Advertisement

அலாதிநேசம்!

16

மிர்த்திக்கா, பஸ்சில் ஏறி அமர்ந்ததும்.. அவனின் நினைவுதான்.. ‘எதோ சொல்லனும்ன்னு கூப்பிட்டான்..’ என யோசித்துக் கொண்டே இருந்தாள். 

யோகிக்கு, மனது பாரமாகியிருக்க அவளுக்கு அழைப்பதா வேண்டாமா என.. உறங்கும் முன் யோசித்துக் கொண்டே படுத்திருந்தான். நேரம் கடந்தது. உறங்கியும்விட்டனர் இருவரும். 

நடு இரவில், யோகிக்கு விழிப்பு வந்துவிட.. மீண்டும் அவளின் தாக்கம் அவனுள். நேரத்தை  பார்த்தான் இரண்டு. கைகள் துருதுருத்தது.. பின் அமைதியானான். பத்து நிமிடம் கடந்து மீண்டும் கைகள் துருதுருத்தது.. அவளுக்கு அழைத்தேவிட்டான். இரண்டு ரிங் சென்றதும்.. அழைப்பை துண்டித்துவிட்டான். 

மிர்த்திக்கா விழித்துக் கொண்டாள். அழைத்தது யாரென பார்க்க.. யோகிதான். மனதின் ஓரத்தில் அவன்தான் அழைப்பான் என இருந்தது. இப்போது திரையில் அவன் பெயர் ஒளிரவும் ஒரு திருப்தி.. பிரதிபலன்.. நிறைவு.. என திரும்ப பெரும் நேசத்திற்கான எத்தனை சொற்கள் உண்டோ அத்தனையும் அவளின் உணர்வில் வெளிப்பட்டது. லேசான புன்னகை முகத்தில்.. தம்பி அருகில் உறங்கிக் கொண்டிருந்தான்.. திரும்பி அவனை பார்த்தவள்.. போனை பாகில் வைத்துவிட்டு, அமைதியாக மீண்டும் உறங்க தொடங்கினாள். அவனிடம் என் நினைப்பிருக்கு.. நான் இருக்கிறேன்.. என்பது தெரியும்தான். ஆனால், இப்படி தான் மாலையில் அவனை திட்டிய பிறகும்.. அழைப்பதிருப்பதில் ஒரு அலாதி இன்பம் உணர்ந்தாள் பெண். அஹ.. எத்தனை அடிபட்டும்.. எத்தனை வலி உணர்ந்தும்.. எவ்வளவு பிரிவு கண்டும்.. இந்த காதல் மட்டுமே திரும்ப திரும்ப உயிர்க்கிறது.. துணையையும் உயிர்ப்பிக்கிறது.

யோகிக்கு, அவள் விழித்திருந்தால்.. அழைப்பை ஏற்றிருப்பாள்.. என தோன்ற அவளின் வாட்ஸ் அப் சென்று.. அவளின் புகைப்படம் பார்த்தான். இன்று அவள் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைத்திருந்தாள். யோகி அந்த புகைபடத்தை பார்த்து பேச தொடங்கினான் “என்னோட லட்டு காணாமல் போயிட்டா.. நான் அதே யோகிதான் டா.. ம்..” என மனம் பணிக்க.. அவளிடம் மன்றாடிக் கொண்டிருந்தான், என்ன நிழல்படத்திடம்தான்.

சற்று நேரம் சென்று மனதை அமைதிப்படுத்திக் கொண்டு உறங்கினான் யோகி.

மாதங்கள் கடந்தது.

யோகியின் வேலை தங்குதடையில்லாமல் சென்றது. அவனுக்கு வழக்குகளும் அதிகமாக.. எப்போதும் ஒரு யோசனையோடேயே இருந்தான். இரவில் தன்னவளுக்கு என ஒரு செய்தி அனுப்புவதோடு சரி.. இப்போது நேரில் சென்று பார்தப்பதோ.. போனில்  பேசவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை அவன். ‘இனி என்ன சொல்லி புரியவைப்பேன்’ என்ற எண்ணம் வந்துவிட்டிருந்தது.

 

மிர்த்திக்காவிற்கு, யோகியின் நிலை தெரியவில்லை. ஆனாலும், அவன் அழைக்காதது ஏமாற்றமே அவளுக்கு. முன்புகூட தாங்கிக் கொண்டால் போல.. இப்போதெல்லாம் இரவில் அவனின் செய்தி வருவதற்கு தாமதமானால் கூட.. ஒரு சோர்வு வந்துவிடுகிறது.. அவனுக்கு என் ஞாபகம் இல்லையே..’ என.. ஆனாலும், தானாக அவனுக்கு அழைத்து பேசுவதும் இல்லை.

ஒருவழியாக மிர்த்திக்கா ஆறுமாதம் தன் ட்ரைனிங் காலத்தை முடித்து.. பெர்மனென்ட் ஆர்டர் வாங்கினாள். அதுதொட்டு இன்று அலுவலக பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் ட்ரீட் என கேட்டிருந்தனர். காரணம், யாருடனும் மிர்த்திக்கா அவ்வளவாக பேசி பழகியதில்லை. அவளின் பக்கத்தில் இருப்பவள்தான் முதலில் ஆரம்பித்தாள்.. ‘எப்போ ட்ரீட்’ என. முதலில் மிர்த்திக்கா விழித்தாள்.. பதில் சொல்லாமல். ‘வா மிர்த்தி.. எங்ககூட நீ வெளியவும் வந்ததில்லை.. நீ வேலைதவிர வேறு பேசியும் கேட்டதில்லை.. ஒருநாள் வா நாம வெளியே போகலாம்..’ என அழைத்தனர், அங்கிருந்த பத்து நபர்களும் சேர்ந்து.

அந்த வாரம் முழுவதும் பிளான் செய்து முடிவும் செய்தனர்.

அன்று ஒரு விடுமுறை தினம். எல்லோருமாக மால் வந்திருந்தனர். மொத்தமாக ஒன்பது நபர்கள் அவர்கள் டீம் மட்டுமாக வந்திருந்தனர். இருவர் மட்டுமே திருமணம் ஆனவர்கள். நான்கு பெண்கள் மூன்று ஆண்கள். ஆக, தாங்களாக பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டுமாக.. சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தனர்.

மிர்த்திக்கா இந்த ஆறுமாதமாக.. அதிகமாக யாரிடமும் பேசியதில்லை, அதற்காக ஒதுங்கியும் இருந்ததில்லை. ஆனால், அவர்களின் டீமில் உள்ள எல்லோருக்கும் மனதுள் தோன்றும் ஒரே விஷயம் ‘சிரிக்கவே யோசிப்பாளோ’ என்பதுதான். எதோ அவார்ட் பட  ஹீரோயின் மாதிரி.. ஒப்பனையே இல்லாமல்.. கண்ணில் காஜ்ல் மஸ்கார ஏதுமில்லாமல்.. ஹேர் கட் கூட இல்லை.. பின்னிய நீண்ட கூந்தல்.. சுடி சுடி.. எந்நேரமும் ஒரு கான்ராட்ஸ் கலர்ஸ் போர்மல்ஸ் போல சுடிதார். எதோ ஒரு வெறுமை அந்த முகத்தில், அவள் எப்படி மறைக்க முயன்றும்.. அவ்வபோது டீ அருந்தும் போதோ.. எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது.. அவள் உணரும் தனிமையிலும்.. அந்த முகபாவம் வெளிபட்டுத்திவிடும் பலநேரம்.  அதை கேட்க்கலாமா வேண்டாமா என தோழமைகள் பலநேரம் யோசிக்கும். அவளாக பேச்சு வாக்கில் சொல்லிடுவாள் என கூட யூகிக்கும். ஆனால், மிர்த்தி அப்படி எந்த இடத்திலும் நடந்துக் கொள்ளவில்லை.

இன்று, எல்லோருமாக பேசி பேசி.. தங்கள் அலுவலகத்தில் நடக்கும் குளறுபடிகள்.. அங்கே நடக்கும் பாலிடிக்ஸ்.. க்ரஷ் என பல கதைகளை ஆங்காங்கே பேசி.. சிரித்து கேலி கிண்டல் என சுற்றிக் கொண்டிருந்தனர். மிர்த்திக்காவின் பெயரும் சரண் என்ற பெயரும் சட்டென அங்கே அடிபட.. மீண்டும் ரகசிய புன்னகை அங்கே, சரண் என்றவன் இப்போது “டேய் டேய்.. ஏன் டா..” என்றான் டென்ஷனாக.

பேச்சு வேறு திசை மாறியது. மிர்த்திக்கா எப்போதும் போல.. இதையெல்லாம் காதில் வாங்காமல் போன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பேச்சு வராது. கூட்டத்தோடு கலக்கவும் விரும்புவதில்லை அவள். அதனால், இந்த பேச்சுகள் காதில் விழவில்லை.

எல்லோரும் எதோ பேசிக் கொண்டே அமர்ந்தனர். மிர்த்திக்கா அமர்ந்திருந்த இடத்தின் அருகே.. சரண் வந்து அமர்ந்தான்.. சாதாரணமாக. மிர்த்திக்கா கவனித்து எழும் போது சரண் “சும்மா உட்காருங்க மிர்த்திக்கா” என்றான், சினேகா பாவனையில்.

மிர்த்திக்காவிற்கு சட்டென அவன் பேச்சு புரியவில்லை  “என்ன” என்றாள், எழுந்து நின்றுக் கொண்டு.

சரண் எழுந்துக் கொண்டே “இல்ல.. உன்கிட்ட பேசணும்” என சொல்ல சொல்ல.. அருகிலிருந்த எல்லோரும் இவர்களை திரும்பி பார்த்தனர்.

மிர்த்திக்காவிற்கு என்னமோ போலாக அமர்ந்தாள். சரணும் அமர்ந்தான். மிர்த்திக்கா, அவனை நிமிர்ந்து பார்த்தாள் கண்களில் கேள்வி ‘என்ன’ என. பெண்ணவளின் சலனமில்லா முகம் இப்போது இறுகி போயிருந்தது ‘என்ன பேசணும் என்கிட்டே’ என ஒரு பார்வை பார்த்து.. தன்னிரு கைகளையும் கோர்த்துக் கொண்டு பக்கவாட்டில் திரும்பி சரணை பார்த்தாள். என்னமோ அந்த இடத்தில் சட்டென அனல் அடித்த நிலை.

சரண் “இல்ல.. உங்களை பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியலை..” என சொல்லி துணைக்கு தன் நண்பர்களை பார்த்தான்.

இப்போது அருகில் இருந்த நண்பன் “ம்… மிர்த்திக்கா உங்க ஊர் திருச்சி.. உங்க தம்பி பத்தி தெரியும் எப்போவாது பிக்கப் பண்ண வருவாரில்ல.. எங்க வேலை பார்க்கிறார்.” என ஆரம்பித்தான்.

மிர்த்திக்காவிற்கு ஒரு பெருமூச்சு வந்தது.. இயல்பானாள்.. “ம்.. அப்பா பேரு வாசு.. அம்மா கண்மணி.. நானும் தம்பியும் அம்மா இல்லாமல்தான் வளர்ந்தோம்..” என சொல்லி படிப்பு இங்கே வந்தது என எல்லாம் சொல்லி முடித்தாள்.

திருமணம் முடிந்த பெண்.. “ம்.. அப்பா எப்படி விட்டார்.. பெண் பார்க்கவெல்லாம் வந்திருக்காங்க.. ம்..” என்றார்.

மிர்த்திக்காவின் முகத்தில் எதோ மாறுதல்.. சின்ன அமைதி.. கண்கள் தாழ்ந்தது.. அதை பிடித்துக் கொண்டால் அந்த பெண் “ஹேய்.. என்ன மிர்த்திக்கா எதோ இருக்கு..” என்றார்.

மிர்த்திக்கா அமைதியாக இருந்தாள்.

சரணின் முகம் வெளிறி போனது.. பக்கத்தில் இருந்தவனை சுரண்டினான் “என்ன டா இது” என பல்லை கடித்துக் கொண்டு.

அந்த நண்பனும் “இரு டா.. எதோ பெய்லியர் போலதான். இரு.. இரு.. ஸ்டோரி கேட்டு ஏதாவது பீல் கொடு.. இரு” என சமாதானம் செய்தான்.

சரணுக்கு முகமே சரியில்லை.. எழுந்துக் கொள்ள முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

மிர்த்திக்கா “அவர் பேரு யோகேஷ்வரன். பக்கத்து பக்கத்து வீடு..” என தொடங்கி தங்களின் காதல் கதையை சொல்லத் தொடங்கினாள். சரண், கேட்க்க கேட்க்க எழுந்து எல்லோருக்கும் ஸ்னாக்ஸ் வாங்கி வரும் சாக்கில் எழுந்துக் கொண்டான். 

மிர்த்தி அதை கவனிக்கவில்லை.. ஆர்வமாக தன் காதல் கதையை கேட்பவர்களிடம்.. என்றுமில்லாத முகமலர்ச்சியோடு.. சொல்லிக் கொண்டிருந்தாள். அவர் இங்கேதான் இருக்கிறார் என்ன நடந்தது என ஏதும் சொல்லவில்லை.. பேச்சின் நடுவே அவளின் கதை முழுமை பெறவில்லை. ஆனாலும், அவள் கம்மிட்டெட் என எல்லோருக்கும் தெரிந்தது. அதெல்லாம் அவளின் மனதில்லை,  பெண்ணவளுக்கு மீண்டும் தன்னவனோடு பயணித்த ஞாபகம் வர.. புன்னகை அவள் முகத்தில் நிலைத்திருந்தது.

!@!@!@!@!@!@!@!@!@!

யோகிக்கு, அன்று இரவு சீனிவாசனின் உதவியாளரிடமிருந்து அழைப்பு வந்தது. “சீனிவானுக்கு உடல்நலமில்லை.. இந்த மருத்துவமனையில் இருக்கிறார்..” என.

யோகி வீட்டில்தான் இருந்தான். நிவேதித்தா தமிழரசியோடு மருத்துவமனை வந்து சேர்ந்தான். அவருக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள்தான். முறையாக வைத்தியம் நடந்துக் கொண்டிருந்தது.

நிவேதித்தா அழுதால்தான் ஆனால், திடமாக அன்னையை கவனித்துக் கொண்டாள். அக்காவிற்கு அழைத்து விவரம் சொன்னால். 

யோகி, மருத்துவர்களுக்காக காத்திருந்தான். இவள் அன்னையோடு இருந்தாள். இரவு முழுவதும் அவருக்கு போராட்டம்தான். ஹர்ட் அட்டாக். செயற்கை சுவாசம் கொடுத்திருந்தனர். அவருக்கு அடிக்கடி BP சுகர் என எல்லாம் அதிகமாகி முன்பே சீறுநீரகமும் பிரச்சனைதான் அவருக்கு. 

மறுநாள் காலையில்தான் எல்லா டெஸ்ட் ரிப்போர்ட் வந்தது.. இன்னும் சிலமணி நேரம்தான். அவரின் உடல் மருந்துகளை ஏற்க மறுக்கிறது. ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்றுவிட்டனர். செயற்கை சுவாசம் வைத்திருந்தனர். இன்னும் நினைவு திரும்பவில்லை.

யோகிக்கு, கண்களை கட்டிவிட்டது போல ஆகிற்று. அத்தையிடமும் நிவியிடமும் எப்படி சொல்லுவது என திணறினான். நேராக ஆத்மிகாவிற்கு அழைத்து விவரம் சொன்னான்.. அவளும் அழுதால்தான்.. அவளின் கணவனிடமும் பேசி வைத்தான் யோகி.

அத்தையிடம் விஷயத்தை சொல்ல சொல்ல நிவியின் நிலைதான் அவனை வதைத்தது. அந்த சின்ன பெண்ணுக்கு மருத்துவம் பற்றி தெரியும் இவர்கள் இருவரையும் விட.. ஆனால்,  அவளால் தன் தந்தையின் நிலையை ஏற்கவே முடியவில்லை. அப்படியே அமர்ந்துக் கொண்டாள்.

அக்கா ஆத்மிகா அழைத்தாள் நிவியை. நிவி அந்த அழைப்பை ஏற்கவில்லை.. கதற தொடங்கினாள். யோகிதான் அவளின் கைகளை இறுக்கி பிடித்து அறைக்கு கூட்டி சென்றான். நிவி, அவன் தோளில் சாய்ந்துக் கொண்டு “அப்பாவை பார்க்கணும்.. ப்ளீஸ்.. பேசணும்.. ப்ளீஸ் மாமா” என கதறல்.

மருத்துவ விதிமுறைப்படி.. இப்போது அனுமதிக்க முடியாது மதியம் ஆகட்டும் என்றுவிட்டனர்.

அதன்பின், ஒருமுறை நிவேதித்தா சென்று தந்தையை பார்த்து வந்தாள். அவரின் கைபிடித்துக் கொண்டாள்.. ஆனால், அதில் சூடு தெரியவில்லை.. உணரவில்லை பெண். வெளியே யோகியை பார்த்து சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தாள். அவளுக்கு புரிந்துவிட்டது.

மாலையில் சீனிவாசன் இறைவனடி சேர்ந்தார்.

ஆத்மிகாவிற்கு டிக்கெட் இரண்டுநாள் சென்றுதான் கிடைத்தது. எனவே, அவர்கள் வருவதற்கு தாமதம் ஆகும் என்பதால்.. காத்திருந்தனர். 

நிவேதித்தா அன்னையை கவனித்துக் கொண்டாள். அந்த சிறுபெண்ணுக்கு தன் பொறுப்பு புரிய அன்னையோடு நின்றுக்  கொண்டால். உறவினர்கள் எல்லோரும் வீடு வந்துவிட்டனர். 

யோகிதான் பொறுப்பு நடைமுறைகள் எல்லாவற்றுக்கும். அவன்தான் அலைந்தான். அவனை மகனாகவே பார்க்கிறார் சீனிவாசன் என உறவுகள் எல்லோருக்கும் தெரியும் என்பதால்.. அவன்தான் காரியங்கள் செய்வான் என தெரியும். அதனால், யாரும் ஏதும் பேசவில்லை.

ஆத்மிகாவும் கணவன் கௌதம் பிள்ளைகள் என எல்லோரும் நான்குநாட்களில் வந்து சேர்ந்தனர். சீனிவாசனை திருப்தியாக குடும்பத்தார் வழியனுப்பி வைத்தனர்.

நாட்களும் ஓடியது. வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவரில்லை என்பதை.. தமிழரசியின் தாலிசங்கிளியும்.. நெற்றி குங்குமமும்.. நிவேதித்தாவின் அமைதியும்தான் நினைவுபடுத்தியது. 

ஆத்மிகாவின் கணவன் கெளதம் தன் வேலையை பார்க்க ஒருவாரத்தில் கிளம்பிவிட்டார். பிள்ளைகள் ஆத்மிகாவும் ஒருமாதம் இருந்து வருவதாக ஏற்பாடு.

நிவேதித்தா பதினைந்து நாட்கள் கடந்தும் கல்லூரி செல்லவில்லை. ஆத்மிகா கேட்டும் பதிலில்லை. தமிழரசி பெண்ணிடம் எடுத்து சொல்லியும் தன் அறையிலிருந்து வெளியே வரவில்லை. அந்த வாரமும் அவளை அப்படியே விட்டனர்.

யோகி, இதை கவனிக்க முடியவில்லை.. அவனுக்கு மாமாவின் இழப்பு தெரிகிறது. ஆனாலும் பெரிதாக அவனை பாதிக்கவில்லை. அவனுக்கு உறவுகள் நிலைத்ததில்லை. அதனால், அவன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டான். வேலைகள் அவனுக்கு அதிகமாக இருந்தது. மிர்த்திக்காவிடமும் பேசுவதில்லை செய்தி அனுப்புவதில்லை. என்னமோ வேலை செய்யவே பிறந்தவன் போல.. வேலை வேலை என தன்னை அதில் செலுத்திக் கொண்டான்.

நிவேதித்தாவை தேற்றி.. புரியவைத்து அவளை கல்லூரிக்கு அனுப்பி வைத்துவிட்டு ஆத்மிகா பிள்ளைகளோடு தன் இருப்பிடம் கிளம்பினாள்.

ஒருமாதிரி, இயல்புநிலைக்கு வந்திருந்தனர்.

அன்று இரவு.. யோகி உண்டுக் கொண்டிருந்தான். நிவேதித்தா.. எப்போதும் யோகியோடுதான் உண்ணுவது. அதனால் அவளும் இருந்தாள்.

யோகி உண்டு முடித்து.. போனை அங்கேயே வைத்துவிட்டு தன் அறைக்கு வந்துவிட்டான்.

அந்தநேரம் சரியாக.. மிர்த்திக்கா அழைத்தாள், யோகிக்கு. YOLADDU.. என அந்த திரையில் எதோ பெயர் ஒளிர்ந்தது.. கூடவே ஒரு ஹார்ட் சின்னம் அதில். நிவேதித்தாவிற்கு அந்த பெயரை எப்படி வாசிப்பவது என புரியவில்லை.. அதிலும் அந்த ஹார்ட் பார்த்ததும்.. வாசிப்பது கூட மறந்து போகிற்று. ஒருமுறைதான் அழைப்பு வந்தது.. அந்த அழைப்பு முடிந்து போனது.

நிவேதித்தாவிற்கு என்னமோ ஒருமாதிரி ஆகியது. மாமாவிடம் சொல்ல வேண்டும் என தோன்றவில்லை. அப்படியே அமர்ந்திருந்தாள். யோகியும் போனை தேடி வரவில்லை.

யோகியின் போனை கையிலெடுத்துக் கொண்டு.. கை கழுவிக் கொண்டே மேலே தனதறைக்கு சென்றாள்.. அவனின் லாக் தெரியும் எனவே, அந்த போனை குடைய தொடங்கினாள். ஆனால், அவள் நேரம், யோகிக்கு மீண்டும் அழைப்பு, இப்போது அவன் அலுவலக நண்பன். அதை கட் செய்ய முடியாது. அது ஓய்யும் வரை பெண்ணவள் பொறுத்திருந்தாள். மீண்டும் அந்த போனை ஆராய.. மீண்டும் அழைப்பு. 

நிவேதித்தா, தட்ட முடியாமல்.. யோகியிடம் போனை கொடுத்து சென்றாள்.

யோகி போனை கையிலேயே வைத்திருந்தான். ஆனால், பேசிக் கொண்டே இருந்தான்.. தன்னவள் அழைத்ததை கவனிக்கவில்லை.

மிர்த்திக்காவிற்கு, ஒரு அவசரம். ஜெகன் வேலை விஷயமாக இரண்டு மாதங்கள் சிங்கப்பூர் சென்றிருந்தான். மிர்த்திக்கா தனியாகத்தான் இருக்கிறாள்.

அந்த வீட்டின் ஓனர். மிர்த்திக்காவை ‘பத்து நாட்களுக்குள் வீடு வேண்டும்.. அப்பாவிற்கு உடல்நலமில்லை.. அவர்களுக்காக இந்த வீடு வேண்டும்..’ என தன்மையாக அழைத்து கூறி இருந்தார்.. இன்று மாலை.

மிர்த்திக்காவும் பேசினால்.. அவரிடம் தம்பி சிங்கப்பூர் போயிருக்கான்.. ஒருமாதத்தில் வந்திடுவான். நான் மட்டும்தான் இருக்கேன் என்றாள்.

அவரோ அதற்குமேல் மன்றாடினார்.. “இல்லம்மா.. ரொம்ப அவசரம். என்னிலை வேறம்மா.. புரிந்துக் கொள்.. எனக்கு நீ நாளுநாளில் கொடுத்தாலும் சரி.. நேரமில்லை. சீக்கிரம் காலிசெய்திடுங்க” என்றார்.

என்ன செய்வது என தெரியாமல்தான்.. அந்த நேரத்தில் யோகியின் நினைவு வர.. தன்னவன் என எண்ணி.. அழைத்தாள் பெண். அவனோ அழைப்பை ஏற்கவில்லை.

Advertisement