Advertisement

அத்தியாயம் 04 

இரவு ஒன்பது மணிச் செய்தியை பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தான் அருள்வேலவன். பாரிவேந்தன் வெகு நேரம் முன்பே உணவுண்டு உறங்கியிருக்க, மனோ அலைபேசியை ஆராய்ந்தபடி டைனிங் டேபுளில் அமர்ந்திருந்தான். 

 

அருள் முன் வந்து பால் டம்ப்ளரை வைத்து விட்டுத் தேவகி நகராது நிற்க, நிமிர்ந்து பார்த்தவன், “என்னம்மா..?” என்றான். 

 

“அது வந்து இன்னைக்கு பொ..பொண்ணு..” என்றவர் வார்த்தை வராது திணற, அருளின் பார்வை கூர்மையானது. 

 

அவ்வளவு தான் அவருக்கு கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட, அவர்களை ஓரப் பார்வையால் பார்த்திருந்த மனோ, “ஐயோ இந்தம்மா இப்படி சொதப்புதே!” என நொந்து கொண்டான். 

 

“என்ன பொண்ணு..?” அருள் கேட்க, 

 

“அதான் இன்னைக்கு ஜெகனுக்குப் பொண்ணு பார்க்கப் போனோமே..” என்றவர் மீண்டும் வார்த்தையின்றி நிற்க, 

 

“ஹோ, ஆமா என்னாச்சு..?” என்றான். 

 

“அவனுக்குப் பிடிக்கலைன்னு சொல்லிட்டான்..”

 

“அதெப்படி சொல்லுவான் போட்டோ பார்த்திருப்பான்ல? பெரியப்பா எப்படி சும்மா விட்டாரு? சரி அந்தப் பொண்ணுக்கு என்ன இப்போ?”

 

“அந்தப் பொ..பொண்ணு..பொண்ணை உனக்குப் பேசிட்டு வந்துட்டேன்டா” எனப் படபடப்போடு உளறிக்கொட்டியவர் சின்ன மகனை நோக்கிக் கண் ஜாடை காட்டினார். 

 

“அம்மா, என்ன காரியம் செய்துட்டு வந்து இருக்கீங்க?”

 

“எனக்கு வேற வழி தெரியலைடா..” என்றவர் கைகளைப் பிசைந்து நிற்க, “ஜெகனுக்குப் பார்த்த பொண்ணை… இது எப்படிம்மா முறையாகும்? என் தகுதிக்குப் பாருங்கன்னு தானே சொல்லியிருந்தேன்” என்றான் தோய்ந்த குரலில். 

 

அது தேவகியை வேதனை கொள்ளச் செய்ய, “ஏன் உனக்கு என்ன குறை கண்ணா? யார் உன்னை நிராகரிப்பா?” என்றார் ஆதூரமாக. 

 

“ம்ச்…ம்மா காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சா இருக்காலாம் ஆனால் ஊருக்கு அது கருங்குஞ்சு தான். உறுதியாகவே சொல்லிட்டு வந்துடீங்களா?”

 

அவன் கேள்வியில் அவர் ஓர விழியால் மனோவைப் பார்க்க, அவன் ஆமெனத் தலையாட்டும்படி சைகையால் சொல்ல, தானாக தேவகியின் தலையாடியது. 

 

ஆனாலும் அருளின் பார்வை கூர்மையாக, பொய் சொல்லிப் பழக்கமில்லாத தேவகி உடல்மொழியே அதை வெளிப்படுத்த, மனோ நெற்றியில் அறைந்து கொண்டான். 

 

மனோ இங்கிருந்தே சைகை செய்ய, அது பாதி புரிந்தும் புரியாத நிலையில் அவர் விழிக்க, “எப்படிம்மா நீங்க இப்படி சொல்லிட்டி வரலாம்?” என்றான் அருள் கோபமாக. 

 

அவன் மனம் அதை ஏற்கவில்லை. ஜெகனின் தகுதிக்குப் பார்த்த பெண் தனக்கு எவ்வாறு ஏற்புடையவளாக இருப்பாள் என்ற எண்ணம். 

 

அவன் கோபத்தில் கைகால் நடுநடுங்கப் பதறியவர், அவனையும் விடக் கோபமாக, “இங்க பாருடா, நீ தான் ஏற்கனவே அரிச்சந்திரன் மாதிரி வாக்குக் கொடுத்து எங்கிட்ட வசமா மாட்டியிருக்க! எனக்குப் பிடிச்சிருந்தால் போதும், நான் எந்தப் பொண்ணை பார்த்தாலும் உனக்குச் சம்மதம் தான்னு சொல்லிருந்தியே! எனக்கு இந்தப் பொண்ணை தான் பிடிச்சிருக்கு, அதான் பேசிட்டு வந்தேட்டேன்” என்றார். 

 

எப்போதோ பெண்பார்க்க ஆரம்பித்த புதிதில் பெரிதாக ஆர்வமில்லாது அம்மாவிடம் பொறுப்பை விட்ட போது எதார்த்தமாக அவன் சொல்லிவிட்ட ஒரு வார்த்தை தான், தேவகி சரியான சமயத்தில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். 

 

‘பரவாயில்லை, அம்மா நடிப்பு பிரமாதம்’ மனோ மனதில் பாராட்டினான். 

 

“அம்மா…” என அருள் கண்டிப்போடு அழைக்க, “இந்தா அம்மா சும்மான்னு எல்லாம் செண்டிமெண்ட் சீன் போடாத. நீ சொல்லிட்ட, சொன்ன வார்த்தையை நம்பி நானும் பேசிட்டேன் இனி எல்லாம் மாத்திப் பேச முடியாது” என்றார் வெடுக்கென. 

 

முடிவாகச் சொல்லியவர், அவனின் கடுமையான பார்வையை எதிர்கொள்ள முடியாது தடுமாறியவர் தலை சுற்றிச் சரியப் போக, சட்டென மனோவும் அருளும் தாங்கிப் பிடித்தனர். 

 

“என்னம்மா செய்யுது..?” அருள் பரிதவிப்பாகக் கேட்க, “பிபி மாத்திரை போட்டுகலையாம்மா..?” என மனோ எடுத்துக் கொடுக்க, ஆமென்று தலையாட்டியவர் கண்களையும் மூடிக் கொண்டார். 

 

சரிய இருந்த தேவகியை மேலும் மனோ தாங்கிக்கொள்ள, “அவனை ஒரு பதில் சொல்லச் சொல்லுடா..?” அடமாகக் கண்களைத் திறக்காது கேட்டார். 

 

“அதான் உங்களுக்கு பிடிச்சிடுச்சில பின்ன என்ன? சம்பந்தம் பேசுங்க..” என்றவன், தன் அறை நோக்கித் திரும்ப, “அப்படியே என்னை மெல்ல கூட்டிட்டுப் போய் என் ரூம்ல விட்டுட்டு மனோ..” என்றவர் அவனோடு சென்றார். 

 

அறைக்குள் வந்ததும் மீண்டும் ஒரு முறை வரவேற்பறையை எட்டிப் பார்த்தவர், கட்டிலில் அமர்ந்தபடி, “எப்படிடா என் ஆக்டிங்..?” என்றார் மனோவிடம்.

 

“சூப்பர்மா கலக்கிட்ட, மேக்கப் மட்டும் தான் மிஸ்ஸிங் மத்தபடி நீ பழைய பத்மினி தான்” எனப் பாராட்டினான். 

 

புடவையின் தலைப்பால் விசிறிக்கொண்டவர், “எப்படியோ அவங்கிட்ட சம்மதம் வாங்கிட்டேன், இனி நடக்க வேண்டியதை பார்க்கலாம்” என்றார். 

 

“எதை? அண்ணன் ருத்திர தாண்டவம் ஆடுறதயா?” 

 

“ஏன்டா?” தவறு செய்த குழந்தையின் பாவனையில் கேட்டார். 

 

“பின்ன நடிப்பெல்லாம் பிரமாதம் பட் டையலாக் மறந்துட்டியேம்மா..?”

 

“நீ எப்போடா ஸ்க்ரீப்ட் கொடுத்த?” அறியாப் பிள்ளை போலே கேட்க, முறைத்த மனோ, “அம்மா, எல்லாம் சொன்ன நீ அது பிரகாஷோட தங்கச்சின்னு சொல்ல மறந்துட்டியே..” என ராகமிழுத்தான். 

 

“ஆமாம்ல…” அதிர்ந்து கட்டிலிருந்து எழுந்தவர் நெஞ்சில் கை வைத்தார். 

 

“அவங்கிட்ட சம்மதம் வாங்குறது பெருசில்லை, பிரகாஷோட தங்கச்சின்னு சொல்லி வாங்குறது தான் பெரிய வேலையே” 

 

“அப்போ என் பெர்பார்மன்ஸ் எல்லாம் வேஸ்ட்டா..?” பாவமாகக் கேட்க, முறைத்த மனோ, “போம்மா, போய் திரும்பவும் சொல்லிக் கேளு” என்றான். 

 

“மறுபடியும் முதல்ல இருந்தா..” பெருமூச்சு விட்டவர் “என் தங்கப்பிள்ளை இல்ல, அருளுக்குச் செல்லப் பிள்ளை இல்ல நீ போய் கேளுடா” எனக் கொஞ்சினார். 

 

“ஏது..! என்னால எல்லாம் கேட்க முடியாது”

 

“அம்மாவுக்காகத் தங்கம்..”

 

“என் முதுகுத் தோலை உருச்சிடுவான், போம்மா..”  

“டேய் டேய்.. ப்ளீஸ்டா..”

 

“பெருசா பெரியப்பா வீட்டுல சொன்ன அருள்கிட்ட சம்மதம் வாங்கிடுவேன்னு, நீயே போய் கேளு” 

 

“அடேய், அடேய் ஒரு வார்த்தை மட்டும், தள்ளி நின்னு கேளுடா. அம்மா உனக்கு பிடிச்ச சிக்கன் பிரியாணி நாளைக்குச் செய்து தாரேன்” 

 

“சிக்கன் பிரியாணியா..!” ஒரு நொடி நாக்கால் சப்புக் கொட்டியபடி ஆசையாகக் கேட்டவன், மறுநொடி அருளின் ஒரு அறை நினைவில் வர, வேகமாகத் தலையை உலுக்கிக் கொண்டான். 

“சிக்கன் பிரியாணிக்கு ஆசைப்பட்டா சில்லு சில்லா நொறுக்கிடுவாம்மா உன் பிள்ளை”

 

தேவகி கொஞ்ச, மனோ மிஞ்ச, போராடியபடியே அருளின் அறை வாசல் வரை வந்திருந்தனர். தேவகி மனோவை உள்ளே தள்ளிவிட முயற்சிக்க, மனோ தேவகியை உள்ளே தள்ளிவிட முயன்றான். 

 

ஒரு வழியாக அவனைத் தள்ளிவிட்டு அவர் மறந்து கொள்ள, “உள்ளே வா மனோ..” என அழைத்தான் அருள். 

 

அருள் பார்வையில் விழாதபடி மறைந்து கொண்ட தேவகி, வாசலிலிருந்து எட்டிப் பார்த்துப் பேசும்படி சைகை செய்ய, பற்களைக் கடித்தபடி முறைத்தான் மனோ. 

 

“என்னடா..” பொறுமை இல்லாத அருள் குரல் உயரக் கேட்க, நடுங்கினான் மனோ. 

 

அளவிட்டுக் கொண்டிருந்த அருளின் விழிகள் கூர்மையானது. 

 

“காலேஜ் டூர் எதுவும் போறியா?” என்றவன் விசாரிக்க, வேகமாக இல்லை எனத் தலையாட்டினான், தேவகி வேறு இன்னும் சைகையால் பல அபிநயங்கள் காட்டிக் கொண்டிருந்தார். 

 

மனோ நெளிய, தாடையைத் தடவிக் கொண்ட அருளின் பார்வை இன்னும் கூரானது. 

 

“எதுவும் தப்பு செய்துட்டியா..?” 

 

“ஐயோ, இல்லைண்ணா..” வேகமாக மறுத்துப் பதிலளித்தான். 

 

“பின்ன என்னடா?” 

 

“நம்ம ராஜி இருக்காளே..” என ஆரம்பிக்கும் போதே அருளின் முகம் இறுக, ஓடிவிடலாமா என நினைத்தான் மனோ. 

 

ஆரம்பித்துவிட்டாய் பேசு எனத் தேவகி இன்னும் சைகை காட்டிக்கொண்டு இருக்க, “அவளுக்கு என்ன..?” என அதட்டலாகக் கேட்ட அருளின் குரலில் திடுக்கிட்டான். 

 

அருளின் குரலின் எப்போதும் ஒரு அதிகாரம் இருக்கும், அதுமட்டுமின்றி கணீர் எனக் கேட்கும் குரல் ஆகையால் அவன் பேசினாலே அதட்டல், மிரட்டலாகத் தான் தோன்றும். 

 

“அவளுக்கு ஒரு நாத்தனார் இருக்கே தெரியுமா..?” என்றான். தேவகி இங்கு நெற்றியில் அறைந்து கொண்டார். 

 

பெண்களைப் பற்றிய பேச்சு, அதுவும் பிரகாஷின் சகோதரி என்னும் போது அவன் பார்வையில் உஷ்ணம் கூடியது. 

 

மேலும் சொல்லட்டும் என்பது போல் அருள் அமைதியாக நிற்க, அவன் அமைதி மனோவைக் கலவரப் படுத்தியது. மாயாவியாக, காற்றாக அவ்விடத்திலிருந்து மறந்து விடும் வேகம் இருந்தும் இயலாமையில் நின்றான். 

 

“சொல்லு..” மிரட்டலாக் கேட்க, “ராஜிக்கு.. அவங்களை நம்ம வீட்டுல கட்டிக்கொடுக்கணும், பிறந்த வீட்டு உறவை விடாம வைச்சிக்கணும்னு ஆசையாம்..” என்றான். 

 

‘என்ன கேட்கச் சொன்னால் என்ன உளறுகிறான்’ எனத் தேவகி நொந்து கொண்டார். 

 

அது வரையிலும் ராஜியைப் பற்றி பேச்சு என்பதால் வந்த சினத்தையும் அடக்கிக் கேட்டுக் கொண்டிருந்தான் அருள். 

 

“அவ ஆசையை அவள் வீட்டுல போய்ச் சொல்ல வேண்டியது தானே? உங்கிட்ட எதுக்குச் சொன்னா?”

 

“ஐயோ, இல்லைண்ணா வீட்டுல சொல்லிட்டாள். அதனால தான் இன்னைக்கு எல்லாருமா ஜெகனுக்குப் பொண்ணு பார்க்கக் காலையில அவ வீட்டுக்குப் போனோம்..” 

 

ஒரு நொடியில் அருளுக்கு அவன் சொல்ல வரும் விஷயம் புரிந்தது. 

 

“அம்மா…” சினம் பொங்க உரக்கக் கத்தினான். 

அவன் கத்திய கத்தலில் தேக்குக் கட்டில், மேசை கூட அதிர, தேவகிக்கு உண்மையிலே இரத்தம் அழுத்தம் ஏறி மயக்கம் வருவது போல் இருந்தது. மார்கழிக் குளிரில் நடுங்குவது போல் மனோ வெடவெடத்துப் போனான். 

 

“எங்க அம்மா..?” அவன் கேட்கும் முன்னே ஓடியிருந்தார் தேவகி. 

 

“அவங்க தூங்கிட்டாங்க, கத்தாதீங்க அண்ணா அப்பாவும் தூங்குறார்..” பயத்தோடு தான் உரைத்தான் மனோ. 

 

“டேய்..” அவன் சட்டை பிடித்தவன் பின் உதறிவிட்டு, “அந்த பிராகஷால நான் எவ்வளவு அவமானப்பட்டேன்னு தெரியும் தானே? தெரிந்தும் எப்படிடா அவன் வீட்டு வாசலை மிதிச்சீங்க? எனக்கொரு அவமானம்னா அது உங்களுக்கும் இல்லையா? அப்போ நான் இந்த வீட்டுக்கு யாரோவா?” சீறினான். 

 

“ஐயோ, அப்படியில்லை அண்ணா, ஜெயனுக்காகத் தான் போனோம்” 

 

“யாருக்காகவோ? ஏன் அங்க போகணும்? போனது தப்புத் தானே? நமக்கு என்ன தன்மானம் இல்லையா?” 

 

“தப்புத் தான் அண்ணா..!”

 

“அவன் தங்கச்சியைப் போய் எனக்கு எப்படிடா பேசுனீங்க?”

 

‘ஜெகனுக்கு பேசியது தான் அருளுக்குப் பேசவில்லை என்ற உண்மையைக் கூறிவிடலாமா  என ஒரு நொடி யோசித்தான். பள்ளிப்பருவத்தில் ஒரு முறை சினிமாவிற்குச் சென்று வந்து பொய் சொல்லி மாட்டிக்கொண்டு முதலும் கடைசியுமாக அருளிடம் பட்ட அடிகள் நினைவில் வந்தது. உண்மையைச் சொன்னாலும் அதற்கும் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டிய நிலை தான், ஆகையால் சமாளித்தான். 

 

“மறுக்க முடியாத சூழ்நிலைண்ணா அதான் அம்மா அப்படி செய்துட்டாங்க” 

 

“என்னவா வேணா இருக்கட்டும், உயிர் போற காரியமாகவே இருந்தாலும் நீங்க எப்படி அப்படிச் செய்யலாம்? அதுவும் எங்கிட்ட கேட்காம..”

 

“நீ ஒரு தடவை அவங்களைப் பார்த்தா அப்படிச் சொல்ல மாட்டண்ணா”

 

“அவ எவ்வளவு பெரிய அழகிய வேணாலும் இருந்துட்டுப் போகட்டும் என்னைப் பொருத்தவரை அது பிரகஷோட தங்கச்சி தான், எனக்கு ஆகாதவங்க தான். புரிஞ்சதா?” என்க, மனோ தலையை நன்கு உருட்டினான். 

 

“சரிண்ணா, ரிலாக்ஸ்.. நான் அம்மாட்ட வேண்டாம்னு சொல்லுறேன். நான் பார்த்துக்கிறேன் நீ டென்ஷனாகாம தூங்குண்ணா” என்ற மனோ, விட்டால் போதுமென ஓடிவிட்டான். 

 

காலை உணவு வேளை வரை அருளின் கண்ணில் படாமல் தப்பி விட்டார் தேவகி. இரவிலே அரண்டுவிட்ட மனோ, அன்னையிடம் செல்ல, மறுப்பாகக் கை நீட்டியவர், “நீ எதுவும் சொல்ல வேண்டாம்டா, நைட் எல்லாத்தையும் கேட்டுட்டேன். இன்னொரு முறை கேட்கிற சக்தி எனக்கில்லை” என்றார். 

 

கடுப்பான மனோ, “இது உனக்குத் தேவையாம்மா? ஜெகனுக்கு வேண்டாம்னு சொல்லிட்டா விட்டுட வேண்டியது தானே..” என்ற புலம்பலோடு வெகு காலையிலே கிளம்பிவிட்டான். 

 

அந்த நேரமே பேருந்து நிலையத்தில் விக்கி நிற்பதை வியப்பாகப் பார்த்தவன் அருகில் சென்று பைக்கை நிறுத்தினான். 

“நீ எதுக்குடா இவ்வளவு சீக்கிரமாவே கிளம்பி வந்திருக்க?” என மனோ ஆரம்பிக்க, தாடையில் கை வைத்துக் கொண்டு “ஆமா, இது என் டையலாக் இல்ல?” என்றான் விக்கி. 

 

“அடி வாங்கிடாதடா விக்கி..”

 

முன் பற்களைக் காட்டிச் சிரித்தவன், “என் எட்டரை பஸ், இன்னைக்கு ஏழரைக்கே வருதுடா..” என்றான். 

 

பதறிய மனோ, “உருப்படாதவனே, எந்த ஏழரையிலையும் என்னைய இழுத்து விட்டுறாதே ஏற்கனவே நொந்து போயிருக்கேன்” என்றான். 

 

சிரித்த விக்கி, “தம்பி மனோ, என்னைத் தாண்டி யாரு உன் மேல கை வைக்க? சொல்லு, உண்டு இல்லைன்னு செஞ்சிடுறேன்” என்றான் கெத்தாக.

 

“அருள் அண்ணன்..” 

 

“அடப்பாவி, ஆளைவிடு. இன்னையில இருந்து நீ யாரோ நான் யாரோ?” 

 

“அதைத் தான் நானும் சொன்னேன்” 

 

“என்னடா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட..”

 

“நீயும் தானே சொன்ன?”

 

“எப்படியிருந்தாலும் நாம ஒரே இரத்தம் இல்லையா? சரி, என்ன பிரச்சனை?” 

 

“ராஜி நாத்தனாரை அருள் அண்ணாவுக்கு அம்மா பேசுனாங்களே, அதைப் போய் அவங்கிட்ட கேட்கப் போனேன்..” என்றவன் மூச்சுவிட, சிரித்த விக்கி, “ஏன்டா சிங்கத்தோட குகையில தனியாப் போய் மாட்டிகிட்டியா?” என்றான். 

 

பாவமாக ஆமெனத் தலையாட்ட, “அப்பறம்..” எனக் கதை கேட்பது போல் கேட்டான் விக்கி. 

 

“அப்பறம் என்ன? வேண்டாம்னு சொல்லிடுறோம் சொல்லிட்டு, விட்டாப் போதும் ஓடி வந்துட்டேன். எப்படியோ இத்தோட ஒரு வழியா பிரச்சனை முடிச்சா சரி” என ஆசுவாசமாக, “இல்லை தம்பி, இனி தான் ஆரம்பமே..” என்றான் விக்கி. 

 

“என்னடா சொல்லுற..” பதறிய மனோ கேட்க, “காலையில ராஜி போன் பண்ணிக் கேட்டா, சித்தி அருளுக்குக் கேட்டுட்டாங்க உங்க வீட்டுல பேசுன்னு அம்மா சொல்லிட்டாங்க” என்றான். 

 

“அட அவசரக்குடுக்கைகளா..” நொந்து கொண்டான் மனோ, “எல்லாம் இந்த ராஜியும், ஜெகனையும் தான் சொல்லணும், சரியான பைத்தியங்க..” எனத் தன் உடன்பிறப்புகளைத் திட்டினான் விக்கி. 

 

“அவங்க மட்டுமா, உன் மொத்தக் குடும்பமுமே தான்..” 

 

“என்ன வேணாலும் சொல்லிக்கோ, எனக்குப் பஸ் வந்துடுச்சி டாட்டா” எனப் பேருந்தில் தாவி ஏறியபடி உரைத்த விக்கி, சென்று விட்டான். 

 

‘என் அம்மா தான் வீட்டில் பேசிவிட்டு முடிவு சொல்கிறேன் அது வரை ராஜியின் வீட்டில் எதுவும் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாரே அதற்குள் என்ன அவசரம் என இந்த பத்மாம்மா சொல்லிவிட்டார் என ஆற்றாமையில் கனன்று கொண்டிருந்தான் மனோ.

 

‘இப்போது வேண்டாம் என்றால், ராஜி கணவன் என்ன சொல்வான்? என்னென்ன பிரச்சனைகள் வருமோ? அந்த பெண்ணும் பாவம்! ஏன் யாருக்குமே பொறுமை என்பதோ அறிவென்பதோ இல்லை? எனப் பெரும் புயலை எதிர்பார்த்தபடி கல்லூரி கிளம்பினான் மனோ. 

Advertisement