Advertisement

யோகி “இல்ல, எனக்கு கேட்டுது.. நீ வேற எதோ சொன்ன” என்றான்.

மிர்த்திக்கா “சொல்ல முடியாது.. விஷ் செய்தால்.. மிரட்டுறீங்க.. அதனால், அதெல்லாம் இல்லை.. யோகி ஹாப்பி பர்த்டே மட்டும்தான்.” என்றாள்.

யோகி “போகுது போ.. எப்படி இருக்க” என்றான், பெருந்தனமையாக.

மிர்த்திக்கா ஏதும் சொல்லாமல்.. அமைதியாக அவனையே பார்த்தாள்.

யோகியால் ஓரளவுக்கு மேல் அவளின் பார்வையை தாங்க முடியவில்லை.. “விடு டி.. வேலை, அதான்..” என்றான்… பார்வையின் கேள்விக்கு பதில் சொல்லுவது போல.

மிர்த்திக்கா “ரொம்ப உங்களை கஷ்ட்டபடுத்திட்டனோ.. பீல் பண்ண வைச்சிட்டனோ.. அது.. ஒரு கோவத்தில் சொன்னது.. நீங்க இப்படி விலகி போவீங்கன்னு தெரிந்திருந்தால் சொல்லியிருக்க மாட்டேன்” என்றாள்.

யோகி “ஹேய்.. அப்படி எல்லாம் இல்ல.. கஷ்ட்டமாக இருந்தது. இப்போ, ஓகேதான். என்னிக்கும்.. எனக்கும் உனக்கும் வலி தரும் விஷயமாக இது இருக்கும். அதை ஒன்னும் மாற்ற முடியாது. அத்தோட வாழ பழக்கிக்கணும்.. அந்த பீல்லோடு உன்னை பேஸ் பண்ண பழகிக்கிறேன்..” என்றான் என்னமோ போலான குரலில்.

மிர்த்தியாலும் பதில் பேச முடியவில்லை. இரண்டு நிமிடம் அமைதி.

மிர்த்தி “சரி விடுங்க.. நாளைக்கு லஞ்ச்க்கு வாங்க..” என்றாள்.

யோகி அசந்து போனான்.. பழைய வீட்டுக்கு வரும் போதெல்லாம் வராதீங்க.. என்ன நினைப்பாங்க என்றவள்.. அதனாலேயே, அவளின் அப்பா வருகிறார் என்றதும்.. பெண்ணவளின் எண்ணம் புரிந்துக் கொண்டவனாக.. நாம் தனியாகவே சந்திக்க கூடாது என்பதைத்தான் அவள் மனதில் வைத்திருக்கிறாள் என எண்ணிக் கொண்டான். ஆனால், இவள் புது வீட்டிற்கு தன்னை அழைக்கிறாள்.. என அதிர்ந்தான்.

மிர்த்தி “என்ன என்ன பதிலே காணோம்” என்றான்.

யோகிக்கு முகமே பொலிவானது “உண்மையாகவா சொல்ற.. இப்போவெல்லாம் பக்கத்தில் கேட்க்க மாட்டாங்களா” என்றான், தாங்கள் இருவரும் சரிசமமாக காயம் கொள்வோம் என தெரிந்தும்.. அவள் வாய்மொழியில் எதோ ஒரு பதிலை எதிர்பாத்து இந்த குத்தல் பேச்சு அவனிடம்.

மிர்த்திக்கு ஒருமாதிரி அவன் குத்தி காட்டுவதாகத்தான் தோன்றியது.. “ம்.. கேட்பாங்கதான்.. பதில் சொல்லணும்தான்.. என் பியான்சின்னு சொல்லுவேன்தான். ஏன் இல்லையா.. ஓனர்கிட்ட அப்படிதானே தைரியமா சொன்ன..” என்றாள்.

யோகிக்கு, பதில் கிடைத்துவிட்டது. புன்னகைத்துக் கொண்டான், ஆதனால், அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல்.. சீண்டினான்  “என்ன.. மரியாதை எல்லாம் அடிக்கடி பறக்குது.. அப்புறம் ஒட்டிக்குது.” என்றான்.

பெண்ணவள் ஓய்ந்து போனாள் “அப்படி எல்லாம் இல்லையே” என்றாள் அதே ஓய்ந்த குரலில்.

யோகிக்கு, அவளின் குரலின் மாறுபாடு புரிந்தது.. சமாதானத்தில் இறங்கினான்  “ஹேய் இல்ல.. டி” என்றான்.

மிர்த்திக்காவின் கண்ணில் நீர் நிறைந்து நின்றது.. “போங்க.. என்னமோ செய்ங்க.. நான் நாளைக்கு லீவ்.. நீங்க வரீங்களா இல்லையான்னு காலையில் சொல்லிடுங்க” என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

யோகி திரும்பவும் அழைத்தான் “வரேன் டி.. நீ கஷ்ட்டபடுவேன்தான் அங்க வரவேண்டாம்ன்னு நினைச்சேன் லட்டு. உனக்கு சங்கடமாக இருக்குமேன்னு நினைச்சு அப்படி கேட்டேன்.. சாரி” என்றான்.

மிர்த்தி “உனக்கு சங்கடமாக இல்லையா..” என்றாள்.

யோகி “இருக்கு.. நிறைய இருக்கு.. அதனால்தான் யோசிச்சேன்.. வேற ஒண்ணுமில்ல..” என்றான்.

மிர்த்தி “அப்படிதான் இருக்கும்.. சேர்ந்துதான் பேஸ் பண்ணனும்.. முடியும்ன்னா.. வாங்க.. இல்லைன்னா.. விட்டுடுங்க” என்றாள்.

யோகி அமைதியாகிவிட்டான் தன்னவளின் பேச்சில்.. எத்தனை அழுத்தம் இந்த வார்த்தையில்.. எத்தனை ரணம் இந்த அழுத்தத்தை தந்திருக்க வேண்டும்.. அத்தோடு.. என்னுடைய நேசத்திற்கு இணையான நேசம் இவளுடையது.. என அமைதியானான்.

மிர்த்திக்கா அவனின் அமைதி பார்த்து “சரி யோசிங்க” என்றாள்.

யோகி “ஹேய் இருடி.. இவ வேற.. கண்டிப்பா வரேன். அமைதியாயிரு.”எ என்றான்.

மிர்த்தி அமைதியானாள்.

யோகியே மீண்டும் “அழாமல் தூங்கனும். நான் ஹப்பியா இருக்கேன்.. நீ அழுதுட்டே தூங்க கூடாது. ம்.. மதியம் ரெண்டு மணி ஆகிடும் நான் வருவதற்கு. வேலை இருக்கு.. ஓகேவா” என்றான் தணிந்த குரலில்.

மிர்த்திக்கா “ம்.. சரி.. பை..” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள். சகஜநிலையில் இல்லை அவள் என புரிகிறது யோகிக்கு. நேரில் பேசிக் கொள்ளலாம் என உறங்கினான்.

பாவம் இந்த காதலர்கள்.. தங்களை தாங்களே காயம் செய்துக் கொள்வதில் வல்லவர்கலாகினர்.

காலையில் தமிழரசி, தன் மகளுக்கு நினைவுப்படுத்தினார்.. அதன்பின் நிவி யோகி மாமாவிற்கு வாழ்த்து சொன்னாள். யோகி அவளை அழைத்துக் கொண்டு கல்லூரியில் விட்டு வந்தான். நீண்ட நாள் சென்று அவளின் நண்பர்கள் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டான். நிவியை இயல்பாக உணர வைக்க முயன்றுக் கொண்டிருந்தான்.

யோகி அலுவலகம் கிளம்பி சென்றான்.

மிர்த்திக்கா எழுந்து மெதுவாக வேலையை தொடங்கினாள். மனதுள் நேற்று இரவு அவன் பேசியதில் தாக்கம் இருந்தது.. ‘சீக்கிரம் அப்பாகிட்ட பேச சொல்லணும்.. அப்பா ஒத்துப்பார்’ என எண்ணிக் கொண்டே எல்லா வேலையையும் முடித்து அமர்ந்தாள்.

யோகி வரும் போதே மணி மூன்று. அலுவலகத்தில் தப்பித்து பொய் சொல்லி எனதான் வந்து சேர்ந்தான்.

மிர்த்திக்கா, சோபாவில் எதோ படத்தை போட்டுக் கொண்டு.. பார்த்துக் கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கி போயிருந்தாள்.

யோகி வந்ததும் கதவை திறந்தவளின் விழிகள்.. தூக்க கலக்கத்தில் இருந்தது.. யோகி ‘வெயிட் பண்ணி தூங்கிட்டா’ என தனக்குள் எண்ணிக் கொண்டே சோபாவில் அமர்ந்தான். இருவருக்கும் பேச்சு வரவில்லை சட்டென.

மிர்த்தி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

யோகி, வைட் ஷர்ட்.. ப்ளாக் பேன்ட் என பார்மலில் இருந்தான்.. அந்த அறை முழுவதும்.. இவனின் பெர்பியூம் வாசம் சட்டென வந்து நிறைந்துக் கொண்டது.

என்னமோ யோகிக்கு என்ன பேசுவது என திணறி போனான். அப்படிதான் மிர்த்தியும்.

மிர்த்தி “ஜெகன் ட்ரெஸ் அங்க இருக்கு.. மாத்திக்கிறீங்களா.. சாப்பிடலாம்” என்றாள், ஒருமாதிரி தயங்கிய நடுக்கமான குரலில்.

யோகி எழுந்து உள்ளே சென்றான்.. இருவரும் தங்களுக்கு தாங்களே அன்னியமாகினர்.

யோகி எழுந்து உள்ளே சென்றான்.. ரெப்ரெஷ் செய்துக் கொண்டு.. ஜெகனின் உடை ட்ராக் பேன்ட்.. டீ ஷர்ட் அணிந்து வந்தான்.. கொஞ்சம் டைட்டாகத்தான் இருந்தது.. ஆனாலும் அதில் பொருந்திக் கொண்டான்.

மிர்த்திக்கா டீபாய் மேல் உணவுகளை எடுத்து வைத்திருந்தாள்.

யோகி “கீழ உட்கார்ந்துக்கலாமா” என்றான்.

மிர்த்திக்காவும் சரி என சொல்லி.. எல்லாம் எடுத்து கீழே வைத்தாள்.. முதலில் கிண்ணத்தில் பால் பாயசம்.. எடுத்து அவன் கையில் கொடுக்க.. யோகி வாங்கிக் கொண்டான். இருவருக்கும் மனது நடுங்குகிறது.. அதீத காதலை தங்களுக்கு தாங்களே உணருவதால்.

டிவியில் வேட்டையாடு விளையாடு.. படம். துப்பாக்கிகளின் சத்தம்.. ஹாலில் பாத்திரம் திறக்கும்.. மூடும்.. சத்தம் மட்டுமே. இருவரின் பேச்சு சத்தம் வரவில்லை.

சிக்கன் பிரியாணி.. ரைத்தா.. சிப்ஸ்.. ஊறுகாய்.. என பரிமாறி யோகியின் முன் வைத்தாள் பெண். யோகியின் நாசியில் பிரியாணியின் வாசம்.. உணவில் கவனமே இல்லை இத்தனை வருடங்களாக.. இன்று, மீண்டும் அதன் வாசத்தை இன்னும் ஒருமுறை தனது சுவாசத்தில் நிறைத்துக் கொண்டான். தலையை நிமிர்த்தாமல் நான்கு வாய் உண்டான். கண்கள் அவனையும் அறியாமல் நிமிர்ந்து பெண்ணவளை பார்த்தது.. வாஞ்சையாய்.

மிர்த்திக்கா அவன் உண்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. யோகி ஒருகவளம் எடுத்து அவளின் வாய் அருகே நீட்டினான். பெண்ணவளும் வாங்கிக் கொண்டாள். சூழ்ந்திருந்த தயக்கத்தின் மாய சுவர்.. லேசாக ஆட்டம் கண்டது.. மிர்த்திக்கா “எப்படி இருக்கு” என்றாள்.

யோகி “ம்.. சூப்பர்..” என்றான் தொண்டையை சரி செய்துக் கொண்டு.

யோகி “நீ சாப்பிடு” என்றான்.

மிர்த்திக்காவும் அமர்ந்தாள்.. இருவரும் அமைதியாகவே உண்டனர். படம் முடிந்திருந்தது. டிவியை ஆப் செய்தாள் பெண்.

யோகி “எதுக்கு இன்னிக்கு லீவ் போட்ட..” என்றான்.

மிர்த்திக்கா “ஏன்.. எப்போதான் உங்களை பார்க்கிறது, அதான்.” என்றாள்.

உண்டு முடித்திருந்தனர்.. இருவருமாக சென்று எல்லாம் எடுத்து வைத்தனர். மிர்த்திக்கா பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்க.. யோகி, இருவருக்கும் ஜாமூன் ஐஸ்கிரீம் எடுத்துக் கொண்டிருந்தான்.. அவள் சொல்லும் பக்குவத்தில்.

இருவரும் ஹால் வந்து அமர்ந்தனர். சொல்லிக் கொண்டது போல.. தொட்டுக் கொள்ளாமல்.. பழைய கதைகள் பேசினர்.. நேரம் கடந்தது.

மிர்த்தி “மறந்துட்டேன்” என சொல்லி தனதறைக்கு சென்று தான் வாங்கி வைத்திருந்த..  ஷர்ட் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள். 

யோகி நெகிழத் தொடங்கினான் “எதுக்கு டி.. இதெல்லாம்” என்றான்.

மிர்த்தி அவன் எதிரே நின்றுக் கொண்டு.. “அளவு சரியா இருக்கா பாருங்க” என்றாள்.

யோகி அளவு பார்த்தான் திருப்பி.. பின் அங்கேயே எழுந்து நின்று டி-ஷர்ட் கழற்றி.. ஷர்ட் அணிந்தான்.. அளவு சரியாகவே இருந்தது. யோகி, உயரமாக.. மாநிறத்தில்.. ஒருகண்ணில் காதலும் மறுகண்ணில் ஏக்கமும் நிரப்பிக் கொண்டு..  தன்னவளையே பார்த்து.. சிகையை கோதிக் கொண்டு.. தன்னை தானே.. சமன் செய்துக் கொள்ள போராடியபடியே நின்றான்.

அவனென்ன கல்லா மரமா.. காதல் கொள்ளாமல்.. கட்டியும் பிடிக்காமல் பெண்ணவளை கடந்து செல்ல.. மனதும்.. நாசியும் அவளின் அணைப்புக்கும்.. வாசத்திற்கும் ஏங்குகிறது.. ஆனாலும் மூளை.. தயங்கி நிற்கிறது.

அவனின் எல்லாம் அவளுக்கு தெரியுமே.. அந்த ஏக்கத்தை தீர்க்க.. அவன் கை பற்றினாள் பெண்.. அதுதான் தெரியும் அவளுக்கு.. அடுத்த ஷணம்.. தன்னவனின் இறுகிய கரங்களில்.. அவன் தின்னென்ற மார்பிள்.. கண்ணீர் கசிய நின்றுக் கொண்டிருந்தாள், மிர்த்தி.

யோகி அவளின் கழுத்து வளைப்பில் முகம் புதைத்து.. காதோரம் “சாரி டா லட்டு.. சாரி.. உன்கிட்ட மட்டும்.. லவ் யூ.. லட்டு.. மிஸ் யூ..” என சொல்லி அவளின் தோளில் அழுத்திக் கடித்தான். தீராத தாபம் தீர்ந்திடும் என்ன்றெண்ணி.. அதில் கொஞ்சம் தணிந்தான்.

மிர்த்திக்காவிற்கு மூச்சு விடவும் முடியாத நிலை.. ஆனாலும் ஆனந்தம். எத்தனை வருடங்கள் கடந்த.. அணைப்பு. முத்தம் ஒருவகை உயிர் உருக்கும் என்றாலும்.. அணைப்பு நேசத்தின் அன்பின் காதலின் முழுமை. தன்னுள் நிரப்பிக் கொள்வது.. உச்சி முகர்ந்து ஊன் குறுக்கி.. தன்னைவிட பெரிய உருவமோ சின்ன உருவமோ.. அடங்கி.. பொருந்தி.. தன்னுள் நுழைத்து.. பொருத்திக் கொண்டு.. ஆராவின் கதகதப்பை.. ஒரே நாடியில்.. உயிரை இடம் மாற்றிக் கொள்ளும் முழுமை. 

மிர்த்திக்கா “ம்.. “ என இன்னும் அவனுள் ஒன்றினாள்.

நொடிகள் கடந்துதான் மீண்டனர் இருவரும்.

யோகி அவளை கைகளை பற்றிக் கொண்டு தன்னருகே அமர வைத்தான். பெண்ணவள்.. யோகியின் கண்களை ஆழ்ந்து பார்த்தாள்..

யோகி “என்ன..” என அவளின் கசிந்த காதல் கொண்ட விழிகளை ஏறிட்டான்.

இருவருக்கும் பேச தோன்றவில்லை. இருவருக்கும் மண்டியிட்டு அமைதிபட்டு கிடக்கிறது மனது. அதை கிளற தோன்றவில்லை.. அமைதியாக அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

“பூவின் உள்ளே..நிலவின் மேலே..

தீயின் கீழே.. காற்றின் வெளியிலே இல்லையே..

உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்..

உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்..

உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே..”

இருவரும் சுதாரித்துக் கொண்டனர்.

மிர்த்திக்கா “டீ போடுறேன்..” என எழுந்துக் கொண்டாள்.

யோகி “ஜெகன் எப்போ வரான்” என கேட்டுக் கொண்டே.. ஜெகன் அறைக்கு சென்று உடைமாற்றி வந்தான்.

மிர்த்திக்கா “நெக்ஸ்ட் வீக்..” என்றாள்.

யோகி வெளியே வந்தான் டீ குடித்தனர்.

யோகி “கிளம்பட்டா..” என்றான்.

மிர்த்திக்கா வேண்டாம் என தலையை உருட்டினாள்.

யோகிக்கும் மனதில்லை, ஆனாலும் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாலும் வீடு சென்றுதானே ஆகணும்.. “லட்டு.. சீக்கிரம் உன்னை கல்யாணம் செய்து கூட்டிட்டு போய்டுவேன்.. அப்புறம் ப்ரீ கிடையாது. டேக் டைம் லட்டு..” என்றான் கள்ள புன்னகையோடு.

மிர்த்திக்கா “என்கிட்டே பேசுவீங்களா.. சமாதானம் ஆகிட்டிங்களா..” என்றாள்.

யோகி “ஹேய்.. நீ என்னை டிரஸ்ட் பண்ணதே எனக்கு நிம்மதியா இருக்கு.. நான் நிம்மதியா தூங்குவேன். எனக்கு திரும்பவும் ஒரு ஹாப்பிநெஸ் கொண்டு வந்திருக்க.. லவ் யூ.. லவ் யூ..” என்றான்.

மிர்த்திக்கா நிறைந்து போனாள்.

யோகி “மனசே இல்லைதான்.. ஆனாலும், நமக்கு நாமேதானே எதிரி.. ம்.. கிளம்பறேன்.. ம்” என சொல்லி அவளை தயங்காமல் அணைத்துக் கொண்டான்.

விடைபெற்று கிளம்பினான். 

 

Advertisement