Advertisement

யோகி “நிவிம்மா, எப்போதும் போல நீ ஜாலியா இரு.. படி, என்ன வேணும்ன்னு சொல்லு.. செய்து தரேன். வேலை அதிகமாகிடுச்சுல்ல. குழப்பிக்காத.. “ என்றான்.

நிவி “அப்போ யாரு அது.. அந்த போன் கால்.. ஹார்ட் இருந்தது” என்றாள்.. அடுத்தவரின் சுதந்திரம் என.. என்ன தெரியாத சிறுபிள்ளை கேள்வி கேட்டது.. யோகியை.

யோகியின் முகம் அவனின் கட்டுபாட்டினையும் மீறி.. புன்னகைத்து இயல்பானது. தலையை கோதிக் கொண்டான்.. “அவள் என் ஸ்கூல் பிரெண்ட் டா.. அது முன்னாடியே சேவ் செய்தது.. நீ எதுக்கு அதெல்லாம் கேட்க்கிற, அந்த வயசா உனக்கு, ராஸ்கல்.. படிக்க வேண்டாம்.” என்றான். விளையாட்டாக அதட்டிக் கொண்டு.

தமிழரசி கண்ணில் தப்பாமல் யோகியின் லேசான வெட்க முகம்  பிடிபட்டது.

ஆனால், நிவேதித்தா.. யோகியின் இயல்பான பேச்சில் அவனின் முக மாற்றத்தை கவனிக்க மறந்து.. ஒரே ஒரு வாரத்தையை மட்டும் மூளையில் ஏற்றிக் கொண்டு  “ ஹப்பா.. பிரெண்ட் தானே, மாம்ஸ்” என சொல்லி சட்டென அவனை அணைத்துக் கொண்டாள்.. வேகமாக.. யாரும் எதிர்பாரா வண்ணம். எதோ என் ஒரு வேகம்.. உரிமை அதில் தெரிந்தது.

யோகி, தடுமாறி போனான். அந்த ஷணமே.. அவளை அனிச்சையாய் தள்ளினான்.. கீழே விழுந்துவிட்டாள் பெண்.

இதெல்லாம் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது.

தமிழரசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. “நிவி” என அழைத்துக் கொண்டே குனிந்தார்.

அதற்குள் யோகி அவளை தூக்கி இருந்தான். இத்தனைநாட்கள் அவளின் செயல்களை உணராதவன் இப்போதுதான், அதன் மாறுபாட்டை உணர்ந்தான்.

யோகி, நிவேதித்தாவை எரிப்பது போல பார்த்தான். 

சின்ன பெண்.. பயந்து மாமாவையே உறைந்தபடி பார்த்து நின்றாள். முன்பெல்லாம்.. சென்னை வந்த போது.. திக்கே தெரியாத போது.. அவளை பள்ளி அழைத்து செல்லுவது.. அவளுக்கு ஹோம் வொர்க் செய்ய உதவுவது.. என அவளின் சின்ன உலகத்தோடு தன்னையும் இணைத்துக் கொண்டான், யோகி. அவளை எல்லாவித இன்னல்களிலிருந்தும் பாதுகாப்பதுதான் தன் முக்கிய வேலையாக தானே எண்ணிக் கொண்டான். அது பிடிக்கவும் செய்தது.. அவளுக்கு நல்லது எது.. தினமும் அருகம்புல் சாறு.. கஷாயம் என எது  அருந்த வேண்டும் என்றாலும்.. அவளுக்கு அது நல்லதை கொடுக்கும் என்றால்.. அதை அவனே மிரட்டி உருட்டி கொடுத்தான். அதே சமயம் அதற்கு ஈடான தித்திப்பையும் அவன்தான் கொடுப்பான். வண்டி ஓட்டுவதற்கு சொல்லி கொடுத்தான்.. அவளுள் தைரியம் விதைத்தான்.. இன்று தன் அன்னையிடமே, மாமா தப்பு செய்கிறார் நீ கேளு என சொல்லும்.. தைரியம் அவன் தந்தது. அவனுக்கு தெரியவில்லை.. இவள் தங்கையில்லை.. மாமன் மகள் என.

ம்.. தன் மாமாவின் பெண் என அவளை நினைக்கவேயில்லை.. யோகி, அன்பை கொடுத்தான்.. உறவுமுறையை மறந்து. என்ன இருந்தாலும்.. பெயர் சொல்லும் உறவுக்கு என்று பேசப்படும் பிணைப்பு உண்டே.. பெண்ணவள் மாமா மாமா என அழைத்து.. தன் உலகை விரித்துக் கொண்டாள். இவனோ, தான் கண்ட துக்கங்களை மறக்க.. சின்ன பெண் என்றெண்ணி.. அவளின் உலகில் இணைந்துக் கொண்டான்.

இப்போதும் சின்ன பெண் மனதில் பயம். தைரியம் சொல்லிக் கொடுத்தவனை பயத்தோடு.. பார்த்தாள் பெண்.

யோகி, நிதானித்திருந்தான் “நிவி, சின்ன பெண் போல நடந்துக்கணும்.. புரியுதா..” என்றவன், தன் சிகையை கோதிக் கொண்டான், பின் “அடி பட்டிருச்சா..” என அவளை ஆராய்ந்தான்.. இயல்பாய்.

நிவேதித்தா திரு திருவென விழித்தாள். 

தமிழரசி “வா, போலாம் நிவி” என்றார், யோகியை முறைத்துக் கொண்டு.

நிவி “மாமா.. சாரி” என்றாள் உடனேயே.. யோகியின் கோவம் புரிந்து. யோகியே சொல்லி கொடுத்திருக்கிறான்.. ஆண்களிடம் எப்படி பேச வேண்டும் என.. அதனால், இதெல்லாம் மாமாவிற்கு பிடிக்காது என தெரிந்ததும் தன்னையும் மீறி.. நடந்தது தவறு என புரிய.. மாமாவின் முகம் பார்ப்பதை தவிர்த்து.. அன்னையின் அருகே ஒண்டினாள் பெண்.

யோகிக்கு இந்த நிவியை ஏற்க முடியவில்லை.. ஒளிவதும்.. மறைவதும் அவளின் இயல்பல்ல.. அவளிற்கு நான் இதை சொல்லி தந்ததும் இல்லை என தடுமாற தொடங்கினான். இந்த சூழலை எப்படி கையாள்வது “நிவி, காலையில் காலேஜ் போகனுமில்ல.. தூங்கு டா.. அப்புறம் பேசலாம்” என்றான் சிறுபிள்ளையிடம் பேசும் கனிவுடன்.

அவளும் அமைதியாக தலையசைத்து தன் அறைக்கு சென்றாள். 

யோகி, அங்கேயே அமர்ந்துக் கொண்டான். மாடியில் அவள் சென்று, தன் அறையின் கதவை சாற்றும் வரும் வரை.. தமிழரசியும் யோகியும் அமைதியாகவே இருந்தனர்.

யோகி “அத்தை சாரி” என்றான்.

தமிழரசி “நான் இதுக்குதான் பயந்தேன் யோகி.. அப்படியே நடக்குது பாரு.. இதைத்தான் என் தம்பிகிட்ட பேசிட்டு வந்தேன்.. நேற்றே அவள்.. உன்மேல கோவமாக இருந்தாள்.. அவளை நீ கண்டுக்கறதே இல்லைன்னு கம்ப்ளைன்ட்.. மாமா எதோ எனக்கு தெரியாமல் செய்கிறார்ன்னு.. என்கிட்டே புலம்பறா.. யோகி, இதெல்லாம் சரியாக இல்ல யோகி.” என்றார் கவலையில்.

யோகிக்கும் புரிகிறது இது டீன்ஏஜ் குழப்பம்.. அந்த வயதின் ஆசைகள் அவ்வளவுதான்.. என யோகிக்கு புரிகிறது.. “அத்தை, அவளுக்கு என்மேல மாமான்ற இமேஜ்.. அத்தோட.. செல்லமும் நான் கொடுப்பதால்.. ஒரு ஹீரோ இமேஜின் செய்து வைச்சிருக்கா.. நான் பேசிக்கிறேன் அத்தை. என்னோட தவறும் இதில் இருக்கு.. நான் அவளுக்கு புரிய வைச்சுக்கிறேன்” என்றான்.

தமிழரசி “என்னமோ போப்பா.. பெரியவளை வளர்த்ததே தெரியவில்லை..” என எப்போதும் போல தன் புலம்பலை தொடங்கிவிட்டார்.

யோகி “இதை நீங்க பெரிதாக எடுக்காதீங்க.. சித்தப்பாகிட்ட(அவரின் தம்பி) ஏதும் பேசிட்டு இருக்காதீங்க.. நான் பார்த்துக்கிறேன்.” என்றவன் தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.

யோகி ‘டேய் உனக்கு பொண்ணுங்கனாலே கண்டம் போல டா’ என தனக்குள் எண்ணிக் கொண்டான். அமைதியாக பேசி அவளிடம் விளக்கிவிடலாம் என எண்ணிக் கொண்டவனின் மனதில் பாரம் ஏறி போனது. ஒரு பெண் மனதில் ஆசை வர நான் காரணமாக இருந்துவிட்டேனே.. என மீண்டும் அவனின் மனது அழுத்தத்திற்கு சென்றது. யாரிடமும் பகிர தோன்றவில்லை.. தான் தாங்கி.. தன்னுடன் வளர்ந்தவள்.. சொல்ல போனால் தான் வளர்த்த பெண்.. என யோசனையோடு அந்த இரவை கழித்தான்.

யோகிக்கு, உறக்கம் என்பது தூரம் சென்றது.

மிர்த்திக்கா, அலுவலகம் சென்றாள். வித்யாவின் உபாயத்தில் அலுவலகத்தில் யோகியின் புகழ் பரவியிருந்தது. மிர்த்தி, அலுவலகம் வந்ததும் எல்லோரும் ஒரு நமுட்டு சிரிப்புடன் அவளை வரவேற்றனர். சரண் மட்டும் ஒதுங்கி நின்றுக் கொண்டான் இந்த கலாட்டாக்களில் கலந்துக் கொள்ளாமல்.

மிர்த்திக்காவிற்கு, அப்படி ஒரு வெட்கம்.. தலையை நிமிர்த்தி யாரையும் பார்க்க முடியவில்லை. டீ பிரேக்கில்.. பெண்கள் படை கூடிவிட்டது “ஊமைகோட்டான்.. என்ன என்ன சீன் போட்டா நம்மகிட்ட..” என  வித்யா ஆரம்பித்தாள்.

மிர்த்திக்காவிற்கு பதிலே சொல்ல முடியவில்லை.. யோகியை திட்ட தோன்றினாலும்.. இந்த நேரத்தில் புன்னகைதான் வந்தது. அதோடே மிர்த்திக்கா “இல்ல வித்தி அக்கா.. அவர் எப்படியோ கண்டுபிடிச்சி வந்துட்டார்.. இங்க நான் வேலைக்கு வரும் போது.. அவர் இங்க இருப்பதே தெரியாது..” என தொடங்கி ஏதேதோ பேசி சமாளித்தாள்.

அலுவலகம் கலகலக்க தொடங்கியது.

வீடு பார்த்ததில் இரண்டு வீடுகள் முடிவாகி இருந்தது. மாலையில் யோகி வந்ததும்.. எந்த வீடு, எது பாதுகாப்பாக இருக்கும் என இருவரும் பேசினர். 

யோகிக்கு, புதிதாக கட்டியிருந்த ஒரு அப்பார்ட்மென்ட் வீடு பிடித்திருந்தது. மிர்த்தியும் அதை ஒத்துக் கொண்டாள். இருவரும் சென்று முறையாக ஓனர் பார்த்து பேசினர்.

யோகி, தன்னை மிர்த்தியின் பியான்சி என அறிமுகம் செய்துக் கொண்டான்.. தம்பி வந்திடுவான் என எல்லா விவரமும் சொல்லி.. வீடு கேட்டனர். மொத்தம் மூன்று மாடி.. ஒரு மாடியில் மூன்று வீடுகள்.. கீழே பார்க்கிங். இரண்டாம் மாடியில் இவர்கள் வீடு எடுத்துக் கொண்டனர். பேசி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வீடு வந்தனர்.

யோகியும் மிர்த்தியும்.. வீடு வந்தனர். மிர்த்திக்கா “என்னிக்கு பால் காய்ச்சுவது” என்றாள்.

யோகி காலெண்டர் எடுத்து பார்த்தான் “ஞாயிற்று கிழமை நல்லா இருக்கு.. முதல்நாள் சாமான்கள் எல்லாம் எடுத்துட்டு போயிடலாம். மறுநாள் பால் காய்ச்சிடலாம்” என்றான்.. இதுவரை.. தான்தானே எல்லாம் பார்த்து செய்தோம் என்ற தோரணையில்.. அதையும் தானே செய்கிறேன் என சொன்னான் யோகி.

மிர்த்தியின் முகம் ஒரு குழப்பத்தோடு அவனை ஏறிட்டது.

யோகி “என்ன.. ஏதாவது சொல்லு” என அதட்டினான். என்னதான் இருவரும் பேசிக் கொண்டாலும்.. இன்னும் நெருக்கம் வரவில்லை.. நெருக்கம் வந்திட கூடாது என.. அவர்களே எண்ணிக் கொண்டதால்.. எதையும் காட்டிக் கொள்ளாமல்.. தேவைக்கு பேசினர். இப்போதும் அப்படியே, அவள் பதில் சொல்லவில்லை என்பதால்.. யோகி மிர்த்தியின் முகம் பார்த்து இந்த கேள்வியை கேட்டான்.

மிர்த்தி “அப்பாகிட்ட சொல்லனும்” என்றாள்.

யோகி “ம்…” என்றான். மனதுள் இதுவரை தன்னை தானே தேற்றி வைத்திருந்த சமன்பாட்ட மனநிலை.. மீண்டும் குற்றவுணர்வு கொண்டது. முகம் இறுகி போனது.. அமைதியாக தன்னவளை பார்த்தான்.

மிர்த்திக்கு, மீண்டும் அவனின் இறுகிய தோற்றம்.. அவளை என்னமோ செய்ய.. எதிரே நின்றிருந்தவள்.. யோகியின் அருகே வந்து அமர்ந்தாள்.. “இல்லங்க..” என அவனின் விரல் பிடிக்க தன் கைகளை நீட்டினாள் பெண்.

யோகி சட்டென எழுந்துக் கொண்டான் “ம்… மாமாவை கூப்பிட்டு சொல்லு.. ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா கேளு” என்றவன் “நான் கிளம்பறேன்.. பார்த்துக்கோ” என்றான். ஒருமுறை சுற்றி அந்த வீட்டை பார்த்தான்.. “அவர் வந்து எல்லாம் செய்திடுவார்.. நீ கூப்பிட்டுக்கோ.. அதுதான் சரி” என்றான். நெற்றியில் திடீரென தோன்றிய அந்த வியர்வையை தன் இருகைகளையும்.. ஒருசேர.. நெற்றியில் பதித்து.. விரல்களால் துடைத்தான்.. மீண்டும் மீண்டும் தோற்கிறோம் என எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை.. அவனால்.

மிர்த்தி அவனின் அருகில் வந்தாள்..

யோகி, அவளை நெருங்கவிட கூடாது என டீபாய் மீதிருந்த போனை எடுத்துக் கொண்டான்.. தன் சாவியை எடுத்தான்.

மிர்த்திக்கா பின்னிலிருந்து அவன் கையை பிடித்தாள்.. “இல்ல யோகி, அப்பா கேட்டபாரில்ல” என்றாள். 

யோகி, அவளின் கை தன் மீது பட்டதும்.. தொண்டையில் மீண்டும் துக்கம் சேர்ந்துக் கொண்டது. யோகி, நாசூக்காக.. ஆனால், பிடித்தவர்களை ஒதுக்குவது எவ்வளவு வலிக்குமோ அதை முகத்தில் காட்டாமல் மறைத்துக் கொண்டு.. நிமிர்ந்து தன் பேன்ட் பெல்ட்.. ஷர்ட்.. எல்லாவற்றையும் சரி செய்வது போல.. அவளின் பிடியை விலக்கினான்.

மிர்த்திக்கு தன்னை அவன் பார்க்கமாட்டானா எனத்தான் தோன்றியது இப்போது.. “யோகி.. யோகி” என அவனின் கைபிடித்துக் கொண்டே நின்றாள். அவனை சமாதானம் செய்யும் வழி தெரியவில்லை.. பெண்ணவள் கண்கள் நீர் திரையிட தொடங்கியது.

யோகிக்கு, புரிகிறது.. ஆனால் என்னமோ தாங்க முடியவில்லை அவனால்.. “நீ பாரு.. சாப்பிடு.. ஆர்டர் போட்டுக்கோ.. ம்.. பை” என்று அவளின் கன்னத்தை பட்டும் படாமல் தட்டிக் கொடுத்துவிட்டு.. கிளம்பிவிட்டான்.

“ஓடும் நதியில் இலையை போல

நாட்கள் நகர்கிறதே..

இலையின் மீது நிலவின் 

ஒளியோ சூடாய் விழுகிறதே..

கலாபமே எனை கீறினாய்..

மழை மேகமே பிழையாகினாய்..”

 

Advertisement