Advertisement

அலாதிநேசம்!

15

யோகி, ஜெகன் வந்ததும்.. இருவரிடமும் விடைபெற்று வீடு வந்தான். மிர்த்தி என்ன மனநிலையில் இருக்கிறாள் என அவனால் உணரவே முடியவில்லை.. ‘அம்மா இல்லை அதனால் சோறு போடுகிறாளாம்’ என அவள் சொல்லியதை உணர்ந்து சிரித்துக் கொண்டான் இப்போது. இப்போதான் தெரியுதா அம்மா இல்லை எனக்குன்னு.. எங்கடி போன இத்தனை வருஷம்.. அப்போ தெரியாதா இவனுக்கு எதோ சூழ்நிலை சரியில்லைன்னு.. என சத்தமாக அவள் காதில் கத்த வேண்டும் போல இருந்தது. உறக்கமே வரவில்லை.. தலையை கோதிக் கொண்டே கண்ணாடி முன் நின்றுக் கொண்டான் ‘டேய்.. எவ்வளோ பெரிய தப்புடா.. அதுதானா” என தனக்குதானே கேட்டுக் கொண்டான்.

அதற்கான பதில் தெரிந்தும் தெரியாதநிலை. தன்னையே தன்னால் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அவனின் முகமே அப்படியே இறுகி போனது. என்ன நடந்திருக்கும்.. என அவனின் கற்பனை சிறகுகள் விரிக்க.. இரு கைகளையும் கோர்த்து விரித்து என.. தனது சிந்தனையில் ஆழ்ந்தான் யோகி. 

என்னமோ தன்மீதேதான் கோவமாக வந்தது. அதன் ஆழம் செல்ல செல்ல.. அவனால் தன் முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாமல் போனது. எஞ்சிய நினைவுகள் கூட அவனுக்கு சாதகமாக இல்லாததால் மீண்டும் அவளிடமே சரணடைய முயன்றான்.. அவளோ வெறுக்கிறாளே.. நேரில் சென்றால்.. என்னை மீறி விடுகிறேன்.. என யோசித்தான். ஒரு முடிவெடுத்துக் கொண்டான். இனி போனில் மட்டுமே பேசி அவளிடம் நெருங்கிட வேண்டும் என ஒரு முடிவுக்கு வந்தான்.

அடுத்த இரண்டுநாளும்.. யோகி அலுவலகம் செல்லவில்லை. சீனிவாசன்.. முக்கியமான டாகுமென்ட் எழுவது அதை குறித்து ஆலோசிக்க என யோகியோடு அரசு அதிகாரிகளை பார்க்க சென்றார். 

சீனிவாசனுக்கு, யோகியை ஆராய்ந்துக் கொண்டே இருந்தார். அவனிடம் நேற்று இரவு போல ஏதும் கேள்விகள் கேட்கவில்லை. யோகி எப்போதும் போலிருந்தான். சீனிவாசனுக்கு மனது நிம்மதியானது.

யோகிக்கு, மிர்த்தியை அழைக்க நேரமில்லை. யோகி அவருடனேயே இருந்தான். நிவேதித்தா ஹோட்டல் போலாம் பா.. என்றிருக்க.. பெண்ணுக்காக குடும்பமாக உணவருந்த சென்றனர். 

ஸ்டார் ஹோட்டல்.. டேபிளில் புக் செய்து.. குடும்பமாக கிளம்பி சென்றனர். நிவேதித்தா, தந்தையை கூட அதிகமாக தேடவில்லை.. மாமா மாமா எனத்தான் அதிகமாக அழைத்தாள். அவளுக்கு தெரிந்த அத்தனை உணவு வகைகளையும் ஆர்டர் செய்தாள். “மாமா இது இட்டலி.. அந்த ஹோட்டலில் சாப்பிட்டிருக்கேன்.. செம்மையா இருக்கும்.” என எல்லாவற்றையும் அவனுக்கே கொடுத்து.. அவனின் முகம் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். 

யோகிக்கு, இது புதிதல்ல.. முன்பு அவளுக்கு உணவுகளை எல்லாம் அறிமுகம் செய்வது இவன்தான். இப்போதெல்லாம் வேலையில் கவனமாக இருப்பதால்.. இதுபோன்று அவளோடு அதிகம் வெளியே வருவதில்லை.. எனவே, நிவி கவனிப்பது அவனுக்கு புதிதல்ல. ஆனால்,  போன் வந்துக் கொண்டிருந்தது. காலையில் தன் மாமாவோடு சென்ற விஷயம் குறித்து. எனவே, உணவில் கவனமில்லை.. சிதறிக் கொண்டிருந்தான்.

தமிழரசிக்குதான் ஒருமாதிரி இருந்தது, பெண்ணின் செயல் பார்த்து. என்னமோ பெண் அதிகமாக யோகியை தேடுகிறாளோ.. கணவனிடம்  சொல்லிவைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டார்.

சற்று நேரத்தில் யோகி, போன் பேசி முடித்துக் கொண்டு வந்து அமர்ந்தான்.. பின் இயல்பாக நிவேதித்தாவோடு சேர்ந்து உணவுகளை உண்டான். அவளோடு எப்போதும் போல பேசினான். நிவேதித்தாவும் தன் தந்தையிடம் “அப்பா.. வீக்லி ஒன்ஸ்.. மாமா என்னை வெளிய கூட்டிட்டு போகனும் சொல்லிடுங்க” என அப்போதே மிரட்டி.. சீனிவாசம் யோகியிடம் பேசுமளவு கொண்டுவந்து விட்டாள் பெண். 

நிவிதான் எல்லாமே அந்த வீட்டில். அவளின் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு முக்கியம். அதனால் சீனிவாசன் யோகியிடம் ஆர்டர் போட்டுவிட்டுதான் கிளம்பினார்.

யோகி அந்த வார இறுதியில்தான்.. மிர்த்திக்காவை அழைத்தான்.

மிர்த்திக்கா அவனின் அழைப்பை ஏற்று “என்ன வேண்டும்..” என்றாள் எடுத்ததும்.

யோகி “என்ன இப்படி கேட்க்கிற மிர்த்தி, எப்படி இருக்க.. ஒரு போன் கூட செய்ய மாட்டேங்கிற” என்றான்.

மிர்த்தி “எதுக்கு பேசணும்.. எனக்கு வேலை இருக்கு.. அப்புறம் பேசுறேன்” என்றவள்.. வைத்துவிட்டாள்.

யோகிக்கு, மீண்டும் தோல்வி.

அடுத்த இரண்டுநாட்கள் சென்று அவளுக்கு வாட்ஸ்அப் செய்தான் “ஹய்” என்றான்..  எப்படி இருக்க.. பேசலாமா.. பிசியா.. என அடுத்தடுத்து அனுப்பிக் கொண்டே இருந்தான். அவளும் பார்த்ததற்கான அறிகுறி வந்துவிட்டதுதான். ஆனால், அவளிடமிருந்து பதிலில்லை. ஆனாலும் தினமும் ‘லவ் யூ’ என்றான், எதற்கும் பதிலில்லை அவளிடமிருந்து.  

நாட்கள்தான் கடந்தது.. அவளிடம் பேசுவதற்கு எந்த வழியும் இல்லை என்பது போலானது யோகிக்கு. வெளிச்சமே இல்லாத காட்டில் சிக்கிக் கொண்ட எண்ணம் யோகிக்கு. நாட்கள் செல்ல செல்ல.. மீண்டும் அவனின் காதல் கோவமாக மாற தொடங்கியது.

மிர்த்தி, தன் தந்தையின் பிறந்தநாள் விழாவை கொண்டாட திட்டமிட்டுக் கொண்டிருந்தாள், சந்தோஷமாக.

வாசுவின் ஐம்பதாவது பிறந்தநாள் விழா. பிள்ளைகள் இருவரும் இதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தந்தையிடம் பிடிவாதம் பிடித்து.. சொந்தங்களை அழைத்து வீட்டில் ஹோமம் செய்து சிறப்பாக்கி கொண்டிருந்தனர்.

தன் அம்மா வீட்டு சொந்தம் என சித்தி சித்தப்பா பிள்ளைகள். தன் அத்தை.. அவர்கள் பிள்ளைகள்.. அக்கம் பக்கம் இருப்போர்.. வேலையாட்கள் என தெரிந்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். ஹோமம் முடிந்தது.. விருந்து தொடங்கியது.

வாசுவிற்கு, திருப்தியான மனநிலை பிள்ளைகள் தன்னை ஒதுக்கவில்லை என. இந்த பெண் மட்டும் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டால் போதும் என வேண்டுதலை கொண்டுதான் இந்த பூஜைகளுக்கு ஒத்துக் கொண்டார் தந்தை. பெண் திருமணத்தை வெறுத்துவிட்டால்.. அதற்கு காரணம் அந்த நிகழ்வு.. அவன்தான் என.. இன்னமும் யோகியின் மேல் கோவம்தான் அவருக்கு. இந்த பூஜைகள் மூலம் ஏதேனும் பலன் கிடைக்கும் என இதெற்கெல்லாம் சம்மதித்தார் வாசு.

காலையில் பூஜைகள் முடிந்தது. மிர்த்திக்கா எல்லோரையும் உணவு உண்பதற்கு அழைத்துக் கொண்டிருந்தாள். மெரூன் நிறத்தில் கரும்பச்சை வண்ண பார்டர் கொண்ட தன் தாயின் புடவையை அணிந்திருந்தாள் பெண். அன்னை தன்னுடனேயே இருப்பதாக ஒரு உணர்வு அவளுக்கு. இன்று தந்தையும் தான் புடைவையில் இருப்பதை பார்த்து “என்ன டா.. அம்மா புடவையா” என கேட்டிருந்தார். பெண்ணவளும் “ம்.. எப்படி இருக்கு ப்பா” என்றாள்.

வாசு “ம்.. அவளை மாதிரியே இருக்க நீ..” என்றிருந்தார். இப்படியாக தந்தையே அவர் தன்னிடம் பேசி.. பலநாட்கள் ஆகிறதே  பெண்ணவளும் “தேங்க்ஸ் ப்பா” என்றிருந்தாள். 

ஜெகன், உணவு பரிமாறிக் கொண்டிருந்தான். வாசு எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார்.

உணவு உண்டு கிளம்பினர் எல்லோரும். மிர்த்திக்காவின் சித்தி சித்தப்பா விடைபெற்று கிளம்பினர். ஆயிரம் முறை.. உன் கல்யாணம்தான் அடுத்து என சொல்லிக் சொல்லி.. மிர்த்திக்காவின் முகத்தையே பார்த்து பார்த்து கிளம்பினர் எல்லோரும். மிர்த்திக்கா சிரித்தமுகம் மாறாமல் காக்க முயன்றுக் கொண்டிருந்தாள். அந்த அவஸ்த்தையை எல்லோரும்.. வெட்கம் என எண்ணிக் கொண்டு சிரித்து பேசி விடைபெற்று கிளம்பினர்.

காமாட்சி அத்தைதான் வீட்டில் இருந்தார். மிர்த்திக்கா எல்லாவற்றையும் எடுத்துக் வைத்துக் கொண்டிருந்தாள்.. அத்தை “மிர்த்திம்மா.. இவ்வளவு பொறுப்பா இருக்க.. பாரு, பூஜை முடிஞ்சு எல்லாம் சரியாக எடுத்து வைச்சிட்ட.. சாப்பாடு நல்லா இருந்தது.. அளவாகவும் இருந்தது.. வந்த எல்லோரிடமும் சிரிச்ச முகமா அவளும் பேச.. உனக்கு என்னதான் குறை.. ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ற” என்றார்.. தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் சேர்த்த குரலில்.

மிர்த்திக்கு என்னென்னமோ நினைவுகள்.. திரும்பி பார்த்தாள். தந்தையும் அங்கேதான் இருந்தார்.. எனவே, அவர்தான் பேச சொல்லியிருக்கிறார் என புரிந்தது அமைதியாக வேலையை பார்த்தாள்.

காமாட்சி “இங்க வா மிர்த்திம்மா..” என்றார்.

மிர்த்திக்கா “அத்தை.. இன்னும் கொஞ்சநாள் ஆகட்டும் அத்தை. இன்னிக்குதான் இதை பேசனும்மா” என்றாள் சலித்துக் கொண்டு.

காமாட்சி “இங்க வா மிர்த்தி” என்றார் அதட்டலாக.

பெண்ணவள் எழுந்து அவரின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தார். தந்தை எதிரில் அமர்ந்திருந்தார்.

காமாட்சி “கண்மணி இருந்திருந்தா.. இப்படி உன்னை வேலைக்கு அனுப்பிட்டு.. கல்யாணம் செய்யாமல் இருந்திருப்பாளா? தம்பிக்கும் வயசு ஆகுதுல்ல..” என பலவாறு எடுத்து சொல்லி பெண்ணிடம் சம்மதம் வாங்க முற்பட்டுக் கொண்டிருந்தார்.

மிர்த்தி தலையை குனிந்துக் கொண்டு அமைதியாகவே இருந்தாள்.

அத்தை இப்போது “ஏன் மிர்த்தி யாரையாவது மனசில் நினைச்சிகிட்டு இருக்கியா.. அது ஏதாவது இருந்தால் சொல்லுடா.. என்னான்னு விசாரிக்கலாம்” என்றார்.

வாசு, ஏதும் பேசாமல் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மிர்த்திக்காவிற்கு மனதில் லேசான அதிர்வு.. யோகி வந்து போனான். ஆனாலும் பயம்.. இன்னமும் ஆமாம் என சொல்ல முடியவில்லை அவளால். தம்பி ஏதேனும் யோகி பற்றி அப்பாவிடம் சொல்லியிருப்பானோ.. அப்பாவிற்கு தெரியுமோ என மீண்டும் நடுக்கம் வந்தது அவளுள். இயல்பாய் இருந்த அவளின் முகம் பயத்தின் சாயலை எடுத்துக் கொண்டு.. தடுமாறியது.

Advertisement