “பாட்டி, நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்க.. நா.. ன் அப்பாகிட்ட பேசிட்டு சாப்பிடுறேன். நீங்க சாப்பிட்டு மருந்து சாப்பிட்டு படுங்க.. நாங்க பார்த்துக்கிறோம்” என பேசி அவரை உண்பதற்கு அனுப்பி வைத்தாள் பெண்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!

 நீண்ட நேரம் சென்று வாசு வீடு வந்தார். 

ஜெகதீஷ், தன் தந்தையின் கார் சத்தம் கேட்டுக் வேலை செய்துக் கொண்டிருந்தவன் ஹாலுக்கு வந்தான். பெண்ணவளும் அப்படியே. தந்தையோ முழு போதையில் இருந்தார். இதுதான் நடக்கும் என்பதால் பெண்ணவள் அப்படியே நின்றாள்.

வாசு, மகளை பார்த்ததும் அருகில் வந்தவர் சத்தமாக “எனக்கு தெரியும் நீ இப்படிதான் செய்வேன்னு. என்னை ஏமாத்திட்டல்லா. ம்.. ஆனாலும் நம்பி சோறு போட்டேன் பாரு என்னை சொல்லணும்.. அவ போன அன்னிக்கே நானும் போயிருக்கனும். உங்களுக்காகன்னு இருந்து.. உங்களை வளர்த்து..” என சொல்லி சிரமம்பட்டு தன் மகளை பார்த்தவரின் உடல் தடுமாற தொடங்கியது. சென்று அமர்ந்தார் சேரில்.. மீண்டும் “நீ ஏமாத்திட்ட என்னை..” என்றவர், எழுந்து நின்றார்.. தன் மகளை நோக்கி வந்தார் “என்ன எப்போதும் போல ஏமாத்திட்டல்ல..” என்றவர் கோவமாக  மகளை அடிக்க தொடங்கினார்.

ஜெகதீஷ், வந்து தன் தந்தையை பிடித்தான்.. ஆனால், மதம் கொண்ட யானையாக கண்மண் தெரியாமல் மகனை தள்ளி விட்டு.. மகளை அடித்தார்.. கூடவே “போ.. எப்படியோ போ.. அப்போதான் நீ சின்ன பிள்ளை.. எங்க பிள்ள.. இப்போதான் நீ அப்படி இல்லையே.. கண்ணகி என் வளர்ப்பு தப்பா போச்சு..” என சொல்லிக் கொண்டே ஓய்ந்து அமர்ந்தார்.

மிர்த்திக்காவிற்கு சரியான அடி.. கன்னம் வீங்கிவிட்டது.. கையில் அடித்திருந்தார் தந்தை.. எனவே, முதுகு கை எல்லாம் எரிந்தது. அத்தோடு தந்தையின் வார்த்தையில் இப்போது உடல் நடுங்காமல் அமுத்த்மாக நின்றாள் பெண். அவளால் இப்போது அழ முடியவில்லை.. எதிர்பார்த்துதானே நடக்கிறது… அன்றும் இப்படிதானே நடந்தது. அப்போது வலித்தது. இப்போது வலி என்ன.. உறைக்க கூட இல்லை என எண்ணிக் கொண்டே நின்றாள் மரமென. 

ஜெகதீஷ் “அப்பா.. போதும் பா, அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. நீங்க சரியாதான் வளர்த்தீங்க..” என்றான்.

மிர்த்திக்காவின் மனதில் தடுமாற்றம் இந்த வார்த்தையில்தான்.

வாசுதேவனுக்கு மனது கேட்கவில்லை மீண்டும் மீண்டும் மகளை பேசினார்.. “எப்படி எல்லாம் பொத்தி பொத்தி காப்பாத்தினேன் இவளை.. உனக்கு என்னடா தெரியும்.. என் பொண்ணு என்னை ஏமாத்திட்டா” என்றார், ஆற்றாமையாக.

ஜெகதீஷ்க்கு அப்போது நடந்தது எதுவும் சரியாக தெரியாது, ஆனால் தெரியாமலும் இல்லை. அக்காவும் அப்பாவும் ஒருவாரம் ஊரில் இல்லை. அப்போது இந்த சுசீலா பாட்டிதான் வீட்டில் வந்து தங்கினார். அதுதொட்டு சுசீலா பாட்டி உறவு இவர்களுக்கு. 

ஜெகதீஷ் இப்போது “அப்பா, போதும் சாப்பிடலாம்” என்றான்.

வாசு எழுந்துக் கொண்டார் ஏதும் சொல்லாமல் தன்னறைக்கு சென்றுவிட்டார்.

பின் ஜெகதீஷ் தன் அக்காவிடம் வந்து “எழுந்திரு அக்கா, எங்க முகத்தை காட்டு” என்றான்.

மிர்த்தி எழுந்துக் கொண்டாள்.. நேராக டைனின் டேபிள் சென்று அமர்ந்தாள். கை வீங்கி இருந்தது.. அப்பாவின் அடி அவளுக்கு புதிதல்ல.. என்ன வருடங்கள் கடந்து வந்ததால்.. இன்று வலி அதிகம் தெரிந்தது போல.. சுசீலாம்மா இட்லி வைத்திருந்தார். மிர்த்திக்கா தனக்கும் தன் தம்பிக்கும் தட்டம் எடுத்து வைத்து பரிமாற எத்தனித்தாள். வலிதான்.. எங்கென்றே தெரியாமல் வலித்தது, அமர்ந்துக் கொண்டாள். 

ஜெகதீஷ் பரிமாறினான்.. மிர்த்திக்கா உண்ண தொடங்கினாள். கன்னம் வீங்கி விட்டது சட்டென எனவே உணவை மெல்ல முடியவில்லை.. விழுங்கினாள்.

ஜெகதீஷ் அக்காவையே பார்த்துக் கொண்டிருந்தான். முன்போல ஏதும் புரியாமல் இல்லை.. இப்போது வளர்ந்துவிட்டானே.. ‘ஏதோ அக்கா காதல் அது இதுவென இருக்கிறது.. யாராக இருக்கும் அந்த யோகி அண்ணான்னு நினைக்கிறேன்.. கேட்க்கலாமா’ என எண்ணிக் கொண்டே அக்காவை பார்த்திருந்தான்.

மிர்த்திக்கா இரண்டு இட்லிகளை விழுங்கியவள்.. கைகழுவிக் கொண்டு வந்தாள். டேபிளை சுத்தம் செய்தாள். ஜெகதீஷ் “அக்கா.. போ நான் பார்த்துக்கிறேன்” என்றான். ஏதும் சொல்லாமல் அவள் எல்லாம் மூடி வைத்துவிட்டுத்தான், அந்த இடம்விட்டு நகர்ந்தாள்.

பிரிட்ஜ் திறந்து ஐஸ் கீப் எடுத்துக் கொண்டே  தனதறைக்கு சென்றாள், மிர்த்தி. கண்கள் நீரை வார்த்தது.. யாருமில்லை.. எல்லாம் நாங்களேதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.. அம்மாவும் இல்லை.. அவனும் இல்ல.. அதுக்காக வாழாமலா போய்டுவோம்..’ என ஒருமாதிரி விறக்தியில் எண்ணிக் கொண்டே துணியில் சுற்றி ஐஸ் கட்டிக்களை தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். வலிதான்  ஆனால், அந்த வலி அவளின் மூளையை தாக்கவில்லை. 

சற்று நேரம் சென்று.. உடைகளை மாற்றிக் கொண்டு அமைதியாக படுத்துக் கொண்டாள். மனமோ தன் அயோகியை தேட தொடங்கியது. மூளை ‘வேண்டாம்.. தேடாதே.. வலிக்கும்’ என எச்சரித்தது. மனம் ‘வேண்டும் வேண்டும்.. அந்த வலி வேண்டும்..’ என்றது.

மிர்த்திக்காவிற்கு மனம் வலிக்க தொடங்கியது. எழுந்து வெளியே வந்தாள். தன் வீட்டின் முன் பால்கனி. வரவேற்பறை தாண்டி இருக்கும் சின்ன பால்கனியில் நின்றாள் பெண், தெருவின் சாலை கடை தெரியும் அங்கிருந்து பார்த்தால். எட்டி.. பக்கத்து கடையை பார்த்தாள். என்னமோ யோகி அங்கே நிற்பதாக தோன்றியது.. இமைக்காமல் பார்த்தாள்.

!@!@!@!@!@!@!@!@!@!@!

சிறுவயது தொடங்கி இங்கேதான் அவர்கள். வரிசையாக கடைகள்.. அதன் உள்ளே வீடுகள்.. அப்படிதான் அருகருகே மிர்த்தி யோகின் வீடு கடை இரண்டும். இவர்கள் இருவரும் அதிகம் பார்த்துக் கொண்டதோ பேசிக் கொண்டதோ கிடையாது. 

ஆனால், இவர்களின் அன்னைகள் இருவரும் அவ்வளவு தோழமை. என்ன சமையல் என்றாலும் ஓரு வீட்டின் குழம்பு.. இரு வீட்டிலும் மணக்கும். காலையில் கண்ணகி தனலட்சுமியை பார்க்க சென்றார் என்றால்.. மாலையில் தனம்.. கண்ணகியை பார்க்க வந்திருப்பார். ஏகாதசி என்றால் பெருமாள் கோவில்.. வெள்ளி கிழமை அம்மன் கோவில் என சேர்ந்தே செல்லுவர். ஜெகதீஷ் பாதி நேரம் தனத்தின் மேற்பார்வையில்தான் வளர்ந்தான். அப்படி ஒரு பிடிப்பு இருவருக்கும். 

தனலட்சுமி ரங்கநாதன் தம்பதியின் ஒரே மகன் யோகேஷ்வரன். அப்போது அந்த ஏரியாவில் பெரிய கடை இவர்களுடையது. அதற்கு தக்க வேலையாட்கள்.. விளக்குகள் என எப்போதும் பளிச்சென இருக்கும் கடை. தனம், மாலையில் வந்து ஒருமணி நேரம் கடையில் அமர வேண்டும் என்பது ரங்கநாதனின் உத்தரவும். ரங்கநாதனுக்கு தன் மனைவிதான் ராசி என எண்ணம். அதனால், அப்படி ஒரு ஆர்டர். 

மூன்று பிள்ளைகளும் ஒரே பள்ளிதான். யோகி பெரியவன் மிர்த்தியைவிட மூன்று வயது. பிள்ளைகளை வேனில் ஏற்ற.. கூட்டி வருவது என அன்னைகள் ஒன்றாக செல்லுவர். எப்போதும் யோகி, இதில் சேருவதில்லை. ‘கை பிடிச்சி கூட்டி போக நானென்ன குழந்தையா என்பான். முன்னால் சென்றிடுவான்.. இல்லை.. கடைக்கு சென்று எதையேனும் வாங்கிக் கொண்டு உண்டுக் கொண்டே பின்னால் வருவான்.

இப்படியே காலம் சென்றது. 

யோகி ஏழாம் வகுப்பு. மிர்த்தி ஐந்தாம் வகுப்பு. ஜெகன் மூன்றாம் வகுப்பு. பிள்ளைகள் எல்லாம் ஸ்கூல் செல்லுவது படிப்பது என சென்றது.

ஒரு மார்கழி மாதம் கண்ணகி தனம் இருவரும் வருடாவருடம் செல்லுவது போல ஆன்மீக சுற்றுலா சென்றனர். 

ரெங்கனின் அன்னை.. அங்கேதான் இருந்தார்.எப்போது போல யோகியை பார்த்துக் கொண்டார். மிர்த்தி ஜெகனுக்கு, அவரே உணவு கொடுத்திருவார். பிள்ளைகள் இரண்டு நாட்கள்தான்  என்பதால்.. இருந்துக் கொள்வர்.

அப்படி சென்றவர்கள்தான் உயிரோடு வீடு திரும்பவில்லை. மிர்த்திக்காவிற்கே முதலில் என்ன நடக்கிறது என புரியவில்லை. ஏதேதோ நடந்தது. வெறுச்சோடி போன வீடும்.. அன்னையின் வாசமில்லா உணவுகளும்.. பிள்ளைகளுக்கு உண்மையை சொல்லியது போல. அந்த வார இறுதியில்தான் அந்த மூன்று பிள்ளைகளுக்கும் புரிந்தது.. தங்களின் அம்மா இனி வீடு வரமாட்டார்கள் என.

பிள்ளைகள் பள்ளி செல்ல தொடங்கினர். யோகிக்கு புரிய தொடங்கும் வயது.. அழ முடியாத வயதும் கூட. ஜெகன் தினமும் பள்ளி செல்லும் போது.. பஸ் ஸ்டாப்பிங்கில் நின்று “அம்மா அம்மா” என சத்தமாக கதறி கதறி அழுவான். வாசுதான் அவனை தோளில் போட்டுக் கொண்டு “வருவாங்க.. நீ ஸ்கூல் போனால் வருவாங்க..” என சமாதானம் செய்து  பஸ் ஏற்றி விடுவார். 

இதை, யோகி அப்படியே பார்த்திருப்பான். அவனுக்கும் அழுகைதான் வரும்.. அழ கூடாது.. என அமர்ந்திருப்பான் பஸ்சில். 

ஜெகன், அக்காவின் தோளில் சாய்ந்துக் கொண்டு கண்களை துடைத்தபடி விம்மிக் கொண்டே வந்தான். யோகிக்கு அப்படி தோள் சாய கூட யாருமில்லை. ஒருமாதிரி தனிமை.

நாட்கள் செல்ல செல்ல ஜெகனோடு பேசத் தொடங்கினான் யோகி. தினமும் ஜெகனுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்தான் அழாமல் வருவதற்காக. இது இளையவனுக்கு குஷியானது. எப்போதும் பேசாத யோகி.. தங்களிடம் சேராத யோகி.. பேசவும் சாக்லெட் வாங்கி கொடுக்கவும்.. ஜெகன் யோகியோடு கலந்துக் கொண்டான். 

பக்கத்து வீடு என்பதால் இயல்பாக விளையாட.. வெளியே செல்ல.. படிக்க.. என ஜெகன் யோகியை  அதிகம் சார்ந்திருந்தான். மிர்த்திக்கா தனியானாள். இது ஆண் பிள்ளைகள் இருவருக்கும் புரியவில்லை.

வருடம் இரண்டு கடந்தது.. மிர்த்திக்கா வாய் பேசாத பெண்ணானாள். தனிமையில் உண்பது.. தோழிகள் அழைத்தாலும்.. அவர்களோடு உண்பதில்லை.. பேசுவதில்லை. வீட்டிற்கு வந்தால்.. கீழே கடைக்கு கூட வருவதில்லை. மேலேயே படிப்பது.. தந்தையோடு சேர்ந்து சமைப்பது.. பாத்திரம் தேய்ப்பது என இருந்துக் கொண்டாள்.

தந்தைக்கு பெரிதாக இதெல்லாம் தெரியவில்லை. அவருக்கு, ஒரு நிலைக்கு வரவே இந்த வருடங்கள் தேவைப்பட்டது. முதலில் எல்லோரும் உதவினர்.. பிள்ளைகளுக்கு அக்கம் பக்கம் எதோ ஒரு வீட்டிலிருந்து உணவு வரும். தன் அக்கா காமாட்சி வந்து வார இறுதியில்.. மிர்த்திக்கு தலைக்கு தேய்த்து குளிக்க வைப்பது.. வீட்டை ஒழுங்கு செய்து கொடுப்பது என உதவிக் கொண்டிருந்தார். ஆனால், நாட்கள் கடக்க கடக்க.. எல்லாம் தள்ளி போகிற்று. அவரவர்க்கு அவரவர் வேலைகள். வாசு, தனியாக வீட்டு நிர்வாகம், பிள்ளைகள் பராமரிப்பு என பழக தொடங்கினார்.

வாசு தடுமாறி கற்று.. இப்படி இது.. என தெரிந்துக் கொள்ளவே வருடங்கள் ஆனது. அதில் ஒரு வாய்ப்பாக மகன் கொஞ்சம் வெளியே விளையாட செல்லுகிறான் யோகியோடு உண்ணுகிறான் படிக்கிறான் என்பதே அவருக்கு கொஞ்சம் தளர்வாக இருந்தது. கடையில் கொஞ்சம் கவனம்.. வீட்டில் கொஞ்சம் கவனம்.. பெண் பிள்ளைக்கு பாதி வேலை சொல்லுவது என நேரம் எடுத்தது அந்த மனிதருக்கு. அதனால், மிர்த்தியின் அமைதி அவருக்கு தெரியவில்லை. எப்படியோ பிள்ளைகள் தொல்லை செய்யாமல் இருந்தால் சரி என இருந்தார்.

மிர்த்தி, யாரோடும் பஸில் பேசுவதில்லை.. பள்ளியிலும் அதிகம் பழகுவதில்லை.. படிப்பில் தேர்ந்துவிட்டாள். ஆனால், தனியாகிக் கொண்டாள்.. அவளுக்கு சமையல் பிடிபட தொடங்கியது. வேலைகள் சரியாக இருந்தது.. வேலையோடு கூடிய தனிமைதான் வாய்த்தது அவளுக்கு. அதை அவளும் ஏற்றுக் கொண்டாள். 

ஒருகட்டத்தில் இரவு உணவை தானே சமைக்கும் வரை வந்துவிட்டாள். சாக்ஸ் எப்படி துவைக்க வேண்டும்.. எது எங்கே இருக்கிறது என அந்த பெண் பிள்ளை தெளிந்துக் கொண்டது. அவளின் தந்தை காய் நறுக்க.. இவள் கரண்டியோடு நின்று சமையலை செய்ய தொடங்கிவிட்டாள். வாசுவிற்கு.. என்ன சமைப்பது என யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் பார்த்துக் கொண்டாள் பெண்.  இப்படி நிறைய. ஒரு வீட்டை நிர்வகிக்க தொடங்கினாள் எட்டாம் வகுப்பு பெண். அதனாலோ என்னமோ ஒரு அழுத்தம். எனக்கு எல்லாம் தெரியும் என மனதில் பதிய தொடங்கிவிட்டது. 

பெரிய பெண்ணாகினாள் மிர்த்திக்கா.. காமாட்சி வந்தார். எல்லாம் பார்த்து பார்த்து செய்தார்.. சிறப்பாக கண்ணகியின் அண்ணன் சீர் செய்தார். எல்லாம் நன்றாக நடந்தது.

மிர்த்திக்கா எப்போதும் போல நாட்கள் சென்றது. 

யோகி, இந்த வருடங்களில் ஜெகனை எப்போதும் கூடவே வைத்துக் கொண்டான். ஆனால், பள்ளி படிப்பை புறக்கணிக்க தொடங்கினான். நிறைய வெளியே சுற்றினான்.. நண்பர்களை பார்க்க செல்லுகிறேன் என்றான்.. கிரிகெட் விளையாட போகிறேன் என படிப்பதை விடுத்து வெளியே சுற்ற தொடங்கினான்.

ரெங்கன், மகன் பாவம் விளையாடட்டும் என விட்டுவிட்டார். ஆனால், பத்தாம் வகுப்பு வரும்போது.. யோகி வீடு தங்குவதே இல்லை என்றானது. பள்ளியிலிருந்து புகார் மேல் புகார். யோகி எல்லா பாடத்திலும் தேர்ச்சுபெறுவதே போராட்டமாக இருகிறது.. அடுத்த வருடம் அரசு தேர்வு எழுதட்டும்.. எங்களுக்கு ரிசல்ட் பாதிக்கும் என ரெங்கனிடம் சொல்லியும் விட்டனர்.

அன்று ரெங்கன் மகனிடம் விசாரணை செய்து கொண்டிருந்தார்.. எனவே , பள்ளி சொன்னதை சொல்லி டியூசன் போ.. காலையில் மாலையில் எப்போது வேண்டுமோ போ.. கொஞ்சம் படி.. என பேச தொடங்கினார். 

மகனோ ‘அதெல்லாம் நல்லா எழுதிடுவேன்.. இல்லேன்னா அவங்க சொல்றா மாதிரி அடுத்த வருடம் எழுதிக்கிறேன்.. என்ன இப்போ’ என்றான் அசால்ட்டாக.

தந்தைக்கு கோவம்.. மகனை அடிக்க கை ஓங்கிவிட்டார். அது சண்டையாக மாறியது. ரெங்கனின் அன்னை அப்போது இருந்தார், அவர் பேரனுக்கும் தன் மகனுக்கும் நடக்கும் சண்டையை விளக்க எண்ணி, பேசினார். ஆனாலும் ரெங்கன் மகனை கண்டிக்க.. மகனுக்கு கோவத்தில் என்ன செய்வது என தெரியாமல் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு.. வெளியே வந்தான் எரிச்சலாக. தந்தை அப்படியே அமர்ந்தார் மகனின் இந்த அடாவடியில்.

யோகேஷ்வரேன், உங்கள் மகன்தானே என மருத்துவமனையிலிருந்து அழைப்புதான் வந்தது ரெங்கனுக்கு.

ரெங்கனின் அன்னை.. ரெங்கனை வசைபாடினார். ரெங்கனும் அதிர்ந்து அமர்ந்துவிட்டார். பின் கடையில் வேலை செய்யும் திடமான மனிதர்தான் இருவரையும் அவர்கள் காரில் அழைத்துக் கொண்டு மருத்துவமனை வந்தனர். 

 

Advertisement