Advertisement

அத்தியாயம் 05 

இரவிலே பிரகாஷ் அத்தனை கேள்விகள் கேட்க, காலையில் எழுந்ததுமே பத்மாவிற்கு அழைத்திருந்தாள் ராஜி. அவளோ முடிவு சொல்லுமாறு அடமாகக் கேட்க, ஜெகனைக் காப்பாற்றும் எண்ணம் மட்டுமே பத்மாவிற்கு இருக்க, தேவகி விருப்பத்தைச் சொல்லிவிட்டார். அதற்கு மேலும் ராஜியையும் அவர்கள் வீட்டில் கேட்கும் படி முடுக்கிவிட்டார். 

 

காலையில் இசைவாணி, வீட்டின் முன் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கவனித்துக் கொண்டிருந்தாள். ராஜி, பிரகாஷிற்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்க, பார்வதி சமையலறையில் தோசை ஊற்றிக் கொண்டிருந்தார். 

 

“ஜாதகம் மட்டும் வேகமா வாங்கிட்டுப் போனாங்க, இன்னும் ஒண்ணும் தகவல் சொல்லலையா உங்க வீட்டுல இருந்து?” 

 

திங்கள் காலையிலே வேலைக்குச் செல்லும் அத்தனைப் பரபரப்பிலும் பிரகாஷ் கேட்டான். சிறு வீட்டில் அவன் குரல் பார்வதிக்கும் கேட்க, வெளியே வாணிக்கும் கேட்டது. ராஜிக்கு மெல்லிய படபடப்பு வாணிக்குப் பதில் தெரியும் என்பதால் அலட்சியம். 

ராஜிக்குப் பிறந்தவீட்டில் அவள் காதலைச் சொல்லும் போது கூட இவ்வளவு பயமில்லை. ஆனால் இப்போது பயம் தான். தன் மொத்தத் தைரியத்தையும் ஒன்று திரட்டி, உள்ளே சென்றுவிட்ட மெல்லிய குரலில், “அ..அது..ங்க.. எங்க சித்தி… அவங்க மகனுக்கு வாணியை கேட்டாங்களாம்!” என்றாள் திணறியபடி. 

 

இப்படியொரு பதிலை அங்கு யாருமே எதிர்பார்க்கவில்லை. வாணிக்கும் ஆச்சரியம் தான்! மேசையில் கைகளை ஓங்கித் தட்டியபடி, சினத்தோடு எழுந்தான் பிரகாஷ். 

 

ராஜியின் கைகளை இறுகப் பற்றியபடி, “அப்போ ஜெயனுக்குப் பிடிக்கலை அப்படித் தானே?” என உறுமலாகக் கேட்க, பயத்தோடு ஆமாமெனத் தலையை ஆட்டினாள் ராஜி. 

 

“என்ன வீடு தேடி வந்து அசிங்கப் படுத்துறாங்களா? நான் கேட்டேனா என் தங்கச்சியைப் பார்க்க வரச் சொல்லி? நீயா தானே ஏற்பாடு பண்ண? இப்போ உங்க வீட்டுல இப்படிச் சொன்னா எப்படி?” எனக் கைகளை அழுத்தியபடி மேலும் கத்தினான். 

 

வேகமாகச் சமையலறையிலிருந்து வந்த பார்வதி, “புள்ளத்தாச்சிடா, விடு..” என அவன் கைகளை விலக்கி, ராஜியைக் காப்பாற்றினார். 

 

கைகளை உதறிவன், “இவ குடும்பத்துக்கு நம்மளை பார்த்தா இளக்காரமா? நேத்து ஜெகனுக்குன்னு பார்க்க வந்துட்டு இன்னைக்கு அவனுக்குன்னு சொல்லுற? என் தங்கச்சி என்ன மார்க்கெட்ல விக்கிற பொருளா ஒருத்தன் கை மாத்தி ஒருத்தன் வாங்க?” மேலும் சீறினான். 

 

“அருள் அண்ணா ரொம்ப நல்லவர் அத்தை..” பார்வதியின் பின் இருந்து கொண்டு குரல் மட்டும் கொடுக்க, அருளின் பெயரைக் கேட்டதுமே கண் மண் தெரியாத கோபம் பிரகாஷின் தலைக்கேறியது. 

 

“அந்த படிக்காத காட்டுமிராண்டிப் பயலுக்கு என் தங்கச்சியா? எந்தத் தைரியத்துல நீ இப்படி கேட்குற?” 

 

“ஏன்டா இப்படி பக்கத்து வீட்டுக்குக் கேட்குற மாதிரி கத்துற?” எனப் பார்வதி கண்டிக்க, பயமே இல்லாத போதும் ராஜி பயந்தவளாக நடித்து மேலும் அத்தையின் பின் ஒதுங்கிக் கொண்டாள். 

 

“அருள் அண்ணா.. ரொம்ப பொறுப்பானவர்..” என மேலும் அவன் கோபத்தை அவள் ஏற்றிவிட்டிருக்க, “ஏன் என்னை அடிச்சது உனக்குப் பத்தலையா, வாணியையும் அவனுக்குக் கட்டிக்கொடுத்துக் கொடுமைபடவா? இதான் உன் திட்டமா?” எனச் சீறினான். 

 

“இஷ்டமில்லைன்னு சொல்லிடலாம் நைட் பேசிக்கிடலாம் விடுடா, ஆபிஸ் டைம்மாகுது பாரு..” பார்வதி அமைதிப்படுத்த, “விடும்மா, இவ எப்படி அப்படி கேட்கலாம்? அண்ணனாம் பெரிய அண்ணன் புடலங்காய்! ஏன் அவனால பட்டது எல்லாம் மறந்து போச்சா உனக்கு? அவன் புகழ் பாடுறதை வேலையெல்லாம் உன் வீட்டோட வைச்சிக்கோ” எனக் கத்திவிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றான். 

 

பிரகாஷ் அப்படியொன்றும் கோபக்காரன் இல்லை, ஆனால் அருள் விஷயத்தில் மட்டும் கட்டுக்கடங்காத கோபம் தான். அவனே கட்டுப்படுத்த நினைத்தாலும் முடிவதில்லை. 

 

ராஜி அழுதபடியே அமர்ந்துவிட, பார்வதி சமாதானம் சொல்ல, வெளியில் அமர்ந்திருந்த இசைவாணி அனைத்தையும் கேட்டபடி தான் இருந்தாள். அவள் அண்ணனுக்கும் ராஜியின் அண்ணனுக்கும் ஏதோ ஆகாது, என்பது வரை தெரியும். அவர்கள் கல்யாண சமயத்தில் அவள் இங்கில்லாததால் நடந்த பிரச்சனைகள் எதுவும் அவளுக்குத் தெரியாது. 

 

ஒரு மாதிரி நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வு. அவள் திருமணப் பேச்சுகள் சம்பந்தமே இன்றி யார் வாய்களிலோ வறுபடுவது பிடிக்கவில்லை. திருமணப் பேச்சுகள் பெண்ணின் வயது, படிப்பு, அழகு, குணம் என அளவிடும் தரங்களில் பேசப்படுவதும் பார்க்கப்படுவதும் அருவருப்பாக இருந்தது.  

 

‘ஒருவேளை, இப்போது தானே தனக்கு வரன் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் அதனால் தான் தெரியவில்லையா? எல்லாரும் இப்படி தானோ? போகப் போகத் தனக்கும் பழகிவிடும் போலும்’ தன்னைச் சமன்படுத்திக் கொள்ள முயன்றாள். 

 

காலையிலிருந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய தேவகி, உணவு நேரத்தின் போது தான் அருளின் கண் முன்பே வந்தார். மரியாதை இல்லாமல் பேசுபவன் இல்லை இருந்தாலும் கோபத்தை கட்டுப்படுத்தவும் தெரியாதவன் என அவனைக் குறித்த கவலை அவருக்கு எப்போதும் உண்டு. 

 

அதற்காகப் பயந்தே கணவர் பாரியையும் அழைத்து வந்து ஹாலில் அமர்த்தியிருந்தார். தேவகியைப் பார்த்தவன், இரவில் மனோவிடம் கத்தியதை தான் உரத்த குரலில் சொன்னான். 

 

“ஒரு தடவை நீ அந்தப் பொண்ணைப் பார்த்தா அப்படிச் சொல்ல மாட்ட அருள்” என தேவகி தன்மையாக உரைக்க, “ரதியாவே இருந்தாலும் வேண்டாம்மா, அவனோட தங்கச்சி அவனுக்குப் பாதியாவது இருக்க மாட்டா?” என்றான். 

 

“இருக்க மாட்டாள், நீயும் மனோவும் என்ன ஒரே மாதிரியா இருக்கீங்க..?” என எதிர்க் கேள்வி கேட்க, அவன் கடுப்பானான்.  

 

“அவள் அண்ணன் மேல இருக்குற கோபத்துல அவளை வேண்டாம்னு சொல்லாதடா..” மீண்டும் இறங்கிக் கேட்டார். 

 

“அம்மா.. என்னை ஏன் கோபப்படுத்துற…?” அவன் கோபமில்லாது சோர்வோடு கேட்கவே, “நீ தான் உனக்கு எந்தப் பொண்ணா இருந்தாலும் சரி எனக்குப் பிடிச்சிருந்தால் போதும்னு சொன்ன, எனக்கு இப்போ இந்தப் பொண்ணைத் தான் பிடிச்சி இருக்குடா” கொஞ்சிக் கேட்டார். 

 

“அப்போ நீயே கட்டிக்கோ..” எனக் கடுப்பானவன் உணவுத் தட்டிலே கை கழுவினான். 

 

எத்தனைத் தடவை தான் மறுப்பதோ என்ற சலிப்பு. சம்பந்தமே இன்றி பெயர் கூட அறியாத ஒரு பெண்ணைப் பற்றி தன் வீட்டவர்கள் பேசுவதோ தன்னை நோக்கி மையப் படுத்துவதோ அவனுக்குப் பிடிக்கவில்லை. 

 

“அவனுக்குப் பிடிக்கலைன்னா இந்தப் பேச்சு வேண்டாம், விட்டுடலாம் தேவகி. அமைதியா இரு அருள்..” எனப் பாரிவேந்தன் முடிவாகச் சொல்ல, அதன் பிறகு அங்கு மறுபேச்சில்லை.  

 

அவன் முடிவுகளை அவனைத் தவிர யாராலும் மாற்ற இயலாது என்பது அனைவரும் அறிந்ததே.  

 

காலை உணவிற்குப் பின் கடைக்குச் சென்றான். தேவகி ஃபர்னிச்சர்ஸ், அருள் ஆரம்பித்த தொழில் இது தான். அவ்விடத்தில் தேவையும் தட்டுப்பாடும் இருப்பதைப் புரிந்து கொண்டவன், அவனே பெரும் முயற்சியில் அத்தொழிலில் இறங்கியிருந்தான்.

 

இன்று இரண்டு தளங்கள் கொண்டது. கீழே, வீடு மற்றும் அலுவலகங்களுக்குத் தேவையான அனைத்து ஃபர்னிச்சரஸ்களும் கிடைக்குமிடம். மேல் தளத்தில் தரமான வூட்டன் ஃபர்னிச்சர்ஸ்களை அவர்களே தயாரிப்பார்கள். இதில் அவனுக்கு அனுபவமில்லை எனும் போது அனுபவமிக்கவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டான். 

 

கார்முகிலனும் பாரிவேந்தனும் உடன் பிறந்தவர்கள். பெரியவர் படித்து முடித்ததும் அரசு வேலைக்கு முயற்சிக்க, தபால்துறையில் வேலை கிடைத்தது. பின் திருமணம் அடுத்தடுத்து நான்கு குழந்தைகள் என நிறைவான குடும்பம் அமைத்தது.  

 

பாரி, அவரின் தந்தை ஜவுளி வியாபாரம் பார்த்து வர, அதில் ஆர்வமிருந்ததால் உடன் இருந்து கற்றுக் கொண்டார். திருமணமும் ஆக, தேவகியின் உதவியில் சிறு ஜவுளிக்கடையை வைத்து நிர்வகிக்க, குடும்பத் தேவைக்கும் பிள்ளைகள் வளர்ப்பிற்கும் சரியாக இருந்தது. 

 

வீடு இரண்டாக இருந்தாலும் பிள்ளைகள் ஒன்றாகத் தான் வளர்ந்தனர். கணேஷ் தான் மூத்தவன், அருளும் ஜெகனும் சம வயது, விக்கியும் மனோவும் சம வயது. ராஜி அனைவருக்கும் இளையவள் மற்றும் அத்தனைச் சகோதரனுக்கும் ஒற்றைத் தங்கை என்பதால் அனைவரிடத்திலும் அதீத செல்லம். 

 

ஓர் இரவு பாரி நெஞ்சு வலியென நெஞ்சைப் பிடிக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலியோடு பக்கவாதம் வர கை, கால்கள் செயலிழந்தது.

படுக்கையில் இருக்கும் கணவரோடு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு தேவகி அல்லல்பட, கடையை வந்த விலைக்கு விற்றுவிடலாம் எனக் கார்முகிலன் உரைத்தார். 

 

இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் மட்டும் சமாளித்து விட்டால் அருள் படித்து முடித்து வேலைக்குச் சென்றுவிடுவான். அதுவரை பிள்ளைகள் படிப்புச் செலவிற்கும், பாரியின் மருத்துவச் செலவிற்கும், குடும்ப நிர்வாகத்திற்கும் கடையை விற்றுவிடுவது எனத் தேவகியும் முடிவு செய்தார். 

 

கார்முகிலன் தெரிந்தவர் மூலம் விலை பேசிக்கொண்டிருக்க, அருள் பிடிவாதமாக மறுத்துத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான். இதில் இழந்தது அவன் படிப்பை, அப்போது அவன் ப்ளஸ் டூ பாதியிலிருந்தான், அப்படியே விட்டுவிட்டான். 

 

நண்பகல் நேரம் போல் ராஜியிடமிருந்து தேவகிக்கு அழைப்பு வந்தது. பேசியவர், அருளின் மறுப்பையும் தெரிந்தார். காலையில் பிரகாஷும் மறுத்திருக்க, ஒரு வழியாகப் பிரச்சனை முடிந்ததாக நினைத்து ஆசுவாசமானாள் ராஜி. ஆனாலும் தன்னாசை நிறைவேறாததில் சிறு கவலை நெஞ்சின் ஓரம். 

 

இரவு உணவின் போது அதை பிரகாஷிடமும் தெரிவித்து விட, மீண்டும் ஒரு அணுகுண்டு வெடிக்க, போர்க்களமானது அவள் வீடு. அமைதியடைவான் என எதிர்பார்த்து அவள் உரைக்க, அவனோ ‘அப்படியென்ன என் தங்கை குறைந்து போய்விட்டாள் அவன் மறுக்கும் அளவிற்கு?’ எனக் கொதித்தான். 

 

ஆற்றாமையில் பொருமியவன், ‘அனைத்தும் நீ ஆரம்பித்த வினை..’ என அவ்வப்போது அவளைத் திட்டிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். இருந்தும் மூன்று நாட்கள் பொறுத்தவள் முடியாது, அன்னை வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டாள். 

 

அடிக்கடி செல்பவள் தான் ஒருபோதும் அவன் அழைக்கச் சென்றதில்லை, அவளாகத் திரும்பி வந்துவிடுவாள், ஆகையால் பிரகாஷ் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. மூன்று நான்கு நாட்களாகியும் அவள் வராததில், இசைவாணி தான் கவலை கொண்டாள். 

 

தன் பொருட்டே இருவருக்குள்ளும் பிரச்சனையோ என்ற உறுத்தல் இருந்தது. அதுவும் போக, ராஜியோடு அவளுக்குப் பழக்கமில்லை ஆகையால் அவள் செயல்கள் புதிது. 

 

மேலும் இரண்டு நாட்கள் கடந்திருந்தது, அன்று ராஜி பரிசோதனைக்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நாள். கடந்த மாதம் இசையும் உடன் சென்றதால் இந்நாள் அவளுக்கும் நினைவிலிருந்தது. 

 

பிரகாஷிடம் தெரிவிக்க, அவன் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான். இசைவாணிக்கு ராஜியிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அவள் மருத்துவ பரிசோதனை அறிக்கை அவர்கள் அறையில் இருக்க, அதை எடுத்து வரும் படி வேண்டினாள். 

 

ராஜி அவள் வீட்டிற்கு அழைக்க, இசைவாணி நேராக மருத்துவமனைக்கு வருவதாக உரைத்தாள். பார்வதியிடம் தெரிவித்துவிட்டு வெகு சீக்கிரமே கிளம்பினாள் இசைவாணி. 

 

ராஜி ஒரு வாரத்திற்கும் மேலாக அன்னை வீட்டிலிருக்க, கார்முகிலன், ‘இதற்குத் தான் பயந்தேன் இப்போது பயந்து போலே மகள் வாழ்வில் பிரச்சனைகள்’ என அத்தனை பேரையும் குற்றம் சாட்டினார். 

 

அதிலும் ‘உனக்குப் பொறுமையே இல்லை, அனைத்தும் உன் அவசரத்தால் தான்’ எனச் சற்று அதிகப்படியாக மனைவி பத்மாவைத் தான் திட்டியிருந்தார். அவரிடமிருந்து தப்பிக்க, ராஜி பெரும் பகுதி நேரங்கள் தேவகியோடு அவர்கள் வீட்டிலிருந்தாள். 

 

அவளைப் பற்றிய கவலை தேவகிக்கும் அதிகரிக்க, பேசமுடியாது அவ்வப்போது அருளைத் தான் குற்றம்சாட்டும் பார்வையில் முறைத்தார். ராஜியின் மீது அக்கறை பாசமில்லாதவன் இல்லை அவன், ‘அவளாக தேர்ந்தெடுத்த வாழ்க்கை தானே? இதில் என் பங்கு என்ன இருக்கிறது, நான் செய்வதற்கு என்ன இருக்கிறது?’ என அலட்சியமாக விட்டுவிட்டான். 

 

எப்போதும் போலே வார்த்தைக்கு ஒரு நலம் விசாரிப்பு, அதோடு அவ்வளவு தான், அடுத்த வார்த்தை பேசுவதில்லை. 

 

“என்ன தேவகி, அருளுக்கு வேற எதுவும் பொண்ணு அமைந்ததா?” பத்மா கேட்க, “இல்லை பத்மா, அந்த ஆண்டவன் என்னைக்குக் கண் திறப்பானோ..!” என்றார் நீண்ட மூச்சுடன். 

 

கடந்த ஒரு வருடமாகவே தீவிரமாகத் தேவகி பெண் தேடி வர, பெரும்பாலும் படிப்பைக் காரணம் காட்டிய மறுப்புகளும், ஜாதகப் பொருத்தமின்மை, தோஷம் என ஒரு வரனும் தளைத்து வரவில்லை. அருளுக்கு அது பற்றிய எண்ணமே இல்லாத போதும் தேவகிக்கு அது தான் பெரிய கவலை! 

 

“இப்போ எல்லாம் பெண்பிள்ளைகள் அதிகம் படிச்சிடுறாங்க, குறைச்சபட்சம் ஒரு டிகிரியாவது முடிச்சிடுறாங்க. அப்படி இருக்கப் படிக்காத பையன ஏத்துக்க தயக்கம் இருக்கும் தானே..?”

 

தேவகி என்ன சொல்ல? மேலும் மனதை அழுத்திக் கொண்டார். 

 

அவர் அமைதியாக இருக்க, “ராஜியோட நாத்தனார், அருளுக்குப் பொறுத்தமான புள்ளை தான், என்ன செய்ய வேண்டாம்னு சொல்லிட்டானே?” எனக் கவலை போல் தெரிவித்தார். 

 

உண்மையில் கவலை கொண்டாரா இல்லை அருளுக்குப் பெண் கிடைப்பதே கடினம் இதில் அவன் கிடைந்த பெண்ணை மறுப்பதற்கு தகுதி என்ன உள்ளது? எனக் குறை கூறினாரோ தெரியாது. ஆனால் சரியாக உள்ளே வந்த அருளின் செவிகளில் அவ்வார்த்தைகள் விழுந்துவிட்டது. தேவகியின் கலங்கிய விழிகளும் நெஞ்சை வதைக்க, இறுகினான்.

 

இன்று பிரதோஷம் ஆகையால் வழக்கம் போல் காலையிலே கடையிலிருந்து கோவிலுக்குக் கிளம்பினான் அருள்வேலவன். மிகுந்த பக்தியாளன், அதே நேரம் பகுத்தறிவும் உண்டு. பக்தி என்பது வாழ்வின் உயர்விற்கான ஒழுக்க நெறியாகக் கடைப்பிடித்தான். 

 

அதே நேரம், மருத்துவமனைக்குச் செல்ல விரைவாகக் கிளம்பிவிட்ட இசைவாணிக்கு மனதே ஒருவாறு அழுத்தத்தில் அமைதியில்லாது தத்தளிக்க, தில்லை நடராஜரை வணங்க வந்தாள்.

Advertisement