Advertisement

நீ என் அலாதிநேசம்!

18

மிர்த்திக்கா அழுகவில்லை. அமைதியாக ஹால் சோபாவில் அவன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்துக் கொண்டு.. ஒரு குஷன் எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ‘அமைதியாகிட்டான்.. அவன் விரல்கள்.. என்னை தேடவேயில்லை.. அப்செட் ஆகிட்டான்.. ம்..’ என பெண்ணவளின் மனம் அவனை நினைத்துக் கொண்டது. ஒருமாதிரி வருத்தமாக இருந்தது.. ஏதேதோ பழைய எண்ணங்கள்.. அவளின் சிந்தனையை நிறைத்துக் கொண்டது.

யோகி வெளியே செல்லும் போது மணி ஒன்பதிற்கு மேல். என்ன செய்வது என தெரியாமல் நின்றான் தன் வண்டியில் சாய்ந்துக் கொண்டு. 

அந்த நேரம் நிவி அழைத்தாள் யோகியை.

யோகி எடுத்து பேசினான் “என்ன டா..” என்றான்.

நிவி “மாமா எங்க உங்களை காணோம்.. சாப்பிடலாம்ன்னு பார்த்தேன்..” என்றாள், பிடிவாதமான குரலில்.

யோகிக்கு மனது நெகிழ்ந்து போனது “நான் வெளிய இருக்கேன் நிவிம்மா.. நீ சாப்பிடு..” என்றான் தழைந்த குரலில்.

நிவி “என்ன மாமா.. எதோ தூக்கத்தில் இருக்கீங்களா.. குரல் ஒருமாதிரி இருக்கு” என்றாள், விளையாட்டு போல.

யோகி ‘தூக்கமா.. துக்கத்தில் இருக்கேன்’ என தனக்குதானே கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டு “இல்ல, பிரெண்ட் கூட இருக்கேன்.. சரிடா..” என அவன் உரையாடலை முடித்துக் கொள்ள எண்ண..

நிவேதித்தா “மாமா உங்ககிட்ட ஒன்னு கேட்கனும்.. நீங்க ப்ரீயா” என்றாள்.

யோகி சலிப்பாக “டேய்.. நேரில் பேசிக்கலாம் நிவி.. டைம் ஆச்சு.. நீ சாப்பிடு” என்றான்.

நிவி “இல்ல, நேரில் என்னால் கேட்க முடியலை மாம்ஸ்.. அதான் போனில் கேட்க்கிறேன்” என்றாள் சாதரமான குரலில்.

யோகி உஷாரானான்.. மிர்த்தியிடம் மட்டுமே மூளை கொஞ்சம் அடங்கும்.. தனது யோசிக்கும் திறனையெல்லாம் மூடிக் கொள்ளும்.. மற்றபடி.. மூளைகாரந்தான்விழித்துக் கொண்டான் “என்ன கேட்கனும் நிவி சொல்லு” என்றான்.

நிவி “இல்ல.. நீங்க முன்னாடி மாதிரி என்கூட பேசறதில்லை.. அவுட்டிங் எங்கும் கூட்டி போறதில்ல.. நிறைய போன் பேசுறீங்க.. எதேதோ பேரில் கால்ஸ் எல்லாம் வருது உங்களுக்கு.. ஏன் மாமா நீங்க ஏதாவது என்கிட்டே மறைக்கிறீங்களா” என்றாள்.

யோகிக்கு குழப்பம் இப்போது, ஆனாலும் “உன்கிட்ட என்ன சொல்லனும்ன்னு நீ நினைக்கிற” என்றான்.

நிவி “எ..ல்லாம்தான். ஏன் மாம்ஸ், நான் உங்களுக்கு ஸ்பெஷல்தானே” என்றாள்.

யோகி அமைதியானான்.. இந்த சிறுபெண்ணை நெருங்கி பழகுபவன்.. அவளின் எந்த செய்கைக்கும் அபத்தமாக அர்த்தம் கற்பித்துக் கொள்ளாதவன்.. இன்றின் தாக்கத்தில், சற்று சுதாரித்தான் “நிவி, உனக்கு என்ன கேட்ட்கனுமோ நேராக என்கிட்டே கேளு” என்றான்.

நிவி “இதுதான் கேட்கனும்.. நான் ஸ்பெஷல்தானே உங்களுக்கு” என்றாள்.. சிறுபிள்ளையிலிருந்து பிடிவாதத்திற்கு அவளின் குரல் மாறியிருந்தது இப்போது. 

யோகி சிறுபெண் எதோ சொல்ல போகிறாள்.. ஏதும் கல்லூரியில்.. அல்லது, நண்பர்கள் உடன் ஏதேனும் உறவாக இருக்கும்.. அதான், இத்தனை கேள்வி என எண்ணிக் கொண்டு.. விசாரணையாக “ஆமாம்.. எங்கள் குட்டி பெண்.. எனக்கு, எங்களுக்கு ஸ்பெஷல்தான்” என்றான்.

நிவிக்கு முகம் வாடி போனது.. ஆனாலும், விடவில்லை.. தைரியமாக “உங்ககிட்ட ஒன்னு கேட்கவா” என்றாள்.

யோகி சீரியசனான்.. “ம்” என்றான்.

நிவி “இப்போவெல்லாம்.. என்கூட நீங்க பேசறதேயில்ல.. நிறைய போனில்தான் பேசுறீங்க.. அன்னிக்கு கூட எதோ புரியாத ஸ்பெல்.. யோலட்டு’ன்னு.. ஒரு கால் வந்தது.. ஏன் மாமா.. இதெல்லாம் எனக்கு பிடிக்கலை..” என்றாள், கோவமும் அதட்டலுமாக.

யோகிக்கு, மிர்த்தியைதான் சொல்லுகிறாள்.. என சட்டென புரிந்து போகிற்று. அவள் அழைத்ததை நான் கவனிக்கவில்லை.. இவள் பார்த்திருக்கிறாள்.. என்னிடம் சொல்லவில்லை.. ம்.. என யோசித்தான். பின் யோகி “எப்போ” என்றான்.

நிவி “நேத்து” என்றாள்.

யோகி இறுகிய குரலில் “எப்போ வந்தது.. நீ பார்த்தியா” என்றான்.

நிவி “மாமா.. நீங்க சாப்பிட்டு போனதும், போன் என்னிடம்தான் இருந்தது அப்போதான் கூப்பிட்டாங்க.. ஏன், டென்ஷன் ஆகுறீங்க..” என்றாள் எரிச்சலாக.

யோகி “ராஸ்கல்.. அப்படி வந்ததும் என்கிட்டே போனை கொடுத்திருக்க வேண்டாமா.. வைச்சி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தியா நிவி. அதனால், எத்தனை பிரச்சனை தெரியுமா.. உனக்கு எதில்தான் விளையாடுறதுன்னு இல்லையா..” என அவன் கொஞ்சம் கோவமாக பேசினான்.

நிவி “எதுக்கு இவ்வளோ டென்ஷன் ஆகுறீங்க.. அதான் போனை கொடுத்திட்டேனே, யோகி மாமா இப்படி எல்லாம் என்கிட்டே பேசினதே இல்லை, அதான் கேட்டேன். இப்போது தெரிஞ்சிடுச்சி.. நீங்க என்னமோ தப்பு பண்றீங்க.. அதான், வீட்டிலிருந்து விலகி, என்கிட்டே இருந்து தூரமா போறீங்க.. நீங்க சரியில்லை” என படபடத்தாள்.

யோகி “நிவி, அதிகமா பேசாத..” என காய்ந்தான்.

நிவேதித்தா “மாமா, நான் அதிகமா பேசலை.. சரியா பேசுறேன்.. நீங்க சொன்னீங்களே என் அப்பாகிட்ட, ‘என்னை’ பார்த்துக்கிறேன்னு.. நீங்க. இப்போ சரியா இல்லையே.. அதனால், பேசுறேன். அப்பாகிட்ட என்னை பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்கீங்க.. நீங்க எதோ தப்பு பண்றீங்க. எனக்கு அப்படிதான் தோணுது.” என்றாள் கோவமாக.

யோகி அதிர்ந்து போனான்.. நிவியின் பதட்டம் இந்த ஆர்பாட்டம் வார்த்தையில் எதோ அறிவுறுத்துவது எல்லாம் இவனுக்கு புரிந்தது. எதிர்த்து அவளிடம் சத்தம் போட முடியவில்லை.. சின்ன பெண்ணை சமாளிக்க எண்ணினான்  “நிவி போதும்.. இதென்ன பேச்சு, நான்தான் பார்த்துக்கனும். எனக்கு  போன் வந்ததுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். கண்டபடி யோசிக்காமல் படி.. நிவிம்மா.” என பொறுமையாக எடுத்து சொன்னான்.. மனதில் சின்னபெண்ணின் கோவத்தையும்  உள்வாங்கிக் கொண்டான்.

நிவி அழைப்பை துண்டித்தாள். தன் மாமாவின் மேல் கோவம் இன்னும் தீரவில்லை.. ‘வரட்டும், அம்மாகிட்டவும் பேச சொல்றேன்’ என எண்ணிக் கொண்டாள். உணவு உண்ணும் மனநிலையில் அவள் இல்லை.. அதனால்,  அப்படியே சென்று மீண்டும் படிப்பதற்கு அமர்ந்தாள். என்னமோ ஏதும் ஏறவில்லை. 

எல்லாம் யோகிதான் நிவியை பொறுத்தவரை.. யோகி மாமா யாருடன் வெளியே போனனும்ன்னு சொல்றாங்களோ அவங்களோட தான் வெளியே போவாள்.. தீபவாளி உடை எடுக்க.. அவன் வர வேண்டும்.. இல்லை.. அவனே ஆர்டர் செய்திட வேண்டும்.. தனக்கு என்ன படிக்க வரும் என அவன் பார்த்து சொன்னதுதான்.. இப்படி எல்லாம் அவன்தான்.. இந்த விலகளை ஏற்க முடியவில்லை அவளால். எதையோ சிந்தித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

யோகிக்கு, நிவி பேசியது எல்லாவற்றையும் மூளையில் அசை போட்டுக் கொண்டே தன் நண்பனின் இருப்பிடம் வந்து சேர்ந்தான். துரை அமைதியாகவே கதவு திறந்துவிட்டான்.

யோகி குளிக்க சென்றான்.

துரை “சாப்பிட போலாமா.. இல்ல, ட்ரிங்க்ஸ் வேணுமா” என்றான் நண்பனிடம்.

யோகி “டேய் அதெல்லாம் வேண்டாம் டா.. டிபன் வாங்கிட்டு வந்திடு” என்றான் எரிச்சலாக.

துரை “இப்போ மட்டும் பேசு.. எத்தனை கால் செய்தேன்.. எங்க டா போன.. என்ன நடக்குது.. ஹேபியர்கார்பஸ் போட்டுதான் உன்னை கொண்டு வரணும்ன்னு நினைச்சேன். பர்சனல்னா சொல்லிட்டு போடா.. மார்த்தாண்டம் கேஸ் விஷயமா உன்னை தேடினோம்” என்றான் எரிச்சலாக.

யோகி “ஏன் என்ன..” என்றான்.

துரை “எடுத்தாச்சி.. ஆனாலும் அரைமணி நேரம் டென்ஷன்தானே. இன்மேல் பேச்சிலர்ஸ் வேலைக்கே எடுக்காதீங்கன்னு அந்த ஆளு திட்றான்..” என்றான் கோவமாக.

யோகி “சரி, போ..டா.. பசிக்குது” என்றான்,  சாவகாசமான குரலில்.

துரை நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்து “ஏன், உன் லவ் சோறு போடலையா.. எதோ” என பேச வர. யோகி இடைமறித்தான் “டேய்.. போடா.. பசிக்குது” என்றான் அழுத்தமாக.

துரை ஏதும் எதிர்த்து பேச முடியாமல் உண்பதற்கு சென்றான்.

யோகி குளித்து வந்து.. தன்னவளுக்கு அழைத்தான். மிர்த்தி அவனின் அழைப்பை ஏற்றாள்.

யோகி அவள் எடுத்ததும் ஒன்றுமில்லா குரலில் “மிர்த்தி, ஜெகன் நம்பர் கொடு..” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாமல்.

மிர்த்திக்கு, தம்பியிடம் சொல்லிவிடுவானோ.. வீடு பற்றி என தோன்ற “ஏன்” என்றாள்.

யோகி யோசனைதான் அவள் எதற்கு அழைத்தாள் என்பது குறித்து.. அதை இவளிடம் கேட்க முடியாது.. இப்போது சொல்லவும் மாட்டாள்.. என தானாக எண்ணிக் கொண்டான். ஒருமாதிரி கோவமும் எரிச்சலும் வந்தது அவளின் எதிர் கேள்வியில்.. “எதுக்குன்னா, உங்க அக்காவை ஏன் டா, தனியா விட்டுட்டு போனேன்னு கேட்க வேண்டாமா” என்றான்.

மிர்த்தி “ம்.. அவனுக்கு வேலை, என்ன இப்போ.. எல்லாம் பாதுகாப்பாதானே விட்டுட்டு போயிருக்கான். நீங்க உங்க வேலையை பாருங்க. நான் அப்புறமா நம்பர் தரேன்” என்றாள்.

யோகிக்கு, அவளிடம் கோவம் கொண்டு பேசவும் முடியவில்லை.. தழைந்து பேசவும் தெரியவில்லை.. என்னமோ.. அவள் தன்னை விட்டு தள்ளி சென்றுவிட்டதாக ஒரு எண்ணம்.. அதனால் இன்னும் இறுகி போனவன்.. அடக்கிய கோவக் குரலில் “சரி நீ நம்பரும் கொடுக்க மாட்ட.. எதுக்கு என்னை கூப்பிட்டேன்னு சொல்ல மாட்ட.. நான் அவன் ஆபீஸ் போய் கேட்டுக்கிறேன்” என்றான்.

மிர்த்தியின் குரல் இப்போது பதறியது “அய்யோ” என்றவள் அமைதியானாள்.

யோகி “மண்டையில் பிராண்டிகிட்டே இருக்கு.. எதுக்கு கூப்பிடன்னு சொல்லு.. வேற வேலை ஓடமாட்டேங்குது.. இல்ல, உன் ஆபீஸ் வந்து கேட்டுக்கவா” என்றான்.

மிர்த்தி பதட்டமாக “இல்லங்க, இல்ல.. இப்போ இந்த வீட்டை” என சொல்லி.. நடந்தவைகளை சொல்லி முடித்தாள் பெண்.

யோகி “இது சரியில்லையே.. ஜெகன் வேற ஊரிலில்லை. எப்படி அப்படி சொல்லலாம்.. எங்க அட்ரஸ் அனுப்பு அந்த ஆளு பேரென்ன.. எப்படி பத்துநாளுக்குள் முடியும்..” என அட்வகேட் ரூபம் கொண்டு விசாரணை செய்தான்.

மிர்த்தி “இல்ல, அவர் எதோ கஷ்ட்டத்தில் இருக்கார். ரிக்ஃவெஸ்ட்தான் வைச்சார். இந்த மாச வாடகையே வேண்டாம்ன்னு சொல்லிட்டார்.. அட்வான்ஸ் முழுசா கொடுத்திடுறேன்னு சொல்லிட்டார்.. அவருக்கு எதோ மெடிக்கல் எமெர்ஜென்சி.. நீங்க ஏதாவது சொல்லாதீங்க” என்றாள்.

யோகி “இல்ல மிர்த்தி, நான் ஒருதரம் போய் பார்த்துட்டு வரேன்” என்றான்.

மிர்த்திக்கா கொஞ்சம் சிடுசிடுப்பாக “நான் உங்களை அதுக்கு கூப்பிடலை.. எனக்கு வீடு வேண்டும் என கேட்கத்தான் கூப்பிட்டேன். உங்ககிட்ட கேஸ் கொடுக்க கூப்பிடலை” என்றாள்.

யோகிக்கு, அவளின் பதிலிலேயே அங்கேயே அவனது சிந்தனையை நிறுத்திக் கொண்டது.. “ம்..” என்றான்.. கொஞ்சம் தன்னை சமன் செய்துக் கொள்ள தொடங்கினான்.

Advertisement