Advertisement

மிர்த்தி “என்ன அப்பா.. நா..ன்..” என தொடங்கினாள்.

வாசு “போதும்மா.. காதல் உன் கண்களை மறைக்குது. நடக்கட்டும் ம்மா.. உன் விருப்பபடியே நடக்கட்டும் எல்லாம்” என்றவர் எழுந்தார்.

மிர்த்தியும் எழுந்து நின்றாள் “அப்பா இது.. நீங்க முழு மனசாக சம்மதம் சொல்லலை” என்றாள்.

வாசு “நீயும் அதை எதிர்பார்க்கலையே டா..” என்றார்.

மிர்த்தி “அப்பா” என்றாள்.

வாசு இங்கும் அங்கும் நடந்தார்.. பெண்ணின் மன்றாடுதலை பார்க்க முடியவில்லை அவரால்.

மிர்த்தி “யோகி, அப்போ எதோ தப்பாக நடந்துகிட்டான். அதுக்காக அவன் எத்தனை நாள் தண்டனை அனுபவிப்பான். தப்பே செய்யாதவங்க யாருப்பா இருக்காங்க. அவன் உன்கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டான். நீங்க மன்னிக்க கூடாதா ப்பா” என்றாள் ஆதங்கமாக.

வாசு அமைதியாகவே இருந்தார். பெண்ணவளுக்கு அந்த அமைதி எரிச்சலைத்தான் கொடுத்தது. இன்னும் இன்னும் பிடிக்கலை என கோவத்தினை எத்தனைநாள் பதிலாகவே சொல்லுவார். நான் வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்.. தெரியும் அப்பாவிற்கு இத்தனை நாட்களில். எனக்காக யோகியை அனுமதிக்க கூடாதா.. அப்படி என்ன பிடிவாதம். அப்போ எனக்கு கல்யாணம் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லையா.. என இத்தனை ஆண்டுகளின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற தொடங்கியிருந்தது பெண்ணுக்கு.

ம்.. பொறுமையின் இருவேறு துருவத்தில் இருவரும் நின்றிருந்தனர்.

சற்று நிதானித்திருந்த மிர்த்தி “யோகி நீங்க நினைக்கும் அளவுக்கு கெட்டவன் இல்ல ப்பா.. அப்பொழுதும் என்மேல் இருக்கும் அன்பினால் தப்பு செய்தான். இப்பவும் என்மேல் இருக்கும் அதே அன்பினால்.. பொறுமையாக இருக்கான். நானும் எல்லாவற்றுக்கும் காரணம் தானே ப்பா. அப்போ, நானும் நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறீங்களா” என்றாள் கோவமாக தந்தையை பார்த்து.

வாசு, மகளை எரிப்பது போல பார்த்தார்.

மிர்த்தி குரல் உயர்த்தி தந்தையை பார்த்து “என்னை நல்லா பார்த்துப்பான் ப்பா. நீங்க கண்டிப்பா.. யோகியின் வீட்டில் பேசணும் ப்பா.. என்னமோ செய்ங்கன்னு சொல்லாதீங்க.. அவங்க வந்தாங்க அன்னிக்கு பொண்ணு கேட்க்க.. நீங்க கொஞ்சம் கூட மதிக்கல. இப்பொழுதும் அவங்களை நான் வர சொல்லுவேன். நீங்க சரியாக பேசணும் ப்பா. நான் நல்லா இருக்கனும்ன்னு நீங்க நினைச்சால்.. பேசுங்க. ஆனால், ஒன்னு.. நீங்க மனம் மாறி.. அவனை ஏற்றுக் கொண்டால்தான் எங்களுக்கு திருமணம். அதுவரை நான் எங்கயும் போகமாட்டேன். நீங்க நல்லா முடியாக சொல்லுங்க” என்றவள் தன் துப்பட்டாவை உதறி.. தன் தோளில் அணிந்துக் கொண்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

வாசு, ஓய்ந்து அப்படியே அமர்ந்தார், ஒன்றும் பேசமுடியாமல். மகளின் சம்மதம் சொல் வெல்ல வேண்டும் எனதான் எண்ணம். ஆனால், அவள் கேட்பது போல.. அவனை முழுமனதாக ஏற்றுக் கொள்ளும் அளவு சம்மதமில்லைதான். என்ன செய்வது என அப்படியே அமர்ந்தார்.

சற்று நேரம் சென்றுதான் உறங்க சென்றார்.

காலையில் மிர்த்தி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

அக்காவும் தம்பியும்.. காமாட்சியும் வாசும் பேசிக் கொண்டிருந்தனர். 

வாசு “மிர்த்தி, வேலையை விட்டுட்டாளா தெரியலை. கல்யாணத்திற்கு ஒத்துக்கும் வரைக்கும் இங்கிருந்து போகமாட்டேன் அப்படின்னு நைட் சொல்லிட்டா. என்ன செய்யறது தெரியலை அக்கா. அவனைத்தான் கல்யாணம் செய்து வைக்கணும்ன்னு கேட்க்கிறாள்.” என்றார் ஆதங்கமாக.. இரவு பேசியதையெல்லாம் சொன்னார்.

காமாட்சி “ம்.. இவ்வளவு தெளிவா பேசற பொண்ணுகிட்ட இன்னும் எத்தனை நாள்.. மறுப்பை சொல்லுவா வாசு. அவளாக ஏதாவது முடிவெடுக்க மாட்டாள் அப்படின்னு உனக்கு எண்ணம்.. அதான் இப்படி ஒரு பொண்ணை படுத்தற. இது சரியில்லை வாசு. கல்யாண வயசு தாண்டுது. உனக்கு கொஞ்சம் பிடிவாதம் அதிகமாகத்தான் இருக்கு. அம்மா இல்லாமல் வளர்ந்த பெண்.. எதற்கும் ஆசைபடாதவள். நம்ம ஆளுங்கதானே. எதுக்கு யோசிக்கறன்னு தெரியலை..” என்றார் ஆழ்ந்த மூச்செடுத்து.

வாசு “இந்த காதல் எல்லாம் சரியாக வராது அக்கா.. எனக்கு மனசு ஒப்பலை” என்றார். 

காமாட்சி “சரியாதான் வரும். இங்கிருக்கும் போதே.. பழகியிருக்காங்க ரெண்டு பெரும்.. படிச்சு முடிச்சி இப்போது வேலைக்கும் போறாங்க. இன்னும் என்ன வேண்டும் உனக்கு.. காரணம் போதும் டா..” என்றார்.

வாசு “யார் சொன்னாங்க இதெல்லாம்” என்றார் எரிச்சலாக.

காமாட்சி “அந்த பையன் பற்றி ஜெகன் நேற்று பேசினான். நல்ல வேலை.. தனியாகவும் கேஸ் நடத்துகிறான் போல.. ஓரளவுக்கு மேல்.. பெற்றவர்களும் விட்டு கொடுத்து போயிடனும் ப்பா, இறுக்கி பிடித்தால்.. நஷ்ட்டம் நமக்குதான்.” என்றார்.

வாசு  “சரி க்கா, என்ன ஏற்பாடோ பாருங்க அக்கா. எனக்காக இல்லை அவளுக்காக. அவன்கிட்ட பேசு.. அப்படி இப்படின்னு ஏதும் என்கிட்டே சொல்லாத.. நீ பார்த்து பேசு. ஜெகனை பேச சொல்லு.. அவங்க வீட்டில் பெரியவங்களை வர சொல்லு பேசிக்கலாம். நான் கடைக்கு கிளம்புகிறேன்” என எழுந்துக் கொண்டார்.

காமாட்சி “என்ன டா.. என்கிட்டே சொல்ற. உன் பொண்ணு ஆசைப்பட்டத.. அவகிட்ட சொல்லு. இரு கூப்பிடுறேன். எங்கயும் போய்டாத.” என்றவர்.. தள்ளாத நடையோடு.. சந்தோஷ செய்தியை தாங்கிக் கொண்டு.. இளையவளை எழுப்பினார் காமாட்சி அத்தை.

மிர்த்தி எழுந்து ஹாலுக்கு வர பத்து நிமிடம் ஆனது. அத்தையோ.. காபி கலந்து கொடுத்துக் கொண்டே “இருப்பியா லீவ் போட்டிருக்கியா.. இல்லை, கிளம்பிடுவியா..” என்றார் நமுட்டு சிரிப்புடன்.

மிர்த்தி “தெரியலை அத்த..” என சொல்லி கிட்சென்னில் கீழேயே அமர்ந்துக் கொண்டாள். முகமே ஓய்ந்து போனது பெண்ணுக்கு.

வாசு குளித்து வந்திருந்தார். பூஜை அறையில் திருபல்லாண்டு ஓதும் சத்தம் வந்தது.. மணியின் ஓசை கேட்டது. மிர்த்தி கண்களை மூடிக் கொண்டு.. அப்படியே ப்ராத்தனை செய்தாள்.. ‘அப்பா சம்மதம் சொல்லிடனும்’ என.

காமாட்சி அத்தை “இன்னும் தூக்கம் போகலையா மிர்த்தி உனக்கு. இதில் அப்பாகிட்ட பேசனும்ன்னு வேலையை விட்டுட்டு வந்திருக்க” என்றார் நக்கலாக.

மிர்த்தி “அத்தை.. என்னை பார்த்தால் இப்படிதான் எல்லோருக்கும் நக்கலா இருக்குல்ல..” என சொல்லி காபி வாங்கிக் கொண்டாள்.. மனம் என்னமோ செய்தது பெண்ணுக்கு.

காமாட்சி டைனிங் டேபில் சேரில் அமர்ந்தார்.

வாசு வந்து சேர்ந்தார்.

காமாட்சி “என்ன டா.. வரம் வாங்கிட்டியா. உன் பொண்ணுகிட்ட சொல்லிடு. முகத்தை பார்க்க முடியலை அழுது வடியுறா..” என்றார்.

மிர்த்திக்கா அப்படியே அமர்ந்துக் கொண்டு டைனிங் ஹால் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் என்ன பேசுகிறார்கள் என.

தந்தையின் முகத்தில் புன்னகை இல்லை.. ஏன் அதற்கான சாயல்கூட இல்லை. ஆனால், அத்தையின் முகத்தில்.. என்னமோ ஒரு கள்ள புன்னகை.. அதனால், மிர்த்திக்கா ஏதும் புரியாமல் அமர்ந்திருந்தாள்.

வாசு “மிர்த்திக்கா, யோகியோடு வீட்டிலிருந்து பேச சொல்லு.” என்றார்.

காமாட்சி “சீக்கிரம் கூப்பிட சொல்லு மிர்த்தி. தை மாதம் கல்யாணம் வைச்சிடலாம். என்ன மண்டபம்தான் கிடைக்கனும். எல்லாம் உன் அப்பன் பார்த்துப்பான். நீ அவங்க வீட்டு பெரியவங்ககிட்ட பேசிட்டு என்கிட்டே கொடு.. நானும் பேசுறேன்” என்றார் புன்னகையோடு.

மிர்த்திக்காவிற்கு.. ஆனந்த கண்ணீர்.. ததும்பி ததும்பி.. கரைதாண்டி சீராக கன்னத்தில் வழிந்தது. மிர்த்தி செல்லும் அப்பாவின் முன் ஓடிவந்து நின்றாள்.

மிர்த்தி “தேங்க்ஸ் அப்பா.. ஆனால், நீங்க சந்தோஷமா இருக்கீங்களா.. உங்களுக்கு ஓகேதானே.” என்றாள்.

காமாட்சி அத்தை “அடி ஏண்டி.. உன் அப்பாவுக்கும் கொஞ்சம் டைம் கொடேன். சரின்னு சொல்லிட்டானில்லா. எல்லாம் வந்து போக.. பேசி பழக.. சரியாகிடும்.” என்றார்.

மிர்த்திக்கா தன் அப்பாவையே பார்த்திருந்தாள்.

வாசு அவளை கடக்க முற்பட்டார்.

மிர்த்தி “அப்பா, கடனேன்னு சொல்றீங்களா அப்பா” என்றாள்.

வாசுவிற்கு இந்த வார்த்தைதான் உறுத்தியது.. சட்டென பெண்ணின் கையை பிடித்தவர்.. உள்ளே வந்தார்.. ஹாலில் அமர்ந்தார், பெண்ணை தன் அருகே அமர்த்தினார். பெண்ணிடம் “அப்படி இல்லம்மா. அப்படி இல்ல.. எல்லாம் சரி செய்துக்கலாம் ம்மா. நான் கொஞ்சம் பழைய ஆளு. அதான், சட்டுன்னு ஏத்துக்க முடியலை. ஆனால், இதுதான் சரி. உனக்கு பிடிச்சிருக்குல்ல.. நீ சந்தோஷமா இரு. நான் சரியாகிடுவேன் டா..” என்றார்.

காமாட்சி “மிர்த்தி, இதென்ன ஏதேதோ கேட்டுட்டு இருக்க.. எல்லாம் சரியாகிடும். நீ  அதெல்லாம் யோசிக்காத. வா.. காபி குடி. வாசு, மெஸ்ஸில் ஏதாவது டிபன் வாங்கிட்டு வர சொல்லு டா.. நீ கிளம்பு, நான் பேசிக்கிறேன்” என்றார்.

வாசு சுதாரித்துக் கொண்டார். லேசாக புன்னகைத்தார் மகளை பார்த்து “போடா.. பெரியவங்க இருக்கும் போதே பேசிக்கலாம். அன்னிக்கு வந்தாங்கல்ல.. அவங்ககிட்ட பேசு..” என்றவர் எழுந்து கடைக்கு சென்றார்.

மிர்த்தி புன்னகைத்தாள்.

 

Advertisement