Advertisement

நீ என் அலாதிநேசம்!

26

ஜெகன் தந்தைக்கு அழைத்து சொல்லி இருந்தான், மிர்த்தி.. திருச்சி வருவது பற்றி. வாசு மகனை திட்டினார்.. “ஏன் டா, வருகிறாள் அவள்.. நீங்கதான் என் பேச்சை மதிக்கமாட்டேன்ன்னு.. பிடிவாதம் பிடிக்கிறீங்களே.. உங்க போக்கை நீங்க பார்த்துக்கோங்க.. என்னை ஏன் டா.. தொந்திரவு செய்யோறீங்க..” என்றார். என்னமோ இந்தமுறை அவரின் குரலில் அத்தனை வீரியம் இல்லை.. தளர்ந்து ஓய்ந்து இருந்தது.

ஜெகன் “அதெப்படி.. நீங்கதானே அப்பா.. நீங்கதான் எல்லாம் செய்யனும்.. அப்படி எல்லாம் எங்க போக்கை நாங்க பார்த்துக்க முடியாது. அவளை ஏதும் திட்டாமல்.. சுமூகமாக பேசி.. அவளை வாழ விடுங்க.. இனியாவது உங்க வீணாப்போன கௌரவத்தை தலை முழுகிட்டு.. கொஞ்சம் அன்பு.. கருணையை எங்க மேல காட்டுங்க..” என்றான்.

வாசு “டேய்.. வை டா போனை” என்றவர்.. தானே அழைப்பை துண்டித்துவிட்டார்.

வாசு மகளுக்கு அழைத்து பேசவில்லை. அவளை அழைத்து வர பஸ் ஸ்டான்ட்டும் செல்லவில்லை. தன் அக்கா காமாட்சிக்கு அழைத்து பேசினார். அவரை தன் வீட்டிற்கு வர சொல்லிவிட்டார்.. தன் மகளை பார்ப்பதற்கு.. அவளிடம் பேசுவதற்கு.. அத்தோடு, அவளிடமிருந்து தான், கொஞ்சம் தூரமாக இருப்பதற்கும்.

மிர்த்திக்கா வீடு வந்தாள்.

வாசு “வா மிர்த்தி” என்றார்.. கடையிலேயே இருந்துக் கொண்டார்.

மதிய உணவு டேபிளில் இருந்தது.. மிர்த்திக்கா உடைமாற்றி வந்து உண்டாள்.

மிர்த்தி, உறங்கி எழுந்தாள். ‘தந்தை மதியம் உறங்குவதற்கு கூட வரவில்லையா.. இல்லை தான் தாமதமாக எழுந்துக் கொண்டுமோ..’ என எண்ணிக் கொண்டே காபி கலந்து குடித்தாள். மனது அப்பாவிடம் எப்படி பேசுவது என ஒத்திகை பார்த்துக் கொண்டது.

கீழே வேலை செய்யும் அக்கா ஒருவர் மேலே வந்தார்.. “வா மிர்த்தி..” என்றார்.

மிர்த்திக்கா யோசனையிலிருந்து வெளியே வந்தாள் “என்ன அக்கா.. எப்படி இருக்கீங்க..” என அவரிடம் பேச்சை தொடங்கினாள். அப்படியே அவருக்கு காபி கலக்க தொடங்கினாள்.

அவரும் பேசிக் கொண்டே.. “வாசு அண்ணன் உனக்கு என்ன டிபன் வேண்டும்ன்னு கேட்டு செய்ய சொன்னார் ம்மா.. சொல்லு.. உனக்கு என்ன வேண்டும்.. நீ ரெஸ்ட் எடுத்தால் போதும். பாரு கன்னமெல்லாம் ஒட்டி போச்சு. ம்… என்ன செய்ய” என்றார்.. அவளின் காபியை சுவைத்துக் கொண்டே.

மிர்த்திக்கா “காய் கட் செய்ங்க அக்கா.. என்ன இருக்குன்னு பாருங்க.. இல்லை, வாங்கிக்கலாம்.” என சொல்லியவள் சப்பாத்திக்கு மாவு பிசைய தொடங்கினாள்.

ஊர் கதை தொடந்தது.

இரவு எட்டு மணிக்கு.. அத்தை காமாட்சி வந்து சேர்ந்தார்.

மிர்த்திக்கு சந்தோஷம்.. அத்தையோடு அரட்டை. இருவரும் உண்டு.. வாசுவிற்காக காத்திருந்தனர்.

வாசு, வந்தார் பதினோரு மணிக்கு. 

காமாட்சி.. “என்ன டா.. இவ்வளவு நேரம். உடம்பை கவனிச்சிக்க வேண்டாமா.. சரியான நேரத்திற்கு சாப்பிடனும். எவ்வளவு நேரம். மிர்த்தி அவனுக்கு டிபன் கொடு” என பேசிக் கொண்டே இருந்தார்.

மிர்த்தி அப்படியே அமர்ந்திருந்தாள்.. தந்தையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு. என்னமோ அப்பா தன்னை புதிதாக ஒழித்து வைத்துக் கொள்வதாக பெண்ணுக்கு தோன்றியது இந்த ஷணம்.

ம்.. வாசு மகளை பார்த்தார்.. ஆனால், என்னமோ தடுக்கிறது.. அவளின் இமைக்காத பார்வையை எதிர்கொள்ள.. என்னமோ தடுகிறது. அப்படியே அமர்ந்து அக்காவிடம் பேச தொடங்கினார்.

மிர்த்திக்கா அமைதியாக இருவரின் பேச்சுகளையும் கவனிக்க தொடங்கினாள்.

வாசு மகளை அடிக்கடி ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே பேசினார்.. உறவுகள்.. யாரோ பெண்ணின் திருமணம்.. வயதானவரின் உடல் நலமின்மை என எல்லா பேச்சுகளும் சென்றது.

மிர்த்திக்கா எழுந்துக் கொள்ளவில்லை. 

வாசு, எழுந்து தனது அறைக்கு சென்றார்.

காமாட்சி “என்ன அப்படியே உட்கார்ந்துட்ட மிர்த்தி. அப்பாக்கு டிபன் எடுத்து வை.. வந்திடுவான் வாசு” என்றார்.

மிர்த்தி “உங்க தம்பி வந்து, என்கிட்டே சொல்லட்டும்.. கேட்கட்டும்.. அத்தை” என்றாள்.

அத்தையோ “ம்.. இத்தனைநாள் இங்கேயா இருந்த நீ.. போடி அவனே போட்டு சாப்பிட்டுக்குவான். நண்டு சிண்டுக்கெல்லாம் அவன் பதில் சொல்லனுமா.. நீ போய் படு. இப்போது எதுக்கு வேலையை விட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்க நீயி” என ஆரம்பித்தார்.

அப்பா டா.. மிர்த்தி இந்த வார்த்தையை கேட்கத்தானே காத்திருந்தாள்.. மிர்த்தி “என்ன அத்த.. தெரியாத மாதிரி கேட்க்குறீங்க. அப்பாகிட்ட சம்மதம் வாங்க வந்திருக்கேன். எங்க அப்பா இப்படி எத்தனைநாள் என்னையும் யோகியையும் தண்டிக்கிறார்ன்னு பார்க்கிறேன்” என்றவள் தந்தை வருவதை உணர்ந்து அமைதியானாள்.

அத்தையோ “ம்.. தனியா சம்பாதிக்கவும் தைரியம் கூடி போச்சு போல.. உனக்கு. இப்போ சொல்லு உன் அப்பான்தான் வந்துட்டானே” என்றார்.

மிர்த்தி அமைதியாக உள்ளே சென்று.. தண்ணீர் எடுத்து வந்தாள்.. ‘அத்தை எனக்கு பேசுறாங்களா.. இல்லை, அப்பாக்காக பேசுறாங்களா’ என யோசித்தாள் பெண். தட்டம் வைத்து பரிமாற தொடங்கினாள் தன் தந்தைக்கு.

வாசு “என்ன சொல்றா அக்கா” என்றார் தன் மகளை பார்த்துக் கொண்டு.. தன் அக்காவிடம் கேள்வி கேட்டார்.

காமாட்சி “என்ன சொல்லுவா.. அந்த யோகியைதான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்றா.. நீதான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போயேன்” என்றார்.. அதே இடத்தில் இதுவரை மிர்த்தியை திட்டிக் கொண்டிருந்தவர்.. அப்படியே கட்சி மாறி.. பேசினார்.

மிர்த்தி விழித்தாள்.

வாசு “என்ன.. அதுக்குதான் இங்க வந்தாளாமா” என்றார், உணவில் கவனம் போல.

மிர்த்திக்கு, தந்தையின் இந்த வார்த்தை வலியை தந்தது. உண்மைதான்.. யோகிக்காக பேசத்தான் இங்கே வந்தது.. அவரை பார்க்க இல்லைதான். ஆனாலும், அப்பாவிடம் பாசம் இல்லாமல் இல்லையே.. பதில் சொல்ல முடியவில்லை.

மிர்த்தி “அப்படி இல்ல ப்பா.. உங்களுக்காகவும்.. அவருக்காககவும்தான் வந்திருக்கேன் ப்பா.” என்றாள் குற்றயுணர்வான குரலில்.

வாசு “இத்தனை மாசம் எங்க போச்சு.. இந்த அக்கறை எல்லாம்” என்றார்.

மிர்த்திக்கா அமைதியாகினாள்.

வாசு உண்டு முடித்துவிட்டார், எழுந்து கை கழுவிக் கொண்டு.. “அக்கா.. மிர்த்தி கூட தூங்குக்கு அக்கா.. காலையில் பேசலாம்” என்றவர் மாத்திரைகளை விழுங்க தொடங்கினார்.

காமாட்சி “ஆமாம் ப்பா.. நேரங்காலாத்தில் தூங்கு. வா மிர்த்தி” என சொல்லிக் கொண்டே அவளின் அறைக்கு சென்றார்.

மிர்த்தி “அப்பா.. உங்ககிட்ட பேசணும்” என்றாள்.

வாசு நிமிர்ந்து மகளை பார்த்தார்.

மிர்த்தி “அப்பா, யோகி.. யோகி.. வீட்டில் என்னை கல்யாணத்திற்கு கேட்க்கிறாங்க ப்பா.. வந்து பேசலாமா கேட்க்கிறாங்க ப்பா.” என கேட்டாள்.

வாசு அமைதியானார்.

மிர்த்தி “அப்பா.. உங்க கோவம் நியாயமானது. ஆனால், என் விருப்பமும் நியாயமானது தானே. என்னையும் கொஞ்சம் யோசிச்சி பாருங்க ப்பா.” என்றாள்.

வாசு எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்திருந்தார்.

மிர்த்திக்கா “அப்பா.. யோகி, இன்னும் சின்ன பையனில்லையே அப்பா. நீங்க நினைப்பது போல இப்போ அவன் இல்ல ப்பா. நல்லவன் அப்பா. என்னை நல்லா பார்த்துப்பான்..” என எதோ சொல்ல வர..

வாசு மகளை ‘நிறுத்து’ எனுமாறு கைகாட்டினார். அவருடைய ஆதங்கம் எத்தனை நியாமானது என்று பாவம் அவரின் மகளுக்கு புரியவேயில்லை. அந்த தந்தைக்கு புரியவைக்கவும் தெரியவில்லை. ம்.. யோகியை பார்க்க பார்க்க.. பழைய ஞாபகங்கள்தான் வருகிறது வாசுவிற்கு. எப்படி சொல்லுவார்.. மகளிடம், யோகியின் குணம் எனக்கு பிடிக்கவில்லை என.. சிறுவயதிலேயே இப்படி உன்னிடம் தவறாக நடந்துக் கொண்டவனை.. எனக்கு பிடிக்கவில்லை என தன் வாய்மொழியில் மகளிடம் சொல்ல அவரால் முடியவில்லை. மகளோ அவனை விரும்புகிறாள்.. அதனால், மனதை கலைக்க முடியவில்லை. மேலும் இத்தனை வருடங்களாக.. மகளை பாடாக படுத்தியதில்.. அவனை வெறுக்கவும் இல்லை மகள். அதனால், தன்னுடைய எண்ணத்தை சொல்லவும் முடியவில்லை. மகளுக்காக என்றாலும்.. அவனோடு இணங்கி பேசவும் முடியவில்லை. என்னமோ அவனை பார்த்தாலே.. கோவம்தான் வருது. இப்போது மகள் முடிவு வேண்டும் என வந்து நிற்கிறாள்.. என்ன சொல்லுவது இப்போது.. மகள் மனம் மாறமாட்டாள் போல.. என யோசனை வந்தது.. தந்தைக்கு. அவரின் பொறுமையை இந்த இரவில் சோதித்தாள் பெண்.

Advertisement