Advertisement

ஜெகன், அவசரமாக சென்று  கதவை திறந்தான்.

யோகியும்.. தமிழரசியும் நின்றுக் கொண்டிருந்தனர்.

வாசு, யோகியை முதலில் மேலிருந்து கீழ் வரை பார்த்து அடையாளம் காண முயன்றார். நெடு நெடுவென உயரமாக.. அதற்கு தக்க திடமான உடல்வாகு.. இன்னும் நிறம் கூடி.. அளவெடுத்த மீசையும்.. பார்வையில் கூர்மையும்.. உடல்மொழியில் பவ்யமாகவும் ஒரு மாப்பிள்ளையின் சாயலில் யோகி நிற்பதை கண்டார் வாசு. ம்.. பெற்றவருக்கும கனவு இருக்குமே.. மாப்பிள்ளை என்றால்.. அப்படி இருக்க வேண்டுமென்று.. யாரும் குறை சொல்ல முடியாத ஒரு தோற்றம்.. கண்ணில் தெரியும் ஒரு நம்பிக்கையுமாக நிரம்பி நின்றான் அந்த வாசல் முன்.

வாசு தன் பலத்தை இழப்பது போல் உணர்ந்தார்.. ராமயணத்தில் வருமே.. வாலியின் எதிரே யார் நின்றாலும்.. அப்படி எதிரே நிற்பவர்கள் பலமும் சேர்ந்து வாலிக்கு போய்விடுமென.. அப்படி.. தன் பலத்தை இந்த யோகி எடுத்துக் கொள்வதாக உணர்ந்தார் பெண்ணின் தந்தை.

வாசு கொஞ்சம் ஆழமாக மூச்செடுத்து சமாளித்தார். பெண்ணை எரிப்பது போல பார்த்தார். 

ஜெகன் தந்தையை பார்த்துவிட்டு.. “வாங்க யோகி.. வாங்க” என்றான்.

வாசு, யோகியை பார்த்து “அப்படியே போய்டு.. உள்ள வராத டா.. வந்தால்.. கால் கை இருக்காது.” என்றார்.. ம்.. தன் பலத்தை அவன் எடுத்துக் கொள்வது பிடிக்கவில்லை.. முன்பைவிட.. யோகியை இன்னும் எதிரியாக பார்த்தார்.

யோகி “அங்கிள்.. இருங்க” என்றான் காத்ரமான குரலில்.

வாசு “பேசாத டா.. போய்டு.. என் முன்னாடி நிக்காத.. இன்னும் எத்தனை ஜென்மம் ஆனாலும் தீராது டா.. என்மேல எனக்கிருக்கும் கோவம்.. லேடீஸ் எல்லாம் கூட்டிட்டு வந்திருக்க.. போய்டு..” என்றார் யோகியை வீட்டின் உள்ளே நுழைய விடாமல் அப்படியே எரிப்பது போல நின்று பேசினார்.

தமிழரசிக்கு யோகியின் முழு தவறும் தெரியாது. அதனால், கொஞ்சம் டென்ஷன் ஆனார் ‘என்ன இப்போ, காதலிச்சால் அவ்வளவு தப்பா’ என பார்த்தார்.

ஜெகன் “அப்பா.. இருங்க ப்பா.. பேசலாம்.” என்றான் வேண்டுதலான குரலில்.

தமிழரசியும் “இருங்க அண்ணா.. யோகி செய்தது தப்புதான்.. பேசிக்கலாம்” என்றார்.

வாசு, இங்கும் அங்கும் நடந்தார். அவருக்கு இந்த சமாதானங்களை எல்லாம் ஏற்கும் மனநிலையில் இல்லை.

வாசு “வெட்கமாக இல்லையா..” என எதோ பேச தொடங்க..

ஜெகன் “அப்பா அப்பா… இருங்க” என்றான்.

வாசு பெண்ணை பார்த்து “என்ன.. நீ சொன்னியா.. எப்படி வந்தான் இவன்” என்றார்.

தமிழரசி நின்றுக் கொண்டே இருந்தார். பாவம் அவருக்கு வாசுவிடம் பேசவே முடியவில்லை.. அவ்வளவு கோவத்தில் இருந்தார்.

யோகிக்கு சங்கடமாக போனது அத்தையை கூட்டி வந்து தவறு செய்துவிட்டோமோ என.. யோகி “அங்கிள்.. கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்கள்..” என பேச தொடங்க.. வாசு அதை கேட்க்காமல் உள்ளே சென்றுவிட்டார்.

இப்போது ஜெகன் “நீங்க வாங்க ஆன்ட்டி.. வாங்க யோகி” என்றான்.

மிர்த்திக்கா கண்களை துடைத்துக் கொண்டு.. வாங்க என்பதாக தலையசைத்தாள்.. பாவம் தமிழரசி அமைதியாக அமர்ந்தார்.. என்னமோ ‘ரொம்ப ஓவரா பண்றார் பா’ எனதான்  எல்லோரையும் பார்த்திருந்தார்.

ஜெகன் தண்ணீர் கொண்டு வந்தான் எல்லோருக்கும்.

மிர்த்திக்கா யோகியை பார்த்துக் கொண்டே நின்றாள்.

தமிழரசி “என்னம்மா.. எதுக்கு இப்படி அழற.. யோகியை உனக்கு பிடிக்கும்தானே… நான் பேசுறேன். உங்க அப்பாக்கு என்னதான் பிரச்சனை, யோகி அங்கே இருந்தவன்தானே..” என்றார்.

மிர்த்திக்கா கண்களால் யோகியிடம் ‘ஏதும் சொல்லலையா’ என வினவினாள்.

யோகியும் ‘இல்லை’ என தலையசைத்தான். மிர்த்திக்காவிற்கு நிம்மதி பெருமூச்சு.. எழுந்தது. 

ஜெகன் “காபி போடவா.. நான் நல்லாவே போடுவேன் ஆன்ட்டி” என சூழ்நிலையை கொஞ்சம் இயல்பாக்க முற்பட்டுக் கொண்டிருந்தான்.

தமிழரசி லேசாக சிரித்து தலையசைத்தார்.

மிர்த்திக்கா கண்களால் யோகியிடம்.. தன் தந்தை இருக்கும் அறையை கண்களால் காட்டினாள்.

யோகிக்கு தயக்கமாக இருந்ததது அங்கே செல்ல..

ஜெகன் இவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து “ஆன்ட்டி வாங்களேன்.. எங்க கிட்சென் பாருங்க.. “ என்றான்.

தமிழரசிக்கும் எதோ புரிந்தது போல.. அமைதியாக எழுந்து ஜெகனோடு உள்ளே சென்றார்.

மிர்த்திக்கா, யோகியிடம் “நீங்க போய் அப்பாகிட்ட பேசுங்க” என்றாள் சின்ன குரலில்.

யோகி தலையை கோதிக் கொண்டே “ம்.. வாசு இருந்த அறைக்கு முன் வந்தான்.

வாசு கதவை சாற்றி வைந்திருந்தார். லேசாக கையிடியை தளர்த்தி கதவினை திறக்க எத்தனித்தான். கதவு தாழிட்ப்பட்டிருந்த்து. அதனால், தட்டினான்.

வாசு திறந்து யாரென பார்க்க.. யோகி.

வாசு மீண்டும் கதவை சாற்றிக் கொண்டார்.

மிர்த்திக்கா அதை பார்த்துவிட்டு மீண்டும் வந்து கதவை தட்டினாள்..

யோகிக்கு முகமே சரியில்லை. என்னமோ போலானான்.. தன் மாமா தந்தை இருந்திருந்தால் எனக்காக பேசியிருப்பரே என எண்ணினான். ஒருமாதிரி தவித்து போனான் அந்த ஆண்மகன். நம் மனசாட்சிக்கு மட்டுமேதான் தெரியும்.. ஒரு சங்கடத்தின் அடர்த்தியும்.. நீளமும்.. அகலமும். யாருக்கும் அதை.. அறுதியிட்டு கூறிட முடியாது.. விளக்கிட முடியாது. அதெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு காட்சியே. நமக்கு மட்டுமே வலி. அந்த வலியை.. காலம் நேரம் அமையும் போதெல்லாம் தீர்த்துக் கொள்ள வேண்டும். யோகியும் இப்போது கதவை தட்டினான்.

வாசு பெண்ணின் குரல் கேட்டு கதவை திறந்தார்.. “நாடகம் ஆடுறீங்க எல்லோரும்.” என்றார்.

யோகி, கதவினை நன்றாக திறந்தான்.. வாசு முறைத்தார்.. யோகி உள்ளே வந்தான்.

வாசு “போடா வெளியே” என்றார்.

மிர்த்திக்கா கதவை சாற்றினாள். அவளுக்கு பயம் எந்த காலத்திலும் நாங்கள் இருவர் செய்தும் தவறுதான். இப்போது வெளி ஆட்களுக்கு தெரிந்து.. அது காலம் முழுவதும் எங்கள் இருவரையும் தவறாக நினைக்கும் படி செய்திடுமே என. அதனால், வேகமாக கதவினை சாற்றினாள் பெண்.

ஆனாலும் வாசுவின் சத்தம் கேட்டது “என்ன டா.. பண்ற.. எங்கள் குலம் உன்னை மறக்காது டா.. எப்படி டா எங்க வீட்டு பெண்ணினை தொட உன்னால் முடிந்தது.. ஒண்ணாதானே டா வளர்ந்தீங்க.. நான் ஒரேமாதிரி தானேடா.. பார்த்தேன் உன்னை. அந்த புள்ளைய என்ன சொல்லிடா ஏமாத்தின.” என அவனின் சட்டையை பிடித்தார். மீண்டும் “பாரு.. இப்பவும் உன்னை நல்லவன்னு நினைச்சிக்கிட்டு உனக்காக என்கிட்டே பேசிகிட்டு இருக்கு.. நீ ஒரு தூரோகி டா..” என்றவர் யோகியை பளார் என அறைந்தார்.

அந்த சத்தம் வெளியே கேட்கவில்லை.. ஆனால் அமைதியாகியது இத்தனை நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடம். மிர்த்திக்கா கதவில் சாய்ந்து நின்றுக் கொண்டாள்.

யோகி அடியை வாங்கிக் கொண்டு அமர்ந்தான் கட்டிலில். வலிதான் உடம்பில் ஏதுமில்லை.. மனதில் மட்டுமே வலித்தது.

வாசுவிற்கு கதவை திறக்க முடியவில்லை.. பெண்.. அழுத்தி பூட்டிவிட்டாள்.

யோகி நிதானமாக “எனக்கும் அந்த வயசில் ஏதும் புரியலை மாமா.. மன்னிச்சிடுங்க” என்றவன் அவரின் காலில் விழுந்தான்.

வாசு ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை யோகியை. தள்ளி சென்று நின்றுக் கொண்டார்.

யோகி தானே எழுந்துக் கொண்டான். அவரின் எதிரில் நின்றான் “மன்னிச்சிடுங்க.. எனக்கு வேற ஏதும் பேச தெரியலை. உங்கள் கோவம் ஞாயமானது. கொஞ்சம் எங்களையும் நினைச்சு பாருங்க மாமா.. நான் அவளை சந்தோஷமாக பார்த்துப்பேன்.” என்றான் இப்போது குரல் மீண்டிருந்தது, இயல்பாக பேசினான்.

வாசு “கிழிச்ச.. “ என தொடங்கி திட்ட தொடங்கினார்.

மிர்த்திக்கா எழுந்து தனது போன் எடுத்துக் கொண்டு மற்றொரு அறைக்கு சென்றாள். ‘அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அப்பாவின் கோவத்தை கட்டுபடுத்தவே முடியவில்லை. எத்தனை வருடங்கள் இதையே சுமந்துக் கொண்டிருப்பார். எனக்கு யோகிதான் வேண்டும்.. யோகி இல்லாமல் என் வாழ்வு இல்லை… அதை எப்படி அவருக்கு சொல்லுவது.. நாங்கள் பேசினால் கேட்பதேயில்லை.. அதனால் தன் அத்தைக்கு பேசலாம்’ என எண்ணி போனில் தன் அத்தையை அழைத்தாள்.

மீனாட்சி அத்தை எடுத்ததும் மிர்த்திக்கா “அத்தை எப்படி இருக்கீங்க” என்றாள்.

அவரும் “நல்லா இருக்கேன் டா.. உங்க அப்பா இப்போதான் சொல்லிட்டு இருந்தான்.. நீ அந்த பட்டுகோட்டை  மாப்பிள்ளைக்கு சரின்னு சொல்லிட்டேன்னு. சந்தோஷம் தாங்களை அவனுக்கு, இப்போவே நிச்சயத்தை முடி.. கல்யாணத்துக்கு நாள் பாருன்னு.. அவசர படுறான்..” என சந்தோஷமாக தம்பி பற்றி பேசினார்.

மிர்த்திக்காவிற்கு ‘அய்யோ’ என்றானது.. “அத்தை.. அத்த” என நிறுத்தினாள்.

மீனாட்சி “என்ன மிர்த்தி” என்றார்.

மிர்த்திக்கா ஒவ்வொன்றாக சொல்ல தொடங்கினாள்.. “நான் நம்ம பக்கத்துவீட்டு யோகி இருந்தாரில்ல அவரைத்தான் காதலிக்கிறேன்.” என தொடங்கி “அப்பாகிட்ட சொல்லுங்க அத்தை.. அவங்க வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்திருக்காங்க.. அப்பா இன்னமும் பிடிவாதமாக இருக்கார்.. நீங்க சொன்னால் மட்டும்தான் கேட்பார் அத்தை.. இப்போ யோகியும் அப்பாவும் ஒரு ரூமில் பேசிட்டு இருக்காங்க.. நீங்க பேசுங்க அத்தை.. என பத்து  நிமிடத்தில் தன் நிலையை சொல்லினாள் பெண்.

மீனாட்சி “ஹே மிர்த்தி, என்னடி இது சொல்லாமல் கொள்ளாமல்.. இப்படி செய்திருக்க.. அவன் வேற.. அந்த மாப்பிள்ளை வீட்டில் நிச்சயம் பற்றியே பேச சொல்றான்.. இது என்னடி புதுசா இருக்கு.. அவன் கேட்கமாட்டான் மிர்த்தி.. முதலில் அவர்களை போக சொல்லு.. அப்புறம் பேசிக்கலாம். உங்க அப்பா சமாதானம் ஆகட்டும், நானே பேசறேன். இப்போதைக்கு அவர்களை கிளம்ப சொல்லு” என்றார்.

மிர்த்தி “இல்ல அத்தை, எத்தனை வருஷம் ஆகுது அத்தை. நீங்க பேசுறீங்க.. இப்போவே அப்பாகிட்ட. அம்மா இருந்திருந்தால் நான் இப்படி சங்கடப்பட்ட வேண்டி இருக்காதில்ல. நீங்க அப்பாகிட்ட பேசுங்க” என்றாள்.

மீனாட்சி “ம்.. சரி சரி.. நான் பேசிட்டு சொல்றேன். நீயும் கொஞ்சம் அமைதியாக இரு டா.. பேசிக்கலாம் அப்பா கிட்ட..” என்றார்.

இருவரும் பேசி முடித்து அழைப்பை துண்டித்தனர்.

மிர்த்திக்கா தன் தந்தையும் யோகியும் இருந்த அறையின் கதவினை திறந்தாள். நேராக  கிட்சென் வந்தாள்.. யோகியின் அத்தையிடம் பேச தொடங்கினாள்.

ஆனால், வாசுவோ யோகியோ வெளியே வரவில்லை.

தமிழரசிக்கு என்ன இருவரையும் காணோம் எனத்தான் எண்ணம்.. பேசிக் கொண்டிருந்தாலும் ஒருகண் அங்கேதான் இருந்தது.

ஜெகன் இருவருக்கும் காபி எடுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

இருவரும் தனித்தனியே அமர்ந்திருந்தனர்.. அதுவும் வெவ்வேறு திசை பார்த்துக் கொண்டு. ஜெகனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை “யோகி வாங்க காபி சாப்பிடலாம்” என சொல்லி ஹாலுக்கு அழைத்தான்.

யோகி எழுந்து ஹாலுக்கு வந்தான்.

வாசு காபியை மகன் கையில் கொடுக்கவும்.. அதை வாங்கி பருகியவர் “டேய்.. என்னமோ பண்ணிக்கோங்க டா.. எப்படியோ போங்க டா..” என்றவர், கப் வைத்தவர்.. தன் பாக் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.. ஹாலில் யோகி அமர்ந்திருந்தான்.. மிர்த்திக்கா கிட்செனில் நிற்கிறாள்.. ஜெகன் பின்னாலேயே “அப்பா அப்பா” என வருகிறான் எதையும் காதில் வாங்காமல் சென்றுவிட்டார், தந்தை.

 அத்தனை அசட்டு தனங்களுக்கும்.. பொய்களுக்கும்.. களவு கள்ளதனங்களுக்கும்.. விளையாட்டும் இமைசையும் கலந்த உறவுகளுக்கும் காதல் என  அழகாக எண்ணிக் கொள்ளாலம்.. எல்லாம் சாத்யம் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால், காதல்திருமணம் என்பது முழுதானது. சடங்குகள்.. உறவுகள்.. சீர்வரிசை.. வழிமுறைகள்.. மரியாதை.. என அரசு அலுவலகத்தின் பிரிவுகள் போன்றது. சிக்கலானது.. ஆனால், அங்கீகாரம் கொண்டது. கொஞ்சம் சிரமப்பட வேண்டும்.. ஆனால், அதன்பின் கிடைப்பது நெடுநாளைய.. சீரான.. ஒரு ராஜபாட்டை பயணம். 

Advertisement