Advertisement

அலாதிநேசம்!

11

தந்தையிடம் அடி வாங்கிக் கொண்டு.. இறுக்கமாக படுத்திருந்தவள் மனதில் புகையாய் தொடங்கிய அவன் நினைவு.. பற்றி எரிந்து.. தணலாக இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தது அவனின் நினைவு. சொல்லி அழகூட ஆளில்லை. அவன் இப்படி என்னை விரும்பினான்.. இதெல்லாம் நடந்தது என காற்றிடம் சொன்னால் கூட குற்றம். வாய் திறந்து பேச முடியாது.. தம்பிக்கு கூட தெரியாத காதல் என்னுடையது என எண்ணிக் கொண்டு.. உறங்கமே வராமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.

வாசு பெண்ணிடம் பேசவில்லை அதன்பிறகு. மிர்த்திக்கு இரண்டுநாட்களுக்கு மேல்.. தந்தையின் மௌனத்தை தாங்க முடியவில்லை.. இன்று உணவருந்தும் போது “அப்பா.. சாரி ப்பா.. சாரி” என்றாள், குரல் கமற.

வாசு கவனிக்காதவர் போல உண்டார். 

மகளுக்கும் இரண்டு நாட்களாக அவனின் நினைவு.. எரியும் தணல்தான் அவளுள். என்னமோ இத்தனை நாட்கள் வருடங்கள் கடந்தும்.. அவன் தொட்ட இடமும்.. அவனின் மூச்சு காற்றும் தனக்குள் இப்போதும் சுழல்வதாக சிலிர்த்தது அவள் தேகம். போராடுகிறாள்.. அவன் நினைவுகள் வரமாமல் இருக்க.. வந்துவிட்டாலோ இன்னமும் போராட்டம்தான்.. எப்படி எங்கே இந்த நினைவை தொலைப்பது..  எப்படி மீள்வது என. 

இந்த இரண்டு நாளும் இப்படி போராட்டம்.. அவனின் நினைவுக்கும்.. ‘அப்பாவின் பேச்சை கேட்க வேண்டும்’ என்ற உண்மைக்கும் நடுவே. ஆனால், உள்ளே கழன்ற அவனின் காதல் நினைவோ அவளை வேறு யோசிக்க விடவில்லை. அழுகையே வராமல் இருந்தவளுக்கு.. இப்போது அழுகை. கண்ணில் நீர் தயாராக நின்றது. 

மீண்டும் மகள் “அப்பா” என சொல்லி, அவரின் அருகில் அமர்ந்து.. அவரின் இடது கையை பற்றினாள்.

மிர்த்திக்கா “எனக்கு புரியுது பா, உங்கள் நிலை. அம்மா இல்லாமல் எங்களை வளர்க்க கஷ்ட்டபட்டீங்கன்னு தெரியும். நானும் தப்புதான் செய்திட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க. ஆனால், அதே தவறை இன்னொருமுறை என்னால் செய்ய முடியும்ன்னு தோணலை ப்பா.. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம். ப்ளீஸ்.. என்னால் இன்னும் வேறு எதையும் ஏற்க முடியலை. என் கஷ்ட்டம் என்னோட.. இ..தை, புதிதாக இன்னொருத்தருக்கு.. கஷ்ட்டம் என்னால் கொடுக்க முடியாது ப்பா.. எனக்கு கல்யாணம் வேண்டாம். என்னை மன்னிச்சிடுங்க பா.. இந்த ஜென்மம் எனக்கு இப்படிதான் போல.. விட்டுடுங்க ப்பா” என்றவள் எழுந்து தனதறைக்கு சென்றுவிட்டாள்.

வாசுவிற்கு ஒன்றும் புரியவில்லை.. ‘பெண் தன் அருகிலேயே வரமாட்டாள்.. எதிரில் நின்று பேசுவதேயில்லை.. ஐந்தாறு வருடங்களாக.. அவளின் போன் பெரும்பாலும் அந்த டிவி டேபிள் மீதுதான் இருக்கும். இன்று தைரியமாக வந்து நிற்கிறாள்.. நேற்று வாங்கிய அடி அப்படியோ..’ என யோசித்துக் கொண்டே உண்டு முடித்து.. எழுந்து கைகழுவி கீழே வந்தார். 

சுசீலாம்மா கஷாயம் கொடுத்துவிட.. நேரே தன்னுடைய மற்றொரு கடைக்கு கிளம்பினார் வாசு.

வாசுவிற்கு மகளின் இந்த போக்கு யோசனையை கொடுத்து. ஆனாலும் அவருக்கு வேலை சரியாக இருந்தது. எதோ நினைக்கிறாள் பெண் என உள்மனம் எதோ அன்று முழுவதும் உணர்த்திக் கொண்டே இருந்தது.

இரண்டு நாட்கள் சென்று.. இரவு வாசு எப்போதும் போல பதினோரு மணிக்கு வந்தார். குளித்து.. உண்பதற்காக அமர்ந்தார்.

தனது அறையிலிருந்து மிர்த்திக்கா வந்தாள் தந்தையின் அருகில் அமர்ந்தாள்.

வாசுவிற்கு இது புதிதாக இருந்தது. என்னமோ அந்த நேரத்தில் யோகியின் நினைவு சட்டென வந்தது அந்த தந்தையின் மனதில். ‘அந்த தறுதலை ஏதேனும் பேசியிருக்குமோ.. இங்கே வந்துவிட்டானா.. எப்படி..’ என எண்ணி மகளின் முகத்தை ஆராய்ந்தார். உணவு இறங்கவில்லை.

மிர்த்திக்கா “அப்பா.. காலேஜ்ஜில் கேம்பஸ் வந்திருந்ததில்.. **** க்ரூப்ஸ் கம்பெனியில்.. ஜாப்க்கு செலக்ட் ஆகியிருக்கேன். நான் சென்னை போறேன் ப்பா..” என்றாள்.

வாசு எழுந்து நின்றுவிட்டார். பெண்ணவள் என்னமோ ஒருமாதிரியாக இருந்தாள்.. வாசுவிற்கு, இதை எப்படி எடுப்பதென்றே தெரியவில்லை. பெண், இதுவரை என்னை மீறியதே இல்லை. இப்போது மட்டும் என்ன.. அவன் கொடுக்கும் தைரியமோ.. என பெரிய சந்தேகம்.

மிர்த்திக்கா “சாரி ப்பா.. உங்கிட்ட சொல்லணும் நினைச்சேன். பயமாக இருந்தது. ஆனால், என்னால் கல்யாணம் செய்துக்க முடியாது ப்பா.. எ..ன்னை, நான் கொஞ்சநாள் வேலைக்கு போறேன்.” என்றாள்.

வாசு அதிர்ந்து போனார்.

ஜெகன் வந்தான் இப்போது “அப்பா.. அக்கா எதோ தப்பு செய்திட்டால்தான். அதுக்காக.. அவளுக்கு பிடிக்கலைன்னு சொல்ற கல்யாணத்தை செய்து வைக்காதீங்க ப்பா. ஏற்கனவே அம்மா இல்லை நமக்கு. இன்னமும் அவசரத்தில் மனதுக்கு பிடிக்காமல் ஏதாவது செய்து.. வாழ்நாள் தண்டனை மாதிரி ஆகிட போகுது ப்பா”என்றான்.

வாசுவிற்கு ஏதும் பேச முடியவில்லை. பிள்ளைகள் கைமீறிவிட்டனர் என உணர்ந்தார்.. தன்னால் முடியவில்லை.. பிள்ளைகளை தடுக்க முடியவில்லை.. என கோவம் வருகிறது. ஆனால், பிள்ளைகள் முகத்தில் பிடிவாதமும்.. செய்தே தீருவோம் என்ற அழுத்தமும்தான் தெரிகிறது தந்தைக்கு. அனுமதி கேட்கவில்லை.. தகவல் சொல்லுகிறார்கள்.. இதற்குமேல் என்ன பேசுவது “முடிவு செய்தாச்சுன்னு.. செய்ங்க.. உங்க விருப்படி இருங்க..” என்றவர் அமைதியாக இருப்பதாக காட்டிக் கொண்டு உண்ணத் தொடங்கினார். தொண்டையில் உணவு இறங்கவில்லை.

ஆக, ஜெகனும் மிர்த்தியும் இப்படிதான் சென்னை வந்தனர். ஜெகன் தன் நண்பர்கள் துணையோடு தனக்கும் அக்காவிற்கும் ஒரு வீடு எடுத்துக் கொண்டான்.. தங்குவதற்கு, அக்காவின் அலுவலகத்தின் அருகிலேயே.

மிர்த்திக்கு ஒரு பைனான்ஸ் பிரிவில் நல்ல வேலை.  ஒருமாதம் பரபரப்போடு முடிந்தது அவளுக்கு. அப்பாவின் கைபிடியிலேயே இருந்தவளுக்கு.. பஸ் ஏறி.. நான்கு ஸ்டாப்பிங் தள்ளி இறங்கி.. ஐந்து நிமிடம் நடந்து அலுவலகம் செல்லுவது.. எதோ சந்திரமண்டலம் செல்லுவது போல ஒருவாரம் அச்சமாக இருந்தது. அலுவலகத்தில்.. தோழியாக ராதா என்ற பெண்ணும் பழக்கமாகி இருக்கிறாள். முதலில் பயம்தான் இப்போது ஓகே மிர்த்தி.

நெரிசலான பஸ் பயணம் பழகிவிட்டது. மாலையில் வரும் போது.. தேவையான சாமான்களை வாங்கி வந்திடுவாள். தம்பியை எதிர்பார்க்கமாட்டாள். ஒரளவு அந்த சென்னை பழகிவிட்டது. 

மிர்த்திக்கா, இன்றும் அப்படிதான் கடையில் சாமான்கள் வாங்கிக் கொண்டு.. பொறுமையாக நடந்து வந்துக் கொண்டிருந்தாள் வீடு நோக்கி.

அப்போதுதான்.. யோகி தன் நண்பன் துரையோடு காரில் கேஸ் விஷயமாக பார்ப்பதற்கு என அந்த ஏரியா வந்தான். யோகியின் வீடு இருப்பதும்.. கோர்ட் இருப்பதும் பிராட்வே. ஆனால், இது முற்றிலும் எதிர்புறமான இடம். ட்ராபிக் கடந்து இங்கே வருவதற்கே இரண்டுமணி நேரம் ஆகும்.. omr ரோட். என்பதால்.. இருவருக்கும் இரண்டு மணி நேரம் ஆனது. இப்போதுதான் அந்த நபரை பார்க்க சென்றுக் கொண்டிருந்தனர்.

யோகி, எதோ யோசனையோடு.. ட்ராபிக்கின் காரணமான நிற்கும் காரில் அமர்ந்துக் கொண்டே பக்கவாட்டில் திரும்பி வேடிக்கை பார்த்தான். அழகான வெயிட் நிற லாங் டாப்.. கீழே டார்க் பிங்க் லெகின்.. வலதுதோளில் பாக்.. இடது கையில் துணி பையில் எதோ சாமான்கள்.. அக்மார்க் குடும்பஸ்திரியின் நடையில்.. நடைபாதையில் சென்றுக் கொண்டிருந்தாள் அவனின் மிர்த்தி.

யோகிக்கு வேறேதோ யோசனைதான்.. அவளின் பக்கவாட்டு தோற்றம் அவனின் கண்ணில் விழ.. லேசாக அவனின் சிந்தனை கலைந்தது.. ‘அவளா.. அவளை போலவே இருக்கு..’ என உற்று பார்க்கிறான். மிர்த்தியோ.. அந்த சிக்னலை ஒட்டிய திருப்பத்தில்.. நடைபாதையில் திரும்பி நடந்துவிட்டாள் இவன் கண்ணிலிருந்து தப்பிவிட்டாள்.

யோகிக்கு முழுவதும் சிந்தனை தப்பிவிட்டது. அப்போது தன்னுள் புதைத்து வைத்திருந்த அந்த கொழுகொழு கன்னமும்.. பிறை நெற்றியும்.. வளைந்த புருவமும்தான் சட்டென அவனின் மனகண்ணில் மின்னியது. இந்த பெண் அவளாக இருக்காது.. யோகி தனக்குள் முயன்று, அவளின் பழைய சாயலையும்.. இப்போது பார்த்த பெண்ணின் உடல்மொழியையும் இணைத்து பொருத்தி பார்க்கிறான்.. ‘அவளை போலதான் இருக்கு.. அந்த நடையும்.. இடையின் அசைவும்..’ என உள்ளுக்குள் ஓடியது.

யோகிக்கு, சட்டென மனதில் ஒரு ஓரத்தில் அடக்கி மறைத்து வைத்திருந்த அவனின் ஏமாற்றம் எல்லாம்.. தீ பரவும் வேகத்தில் அவனின் மூளையை சென்று தாக்கியது.. ‘கல்யாணம் ஆகிடுச்சா.. இங்கதானா’ என சாதகமில்லாமல் யோசிக்க வைத்தது. மற்றபடி.. அவள் அவங்க அப்பாவை விட்டு வர காரணமே இல்லையே எனத்தான் அவனுக்கு யோசனை. 

யோகிக்கு தலை வலிக்க தொடங்கியது ‘நிம்மதியா இருந்தேன்.. இல்லையே நிம்மதியாவெல்லாம் இல்லையே. இல்ல, அவளை மறந்துட்டேன்.’ என சொல்லிக் கொண்டே பக்கவாட்டில் திரும்பி பார்த்தான் யோகி.

அய்யோ பாவம்! வண்டி.. வேறெங்கோ நின்றிருந்தது. யோகி “துரை.. போன சிக்னல்.. துறைபாக்கம் தானே” என்றான்.

துரை “ம்.. ” என்றான், கார்’ரை சரியான இடத்தில் பார்க் செய்துக் கொண்டே.

இருவரும் இறங்கினர்.. யோகிக்கு.. வந்த வேலையை பார்க்கும் எண்ணமே வரவில்லை. கண்கள் சிவந்துவிட்டது. காரின் மேல் சாய்ந்துக் கொண்டே கைகட்டி நின்றுவிட்டான். ‘அவளின் சாயலை பார்த்ததற்கே இப்படி ஆகிவிட்டேன்.. அவள் எப்படி இருப்பாள் இப்போது..’ என அந்த சின்ன நேரத்திலும் சட்டென அவனின் மனம் அவளிடமே சென்றது.

துரை தன்னை தளர்த்திக் கொள்ள.. ஒரு தம் பற்ற வைத்து.. ஊதிக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் சென்று “யோகி போலாம்..” என இருவரும் அருகில் இருந்த வீடு ஒன்றில் சென்று பெல் அழுத்திவிட்டு நின்றிருந்தனர்.

யோகி தன் போனில் நோட்ஸ் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான். இது முன்னால் MLA அவர்களின் உறவினர் வீடு. இவர்கள் பெயரில் முன்பு எதோ வேலை செய்துக் கொண்டிருந்தார். அந்த MLA அவரின் கேஸ் எடுத்து.. வாதாடுகிறார்கள் இவர்கள். எனவே, அது விஷயமாக தெரிந்துக் கொள்ள வந்திருந்தனர்.

நேரம் எடுத்தது மூன்றுமணி நேரம் ஆனது. இரவு பதினோரு மணிக்குதான் விடைபெற்று கிளம்பினர். துரையும் யோகியும்.

இருவரும் நேராக OMRரோட் சென்றனர். இருவரும் சேர்ந்து பார் சென்றனர். விடியும் நேரம் துரையின் அப்பார்மென்ட் சென்றுவிட்டான் யோகி. 

இருவரும் காலையில் விழித்து.. நேற்றைய விசாரணையின் குறிப்புகளை சேகரித்து.. தங்களின் கேஸ்சிற்கு ஆத்ரவாக்கி கொண்டு.. எழுதிக் கொண்டனர் பேசியபடியே.

துரை குளித்து உணவு வாங்கி வர சென்றுவிட்டான். யோகிக்கு எங்கும் வரவில்லை என்றுவிட்டான். துரை தன்னுடைய ஊர்கார நண்பனுடன் அந்த வீட்டில் வசிக்கிறான். அதனால், யோகி அடிக்கடி இங்கே வருவான், இப்படி வார இறுதி நாட்களில்.

யோகிக்கு அவன் அணிந்திருந்த அழுக்கு டி-ஷர்ட்டின் வியர்வை வாசம்  போல.. மனதுள் மிர்த்தியின் வாசம். நீண்ட வருடங்கள் சென்று. அப்படியே அமர்ந்துக் கொண்டான் ‘என்ன செய்தால்.. இவளின் நினைவு போகும்.. எப்படி இருக்காளோ..’ என மனது அவளையே சுற்றியது. அடுத்த பார்க்க வேண்டும்.. தன் வீடு செல்ல வேண்டும் என தோன்றவில்லை.

சென்னை வந்த போதெல்லாம் அவளை நினைக்காத நாளில்லைதான் அவன். ஆனால், அவன் தந்தை அடிக்கடி சொல்லுவதுண்டு ‘நீ செய்துட்டு வந்த வேலைக்கு.. அந்த வாசு.. உன்னை உயிரோடு விட்டதே பெருசு.. நீ அங்கெல்லாம் போக கூடாது. யாரிடமும் பேசி ஏதும் பிரச்சனை செய்து வைக்காதே’ என அவன் ஊர் பற்றி பேசும் போதெல்லாம் சொல்லுவதுண்டு.

அப்போதெல்லாம் யோகிக்கு தோன்றுவது… ‘தங்களின் காதல் வாசு மாமாவிற்கு தெரிந்துவிட்டது. அவள் சொல்லிவிட்டாள். அதனால், அப்பாவிடம் எதோ கேட்டிருக்கிறார் சொல்லியிருக்கிறார், வாசு. போன் எண் மாற்றிவிட்டார்.. இவளுக்கு என் நம்பர் தெரியும்.. ஆனாலும், அழைக்கவில்லை.. அவள் என்னை மறந்துவிட்டாள்.. ம்.. நானும் இனி நினைக்கமாட்டேன்’ எனத்தான் அவனின் எண்ணம் அப்போது.

Advertisement