Advertisement

2

வாசுதேவன் கண்ணகி தம்பதியின் மூத்த மகள் மிர்த்திகா, MBA இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்து மகன் ஜெகதீஷ் B.Tech இப்போதுதான் முடித்தான்.. வேலையும் கிடைத்துவிட்டது ஒரு IT கம்பெனியில். மிர்த்தி எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவளின் தாய் கண்ணகி ஒரு விபத்தில் உயிர்ழ்ந்துவிட்டார். 

கண்ணகி மட்டுமல்ல.. அந்த வீதியில் உள்ள பெண்கள்  கூட்டாக..  கோவிலுக்கு சென்றிருந்தனர். ஆதிபராசக்தி கோவில். எப்போதும் வருடம் தோறும் இப்படி பஸ் வைத்துக் கொண்டு செல்லுவர், அப்படி சென்றிருந்தனர். அதில் மிர்த்தி.. யோகி.. என இரு பிள்ளைகளின்  அன்னைகள் உயிரிழந்திருந்தனர். அதே தெருவில் மற்ற மூன்று பேருக்கும் நல்ல அடி. ஒருவருக்கு காது கேட்காது இப்போது வரை.. ஒருவருக்கு கால் சரியாக நடக்கவரவில்லை. அதுதொட்டு, வாசுதான் எல்லாம் அந்த வீட்டில். அந்த தெருவே கடைகளும் வீடுகளும் கொண்ட இடம். அதனால், ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அப்போது. அப்படி ஒரு பழக்கத்தில் மற்றொரு வீட்டில் இருந்த சுசீலா அம்மாதான் இப்போது இவர்கள் வீட்டில் பிள்ளைகளுக்கு துணையாக இங்கேயே இருக்கிறார். வயது 60 இப்போது.

இன்று, கல்லூரியில் செமினார் மிர்த்திக்கு, அதனால் கையில் நோட்ஸ் வைத்து பார்த்துக் கொண்டே உண்டாள்.. ஓடினால். வாசு, மகளின் மேல் கண் வைத்துக் கொண்டே.. பூஜையை முடித்து விட்டு உண்பதற்கு அமர்ந்தார். பெண்ணவள் தன் வேலையை முடித்துக் கொண்டு.. வரவேற்பறையில் அமர்ந்துக் கொண்டாள் தன் தந்தையின் வரவிற்காக. வாசு, மகளின் பரபரப்பை பார்த்தவர் “சுசீலா ம்மா.. சீக்கிரம்” என்றார்.

சுசீலாம்மா ஒரு கஷாய பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தார். வாசு அவசர அவசரமாக உண்டவர்.. அந்த ஆவாரம் பூ கஷயாத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார் மகளோடு.

வாசு, மகளை கல்லூரியில் இறக்கிவிட்டு, தான் சமயபுரத்தில் உள்ள.. கடைக்கு சென்றிடுவார். இப்போதுதான் கடையை திறந்து பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருப்பர் ஆட்கள். வாசு அங்கிருக்கும், சின்ன விளக்கை ஏற்றி.. அன்னையை வணங்கிவிட்டு வேலையை தொடர்ந்தார். இதுதான் இவரின் தினபடி வேலை. 

எந்த சுவாரசியமும் இல்லாமல் வாழ்கை கடந்தது.

ஜெகதீஷ் பரிட்சை முடிந்து வேலையில் சேர்ந்தான். மிர்த்தி இறுதி வருட பரிட்சை எழுதிக் முடித்திருந்தாள். அது தொட்டு.. அவளின் மனம் அதிர்ந்துக் கொண்டுதான் இருந்தது. இப்போதெல்லாம் சுசீலா பாட்டியோடு நின்று  முழு சமையலும் செய்கிறாள் பெண். சமையல் வேலைகள் எல்லாம் அவளுக்கு பழக்கமான ஒன்றுதான். ஆனாலும், இந்த ஒருவாரமாக மனம் மிகவும் அதிர்ந்து கொண்டு இருக்கிறது பெண்ணுக்கு. அதற்கு காரணம் தந்தை சொன்ன.. ஒப்பந்தம்தான்.. ம்.. ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த ஒப்பந்தம் இது. தன்னுடைய வாழ்வில் தானே தடமாறிய போது என்னை அடைகாத்த பெற்றவரின் ஒப்பந்தம் இது. அதை நினைத்து டென்ஷன் அவளுக்கு.

ஆனால், இன்னமும் என்னால் எதிலிருந்தும் மீள முடியவில்லை.. வருடம் ஐந்தோ.. பத்தோ.. என் மனம் மற்றதை ஏற்குமா தெரியவில்லையே.. இப்போதெல்லாம் ஏனோ அதிகமாக என்னை வாட்டுகிறது பழைய நினைவுகள் என எண்ணிக் கொண்டே சமையலில்  கவனத்தை பதிக்க முயன்றாள், பெண். 

சுசீலா பாட்டி “மிர்த்தி ம்மா.. ரசம் பொங்கிடுச்சு போல வாசனை வருதுடா” என பெண்ணவளின் நினைவுகளுக்கு தடை போட்டு நிறுத்தினார்.

மிர்த்திகா அவசர அவசரமாக அடுப்பை ஆஃப் செய்தாள். அதன்பின் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.. சுசீலா பாட்டியோடு பேச்சு இயல்பாக சென்றது.

தந்தை மதியம் உண்பதற்கு வந்தார்.. மிர்த்திக்கா பரிமாறினாள். அப்போது தன் தந்தையிடம் “அப்பா, என் ப்ரென்ட்  அப்பா.. ஆபீஸ்ல, அதான் வானதி உங்களுக்கு தெரியுமே.. அவங்க ஆபீஸ்ல, அவங்க மளிகை சாமான் மொத்த வியாபராம் பா, அங்க மேனஜர் போஸ்ட் இருக்காம்.. நான் போகவா ப்பா.. பக்கத்தில்தான், அந்த கடைக்கு போற வழியில்தான் ஆபீஸ்” என்றாள் தயங்கிய குரலில்.

வாசு உண்டு கொண்டே இருந்தார்.. மகளின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை. 

மிர்த்திக்கா “அப்பா” என்றாள்.

வாசு “ம்.. உனக்கெப்படி, அங்க வேலையிருக்குன்னு..  இதெல்லாம் தெரியும்..” என்றார், நிமிர்ந்து மகளை பார்க்காமல்.. ஊறுகாயை தனக்கு தானே பரிமாறிக் கொண்டு.

மிர்த்திக்கா பதட்டமானாள் “இல்ல, அதில்ல ப்பா.. அவ சென்னை போற வேலைக்கு.. அதான், நா..நான் எங்கயும் போக முடியாதுன்னு சொ..ல்லிட்டு இருந்தேன்..” என்றாள்.

வாசு நிமிர்ந்து மகளை பார்த்தார்.. இல்லை, முறைத்தார்.

மிர்த்திகா “அப்பா, சாரி..” என்றாள் தலையை தாழ்த்திக் கொண்டு.

வாசு “நானாக ஏதும் செய்யவில்லை. நீயாக இழுத்துக் கொண்டது” என்றார் மீண்டும் மகளின் முகத்தை பார்க்காமல்.

மிர்த்திக்கா அமைதியானாள்.. கைகள் லேசாக நடுங்கியது.

வாசு “நீ படிக்கனும்ன்னு சொன்னதால.. அதைவிட, நீ மனதளவில் எல்லாவற்றையும் விட்டு வரணும்ன்னுதான் உன்னை இவ்வளோ படிக்க வைச்சேன். அப்போவே சொல்லித்தான் படிக்க வைச்சேன்.. ம்.. ஞாபகம் இருக்கா.. இப்படி ஆகாத விஷயத்தை யோசிக்காமல்.. இரு.” என்றார்.

மிர்த்திக்கா உள்ளே சென்றுவிட்டாள், ஏதும் பேசாமல். வருடங்கள் கடக்கும் போதும்.. ஒவ்வொரு இறுதி தேர்வின் போதும் அவளின் உள்ளம்.. நிலை தடுமாறி.. எதையும் மறக்கவும் முடியாமல்.. தந்தையின் பேச்சை நினைத்து பயந்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தமாக MBA முடித்தாகிவிட்டது. இனி திருமணம்தான்.. வேறு வழியே இல்லை.. என அவளுக்கும் தெரியும். ஏதேனும் மாயம் நிகழ்ந்திடாதா.. இன்னும் கொஞ்ச கால அவகாசம் கிடைத்திடாத.. அவனை அப்போதாவது என்னிலிருந்து தூக்கி எரிந்தது விடமாட்டேனா.. மனதின் கறைகளும் உடலின் கறைகளும் இந்த நாட்களில் மறைந்திடாதா’ என அவளுக்கு எண்ணம். 

ஆனால், முழு ஐந்து வருடம் சென்றும் மறையாத கறை.. அடுத்து கிடைக்கும் சொற்ப நாட்களில்தான் மறைய போகிறதா என்ன?. ஆக, முடிவுகள் எடுத்தாகிவிட்டது முன்பே. அதை எதிர்நோக்கதான் அவளிற்கு பயம். நடந்தது ஒருவகையில் உறுத்துகிறது என்றால்.. அடுத்து என யோசிக்கும் போது அதுவும் உறுத்துகிறது. அதனால், மனது அடிக்கடி அவளுக்கு பதறுகிறது.

இப்போது தந்தை உண்டு முடித்து.. எழுந்து கைகழுவி வந்தார். உள்ளே சென்றுவிட்ட தன் மகளை அழைத்தார் “மிர்த்தி..” என.

மகள் வரவும் “இங்க பாரு.. இரண்டு இடத்தில் சொல்லி வைச்சிருக்கேன்.  இந்த மாசமே அமைந்தாலும் அமைந்துவிடும்.. வேலை அது இதுன்னு.. யோசிக்காத. நீ சொன்னது போல.. நடந்துக்கோ. இனியாவது உன் வாழ்க்கை நல்லா இருக்கணும். என் கடமையை நான் செய்துட்டேன். உன் கடமையை நீ சரியா செய்.” என்றார் மகளை பார்த்து.

மிர்த்திக்கா எதுவுமே பேச முடியாத நிலையில் நின்றாள்.

வாசு சற்று நேரம் ஓய்வெடுக்க தனதறைக்கு சென்றுவிட்டார்.

சுசீலாம்மா தனதறையிலிருந்து வெளியே வந்தார்.. “வா டா ம்மா சாப்பிடலாம்” என்றார்.

இருவரும் அமர்ந்து உண்ணத் தொடங்கினர்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!@!

பரபரவென நாட்கள் கடந்திருந்தது.

மிர்த்திக்கா, இயல்பு போல இருந்தாள். எதையும் யோசிக்க கூடாது.. குறிப்பாக அவனை பற்றி நினைக்க கூடாது என தான், முன்பு கற்ற யோகா ஆசனங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள். அப்பாவிற்கு தான் கொடுத்த வாக்கு முக்கியம்.. தன் தந்தையின் கௌரவம் முக்கியம்.. அதைவிட தன்னுடைய சுயமரியாதை முக்கியம் என மனதில் உரு போட்டுக் கொண்டாள்.. சற்று தன் கவனத்தை யோகாவில் கறைத்தால்.

வாசு இன்று அதிகாலையே வாக்கிங் முடித்து வந்தவர். மகள் எழுந்துக் கொள்வதற்காக காத்திருந்தார். மணி ஆறுதான்.

மிர்த்திகா ஆறுமணிக்கு மேல்தான் எழுந்தாள். வாசுவிற்கோ நிலை கொள்ளவில்லை.. மகளிடம் இப்போதே பேசிவிட வேண்டும் என எண்ணம், எனவே.. சுசீலா அக்கா, கொடுத்த காபியை குடித்துவிட்டு, அவரிடம் விவரம் சொல்லிக் கொண்டே, மகளின் அறை வாசலை பார்த்துக் கொண்டிருந்தார்.

மிர்த்திக்கா மெதுவாக எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வருவதற்கு அறை மணி நேரம் ஆகியது. வெளியே வந்தவள்.. தந்தையை இந்த நேரத்தில் பார்த்து அதிர்ந்தாள். எப்போதும் ஏழு மணிக்குதான் வாக்கிங் முடித்து வருவார். நல்ல திடமான உடல்வாகு.. தொப்பை எல்லாம் இல்லை. வாசு, உடலை பேணிக் கொள்ள கூடியவர், நான்கு மணிக்கு அவரின் காலை நேரம் தொடங்கிடும். இன்று முன்பாகவே தந்தையை பார்க்கவும் அதிர்ச்சி பெண்ணுக்கு.

வாசு, மகளை பார்க்கவும்.. “வாம்மா.. வா.. காபி எடுத்துட்டு வா.. கொஞ்சம் பேசணும்” என்றார் ஒருமாதிரி டென்ஷனாக இருந்தார்.

சுசீலாம்மா.. புன்னகைத்தபடி  உள்ளே சென்றார் காபி கலப்பதற்காக.

மிர்த்திக்கா அமர்ந்தாள்.

வாசு “மிர்த்திம்மா” என்றார் குரலில் வாஞ்சை வழிய.

மிர்த்திக்காவிற்கு அபயாமணி அடிக்க தொடங்கிவிட்டது உள்ளே.. லேசாக அதிர்ந்தாள் அப்பாவின் பாசத்தில்.

வாசு “நம்ம மணி மாமாவின் உறவில் ஒரு வரன் வந்திருக்கு. நட்சத்திர பொருத்தம் இருக்கு. அவங்க அது போதும்ன்னு சொல்லிட்டாங்க. இன்னிக்கு, அங்க நெருங்கிய சொந்தத்தில் எதோ கல்யாணமாம் இங்கே.  திருச்சி வராங்க.. அப்படியே வீட்டுக்கு வந்து உன்னை பார்க்கிறேன்னு சொல்லியிருக்காங்க. மாப்பிள்ளை பையன் பெங்களூர்ல  இருக்கார். அவரும் வரார் பிடிச்சதுன்னா.. மேற்கொண்டு பேசலாம்ன்னு சொல்லியிருக்காங்க. ஈவ்னிங் வராங்க.. நீ தயாராகிடுடா” என்றார் சந்தோஷ குரலில்.

மிர்த்திக்கா தந்தையின் முகத்தையே பார்த்திருந்தாள்.. ஆனால், அவர் மாப்பிள்ளை என சொன்னதும்.. சட்டென அவள் கட்டி வைத்திருந்த அவனின் நினைவுகள் கட்டவிழ்ந்துக் கொண்டது. சட்டென இமைக்கும் நேரத்தில்.. அவளின் யோகியின் முகம் கண்ணில் வந்துவிட்டது பெண்ணுக்கு. அதை ஒதுக்கி நிமிர்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

வாசு “மிர்த்தி..” என்றார் பதிலில்லா பெண்ணை பார்த்து.

மிர்த்திக்கா “ம்.. ம்.. சரிப்பா” என்றாள் தயங்கிக் கொண்டே.

தந்தை எழுந்து சென்றார் தனதறைக்கு.

சுசீலாம்மா காபி கொண்டு வந்து வைத்தார் புன்னகை முகமாக. பெண்ணவள் தன்போல அதை குடித்தாள்.. எழுந்து குவளையை கழுவி வைத்தாள்.. என்ன டிபன் என பார்க்க தொடங்கினாள்.

அவளுக்கு யோசிக்க கூட பயமாக இருந்தது.. வேலையில் தன்னை நுழைத்துக் கொண்டாள்.

அன்றைய பொழுது முழுவதும் சுசீலா பாட்டியோடு நேரம் சென்றது. தன் அறைக்கு கூட செல்லவில்லை பெண்.. எங்கேனும் பழைய நினைவுகள் வந்திடுமோ என சமையல், டிவி.. பேச்சு என இங்கேயே இருந்தாள்.

மாலை நேரம்.

சொன்னபடி நான்கு நபர்கள் வந்திருந்தனர் மாப்பிள்ளை வீட்டார். மிர்த்திக்காவினால் தன்னையே சமாளிக்க முடியவில்லை. ஒரு நல்ல சுடியில்தான் இருந்தாள் பெண்.. தந்தை அழைத்ததும் வந்து நின்றாள் ஹாலில். கண்கள் சிவக்க தொடங்கியது.. வணக்கம் என கைகள் கூப்ப.. அதில் லேசான அதிர்வு. 

வந்திருந்த மாப்பிள்ளையின் அன்னை, தன்னருகே அமருமாறு பணித்தார். கொஞ்சம் ஆசுவாசம் ஆகினால் பெண்.. அவரும் பொதுவாக எதோ பேசிக் கொண்டிருந்தார். 

மிர்த்திக்கா நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை.. கவனம் முழுவதும், அந்த பெண்மணி கேட்ட கேள்வியிலேயே இருந்தது. ஒரு பத்து நிமிடத்தில்.. என்ன நடந்தது ஏது என தெரியவில்லை.. அவளின் தந்தை வாசு “மிர்த்தி.. மாப்பிள்ளை எதோ தனியா பேசனுமாம்.. போடா.. பால்கனியில் போய் பேசிட்டு வாங்க” என்றார்.

மிர்த்திக்காவினால் எழவே முடியவில்லை.. கண்கள் இருட்ட தொடங்கியது. தம்பியை பார்த்தாள் அனிச்சையாய். தம்பி மாப்பிள்ளையிடம் நின்றான்.

மிர்த்திக்கா, சுதாரித்து எழுந்தாள்.. நிமிர்ந்து தன்னை நோக்கி சிரித்த முகமாக நின்றிருப்பவனை பார்க்க முனைந்தாள்.. முடியவில்லை.

ஜெகதீஷ் “வாங்க” என வந்த மாப்பிள்ளையை அழைத்து சென்றான்.

மிர்த்திக்காவிற்கு ஒன்றும் புரியவில்லை.. அனுமானத்தில், அங்கே சென்றாள்.. தம்பி ஜெகதீஷ்.. புன்னகைத்துவிட்டு ஹாலுக்கு வந்தான்.

அந்த பையன் “ஹாய்..” என்றான்.

மிர்த்திக்காவிற்கு தொண்டையடைத்தது.. தலையை குனிந்துக் கொண்டே “ம்..” என்றாள். இப்படி இருக்கமாட்டாள்.. அப்படி ஒன்றும் ‘ஷைய்’ என கிடையாது மிர்த்தி. அப்பா என்றால்தான் பயம்..  யோகி என்றால்தான் நடுங்கும்.. மற்றபடி நல்ல இயல்பான பெண். கல்லூரியில் இயல்பாக எல்லோரோடும் உரையாடுவாள்.. கண் பார்த்து நிமிர்ந்து பேசுவாள்.. தேவையென்றால்.. கூட்டாக அமர்ந்து செமினார்.. ப்ரஜெக்ட் என ஆண்களோடு சேர்ந்து படிப்பாள். ஆனால், இன்று என்னமோ வேற்று கிரகத்தில் இருப்பது போல ஒரு அன்னீசி பீலிங். எதோ மீண்டும் தவறு செய்பவள் போல உணர்ந்தாள்.

அந்த பையன் “ஹேய்.. டென்ஷனா இருக்கீங்க பார்த்தாலே தெரியுது. எனக்கு கொஞ்சம் பேசணும்..” என்றான்.

மிர்த்திக்கா அப்படியே நின்றாள்..

தொடர்ந்தான் “உங்களுக்கு என்னை பிடிக்கும்ன்னு நம்பறேன். அதனால் பேசுகிறேன், எனக்கு.. க்கும்.. நீங்க வேலைக்கு போனால் நல்லது. எனக்கு அப்ராட் போகணும்ன்னு ஆசை. சோ, அப்போ ரெண்டுபேரும் ஜாப்பில் இருந்தால் சரியா இருக்குமில்ல.. உ..உங்களுக்கு ஒன்னும்.. ஒகேதானே..” என்றான் தயங்கி தயங்கி சொல்லி முடித்துவிட்டான்.

இன்னும் அமைதிதான் பெண்ணவளிடம்.

அந்த பையன் “ஹலோ.. ஓகே தானேங்க.. என்னை பிடிச்சிருக்குதானே..” என கேட்டுக் கொண்டே அவளின் முகத்தை  நிமிர்த்த எண்ணி.. அவளின் கண் பார்வை கீழ் நோக்கி இருப்பதால்.. தாடையில் கை வைத்தான்.

சட்டென.. பெண்ணவள் படபடப்பானால்.. முகம் அவனின் தீண்டலில் முத்து முத்தாக வியர்வை துளிகள் பூக்க தொடங்கியது.. கண்கள் அவனை நிமிர்ந்து பார்க்க.. இப்போது சிவக்க தொடங்கியது.

அந்த பையனோ “இங்க பாருங்க.. பதில் சொல்..” என சொல்ல சொல்ல.. பெண்ணவள் நினைவு தப்ப “நோ.. ப்ளீஸ்” என சொல்லிக் கொண்டே சரிந்தாள் கீழே.

அந்த பையன் “ஹேய்.. ஹலோ.. அம்மா” என சத்தமிட்டான்.

ஜெகதீஷ் வந்து அக்காவை தூக்கி மடியில் கிடத்திக் கொண்டான். அதன்பின் மிர்த்திக்காவை.. தண்ணீர் தெளித்து.. மயக்கத்தை போக்கினர். இயல்பாக அமர்ந்தாள் பெண். வாசுதேவனுக்கு முகம் இறுகி போனது. கோவமாக மகளை முறைத்தார்.

ஜெகதீஷ், அப்படியே தன் அக்காவை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.

வந்தவர்களுக்கு, என்ன சொல்லுவதென்று தெரியவில்லை. சுசீலாம்மா “கொஞ்சம் டென்ஷன்.. மதியம் சரியா சாப்பிடல்.. வேற ஒண்ணுமில்லங்க” என்றார்.

வந்திருந்த பெண்மணியும் சிரித்தார் என்ன சொல்லுவது என தெரியாமல். அந்த பையனின் தந்தை “சரிங்க.. பெண்ணை பாருங்க.. அப்புறம் ஒருநாள் பார்க்கலாம்” என சொல்லி கிளம்பினார்.

அந்த மாப்பிள்ளை பையன் பயந்து.. அப்போதே வெளியே சென்றுவிட்டான். அன்னை தந்தை.. மற்றொரு மகன் என மூவரும் விடைபெற்று கிளம்பினர்.

வாசுதேவன் மறுநொடி பெண்ணின் அறையில் வந்து நின்றார் “மிர்த்திக்கா.. என்ன இதெல்லாம்.. இப்படியா பண்ணுவ.. எனக்கு தெரியும் நீ மாறமாட்ட, உன்னை நம்பி இத்தனை வருஷம்.. உன்னை படிக்க வைச்சது என் தப்பு.. இப்படி திரும்பவும் அப்பாவை ஏமாத்திட்டல்ல.. வெட்கமாகவே இல்லையா உனக்கு. நீ செய்ததுக்கு உன்னை கொன்னு போடாமல் இருப்பது என் தப்புதான். பாரு.. என்ன செய்யறேன்னு பாரு” என சொல்லி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெளியே சென்றார் வாசுதேவன்.

ஜெகதீஷ் “அப்பா.. ப்பா.. நில்லுங்க அப்பா” என கீழ் வரை அவரை தொடர்ந்து சென்றான். அவரோ நில்லாமல் காரெடுத்து கிளம்பிவிட்டார்.

மிர்த்திக்கா அப்படியே அமர்ந்திருந்தாள். எதற்கும் அவள் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டாள். அவளுக்கு தந்தை என்றால் மட்டுமே பயம். அது அவளின் ரத்தத்தில் கலந்து விட்டது. அன்னையை நினைக்கும் போது.. கோவமாக வரும். அந்த யோகியை நினைக்கும் போது எல்லாம் கலந்த உணர்வு. ஏனோ, அவனை வெறுக்கவும் செய்வாள்.. அவனை தேடவும் செய்வாள் மனதுள். இப்போது நீண்ட வருடங்களுக்கு பின் தன்னையே வெறுத்துக் கொண்டாள் மிர்த்திக்கா.

“எந்தன் இசைக்கு காற்றானான்..

எந்த மொழிக்கு ஊற்றானான்..

எதிர்காலம் பார்த்து கிடந்த என்னை

கடந்து நேற்றானான்..”

 

Advertisement