Advertisement

நீ என் அலாதிநேசம்!

19

மதியம் வரை பொறுப்பாக வீடுகள் பார்த்தனர் இருவரும். அதிகம் பேச்சில்லை.. தனி வீடு என்றால், யோகி வேண்டாம் என்றான்.. வசதிகள் பார்த்தான்.. அவளின் அலுவலக தூரம் கணக்கிட்டு.. நிறைய அலசினான். 

எப்படியும் இரண்டு வீடுகள் சரியாக இருக்கும் போல இருந்தது. மிர்த்திக்கா, அவனின் பேச்சுகளை கேட்டுகொண்டாள்.. அவளிற்கு, அவனின் அக்கறையில் குறிக்கிட தோன்றவில்லை.. வீட்டின் அமைப்பு.. வசதிகள் மட்டுமே தான் பார்த்து அமைதியானாள். 

உண்பதற்காக இருவரும் ஹோட்டல் வந்தனர். வேண்டுமென்ற யோகி, மிர்த்திக்கா அமர்ந்ததும் அவளின் அருகில் அமர்ந்துக் கொண்டான்.. எதிரே அமராமல். யோகியின் வியர்வையும் பாடிஸ்ப்ரே வாசமும் பெண்ணவளை சீண்டித்தான் பார்த்தது. 

வார்த்தைகளை தவிர்த்து யோகி மெனு கார்டு எடுத்து அவளின் பக்கம் வைத்தான். பேரர் வந்ததும் தனக்கு என்ன வேண்டும் என சொல்லிவிட்டு.. பெண்ணவளை பார்த்தான்.. மிர்த்திக்கா யோகியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தனக்கான உணவினை ஆர்டர் செய்தாள். 

மிர்த்திக்காவிற்கு சங்கடமாகத்தான் இருந்தது அவனின் மௌனம். அதை உணர்ந்து அவனை பார்வையால் நெருங்க முற்படுகிறாள்  பெண். ஆனால், யோகி தன் மௌனம் உடைக்க தயாராக இல்லை. அவனுக்கு, இன்னும் தன் நெருடல் தீரவில்லை.. அத்தோடு நிறைய குழப்பம்.. நிவியின் பேச்சும் ஒரு காரணம். அதனால் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவனின் மனம் சமாதானம் ஆகவில்லையே, தன் தவறில்.. இன்னமும் வலிக்கிறதே. அதனால், அவளிடம் முழு மனதோடு பேசவும் முடியவில்லை.. தள்ளி நிற்கவும் முடியவில்லை. 

எனவே, இப்போதைக்கு, வீடு பார்த்து அவளை ஷிப்ட் செய்வதுதான் முக்கியம்.. இந்த காதல் நேசம் எல்லாம் மனதை சமன்படுத்திக் கொண்டு பார்த்துக் கொள்ளலாம் என எண்ணி, தன்னை தானே யோகி கட்டுபடுத்திக் கொண்டான்.

இருவருக்கும் உணவு வந்தது உண்டனர். 

யோகி “வேறு குடிக்க ஏதாவது வேண்டுமா” என்றான். மிர்த்திக்கா ஏதும் வேண்டாம் என்றாள். தான் ஒரு லெமன் ஜூஸ் வாங்கி அருந்துவிட்டு அவளின் பக்கம் நகர்த்தினான்.. பெண்ணவளுக்கு கோவம் ‘வாய் திறந்து சொல்ல மாட்டாராமா?’ என. மிர்த்திக்காவும் அந்த நகர்வை காணாதவள் போல் அமர்ந்துக் கொண்டாள். யோகி இரண்டுநிமிடம் சென்று தானே அதையும் குடித்துவிட்டு கிளம்பினான்.

விடாமல் வீடு பார்த்தனர்.. மாலை நான்கு மணிக்கு, துரை, யோகியை அழைத்து.. இரண்டு இடங்கள் சொன்னான். எனவே, அந்த வீடுகளையும் பார்த்து வந்தனர். 

யோகிக்கு, தன் நண்பன் சொன்னதில் விருப்பம் இல்லை. மிர்த்திக்காவிற்கு, பஸ் ஸ்ட்டாபிங்கில் இருந்து அதிக தூரம் நடந்து வரவேண்டும். அதனால், யோகி வேண்டாம் என்றுவிட்டான். எனவே, நேராக வீடு வந்துவிட்டனர் இருவரும்.

யோகி, வீட்டின் உள் வரவில்லை. அவளை இறக்கிவிட்டு “மிர்த்தி, நான் கிளம்புகிறேன்” என்றான்.

மிர்த்திக்கு என்னமோ போலிருந்தது.. அவனின் கண்களை ஆழ்ந்து ஒருமுறை பார்த்தாள்.. அவன் தன் பார்வையை திருப்பிக் கொண்டான். பெண்ணவள் ஏதும் மறுமொழி கேட்க்காமல் “ம்..” என அவனுக்கு விடை கொடுத்தாள்.

யோகி அலுவலகம் வந்து சேர்ந்தான்.  வேலைகள் முடித்து இரவு.. தன் வீடு வந்தான்.

நிவி எப்போது யோகி வருவான் என பார்த்துக் கொண்டே இருந்தாள்.. யோகி, வீட்டின் உள் நுழையவும்.. “மாமா..” என வந்து கட்டிக் கொண்டாள். என்னமோ யோகி முன்போல.. அவளை அணைத்துக் கொள்ளவில்லை.. லேசாக நிவியை தோளோடு அணைத்து தன் எதிரே நிறுத்தி “என்னமோ மாச கணக்கில் பார்க்காதது போல.. இதென்ன” என்றான்.. நிவியின் கண்களை நேராக பார்த்து கேட்டான்.

நிவியின் பார்வையில் சட்டென ஒரு மாற்றம் “இதென்ன மாமா நீங்க புதுசா கேட்க்குறீங்க, எப்போதும், நான் இப்படிதானே.. நீங்கதான் புதுசா இருக்கீங்க” என்றாள் அதிகாரமாக.

யோகியினால் பதில் பேச முடியவில்லை.. என்னமோ இப்போதுதானே இந்த சிறுபெண்ணின் மாற்றம்.. ‘இப்படியும் கூட இருக்குமோ’ என யோசிக்கிறான். அதனால், இந்த பேச்சுகளை ஏற்க முடியவில்லை அவனால். தன் தலையை கோதிக் கொண்டே, தன் அறைக்கு சென்றான்.

அப்படியே அமர்ந்துக் கொண்டான்.. நிவியின் பார்வையையும் பேச்சுகளையும் அவனால், ஏற்க முடியவில்லை.

மீண்டும் நிவி யோகியை பார்க்க அறைக்கு வந்தாள் “மாமா.. வாங்க சாப்பிடலாம்” என சொல்லிக் கொண்டே உள்ளே வந்து அவனின் கட்டிலில் அமர்ந்தாள்.

சின்ன பெண்ணுக்கு என்னமோ தன் மாமனின் முகம் வாடி இருப்பது பிடிக்காமல் போக.. “மாம்ஸ் குளிங்க.. பசிக்குதா.. சாப்பிட்டு குளிங்க” என்றாள் விளையாட்டாக.

யோகி அமைதியாகவே அமர்ந்திருந்தான். நிவேதித்தாவிற்கு கோவமும், ஆற்றாமையும் வந்தது.. இவ்வளவு பேசறேன், மாமா கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க’ என கோவம். ஆனாலும் பெண்ணவள் தணிந்த குரலில் மீண்டும் “மாம்ஸ், கோவமா என் மீது..” என்றாள்.

யோகி தன் போன் எடுத்து டேபிளில் வைத்தான்.. ஒரு டவல் எடுத்துக் கொண்டு குளிப்பதற்கு ரெஸ்ட் ரூம் சென்றான்.

நிவி “ஏன் மாமா பேசமாட்டிங்களா?” என்றாள் குரலில் கோவம் அதை மறைக்க அவள் கண்கள் சிநேகம் கொண்டு.. யோகியையே பார்த்தது. 

யோகிக்கு அவஸ்த்தையான நிமிடம்.. சின்ன பெண் என தான் காட்டிய அன்பு.. அவளின் மனதில் எந்த பாதையை வகுத்திருக்கிறது.. நான் தவறாக அவளை நடத்திவிட்டேனோ.. நான் அவளிடம் கொண்ட அன்பு, தவறாக அவள் மனதில் பதிந்துவிட்டதோ.. என அப்படியே நின்று பார்த்தான் நிவியை. பின் தன் எண்ணத்திற்கு தானே நொந்துக் கொண்டு.. தலையை சிலுப்பிக் கொண்டு.. “நிவி, பேசாமல் என்ன.. நீ என்னோட பெட் டா.. நான் வேற யோசனையில் இருக்கேன். வரேன், பேசலாம்.. நீ போ.. நான் கூப்பிடுறேன்.” என லேசாக அவளை சமாதானப்படுத்தும் எண்ணத்தோடு சொல்லிவிட்டு, குளிப்பதற்கு சென்றுவிட்டான்.

நிவி அமைதியாக வெளியே சென்றுவிட்டாள்.

சற்று நேரத்தில் யோகி ஒரு ஷார்ட்ஸ் டி-ஷர்ட்தில் வந்து சேர்ந்தான். தானே உணவினை தனக்கும் நிவிக்கும் பரிமாறினான்.. “நிவி குட்டி வாடா சாப்பிடலாம்” என்றான் வாஞ்சையாய். என்னமோ அந்த வாஞ்சையை அவனால் விடமுடியவில்லை.. அவள் தவறாகவே தன்னை நெருங்கினாலும்.

நிவி கால்களை தட்டி தட்டி நடந்து செல்லம் கொஞ்சிகே கொண்டே  உண்பதற்கு அமர்ந்தாள்.

தமிழரசி இப்போதுதான் வெளியே சென்றுவிட்டு வீடு வந்தார். நேற்று இரவே தன் மகள் தன்னிடம் பேசியதும்.. இப்போது யோகியும் அவளும் அமர்ந்து உண்பதையும் பார்த்தும்.. குழப்பம்தான், அவருக்கு.

தமிழரசி “எப்போ வந்த யோகி” என்றார் டேபிள் அருகே வந்து அமர்ந்துக் கொண்டு.

யோகி “ஹால்ஃப் ஹவர் ஆச்சு அத்தை. நீங்க நிவியை தனியா விட்டுட்டு எங்க போனீங்க..” என்றான்.

தமிழரசி முகம் மாறிப்போனது, ஆனாலும் அவனின் பேச்சிறகு பதில் சொன்னார் “தம்பி பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க, அது விஷயமாக பேச போயிருந்தேன்” என்றார்.

நிவி “ம்மா.. மாமாகிட்ட பேசு” என்றாள், சின்ன குரலில்.

தமிழரசிக்கு, யோகி என்றால் கொஞ்சம் அலர்ஜி. அவனை பொருட்டாக எப்போதும் எடுக்கமாட்டார். ஆனால், தன் கணவனுக்கு அவன் காரியங்கள் செய்யவும், என்னமோ அவன் மீது ஒரு மரியாதை. ஏதேனும் பெரிய விஷயங்கள் என்றால்.. இப்போதெல்லாம் யோகியிடம் ஒருவார்த்தை சொல்லிவிட்டு செய்கிறார் தமிழரசி. ஆனால், இப்போது பெண் பேச சொல்லுவது, கொஞ்சம் அசாதரணமான விஷயம்.. அத்தோடு, தமிழரசிக்கு.. மகள் மூலம் யோகி பற்றி.. கேட்ட நடவடிக்கைகள்.. அப்படி ஒரு திருப்தி. என் மகள் தப்பித்தால் என்ற எண்ணம்தான். ஆனாலும், அவனிடம் எப்படி கேட்பது என எண்ணிக் கொண்டு.. அமைதியானார்.

நிவி மீண்டும் ஒருமுறை கேட்க.. தமிழரசி “யோகி சாப்பிட்டு வரட்டும்” என்றார்.

யோகி “என்ன டா, உங்க அம்மாவிற்கு எதோ பயங்கர வேலை கொடுத்திருக்க போலிருக்கே.” என்றான், தமிழரசி அந்தபக்கம் சென்றதும்.

நிவியும் “ம்.. என்கிட்டயிருந்து என்ன மறைக்கிறீங்கன்னு கேட்க சொல்லியிருக்கேன், என் அம்மாவும் உங்களுக்கு அம்மா மாதிரிதானே, அப்பாதானே வளர்த்தார்.. அப்போ நீங்க தப்பு செய்தால் அம்மா கேட்க்கலாமே” என்றாள்.

யோகி புன்னகைத்தான் மர்ம்மாக.

நிவி “என்ன மாமா சிரிக்கிறீங்க” என்றாள்.

யோகி “ஒண்ணுமில்ல டா” என்றான்.

உண்டு முடித்தனர்.

யோகி “நிவி.. படிச்சு முடிச்சிட்டியா.. அப்படின்னா வா.. கொஞ்சம் பேசணும்” என்றான்.

தமிழரசி, ஹாலில் அமர்ந்திருந்தவர் அப்படியே யோகியை பார்த்தார். யோகி அதை உணர்ந்து, அவரின் அருகே வந்து அமர்ந்தான் “நீங்க என்ன என்கிட்டே பேசணும்” என்றான்.

நிவி இப்போது அங்கே வந்து அமர்ந்தாள்.

தமிழரசி “ஒண்ணுமில்ல ப்பா.. உங்க மாமா இருக்கும் வரை எனக்கு.. இவளின் குணம் பற்றி கவலை இருந்தாலும், உன்னை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், இப்போ இவளின் பேச்சும் எண்ணமும்.. கொஞ்சம் பயமா இருக்கு.. யோகி” என்றார் எதையும் மறையாமல்.

பின் தன் மகளை பார்த்து “நீ உள்ள போ.. நிவிம்மா” என்றார்.

நிவேதித்தா “ம்மா.. நீ என்ன பேசுற, நான் எதுக்கு போகனும்.. நீ மாமாவை கேளு.. இப்போவே கேளு.. எனக்கு மாமா பதில் சொல்லனும்.. மாமா ஏன் என்னை அவாயிட் பன்றாருன்னு கேளு” என்றாள் பிடிவாதக் குரலில்.

யோகிக்கும் தமிழரசிக்கும் சங்கடமாக போனது.

யோகி “இல்ல நிவிம்மா.. அப்படி எல்லாம் இல்லை. உனக்கான அட்டென்ஷன் எப்போதும் இருக்குடா. அதுக்கும்.. என் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இங்க பாரு நிவிம்மா” என்றான்.

நிவேதித்தா தன் மாமாவின் அருகே அமர்ந்தாள்.

Advertisement