Advertisement

ஜெகனுக்கு யோகியின் பேச்சு இப்போது கேட்டது. புன்னகை கூட வந்தது. தன் காதில் ஹெட்செட் எடுத்து வைத்துக் கொண்டான்.. வேலையை பார்த்தான். 

மிர்த்திக்கா அமைதியாகவே அமர்ந்திருந்தாள் தன் அறையில். அப்பா என்ன பேசினார் என ஓடிக் கொண்டிருந்தது மனதில்.. காதில் கேட்டவைகளையும் தனக்குள் ஓட்டி பார்த்தாள் பெண். இருவரின் கோவமும் சரிவிகிதத்தில் இருந்தது.. இரண்டு கண்களும் கசிந்தது பாரபட்சமே இல்லாமல்.

யோகி ஹாலில் அமர்ந்துக் கொண்டான். நிமிடங்கள் கடந்தது அவள் இங்கே வருவாள் போல தோன்றவில்லை அவனுக்கு. கிட்சேன் சென்று பொருட்களை தேடி எடுத்து காபி கலந்தான்.

யோகி “மிர்த்தி “ என அழைத்துக் கொண்டே அவளின் அறை வாசலில் நின்றான்.

மிர்த்திக்கா கதவை திறந்தாள்.. கையில் காபி கப்போடு யோகி நிற்பதை பார்த்ததும்.. எல்லாம் பின்னுக்கு போனது “என்னது இது..” என கப் வாங்கிக் கொண்டாள்.

யோகி “வா வெளிய வா..” என்றான், அதட்டலாக.

ஒன்றும் சொல்லாமல் அவனோடு சென்று அமர்ந்தாள். இருவரும் பேசிக் கொள்ளவில்லை.. காபி குடிப்பதும் அருகருகே இருப்பதும்.. போதும் என எண்ணிக் கொண்டனர் போல.

பத்துநிமிடம் கடந்தது.. கப் இரண்டையும் இருவரும் கீழே வைத்தனர்.

யோகி “கோவிலுக்கு போலாமா.. நீ ப்ரீ’யா” என்றான்.

மிர்த்திக்கா “ம்” என்றாள்.

மிர்த்திக்கா கிளம்பினாள்.

பத்துநிமிடத்தில் ஜெகனிடம் சொல்லிக் கொண்டு, இருவரும் கோவில் சென்றனர்.

மிர்த்திக்காவிற்கு எங்கே போகிறோம் என்ன என ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.. அவனோடு இருப்பதே போதுமென வண்டியில் அமர்ந்துக் கொண்டால் போல.. காற்று முகத்தில் வீச.. ஒரு பயணம். 

பேச்சுகள் குறைவுதான். இருவருக்கும் மனது நிறைய பாரம். பேசிக் கொண்டால் இன்னும் அதிகமாகும் என்பதால்.. மௌனத்தை எடுத்துக் கொண்டனர்.

நீண்டதூரம் போல ஒருபயணம். அவ்வபோது சிக்னலில் அவனின் தோளில் தனது தாடையை வைத்துக் கொண்டு வேடிக்கை  பார்த்தாள். அவன் ப்ரேக் போடும் இடங்களில் எல்லாம்.. அவனின் ஷர்ட்டினை பிடித்துக் கொள்ளுகிறேன் என ஷர்ட்டினை இழுத்துக் கொண்டாள். 

ரொம்ப நேரம் கடந்து கோவில் வந்தது போல உணர்ந்தாள், ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. யோகிக்கு கோவில் செல்ல வேண்டும் என இருந்தது. அதுவும் தான் தவறாமல் செல்லும்..  நங்கநல்லூர்தான் அவனின் மனதில் இருந்தது. வண்டியை விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான்.

மிர்த்திக்கா பூஜை பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு.. முன்னே சென்றாள். யோகி பின்னாலேயே சென்றான். 

உயர்ந்தவர்.. ஆகாயம் அளந்தவர்.. எல்லோர் கண்களுக்கும் புலப்படும்படி உயர்ந்து நின்றிருந்தார். யோகி ஒடுங்கி நின்றான்.. அவர்முன். மாலைநேர பூஜைகள் நடந்துக் கொண்டிருந்தது. இருவரும் பிரார்த்தனை செய்ய தொடங்கினர்.

மிர்த்திக்கா அர்ச்சனை தட்டினை.. அர்ச்சகரிடம் நீட்டினாள். அர்ச்சகர், யோகியை பார்த்து  புன்னகைப்பது போலிருந்தது.. அதே போல அவர் “என்ன பா.. ரெண்டுவாரம் ஆச்சு உன்னை பார்த்து” என்றார்.

யோகி “இன்னிக்குதான் கூப்பிட்டார் போல.. வந்திருக்கேன்” என்றான் பவ்யமாக.

அவரோ “ம்.. யாரு ப்பா” என்றார்.

யோகி “கல்யாணம் செய்துக்க போறவங்க.. மிர்த்திக்கா” என்றான்.

அவர் ஆனந்தமாக “ஓ.. காட்டிட்டு போக வந்திருக்க..” என்றபடி.. அர்ச்சனை பொருட்களை வாங்கிக் கொண்டார். யோகி “சுவாமி பெயருக்கே செய்திடுங்க” என்றான்.

அப்படியே ஆராதனைகள் நடந்தது.. “அசாத்திய சாதக” என தொடங்கும் ஸ்லோகம் சொல்லிக் கொண்டே இருந்தான், யோகி.

மிர்த்திக்கா யோகி இருவரும்.. அர்ச்சனை பிரசாதம் வாங்கிக் கொண்டு பிராகாரம் சுற்றி வந்தனர். வாரநாட்கள் என்பதால்.. அதிகமாக கூட்டம் இல்லை. 

மிர்த்திக்கா, மூன்றுமுறை வலம் வந்து அமர்ந்துக் கொண்டாள். யோகி பதினோரு சுற்று முடித்துதான் வந்து அமர்ந்தான். இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத.. அமைதி. இன்னமும் எந்த பிரச்சனைகளும் குழப்பங்களும் தீரவில்லை. ஆனாலும், ஒரு குழப்பமில்லா மனது அந்த ஷனத்தில். எல்லாம் சரியாகிடும் என திடம் பிறந்திருந்தது.

மிர்த்திக்கா “அப்பா சம்மதித்திடுவாரா” என்றாள் மீட்டுக் கொண்ட புன்னகையோடு.

யோகி “சும்மா இரேன், நல்ல நேரத்தில் அவரை ஞாபகப்படுத்திகிட்டு.” என்றான் விளையாட்டாய்.

மிர்த்திக்கா “அவரில்லாமல் நானில்லை..” என்றாள்.

யோகி “விடேன் டி” என்றான்.

யோகி காண்டாகுகிறான் என எண்ணிக் கொண்டாள், அமைதியாகினாள் பெண்.

யோகி “என்ன சொல்லி லீவ் எடுத்த ஆபீசில்.” என்றான்.

மிர்த்தி “அத்தைக்கு சீரியஸ்ன்னு சொல்லித்தான்” என்றாள்.

யோகி “நாளைக்கு லீவ் போட முடியாதில்லை. வா, சாப்பிட்டு கிளம்புவோம்” என கிளம்பினர்.

யோகி, அவளை வீட்டில் விட்டு கிளம்பினான்.

அடுத்தடுத்த நாட்கள் இப்படியே குழப்பத்திலேயே சென்றது.

மிர்த்திக்கா தினமும் அப்பாவிற்கு அழைப்பதை வேலையாகவே வைத்திருந்தாள். காலையில் பஸ்ஸில் செல்லும் போதும்.. கண்டிப்பாக அழைத்திடுவாள். வாசு, பெண்ணின் அழைப்பை ஏற்பதில்லை.

மிர்த்திக்கா வாரத்திற்கு ஒருமுறையாவது தன் அத்தைக்கு அழைத்து பேசி, தனக்கு சம்மதம் வாங்கி தர.. தந்தையிடம் பேச சொன்னாள். என்னமோ ஊசியால் கிணறு தோண்டுவது போல.. காலம்தான்  நகர்ந்தது. 

ஜெகன் ஒருமுறை ஊருக்கு சென்று வந்தான். மிர்த்திக்காவிற்கு பயம் எங்கே அப்பாவை சென்று பார்த்தால்.. அவர் என்னிடம் ஏதும் செய் என கேட்டால்.. அவரை மீற முடியாமல் நான் செய்திடுவேனோ என பயம். அதனால் ஊருக்கு செல்லவில்லை.

வாசுவும் அப்படியே கல்லாக மாறிபோனார் பெண்ணின் விஷயத்தில். மகனிடம் பேசினார்.. “என்ன டா, அவனை இன்னுமா வீட்டில் விடுறீங்க.” என கேட்ப்பார்.

பாவம் ஜெகன்தான் “அவர் உங்களை பார்க்க வந்ததோடு சரி, அதன் பிறகு.. பேசுகிறாரா என்ன ஏதுன்னு கூட தெரியலை பா..” என்பான். உண்மையும் அதுதான்.

வாசு “மிர்த்திக்கு வேற ஊரில் வேலை தேடுடா” என்பார்.

ஜெகன் “அப்பா.. நீங்க மனசு மாறுகிற வழியை பாருங்க” என்றிடுவான்.

யோகிக்கு, வேலை சரியாக இருந்தது. மிர்த்திக்காவிற்கு நேரம் ஒதுக்க கூட முடியாத வேலை. என்னமோ ஒரு வெறி.. இந்த வாசு அங்கிள் எப்படி என்னை பேசலாம் என வெறி. அதை பெண்ணிடம் சொல்லவும் முடியவில்லை. அவர் பேசியதை மறக்கவும் முடியாத வலி.. எனவே, வேலையை மட்டும் பார்த்தான். மேலும் அவளை பார்த்தால்.. அவள் அப்பாவிடம் பேசலாமா என்றுவிட்டால்.. இல்லை, அவளின் முகத்தை பார்த்தால்.. என் மனதிற்கே ஏதேனும் தோன்றிவிட்டால் என்பதால் பார்ப்பதை தவிர்த்தான்.

மிர்த்திக்காவிடம் வாரம் ஒருமுறை இருமுறை பேசுவான். அதுவும்.. வேலை முடித்து வந்து.. அவள் விழித்திருக்கிறாள்.. இன்னும் ஆன்லைன்னில் இருக்கிறாள் என அறிந்தால், அவளை அழைத்து “ஏன் இன்னும் தூங்கலை” என்பான். “தினமும் இப்படி போனே பார்க்காத.. தூங்கு” என்பான்.

மிர்த்திக்கா “சாப்பிட்டீங்களா.. சென்னையில்தான் இருக்கீங்களா” என்பாள்.

அவன் பார்க்க வாராதது.. வருத்தம்தான். ஆனால், அப்பாவை பற்றி பேசுவேன் என வராமல் இருக்கிறான் என எண்ணிக் கொண்டாள். இருவரும் தங்களுக்கு தாங்களே பதுங்கிக் கொண்டனர்.

மிர்த்திக்காவின் பிறந்தநாள் இன்று.. யோகி அதிகாலையில் எழுந்ததும் அவளுக்கு அழைத்தான்.. மனதில் அவளை பார்க்க வேண்டும் என ஆசை.. காதல் எல்லாம் உண்டுதான், ஆனாலும் வேலை இருக்கிறது. எனவே, கிளம்பும்முன் அழைத்தான். அவள் எடுத்ததும் “ஹாப்பி பர்த்டே லட்டு” என்றான்.

மிர்த்திக்காவிற்கு.. வேறேதும் தேவையாக இருக்கவில்லை.. “லவ் யூ” என்றாள் காதலான குரலில்.

யோகி “லவ் யூ லட்டு.. ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன்.. இப்போவெல்லாம் கண்ணை திறந்தாலும் மூடினாலும் உன் முகம்தான்டி ஞாபகம் வருது.. ரொம்ப மிஸ் பண்றேன். இன்னிக்கு கொஞ்சம் வெளியூர் போறேன்.. நான் வரமாட்டேன் உன்னை பார்க்க.. சாரி” என்றான்.

மிர்த்திக்கா “உள்ளூரில் இருந்தாலும் நீங்க வரமாட்டீங்க.. எனக்கு தெரியும். ஏன்ன்னு கேட்கனும்.. சண்டை போடணும்ன்னு.. ஆசைதான். ஆனால், பண்ணமாட்டேன். என்கிட்டே என் அப்பா பேசறதில்ல, அதே போல.. நீங்களும் பேசாமல் போகிட்டா.. என்ன செய்யறது. பர்த்டே கேர்ள் விஷ் பண்றேன்.. சந்தோஷமா போயிட்டு வாங்க..” என்றாள்.. தழு தழுத்த குரலில்.. காதலும் ஏக்கமும் போட்டி போட.. தன்னவனிடம் சரணடைந்து சண்டையிட்டாள் பெண்.

யோகியால் பதிலே பேச முடியவில்லை.. எத்தனை அழகான சாடல்.. அதேநேரம் எத்தனை காதல் என் மேல் என எண்ணிக் கொண்டே “லவ் யூ.. லவ் யூ.. சீக்கிரம் என்னை கல்யாணம் செய்துக்கோ.. அதுதான் என் பர்த்டே விஷ் உன்கிட்ட” என்றான்.

மிர்த்திக்கவிற்கு, மனம் தடதடத்தது..பதில் அப்பாவிடம் இருக்கிறதே, சொன்னால் கத்துவான்.. குரல் கரகரக்க  “நான் கோவிலுக்கு போறேன்.. உங்க பேவரெட் கோவிலுக்கு.. ம்.. லவ் யூ..” என்றவள் அழைப்பினை துண்டித்தாள்.

“சேர்ந்து போனநம் சாலைகள்

மீண்டும் தோன்றுமா..

சோர்ந்து போன என்கண்களில்

சோகம் மாறுமோ..

தேய்ந்த வெண்ணிலா 

திரும்ப வளருமா..

தொட்டு தொட்டு பேசும்

உந்தன் கைகள் எங்கே..”

இவளின் இந்த பேச்சிற்கு பிறகு.. யோகி, தினமும் அழைத்து அவளிடம் பேசினான். அதுதான் ஒரே ஆறுதல் பெண்ணுக்கு.

நாட்கள் கடக்க.. அன்று தமிழரசி… மிர்த்திக்காவிற்கு அழைத்தார். ‘தன் கணவரின் திதி.. நீ தம்பி உன் அப்பா எல்லோரும் வரணும்’ என்றார். வாசுவின் எண்ணினை வாங்கிக் கொண்டார் பெண்ணிடமிருந்து.

வாசு, தமிழரசி என தெரியாமல்.. அழைப்பை ஏற்றுவிட்டார். பின்னர் தமிழரசி என தெரிந்ததும்.. “எனக்கு உங்கள் உறவே வேண்டாம் ம்மா.. எதோ திதி அப்படின்னு சொல்றீங்க.. நல்ல படியா அவரின் ஆத்மா சந்திடைடையட்டும். நீங்க பாருங்க ம்மா” என்று கூறிவிட்டு, அழைப்பை துண்டித்துவிட்டார்.

ஜெகனிடமும்.. வாசு பேசிவிட்டார்.

 

Advertisement