Advertisement

நீ என் அலாதிநேசம்!

10

சென்னையின் பரபரப்பான நீதிமன்ற வளாகம். எல்லா திசையிலும் ஆங்காங்கே தெரிவது கருப்பும் வெள்ளையுமான நிறங்கள்.. நடுநடுவே காக்கி நிறமும் கண்ணில் தெரிகிறது. கொஞ்சம் நீதி.. நேர்மை.. நிறைய ஏமாற்றமும்.. சூழ்ச்சியும்.. நிறைந்த முகங்கள்.

அங்கே எந்த பரபரப்பும் இல்லாமல்.. தன்னுடைய சீனியரின் பின்னால் வந்துக் கொண்டிருந்தான் யோகேஷ்வரன். அன்றிருந்த அரும்பு மீசையில்லை.. கொஞ்சம் அடர்ந்து வளைந்து கலையாக இருந்தது. முன்பே விளையாட்டினால் ஏற்றியிருந்த உடற்கட்டை இன்னமும் மெருகேற்றியிருந்தான்.. அதனாலோ என்னமோ அடாங்கா திமிராக இருப்பான் போல.. என்ற பிம்பம்தான் பார்ப்பதற்கு. கையில் செம்புகாப்பு.. மறுகையில் வாட்ச். தனது சீனியருக்கு பின்னால் நடப்பவனை பார்க்கும் போது.. எதோ அடிபணிந்து நிற்பவன் போல முகபாவனை, இருந்தாலும்.. இவன் அடிப்பவனே. கையில் ஆயுதமாக இப்போதைய கேஸ்கட். எதற்கும் துணிந்து நிற்பவன்.  

இன்று ஒரு அரசியல்வாதியின் நிலமோசடி வழக்கு. இவர்கள், அரசியல்வாதியின் சார்பு வழக்கறிஞ்சர். ம்.. அந்த கட்சியின் ஆஸ்தான வழக்கறிஞ்சர், யோகியின் சீனியர்.. அறிவுடைநம்பி. ஒரு பெரிய சாம்ராஜ்ஜியம் இவருடையது. இந்த நீதிமன்றத்திற்கு எதிரே இருக்கும்.. அவரின் அலுவலகம். பலதரப்பட்ட வழக்குகள்.. அதில் முக்கிய வழக்குகளை மட்டுமே அறிவுடைநம்பி ஏற்று நடத்துவார். மற்றது எல்லாம் தனது ஜூனியர்களிடம் கொடுத்திடுவார். அதில் ஒரு ஜூனியர்தான் யோகேஷ்வரன். இந்த போமில்.. குழுமத்தில் சேர்ந்து நான்கு வருடமிகிறது.

ஆறுமாதம் முன்பாக.. பார் கவுன்சிலில் சேர்ந்து.. தனியா ஒரு கேஸ் வாதாடிக் கொண்டிருக்கிறான். முழுநேரம் வழக்கறிஞ்சர் யோகி.

இப்போது, நம்பி சீனியர்.. முன்னால் சென்று அமர்ந்தார். யோகி பின் இருக்கையில் அமர்ந்தான். கேஸ் படிக்க தொடங்கி வாதங்கள் நடந்தது.

சற்று நேரம் சென்று.. வழக்கிற்கு வாயிதா வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.. மூவரும். 

நம்பி, நின்று அந்த அரசியல்வாதியிடம் பேச கூட நேரமில்லாமல்.. அடுத்த கேஸ் பற்றி படிப்பதற்கு தங்களுக்கென இருக்கும் அறைக்கு சென்றுவிட்டார். 

யோகிதான் சிக்கிக் கொண்டான் அவரிடம். அந்த மனிதரோ தன்னுடைய நன்றியை சொல்லி.. தன் பலம் பற்றி மீண்டும் விவரித்து.. அந்த எதிர்கட்சி பற்றி விமர்சித்து.. இதெல்லாம் எங்களுக்கு தூசி.. நாங்கள் மீண்டும் வருவோம்.. என்றார். யோகி, அவரின் பேச்சை புன்னகையோடு கேட்டுக் கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தான். பின் என்ன செய்யலாம் எதெல்லாம் செய்ய வேண்டாம் என மீண்டும் ஒருமுறை அவருக்கு சொல்லி அனுப்பினான்.

மதியம் தன் சகாக்களோடு சென்று.. உணவருந்தி வந்தான். தங்களின் அலுவலகம் சென்றான்.. தன் சீனியருக்கு உண்டான கேஸ் குறித்து நான்கு நபர்களோடு டிஸ்கஷனில் அமர்ந்தான். அன்று இயல்பாகவே சென்றது.. யோகியின் நேரங்கள்.

மாலையில் வீடு வந்தான்.. தன் மாமா வீட்டிற்கு வந்து சேர்ந்தான். மணி 6:30.

இவன் உள்ளே வந்ததுதான் தாமதம்.. “யோகி மாமா.. வெளிய போகனும்.. இன்னிக்கு. கேத்திரினோட பர்த்டே பார்ட்டி.. — ஹோட்டலில். நம்ம ரெண்டுபேரையும் இன்வைட் பண்ணியிருக்கா..” என்றாள்.. டைனிங் அறையில் இருந்து பேசிக் கொண்டே ஹாலுக்கு வந்தபடி. ஷார்ட்ஸ்.. குட்டி டி-ஷர்ட்.. இதுதான் அவளின் உடை வீட்டில் இருக்கும் போதெல்லாம்.

யோகி “நிவி.. இன்னிக்கு எனக்கு வெளிய போகிற வேலை இருக்கு.. என்னால் முடியாது. நீ அத்தை கூட போ” என்றான்.. அவள்பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.

அவ்வளவுதான் நிவேதித்தா தான் குடித்துக் கொண்டிருந்த கிரீன் டீ.. கப்’பை அப்படியே விட்டெறிந்தாள். அது சுக்குசுக்காக உடைந்து சிதறியது. அந்த சத்தத்தில்.. தன் அறையிலிருந்து வெளியே வந்தார்.. தமிழரசி.

யோகி, நிவியை முறைத்துவிட்டு.. தனதறைக்கு சென்றுவிட்டான். 

வேலை செய்பவர் வந்து சுத்தம் செய்தார்.

தமிழரசி “என்ன நிவிம்மா” என்றார். நிவேதித்தா கடைக்குட்டி.. மருத்துவம்  முதல் வருடம் படிக்கிறாள். மிகவும் செல்லம் சீனிவாசனுக்கும் தமிழரசிக்கும். சிறுவயதில் அவள் பிடிவாதம் பிடித்து அழும் போதெல்லாம் வீசீங் வந்துவிடும் அதை தொடர்ந்து ப்ஃக்ஸ்.. என அவளை படுத்தி வைத்திடும் அவளின் உடல். அதனால் அவள் அழுகாமலிருக்கும் வழிகளை எல்லாம் செய்தார் சீனிவாசன்.

அதனாலோ.. அல்லது அவளின் இயல்பே அப்படியோ என்னமோ.. அவளின் எந்த பேச்சிற்கும் எதிர்பேச்சை அவள் கேட்க விரும்புவதேயில்லை. அதிலும் யோகியிடமிருந்து அவள் எதிர்வாதத்தை கேட்க விரும்புவதில்லை. 

இப்போது தமிழரசி “என்ன டா, நிவிம்மா” என்றார். பெண்ணவள் தனதறைக்கு சென்றுவிட்டாள். அவளின் பின்னாலேயே அன்னையும் சென்றார்.

நிவேதித்தா.. அப்படியே அமர்ந்துக் கொண்டு எதையோ வெறிக்க தொடங்கினாள். அன்னையோ “என்னான்னு சொன்னால்தானே தெரியும்..” என்றார்.

அப்படி நான்கு முறை கேட்ட பிறகுதான் நிவி “என் பிரென்ட் பர்த்டேக்கு.. மாமாவையும் என்னையும் கூப்பிட்டிருக்கா.. மாமா என்கூட வரமாட்டேன்னு சொல்றாங்க..” என்றாள்.

தமிழரசிக்கு தெரியும் மகளின் மனம்.. அவளிற்கு யோகி என்றால் அவ்வளவு விருப்பமென. சின்னபெண்.. கல்லூரி சென்றாள் சரியாகிடுவாள் மாறிவிடுவாள் என.. பெரும்பாலும் யோகியிடமிருந்து தன் மகளை தனித்தே இருக்க பழக்குவார். ஆனால், நிவி எப்படியேனும்.. யோகிக்குதான் முதல் உரிமை கொடுத்திடுவாள்.

இப்போது அன்னை “சரி, விடு.. நான் வரேன்.. அவனை ஏன் கூப்பிடுற.. நாம் போகலாம் நிவிம்மா.. கிளம்பு.” என்றார் பெண்ணவளை சமாதானப்படுத்தும்.. எண்ணத்துடன்.

நிவி அசையாமல் அமர்ந்திருந்தாள். அன்னையும் நிறைய சமாதானம் செய்தார்.. எதற்கும் பெண்ணவள் அசையவில்லை.

தமிழரசி கோவமாகி “என்னடி, இப்போ என்ன அவன் வரமாட்டான்.. அவனே ஒரு முசுடு.. நாம் போகலாம். கிளம்பு.. எழுந்திரு” என்றார். அதற்கும் பெண்ணவள் அசையவில்லை.

அன்னைக்கு என்ன செய்வது என தெரியாமல்.. கணவனுக்கு அழைப்பதற்காக தனது அறைக்கு சென்றார்.

அன்னை சென்றதும்.. நிவி எழுந்து நேரே யோகியின் அறைக்கு சென்றாள். யோகி அப்போதுதான் குளித்து.. ஒரு ஜீன் டி-ஷர்ட் அணிந்துக்  கொண்டிருந்தான். பெண்ணவள் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தவள் “மாம்ஸ்.. என்கூட வரமாட்டியா” என்றாள்.. முகத்தில் கோவமும்.. குரலில் அழுகையுமாக கேட்டாள். குழந்தையென அந்த செயல்கள் இருந்தது.

யோகி வந்தவுடன் தன்னிடம் வெளியே போகனும் என்றதனால்.. டென்ஷானாகி இருந்தவன், இப்போதுதான் நிவியை கவனித்தான்.. அவன் இந்த வீட்டிற்கு வந்த நாள்முதல்.. அவளிடம்தான் நிறைய விளையாடி பேசியிருக்கிறான். எனவே, பொறுமையாக இப்போது “நிவி, எனக்கு கேஸ் விஷயமா வெளியே போக வேண்டி இருக்கு.. அதான் சீக்கிரமா வந்தேன். நாளைக்கு ஆப்டர்நூன்தான் நான் வருவேன்.. நீ போயிட்டு என்ஜாய் பண்ணிட்டு வா.. டைம் ஆச்சு கிளம்பு” என்றான் நிதான குரலில்.

நிவி “நான் அப்பாகிட்ட பெர்மிஷன் கேட்க்கிறேன்” என்றாள்.

யோகி முறைத்தான்.. “காலேஜ் போயிட்ட இன்னமும் குழந்தை மாதிரி பேசுற” என்றான் அதட்டலாக.

நிவி தன் மாமாவின் அருகில் வந்தாள் “நான் அப்படிதான்” என சொல்லி.. அவன் நெஞ்சில் சாய்ந்தாள் “நான் என் பிரிண்ட்ஸ்க்கு உங்களை காட்டறேன்னு சொல்லியிருக்கேன்.. வாங்க மாமா..” என்றாள்.

யோகி “நானென்ன உன் டாய்’யா? என்னை எல்லோருக்கும் காட்ட. போ பிடிவாதம் பிடிக்காத. கிளம்பு, எனக்கு வேலை இருக்கு.. இப்போ துரை வந்திடுவான்.” என்றான்.. பெண்ணவளை தன்னிலிருந்து தள்ளி நிறுத்தி.

நிவி “ஏன் தள்ளுறீங்க” என்றாள்.

யோகி “நீ பெரிய பெண்ணாகிட்ட, இப்படி என்னை தொட கூடாது.. என்னை மட்டுமில்ல.. உன்னோட எந்த பாய் பிரெண்ட்ஸ்சாக இருந்தாலும் தொட்டு பேச கூடாது. போ.. ஜாலியா இருந்துட்டு வா..” என்றான்.. தனக்கு எதிரே அவளை நிறுத்திக் கொண்டு.

நிவி தன் கைநீட்டி எக்கி.. யோகியின் கழுத்தை இரு கைகளாலும் பிடித்து கட்டிக் கொண்டு “நான் உன் மாமா பொண்ணு மாமா.. அப்படிதான் இருப்பேன்..” என சொல்லி லேசாக அவனின் கழுத்தை பிடித்து தொங்க.. யோகி அனிச்சையாய்.. பெண்ணவளின் இடுப்பை பிடித்து அவளை கீழே நிறுத்தினான் “எருமாடு.. இன்னமும் மேலேறிக்கொண்டு” என கடிந்துக் கொண்டே அவளை விட்டு தள்ளி சென்றான்.

நிவேதித்தா “மாமா, என்னை ட்ராப் மட்டும் பண்றீங்களா” என்றாள்.

யோகி “இல்ல டா.. நானே துரையோட வண்டியில் போறேன். நீ அத்தையோட கிளம்பு” என்றான்.

நிவி யோகியிடம் முறைத்தாலும் சிரித்துக் கொண்டே “பை மாம்ஸ்” என சொல்லிக் கொண்டே சிரித்த முகமாக வெளியே வந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

தமிழரசி பார்த்துக் கொண்டே இருந்தார் பெண்ணின் முகத்தை. ‘அவன் வரேன்னு சொல்லிட்டான் போல’ என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தார்.

யோகி, பத்து நிமிடத்தில் கிளம்பி வெளியே வந்தான். அத்தை ஹாலில் அமர்ந்திருப்பதை பார்த்து “அத்த.. நான் நாளைக்கு ஈவினிங்தான் வருவேன்” என சொல்லிக் கொண்டே கிளம்பிவிட்டான்.

தமிழரசி ‘மகளோடு இவன் போகலையா..’ என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தார்.

இது இப்படிதான்.. அவன் சொன்னால் இவள் கேட்டுக் கொள்வாள். அன்னைக்கு மகளின் நிலைதான் பயத்தை கொடுத்தது. பெரியமகள் ஆத்மிகா.  நிவேதித்தாவிற்கும் ஆத்மிக்காவிற்கும் ஆறுவருடம் வித்யாசம். அதனால், செல்லமும் அதிகம் கவனிப்பும் அதிகம்.

தமிழரசிக்கு, பெரியவள் வாழ்க்கை பற்றி எந்த கவலையும் இருந்ததில்லை.. வளர்ப்பிலும் சரி.. படிப்பும் சரி, தான்  சொன்னபடி தன் அண்ணன் மகனை திருமணம் செய்துக் கொண்டு.. அமெரிக்காவில் இரண்டு பிள்ளைகளோடு இருப்பதிலும் சரி. ஆனால், இவளின் வாழ்வை நினைத்து இப்போதே பயம் பிடித்துக் கொண்டது தமிழரசிக்கு. எப்படியும் வாரத்திற்கு மூன்று பார்ட்டி.. அப்படி எப்படிதான் தோழமை அமைகிறது என்றே தெரியவில்லை.. வார இறுதியில் கும்பலாக நண்பர்களோடு வெளியே செல்லுவது.. என்ன நட்போ.. பிடிபடவில்லை. தன் கணவரிடம் சொன்னால்.. ‘விடு, உன்காலத்தில் இருந்துதா.. என்ஜாய் பண்ணட்டும்.. அதெல்லாம் ஒரு வயசு வரைதானே’ என மனைவியை அடக்கிடுவார்.

இப்படியே கவலையிலேயும் குழப்பத்திலேயும்தான் தமிழரசிக்கு நாட்கள் சென்றது.

யோகி, இங்கே வந்த நாள்முதல் அத்தனை போராட்டம்தான் அவனுக்கு. ஓடி ஒழியவே இங்கே வந்தான். ஆனால், அவனின் மாமா.. யோகியை ராஜாவாக்கி பார்க்க ஆசைப்பட்டார்.

சீனிவாசம் அப்போதைய அரசியல்வாதியின் பினாமி. எனவே, ரியல்எஸ்டேட் பிஸினெஸ் அவரின் தொழில். அதனால், தெரிந்தவர்கள் மூலமாக.. மருமகன் மேல் கேஸ் ஆகமால் பார்த்துக் கொண்டார். அவர்களும் ரெண்டு மாசம் சென்று.. பரிட்சை எழுதுவதற்கு  அவன் வரட்டும்.. அப்படியே படிப்பை தொடரட்டும்.. என சொல்லி இருந்தனர்.

ஆனால் வாசு, பெண்ணின் விஷயம் தெரிந்தது முதல் யோகியை கண்ணில் பார்க்கவில்லை. அவனும் இந்த வாரம் வந்திடுவான்.. அடுத்த வாரமா வந்திடுவான் என எண்ணியிருந்தவர்க்கு.. யோகியின் விஷயம் காதில் விழுந்தது.

வாசு, ரெங்கனிடம் பேசினார் இவர்கள் இருவரின் விஷயத்தை. முதலில் ரெங்கன் அதை நம்பவில்லை. எதோ கட்டுக்கதை சொல்லுகிறார் என எண்ணி.. வாசுவின் சட்டையை பிடித்துவிட்டார். மகளின் மெடிக்கல் ரிபோர்ட் காட்டி.. என் மகள் இந்த விஷயத்தில் பொய் சொல்லுவாளா?.. என் மகள் மட்டுமல்ல.. யாராகயிருந்தாலும்.. பொய் சொல்ல மாட்டாங்க’ என பேசவும் ஆடிபோனார் ரெங்கன்.

வாசு “போய்டுங்க.. எங்கள் வாழ்விலிருந்து.. நம்பி என் பையன் போல பழகவிட்டேன்.. இப்படி பண்ணீட்டான் அவன். இனி அவன் இங்கே வர கூடாது. வந்தால்.. என் பெண்ணுக்காக எந்த எல்லைக்கும் நான் இறங்குவேன்.. என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. இனி எதையும் ஒருகை பார்க்க நான் தயாராகத்தான் இருக்கேன்.” என்றார்.

ரெங்கன் இடிந்து போய் அமர்ந்துவிட்டார். என் மகனா இப்படி.. என்ன ஆனது எங்கள் வாழ்க்கைமுறை.. ஒரு பெண் பிள்ளையின் வாழ்க்கை.. காலத்திற்கும் இந்த பழி நீங்குமா.. என ஆயிரம் கேள்விகள். எப்போதும் போல.. தன் மச்சானுக்கு அழைத்து பேசினார். 

சீனிவாசனுக்கு அப்படி ஒரு கோவம் மருமகன் மேல்.. ‘அந்த பிள்ளை நல்லா இருக்கா மாப்பிள்ளை’ என கேட்டார். இப்படி பெண்ணின் தந்தை சொல்லவும் ஏதும் எதிர்த்து கேட்க்க முடியவில்லை.. இனி அவனை அங்கே விட அவருக்கு மனதில்லை. அதனால் யோசனை சொன்னார் ரெங்கனுக்கு.

அதன்படி.. கடையை விற்பனை செய்ய ஏற்பாடு செய்தனர். சென்னையில் வீடு ஒன்று வாங்க ஏற்பாடு செய்தனர்.

அதன்படி ஒருமாதத்தில்.. ரெங்கன் கடையை விற்றுவிட்டு.. சென்னை கிளம்பினார். 

சீனிவாசன்.. எதையும் மருமகன் யோகியிடம் சொல்லாமல்.. ‘நீ இங்க படி..’ என்றார். யோகி பிடிவாதம் செய்தான்.. ‘நான் என் ஊரில்தான் இருப்பேன் படிப்பேன்’ என. 

ஒருமாதம் சென்று.. தந்தையும் இங்கேதான் வர போகிறார் என கேட்டு.. ‘ஏன்’ என தந்தையிடம் கேட்டான். 

ரெங்கன் ‘தனியாக என்னால் முடியலை டா.. நாம இங்க பார்த்துக்கலாம்..’ என்றார். மகனிடம் நிறைய அங்கே நடப்பதை பற்றி சொன்னார்.. எல்லாம் ஏறுக்கு மாறாக.

யோகி “நான் வரேன்’ என்றான்.

விடவில்லை திருச்சிக்கு அவனை. ஏதேதோ பேசினார்.. அப்பாவும் மாமனும்.. சென்றால் மாட்டிக்குவ.. அவங்க உன்னை பார்த்தாலே கடுப்பாகிடுவாங்க..’ என ஏதேதோ சொல்லி அவனை யோசிக்க விடாமல் செய்துவிட்டனர்.

யோகி, தன்னவளின் எண்ணுக்கு அழைத்து பார்த்தான்.. அது உபயோகத்தில் இல்லை என வந்தது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.. படிக்கனும் என மட்டும் தோன்றியது. இப்போது எந்த கல்லூரியில் இடம் கிடைக்கும் என யோசித்துக் கொண்டே இருந்தான்.. 

சீனிவாசன் ‘லா.. படிக்கிறியா? நான் ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.

வேறு வழி இருக்கவில்லை யோகிக்கு, ஒருவருடம் வீணாக்காமல் சேர்ந்துக் கொண்டான்.

ரெங்கன், கடையை விற்றுக் கொண்டு.. நான்கு வீடுகள் கொண்ட அபார்ட்மென்ட் போன்ற ஒன்றை வாங்கிக் கொண்டு.. சீனிவாசன் வீட்டிற்கு அருகில் குடியேறினார். மூன்று மாதங்கள் ஆனது.

யோகி தந்தையோடு தங்கிக் கொண்டான்.. கல்லூரி சென்றான். ரெங்கன் சமையல் செய்வது மகனை பார்த்துக் கொள்வது என இருந்துக் கொண்டார்.

அடுத்த இரண்டு வருடத்தில் அவரும் யோகியை தனியே விட்டு.. மனையாளோடு சேர்ந்துக் கொண்டார். 

யோகி இப்போது இன்னும் தவித்து போனான். எதோ நடுகாட்டில் நிற்பது போல நின்றான். தன்னவள் என எண்ணியிருந்தவள் தனது போன் என்னை மாற்றிவிட்டாள்.. என்னை அழைக்கக் கூட இல்லை.. ‘எங்கடி போன.. நானென்ன பைத்தியமா உன்னையே நினைச்சிகிட்டு இருக்கேன்..’ என பிதற்ற மட்டுமே முடிந்தது.

சீனிவாசன், ரெங்கன் இருந்ததும்.. தன் வீட்டோடு சேர்த்துக் கொண்டார் யோகியை. இவன் இருக்கும் தைரியத்தில் அடிக்கடி வெளியூர் சென்றார்.  தொழிலை விரிவுபடுத்திக் கொண்டார். நிறைய சம்பாத்தியம் செய்தார். அதில் ஒரு மால் கட்டினார் சென்னையில். வருடங்கள் வேகமாக சென்றது.

யோகி, கல்லூரி முடித்து.. நின்றான். தன் செல்வாக்கினால்.. ஊரிலேயே முக்கிய வழக்கரிஞ்சரிடம் ஜூனியராக சேர்த்துவிட்டார் சீனிவாசன். 

யோகிக்கு, மிர்த்தி மேல்  கோவம் அவள் தன்னை மறந்துவிட்டாள் என. அதனால் ஊருக்கு செல்லவில்லை. அவளை பற்றி நினைக்க கூடாது என எண்ணிக் கொண்டான்.

Advertisement