Advertisement

அலாதிநேசம்!

22

வாசு, தன் பிள்ளைகளை பார்க்க என சென்னை வந்தார். ஜெகனின் பிறந்தநாள், அவன் சிங்கப்பூர் சென்று வந்து பிறகு வாசு இங்கே வரவேயில்லை.. மேலும் மிர்த்தி அன்று.. திருமணம் பற்றி  பேசும் போது புன்னகை முகமாக அமைதியாக இருந்ததால்.. மேற்கொண்டு பெண்ணிடம் திருமணம் பற்றி பேசி பார்க்கலாம் என தந்தை வாசு.. சென்னை விஜயம்.

பிள்ளைகள் அலுவலகம் முடித்து வரும் நேரத்தை கணக்கிட்டு தானும் வந்து சேர்ந்தார் வாசு. 

மிர்த்திக்கு, தந்தையின் வரவு அதிர்ச்சிதான்.. கதவை திறந்துவிட்டவள் “அப்பா சொல்லவேயில்லை வரேன்னு” என கூவிக் கொண்டே தந்தையை அழைத்தாள் பெண்.

ஜெகன் இன்னமும் வந்திருக்கவில்லை.

மிர்த்திக்கா “காபி குடிக்கிறீங்களா” என்றாள்.

வாசு “இல்லம்மா.. சாப்பிட்டிடலாம்.. ஜெகா வர லேட் ஆகுமா” என்றார்.

மிர்த்திக்கா “ம்.. பத்துமணி ஆகும் ப்பா.. நீங்க சாப்பிடுங்க, தோசை வார்க்கிறேன்” என்றாள்.

வாசு, உடைமாற்ற என ஜெகன் அறைக்கு சென்றார். 

பத்து நிமிடத்தில் ப்ரெஷ் ஆகி வெளியே வந்தார். பெண், சாம்பார் சட்னி சூடாக தோசை என அந்த டீபாய் மீது பரப்பி வைத்திருந்தாள்.

வாசு, பேசிக் கொண்டே உண்டார் ‘தெருவில் யார் யாருக்கு கல்யாணம் நடந்தது.. தான் சென்று வந்தது.. எல்லோரும் அவளை விசாரித்தது’ என.. உள்ளூர் நிகழ்வுகளை பேசிக் கொண்டே இருந்தார்.

மிர்த்திக்காவும் எல்லாம் கேட்டுக் கொண்டாள். மனது யோகியிடம் சென்றது.. ‘அப்பா அப்பா’ என சொல்லிக் கொண்டு வேலையில் கவனம் வைத்தாள், பெண்.

மிர்த்தியும் உண்டாள்.

அதன் பிறகுதான் ஜெகன் வந்தான். தந்தை டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

ஜெகன் “வாங்க அப்பா.. சொல்லவேயில்லை” என்றான்.

வாசு “சும்மாதான் டா.. இந்த நேரம் ஆகிடுதா.. அன்னிக்கு எல்லாம் போன் செய்யும் போது, வீட்டில் இருக்கேன்னு சொன்ன” என்றார் விசாரணையாக. அப்பாக்களுக்கு மகன் மேல் சந்தேகம் தீரவே தீராது போல.

ஜெகன் “ம் மீட்டிங்.. லேட் ஆகும்ன்னு சொல்லிட்டுதான் போனேன்.” என்றவன் அப்படியே தனதறைக்கு சென்றுவிட்டான். 

வாசு உறங்க வந்தார் அறைக்கு. ஜெகன் வெளியே வந்தான்.. உண்பதற்காக.

வாசு “கீழ காரில் காய்.. அரிசி எல்லாம் இருக்கு.. கொஞ்சம் எடுத்துட்டு வந்திடுடா” என்றவர் கட்டிலில் அமர்ந்தார்.

ஜெகன் தந்தையை முறைத்துக் கொண்டே வெளியே வந்தான். தந்தை சொன்னதை செய்தான்.

ஜெகன் உண்டு.. ஹாலிலேயே படுத்துக் கொண்டான்.

மிர்த்திக்காவிற்கு உறக்கம் என்பது கனவு போல இருந்தது.. நிறைய யோகி வந்தான் கனவில்.. தானும் அவனும் ஒன்றாக மணமேடையில் நிற்பது.. தந்தை சிரித்த முகமாக வாழ்த்துவது.. என அவளின் கனவுகள் விடியும்வரை அவளை விடவேயில்லை.

வாசு நேரமாக எழுந்துக் கொண்டார்.. மகன் ஹாலில் உறங்குவதை கண்டு.. அறையிலேயே இருந்துக் கொண்டார். 

மிர்த்தியும் நேரமாக எழுந்து வந்தாள்.

தந்தை விழித்துவிட்டாரா என பார்க்க அறைக்கு வந்தாள். வாசு எழுந்து அமர்ந்திருந்தார். 

மிர்த்திக்கா “அப்பா, வெளிய வாங்க.. காபி தரேன்” என்றாள்.

வாசு “இல்ல.. இங்க கொண்டு வாம்மா.. ஜெகா தூங்கட்டும்” என்றார்.

மிர்த்தி தலையசைத்து சென்றாள். குளித்து வந்து அவனுக்கு பிடித்த இனிப்பு செய்ய தொடங்கினாள். இன்று ஜெகனின் பிறந்தநாள்.

6 மணிக்கு மேல் தம்பியை எழுப்பினாள் பெண். ஜெகனுக்கு வாழ்த்து சொன்னாள். சமையலை தொடங்கினாள். 

வாசு குளித்து தயாராக இருந்தார். மகன் வந்ததும் அமைதியாக வெளியே வந்துவிட்டார். ஜெகன் குளித்து அக்காவும் தானும் சென்று வாங்கிய உடையை.. அணிந்துக் கொண்டு வெளியே வந்தான்.

மூவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். வாசு பிள்ளைகளோடு கடைவாசலில் இருக்கும் அரங்கன் கோவிலுக்கு இப்படி வருடத்தில் இரண்டு மூன்றுமுறை செல்வதுண்டு எப்போதும். இப்போதும் அதே பழக்கத்தை தொடர்கிறார்.

ஜெகன், தந்தை ஊரிலிருந்து எடுத்து வந்திருந்த தங்களின் காரினை செலுத்த.. மிர்த்திக்கா அவனோடு முன்புறம் அமர்ந்துக் கொண்டாள். வாசு பின்புறம் அமர்ந்துக் கொண்டார். 

தேனுபுரீஸ்வரர் கோவில் சென்றனர். ஜெகன் பெயரில் அர்ச்சனை செய்து கோவிலை வலம் வந்து அமர்ந்தனர், மூவரும். அமைதியான தரிசனம்.. வாசு மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் “மிர்த்தி, உனக்கும் இன்னும் இரண்டு மாசத்தில் ஒரு வயது கூட போகிறது. அப்பாவுடைய கடமையையும் முடிக்கனுமில்ல.. நீ நினைச்சது போல.. அப்பா உன்னை வேலைக்கு அனுப்பிட்டேன். எல்லாம் செய்து தந்துட்டேன். அம்மா இருந்திருந்தால்.. இப்படி விட்டிருப்பாளா.. நீ.. நீ.. இன்னமும் எதையும் நினைச்சு பயப்படாத” என பேச பேச.. ஜெகன் இடைமறித்தான்.

ஜெகன் “அப்பா.. எல்லாத்தையும் இங்கேயே பேசணுமா.. நீங்க இதுக்குதான் வந்தீங்களா.. அப்படிதானா” என்றான்.

வாசு, கோவமானார்.. மகனை பார்வையால் எரித்தார் எனலாம்.. இருந்தும் தணிந்தார்.. “இதைவிட பெற்றவனுக்கு என்ன டா கவலை இருக்க போது.. நீ உன் அக்காகிட்ட சொல்ல மாட்டியா” என்றார்.

ஜெகன் “சொல்லலாம்.. சொல்லலாம். வாங்க, முதலில் சாப்பிட்டு கிளம்பலாம்” என்றான். 

மூவரும் கிளம்பி ஹோட்டல் சென்றனர், காலை உணவினை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

மிர்த்திக்கா அவரசமாக கிளம்பினாள்.. ஜெகன் அவளை அலுவலகத்தில் விட்டு வர கிளம்பினான்.

அக்காவை அலுவலகத்தில்  விட்டு வீடு வந்தான். ஜெகனுக்கு இன்னிக்கு மதியத்திற்கு மேல்தான் ஷிஃப்ட். அதனால், அமைதியாக லாப் எடுத்து அமர்ந்துக் கொண்டான்.

வாசு சற்று உறங்கலாம் என அறையில் சென்று படுத்துக் கொண்டார்.

ஜெகன் பதினோரு மணிக்கு தந்தைக்கு டீ போட்டுக் கொண்டு, அறைக்கு வந்தான், அங்கே தொடங்கியது பிரச்சனை.

ஜெகன் “அப்பா.. டீ” என எழுப்பி கொடுத்தான்.

வாசு எழுந்து வாங்கிக் கொண்டார்.. ஜெகன் எதோ கப்போர்டில் தேடிக் கொண்டு அங்கேயே நிற்க.. வாசு “ஜெகா உனக்கு எப்போ போகணும்” என்றார்.

ஜெகன் திரும்பி “ஒருமணிக்கு ப்பா” என்றான்.

வாசு ஹாலுக்கு வந்தார்,

ஜெகன்,  தேடி எடுத்துக் கொண்டு வந்தான் ஹாலுக்கு.. 

வாசு “ஏன்டா, மிர்த்திகிட்ட பேசுடா.. ஒரு வரன் இரண்டு மாசம் முன்னாடியே வந்தது.. அதே வரன் திரும்பவும் வந்திருக்கு.. ஜாதகம் எல்லாம் பொருந்தி இருக்கு.. என்ன செய்யலாம் சொல்லு.. எத்தனைநாள் இப்படியே இருக்க முடியும்” என்றார் மகனிடம் முறையிடும் விதமாக.

ஜெகன் லாப்டாப் மீதிருந்து கண்களை எடுத்து நன்றாக தன் தந்தையை பார்த்தான்.

வாசு “ஏதாவது சொல்லுடா..” என்றார்.

ஜெகன் “ஏன் ப்பா, அக்காவிற்கு அந்த யோகியையே பார்த்தால் என்ன?” என்றான்.

வாசு நிமிர்ந்து அமர்ந்தார் “என்ன டா இது.. அவன் அவன் ஒரு தறுதலை டா.. அவனை இன்னமுமா நினைச்சிகிட்டு இருக்கா” என்றார்.

ஜெகன் “அப்புறம்.. எப்படி பா மறக்க முடியும். அதுவும் அக்கா மறக்குமா.  அக்கா எதுக்கு கல்யாணமே வேண்டாம்.. நான் வேலைக்குதான் போவேன்னு இங்கே வந்திருக்கா” என்றான். இவன் நல்லது செய்கிறேன் என எண்ணி, அக்காபற்றி.. சொல்ல தொடங்கினான்.

வாசு அமைதியாக அரண்ட பார்வை பார்த்தார் மகனை.

ஜெகன் “யோகி நல்லவர் ப்பா.. பழசையே நினைச்சிகிட்டு.. அக்காவை கஷ்ட்டபடுத்திடாதீங்க. யோகி, இங்கதான் இருக்கார். இப்போ அட்வகேட். அக்காவை நல்லா பார்த்துப்பார். மிர்த்திக்கும் அதுதான்.. அவரைத்தான் பிடிக்குது அப்பா.. நீங்க அமைதியாக இருந்தாலே அக்கா நல்லா வாழுவா” என முடிக்கும் முன்.. வாசு எழுந்து மகனின் கன்னத்தில் ஒரு அரை வைத்திருந்தார்.

வாசு “டேய்.. என்ன டா நடக்குது.. அவன் இங்கதான் இருக்கானா.. மிர்த்தியை பார்க்கிறானா.. நீ என்னடா பண்ணிட்டு இருந்த.. அவளை எப்படி விட்டுடுட்டு போனான்.. இப்போ எப்படி டா.. ராஸ்கல்” என வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு “எங்கடா அவன்.. துரோகி.. என் கண்ணில் படட்டும்.. எங்க டா இருக்கான்.. வெட்கம் கெட்டவன். கூப்பிடு டா அவனை.. வர சொல்லுடா கொன்னு பொலி போடாமல் போகமாட்டேன் டா..” என தகித்துக் கொண்டே நின்றார்.

ஜெகன் மிரண்டு போய் பார்த்தான் தந்தையை. அந்த நேரத்தில் ஜெகனுக்கு அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது.. ஜெகன் போன் எடுத்துக் கொண்டு வெளியே சென்று பேச தொடங்கினான்.

அடுத்த பத்து நிமிஷம் சென்று ஜெகன் உள்ளே வர.. தன் தந்தையின் பேச்சு காதில் கேட்டது.. “அந்த பட்டுகோட்டை சம்பந்தம் சரிதான் அக்கா.. என்ன, எட்டு வயசுதானே வித்யாசம்.. ஜாதகம் சரியா இருக்குல்ல.. நான் மிர்த்தியை கூட்டிட்டு வந்திடுறேன்.. “ என பேசிக் கொண்டே இருந்தவர், மகன் வரவும் அமைதியான குரலில் பேசினார்.

ஜெகன் லாப் எல்லாம் எடுத்து வைக்க தொடங்கினான்.

வாசு மீண்டும் யாருக்கோ அழைத்தார் “இல்ல.. ப்பா, கடையை பார்த்துக்கோ, நாலுநாள் ஆகும் வருவதற்கு.” என சொல்லிக் கொண்டிருந்தார்.

ஜெகன் எல்லாம் எடுத்து வைத்தான் “என்ன அப்பா.. என்ன பேசுறீங்க” என்றான்.

வாசு “நீ இன்னும் ஆபீஸ் கிளம்பலையா.. அவன்கிட்ட சொல்லிடு.. என் பெண்ணை கட்டனும்னா நான் செத்தால்தான் முடியும்ன்னு. ராஸ்கல்.. இங்கயும் அவன் வேலையை காட்டுறானா, இனி நடக்காது டா..” என்றவர் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.

ஜெகன் உண்ணகூட இல்லை.. அப்படியே பாக் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

தனது வண்டியின் அருகே சென்றவன்.. முதலில் யோகிக்கு அழைத்தான். விஷயத்தை சொன்னான் “மாம்ஸ் தெரியாமல் அவர்கிட்ட சொல்லிட்டேன்.. எங்க அக்காவுக்கு எதோ நிச்சயம் செய்ய போறாங்க போல.. நீங்க இங்கேயே நேரில் பேசிடுங்க.. சரிதானே, வரீங்களா.. என்ன பண்ண போறீங்க” என்றான்.

யோகி, அலுவலகத்தில் இருந்தான்.. என்ன செய்வதென்று தெரியவில்லை.. “என்ன டா செய்யறது” என்றான், மச்சானிடமே. பாவம்.. அவனுக்கு இப்போதெல்லாம்தான் சுதந்தரமாக தன்னவள் குறித்து கனவுகளே வருகிறது. இதில் திடீரென மாமா வந்து நிற்பார்.. உடனே தங்களின் விஷயம் அலசப்படும் என அவன் கனவு கூட கண்டதில்லை. அரண்டு போனான்.

ஜெகன் “என்னமோ பண்ணுங்க.. நான் ஆபீஸ் போயிட்டு கூப்பிடுறேன். அக்கா ஈவ்னிங் வரும் வரைதான் உங்க டைம் யோசிங்க..” என்றவன் அலுவலகம் கிளம்பினான்.

யோகி உடனே மிர்த்திக்கு அழைத்தான்.

மிர்த்திக்கு செகண்ட் கால் சென்றது.

பத்து நிமிடம் சென்று.. தானே அழைத்தாள் யோகிக்கு, பெண்.

யோகி “மிர்த்தி, ஜெகன் பேசினானா” என்றான்.

மிர்த்தி “இல்லையே.. ஏன் யோகி, இரு.. டிரைவர் கூப்பிடுறாங்கன்னு நினைக்கிறேன்.. கட் பண்றேன்” என்றவள்.. அழைப்பை துண்டித்துவிட்டாள்.

யோகிக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியாக யோசிக்க தொடங்கினான்.. ‘இப்போ எங்க போறா’ என.

பத்து நிமிடத்தில் மிர்த்தி அழைத்தாள்.

யோகி அதை ஏற்றவுடன் “உங்க அப்பா வந்திருக்காரா” என்றான்.

மிர்த்திக்கா “ம் யோகி, நேற்று வந்தார். அப்புறம்.. அத்தைக்கு உடம்பு முடியலையாம்.. அப்பா என்னை வர சொல்லி இருக்கார். நானும் அப்பாவும் ஊருக்கு போறோம்.. நான் அப்புறம் பேசவா..” என்றாள்.

யோகி “இரு இரு..” என்றான்.

மிர்த்திக்கா “சொல்லுங்க.. யோகி” என்றாள்.

யோகி “ஜெகன் எனக்கு இப்போதான் பேசினான்.. உங்க அப்பாகிட்ட நான் இங்கதான் இருக்கேன்னு சொல்லியிருகான். அக்கா யோகியை கல்யாணம் செய்தால்தான் நல்லா இருப்பான்னு சொல்லியிருக்கான்.. உங்க அப்பா.. கோவமா கையில் கத்தியில்லாமல் கத்தினாராம், என்னை திட்டி தீர்த்துட்டாராம்.. ஏதேதோ சொல்றான். இரு அவனுக்கு கான்பரன்ஸ் கால் போடுறேன்.. வீட்டுக்கு போயிடாத.. ஸ்லொவ்வாக போ.. வெயிட் பண்ணு..” என அவளிடம் உண்மையை சொல்லி.. ஜெகனுக்கு அழைத்தான்.

ஜெகனும் அதேபோல லைனில் வந்தான்.. மூவரும் பேச தொடங்கினர். இல்லை, ஜெகன் மட்டுமே நடந்ததை சொன்னான். மிர்த்திக்காவிற்கு.. பழைய அப்பாவின் முகம் ஞாபகம் வந்தது. நடுங்கி போனாள்.. வியர்த்து வழிந்தது அந்த ஏசி காரில்.

ஜெகன் “அக்கா.. அப்பா பழைய மாதிரி இருக்கார் அக்கா.. நீ வீட்டுக்கு போய்டாத.. நானும் வந்திடுவேன்.. சேர்ந்து போலாம்” என்றவன் “மாம்ஸ் என்ன பண்ண போறீங்க.. நான் அக்காவை பிக்கப் பண்ணிட்டு வீட்டுக்கு போறேன்.. நீங்க முடிவெடுங்க.. உங்க மிர்த்தியை முடிந்த வரை பாதுக்காக்க வேண்டியது என் பொறுப்பு” என்றான்.

யோகி கண்களை மூடி திறந்தான். நிறைய யோசனைகளோ வழிகளே இல்லை.. ஒரே வழிதான் இருக்கு.. அது நேராக வாசு மாமாவை நேரே சென்று பார்ப்பது. பெண் கேட்பது. 

யோகி “மிர்த்தி நீ ஏதாவது காபி ஷாப்.. ஹோட்டலில் இறங்கிக்க டா.. டாக்ஸியை கட் செய்து அனுப்பிடு. ஜெகன் வரும் வரை.. வெயிட் பண்ணு. நான் வீட்டுக்கு போயிட்டு, அத்தையை கூட்டிட்டு வரேன். இன்னிக்கு பேசிடலாம்..” என்றான் அழுத்தமான குரலில் திட்டவட்டமாக அவளுக்கும் தனக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டான்.

யோகி, தன் மாமாவின் வருட திதி முடியட்டும் பின் தன் அத்தையிடம் சொல்லி.. பெண் கேட்டு போகலாம் என எண்ணிக் கொண்டு இருந்தான். இப்போது அத்தையிடம் எப்படி சொல்லுவது.. உடனே கிளம்பு பொண்ணு கேட்கணும்ன்னு சொன்னால்.. என்னுடைய எல்லாம்.. சொல்ல வேண்டி வருமே.. என யோகிக்கு தலைதான் சுற்றியது.

வீட்டுக்கு கிளம்பினான் வழியெல்லாம் இதே யோசனைதான்.

மிர்த்திக்கா, யோகி சொன்னது போல.. ஒரு ஹோட்டாலில் அமர்ந்துக் கொண்டாள்.

ஜெகன் கிளம்பிவிட்டான்.

மிர்த்திக்கா, வரும் நேரம் தவறியதும்.. தந்தை, பெண்ணை போனில் தொடர்புகொள்ள தொடங்கினார். மிர்த்திக்காவிற்கு தந்தையின் அழைப்பை பார்க்க பார்க்க.. நடுக்கம் பரவியது. தொடர்ந்து அவளை அழைத்துக் கொண்டே இருந்தார்.

மிர்த்திக்கா சைலெண்டில் போட்டு அமைதியாக இருந்துக் கொள்ள முயன்றாள்.. அன்றைய ஞாபகங்கள் நிறைய வர தொடங்கியது பெண்ணுக்கு.. ‘இப்போதும் யோகி வந்திடுவான்’ என தனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

யோகி வீடு வந்து சேர்ந்தான்.

தமிழரசி உணவு உண்டுக் கொண்டிருந்தார். நேராக அவரின் அருகே சென்று அமர்ந்தான்.

அரைமணி நேரம் தன்னை பற்றியும் மிர்த்தி பற்றியும் சொன்னான்.. “இப்போ நான் போகனும் அத்தை. என்னை அவள் திரும்பவும் நம்பி, காத்திருக்கா.. போகணும் அத்தை.. வரீங்களா? எனக்காக பெண் கேட்க” என்றான்.

தமிழரசி “கண்டிப்பா யோகி.. இரு தம்பி குடும்பத்தையும் வர சொல்லிடுறேன்.. நான் மட்டும் வந்தால்.. எப்படி, உங்க மாமா இல்லாமல்.. சரியாக இருக்காது. நான் என் தம்பி குடும்பத்தையும் வர சொல்றேன், வா.. அந்த பிள்ளையை இன்னிக்கே நிச்சயம் செய்திடுவோம்” என்றவர்.. உடனே தம்பிக்கு அழைத்தார்.

யோகிக்கும் திடம் வந்தது.

Advertisement