Advertisement

நீ என் அலாதிநேசம்!

24

யோகி, அப்படியே அமர்ந்திருந்தான். நல்ல அவமரியாதை.. என்னதான் சிறியவன்.. அவரின் நம்பிக்கையை பெறாதவன்.. என்றாலும், இப்போது எல்லா வகையிலும் நேர்த்தியாக என்னை உயர்த்திக் கொண்ட பின்னும்.. என்ன செய்கிறாய்.. வேலையில் எப்படி.. எவ்வளவு சம்பளம்.. என என்னை ஆராயாமல் இப்படி திரும்பியும் பாராமல்.. சென்றது தவறுதானே.. ம்’ என அமர்ந்திருந்தான்.. யோகி அவமானமாகவே உணர்ந்தான்.

தமிழரசி, ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தார் யோகியையும் மிர்த்திக்காவையும். மிர்த்திக்கா, தலைநிமிர்த்தி தமிழரசியை பார்க்க முடியாமல் நின்றிருந்தாள்.. சமையல் அறை வாசலில். 

ஜெகன், மேலே வந்தான்.. தந்தையை வழியனுப்பி வைத்துவிட்டு. இப்போது பொதுவாக “அப்பாக்கு காதல்ன்னா பிடிக்காது. ஆனால், நமபிக்கையை விட்டுடாதீங்க.. கண்டிப்பா சம்மதிப்பார்” என்றான் யோகியை பார்த்து இறுதி வாக்கியங்களை சொன்னான் நம்பிக்கையாக.

தமிழரசி “ம்.. இன்னுமும் பழைய ஆளாக இருக்கிறார் ஜெகன். யோகி, பொறுமையாகத்தான் இரேன் ப்பா.. அம்மாவும் இல்லாத பெண்.. அப்பாவையும் பகைச்சிட்டா எப்படி. நீதான் பொறுத்து போகனும். சரி, நான் கிளம்பறேன்.. எனக்கு டாக்ஸி புக் செய்திடுப்பா” என்றார்.

யோகிக்கும் அதுதான் சரியென பட்டது. அவனுக்கு மனதும் மூளையும் தன்னவளிடமே இருந்தது. அதனால், இப்போதைக்கு அவளை விட்டு நகர முடியாது என தோன்ற.. அமைதியாக டாக்ஸி புக் செய்தான் அத்தைக்கு.

கிளம்பும் முன், தமிழரசி மிர்த்தியிடம் வந்து “உங்க அப்பாகிட்ட பேசும்மா.. பொறுமையாக பேசு. உன்னை பார்த்தால்.. சண்டை போட்டு, எதிர்த்து நின்னு சம்மதம் வாங்கும் பெண் போல தெரியவில்லை. அதனால், சொல்றேன்.. யோகி பற்றி பேசும்மா உங்க அப்பாகிட்ட.. தங்கமான பையன்.. பொறுப்பான பையன். யோகியை பற்றி எடுத்து சொல்லு.. அவனை பற்றி அவன் வேலை பார்க்கும் இடத்தில் விசாரிக்க சொல்லு.. காதலிச்சிட்டான்.. அதனால் எனக்கு பிடிக்காதுன்னு.. சொல்றது எல்லாம் கொஞ்சம் அநியாயம் சொல்லிட்டேன்..” என்றார் சற்று மிரட்டலாகவே.

மிர்த்திக்காக்கு, யோகியின் சார்ப்பாக பேசுவது சந்தோஷம் என்றாலும்.. நடந்ததது தெரிந்ததால்.. அப்பாவின் கோவத்தின் நியாயம் பெண்ணுக்கு மட்டுமேதானே தெரியும்.. அதனால், சங்கடமான புன்னகையோடு தலையசைத்தாள் பெண்.

தமிழரசி கீழே வந்தார்.. வழியனுப்பும் முறைக்காக மிர்த்திக்காவும் உடன் வந்தாள்.. தமிழரசி தெளியாத மிர்த்திக்காவை பார்த்துவிட்டு  “எல்லாம் சரியாகிடும். என்னிக்கு இருந்தாலும்.. எங்க ரெங்கா அண்ணன் கண்மணி வீட்டுக்கு நீதான் மருமக. திரும்பவும்.. அந்த குடும்பத்துக்கு நீதான் உயிர் கொடுக்கனும்.. அதனால், தைரியமா இரு..” என சொல்லி விடைபெற்று கிளம்பினார்.

மிர்த்திக்கா மேலே வந்தாள். யோகி அதே சோபாவில் அப்படியே  அமர்ந்திருந்தான். யோகியை பார்க்கவே என்னமோ போலிருந்தது. மிர்த்திக்காவிற்கு யோகியை சமாதானம் செய்யும் வழியே இல்லை.. எனதான் தோன்றியது.. ‘எப்போதும்.. முகம்மலர்ந்து இருப்பான். எதற்கும் பெரிதாக கலங்கமாட்டான்.. ஆனால், இப்போது ஓய்ந்து அமர்ந்திருந்தான். என்னிடம் வந்தாலே.. அவன் முகம் வாடிவிடுகிறது.. நான் அவனுக்கு சந்தோஷத்திற்கு பதில் கஷ்ட்டத்தைதான் கொடுக்கிறேன்..’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டே அவனின் அருகில் அமர்ந்தாள்.

மிர்த்திக்கா “யோகி.. யோகி..” என அழைத்தாள். 

யோகி, அவளை பார்க்கவில்லை.. ‘என்னவென’ கேட்கவில்லை.

மிர்த்திக்கா தன்னவனின் கையை பிடிக்கவும்.. இமைதட்டி அவளை பார்த்தவன்.. எதையோ விழுங்கிக் கொண்டான்.. “எ.. ன்ன.. டா” என்றான் கரகரப்பாக.

மிர்த்திக்காவிற்கு, அப்பா அடித்திருப்பாரோ.. என எண்ணம்.. சற்று நேரம் அமைதியாக இருந்ததே என்ன நடந்தது.. மோசமாக பேசியிருப்பார்.. கண்டபடி வைதிருப்பார் என தெரியும்.. அவனின் முகத்தை பார்த்தாலே தெரிகிறது.. என்ன நடந்தது.. நான் எப்படி ஆறுதல் சொல்லுவது.. என லேசாக திரும்பி அமர்ந்து அவனின் கண்களை பார்க்க முயன்றாள்.

யோகி, மிர்த்தி பார்ப்பதை உணர்ந்து.. கீழிருந்து கண்களை நிமிர்த்தவில்லை. மிர்த்திக்கா “என்னை பாருங்க” என்றாள்.

யோகி அப்படியே அமர்ந்திருந்தான்.

மிர்த்திக்கா, தன்னவனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.. அவன் அப்படியே தளர்ந்து அமர்ந்திருந்தான். என்ன பேசுவது எப்படி கேட்பது என தெரியவில்லை.. தன்னுடைய மற்றொரு கையையும் சேர்த்துக் கொண்டு.. அவனின் கையை பிடித்தாள்.. யோகி நிமிரவில்லை.. அவளிடம் பேசவில்லை. மிர்த்திக்கா அவனின் அருகே இன்னும் நெருங்கி அமர்ந்து அவனின் தோளில் சாய்ந்தாள். எதற்கும் யோகி தளரவில்லை.. இறுக்கம் அவனின் தோளில் தெரிந்தது பெண்ணுக்கு.

ஜெகன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்.. இருவரும் அமர்ந்திருப்பதை பார்த்து உள்ளே சென்றுவிட்டான்.

நிமிடங்கள் கடந்தது பேசமுடியவில்லை இருவருக்கும்.

மிர்த்திக்காவிற்கு பயம் வர தொடங்கியது.. என்னாச்சு என.. எழுந்து அவனின் எதிரே வந்து நின்றாள்.. “என்னாச்சு.. அப்பா, என்ன சொன்னார்” என்றாள், திடமான குரலில்.

அந்த குரல் அவனை எதோ செய்தது.. நிமிர்ந்து தன்னவளை பார்த்தான்.. அவளின் கண்கள் தன் கண்களில் எதையோ தேடுகிறது.. யோகியின் மனது இதம் கண்டது அந்த தேடுதலில்.. ஆனால், என்ன சொல்ல முடியும் என்னால், உன் அப்பா அடிச்சார்.. தூரோகி தூரோகின்னு ஆயிரம்முறை சொன்னார்.. எனக்கு உன்னை பெண் கேட்க துப்பில்லை என்றார்.. என அவர் அவமானப்படுத்தியதை சொல்லவா முடியும்.. சொல்ல முடியாதே.. என அவன் தவித்தான். இப்போது, பெண்ணவள் “என்னங்க..” என அழைக்க அழைக்க.. இதயத்தின் ரத்தநாளங்கள்.. தளருகிறது.. அவளிடம் சொல்லு சொல்லு.. கொஞ்சம் மூச்சுவிட முடியும் என கதறுகிறது அவனின்  இருதயம்.. ஆனாலும் வாய் திறக்கவில்லை அவளின் காதலன்.

மிர்த்திக்கா, யோகியின் முகத்தை நிமிர்த்தினாள்.. கண்கள் ரத்தமென இருந்தது.. பெண்ணவள் “ஏன் யோகி, என்னாச்சு” என்றாள்.

யோகி அவளின் நெஞ்சில் அப்படியே சாய்ந்தான்.. அனிச்சையாய் பெண்ணவள் நெஞ்சோடு அணைத்து கொண்டாள். பெண்ணவளின் கைகள் உச்சந்தலை வருடி.. பின்தலையில்.. படர்ந்து அவனின் முதுகை வருட.. காதலனின் கண்கள் அவளின் அணைப்பில் குளிர்ந்தது.. கசிந்தது. பெண்ணவளுக்கு என்ன புரிந்ததோ.. தன்னவனின் உச்சியில் முத்தமிட்டு “அப்பா.. ரொ..ம்ப.. பேசிட்டாரா.. அவர் அப்படிதான்.. யாரை பற்றியும் கவலைப்படமாட்டார்.. யோசிக்கமாட்டார். ப்ளீஸ் நீங்க அதையெல்லாம் மனதில் எடுக்காதீங்க.. நான் சாரி சொல்றேன்.. ப்ளீஸ் மறந்துடுங்க.. யோகி. சாரி..” என்றாள்.

யோகி ஏதும் பேசவில்லை தனது மூச்சினை சரி செய்துக் கொண்டிருந்தான்.. தன்னவளின் அணைப்பும்.. அவளின் குரலும் சாரி என்ற வார்த்தைகளும்.. அவனை தளர்த்த தொடங்கியது. 

மிர்த்திக்கா “சரியாடும் யோகி, உங்களை புரிஞ்சிப்பார்.. கண்டிப்பா அப்பா சம்மதிப்பார்.. நான் நம்புறேன்.” என்றாள்.. பேச்சுவாக்கில்.

இயல்பாகிக் கொண்டிருந்த யோகிக்கு சட்டென எரிச்சல் “எப்போ ஆருபது வயசிலையா.. போடி” என சொல்லி அவளை தள்ளினான்.. லேசாக. 

மிர்த்திக்கா, யோகியை பார்த்தாள்.. இயல்பாக இருந்தான்.. முகம் தளர்ந்திருந்தது, எனவே, இவளும் விளையாட்டாக  “பரவாயில்ல.. அப்போவாது சம்மதித்தால் சரிதான்.” என்றாள் புன்னகையோடு.

யோகி எழுந்து நின்றான்.. முகம் சாரணமாகியிருந்தது.. கையால் தலையை கோதிக் கொண்டான். கிட்சென் சென்றான்.. சிங்க் அருகே சென்று, தன் ஷர்ட்டின் ஸ்லீவ்களை முழங்கை நோக்கி ஏற்றி விட்டுக் கொண்டவன்.. தண்ணீரை முகத்தில் அடித்துக் கொண்டான். மிர்த்திக்கா.. எதோ பேஸ் வாஷ் எடுத்து வந்து நீட்டினாள்.. யோகி, வாங்கிக் கொண்டான். முகம் கழுவிக் கொண்டு வந்தான்.. மிர்த்திக்கா டவலோடு நின்றாள்.

யோகி “அப்பாவும் பொண்ணும் சேர்ந்து என்னை படுத்திறீங்க டி.. போதும்.. நான் கிளம்பறேன்..” என்றவன் தன் கைக்குட்டை எடுத்து முகத்தினை துடைக்க..

மிர்த்திக்கா தன் ஷால் எடுத்து அவன் முன் நீட்டினாள்.. அவனை கெஞ்சலாக பார்த்துக் கொண்டு.

யோகிக்கு என்னமோ அவள் தன்னை கிண்டல் செய்தவதாக தோன்ற.. “பயங்கர கடுப்பில் இருக்கேன். போய்டு” என்றான்.

மிர்த்திக்காவிற்கு சிரிப்புதான் வந்தது.. லேசாக புன்னகைத்தாள்.

யோகி, தன்னவளின் புன்னகை முகத்தினை பார்த்துக் கொண்டே அவளின் அருகே நெருங்கி நின்றான்.. கண்களை பார்த்தான்.. மனதில் தன் மாமனார் கொடுத்த வலி அப்படியே இருக்கிறது. அதையெல்லாம் இவளிடம் சொல்ல முடியாது.. என எண்ணிக் கொண்டான், ஆனாலும்.. தன் நிலைபாட்டை சொல்ல எண்ணி..  நிதானமாக பேசினான் “தப்புதான் செய்துட்டேன்.. என்ன செய்ய முடியும் செத்தா போக முடியும்.. உங்க அப்பாகிட்ட வேணும்கிற அளவுக்கு மன்னிப்பு கேட்டாச்சு.. இனி, அவர் பக்கமே திரும்பி பார்க்கமாட்டேன் சொல்லிட்டேன். வந்து பேசு.. பொண்ணு கேளு.. எதுவும் சொல்ல கூடாது நீ..” என்றான்.

மித்திக்காவிற்கு, அவன் விளையாடவில்லை என முகத்தை பார்த்ததும் புரிந்தது. புன்னகை காணாமல் போகியிருந்தது. பதில் பேச முடியாமல் அவன் முகம் பார்த்தே நின்றாள். 

யோகிக்கு, அவளிடம் இதை சொல்லியே ஆகவேண்டி இருந்தது.. அவளின் கண்களில் மீண்டும் குழப்பம் சூழ்வதை உணர்ந்தவன் இன்னும் அழுத்தமாக “அவராக வந்து பொண்ணு தரேன் கல்யாணம் செய்துக்கன்னு சொன்னால் தாலி கட்டுவேன். இல்லை.. அப்படியே போகட்டும் நம்ம லைப்.” என்றான் தன் தன்மானம் அடிவாங்கிய நிலையை மறைமுகமாக அவளுக்கு கடத்த முயன்றான் யோகி.

மிர்த்திக்காவிற்கு கண்ணில் கண்ணீர் வந்தது. தன்னவனை பார்க்க முடியாமல் கிட்செனிலிருந்து வெளியே வந்து ஹாலில் அமர்ந்துக் கொண்டாள். 

ஒரே மாதிரியான தாக்குதல்.  அப்பாவும் சரி.. இவரும் சரி.. எனதான் இந்த நொடி அவளுள் தோன்றியது. 

யோகிக்கு ஒரு பெருமூச்சு.. அவளின் தந்தையிடம் இனி பேசமாட்டேன் என சொல்லுகிறேன்.. அவளுக்கு வலிக்கும்தான். இவருவரும் அவளுக்கு முக்கியம். ஆனால், என்னால் இதற்குமேல் அவரின் முன் நிற்க முடியாது என முடிவெடுத்தது.. அவளுக்கு தெரிய வேண்டும் என எண்ணிக் கொண்டு பேசினான். இதோ.. இப்போது அவளுக்கு சங்கடமாக இருக்கும் என புரிகிறது. ஆனால், அவனாலும் அவளுக்காக என்றாலும் சிலதை மாற்றிக் கொள்ள முடியவில்லை அவனால். தன்னை தானே சமன் செய்துக் கொண்டான் யோகி.

பின் யோகி, ஹாலுக்கு வந்து நின்றான். அவளை காணவில்லை கவனித்தான்.. “மிர்த்தி.. உங்க அப்பாவை சொன்னதும் கோவமா” என்றான் சத்தமாக, அவளின் அறையை பார்த்து.

Advertisement